உலகத் தோற்றத்திற்கு முன்பு தெரிந்து கொண்டவர், கண்ணின்மணி போல பாதுகாத்தவர், இரட்சித்து அபிஷேகித்தவர், ஊழியத்திற்காக பயிற்றுவித்தவர், முழு நேர ஊழியத்திற்கு குரல் கொடுத்து
அழைத்தவர், தமது உன்னத ஊழியத்தில்
பயன்படுத்தி வரும் அன்பின் கர்த்தர்



கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென். தேவ எக்காளம் பத்திரிக்கை கர்த்தரால், அவரது திட்டமான தேவ ஆலோசனையின்படி ஆரம்பிக்கப்பட்டு, அவரால் வழி நடத்தப்பட்டதால் அவருடைய ஜனத்திற்கு ஆசீர்வாதமாக கடந்த 43 ஆண்டு காலம் நான் அதை ஆண்டவரது சுத்தக் கிருபையால் எழுதி வெளியிட முடிந்தது என்ற முழுமையான விபரத்தை இந்த இதழின் தலையங்கச் செய்தியில் நான் எழுதியிருப்பதை நீங்கள் வாசித்தீர்கள். அதற்காக என்னை சிறு பிராயத்திலிருந்து ஆயத்தப்படுத்தி பக்குவப்படுத்தியதை எல்லாம் நான் அதில் குறிப்பிட்டேன். எனது உலகக் கல்வி வெறும் 10 ஆம் வகுப்பு மட்டுமே. நான் எந்த ஒரு கல்லூரி சென்று படித்தவனுமல்ல, திருமறை கல்வி கற்றவனுமல்ல. எனது ஆங்கில அறிவு சுத்த சூன்யமாகும். எனது 10 ஆம் வகுப்பு அரசாங்க தேர்வில் நான் ஆங்கிலத்தில் பெற்றுக் கொண்ட மதிப்பெண்கள் வெறும் 45 மட்டுமே. தேர்ச்சி பெற எடுக்க வேண்டிய 35 மதிப்பெண்களைவிட 10 மதிப்பெண்கள் மட்டுமே கூடுதல். இந்த சுத்த சூன்யமான ஆங்கில அறிவை வைத்து முழுக்க முழுக்க மேல் நாட்டு பரிசுத்த பக்த சிரோன்மணிகளின் பெரிய பெரிய ஆங்கில பிரபந்தங்களையே படித்து அறிந்து கொள்ளும் ஞானத்தையும், அவைகளை தேவ ஜனத்திற்கு அவர்களின் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்விற்கு உகந்த விதத்தில் பக்தி நடையில் மொழி பெயர்க்கும் அற்புத கிருபைகளையும் தேவன் எனக்குத் தந்தார். தேவ எக்காளத்திற்கென்று தேவன் ஒரு தனிப்பட்ட பரிசுத்த நடையையே ஒதுக்கி வைத்திருந்தார். நான் வாலிபனாக இருந்த நாட்களில் எழுதின எனது எழுத்து நடையைப் பார்த்தவர்கள் தேவ எக்காளத்தை ஒரு வயது முதிர்ந்த விருத்தாப்பியர் எழுதிக் கொண்டிருக்கின்றார் என்று நினைத்தவர்கள் பலர் உண்டு. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. "உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப் பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன்" (சங் 119 : 100) என்றார் தாவீது ராஜா. சில நூறு புத்தகங்களைக் கொண்ட எனது புத்தக அலமாரிகளில் நான் வைத்திருப்பவை அனைத்தும் அநேகமாக ஆங்கில கிறிஸ்தவ புத்தகங்களே. ஆண்டவர் ஒருவருக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.

அவைகள் பெரும்பாலும் சுத்த சத்திய சீர்திருத்த வீரர்கள் (Reformers) மற்றும் 16 ஆம் மற்றும் 17 ஆம் நூற்றாண்டுகளில் கர்த்தருக்காக பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரங்களாக ஜொலித்த பியூரிட்டான்கள் (Puritans) என்று அழைக்கப்பட்ட பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகள், மற்றும் அவர்களின் தேவச் செய்திகள் போன்றவைகளாகும். அவர்கள் அனைவரின் தேவச் செய்திகளும், வேண்டுகோள்களும் "மனந்திரும்பி தேவனுடன் சமாதானமாகி அவரை அண்டிக்கொள்" (Repent and reconcile with God) என்பதேயாகும்.

இவ்வண்ணமாக, நமது தேவ எக்காளம் பத்திரிக்கை வெளியீட்டில் தமது கிருபைகளைப் பொழிந்து தமது ஜனத்திற்கு பெருத்த ஆசீர்வாதங்களை அருளிச்செய்த தேவன் நமது வட மாநில ஊழியங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் தமது வல்லமையை விளங்கப்பண்ணி வருகின்றார் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. சிறுவனாக நான் இருந்தபோதே பரிசுத்தவான் சாது சுந்தர்சிங் அவர்களின் அதிசயமான மனமாற்றத்தையும், தீபெத் நாட்டில் அவர் செய்த ஆச்சரியமான தேவ ஊழியங்களையும், அதற்காக அவர் பட்ட பாடுகளையும், கர்த்தர் ஒவ்வொரு தடவையும் அவரை அதிசயமாகப் பாதுகாத்த செயல்களையும் காலஞ் சென்ற எனது பரிசுத்த தந்தை அவர்கள் விபரமாகச் சொல்லக் கேட்டு பரவசம் அடைந்த பாவி நான். எனது தகப்பனாரே சிறுவனாக தூத்துக்குடி மாவட்டத்தில் மெய்ஞ்ஞானபுரம் என்ற இடத்திலுள்ள கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் சிறுவனாகப் படித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் வகுப்புக்கு வந்து மாணவர்களைப் பார்த்து அவர்களுக்கு கரங்கூப்பி வாழ்த்து தெரிவித்த சாது சுந்தர்சிங்கைப் பார்த்து அவருடைய முகத்தில் வீசிய ஒளியால் அப்பொழுதே ஆண்டவருடைய அடிமையானார்கள். ஆண்டவர் இயேசு இரட்சகருக்கு அடுத்தபடியாக எனது தந்தையின் வாழ்க்கையில் ஒரு பெரிய பரிசுத்த மாற்றத்தை கொண்டு வந்த தேவ மனிதர் சாது சுந்தர்சிங் அவர்களேதான். பின் நாட்களில் எனது தகப்பனார் பிழைப்புக்காக இலங்கை தேசத்துக்குச் சென்ற இடத்தில் அந்த நாட்டிற்கு சாது சுந்தர்சிங் தேவ ஊழியத்திற்காக வந்திருந்தபோது எடுத்த ஒரு படத்தை ஒரு குருவானவர் மூலமாகப் பெற்று எங்கள் வீட்டிற்குக் கொண்டு வந்திருந்தார்கள். அந்தப் படத்தை கண்ணாடி சட்டம் போட்டு இன்று வரை நான் என் அறையில் பத்திரமாக வைத்திருக்கின்றேன்.

பல்லாண்டு காலத்திற்கு முன்பாக நான் இமாச்சல் பிரதேசத்திலுள்ள சுபத்து என்ற இடத்திற்குச் சென்று சாது சுந்தர்சிங் வாழ்ந்த அவருடைய பங்களாவைப் பார்த்து வந்தேன். சுற்றிலும் நிறைய தூண்களைத் தாங்கி நின்ற ஆள் அரவமற்ற அந்த பெரிய கானக பங்களாவின் ஒரு அறைக்குள் நான் தெய்வாதீனமாகப் பிரவேசித்து அங்கே முகம் குப்புற விழுந்து அழுது கண்ணீர் சிந்தி "ஆண்டவரே, உமது பரிசுத்த அடியானைப் போல பாவியாகிய என்னையும் உமது ஊழியத்தின் பாதையில் பயன்படுத்தும்" என்று உள்ளம் உருகி ஜெபித்து வந்தேன். எனது கண்ணீர் அந்த அறையின் தரையில் வடிந்து கிடந்தது. அந்த இடத்தில் ஒரு நாள் காலை வேளையில் நான் ஏறெடுத்த அந்த ஜெபமானது ஆண்டவருடைய திருவுளத்திற்கு உகந்த ஒன்றாக இருந்திருக்கின்றது என்பதை நான் வெகு திட்டமாகச் சொல்லுவேன். காரணம், அதற்கு அடுத்து வந்த ஒவ்வொரு ஆண்டிலும் தேவன் என்னை தமது வட மாநில தேவ ஊழியத்தின் பாதையில் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றார். ஆரம்ப கால நாட்களில் வருடந்தோறும் நான் மட்டும் தனித்துச் சென்று ஊழியம் செய்து வந்தேன். பின் வந்த நாட்களில் சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களும் நானும் இணைந்து சென்று ஊழியம் செய்தோம். அதற்கப்பால் கடந்த பல ஆண்டு காலமாக நாங்கள் ஒரு குழுவாக 2 வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி ஆண்டவருடைய ஊழியத்தை செய்துகொண்டு வருவதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனது அருமை மனைவி காலஞ்சென்ற 1996 ஆம் ஆண்டைத் தவிர மற்ற எல்லா ஆண்டுகளிலும் இந்த அருமையான தேவ ஊழியம் தடையின்றி நடந்து வந்து கொண்டிருக்கின்றது. கர்த்தருக்கே மகிமை.

இந்த தேவ ஊழியங்கள் எல்லாம் ஏதோ ஒரு தனி மனிதனின் பிரயாசத்தினாலோ அல்லது அவனுடைய சாமர்த்தியத்தினாலோ அல்லது அவனது புத்திசாலித்தனத்தினாலோ ஒருக்காலும் நடைபெறாமல் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனுடைய சுத்தக் கிருபையினாலேயே நடைபெற்று வந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் முழுமையாக விசுவாசிக்கலாம். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது.

தம்முடைய பரிசுத்த தீர்க்கனை தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே அறிந்தது போல (எரேமியா 1 : 5) நான் என் தாயின் வயிற்றில் உருவாகு முன்னே தேவன் என்னைத் தமக்கெனத் தெரிந்து கொண்டார். வாலிப பெண்ணாக எனது பரிசுத்த தாயார் இருந்தபோது அவர்களும், அவர்களின் தோழி ஒருவரும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் தோப்பு என்ற ஊரிலுள்ள தாமிரபர்ணி ஆற்றில் குளிக்க வந்த இடத்தில் ஒரு ஆழமான பகுதியில் தண்ணீரில் சிக்கி இருவரும் இறுதியாக முழ்கி மரிக்கப் போகும் கடைசி நேரத்தில் அவர்களின் அபயக் குரல் கேட்டு ஒரு அன்பான மனிதர் ஓடி வந்து காப்பாற்றியிருக்கின்றார். தம்முடைய ஜனத்திற்கு ஆசீர்வாதமாக பாவியாகிய என்னை என் தாயின் வயிற்றில் உருவாக்க வேண்டுமென்பது தேவனுடைய திருவுளச்சித்தமாக இருந்ததால் எனது தாயாரை ஆண்டவர் மரணத்திற்கு ஒப்புக் கொடாமல் அந்த இடத்தில் காத்துக் கொண்டார்.

நான் பிறந்து சிறு குழந்தையாக இருந்த நாட்களில் ஒரு சமயம் ஒரு சோடா பாட்டலின் தகர மூடியை எப்படியோ விழுங்கி அது எனது தொண்டையில் அடைத்து மூச்சு திணறி, என் கண்கள் நிலை குத்தி நின்று, மரிக்கப் போகும் கடைசி நேரத்தில் சிவநாசி என்ற பெயருடைய ஒரு பாட்டி அம்மா எப்படியோ தனது விரலை எனது தொண்டையில் செலுத்தி அந்த பாட்டல் மூடியை வெளியே எடுத்து என்னைக் காப்பாற்றியிருக்கின்றார்கள். நான் பிறந்த பிள்ளைவிளை (நாசரேத் - மெய்ஞ்ஞானபுரத்திற்கு நடுவிலுள்ள ஊர்) என்ற எங்கள் ஊரைச் சுற்றிலும் மிகவும் விஷம் நிறைந்த நாக பாம்புகள் நிறைய உண்டு. ஒரு பெண் தனது குழந்தையுடன் ஒரு மத்தியான வேளை எங்கள் ஊருக்கு அருகாமையில் உள்ள முரம்பு காட்டு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது எலி ஒன்றை அந்த வேளை துரத்தி வந்து கொண்டிருந்த ஒரு நல்ல பாம்பு அவளை கொத்திக் கொன்று போட்டது. மக்கள் தங்கள் கண்களால் அந்தப் பாம்புகளை எல்லாம் பார்ப்பதாக சொல்லுவார்கள். அவைகளால் கடிபட்டவர்களும் உண்டு. ஆனால், எங்கள் ஊர் செம்மண் தேரி காட்டிலும், முரம்பு காட்டிலும் பறவைகள் மற்றும் அணில்களை வேட்டையாட இரவு பகலாக அலைந்து திரியும் எனது கண்களுக்கு அவைகள் தென்பட்டதே இல்லை. ஒரு சமயம் எனது மூத்த மகன் சுந்தர்சிங் அவர்கள் எனது தாயாரை காண்பதற்காக எங்கள் ஊர் சென்றிருந்த சமயம் எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு இரவு வேளை முழங்காலூன்றி ஜெபித்துக் கொண்டிருக்கும் போது தனக்கு அருகில் ஏதோ ஒரு "புஷ்........, புஷ்........." என்ற சத்தம் தொடர்ந்து வருவதைக் கண்ணுற்று தனக்கருகில் தான் வைத்திருந்த டார்ச் விளக்கினைப் போட்டுப் பார்த்த போது ஒரு பெரிய நல்ல பாம்பு மகனைக் கொத்துவதற்காக படம் எடுத்து ஆடிய வண்ணமாக அவனைக் கொத்துவதற்காக அவனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதைக் கண்டு தேவ பெலத்தால் ஞானமாக தன்னைக் காத்துக் கொண்டார்கள்.

உலகத் தோற்றத்திற்கு முன்பாக என்னை தமக்கென்றும், தமது மாட்சிமையான சுவிசேஷ ஊழியத்தை என்னைக் கொண்டு நிறைவேற்றவும் திருவுளச் சித்தம் கொண்ட தேவன் கொடிய விஷ ஜெந்துக்களிடமிருந்து என்னைப் பாதுகாத்தார். உயரமான மரங்களிலிருந்து நான் விழுந்து உயிர் பிழைத்திருக்கின்றேன். ஒரு தடவை நான் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த போது கிணற்றின் கரையிலிருந்த ஒரு சகோதரனால் இழுத்துக் காப்பாற்றப்பட்டேன். நீச்சல் தெரியாத எனது உடன் பிறந்த தங்கை மகன் எதிர்பாராதவிதமாக எனது கழுத்தை பலமாகக் கட்டிப் பிடித்துக் கொண்டபடியால் என்னால் எதுவுமே செய்ய முடியாமல் போய்விட்டது. அந்த வேளைகள் எல்லாம் நூற்றுக்கு நூறு எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டிய சமயங்களாகும். இப்படி நான் நிச்சயமான மரண ஆபத்துக்களில் சிக்கி அன்பின் ஆண்டவரால் கிருபையாகப் பாதுகாக்கப்பட்ட வேளைகள் இன்னும் சில உண்டு. இவை யாவற்றிலும் உலகத் தோற்றத்திற்கு முன்பாக என்னைத் தமக்கென தெரிந்து கொண்ட நம் அன்பின் ஆண்டவர் என்னை அதிசயம், அற்புதமாகப் பாதுகாத்தார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? ஒருக்கால், அவர் என்னைக் கைவிட்டிருந்தால், அல்லது மரணத்துக்கு என்னை ஒப்புவித்திருந்தால், நான் நிச்சயமாக இப்பொழுது நரக அக்கினியில்தான் இருப்பேன். அதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. அப்படி என்னைப் பாதுகாத்த அன்பின் ஆண்டவருக்கு இன்று வரை மறவாது நன்றி துதி ஏறெடுத்துக் கொண்டே வருகின்றேன்.

அன்பின் கருணை வெள்ளம் உலகத்தோற்றத்திற்கு முன்னரே என்னைத் தமக்கென தெரிந்து கொண்டது உண்மை. எனது வாலிப வயதில் என்னை இரட்சித்து அபிஷேகித்தது உண்மை. தமது மாட்சிமையான பரிசுத்த ஊழியத்திற்காக என்னைப் பயிற்றுவித்தது உண்மை. தமது முழு நேர பணியாளனாக உலக வேலையிலிருந்து என்னை வெளியே வரும்படியாக குரல் கொடுத்து அழைத்தது உண்மை. எனது வாழ்வில் பல தடவைகளும் என்னோடு நேருக்கு நேர் பேசியது உண்மை. அடுத்த வேளை ஆகாரத்திற்கு ஆண்டவரை நோக்கிப் பார்த்து நாங்கள் கடந்து வந்த கடின நாட்களிலிருந்து இதுவரை எங்களை போஷித்து, உடுத்துவித்து, பிள்ளைகள் இருவரையும் ஆசீர்வதித்து "இதோ கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான்" என்று எங்களை உயர்த்தியது எல்லாம் உண்மையோ உண்மையாகும். என்னை இத்தனையாக நேசித்து என்னைக் கனப்படுத்தி தமது மாட்சிமையான சுவிசேஷத்தின் ஊழியப் பொறுப்பை நான் ஏற்று நடத்த தகுதியுள்ளவன் என்று எண்ணி எனது கரங்களில் கொடுத்த அன்பின் ஆண்டவருக்கும் நான் துரோகம் பண்ணாமல் "கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டு வந்தேன், நான் என் தேவனுக்குத் துரோகம் பண்ணவில்லை" (சங் 18 : 21) என்று சங்கீதக்காரரோடு சேர்ந்து நானும் சொல்ல அன்பின் கருணாகரன் எனக்கு இரக்கம் செய்துள்ளார். அந்த அன்பருக்கு நான் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?

இமயமலை தேவ ஊழியங்களை எழுதுவதற்கு முன்பாக இந்த காரியங்களை எல்லாம் உங்களுக்கு எழுதி இந்த தேவ ஊழியமானது காசு பணங்களுக்காகவோ, அல்லது நாசியில் சுவாசமுள்ள மனித புகழ்ச்சிக்காகவோ செய்யப்படாமல் முற்றுமாக கர்த்தருடைய நாம மகிமைக்காகவும், கள்ள உபதேசங்களும், சபையைத் தப்பவிடாத கொடிய ஓநாய்களும் பெருகியிருக்கும் இந்தக் கடைசி நாட்களில் மக்கள் தங்கள் பாவங்களுக்காக மார்பில் அடித்து மனந்திரும்பி இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொள்ளவும், இந்தக்கிருபையின் காலத்தில் ஆண்டவர் ஒருவரையே முழுமையாக அண்டிக்கொள்ளவும், கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்களுக்கு அடிமைகளாகாதிருக்கவும், தினமும் அதிகமான நேரத்தை ஆண்டவரின் பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டு, அவரின் வார்த்தைகளை வாசித்து தியானித்து, அவருடைய அமர்ந்த மெல்லிய குரல் கேட்டு அவரின் சித்தம் செய்யவும் இந்த எளிய தேவ ஊழியமானது உங்களை அறைகூவி அழைக்கின்றது.

 

தல் என்ற இடத்தை மையமாக வைத்து
செய்யப்பட்ட தேவ ஊழியங்கள்

டிடிகாட் என்ற இடத்தில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை செய்து முடித்து அங்கிருந்து ஜெபத்துடன் செங்குத்து மலை இறக்கத்தில் இருக்கும் தல் என்ற அழகான இடத்திற்கு வந்து சேர்ந்தோம். தல் என்ற ஊருக்கு மத்தியில் ராம் கங்கா என்ற நதி ஓடுகின்றது. நதிக்கு அந்தப் பக்கத்திலும், இந்தப் பக்கத்திலுமாக சிறிய கடை வீதியும் வீடுகளும் இருக்கின்றன. சற்றுத் தொலைவில் மேட்டிலும் வீடுகள் உள்ளன. நதியின் குறுக்காக ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தை நாங்கள் எங்கள் ஊழியத்தின் பாதையில் பல தடவைகளும் கடந்து சென்றிருக்கின்றோம். பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து பாகேஷ்வர் என்ற இடத்திற்குச் செல்லுவதானாலும், முனிசியாரி என்ற இடத்திற்குச் செல்ல வேண்டுமானாலும் நாம் இந்த இடத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். முக்கியமான நான்கு ரஸ்தாக்கள் சந்திக்கும் இடத்தில் இந்த தல் என்ற இடம் உள்ளது. ஒரு காலத்தில் இந்த இடத்தில் இராத்தங்க வசதியாக எந்த ஒரு லாட்ஜ்களும் இல்லாதிருந்தது. ஆண்டவருடைய கிருபையால் இப்பொழுது ஒரு கலியாண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. "ருத்துராஜ்" என்ற பெயரையுடைய அந்த கலியாண மண்டபத்தில் நாங்கள் சில நாட்கள் தங்கியிருந்து கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக நல்லதோர் ஊழியத்தைச் செய்து முடித்தோம். இந்த கலியாண மண்டபத்தில் இருந்த சமையல் அறையில் நாங்கள் எங்கள் ஆகாரங்களை சமைத்துச் சாப்பிட்டோம். மண்டபத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அலுவலருக்கு நாங்கள் இலவசமாக ஆகாரம் கொடுத்து அதற்கு மேலாக ரூபாய் 100 சமையலறை பாத்திரங்களுக்கு கொடுத்தோம். நாங்கள் பயன்படுத்திய காஸ் செலவுகள் தனியாக எங்களைச் சேர்ந்ததாகும். இது நீங்கலாக நாள் ஒன்றுக்கு ரூபாய் 1300 கலியாண மண்டபத்தின் வாடகையாகக் கொடுத்தோம். ராம் கங்கா நதியின் ஓரமாக நாங்கள் தங்கியிருந்த இடம் மிகவும் அழகாக இருந்தது. நாங்கள் தங்கியிருந்த ருத்துராஜ் கலியாண மண்டபத்தின் பெயர்ப் பலகையையும், அழகிய ராம் கங்கா நதியையும், மேட்டின் மேலிருந்த தல் என்ற இடத்தின் ஒரு பகுதியையும் நீங்கள் காணலாம்.

 

பாய்ஸ்கால், குவிட்டி, டோர்ஃபுலியில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்

தல் என்ற நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து நாச்சினி என்ற இடத்திற்கான தூரம் 15 கி.மீ. தொலைவாகும். ஒரு நாள் அதிகாலை நாங்கள் எழுந்து தேவ சமூகத்தில் நாங்கள் ஜெபித்துவிட்டு எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் ஊழியத்திற்காகப் பிரயாணப்பட்டோம். அநேகமாக நமது தேவ ஊழியர்கள் தினமும் எங்களுக்கு காலை ஆகாரமாக சுவையான பூரி தயாரித்து கொடுத்தார்கள். நமது சுவிசேஷ குழுவில் நமது மூத்த சகோதரன் D.T.நார்ட்டன் அவர்களும், பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், சகோதரன் விஜய்சிங் அவர்களும் சிறந்த சமையல்காரர்களாக எங்கள் ஆகாரங்களை சமைத்து எங்களுக்குக் கொடுத்தார்கள். மற்ற சகோதரர்கள் அவர்களுக்கு பக்க பலமாக எடுப்பு வேலைகளை கவனித்துக் கொண்டார்கள். கர்த்தர் அவர்கள் எல்லாரையும் ஆசீர்வதிப்பாராக.

தல் என்ற ஊரைக் கடந்து சில மலை ரஸ்தா வளைவுகளை நாங்கள் கடந்ததும் மேட்டில் ஒரு உயர்நிலைப் பள்ளி இருப்பது தெரிய வந்தது. எங்கள் வாகனத்தை ரஸ்தா ஓரமாக நிறுத்திவிட்டு நமது ஊழியர்கள் அங்கு சென்று ஆண்டவருடைய பிரசுரங்களை அங்கிருந்த ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியருக்கும் ஜெபத்தடன் கொடுத்து திரும்பினார்கள். அந்தப் பள்ளியையும், நமது சகோதரர்களையும் படத்தில் நீங்கள் காணலாம்.

அதின் பின்னர் நாங்கள் பாய்ஸ்கால் என்ற கிராமத்தை வந்தடைந்தோம். அங்கிருந்த பள்ளியில் 50 மாணவர்களும் 4 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் எல்லாருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். 4 ஆசிரியர்களுக்கும் மற்ற பிரசுரங்களுடன் 4 ஹிந்தி மொழி வேதாகமங்களை ஜெபத்துடன் வழங்கினோம். அங்கிருந்து சற்று தூரம் வரவே குவிட்டீ என்ற ஒரு ஊரின் கடை வீதிக்கு வந்தோம். கடை வீதியிலுள்ள மக்கள் யாவருக்கும் எங்கள் வாகனங்களை அங்கு நிறுத்தி தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அப்படி நாங்கள் கொடுத்துக் கொண்டு வரும் வேளையில் கடை வீதியில் துணிக்கடை வைத்திருந்த ஒரு மனிதர் தனக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் கட்டாயம் தரும்படியாக எங்களை அன்பாகக் கேட்டுக் கொண்டார். 1964 ஆம் ஆண்டு ஜியார்ஜ் என்ற பெயரையுடைய ஒரு கேரள மாநில மனிதர் தனக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் கொடுத்ததாகவும், அதின் மூலம் அவர் அதிகமான ஆசீர்வாதம் அடைந்ததாகவும் கூறினார். அந்த மனிதரின் விருப்பப்படி அவருக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் கொடுத்தோம். அவர் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. தனது கரத்தில் நாங்கள் கொடுத்த ஹிந்தி வேதாகமத்துடன் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்கும் நரேந்தர்சிங் ராவத் என்ற அந்த துணிக்கடைகார மனிதரை நீங்கள் இந்தச் செய்தியில் நீங்கள் காணலாம். அத்துடன் குவிட்டி ஊர் பெயர்ப்பலகையையும் நீங்கள் காண்பீர்கள்.

குவிட்டி கடைவீதியிலிருந்து நாங்கள் முன்னேறிச் சென்ற போது மற்றுமொரு சந்தைப் பகுதியை நாங்கள் வந்தடைந்தோம். அங்குள்ள மக்களுக்கெல்லாம் நாங்கள் ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அந்த கடை வீதிக்கு மேலாக மிகவும் உச்சியில் சோலை மரங்களுக்குள்ளாக ஒரு பெரிய மேல் நிலை பள்ளி இருப்பதை நாங்கள் கவனித்தோம். அந்த இடத்திற்குப் பெயர் டோர் ஃபுலி என்பதாகும். இடத்தின் பெயர் விநோதமாக இருக்கின்றதல்லவா? நமது தமிழ் நாட்டில் நாம் 11 ஆம் 12 ஆம் வகுப்புகள் அடங்கிய பள்ளியை மேல் நிலை பள்ளி என்று நாம் அழைப்பதுபோல உத்தராஞ்சல் மாநிலத்தில் அதை மேல் நிலை பள்ளி என்று அழைக்காமல் இண்டர்மீடியட் காலேஜ் என்றும் அங்கு படித்துக் கொடுக்கும் ஆசிரியர்களை விரிவுரையாளர்கள் (Lecturers) என்றும் தலைமை ஆசிரியரை பிரின்சிபால் என்றும் அழைக்கின்றனர். "அரசாங்க இண்டர்மீடியட் காலேஜ் - டோர் ஃபுலி " என்ற எழுத்துப் பலகை ஹிந்தியில் எழுதப்பட்டிருப்பதை உங்களில் ஹிந்தி தெரிந்தவர்கள் இந்தச் செய்தியில் வாசித்து அறிந்து கொள்ளலாம்.

நாங்கள் அந்த மேல் நிலைப் பள்ளிக்குச் சென்று அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு தேவனுடைய பிரசுரங்களை இலவசமாகக் கொடுக்க அந்தப் பள்ளியின் பிரின்பாலை அணுகினோம். அவர் அன்றைய தினம் லீவு ஆனதால் அவருடைய இடத்திலிருந்த உதவி பிரின்சிபால் மிகுந்த மனமகிழ்ச்சியோடு எங்களுக்கு அனுமதி அளித்தார். அன்பின் ஆண்டவருக்கு நன்றி செலுத்திவிட்டு அந்த மேல் நிலைப் பள்ளியில் பயின்று கொண்டிருந்த 780 மாணவ மாணவியருக்கும் 13 ஆசிரியப் பெருமக்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தோடு வழங்கினோம். 13 ஆசிரியர்களுக்கும் 13 ஹிந்தி மொழி வேதாகமங்களைக் கொடுத்ததுடன் "சாது சுந்தர்சிங்" "மெய்ச் சமாதானத்தைத் தேடி" "வேதாகம சாரம்" "உங்கள் வாழ்வின் உற்ற நண்பன்" "சமாதான காரணர்" "நீங்கள் அறிய வேண்டும் என்று தேவன் விரும்பும் நான்கு காரியங்கள்" "மோட்ச வாசல்" "உலகத்தின் ஒளி" "தேவனின் மகத்தான அன்பு" போன்ற இதர அருமையான கிறிஸ்தவ பிரசுரங்களையும் சேர்த்துக் கொடுத்தோம். அவர்கள் அடைந்த சந்தோசத்திற்கு அளவில்லை. நாங்கள் ஒவ்வொரு வகுப்பாகச் சென்று பிள்ளைகளுக்கு ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுக்க ஆசிரியர்கள் எங்களுக்கு மிகவும் உதவி செய்தார்கள். அந்த பள்ளியில் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் ஏற்ற காலத்தில் நிறைவான அறுவடையைத் தந்தருள தேவ பிள்ளைகளாகிய நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். டோர்ஃபுலி மேல்நிலைப் பள்ளியின் பெயர்ப் பலகையையும், அந்த பெரிய மேல் நிலைப் பள்ளியையும் நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

 

பாலா, பிர்த்தி ஃபால்ஸ் கிராமங்களில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்.

டோர்ஃபுலி மேல் நிலைப் பள்ளி ஊழியங்களை நாங்கள் முடித்துக் கொண்டு எங்களுக்கு எதிர்ப்பட்ட இடங்களில் எல்லாம் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டு பாலா என்ற கிராமத்தை வந்தடைந்தோம். அந்த இடத்திலும் நாங்கள் எங்கள் பணியை முடித்துக் கொண்டு நேராக பிர்த்தி ஃபால்ஸ் என்ற கடையாந்திர இமயமலை கிராமத்தை வந்து சேர்ந்தோம். இந்தக் கிராமத்திற்கு அப்பால் வேறு ஒரு கிராமம் இல்லை. இந்த கிராமத்திற்கு அருகில் சற்று தொலைவில் ஒரு நீர் வீழ்ச்சி உயரமான மலையிலிருந்து விழுந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். வருடம் முழுவதும் அந்த அருவியில் தண்ணீர் அந்தவிதமாகத்தான் விழுந்து கொண்டே இருக்குமாம். அதைக் காண்பதற்கு மக்கள் பல இடங்களிலும் இருந்து வருவதாகச் சொன்னார்கள். அதின் அருகில் சென்று யாரும் குளிக்க முடியாது. இராப் பகலாக விழுந்து கொண்டிருக்கும் அந்த அருவியை நீங்களும் படத்தில் காணலாம்.

அந்த நீர்வீழ்ச்சியின் பெயரை வைத்தே அந்த கிராமத்தின் பெயரையும் பிர்த்தி ஃபால்ஸ் என்றே வைத்திருக்கின்றனர். அந்த கடைக்கோடி கிராமத்திலும் நமது தேவ ஊழியர்கள் தேவனுடைய பிரசுரங்களை மக்களுக்குக் கொடுப்பதை நீங்கள் காணலாம்.

அந்த பிர்த்தி ஃபால்ஸ் கிராமத்தில் இருந்த உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற 185 மாணவ மாணவியருக்கும் 5 ஆசிரியர்களுக்கும் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்ததுடன் அங்கிருந்த ஆரம்ப பள்ளி மாணவர்கள் 39 பேர்களுக்கும் ஒரு ஆசிரியருக்கும் அவைகளைக் கொடுத்தோம். அங்குள்ள ஆசிரியர்கள் 6 பேர்களுக்கும் ஹிந்தி வேதாகமங்களைக் கொடுத்தோம். மிகவும் குளிரான அந்த இடத்தில் நாங்கள் அனைவரும் அங்கிருந்த டீ கடையில் டீ குடித்தோம். நாங்கள் டீ குடித்த இடத்திற்குப் பக்கத்தில் ஒரு வீட்டில் அசாதாரணமாக பூத்து மலர்ந்திருந்த ஒரு சிவந்தி பூச் செடியை நீங்களும் காண்பதற்காக ஒரு புகைப்படம் எடுத்து வந்தோம். பிர்த்தி ஃபால்ஸ் கிராமத்தையும், எங்களுடைய வாகனங்களில் ஒன்று அங்கு நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் பார்ப்பீர்கள்.

 

லாஜாக்கலா - அநித்தியமான மானிட வாழ்வின்
அடையாள சின்னம்

நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை பிர்த்தி ஃபால்ஸ் என்ற இடத்தில் முடித்துவிட்டு வேறுவழியாக திரும்பி வரும்போது குறிப்பிட்ட ஒரு இடம் வந்ததும் எங்கள் இரு வாகனங்களும் நிறுத்தப்பட்டன. நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கி ஓரிரு மாதங்களுக்கு முன்னர் அங்கு நிகழ்ந்த ஒரு துயர சம்பவத்தை எங்கள் எல்லாருக்கும் மன வேதனையுடன் விவரித்துக் கூறினார்கள். அந்த இடத்தில் ஒரு நாள் நள்ளிரவு திடீரென மிகவும் கனத்த மழை பெய்து ரஸ்தா ஓரமாக கட்டப்பட்டிருந்த வீடுகள் சில அப்படியே பள்ளத்தாக்கிற்கு அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதின் காரணமாக 35 பேர்கள் அங்கு உயிருடன் புதையுண்டதாகவும், நமது கண்களுக்கு முன்பாகவே அவர்களுடைய உடல்கள் பூமிக்குள் மறைந்து கிடப்பதாகவும், இதுவரை எவராலும் அந்த சடலங்களை மீட்க முடியவில்லை என்று சொன்னபோது நாங்கள் எல்லாரும் உள்ளம் கசிந்தோம். அந்த இடத்தில் நாங்கள் எல்லாரும் சற்று நேரம் அமைதியாக நின்று அன்பின் ஆண்டவர் எங்களுக்கு கிருபையாகக் கொடுத்த எங்கள் ஜீவனுக்காகவும், சுக பெலத்துக்காகவும் அவருக்கு நன்றி கூறிவிட்டு அங்கிருந்து கடந்து வந்தோம். 35 பேர்கள் புதையுண்ட இடத்தையும், அழிவுக்குத் தப்பின ஒரு வீடு பாதி இடிந்த நிலையில் காணப்படுவதையும் நீங்கள் காணலாம்.

 

காலாகேத், லச்சினா, மனாரி, விசால்கோட்டில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள்

கேர்னா என்ற இடத்திலிருந்து 36 கி.மீ. தொலைவிலுள்ள காலாகேத் என்ற இடத்திற்கு நாங்கள் ஒரு நாள் காலை சுமார் 9 மணி அளவில் தேவ ஊழியத்திற்காக ஜெபத்துடன் பிரயாணப்பட்டோம். காலாகேத் மிகவும் உயரமான இடத்தில், அதே சமயம் மிகவும் அழகான இடத்தில் இருக்கின்றது. வழி நெடுகிலும் நாங்கள் எங்களால் முடிந்த அளவு ஊழியங்களைச் செய்து கொண்டு இறுதியாக காலாகேத் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். காலாகேத் பள்ளிக்கு முன்பாகவே எங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ஒரே வளாகத்துக்குள் ஆரம்ப பள்ளியும், உயர் நிலைப் பள்ளியும் இருக்கின்றன. பள்ளியின் முகப்பிலேயே இரண்டு பள்ளிகள் இருப்பதை தெளிவாக ஹிந்தியில் எழுதி வைத்திருக்கின்றனர். உங்களில் ஹிந்தி தெரிந்தோர் அதை வாசித்து அறிந்து கொள்ளலாம். ஆரம்ப பள்ளியில் 52 மாணவ மாணவியரும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். உயர்நிலைப் பள்ளியில் 56 மாணவ மாணவியரும் 4 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் நாங்கள் கொண்டு சென்ற விதவிதமான தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். ஆசிரிய பெருமக்கள் யாவருக்கும் 6 ஹிந்தி மொழி வேதாகமங்களை கொடுத்தோம். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வயதான மனிதர். அவருக்கு வேதாகமம் கிடைத்தது மிகவும் சந்தோசத்தை அளிப்பதாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை.

அதின் பின்னர் லஜினா, மனாரி என்ற இடங்களிலுள்ள பள்ளிகளில் ஆண்டவருடைய பிரசுரங்களைக் கொடுக்க நாங்கள் விரும்பினோம். ஆனால், அந்த இடங்கள் மிகவும் உயரமான இடங்களில் இருந்ததால் நாங்கள் மலைத்து நின்றோம். இறுதியாக நமது ஊழியர்கள் விஜய்சிங், சோன்சிங் மற்றும் நரேஷ் மூவரும் தங்கள் ஜோல்னா பைகளை தேவனுடைய பிரசுரங்களாலும், ஓரிரு ஹிந்தி வேதாகமங்களாலும் நிரப்பிக் கொண்டு மலை ஏறத் தொடங்கினர். நாங்கள் அவர்களுக்காக அடிவாரத்தில் நின்று ஜெபித்துக் கொண்டிருந்தோம். லஜினா, மனாரியில் ஒரு ஆரம்ப பள்ளியும், ஒரு உயர் நிலைப் பள்ளியும் இருந்திருக்கின்றது. ஆரம்ப பள்ளியில் 110 மாணவர்களும், 8 ஆசிரியர்களும் இருந்திருக்கின்றனர். உயர் நிலைப் பள்ளியில் 77 மாணவர்களும் 5 ஆசிரியர்களும் இருந்திருக்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை நமது ஊழியர்கள் கொடுத்திருக்கின்றனர். அதிகமான வேதாகமங்களை தங்களுடன் எடுத்துச் செல்ல முடியாத காரணத்தால் தாங்கள் கொண்டு சென்ற 2 ஹிந்தி வேதாகமங்களை மட்டும் கொடுத்துவிட்டு திரும்பி விட்டனர். லஜினா, மனாரி என்ற இரு இடங்களின் பெயர்ப் பலகைகளை நீங்கள் காணலாம்.

விஜய்சிங், சோன்சிங், நரேஷ் மூவரும் வியர்வை வடிய வடிய எங்களண்டை வந்து சேர்ந்தனர். கர்த்தர் அவர்களை ஆசிர்வதிப்பாராக. நாங்கள் நின்று கொண்டிருந்த விஷால்கோட் என்ற இடத்தில் இருந்த ஒரு சிறிய டீ கடையில் நாங்கள் எல்லாரும் டீ குடித்தோம்.

அதற்கப்பால், நமது சகோதரர்கள் விஜய்சிங், சோன்சிங், அர்ச்சுன், மூவரும் சற்றுத் தொலைவிலிருந்த விஷால்கோட் என்ற கிராமத்திற்குச் சென்று கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தனர். அத்துடன் அங்கிருந்த ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்த 54 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருக்கின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் கொடுத்திருக்கின்றனர். கர்த்தருடைய கிருபையால் அந்த விஷால்கோட் கிராமம் முழுவதையும் நமது ஊழியர்கள் தேவனுடைய வார்த்தைகளால் சந்தித்து விட்டனர். விஷால்கோட் கிராமத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அதின் பின்னர் எங்கள் வழித்தடத்தில் ஜெய்னா என்ற கிராமத்திலிருந்த ஆரம்ப பள்ளி மாணவர்கள் 41 பேர்களுக்கும், 4 ஆசிரியர்களுக்கும் கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அங்கு ஒரு வேதாகமமும் கொடுத்தோம். அதற்கப்பால் சப்படி, சூனாகோட் சேரா, திப்போலா சேரா, நவ்கார், நவ்லி போன்ற கிராமங்களையும் தேவனுடைய வார்த்தைகளால் சந்தித்தோம்.

2009 ஆம் ஆண்டின் இறுதிக்கட்ட ஊழியமாக நாங்கள் செய்த எத்தனை எத்தனையோ ஊழியங்கள் உண்டு. அவைகள் அனைத்தையும் தனித்தனியே வேப்பிள்ளைகளாகிய உங்களுக்கு விவரித்து எழுதுவது முற்றும் கூடாத காரியமாகும். அது உங்களுக்கும் நன்றாகவே தெரியும். அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தேவ ஊழியச் செய்திகளை மாத்திரம் உங்களுக்கு அளித்திருக்கின்றேன். ஒவ்வொரு நாள் எங்கள் வாகன தேவ ஊழியங்கள் முடிந்ததும் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அந்த நாளில் சந்தித்த கிராமங்களின் பெயர்கள், சந்திக்கப்பட்ட பள்ளிகள், மாணாக்கர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, விநியோகிக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்களின் விபரங்கள், எங்களுக்கு ஊழியத்தில் ஏற்பட்ட ஆசீர்வாதமான சந்திப்புகள், சாத்தானுடைய இடையூறுகள் யாவையும் அதற்காகவே தன் வசம் எப்பொழுதும் வைத்திருக்கும் நோட்டில் எழுதி அந்தந்த நாளின் மாலையிலேயே எனக்குக் கொடுத்து விடுவார்கள். அப்படி அவர்கள் எனக்கு எழுதிக் கொடுத்த குறிப்புகள் பக்கம் பக்கமாக என் வசம் உள்ளன. அவைகளின் பெரும்பாலான விபரங்களை நான் தொடவே இல்லை. மறைவானவைகள் கர்த்தருக்குரியவைகள். மிகுதியான ஜெபங்கள், உபவாசங்கள், ஆத்தும பாரத்தோடு செய்யப்பட்ட இந்த ஊழியங்கள் ஒருக்காலும் வெறுமையாகப் போகாது. கர்த்தருக்கே மகிமை. இந்த உண்மையும், உத்தமுமான தேவ ஊழியங்களுக்காக கரம் நீட்டி உதவி செய்த, உள்ளத்தின் பாரத்தோடு ஜெபித்து தாங்கிய உங்கள் யாவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.

நாங்கள் விதைத்து வந்த தேவனுடைய ஜீவ வார்த்தைகள் முப்பது, அறுபது, நூறுமான பலனை பரலோகில் தர தொடர்ந்து அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அடுத்து வரும் சில பக்கங்களில் தேவனுடைய வார்த்தைகளை எங்கள் கரங்களிலிருந்து பெற்றுப் படிக்கும் மக்களையும், ஆங்காங்கு எங்கள் தேவ ஊழியர்கள் தவனமுள்ள ஆத்துமாக்களுக்கு கர்த்தரைப் பற்றிக் கூறுவதையும் நீங்கள் படங்களில் காணலாம்.


   


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM