பொல்லாங்கன் விதைக்கும் களைகளைக் குறித்து விழிப்பாக இருந்து உங்கள் ஆத்துமாக்களை
காத்துக் கொள்ளுங்கள்.



இந்த 2010 ஆம் ஆண்டு எங்கள் தேவ ஊழியத்தின் பாதையில் நாங்கள் உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள சவுக்குட்டியா என்ற இடத்திலுள்ள ஒரு லாட்ஜ்ஜில் தங்கியிருந்து சுற்றியுள்ள கிராமங்களில் தேவ ஊழியங்களைச் செய்து வந்தோம். நாங்கள் தங்கியிருந்த அறைக்கு கீழாக பள்ளத்தாக்கில் நிறைய வயல் நிலங்கள் இருந்தன. அந்த வயல்களில் தானியங்கள் விளைந்து அறுவடைக்குக் காத்திருந்தன. எங்கள் அறைக்கு முன்பாகவே ஒரு சிறிய வயல் உடனடி அறுவடைக்குக் காத்திருந்தது. திடீரென அந்த வயலை ஒரு நாள் ஒரு மனிதர் அறுவடை செய்யத் தொடங்கினார். நான் அந்த மனிதரையே கூர்மையாகக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவர் அப்படி அறுத்துக் கொண்டு வரும் வேளையில் நெல் தானிய பயிர்களின் நடுவாக பச்சை பசேரென்று காணப்பட்ட ஒரு களையை அப்படியே அறுக்காமல் விட்டுவிட்டார். அந்த இடத்தில் அதை அறுத்தால் அறுவடை செய்து போடப்பட்டிருக்கும் நெல் தானிய கதிர்களின் தானிய மணிகளை வேறு பிரிப்பதற்கு அது இடையூறாக இருக்கும் என்று அவர் நினைத்திருப்பார்.

அப்படி அவர் அறுக்காமல் விட்டுவிட்ட அந்தக் களையானது அந்த மத்தியான நேரம் என்னுடன் அதிகமாகப் பேசுவதாகக் காணப்பட்டது. அறுவடைக்கு முன்பு அந்தக் களையானது நெல் தானிய பயிர்களுடன் ஒன்றிணைந்து காற்றில் அசைந்தாடும் போது அதை யாரால் இது ஒன்றுக்கும் உதவாத களை என்று வேறு பிரித்து பார்க்க முடியும்? தன்னுடன் சேர்ந்த மற்ற நெற் பயிர்கள் எல்லாம் தங்கள் தலைகளில் தானிய மணிகளை சுமந்து கொண்டு நிற்கும்போது இந்தக் களையானது தேவையற்ற பசுமையான தாளடிகளை மட்டும் ஏந்தி நின்று கொண்டிருந்தது. அந்தக் காட்சியை நீங்களும் காண வேண்டும் என்பதற்காக அதை ஒரு புகைப்படம் எடுத்து வந்தேன்.

அறுவடை செய்யப்பட்ட நெற் கதிர்களை கிராமத்து பெண்கள் தங்கள் கால்களால் மிதித்து நசுக்கி தானிய மணிகளை வேறு பிரிப்பதை நீங்கள் மற்றொரு படத்தில் காண்பீர்கள்.

அறுவடை செய்யப்பட்ட வயல் மிகவும் சிறியதானதால் பெண்கள் அவ்வாறு தங்கள் கால்களால் மிதித்து, பின்னர் கோல்களால் அடித்து தானி மணிகளை உதிர்த்து எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.

 

தேவ ஜனமே, நீங்கள் களையா அல்லது தானியக்கதிரா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்

எக்காலத்தும் இல்லாத அளவில் இன்று தேவனுடைய திருச்சபை சாத்தானாம் பிசாசினால் புடைத்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நம்மைச் சுற்றியுள்ள புறமதஸ்தர்கள் நமது சாட்சியற்ற, கிறிஸ்தவ மகிமைக் குலைச்சலான வாழ்க்கையைக் கண்டு அன்பின் ஆண்டவரை தைரியமாக தூஷிக்கின்றனர். கிறிஸ்தவர்களின் சாட்சியற்ற வாழ்க்கையையும், அவர்கள் செய்கின்ற அட்டூழியங்களையும் செய்தித் தாட்களும், இதர உலகப்பிரகாரமான சஞ்சிகைகளும் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்றன. நானாவித தொலைக்காட்சி சானல்கள் அந்தச் செய்திகளை தங்கள் சின்னத்திரையில் இராப் பகலாக மக்களுக்கு திரையிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றது. கழுத்தில் பெரிய சிலுவையை தொங்கவிட்ட நிலையில் திருச்சபை தலைவர் ஒருவரை போலீஸ் காவலர்கள் பல கோடி ஊழல் விசாரணைக்காக காவல் நிலையம் கூட்டிச்செல்லுவதை தினசரி செய்தித்தாட்கள் பெரிய முகப்புப் படம் போட்டு கேவலப்படுத்தி சித்தரிப்பதை நாம் துயரத்துடன் காண்கின்றோம். தன்னுடைய பள்ளி நிறுவனத்தின் சின்னஞ் சிறிய சிறுமிகளுடன் தவறான பாலியல் உறவு கொண்ட காரணத்திற்காக பெரிய பள்ளி நிறுவனங்களின் கிறிஸ்தவ உரிமையாளரான கிழவர் ஒருவரை கையில் விலங்கிட்டு பட்டணத்தின் வீதி வழியாக காவலர்கள் காவல் நிலையம் அழைத்துச் செல்லும் தலை குனிவுக் காட்சிகளை செய்தித்தாட்கள் வெளியிட்டு கிறிஸ்தவ மார்க்கம் எத்தனை வெறுக்கத்தக்கதான மார்க்கம் என்பதை வெளி உலகுக்குக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.

அன்பின் ஆண்டவர் இயேசுவை தன் சொந்த இரட்சகராக தனது குழந்தைப் பருவத்தில் ஏற்று தன்னுடன் படிக்கும் தனது சிறிய சக மாணவத் தோழிகளுக்கும் தான் தனது இருதயத்தில் பெற்ற தன் இரட்சிப்பின் ஆனந்த சந்தோசத்தை பகிர்ந்து கொள்ள முயன்றபோது அந்த சின்னத் தோழிகளில் ஒருத்தி சுருக்கென்று கொடுத்த பதில் இதுவேதான் "உன்னுடைய கிறிஸ்தவ பிஷப்பை செய்தி தாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்தாயா? உன்னுடைய இயேசு எங்களுக்கு வேண்டாம்" என்பதே.

ஜீவனுள்ள தேவனுடைய மாட்சிமையான பரிசுத்த நாமம் இந்த அளவிற்கு மக்களால் தூஷிக்கப்பட ஒரே காரணம் பொல்லாங்கனாம் பிசாசு அதைச் செய்தான் என்பதுதான். தேவனுடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், பரிசுத்தத்தையும் ஆண்டவருடைய கட்டளையின்படி கண்ணீரோடும், ஆத்தும பாரத்தோடும் பிரசங்கித்து ஒரு கூட்டம் பரிசுத்த ஜனத்தை ஆண்டவருக்கு ஆயத்தப்படுத்த வேண்டிய தேவ ஊழியன் சாத்தானாம் பிசாசின் தந்திர ஆலோசனையின்படி நிலையில்லா சரீர சுகத்தையும், தங்களுக்குச் செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாயமார்க்கமாக பறந்து செல்லும் நிலையில்லா உலக ஐசுவரியத்தின் கவர்ச்சியையும், மாயாபுரி சந்தை சரக்குகளையும் தாரை, தப்பட்டை அடித்து பிரசங்கிப்பதுதான்.

"ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஒரு சின்ன இயேசுவாக மாறிவிட்டால் இந்தியாவை துரிதமாக ஆண்டவர் இயேசுவுக்குக் கொண்டு வந்துவிடலாம்" என்று கூறிய நம் தேசத் தந்தை காந்தி அடிகளுக்கு இருந்த அந்த தரிசனம் அடிக்கடி பரலோகம் சென்று ஆண்டவர் இயேசுவையும் அவரது அடியார்களையும் முகமுகமாக சந்தித்து, தரிசித்து, அவர்களுடன் அளவளாவி வருவதாகக் கூறிக் கொள்ளும் நம்மிடையே உள்ள ஆசீர்வாதப் பிரசங்கிகளுக்கு இல்லாமல் போனதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது.

பாவத்தைக் கண்டித்து உணர்த்திப் பிரசங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் உலக வாழ்வில் தொட்டதெல்லாம் பொன்னாகும் இரகசியத்தை தேவ ஜனத்துக்குக் காண்பிக்க விரும்புகின்றான். ஆண்டவர் இயேசுவை உண்மையாகவே இந்த உலகத்தில் பின்பற்றிச் செல்லும் அவரது அடியார்கள் அனைவர்களுக்குள்ள சிலுவைப்பாதையையும், பாடுகளையும், கண்ணீர்களையும் பிரசங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் கர்த்தருடைய ஜனம் இந்த உலகத்தில் செல்வ செழிப்பில் மிதந்து வாழ்ந்து, நூறாண்டு காலம் நோய் நொடியின்றி இருக்கப் போவதான சுகபோக வாழ்வுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்குகளாக திகழ்கின்றனர்.

தரித்திரராக (2 கொரி 6 : 10) இருந்து தரித்திரருக்கு (மத் 11 : 5) சுவிசேஷத்தை பிரசிங்கிக்க வேண்டிய தேவ ஊழியன் யாரும் அருகில் நெருங்க முடியாத கோடீஸ்வரர்களாக இருந்து கர்த்தருடைய ஜனத்துக்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் பிரசங்கிப்பதற்குப் பதிலாக சரீர சுகம், செல்வம், செழிப்பு குறித்துப் பேசுகின்றான். "மிகவும் சந்தோசமாய் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவு பண்ணவும், செலவு பண்ணப்படவும் விரும்புகிறேன்"(2 கொரி 12 : 15) என்றார் பரிசுத்த பவுல் அப்போஸ்தலன். ஆனால், இன்றைய கோடீஸ்வர ஊழியர் ஒரு கிறிஸ்தவனின் குழந்தைப் பருவத்திலிருந்து அதாவது "இளம் பாலகர்" திட்டத்திலிருந்து அவன் விருத்தாப்பியனாகி சாகும் காலம் வரை அதாவது "கிழவர் மரண கால ஆசீர்வாத திட்டம்" வரை பற்பலவிதமான பண வசூல் திட்டங்களை தந்திரமாக வடிவமைத்து தேவ ஜனத்தின் பணத்தை பசு மாட்டின் பால் மடுக்களில் வெண்ணெயைத் தடவி அதின் கன்று குட்டி குடிக்கக் கூட பாலின்றி ஒட்டறக் கறந்து விடுவது போல அவர்களின் பணங்களை கறந்து எடுத்து தங்களுடைய உலக வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுகின்றனர். பாவம், இந்த தேவப் பகைஞர் மற்றவர்களைவிட தங்களைப் புத்திசாலிகளென்று எண்ணிக் கொள்ளுகின்றனர். "கண்ணை உருவாக்கினவர் காணாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ" (சங் 94 : 9 - 10) என்று வேதம் இவர்களைப் பார்த்துக் கேட்கின்றது.

இந்த புத்திசாலித்தனமான தேவ ஊழியர்களுக்காக நாம் உள்ளம் உருகி பரிதபிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை. கர்த்தருடைய ஜீவனுள்ள வார்த்தை, ஒரு எழுத்தாகிலும் எழுத்தின் உறுப்பாகிலும் மாறாத தேவ வார்த்தை அவர்களை இப்படியாக எச்சரித்துச் சொல்லுகின்றது "தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான், ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்" (கலா 6 : 8) "நீ கொள்ளையிட்டு முடிந்த பின்பு கொள்ளையிடப்படுவாய், நீ துரோகம் பண்ணித் தீர்ந்த பின்பு உனக்குத் துரோகம் பண்ணுவார்கள்" (ஏசாயா 33 : 1) "கர்த்தர் பார்க்க மாட்டார் என்று சொல்லுகிறார்கள். ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கம் செய்வதுமில்லை, அவர்களுடைய வழியில் பலனை அவர்கள் சிரசின் மேல் இரங்கப்பண்ணுவேன்" (எசே 9 : 9 - 10) இந்த தேவ வார்த்தைகள் எல்லாம் சற்று கால தாமதம் ஆனாலும் நிச்சயமாக அப்படியே நிறைவேறியே தீரும்.

 

தேவ ஜனமே, உங்கள் ஆத்துமாக்களை
விழிப்புடன் காத்துக் கொள்ளுங்கள்

முடிவில்லாத நித்தியத்தை (Eternity) நாம் ஆண்டவர் இயேசுவோடு பரலோகத்திலா அல்லது எரி நரகிலா எங்கு செலவிட வேண்டும் என்பது நாம் எடுக்கும் திட்டமான தீர்மானத்தைப் பொறுத்த காரியமாகும். நாம் நமது இக லோக வாழ்விற்குப் பின்னர் மோட்சமா அல்லது நரகமா எங்கு செல்லுவோம் என்பதை இங்கேயே நாம் நிச்சயமாகக் கண்டு கொள்ளலாம். அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. நமது மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும், நமது மறுபுறப்பும் தேவனுடைய வசனத்தின்படி உண்மையாக இருந்து பரிசுத்த ஆவியானவர் அதற்கு ஆதாரமாக அதை முத்திரையிட்டு நமது உள்ளத்தில் எப்பொழுதும் வாசம் செய்து கொண்டிருப்பாரானால் நமது முடிவு எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி நீதிமானுடைய முடிவாகவே இருக்கும் (எண் 23 : 10)

இந்த உலக வாழ்வில் நாம் எப்பொழுதும் ஏனோக்கைப் போல தேவனோடு சஞ்சரித்துக் கொண்டே இருப்போம் (ஆதி 5 : 24) அந்த தேவாதி தேவனும் நம்மைப் பார்த்துக் களிகூர்ந்தவராக "மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்" (லூக்கா 15 : 31) என்று கூறுவார். கர்த்தர் நமது சுதந்திரமும், நமது பாத்திரத்தின் பங்குமாக இருக்கும் போது இந்த உலகத்தில் நமக்கு அவரைத் தவிர வேறு எந்த விருப்பமும், வாஞ்சையும் இருக்காது. அதைத்தான் தாவீது ராஜாவும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்று சொன்னார்.

உங்கள் வீட்டில் கரும் பெட்டி (தொலைக்காட்சி) இருந்து நீங்கள் அந்த தொலைக்காட்சியின் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளின் மகுடியில் மயங்கி அந்த ஆடல்கள், பாடல்கள், ஆனந்த கூத்துகளின் அரவணைப்பிலேயே உங்கள் நாளை செலவிட்டு இரவு உங்கள் இளைப்பாறுதலுக்குச் செல்லும் வரை அதின் ஆரவாரக் குரல்கள் உங்கள் காதுகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில் ஒன்றை நிச்சயமாக உங்கள் இருதயப் பலகையில் எழுதிக் கொள்ளுங்கள். "நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்" (தானி 5 : 27) இது உங்கள் ஆவிக்குரிய பரிசுத்த வாழ்வின் ஆபத்தான அறிகுறியாகும். உங்களுடைய இருதயம் கர்த்தரோடு செம்மையாக இருக்கவில்லை என்பதே அதின் பொருளாகும். உங்கள் இரட்சிப்பு, மறுபிறப்பின் காரியங்களில் நிச்சயமாக தவறுகள் இருக்கின்றது. அதின் காரணமாகவேதான் நீங்கள் தொலைக்காட்சியை நாள் முழுவதும் பார்த்து உங்கள் விலையேறப்பெற்ற காலத்தைப் பாழாக்குவதுடன் தினசரி செய்தித் தாட்களையும் வாங்கி ஆவலோடு வாசிக்கின்றீர்கள். அநேக கிறிஸ்தவர்களுக்கு செய்தித்தாட்கள்தான் தேவனுடைய பரிசுத்த வேதாகமம். ஒரு தடவை அதிக நேரம் செலவிட்டு அவைகளை வாசிப்பதுடன் நின்றுவிடாமல் மேஜை மீது கிடக்கும் அவைகளை அவ்வப்போது திரும்பவும் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பார்கள்.

அந்த பொன்னான மணி நேரங்களை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுவது என்பது அவர்களுக்கு எட்டியாக கசக்கும். பகற்கால மணி நேரங்கள் முழுவதையும் தொலைக்காட்சி, செய்தித்தாட்கள் வாசிப்பு, நண்பர்கள், உற்றார் உறவினருடன் அரட்டை, பேரக் குழந்தைகளை பள்ளிக்குக் கூட்டிக் கொண்டு சென்று விட்டு விட்டு பின்னர் அவர்களை திரும்ப அழைத்து வருதல், மீன், இறைச்சி, காய்கறி கடைக்குச் சென்று மத்தியான ஆகாரத்திற்கான பொருட்களை வாங்கிக் கொடுத்தல், உள்ளூர் வாசகசாலைக்கு சென்று அங்கு வரும் உலக சஞ்சிகளை அப்படியே ஒரு கண்ணோட்டம் போடுதல், மாலையில் உள்ளூர் ரயில் நிலையம் சென்று சாவதானமாக அமர்ந்து அங்கு வரும் மக்களையும், மேற்கேயும் கிழக்கேயும் இருந்து வரும் இரண்டு ரயில்களின் சந்திப்பையும் பார்த்து வீடு வந்து சற்று நேரத்திற்கெல்லாம் உணவருந்தி இரவு நேர கடைசி பி.பி.சி. உலகச் செய்திகளைக் கேட்ட வண்ணமாகவே படுக்கைக்குச் செல்லுவதை ஒரு நடைமுறை பழக்கமாகக் கொண்டிருக்கும் கிறிஸ்தவ மக்கள் அநேகருண்டு.

இந்த மக்கள் தங்கள் ஆண்டவருடைய பாதங்களுக்கு நாளின் ஒரு முறை தானும் சென்று அவருடன் அளவளாவி ஆனந்திப்பது, ஆண்டவருடைய பரிசுத்த வார்த்தைகளை வாசித்து தியானிப்பது என்பது எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத காரியங்களாகும். சடுதியாக மரணம் வருகின்றது. ஆயத்தமில்லாத நிலையில் மகா துயரத்தோடு நிர்ப்பந்தமாக மரித்து என்றென்றைக்குமுள்ள காரிருளுக்குள் இந்த மக்கள் கடந்து செல்லுகின்றனர். எத்தனை பயங்கரம் பாருங்கள்!

தேவ ஜனமே, இந்தக் கிருபையின் காலத்தில் நன்கு கண் விழித்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு தேவ ஊழியன் சரீர சுகம், செல்வம், செழிப்பு (Health, Wealth, Prosperity) குறித்துப் பிரசங்கிக்கின்றானோ, எந்த ஒரு தேவ ஊழியன் நிலையில்லா உலக மாயைகளுக்கு கவர்ச்சியின் வண்ணங்கள் கொடுத்து உங்கள் மனதை மயக்குகின்றானோ அவனை நாடி ஒருக்காலும் சென்றுவிடாதீர்கள். எந்த ஒரு தேவ ஊழியன் தனது கூட்டங்களில் பெயர் சொல்லிக் கூப்பிடும் தேவன் விரும்பாத, தேவ வசனங்களின் அடிப்படையில்லாத கெட்ட பழக்கத்தைக் கொண்டிருப்பானோ அவனைக் கண்ணேறிட்டும் பாராதேயுங்கள். தேவனுடைய ஜனத்தை இடுக்கமான சிலுவைப் பாதையில் வழிநடத்திச் செல்லாமல் விசாலமான நரகத்தின் பாதையில் அழைத்துச் செல்லும் அவர்களைப் பார்ப்பதே பாவமாகும். அவன் சாத்தானின் கைக்கூலி, அவனது முன்னணி அடியாள் என்பதை உங்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ளுங்கள்.

எந்த ஒரு தேவ ஊழியன் தான் பிரசங்கிக்கப் போகும் மேடையில் ராஜ தோரணையில் திரள் கூட்டத்திற்கு முன்பாக பெருமையாக அமர்ந்திருந்து அந்த ஊழியன் பிரசங்கிக்கப் போகும் சமயம் அவரது ஊழியர்கள் பயத்தோடும், நடுக்கத்தோடும் கை மைக்கை அவர் கையில் கொடுத்து பேச வைப்பதும், பேசி முடிந்ததும் திரும்பவும் அதை பவ்வியமாக அவருடைய கரத்திலிருந்து வாங்கி மேஜை மீது வைப்பதும், அவரை அப்படியே அல்லாக்காகத் தாங்கி அரவணைத்து அழைத்துச் சென்று பிரசங்க மேடைக்கு அருகில் அவரது வரவுக்காகக் காத்திருக்கும் விலையுயர்ந்த அவரின் குளிர்பதன காரினுள் ஏற்றி அனுப்புவதுமான பந்தாக்களை விரும்புவானோ, எந்த ஒரு தேவ ஊழியன் மக்கள் தன்னை தங்கள் தலைமேல் தூக்கி வைத்து ஆரவாரித்து ஆர்ப்பரிக்க மனதார விரும்புவானோ, எந்த ஒரு தேவ ஊழியன் தான் பேசப் போகும் கூட்டங்களில் மக்கள் பெருக்கத்தை அதிகரிக்க பெருங்கூட்டங்களின் முன்பாக தான் நின்று பேசுவதைப் போன்ற பெரிய பெரிய டிஜிட்டல் விளம்பர படுதாக்களை பட்டணத்தின் சந்து பொந்துகளில் எல்லாம் வைத்து திரள் கூட்டத்தை கவர்ந்திழுக்க பிரயாசப்படுவானோ, அவன் அடிமையின் ரூபமெடுத்து மனுஷர் சாயலான தேவ மைந்தனாம் ஆண்டவர் இயேசுவின் தாழ்மையின் சுவிசேஷத்தை அறிவிக்க சற்றும் தகுதியற்றவன். "நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாயிருக்கிறேன்" (மத் 11 : 29) என்ற தாழ்மைச் சொரூபனுக்கும் இந்த பொல்லாத ஊழியனுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமே கிடையாது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சகோதரன் ஒரு சமயம் என்னிடம் சொன்னது போல "சபை குருவானவர், தெற்கு வாசல் வழியாக ஆராதனை நடத்த ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் போது, ஆலயத்தினுள் இருக்கும் ஆண்டவர் அவரைக் கண்டு பயந்து வடக்கு வாசல் வழியாக வெளியே ஓடியே போய்விடுவார்" என்று சொன்னது போல இந்த வித பெருமைக்கார ஊழியக்காரர்கள் பிரசங்கிக்க மேடை ஏறினதும், மேடையிலிருக்கும் ஆண்டவர் அவர்களைக் கண்டு பயந்து ஓட்டம் பிடித்து விடுவார். இந்தவித பெருமைக்கார தேவ ஊழியர்களை நீங்கள் துரிதமாக அடையாளம் கண்டு கொள்ளலாம். அவர்களை விட்டு விலகுங்கள். அவர்களுடைய பிரசங்கங்களினால் நீங்கள் எந்த ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதமும் பெற மாட்டீர்கள். பெருமை இருக்கும் இடத்தில் ஆண்டவர் இருக்கமாட்டார். பெருமைக்காரருக்கு தேவன் எதிர்த்து நிற்கின்றார் (யாக் 4 : 6)

எந்த ஒரு தேவ ஊழியன் தனது ஊழியங்களுக்குப் பணம் தரும்படியாக தனது பத்திரிக்கைகளில் விளம்பரப்படுத்துகின்றானோ, எந்த ஒரு தேவ ஊழியனின் பத்திரிக்கைகள் பணத் தேவைகளால் நிறைந்து காணப்படுகின்றதோ, எந்த ஒரு தேவ ஊழியன் தனக்கு முன்னாலுள்ள ஒரு பெருங்கூட்டத்திற்கு முன்பாக ஒரு தேவ தூதனைப்போன்று நின்று பிரசங்கிப்பதைப் போன்ற பெருமைக்காரப் படங்களை தனது பத்திரிக்கைகளில் போட்டு தன்னை ஒரு பெரிய மனிதனாக தேவ ஜனத்துக்கு உயர்த்திக் காண்பிப்பானோ, எந்த ஒரு தேவ ஊழியன் சமுதாயத்தில் ஐசுவரியவான்களுக்கும், செல்வந்தர்களுக்கும், பொன் மோதிரமும் மினுக்கான வஸ்திரமும் தரித்திருப்போருக்கும் முதலிடம் கொடுத்து ஏழை எளிய மக்களை கண்டு கொள்ளாதவனோ அவன் யாரென்று கண்ணில்லாத கபோதி கூட அவர்களை தடவிப் பார்த்து தேவனுடைய தானிய பயிர்களுக்குள் மனுஷர் நித்திரை செய்கையில் களைகளை விதைக்கும் பொல்லாங்கனின் ஊழியக்காரர் என்று சொல்லிவிடுவார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களைக் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

இந்த பொல்லாத ஊழியர்கள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்ட மரியாளைப் போல ஆண்டவருடைய பாதங்களுக்கு உங்களை தனி ஜெப மன்றாட்டிற்குச் செல்லவிடாமல் தாங்கள் நடித்த, தாங்கள் பிரசங்கித்த கிறிஸ்தவ தொலைக்காட்சிகளைப் பார்க்கும்படியாக கரும்பெட்டிக்கு நேராக உங்களைத் துரத்திவிடுவார்கள். இவர்கள் ஆண்டவரோடுள்ள தங்கள் அந்தரங்க ஜெப வாழ்க்கையை உங்களுக்கு முன் மாதிரியாக வைக்கமாட்டார்கள். காரணம், அந்த ஜெப வாழ்க்கை அவர்களிடம் இருக்காது. அப்படி ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட அந்தரங்க ஜெப வாழ்க்கை அவர்களிடம் இருக்கும் பட்சத்தில் தேவ ஜனத்திற்கு மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் இடுக்கமான சிலுவை பாதையையும் தவிர வேறு எதை அவர்களால் பேச முடியும்? இவர்கள் தங்கள் ஆண்டவருக்காகவும், அழியும் ஆத்துமாக்களுக்காகவும் மேற்கொண்ட உபவாச ஜெப நாட்களை உங்களுக்கு சொல்ல முடியாது. இவர்கள் தங்கள் சரீர ஒடுக்கத்தையும், தங்கள் அருமை இரட்சகருக்காக தாங்கள் தங்கள் வாழ்வில் இழந்ததையும் உங்களுக்குச் சொல்லக் கூடாதவர்களாக இருப்பார்கள். "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள்" (1 கொரி 11 : 1) என்ற பரிசுத்த பவுலைப் போல இவர்களால் ஒருக்காலும் சொல்ல இயலாது. ஆனால், வேடிக்கையான காரியம் இந்த ஊழியர்கள் அடிக்கடி பரலோகம் சென்று அன்பின் ஆண்டவரையும், அவரது பரிசுத்தவான்களையும், பக்த சிரோன்மணிகளையும், முற்பிதாக்கள், தீர்க்கர்கள், அப்போஸ்தலர்கள், இரத்தசாட்சிகள் போன்ற பரலோகத்தின் சேனைத் திரளையே சந்தித்து ஒரு கலக்கு கலக்கி பரலோகத்தையே ஒரு அசைவு அசைத்து விட்டு மீண்டும் பூமிக்கு அமெரிக்க விண் கலம் டிஸ்கவரியைப் போல அற்புதமாக வந்து தரை இறங்குவதுதான். இந்த அண்டப் புழுகர்களை நம்ப தமிழ் கிறிஸ்தவ மக்களில் ஒரு பெருங்கூட்டம் மக்கள் அவர்களுக்குப் பின்னாக தோளோடு தோள் கொடுத்து அவர்களை ஆரோனும், ஊரும் மோசேயை மலையின் மேல் தாங்கிப்பிடித்து நிற்பது போல நிற்பதுதான் ஒரு மகா வேதனையான காரியமாகும். வணங்கா கழுத்துள்ள இஸ்ரவேல் மக்களைத் தேவன் தமது உக்கிரக கோபத்தில் அவர்களை அப்படியே வனாந்திரத்தில் அலைய விட்டு அழித்ததுபோல தங்கள் முழங்கால்களை தேவனுடைய சமூகத்தில் முடக்கி "ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர்?" (அப் 9 : 6) என்று தங்களைத் தாழ்த்தி தங்கள் அன்பின் ஆண்டவரின் குரல் கேட்டு அவருடைய சித்தம் செய்ய மனமற்ற இந்தப் பொல்லாத மக்களையும் கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்கள், நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக் கொண்ட பொல்லாத ஊழியக்காரரின் மாறுபாடான பொய் உபதேசங்களில் சிக்கி அவர்கள் தந்திரமாக எடுத்துவிடும் பரலோகக் கட்டுக்கதைகளைக் கேட்பதிலேயே தங்கள் வாழ்நாட் காலத்தைக் கழித்து தங்கள் ஆத்துமாக்களை நஷ்டப்படுத்தி துயரத்தோடு முடிக்கும்படியாக தேவனும் அவர்களை அழிவுக்கு ஒப்புவித்துவிட்டார் என்பதுதான் ஒரு கொடிய வேதனையான காரியமாகும் (2 தெச 2 : 11 - 12)

உலகத் தோற்றத்திற்கு முன்பு தேவன் உங்களை தமது சொந்த ஜனமாக நிலைப்படுத்தியது உண்மையானால் (எபேசியர் 1 : 4) "அவன் புற ஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்" (அப் 9 : 15) என்று அவர் உங்களைக் குறித்துச் சொல்லக்கூடுமானால் நீங்கள் மறுபடியும் பிறந்து, இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாக வாழும் தேவ மக்களாக இருப்பதுடன், மற்ற உலக கிறிஸ்தவ மக்களைப் போல ஆசீர்வாத பிரசங்கிகளின் மனதை மயக்கும் பிரசங்கங்களைக் கேட்டு கோடீஸ்வரர்களாக ஆகிவிட வேண்டுமே என்ற ஆவலில் அங்கும் இங்கும் ஓடி அலையாமல், அவர்களின் பிரசங்கங்களுக்காக கரும் பெட்டிக்கு முன்பாக இரவும் பகலும் விழுந்து கிடக்காமல் "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்ற சங்கீதக்காரரைப் போல சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஆண்டவருடைய பாதங்களிலேயே ஜெப நிலையில் காணப்படுவீர்கள். "ஐயோ, நான் என் ஆண்டவரைப் போல மாற வேண்டுமே, என்னைக் காண்கின்றவர்கள் என் ஆண்டவர் இயேசுவை என்னில் காண வேண்டுமே" என்று கதறுவீர்கள். அதைக் கருத்தில் கொண்டு தானே பரிசுத்த பவுல் அப்போஸ்தலனும் "என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக கர்ப்ப வேதனைப்படுகின்றேன்" (கலா 4 : 19) என்று கதறினார். ஆண்டவருடைய வேதம் உங்கள் களிகூருதலாக இருக்கும். உங்கள் முழங்கால்களில் நின்று வேதத்தை வாசித்து அவருடைய வார்த்தைகளுக்கு நடுநடுங்கி கீழ்ப்படிவீர்கள் (ஏசாயா 66 : 2) உங்கள் தனி ஜெப வேளைகளில் மோட்சத்தின் முன் ருசியை மனதார அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள். "உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருப்பதற்காக சந்தோசப்படுங்கள்" (லூக்கா 10 : 20) என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி உங்கள் சந்தோசம் தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்காக ஆயத்தம் பண்ணிய (1 கொரி 2 : 9) பரலோகத்தைப் பற்றியதாகவிருக்கும். அந்தப் பரம பாக்கியத்தை தேவன் தாமே தேவ மக்களாகிய உங்களுக்கும் பாவியாகிய எனக்கும் தந்து ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

 

மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கும் (சங் 119 : 37)

மாயையைப் பற்றி கிறிசொஸ்தம் என்ற பூர்வ காலத்து பரிசுத்தவான் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கின்றார்:-

"லோக மாந்தர் அனைவருக்கும் ஒரு பிரசங்கத்தைப் பிரசங்கிக்கக்கூடிய தகுதி எனக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதை தேவன் அறிந்து அந்த லோக மாந்தர் அனைவரையும் நான் காணத்தக்கதாக எனக்கு முன்பாகக்கூடி வரச் செய்து உலகத்தின் மிக உயர்ந்த ஒரு மலையை என்னுடைய பிரசங்க பீடமாக எனக்கு அமைத்துத் தந்து எனக்கு முன்பாகக் கூடிவந்த உலக மக்கள் அனைவருக்கும் என் பிரசங்க வார்த்தைகள் கேட்கத்தக்கதாக எனக்கு அவர் தம்முடைய பிரதான தூதனின் எக்காளக் குரல் ஓசையை தரும் பட்சத்தில் நான் அந்த மக்களுக்குப் பிரசங்கிக்கும்படியாக தெரிந்து கொள்ளக்கூடிய தேவனுடைய வசனம் யாதெனில் "மனுப்புத்திரரே, எதுவரைக்கும் வீணானதை (ஆங்கில வேதாகமத்தில் மாயை என்று திருப்பப்பட்டுள்ளது) விரும்பி பொய்யை நாடுவீர்கள்" (சங் 4 : 2) என்ற வசனத்தையே தெரிந்து கொள்ளுவேன்" என்று கூறினார்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM