இமயமலைகளில் தேவ ஊழியங்களை மீண்டும்
ஒரு ஆண்டு செய்து திரும்ப கரம் பிடித்து நடத்திய
நம் கன்மலையாம் கர்த்தர்.

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை என்றும் உண்டாவதாக. ஆமென். வழக்கம்போல இந்த ஆண்டிலும் (2010) நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி இமயமலைகளின் கடையாந்திர கிராமங்களுக்கெல்லாம் சென்று தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளை மக்களுடைய கரங்களில் ஜெபத்துடன் கொடுக்கவும், சந்தர்ப்பம் கிடைத்த இடங்களில் மக்களுக்கு முன்பாக சுவிசேஷம் அறிவிக்கவும் தேவ கிருபை பெற்றோம்.

2010 ஆம் ஆண்டில் மீண்டும் வடக்கே இமயமலைகளுக்குச் சென்று ஒரு வாகன தேவ ஊழியத்தை மேற்கொள்ளுவோம் என்பதை கிஞ்சித்தும் நான் நினைத்தே பார்க்கவில்லை. ஆனால், எனது மனதின் ஆவலை மட்டும் கர்த்தருக்குச் சொல்லி வைத்திருந்தேன். நீண்ட நாட்களாக வடக்கே செல்லுவதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் ஒரு இருளான சூழ்நிலையே காணப்பட்டு வந்தது. ஆனால், சற்றும் எதிர்பாராதவிதமாக இந்த தடவையும் வடக்கே ஊழியத்திற்குச் செல்லக்கூடிய ஒரு அற்புத வாய்ப்பை அன்பின் ஆண்டவர் ஒரு நாள் பூரணமாக தமது பரிசுத்த பிள்ளை ஒருவர் மூலமாக உறுதிப்படுத்திக் கொடுத்தார். கர்த்தருக்கே மகிமை.

அதைத் தொடர்ந்து நமது ஊழியத்தின் தேவைகள் ஒவ்வொன்றாக ஆச்சரியமாக சந்திக்கப்பட தொடங்கியது. பேதுரு அப்போஸ்தலனை, தேவ தூதன் அழைத்துச் செல்லுகையில் சிறைக்கூட கதவும், முதலாம் காவல், இரண்டாம் காவல் எல்லாம் திறந்து இறுதியாக நகரத்தின் இருப்புக்கதவும் தானாகத் திறந்து வழிவிட்டது போல நமது ஊழியத்தின் தேவைகள் எல்லாம் அடுத்தடுத்து மனுப்புத்திக்கு அப்பாற்பட்ட விதத்தில் சந்திக்கப்பட்டது.

இந்த தேவை நிறைந்த பதஷ்டமான நாட்களில் அன்பின் ஆண்டவர் திரும்ப திரும்ப "ஆபிரகாமே, நீ பயப்படாதே, நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்" (ஆதி 15 : 1) என்ற வார்த்தையைக் கொண்டு திரும்பத் திரும்ப என்னோடு பேசிக் கொண்டே இருந்தார். நான் எனது படுக்கையிலிருந்து எழும்பும் சில சமயங்களில் எல்லாம் மேற்கண்ட தேவ வார்த்தை என் உள்ளத்துக்குள் தொனிப்பதை நான் பரவசத்துடன் கவனித்தேன். அப்பொழுதே நான் ஆண்டவர் இந்த தடவையும் தம்முடைய ஊழியத்தை பொறுப்பெடுத்து அற்புதமாக நடத்துவார் என்பதை எனக்குள் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது பிள்ளைகளிடமும் இதுபற்றி நான் கூறினேன்.

யார் யார் அன்பின் ஆண்டவருடைய ஊழியத்தை எந்த ஒரு பண ஆசையும் இல்லாமல் மெய்யான ஆத்தும பாரத்தோடும், மக்கள் நித்திய அக்கினிக் கடலுக்குத் தப்பி ஆண்டவரை அண்டிக் கொள்ள வேண்டுமே என்ற கண்ணீரின் கதறுதலோடு உண்மையாகச் செய்வார்களோ அவர்களோடு கூட தேவன் இருந்து அற்புதமாக, எந்த ஒரு தாழ்ச்சியுமில்லாமல் அவர்களை வழிநடத்தி தம்முடைய ஜீவனுள்ள நாமத்தை மகிமைப்படுத்தியே தீருவார். அந்த தேவ மக்கள் தங்கள் ஊழியத்தின் தேவைகளை எவருக்கும் தெரிவிக்க அவசியமே இல்லை. ஊழியம் கர்த்தருடையது, ஆத்துமாக்கள் கர்த்தருடையவர்கள். அவர் தமது காரியத்தைக் கவனித்துக் கொள்ளுவார். நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஆண்டவருடைய பாதங்களுக்குச் சென்று அவருடைய சித்தம் செய்வது மட்டுமேதான்.

எல்லா தடவைகளையும் விட இந்த தடவை மிகவும் கூடுதலாக அதிகமான தேவனுடைய பிரசுரங்களை மக்களுடைய கரங்களில் கொடுக்கும் சிலாக்கியத்தை நாங்கள் பெற்றோம். இந்த தடவை 300 ஹிந்தி மொழி வேதாகமங்களை ஊழியத்தில் கொடுத்தோம். இந்த 300 வேதாகமங்களையும் மூன்று கர்த்தருடைய பிள்ளைகள் அலகாபாத்தில் வாங்கி எங்களுக்குக் கொடுத்தார்கள். 400 கிதியோனியர் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளை உத்திரபிரதேசம் மொரதாபாத் என்ற இடத்திலுள்ள சகோதரன் நீலாம்பர் டாட் அவர்கள் எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தான் எங்களுக்கு இந்த அன்பை செய்து வருகின்றார்கள்.

வழக்கம்போல இந்த தடவையும் நமது இந்திய வேதாகம சங்கம் 15000 ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷம் (சாந்தி மார்க்கம்) பெங்களூரில் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் முகவரியை குறிப்பிட்டு நமக்காகவே விஷேமாக அச்சிட்டுக் கொடுத்தார்கள்.

இத்தனை ஆண்டுகளும் நாம் ஹிந்தியில் "சமாதான காரணர்" "உண்மை நண்பர்" "நீங்கள் அறிய வேண்டும் என்று தேவன் விரும்பும் நான்கு காரியங்கள்" என்ற மூன்று பிரதிகளையே திரும்பத் திரும்ப அச்சிட்டு விநியோகித்து வந்தோம். கர்த்தருடைய கிருபையால் இந்த தடவை ஒரு புது திருப்பு முகமாக வட இந்திய இந்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள விதத்தில் இயேசு ஒருவரே மெய்யான தேவன் என்பதை இந்துப் புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை போன்றவற்றிலிருந்து மேற்கோள்கள் காண்பித்து பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் மிகவும் அருமையாக எழுதிய மூன்று கைப்பிரதிகளை அச்சிட்டோம். "மோட்ச வாசல்" "பாவம் போக்க புண்ணிய நதிகளுக்கு யாத்திரை" "இரட்சகா நித்திய ஜீவனை எனக்குத் தாரும்" என்பதே அந்த மூன்று இந்தி மொழி கைப்பிரதிகளாகும்.

தேவ மனிதர் பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் கடந்த ஆண்டு மத்தியில் நமது தேவ எக்காளத்தில் அச்சிட்டு வெளியிட்டோம். அந்த வரலாறு அநேகருக்கு ஆசீர்வாதமாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். மதுரையில் ஒரு பெரிய கிறிஸ்தவ பெண்கள் மேல் நிலை பள்ளியில் அந்த தேவ மனிதரின் மெய்சிலிர்க்கும் சாட்சியை பிள்ளைகள் நடுவே ஊழியம் செய்யும் இரு தேவ பிள்ளைகள் தொடர்ந்து 2 நாட்களாக அறிவித்து ஊழியம் செய்திருக்கின்றனர். குறிப்பாக சர்மா அவர்களின் மனைவி ஆஷா அம்மையார் அவர்களின் சாட்சி பெண் பிள்ளைகள் நடுவே ஒரு பெரிய அசைவையே உண்டாக்கினதாக செய்தி கிடைத்தது. துதி, கனம், மகிமை எல்லாம் நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கே.

அந்த தேவ மனிதர் பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களே இந்த தடவை நமது ஊழியத்திற்குத் தேவையான மேற்கண்ட மூன்று ஹிந்தி மொழி கைப்பிரதிகளையும் வகைக்கு 15000 வீதம் 45000 பிரதிகளை தமது சொந்த மாநிலமான ராஜஸ்தானத்தின் ஆஜ்மீர் என்ற பட்டணத்திலுள்ள ஒரு அச்சுக்கூடத்தில் அச்சிட்டு நேரடியாக நமது தேவ ஊழியருக்கு ஹல்த்வானி பட்டணத்திற்கு அனுப்பி வைத்தார்கள். கர்த்தருக்கே மகிமை.

இந்த 2010 ஆம் ஆண்டு உத்தராஞ்சல் மாநிலத்தில் தேவ ஊழியம் செய்ய முடியுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது. காரணம், இந்த ஆண்டு அந்த மாநிலத்தில் பேரழிவு மழை பெய்து பட்டணங்கள் தோறும் பலத்த அழிவுகள் ஏற்பட்டன. அந்த மாநிலத்தின் முக்கியமான அல்மோரா பட்டணம் பலத்த சேதத்துக்குள்ளானது. அநேகர் வீடுகள் இடிந்து விழுந்து மாண்டு போனார்கள். அல்மோராவுக்குச் செல்லும் பாதைகள் பல இடங்களிலும் முற்றும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. மழையினால் ஏற்பட்ட இப்படிப்பட்ட ஒரு பலத்த அழிவு 44 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் உத்தராஞ்சல் மாநிலத்தில் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். இந்த மழை அழிவுகள் உயரமான கட்வால் பகுதியில் இன்னும் கூடுதலாக இருந்தது என்பதை நாங்கள் அங்கு போன பின்னரே காண முடிந்தது.

வடக்கே செல்லுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, ஊழியத்திற்குத் தேவையான பல்லாயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்கள் எல்லாம் தேவனுடைய மட்டில்லாத கிருபையால் அப்பொழுது பெய்து கொண்டிருந்த மழைகளின் நடுவே பாதுகாப்பாக போய்ச் சேர வேண்டிய இடங்களுக்குச் சேர்ந்து, எங்களுடைய ரயில்வே டிக்கெட்டுகளெல்லாம் ரிசர்வ் செய்யப்பட்டு அனைத்து தேவ ஊழியர்களும் வந்து சந்திக்க வேண்டிய இடங்கள் எல்லாம் முன்கூட்டியே பணம் கட்டி ஆயத்தம்பண்ணப்பட்டு முடிந்திருந்தது.

இந்த சூழ்நிலையில் ஊழியத்திற்குப் புறப்பட இன்னும் 3 வாரங்கள் மட்டுமே இருக்கும் நேரத்தில் உங்கள் சகோதரனாகிய நான் ஒரு நாள் இரவு மூச்சுத் திணறலினால் மிகவும் கஷ்டப்பட்டு அடுத்த நாள் காலை மருத்துவரை அணுகினோம். உடனே அவர் E.C.G. எல்லாம் எடுத்து எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தார். பின்னர் பிள்ளைகள் என்னை மேட்டுப்பாளையம் அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு கிறிஸ்தவ மருத்துவ மனையில் பரிசோதித்து, கோவையிலிருந்து ஒரு இருதய சிகிட்சை நிபுணரை வரவழைத்து என்னை பரிசோதித்தார்கள். கர்த்தருடைய பேரன்பால் நாம் அஞ்சுவதற்கு ஒன்றும் இல்லை என்று மருத்துவர் கூறி மாத்திரைகளைக் கொடுத்தனர். இருப்பினும், இந்த தடவை வடக்கே தேவ ஊழியத்தின் பாதையில் இமய மலைகளுக்குச் செல்லக்கூடாது என்று திட்டமாகக் கூறிவிட்டார்கள்.

கைக்கு எட்டிய கனி வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என்ற உள்ளத்தின் பாரத்தினால் தவித்தவனாக ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுப்பதைத் தவிர வேறு ஒரு வழியும் எனக்குத் தெரிவில்லை. இறுதியாக என்னை முழுமையாக ஆண்டவருடைய கரங்களில் ஒப்புவித்து விட்டு மரணமோ ஜீவனோ எதுவானாலும் இந்த ஆண்டும் வடக்கே செல்லுவதென்ற ஒரே குறிக்கோளுடன் புறப்பட்டுச் சென்று கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக தேவ ஊழியத்தை நல்லவிதமாக நிறைவேற்றி முடித்து திரும்பவும் தேவப்பிள்ளைகளாகிய உங்கள் நடுவில் நான் வந்து சேர்ந்தேன். அந்த அன்பருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?

இந்த ஆண்டும் நமது வாகனங்களை மனோஜ் மற்றும் நரேஷ் என்ற இரு சகோதரர்களே ஓட்டி வந்தார்கள். நம்முடன் ஆண்டுதோறும் நமது ஊழியத்தில் கலந்து கொண்டு வருவதினால் அவர்களும் கர்த்தருக்குள் நன்கு வளரத் தொடங்கியிருக்கின்றனர். மனோஜ் ஓட்டி வரும் வாகனம் அவருக்குச் சொந்தமானதாகும். அவர் தமது வாகனத்தின் முன் கண்ணாடியில் "இயேசுவின் கிருபை" என்று அர்த்தம் கொள்ளும் விதத்தில் ஹிந்தியில் "பிரபு கிருபா" என்று எழுதி வைத்திருக்கின்றார். அவருடைய வீட்டில் நடைபெறும் இந்து பூஜைகளில் எல்லாம் இப்பொழுது அவர் கலந்து கொள்ளுவதில்லை. இந்த தடவை வீட்டில் அவருடைய அண்ணன் கைலாஸ் என்பவர் மேல் சாமி வந்து இறங்கியதால் பலமாக ஆடினாராம். ஆனால், மனோஜ் ஆண்டவருக்குள் இருப்பதால் அவருக்கு அப்படி எதுவும் வராமல் கர்த்தர் காத்துக் கொண்டதாக நமது பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களிடம் கூறியிருக்கின்றார். கர்த்தருக்கே மகிமை. நாங்கள் கூடி ஆராதிக்கும் சமயங்களில் ஹிந்தி ஆராதனை கீதங்களை உபயோகித்து கர்த்தரைப் பாடித் துதிப்போம். அந்த பாட்டுப் புத்தகங்களிலுள்ள பாடல்கள் எல்லாம் ஓரளவு மனோஜ், நரேஷ் இருவருக்கும் நன்றாகத் தெரியும். அவர்களே, பாடல்களின் எண்களைக் கூறி அவர்கள் விரும்பும் பாடல்களைப் பாடச் சொல்லுவார்கள். கர்த்தருக்கே மகிமை. மனோஜ், நரேஷ் இருவரின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

இந்த தடவை நம்முடைய வாகன தேவ ஊழியத்தில் கலந்து கொண்ட தேவ பிள்ளைகள் சகோதரன் டி.ற்றி.நார்ட்டன், என்.சாமுவேல், பித்தோர்கார் பட்டணத்திலிருந்து பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல், டணக்பூர் என்ற இடத்திலிருந்து சகோதரன் விஜய சிங், ருத்ரபூர் என்ற இடத்திலிருந்து சகோதரன் பாக்கேலால், சண்டாக் என்ற இடத்திலிருந்து சகோதரர்கள் விக்ரம் சிங், நிர்மல் ஆகியவர்கள் ஆவார்கள். ஊழியத்தில் ஒரு மாத காலம் கலந்து கொண்ட அந்த தேவ பிள்ளைகளின் படத்தையும் நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

இந்த தடவை நமது ஊழியத்தில் நாம் பயன்படுத்திய தேவனுடைய பிரசுரங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். நாமே நமக்குத் தேவையானவைகளை அச்சிட்டது நீங்கலாக டில்லியில் உள்ள சுவிசேஷ நற்செய்தி பணி இயக்கம் (Operation Mobilization) மற்றும் மசிஹி சாகித்ய சன்ஸ்தா (Masihi Sahitya Sanstha) போன்ற பெரிய கிறிஸ்தவ ஸ்தாபனங்களிலிருந்தும் நாம் அதிக விலை கொடுத்து "சாது சுந்தர்சிங்" "மெய் சமாதானத்தை தேடி" "இந்து வேதங்கள் தேடும் மோட்ச யாத்திரையின் லட்சய புருஷர் இயேசு கிறிஸ்து ஒருவரே" போன்ற அருமையான புத்தகங்களை வாங்கினோம்.

இந்த தடவை எங்களுடைய ஊழியம் கட்வால் மலைப் பகுதிகளில் நடப்பதை மனதில் கொண்டு நாங்கள் விநியோகிக்கவிருந்த ஏராளமான தேவனுடைய பிரசுரங்களை இமயமலைகளின் அடிவாரப்பட்டணமான ஹல்த்வானியில் வைத்துக் கொண்டு அங்கிருந்து ஒரு லாரி பிடித்து ராணிகேத் என்ற இடத்திற்குக் கொண்டு சென்றோம். பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்று மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்த வழித்தடத்தில் லாரியுடன் ராணிகேத் என்ற இடத்திற்கு ஒரு நாள் இரவில் சென்றிருக்கின்றார்கள். ஓரிடத்தில், மழைத் தண்ணீர் மற்றும் சகதியின் காரணமாக லாரியே சாய்ந்து விழக்கூடிய ஆபத்தான நிலையிலிருந்து கர்த்தர் அற்புதமாக பாதுகாத்திருக்கின்றார். ஹல்த்வானியிலிருந்து புறப்பட்டு ராணிகேத் போய்ச் சேர இரவு அதிக நேரம் ஆகிவிட்டபடியால் லாரியிலிருந்த ஏராளமான மூட்டைகளைத் தூக்க எந்த ஒரு போர்ட்டர்களும் கிடையாமல், கடைசியாக லாரியின் டிரைவரும், நமது சகோதரன் அவர்களும் மற்றுமொரு தேவ பிள்ளையுமாகச் சேர்ந்து அவைகள் எல்லாவற்றையும் மிகவும் கஷ்டப்பட்டு ராணிகேத்திலுள்ள ஒரு மிஷன் பள்ளியில் ஒரு பெரிய காலி அறையில் வைத்திருக்கின்றார்கள். அந்தப் பள்ளியின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அந்தப் பள்ளியில் தேவனுடைய பிரசுரங்களை வைத்துக் கொள்ள நமக்கு இடம் கிடைத்ததே ஒரு அற்புதமான தேவச் செயலாகும். அந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்க்கின்ற அஜய் என்ற சகோதரன் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் வசிக்கும் பித்தோர்கார் என்ற பட்டணத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ பெண்ணை கலியாணம் செய்திருக்கின்றார். அந்தப் பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததே நமது சாமுவேல் சகோதரன் தானாம். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மேற்குறிப்பிட்ட அஜய் என்பவர் தான் வேலை பார்க்கின்ற மிஷன் பள்ளியின் தனது பெரிய விசாலமான அறை முழுவதையும் நம்முடைய கைப்பிரதிகள் யாவற்றையும் வைத்துக் கொள்ளுவதற்காக அப்படியே கொடுத்துவிட்டார். அந்த அறை நமக்குக் கிடைத்திராத பட்சத்தில் மிகவும் செலவினமான அந்த பட்டணத்தில் ஒரு இடம் வாடகைக்கு எடுத்து நமது பிரசுரங்களை வைப்பதானால் நாம் பல ஆயிர ரூபாய்களை வாடகைப்பணமாக நாம் செலுத்த வேண்டியதாக இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, நாங்கள் எல்லாரும் ஒன்றாக இரண்டு முழுமையான நாட்கள் அந்தப் பள்ளியில் அமர்ந்து எங்களுடைய சுவிசேஷ பிரதிகளை மக்களுக்குக் கொடுக்க வசதியாக நாங்கள் ஒழுங்குபடுத்திக் கொள்ளவும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அஜய் சகோதரன் ஒழுங்கு செய்து கொடுத்தார். அதற்கு வசதியாக தனது பள்ளி மாணவர்களைக் கொண்டே எங்கள் சுவிசேஷ மூட்டைகளை எல்லாம் நாங்கள் இருந்த அறைக்குக் கொண்டு வந்து சேர்க்கச் சொன்னார். அவர்கள் எங்களுக்குப் பாராட்டிய அன்பு அதிகமாகும். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

இந்தக் காரியங்கள் எல்லாம் ஏதோ தற்செயலாகவோ, அல்லது உலக வார்த்தைகளில் சொல்லப்போனால் அதிர்ஷ்டவசமாகவோ நடைபெறாமல் இந்த மகத்தான தேவ ஊழியத்தை பாவிகளாகிய எங்களைக் கொண்டு செய்ய வேண்டுமென்று திருவுளச் சித்தம் கொண்ட அன்பின் ஆண்டவருடைய அநாதி அன்பின் தீர்மானத்தினால் நடைபெற்றது.

கர்த்தருடைய அன்பின் கிருபையால் 29/9/2010 ஆம் தேதி சகோதரன் நார்ட்டன் அவர்களும் நானும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து இரவு சுமார் 8 மணி அளவில் சென்னைக்குப் புறப்படும் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணமானோம். எங்களை வழி அனுப்பி வைக்க எனது இரு மகன்கள் சுந்தர்சிங் மற்றும் சார்லஸ் பின்னி அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் வரை வந்து எங்களை ஜெபத்துடன் வழி அனுப்பிவிட்டுச் சென்றனர். நல்ல உடல் நலம் இல்லாமல் ஊழியத்திற்காக கடந்து செல்லும் என்னைக் குறித்து பிள்ளைகளுக்கு அதிக மனக் கவலை இருந்தது.

30/9/2010 ஆம் தேதி அதிகாலையே சென்னை வந்து சேர்ந்த நாங்கள் இன்னும் சில மணி நேரத்திற்குள்ளாக வடக்கே உத்தராஞ்சல் மாநிலத்தின் தலை நகரான டேராடூனுக்குச் செல்லும் டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணப்பட வேண்டியதாக இருந்ததால் பட்டணத்துக்குள் சென்று லாட்ஜ் ஏதாவது எடுத்து தங்கி எங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள இயலாமல் ரயில் நிலையத்திலேயே எங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு மத்தியானம் 11:30 மணி அளவிற்கு வடக்கே பிரயாணமானோம்.

வண்டி புறப்படுவதற்கு முன்பாக நமது தேவ எக்காளத்தையும், நமது ஊழியங்களையும் கர்த்தருக்குள் அதிகமாக நேசிக்கும் தேவ எக்காளத்தின் ஆரம்ப கால சந்தாதாரரான அருமை சகோதரன் சைமன் சாலொமோன் அவர்கள் ரயில் நிலையம் வந்து நாங்கள் மேற்கொள்ளப் போகும் வட மாநில தேவ ஊழியத்திற்காக உள்ளம் உருகி நாங்கள் இருந்த ரயில் பெட்டியிலேயே ஜெபித்துவிட்டுச் சென்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் கர்த்தருடைய கிருபையால் அநேகமாக இந்த தேவ அன்பை அவர்கள் செய்து வருகின்றார்கள். கடந்த நாட்களில் எங்களை தன்னுடைய வீட்டிற்கே அழைத்துச் சென்று எங்களை ஒரு இரவு அவர்களோடு தங்க வைத்து எல்லா அன்புப் பணிவிடைகளையும் குடும்பமாகச் செய்து அடுத்த நாள் ரயிலில் அனுப்பி வைப்பார்கள். நாங்கள் எந்த தேதியில் பிரயாணம் ஆரம்பிக்கின்றோம், சென்னையிலிருந்து எந்த வண்டிக்குப் புறப்பட்டுச் செல்லுகின்றோம் என்ற எந்த விபரங்களையும் நாங்கள் அவர்களுக்குக் கொடுக்க மறுத்தாலும் வலுக்கட்டாயமாக அந்த விபரங்களை எங்களிடமிருந்து பெற்று தனது அன்பை அவர்கள் செய்துவிடுவார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

நாங்கள் சென்னையிலிருந்து புறப்பட்ட செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியானது அயோத்தியா குறித்த நீதி மன்ற தீர்ப்பு வெளியாக இருந்தமையால் நாடு முழுவதும் அந்த தீர்ப்பை மக்கள் மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததுடன் அதின் காரணமாக என்ன எதிர் விளைவுகள் ஏற்படுமோ என்ற பயம் எல்லாரையும் பிடித்திருந்தது. நாங்கள் மாலை நேரம் ஆந்திராவின் விஜயவாடா வந்தபோது அத்துடன் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டுவிடும் என்று நிச்சயமாக எண்ணினோம். ஆனால் அன்பின் ஆண்டவர் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் அருமையாக எங்களை வழிநடத்திச் சென்றார்.

கர்த்தருடைய பெரிதான கிருபையால் நாங்கள் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணிக்கும் முன்பதாகவே இந்து மக்களின் புண்ணியஸ்தலமான ஹரித்துவாரம் பட்டணம் வந்தடைந்தோம். அங்கு எங்களை அழைத்துச் செல்ல நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்களும் ரயில் நிலையம் வந்திருந்தனர். எங்களைச் சந்தித்துக் கூட்டிச் செல்லுவதற்காகவே அவர்கள் மனோஜ் அவர்களின் வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்து முந்தின நாளே ஹரித்துவாரம் பட்டணத்தில் இராத் தங்கியிருந்தனர்.

அந்தக் காலை வேளையிலேயே நாங்கள் நமது சகோதரர்கள் தங்கியிருந்த லாட்ஜ்க்கு சென்று குளித்து உடனே அடுத்த பயணத்துக்கு ஜெபத்துடன் ஆயத்தமானோம். நாங்கள் ஹரித்துவாரத்தை கடந்து அடர்ந்த காட்டுப் பாதை வழியாகவே சென்று கொண்டிருந்தோம். இந்தியாவின் பிரசித்திபெற்ற ராஜாஜி வனவிலங்கு சரணாலயத்தின் வழியாகவே எங்கள் பாதை சென்றது. எந்த நேரமும் யானையோ, மற்ற கானக விலங்குகளோ ரஸ்தாவில் காணப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அப்படி எந்த ஒரு வன விலங்கையும் நாங்கள் கடைசி வரை பார்க்கவே இல்லை. நாங்கள் எங்கள் வழித்தடத்தில் மொராதாபாத், ராம்பூர் போன்ற பட்டணங்களைக் கடந்து ருத்ரபூர் என்ற பட்டணத்திற்கு வந்து சேர்ந்தோம். நமது ஊழியத்தில் ஆண்டுதோறும் கலந்து கொள்ளும் சகோதரன் பாக்கேலால் அவர்கள் இங்குதான் இருக்கின்றார்கள். நாங்கள் அந்த வழியாக வருகின்றோம் என்பதை அறிந்த அவர்கள் இந்த ஆண்டும் எங்களுடைய ஊழியங்களில் கலந்து கொள்ளுவதற்காக தனது மனைவி மாலதி தேவியுடன் எங்கள் வருகைக்காக காத்துக் காண்டிருந்தார்கள். எங்களைக் கண்டது அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. சகோதரனை மட்டும் நாங்கள் எங்களுடன் கூட்டிக் கொண்டு எங்களுடைய பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.

இறுதியாக நாங்கள் ஹல்த்வானி பட்டணம் வந்து அங்கிருந்து காதகோடம் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்குள்ள அரசினர் விடுதியில்தான் நாங்கள் எல்லாரும் தங்குவதற்கு அறைகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் அங்கு போய்ச் சேருவதற்கு முன்பாகவே நமது மற்றொரு வாகனமும் அதை ஓட்டி வந்த டிரைவர் சகோதரன் நரேஷ் மற்றும் சகோதரர்கள் விஜயசிங், விக்கிரம் சிங், நிர்மல் எல்லாரும் வந்து சேர்ந்து எங்கள் வருகைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். நாங்கள் எல்லாரும் ஓராண்டு கால இடைவெளிக்குப் பின்னர் திரும்பவுமாக ஆண்டவருடைய ஊழியத்தின் பாதையில் ஒன்றாகச் சேர்ந்தது கர்த்தருக்குள் எங்கள் அனைவருக்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.

அடுத்து வந்த நாள் 3/10/2010 ஆம் தேதி கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளாக இருந்தபடியால் நாங்கள் எல்லாரும் ஒன்று கூடி கர்த்தரைப் பாடித் துதித்து அடுத்து நாங்கள் செய்யவிருக்கும் கர்த்தருடைய ஊழியங்களுக்காக தனித்தனியாக ஜெபித்தோம். அப்படி நாங்கள் காதகோடம் என்ற நாங்கள் தங்கியிருந்த இடத்தில் கர்த்தரைப் பாடித் துதிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

எங்கள் மத்தியான ஆகாரத்திற்குப் பின்னர் நாங்கள் காதகோடத்திலிருந்து 90 கி.மீ. தொலைவிலுள்ள ராணிகேத் என்ற இடத்திற்கு பிரயாணமானோம். கடந்த நாட்களில் பெய்த பலத்த மழைகளின் காரணமாக மலை ரஸ்தாக்கள் நிலை குலைந்து கிடப்பதை எங்களால் காண முடிந்தது. நாங்கள் 60 கி.மீ. பிரயாணம் செய்து வந்த பின்னர் கேர்னா என்ற இடத்திற்கு வந்தோம். இங்கிருந்துதான் அல்மோரா, ராணிகேத், நைனிடால் போன்ற இடங்களுக்கு பாதைகள் பிரிந்து செல்லுகின்றன. இந்த இடத்தில் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி டீ குடித்தோம். இந்த இடத்திலுள்ள ஒரு ஹோட்டலின் பக்காடா மிகவும் சுவையாக இருப்பதால் அநேகமாக எல்லா வாகனங்களும் இங்கே நின்று பக்காடா சாப்பிட்டு டீ குடித்து செல்லுகின்றனர். அப்படியே நாங்களும் பக்காடா சாப்பிட்டு டீ குடித்து, சற்று இளைப்பாறிவிட்டு இந்த இடத்திலிருந்து பிரிந்து செல்லும் ரஸ்தா மார்க்கமாக 30 கி.மீ. தொலைவு பிரயாணம் செய்து மலையின் மேல் கட்டப்பட்டிருக்கும் அழகிய ராணிகேத் என்ற இடத்தை மாலை நேரம் வந்தடைந்தோம்.

இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் நாங்கள் 3 நாட்கள் தங்குவதற்கு ஏற்றவாறு நமது பாஸ்டர் சகோதரன் என். சாமுவேல் அவர்கள் பல நாட்களுக்கு முன்பே இங்கு வந்து எல்லா ஆயத்தங்களையும் செய்து வைத்திருந்தார்கள். ராணிகேத் என்ற அந்த இடம் புகழ்பெற்ற சுற்றுலா வாச ஸ்தலமாதலால் மற்ற எல்லா இடங்களையும் விட இந்த இடத்தில் எங்களுடைய செலவு மிகவும் அதிகமாக இருந்தது. எங்களுடைய இரண்டு வாகனங்களையும் ஹோட்டலின் முன்பு நிறுத்த இடம் இல்லாத காரணத்தால் நாங்கள் அவைகளை மிஷன் பள்ளிக்கூட வளாகத்துக்குள் மிகவும் பாதுகாப்பாக நிறுத்திக் கொண்டோம். அங்குள்ள இரவு காவல்காரர் வாகனங்களை நன்கு கவனித்துக் கொண்டார்.

அடுத்து வந்த இரண்டு முழுமையான நாட்களும் நாங்கள் மிஷன் மேல் நிலைப் பள்ளிக்குச் சென்று அங்கிருந்த ஏராளமான தேவனுடைய பிரசுரங்களைப் பிரித்து மக்களுக்குக் கொடுக்க வசதியாக வகைப்படுத்தினோம். நாங்கள் கொடுக்கும் ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷத்தினுள் பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய மூன்று ஹிந்தி கைப்பிரதிகளையும் ஒன்றிணைத்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் எங்கள் காலை ஆகாரத்தை சாப்பிட்டுவிட்டு எங்கள் வேலையைத் தொடங்கினோம். மத்தியானம், இரவுச் சாப்பாட்டுக்கு உயர்ந்த செங்குத்து மேடு ஏறி எங்கள் லாட்ஜ் இருந்த இடம் சென்று ஆகாரம் புசித்து வந்தோம். பகல், சாயங்கால நேர டீ பள்ளி வளாகத்திலிருந்த டீ கடையிலேயே நாங்கள் விலை கொடுத்துப் பெற்றுக் கொண்டோம். தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் ஒன்றாக அமர்ந்து வகைப்படுத்தும் செயல்களை நீங்கள் காண்பதுடன், இந்த தடவை நாம் நமது தேவ ஊழியங்களுக்காகப் பெற்று மக்களுக்கு விநியோகித்த பலவகையான தேவனுடைய பிரசுரங்களின் படங்களையும், அந்த பிரசுரங்கள் அடங்கிய அநேக பெட்டிகளையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

ஒரு நாள் பகற் காலம் நாங்கள் எங்களுடைய பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் பள்ளியில் மேல் வகுப்பில் படிக்கும் ஒரு மாணவி எங்கள் அறையின் முன்பு மைதானத்தில் திடீரென சுய நினைவு இழந்து விழுந்து விட்டாள். அதைக் கண்ட நாங்கள் எல்லாரும் பதறி அடித்து ஓடிச் சென்று பிள்ளையைத் தூக்கி எடுத்து துணிகளில் ஒட்டியிருந்த புழுதி மண்களை எல்லாம் நன்றாகத் துடைத்து, தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து எங்களாலியன்ற அன்பு செய்து அந்த பிள்ளையை மருத்துவமனையில் சேர்ப்பதானால் அதற்குரிய செலவுகளை நாங்களே ஏற்பதாக பிரின்சிபால் அவர்களிடம் கூறிய போது அந்த மனிதர் மிகவும் உள்ளம் கசிந்தார். அந்தப் பெண்ணுக்கு அவ்வப்போது அப்படித்தான் ஏற்படுவதாக எங்களிடம் சொன்னார்.

நாங்கள் அந்தப் பள்ளி மாணவிக்காக எடுத்துக் கொண்ட எல்லா அன்பின் கரிசனைகளையும் நேரில் கண்ட பள்ளியின் மாணவ மாணவியர் அநேகர் எங்கள் மேல் அதிலிருந்து மிகவும் அன்பு பாராட்டினார்கள். எங்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் செய்ய ஆசை ஆவலாகக் காணப்பட்டார்கள். எல்லா துதி, கனம் மகிமை நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கே.


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM