கிறிஸ்தீனாளின் மரணம்
இந்த நாட்டில் அவர்கள் தங்கியிருந்து, நாம் நதியை கடக்கும் நற்காலம் எதுவென்று காத்து இருக்கும் சமயத்தில், உச்சித பட்டணத்தை அடைந்த பரதேசியாகிய கிறிஸ்தியானுடைய மனைவி கிறிஸ்தீனாளுக்கு விசேஷித்த சமாச்சாரம் அடங்கிய ஒரு கடிதம் வந்திருக்கிறதாக பட்டணத்துக்குள் பேச்சு உண்டாயிற்று.1 உடனே தபால்காரன்: அவள் எங்கே? அவள் வீடு எங்கே? என்று தேடி விசாரித்து கடைசியாகக் கண்டு பிடித்து கடிதத்தை அவள் கையில் கொடுத்தான். அந்தக் கடிதத்தில், நல் உத்தமியே நீ வாழ்க! ஆண்டவர் உன்னை அழைக்கிறார். இன்னும் பத்து நாட்களுக்குள்ளாக நீ அழிவில்லா அங்கி தரித்தவளாய் அவரை தரிசிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் என்பதை நான் உனக்கு அறிவிக்கிறேன் என்பதாக எழுதியிருந்தது.
இந்தக் கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு, அந்த மனுஷன் தான் தேவனால் அனுப்பப்பட்ட உத்தம ஸ்தானாபதிதான் என்பதற்கும், அவள் தன் பயணத்துக்கேற்ற ஆயத்தங்களை துரிதமாக செய்ய வேண்டும் என்பதற்கும் அத்தாட்சியாக அன்பினால் கூர்மையாக்கப் பட்ட அம்பு ஒன்றை எய்தான். அதின் பலன் கடிதத்தில் குறிக்கப் பட்டிருந்தபடி பத்தாம் நாளில் அவள் தன் ஆண்டவருடைய திருமுக தரிசனம் பெறும்படியாக அவளுக்குள் படிப்படியாக கிரியை செய்தது.
தன் காலம் நெருங்குகிறதென்றும் தன்னுடன் வந்த பிரயாணி களில் தானே முதலாவது அக்கரை சேரவேண்டியதாய் இருக்கிறதென்றும் கிறிஸ்தீனாள் கண்டபோது தங்கள் வழிகாட்டி யாகிய தைரியநெஞ்சனைக் கூப்பிட்டு தன் சமாச்சாரங்களை எல்லாம் அவருக்குச் சொன்னாள். அதுகேட்டு அவர் சொல்லுவார்: அம்மா! உன் செய்தி எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கிறது. உனக்கு வந்த கடிதம் எனக்கு வந்திருக்குமானால் என் மனமகிழ்ச்சியை என்ன வென்று சொல்லுவேன்! என்றார்.
அப்புறம் அவள்: என் பயண ஆயத்தங்களுக்கடுத்த ஆலோசனை களை எல்லாம் சொல்லித் தரவேண்டும் என்று கேட்டாள். அப்படியே இன்னின்னவிதமாய் நீ செய்ய வேண்டும் என்று எல்லா ஆலோசனை களையும் சொல்லி இன்னும் மீதியாக இருக்கிற நாங்கள் ஆற்றங்கரை மட்டும் உனக்கு வழித்துணையாக வருவோம் என்றும் சொன்னார்.
அப்பால் அவள் தன் மக்களை வரவழைத்து அவர்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, உங்கள் நெற்றிகளில் வைக்கப்பட்ட முத்திரைகள் மங்காதிருக்கிறதை கண்டு என் மனம் ஆறுதலை டைகிறது. என்னோடுகூட வாழும்படி நீங்களும் அங்கே வந்து விட்டால் என் மனம் களிகூரும். உங்கள் அங்கிகள் இப்படியே அழுக்கில்லாதிருந்தால் என் உள்ளம் பூரிக்கும் என்று சொன்னாள். கடைசியாக அவள் தனக்குள்ள அற்பமான தட்டுமுட்டுகளை ஏழைகளுக்கென்று மரணசாசனம் எழுதி வைத்துவிட்டு தன் மக்களையும், மருமக்கள்மாரையும் பார்த்து ராஜாவின் தூதனுக்கு எப்போதும் எதிர்பார்த்திருங்கள் என்று எச்சரித்தாள்.
இவ்வண்ணம் அவள் தைரிய நெஞ்சனுக்கும் தன் மக்கள், மருமக்களுக்கும் சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியான பின்பு, சத்திய வீரதீனைக்கூப்பிட்டு: ஐயா, நீர் எல்லா இடங்களிலும் உமது உத்தம இருதயத்தை வெளிப்படுத்தியிருக்கிறீர். மரணபரியந்தம் உண்மையாயிரும், அப்பொழுது என் ராஜா உமக்கு ஒரு ஜீவ கிரீடத்தை தருவார். அதோடு என் பிள்ளைகள் மேலும் ஒரு கண் வைத்துக் கொள்ளும்படியாக உம்மை மிகவும் மன்றாடுகிறேன். அவர்கள் சோர்படையக் கண்டால் அவர்கள் ஆறுதலடையும்படி பேசும். என் மக்களின் மனைவிகளாகிய என் குமாரத்திகள் உண்மை உடையவர் களாய் இருந்தார்கள். அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணப் பட்டிருக்கிற பாக்கியமே அவர்களுடைய முடிவாய் இருக்கும் என்று சொன்னாள். அவள் நிலை நிற்போனை கூப்பிட்டு ஒரு மோதிரம் கொடுத்தாள்.
அப்பால் அவள் கிழட்டு யதார்த்தனை கூப்பிட்டு அவர் வந்தவுடனே “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றாள். (யோவான் 1 : 47) அவரோ இவளைப் பார்த்து: நீ சீயோன் மலைக்கு எழுந்தருளிப் போகும் நாள் மப்பும் மந்தாரமுமற்ற பிரகாசமான நாளாய் இருக்க விரும்புகிறேன்.
நீ ஆற்றில் கால் நனையாமல் கடந்து போகிறதை கண்டால் என் மனதுக்கு மெத்த சந்தோசமாய் இருக்கும் என்றுசொன்னார். அதற்கு அவள்: கால் நனைய ஜலம் இல்லாதிருந்தாலும் சரி, கழுத்தளவு ஜலம் திரண்டு வந்தாலும் சரி, நதியைத் தாண்டவே என் நாட்டம் இருக்கிறது. நான் போகிறபோது ஆறு எப்படி இருந்த போதிலும், ஆற்றைக் கடந்து அங்கே போன பின்பு உட்கார்ந்து இளைப்பாறவும், நனைந்துபோன என் வஸ்திரங்களை காயச் செய்யவும் போதுமான காலம் இருக்கிறது என்றாள்.
அப்பொழுது அவளைப் பார்க்கும்படியாக நொண்டியர் வந்து சேர்ந்தார். கிறிஸ்தீனாள் அவரைப்பார்த்து: ஐயா, இம்மட்டும் உமது பயணம் சங்கடத்தில் இருந்ததே, அது அவ்வளவு நல்லதுதான், அது உமது இளைப்பாறுதலை அதிக இனிமையாக்கும். நீர் விழித்துக் கொண்டு ஆயத்தமாய் இரும். ஏனெனில் நீர் நினையாத நேரத்தில் தூதன் வந்தாலும் வருவார் என்றாள்.
அவருக்கு பின்பு ஏக்கமும் அவடைய குமாரத்தியாகிய திகிலுற் றாளும் வந்தார்கள். அவர்களைக் கிறிஸ்தீனாள் பார்த்து: நீங்கள் சந்தேக துருக்கத்திலும் அகோர பயங்கர ராட்சதன் கையிலும் நின்று விடுதலையான மீட்பை எப்போதும் நன்றியறிதலாடு நினைவுகூர வேண்டும். அந்த மீட்பின் பலனே உங்களை இம்மட்டும் சுகத்தோடு சேர்த்திருக்கிறது. நீங்கள் அச்சத்தை அகற்றிவிட்டு விழிப்படையுங்கள். முடிவு பரியந்தம் தெளிந்த புத்தியும், நம்பிக்கையும் உள்ளவர்களாய் இருங்கள் என்றாள்.
அப்பால் அவள் ஏழைத்தனத்தை நோக்கி: நீர் ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தில் ஜீவிக்கவும், உமது ராஜாவை மன ஆறுதலோடு தரிசிக்கவுமே நலங்கொல்லியினுடைய பற்களிலிருந்து பிடுங்கி எடுக்கப்பட்டீர். ஆதலால் உம்மை வரவழைக்கும்படியான கட்டளை பிறக்கு முன் அவருடைய நன்மைகளைக் குறித்து நீர் பயந்து சந்தேகிக்கும் குணத்தைவிட்டு மனந்திரும்ப வேண்டுமென்று என்று மாத்திரம் உமக்கும் புத்தி சொல்லுகிறேன். அல்லாவிட்டால் அவர் வரும்பொழுது இந்தக் குற்றத்தினிமித்தம் நீர் அவர் முன்னே நாணத்தோடு நிற்கும்படி கட்டாயம் பண்ணப்படுவீர் என்றாள்.
இதற்குள்ளாக கிறிஸ்தீனாள் மேலோகம் போகும் நேரம் நெருங்கினது. அவள் பயணம் போகிற சமயத்தில் தெருவெல்லாம் ஜனங்கள் நிறைந்திருந்தார்கள்.
ஆனால், இதோ ஆற்றுக்கப்பால் கிறிஸ்தீனாளை உச்சித பட்டணத்தின் அலங்கார வாசலுக்கு அழைத்துக் கொண்டு போகும்படியாக வானத்திலிருந்து இறங்கி வந்த குதிரைகளும், இரதங்களும் ஏராளமாய் இருந்தன. அவள் ஆற்றண்டை வந்து தன்னை வழி அனுப்ப வந்தவர்கள் எல்லாருக்கும் சமிக்கையில் பயணோபசாரம் சொல்லிவிட்டு ஆற்றில் இறங்கினாள். அவள் பேசக் கேட்ட கடைசி வாசகம் என்னவென்றால்:
ஆண்டவரே!
உம்மோடிருக்கவும்
உம்மைப் போற்றவும்
இதோ வருகிறேன்.
என்பதே.
அப்பால் கிறிஸ்தீனாள் கண்ணுக்கெட்டாத உயரத்தில் கொண்டு போகப்பட்டதால் அவள் மக்களும், மற்ற சிநேகிதரும் தங்கள் தங்கள் இருப்பிடத்துக்கு திரும்பி வந்து விட்டார்கள். அவள் உச்சித பட்டணத்தின் அலங்கார வாசலண்டை போன உடனே முன்பு அவளுடைய புருஷனுக்கு நடந்த உபசரணைகளை போலொத்த சகல சந்தோச சடங்குகளோடும் அவள் ஏற்றுக் கொள்ளப்பட்டு பட்டணத்துக்குள் பிரவேசிக்கும்படி அருள் பெற்றாள். அவள் புறப் பட்டவுடனே பிள்ளைகள் அழுதார்கள். ஆனால் தைரிய நெஞ்சனும், சத்திய வீரதீரனும் இன்ப கீதமுள்ள கின்னரங்களையும், வீணை களையும் வாசித்து ஆனந்தம் கொண்டார்கள். அப்புறம் அவரவர் தங்கள் வீடுகளுக்கு போனார்கள்.
1. பிரயாணிகளுக்கு கடிதம் கொண்டுவரும் தூதாள்களால் குறிப்பிக்கப்படுகிறது. நம்மை மறு உலகத்துக்கு பிரயாணம்பண்ண ஆயத்தப்படுத்தும்படி எச்சரிப்பாக தேவனால் அனுப்பப்படுகிற வியாதி களும், மரணக்குறிகளுமே. தேவன் தமது ஜனங்களை தமது வீட்டுக்கு அழைத்துக் கொள்ளும் தூதர்கள் வியாதிகளே. அவர்கள் பலபல தருணங் களில் பலபல மாதிரியாய் வருகிறார்கள். பிரயாணிகளின் மரண உணர்வு களும், பேச்சுக்களும் பலபல மாதிரியாய் உண்டாகின்றன. என்றாலும் எல்லாரும் சந்தோஷமாகவே காணப்பட்டார்கள்.