பிரயாணிகள் பரோபகார காயு மடம் விட்டது
அவர்கள் புறப்படுகிற சமயத்தில் ஏழைத்தனம் என்பவர் நடப்போமோ, நிற்போமோ என்று மனத்தாங்கல் உடையவராய் இருக்கிறதாக தோன்றிற்று. அதை தைரிய நெஞ்சன் ஜாடையாய் அறிந்துகொண்டு, என்ன ஏழைத்தனம் வாரும், நடவும் எங்கள் கூடவே வரும்படி உம்மை வேண்டுகிறோம். நான் உம்மை மற்றவர்களோடு கைத்தாங்கலாய் நடத்திக்கொண்டு போவேன் என்று வருந்தி அழைத்தார்.
ஏழை: ஐயோ, எனக்கு இசைந்த ஒரு பிரயாணி கிடைத்தால் நலமாய் இருக்கும். நீங்கள் எல்லாரும் இரத்த புஷ்டி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள். நானோ நீங்கள் பார்க்கிறபடி தள்ளாதவனாய் இருக்கிறேன். ஆதலால் நான் சற்று பிந்தி வருகிறேன், உங்களோடு கூட நான் வந்தால் அதினால் எனக்கும் வருத்தம்தான், உங்களுக்கும் வீண் சிரமம்தான். முன்பு சொல்லியது போல மறுபடியும் சொல்லுகிறேன்: நான் பலவீனமும் தள்ளாடின மனமும் உடையவன், உங்களோடு கூடவே வரும்படியாக எட்டி நடந்து அதிக பலவீனப்படுவேனே அதினால் உங்களுக்கும் எனக்கும் மனஸ்தாபம் நேரிடும். எனக்கு சிரிப்பு ஆகாது, நல்ல உடை ஆகாது, பலனில்லாப் பேச்சு ஆகாது, மற்றவர்கள் தங்கள் மனதின்படி அனுபவிக்கக்கூடிய சந்தோசம் ஒன்றும் எனக்குப் பிடிக்காது.1 எனக்கோ சத்தியத்தின் பூரண அறிவு இல்லை. நானோ அறிவற்ற கிறிஸ்தவன். கர்த்தருக்குள் சந்தோசப் படுதலில் நானும் ஒரு பங்கு எடுத்துக் கொள்ள திராணி அற்றவனாய் இருக்கிறதால் அந்த சந்தோசம் முதலாய் என் மனதுக்கு சஞ்சலத்தைக் கொடுக்கிறது. வீரதீர பராக்கிரமனோடு விரல் நீட்ட வல்லமையற்ற ஒரு பெலவீனன் இருந்தால் எப்படியோ, அல்லது பூரண சுகம் உடையவர்களோடு பாயும் படுக்கையுமான ஒரு நோயாளி இருந்தால் எப்படியோ, அல்லது சுடர்விட்டு எரியும் தீவர்த்திகளோடு மங்கி எரிகிற திரி இருந்தால் எப்படியோ, அப்படியே என் காரியமும் இருக்கிறது. ஆதலால் என்ன செய்யலாம் என்று எனக்கே தெரியவில்லை. “ஆபத்துக்குள்ளானவன் சுகமாய் இருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சி அடைகிறான்” என்றான். (யோபு 12 : 5)
தைரி: அதற்கு தைரிய நெஞ்சன்: சகோதரரே! உமது பலவீனத்தை குறித்து நீர் கவலைப்பட வேண்டாம். மனத்திடன் அற்றவர்களை தேற்றவும், பலவீனரைத் தாங்கவும் நான் கட்டளை பெற்றிருக்கிறேன். நீர் எங்களோடேகூட வரவேண்டியது. நாங்கள் காத்திருந்து உமக்குச் செய்ய வேண்டிய உதவியை எல்லாம் செய்து, உமக்கு இடையூறாய் இராதபடிக்கு உமது நிமித்தம் எங்கள் அபிப்பிராயங்களையும் அனுபோக ரீதிகளையும் ஒழித்துவிடுவோம்.
உமக்கு முன்பாக சந்தேக சம்பவங்களைப்பற்றிச் சம்பாஷிக்கவும் மாட்டோம். உம்மை நாங்கள் பின்னாலே விட்டுப்போவதைப் பார்க்கிலும் உமக்காக நாங்கள் எல்லாவற்றிலும் உம்மைப்போல் ஆகிவிடுவோம், எங்கள் கூடவே மாத்திரம் வாரும் என்று வற்புறுத்தினார். (1 தெச 5 : 14 ரோமர் 14 : 1 1 கொரிந்தியர் 8 : 9)
இவ்வளவு சம்பாஷணையும் அந்த மடத்தின் படிக்கட்டு அண்டையே நடந்தது. இப்படி இவர்கள் ஒருவருக்கொருவர் தர்க்கம் பண்ணிக்கொண்டிருக்கிற சமயத்தில் நொண்டி என்னும் ஒரு மனுஷன் தடியும் கையுமாய் வந்து சேர்ந்தான். இவனும் மோட்ச பிரயாணம் போகிறவன்தான்.
அவனைக்கண்ட உடனே ஏழைத்தனம் சொல்லுகிறான்: நீர் எப்படி இங்கே வந்துவிட்டீர்? எனக்கு ஏற்ற துணை இல்லை என்றல்லவோ நான் இப்போது முறையிட்டுக் கொண்டிருக்கிறேன். என் பயணத்துக்கு ஏற்ற துணையாய் நீர் வந்து சேர்ந்தீரா? வாரும், வாரும், நொண்டியாரே வாரும். நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாய் இருக்கலாம்.
நொண்டி: உம்மோடு கூடிப்போவது எனக்கு மெத்த சந்தோசம் தான். நாம் இருவரும் தெய்வாதீனமாக சந்தித்ததே பெரிய காரியம். நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாமல் ஒன்றாகப் போவோம், என் தடியில் ஒன்றையும் உமக்குத் தருகிறேன்.
ஏழை: நீர் தடி தந்து உதவுவேன் என்று சொன்னதற்காக உமக்கு வந்தனம். என் கால் ஒடிந்து, நான் முடவனாய்ப் போகுமட்டும் நிற்க எனக்கு பிரியம் இல்லை. ஆனால் உமது தடி அகப்பட்டால் நல்லது தான். வழியில் நாய் வந்தாலாவது துரத்த உதவுமே.
நொண்டி: என்னாலாவது, என் தடியாலாவது உமக்கு யாதொரு சகாயம் வேண்டியதிருக்குமானால் அதற்கு யாதொரு தடையும் இராது. அண்ணா ஏழைத்தனமே! உமது மனம்போல ஆகட்டும் என்றார்.
அப்படியே அவர்கள் எல்லாரும் புறப்பட்டுப் போனார்கள். தைரிய நெஞ்சனும், யதார்த்தனும் முந்தியும், கிறிஸ்தீனாளும் அவள் கூட்டமும் நடுவிலும், ஏழைத்தனமும் நொண்டியும் பிந்தியுமாக நடந்து போனார்கள்.
யதா: அப்போது யதார்த்தன் சொல்லுகிறார்: ஐயா தைரிய நெஞ்சனே, நாம் வழி நடக்கும்போதே முன் பிரயாணம் போன எந்த பிரயாணியைப்பற்றிய சங்கதியாவது சொல்லும்.
1. பெலவீனக் கிறிஸ்தவர்கள்தான் மற்றவர்களைவிட அடிக்கடி தங்கள் நடத்தைகளைக் குறித்து அதிக எச்சரிக்கை உள்ளவர்களாய் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஏதாவது செய்துவிட்டால் அதைப் பார்த்து அவர்கள் சிரிக்கிறதில்லை. மற்றவர்கள் நடப்பிக்கும் தப்பிதமற்ற அநேக காரியங்கள் இவர்கள் பார்வையில் தப்பிதம் போல் காணப்படும். அவர்கள் பலவீனராய் இருந்தாலும் மிகவும் எச்சரிக்கையும், கரிசனையும் உள்ளவர்களாய் இருக்கிறார்கள்.