அச்சநெஞ்சனைப் பற்றிய சம்பாஷணை
அப்புறம் அவர்கள் பேசிக்கொண்டே போகும்போது வழிகாட்டியானவர் அந்த விருத்தாப்பியனை நோக்கி: உங்கள் நாட்டில் இருந்து மோட்ச பிரயாணமாய் வந்த அச்சநெஞ்சனை 1 அறிவீரா என்று கேட்டார்.
யதா: அறிவேன், நான் அவனை நன்றாய் அறிவேன். மோட்சத்தைக் குறித்த ஆசை ஆவல் அவன் மனதில் வேர் ஊன்றி இருந்தது. ஆனால் என் ஜீவ காலத்தில் அவனைப் போல தொல்லை கொடுக்கிற பிரயாணியை நான் கண்டதே இல்லை.
தைரி: அவன் குணத்தை திட்டமாக சொல்லிப் போட்டீர், அவனை நன்றாய் அறிவீர் போல் இருக்கிறது.
யதா: அறிவீர் போலவா! நான் அவனுடைய உத்தம தோழன் ஆச்சுதே. அவனுடைய துவக்க முதல் முடிவுமட்டும் நான் அவனை அறிவேன். இனிமேல் நமக்கு சம்பவிக்கும் விஷயங்கள் என்னவென்று அவன் தியான சிந்தை கொண்டு இருந்த காலத்தில் நான் அவனோடு தான் இருந்தேன்.
தைரி: என் எஜமான் வீடு முதல் உச்சிதபட்டணத்தின் அலங்கார வாசல் மட்டும் நான் வழிகாட்டியாக அவனோடு போனேன்.
யதா: அவன் பண்ணுகிற தொல்லைகளை எல்லாம் பார்த்து இருப்பீரே?
தைரி: நன்றாகப் பார்த்துக் கொண்டேன். ஆனால் அப்படிப் பட்டவைகளை எல்லாம் நான் சகித்துக் கொள்ளக்கூடும். ஏனெனில், எங்களைப் போலொத்த வேலைக்காரருக்கு இவனைப் போலொத்த வர்களை வழிநடத்தும் வேலை அடிக்கடி கொடுக்கப் படுகிறது.
யதா: அப்படியானால், அவன் உமது நடத்துதலுக்கு உட்பட்டு இருந்த காலத்தில் அவனுடைய நடபடிகள் என்னவென்று தயவுசெய்து சொல்லும்படி மன்றாடுகிறேன்.
தைரி: நாம் நாடிப் போகும் சீயோனுக்கு நாம் ஏது, சேருகிறதேது என்று அடிக்கடி அஞ்சுவான். யாராவது சம்பாஷித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சங்கதியை உறுதிப்படுத்தும்படி அவர்கள் சற்றே சப்தமாய் பேசுகிறதைக் கேட்டால் இவன் பாடு சங்கடம்தான். இவன் ஊரைவிட்டு புறப்பட்டு நம்பிக்கையிழவு அண்டை வந்து பயந்து படுத்துக் கொண்டு ஒரு மாதம் மட்டும் நெடும் கூக்குரல் போட்டான் என்று நான் கேள்விப்பட்டேன். அவனுக்குப் பின் எத்தனையோ பேர் அந்த உளையை கடந்துபோனதை இவன் கண்டானாம். அநேகர் அவன் கையைப் பிடித்து இழுத்து எங்களோடு கூடவா, நாங்கள் உன்னை பத்திரமாய் அக்கரை சேர்க்கிறோம் என்று கெஞ்சினார்களாம். அப்படி இருந்தும் அவன் கடந்து வர துணிய வில்லையாம். பின்னிட்டுத் திரும்பி ஊருக்காவது போவானா? அதுவும் செய்யமாட்டானாம். மோட்ச பட்டணமே, மோட்ச பட்டணமே என்பானாம். அங்கே சேராவிட்டால் நான் இருந்து என்ன பிரயோஜனம் என்பானாம். இப்படிச் சொன்னாலும் அற்ப ஆபத்தைக் கண்டு அப்பாடாவென்று கத்தி, கத்தி ஓலம் இடுவானாம். அவன் போகிற வழியில் யாராவது ஒரு துரும்பைப் போட்டால் அது தட்டியும் விழுவானாம். இப்படி அவன் அந்த உளையருகே வெகு நாள் கிடந்து வெட்கம் கெட்ட பின்பு வெயில் அடித்த ஒரு நாள் காலையில் எப்படியோ உளையைக் கடந்து வந்துவிட்டானாம். என்னவிதமாய்க் கடந்தான் என்று எனக்கே தெரியவில்லை. அவன் உளையைத் தாண்டிவிட்டதை தானும் நம்பவில்லையாம். அவன் மனதில் ஒரு நம்பிக்கையிழவு இருந்ததுபோல் இருக்கிறது. இந்த உளையை அவன் போன இடமெல்லாம் தூக்கிச் சுமந்து கொண்டுதான் திரிந்தான் என்று சொல்லவேண்டும். மற்றபடி இப்படி இருக்க மாட்டான்.
அப்புறம் அவன் ராஜ பாதையின் ஆரம்பத்தில் இருக்கிற திட்டிவாசல் இருக்கிறதே அதின் கிட்டே வந்தானாம். அங்கேயும் அவன் கதவைத் தட்ட துணியுமுன் வெகு நேரம் நின்றானாம். கதவு திறக்கப்பட்டால் அவன் மற்றவர்களுக்கு இடங்கொடுக்கும்படி விலகி பின்னாலே போய் நின்று கொண்டு நான் உள்ளே வரப் பாத்திரன் அல்ல, நீங்கள் போங்கள் என்று சொல்லுவானாம். அந்த கதவண்டை அவன் எல்லாருக்கும் முந்தி வந்து நின்றாலும் பிந்தி வந்தவர்கள் எல்லாரும் உள்ளே சேர்ந்துவிட்டார்களாம். இவனோ வெளியே கிடந்தானாம். அவன் தேகமும் பல்லும் ஆடி ஆடி அங்கே நிற்பானாம். அவனைக் கண்ட உடனே கல் நெஞ்சும் கூட கரைந்து கண்ணீராய் போய்விடுமாம். இப்பாடு படுகிற அவன் திரும்பிப்போவானா? அது ஏது? போகவே போகமாட்டானாம். கடைசியாக அவன் ஒரு நாள் வாசற்படியில் தொங்க வைக்கப்பட்டிருந்த சுத்தியலை எடுத்து கதவை இரண்டொருதரம் மெதுவாய் தட்டினானாம். உடனே ஒருவன் வந்து திறந்தானாம். திறந்த மாத்திரத்தில் அவன் பின்னே போய் நின்று கொண்டானாம். கதவைத் திறந்த ஆள் அவனுக்குப் பின்னாலே நடந்து போய் நடுக்கம் பிடித்த நர ஜென்மமே, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டாராம். இவ்வளவும் கேட்கவே அவன் அசந்து தரையிலே விழுந்துவிட்டானாம். அப்போது வாசலைத் திறந்தவர் இப்படியும் சோர்ந்து விழுவார் உண்டா என்று அதிசயப்பட்டு, அப்பா! உனக்குச் சமாதானம் உண்டாவதாக, எழுந்திரு, உனக்காகவே நான் கதவைத் திறந்தேன். உள்ளே வா, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் என்று தேற்றி னாராம். அப்புறம் அவன் மெதுவாய் எழுந்து நடுக்கத்தோடே நடந்து உள்ளே போனானாம். அவன் உள்ளே போன பிற்பாடு தன் முகத்தை காட்ட முதலாய் வெட்கப்பட்டானாம். அவன் அவ்விடத்தில் சிலகாலம் இருந்த பின்பு வழக்கப்படி அவனுக்கு வழியும் சொல்லி புறப்படும்படி அவனுக்கு உத்தரவு கொடுத்தார்களாம். அப்புறம் அவன் வழியே நடந்து எங்களுடைய அரண்மனை வந்து சேர்ந்தான். திட்டிவாசலைத் தட்டப் பயந்து எப்படி நின்றானோ அப்படியே எங்கள் அரண்மனையாகிய வியாக்கியானியின் வீட்டையும் தட்டும்படி அவன்அஞ்சி நின்றான். அவன் யாரையாகிலும் கூப்பிடும்படி மனம் துணியுமுன், வெளியே பனியிலும் குளிரிலும் கிடந்தான். திரும்பிப் போகவும் அவன் துணியவில்லை. அக்காலத்தில் நீண்ட இரவும் குளிரும் இருந்ததால் அந்த ஏழை மனுஷன் மிகவும் சங்கடப்பட்டு இருக்க வேண்டியதாயிற்று.
அவன் மடியில் எங்கள் எஜமானுக்கு அவசரமான ஒரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தில் இவனை உடனே ஏற்றுக்கொள்ளவும் தமது வீட்டின் ஆசீர்வாதங்களால் அவனை திருப்தியாக்கவும் அவன் கோழை நெஞ்சுகொண்ட பயங்காளியானபடியால் வீரதீரபராக்கிரம சேவகரில் ஒருவனை இவனுக்கு வழித்துணையாக அனுப்பவும் வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இப்படி எல்லாம் இருந்தும் அவன் வியாக்கியானுடைய வீட்டைத் தட்ட அவ்வளவு அச்சப்பட்டான். கடைசியாக ஒரு நாள், நான் ஜன்னல் வழியாகவோ எப்படியோ ஒரு மனுஷன் வாசற்படியண்டை வருகிறதும், போகிறதுமாய் இருக்கிறதைக் கண்டு, கீழே இறங்கி அவனண்டை போய்: நீ யார் அப்பா என்று கேட்டேன். கேட்கவே, ஏழை மனுஷன் மாலை மாலையாய் கண்ணீர் சொரிந்தான். நானும் அவனுக்கு வேண்டியது இன்னதென்று அறிந்து கொண்டேன். அப்புறம் வீட்டுக்குப் போய் அங்கிருந்தவர்களுக்கு இந்தச் சமாச்சாரத்தை தெரிவித்து, அப்பால் எங்கள் ஆண்டவருக்கும் தெரியப்படுத்தினோம். அவர், நீ போய் அவனை வருந்தி அழைத்துக் கொண்டு வா என்று உத்தரவு கொடுத்தார். நான் போய்க் கூப்பிட்டாலும் அவன் வருவானா? அவனோடு கடும்பாடு படவேண்டியதாய் இருந்தது. கடைசியாக ஒதுங்கிப் பதுங்கி நாணிக்கோணி உள்ளே வந்து சேர்ந்தான். எங்கள் எஜமான் அவனை மட்டுக்கு மிஞ்சி சிநேகித்தார் என்றே சொல்லுவேன். அவர் தமது பந்தி மேஜையில் இருந்து சில ருசிகர பதார்ததங்களை எடுத்து அவனுடைய கலத்திலே வைத்துச் சாப்பிடச் சொன்னார். அப்பால் அவன் தான் கொண்டு வந்த கடிதத்தை கொடுத்தான். எங்கள் எஜமான் அதைப் பார்த்துவிட்டு உனக்கு ஆக வேண்டிய சகாயங்களை எல்லாம் செய்து முடிப்போம் என்று வாக்கு அருளினார். அங்கே இருந்த கொஞ்ச காலத்துக்குள் அவன் சற்று மனத்தெளிவும் ஆறுதலும் உடையவனாய் இருந்தான். என் எஜமானுக்கு, பயப்படுகிறவர்கள் என்றால் அவர்கள் மேல் அவர் மனம் உருகிவிடும். ஆதலால் அவனுக்கு தைரியத்தைக் கொடுக்க வேண்டும் என்றே இவ்வளவு பட்சமாய் நடத்தினார். அவன் எங்களிடத்தில் பார்க்க வேண்டிய காட்சிகளை எல்லாம் கண்டு புறப்படும்படி தயாரான சமயத்தில் கிறிஸ்தியானுக்கு கொடுத்தது போல் இவனுக்கும் என் ஆண்டவன் ஒரு துருத்தி திராட்ச ரசமும் பின்னும் சில பலகாரங்களும் கொடுத்து, என்னையே வழித்துணையாக அனுப்பினார். ஆகவே நாங்கள் புறப்பட்டோம். நான் முன்னும் அவன் பின்னுமாய் நடந்தோம். அவன் வாய் பேசமாட்டானா? பெருமூச்சுவிட அவனைப் போல் ஆள் அகப்பட மாட்டாது.
வழியில் மூன்று பேர் தொங்க வைக்கப்பட்டிருக்கிறார்களே, அந்த இடத்துக்கு வந்த உடனே நம்முடைய கடைசி முடிவும் இப்படித்தான் இருக்கும் என்று தனக்குத் தோன்றுவதாக என்னிடம் சொன்னான். சிலுவையையும், அந்தக் கல்லறையையும் கண்ட உடன் மாத்திரம் அவன் முகம் சற்று சந்தோசமாய்க் காணப்பட்டது. அந்த இடத்தில் மாத்திரம் கொஞ்ச நேரம் நின்று பார்க்கும்படியாக அவன் ஆசைப்பட்டது மெய். சிலுவைக்காட்சி கண்ட பின் சில நாள் அவன் முகமலர்ச்சியாய் இருந்தான். கஷ்டகிரியில் ஏறும்போது தடி முதலாய் பிடிக்காதபடி இலேசாய் ஏறிவிட்டான். சிங்கங்களுக்கு முதலாய் அவ்வளவு அச்சம் அவன் மனதில் உண்டாகவில்லை. ஏனெனில் இப்படிப் பட்டவைகளைப்பற்றி எல்லாம் அவன் மனதில் யாதொரு ஐயம் இருந்ததில்லை. நாம் கடைசியாக ஏற்றுக் கொள்ளப் படுவோமோ, என்னவோ என்ற சந்தேகமே தவிர வேறு ஐயம் அவன் மனதில் இருந்ததில்லை.
அவனை வழிநடத்தி அலங்கார மாளிகை கொண்டுபோய்ச் சேர்த்தேன். அந்த அரண்மனைக்குள் அவனை கொண்டு போக நான் பட்ட வருத்தம் கொஞ்சம் அல்ல. அந்த இடத்து கன்னிமாப் பெண்களுக்கு இவனைப் பற்றிச் சொல்லி உறவு உண்டாக்கினேன். ஆனால் ஆட்களோடு பேசி பழகியிருக்க அவன் மிகவும் வெட்கப்பட்டான். தனிமையாய் இருப்பதே அவனுக்கு பிரியம். என்றாலும் நல்ல சம்பாஷணைகள் மேல் அவனுக்கு அதிக சந்தோசம். அப்படிப்பட்ட பேச்சுக்கள் நடக்கும் போது இவன் ஒரு தடுக்குக்கு அப்பால் இருந்துகொண்டு ஆசை ஆவலாய் அதைக் கேட்பான். பூர்வ காலத்து சரித்திரங்களை கேட்கும்படி அவனுக்கு மெத்த ஆவல் இருந்தது. பண்டைய காலத்து சரித்திரங்களை எல்லாம் பத்திரமாய் மனதில் வைத்துக் கொள்ளுவான். ஒரு நாள் அவன் என்னிடத்தில் வந்து நான் முன்பு தங்கியிருந்தேனே அந்த திட்டி வாசல் அரண்மனையும், வியாக்கியானியினுடைய வீடும்தான் எனக்கு நன்றாய் இருந்தது என்று மெதுவாய்ச் சொன்னான். தனக்கு ஏதாவது வேண்டுமானால் வாய் திறந்து கேட்பானா? அதுதான் கிடையாது. கேட்கவேமாட்டான்.
அங்கிருந்து தாழ்மையின் பள்ளத்தாக்குக்கு மலை இறங்கிப் போனோமே, அங்கே அவன்அவ்வளவு நேர்த்தியாய் நடந்தான். 2
அந்த மாதிரி சறுக்காமல் நடந்தவர்களை நான் கண்டதே இல்லை. தான் எவ்வளவுக்குத் தாழ்மைப்பட்டாலும் சரி, கடைசியில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று மாத்திரம் கவலைப்பட்டான். அவனுக்கும் அந்தப் பள்ளத்தாக்குக்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருந்தது என்றே சொல்ல வேண்டியது. அவன் அந்தப் பள்ளத்தாக்கில் அனுபவித்த அவ்வளவு சுகம் அவனது பிரயாணத்தில் அவனுக்கு எங்கும் உண்டாயிருந்ததில்லை.
இந்த இடத்தில் அவன் படுத்துக் கொள்ளுவான். மண்ணை அணைத்துக் கொள்ளுவான். இந்தப் பள்ளத்தாக்கில் மலர்ந்திருந்த புஷ்பங்களை முகர்ந்து கொள்ளுவான். (புலம்பல் 3 : 27 – 29) ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்திருந்து அந்த மைதானத்தை பார்த்து மகிழ்கிறதும், அங்கும் இங்கும் உலாவுகிறதுமாய் இருப்பான்.
ஆனால், தம்பி, மரண நிழலின் பள்ளத்தாக்கு வரட்டும், அப்போது தெரியும் இவர் வண்டோலம். அங்கே அவன் தொலைந்தே போவான் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். திரும்பிப் போய்விட வேண்டும் என்று சொல்லுவான் என்ற எண்ணத்தினால் அல்ல, அந்த வேலையை அவன் அடியோடு அருவருத்தான். ஆகையால் மலைவினால் மாண்டே போவான் என்று நினைத்தேன். ஐயோ பேய் பிசாசுகள் என்னைப் பிய்த்துப் போடுமே! ஐயோ காளிகளும் கூளிகளும் என்னைக் கடித்துக் கொல்லுமே என்று அவன் கத்துவான். நானும் என்னால் ஆன பிரயத்தனம் எல்லாம் பண்ணி அந்த அச்சத்தை எடுத்துவிட பார்த்தும் முடியவில்லை. இந்த இடத்தில் அவன் போட்ட சத்தத்திற்கும், அழுத அபயக் குரலுக்கும் ஒரு அளவில்லை. இவனுடைய சத்தம் மாத்திரம் பேய் பிசாசுகளுக்கும், காளிகள் கூளிகளுக்கும் கேட்டிருக்குமேயானால் அவைகள் எல்லாம் தைரியம் கொண்டு ஏமாந்த ஆள் வந்தானே அப்பா, ஏகமாய் போய் வளைவோமே அப்பா என்று எழும்பி வந்து எங்கள்மேல் விழுந்து விடுவார்கள்.
ஆனால் இங்கேயும் ஒன்றை நான் கூர்மையாய் கவனித்தேன். நாங்கள் இருவரும் போன சமயத்தில் ஒரு காலமும் இல்லாத அதிசயமாய் அந்தப் பள்ளத்தாக்கு அவ்வளவு அமைதலாய் இருந்தது. ஒரு வேளை அச்சநெஞ்சன் கடந்து போகுமட்டும், நீங்கள் உங்கள் அழிம்புத்தனங்களை காட்டக்கூடாதென்று நமது ஆண்டவர் கட்டளை கொடுத்திருந்தாற் போல் இருந்தது. 3
அச்சநெஞ்சனுடைய காரியங்களை எல்லாம் ஒவ்வொன்றாய்ச் சொல்ல வேண்டுமானால் அதே ஒரு பிரபந்தம்போல் ஆகிவிடும். ஆனால் இரண்டு மூன்று குறிப்புகளை மாத்திரம் சொல்லுகிறேன் கேளும். அவன் மாயாபுரியைச் சேர்ந்தவுடனே எல்லாரோடும் பலத்த சண்டை போடுவான் என்று நான் நினைத்தேன். அந்த ஊரைப்பற்றி அவன் அவ்வளவு வெறுப்பாய் பேசிக்கொண்டு வந்தபடியால் எப்படியும் இரண்டு பேருடைய மண்டையும் அங்கே உருண்டு போய்விடும் என்றே எண்ணினேன். மயக்க பூமியில் போகையில் அவன் வெகு விழிப்பாய் இருந்தான். ஆனால் பாலமில்லாத அந்த ஆற்றங்கரை வந்தவுடனே ஐயாவுக்கு ஆட்டம் கொடுத்துவிட்டது. அவன் மனம் வியாகுலத்தால் மயங்கிற்று. இப்போதுதான் என் முடிவு வந்தது, இங்கேதான் எனக்கு முடிவாகிப் போயிற்று. இவ்வளவு காலம் கஷ்டப்பட்டு நடந்து பார்க்க வேண்டும் என்று வந்த முகத்தைப் பாராதபடிக்கு இதிலேயே அமிழ்ந்து மாண்டு போவேன் என்று அலறினான்.
ஆனால் ஆச்சரியம்! இந்த ஆற்றிலும் ஒரு பெரிய அதிசயத்தை கவனித்தேன். நான் என் ஜீவகாலத்தில் கண்டதிலும் அவன் போகும் போது அந்த ஆற்றின் தண்ணீர் வற்றிப் போய் இருந்தது. அது அவன் கணுக்காலுக்குமேலே இருந்ததில்லை. ஆற்றைக் கடந்து அலங்கார வாசலின் படிகளில் ஏறும்போது அவனை வழி அனுப்பிக்கொண்டு, நீ சந்தோசத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்படி நான் விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவன்: அப்படியே ஏற்றுக் கொள்ளப் படுவேன், ஏற்றுக் கொள்ளப்படுவேன் என்று சொன்னான். அதோடு நான் திரும்பிவிட்டேன். அப்புறம் நான் அவனைக் கண்டதில்லை.
யதா: சங்கதிகளைப் பார்க்கிறபோது அவன் காரியம் க்ஷேமமாய் முடிந்தது போல் இருக்கிறது.
தைரி: ஆம், ஆம், அதைப்பற்றி எனக்குச் சந்தேகம் இல்லை. எவரும் விரும்பும்படியான ஒரு விசேஷித்த ஆவி அவனில் இருந்தது.
அவன் எப்போதும் தாழ்வான நிலைமையில் வைக்கப்பட்டிருந்த படியால் அவனுடைய காலக்ஷேபம் தனக்கே பளுவாயும் மற்றவர்களுக்குத் தொல்லையாயுமிருக்கிறது. (சங்கீதம் 83) பாவத்தின் பேரில் வேறு அநேகரைப்போல அவ்வளவு நாட்டம் அவனுக்கு இருந்த தில்லை. தனக்கு வரவேண்டிய லாபம் முதலாய் மற்றவர்களுக்கு நஷ்டம் ஆகுமென்று பயந்து அதை வெறுத்து விடுவான். (ரோமர் 14 : 12 1 கொரி 8 : 13)
யதா: இத்தனையான பக்தன் தன் காலம் எல்லாம் இப்படிப்பட்ட பயங்கர இருளில் இருந்ததற்கு முகாந்தரம் என்ன?
தைரி: அதற்கு இரண்டுவிதமான முகாந்திரங்களை சொல்லலாம். அதில் ஒன்று, ஞானமுள்ள தேவன் அவனை அந்த நிலைமையிலேயே வைக்கச் சித்தம் கொண்டிருக்கலாம். அல்லவென்று சிலர் குழலூதி பாட வேண்டியது. சிலர் அழுது புலம்ப வேண்டியதாகும். (மத்தேயு 11 : 16 , 17) அச்ச நெஞ்சன் இருக்கிறானே அவன் அழுவார் கணக்கில் சேர்ந்தவன். அவனுக்கும் அவன் கூட்டாளிகளுக்கும் அழுகொம்பு ஊதி, ஒப்பாரி இடத்தான் தெரியும். ஒரு வாத்தியத்தில் தாழ்ந்த சப்தமுள்ளதாகிய தக்கு நரம்புதான் கீதத்தின்ஆரம்பமாய் இருக்கிறதென்று பலர் சொல்லுகிறார்கள். நான் என் மட்டில் தாழ்ந்த இருதயத்திலிருந்து தோன்றாத பக்தியை மெய் பக்தியாக எண்ணிக் கொள்ளுவதில்லை. ஒரு கவிராயன் தன் வீணையை சுதி ஏற்றத் துவக்கினால், அவன் முதலாவது தக்கு நாத நரம்பைத் தட்டி எச்சுநாத நரம்பையும் மத்தியநாத நரம்பையும் ஒழுங்குபடுத்துவான். தேவனும் ஒரு ஆத்துமாவை தமக்கு ஏற்றதாக பரவசப்படுத்தும்படி தாழ்மை என்ற தக்கு நரம்பைக்கொண்டே ஆரம்பிக்கிறார். அச்ச நெஞ்சனிடம் ஒரே ஒரு குறைவு மாத்திரம் இருந்தது. அதாவது ஆதிமுதல் அந்தம் மட்டுக்கும் தக்கு நாத தாளத்தில் அவன் பாடுவானேயன்றி அதற்கு மிஞ்சின நாதத்தில் பாடவே மாட்டான். 4
வாலிபருடைய யூகத்தை விருத்தி பண்ண வேண்டும் என்றும், வெளிப்படுத்தின விசேஷம் என்னும் ஆகமத்தில் மீட்கப்பட்ட வர்களை சிங்காசனத்தின் முன் நின்று சுரமண்டலங்களையும் கின்னங்களையும் பிடித்து கீதங்களைப் பாடும் கீத வாத்தியக் கூட்டத்துக்கு ஒப்பிட்டுப் பேசியிருப்பதினாலும் நானும் இந்த வண்ணம் உவமானப் போங்காய் எழுதும்படி துணிந்தேன். (வெளி 5 : 8, 14 : 2, 8)
யதா: நீர் சொல்லுகிறதைப் பார்த்தால் அவன் மகா வைராக்கியனாகத் தோன்றுகிறதே. பாடுகள், துயரங்கள், சிங்கங்கள், மாயச் சந்தை ஆகிய இவை எல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லை போல் இருக்கிறதே. அந்த உச்சித பட்டணத்தின் மேல் அவனுக்கு இருந்த தாபந்தத்தினாலே பாவமும், மரணமும், நரகமும்தானே அவனுடைய பயங்கரங்களாய் இருந்திருக்கின்றன.
தைரி: நீர் சொன்னது சரியான பேச்சு. அவைகள்தான் அவன் மனதை பயப்படுத்தின. அவைகளைப் பற்றிய தன்னுடைய மனதின் பலவீனத்தினாலே அப்படி அச்சம் கொண்டு இருந்தானே அல்லாமல், உத்தம மோட்ச பிரயாணிக்கு உள்ளபடி இருக்கக்கூடாத ஆவியின் பலவீனத்தினாலே அப்படி அச்சம் கொள்ளவில்லை. அவன் தனக்கு எதிர்ப்படும் நெருப்பிலும் பாய்ந்து குதித்து விடுவான் என்று அவனைக் குறித்துச் சொல்லலாம். ஆனால், அவனை வியாகுலப்படுத்தின ஏதுக்களை விலக்கிப்போட எவராலும் லேசில் முடியாது.
கிறிஸ்: அப்போது கிறிஸ்தீனாள் சொல்வாள்: அச்ச நெஞ்சரைப் பற்றிய சமாச்சாரங்கள் எனக்கு மிகுந்த நன்மையை உண்டாக்கின. என்னைப் போல் சமமானவர்கள் எவரும் இல்லை என்று நான் எண்ணி இருந்தேன். ஆனால் எனக்கும், இந்த நல்ல மகாத்துமாவுக்கும் சில விஷயங்களில் சம்பந்தம் இருக்கிறதென்று காண்கிறேன். இரண்டே காரியங்களில் மாத்திரம் நாங்கள் இருவரும் வித்தியாசப்படுகிறோம். மட்டுக்கு மிஞ்சின அவருடைய சஞ்சலம் வெளியே வெடித்துவிட்டது. ஆனால் என்னுடையது உள்ளே அடங்கிப் போயிற்று. அதுவும் அன்றி அவருடைய சஞ்சலம் அவரைப் பலமாய் அழுத்தினதால் சேர்ப்பார் வீட்டையும் சேர்க்கமாட்டார் வீட்டைப் போல தட்டாதபடி தடுத்துப் போட்டது. ஆனால் என் சஞ்சலமோ எப்போதும் பலமாய் தட்டும்படி என்னைத் தூண்டுகிறதாக இருந்தது என்றாள்.
தயாளி: அப்போது தயாளி, என் இருதய நிலைமையை சொல்ல வேண்டுமானால் அவருடைய குணங்களில் சில எனக்குள்ளும் குடிகொண்டிருந்தது என்று சொல்லுவேன். மற்றக் காரியங்களை இழந்துபோவோம் என்கிற பயத்தைப் பார்க்கிலும் பரதீசின் பாக்கிய வாழ்வு எங்கே தப்பிப்போகுமோ, பாதாளக்கடலில் எங்கே விழுவேனோ என்ற பயமே எனக்கு அதிகம் இருந்தது.
ஆ! எனக்கு உன்னத லோகத்தில் ஒரு வாசஸ்தலம் கிடைப்பதாக. அது கிட்டும்படி நான் இவ்வுலகத்தை எல்லாம் இழந்தாலும் பரவாயில்லை என்றே எண்ணினேன் என்றாள்.
மத்: மத்தேயு என்ற பிள்ளையாண்டான்: இரட்சிப்போடு சம்பந்தப்பட்டவை எல்லாவற்றிற்கும் நான் தூரமானவன் என்று நினைத்துக் கொள்ளும்படி பயமே என்னைத் தூண்டிவிட்டது. அந்த நல்ல மனுஷனை பயம் தொடர்ந்தும் முடிவில் அவன் நலத்தை அனுபவித்தது மெய்யானால் எனக்கும் அப்படியே நன்மையாக முடியாதா? என்றான்.
யாக்: அப்புறம் யாக்கோபு என்பவன்: அச்சம் இல்லையானால் அருளும் இல்லை. நரக பயங்கரமுள்ள இருதயத்தில் தேவகிருபை எப்போதும் இராதென்றபோதினும் கர்த்தருக்குப் பயப்படும் பயமற்ற இருதயத்திற்கு கிருபை இல்லவே இல்லை என்றான்.
தைரி: யாக்கோபே, நீ நன்றாய்ச் சொன்னாய். குறி தப்பாமல் எய்து விட்டாய். ஏனெனில் கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். இந்த ஆரம்பம் யாரிடத்தில் இல்லையோ அவர்கள் மெய்ஞானத்தின் மத்தியையாவது முடிவையாவது கண்டடையமாட்டார்கள் என்று சொல்லி கடைசியாக அச்ச நெஞ்சருக்கு ஒரு வாழ்த்துதலைப் பாடி அவர் பேச்சையும் அதோடு நிறுத்துவோமாக என்று பின் வரும் கீதத்தை பாடினார்:-
அச்சநெஞ்ச அண்ணனே!
ஆண்டவருக்கு அஞ்சினீர்,
லோக ஜீவியத்திலே
பக்தன் என்று காட்ட நீர்
மெத்த மெத்த அஞ்சுவீர்
தீ நரகக் குழியின்
பேரைக்கேட்டும் அஞ்சுவீர்
அஞ்சுவார் பலர் உம்மால்.
உம்மைப் போல ஞானிகள்
பாழ் நரக அச்சத்தை
எண்ணி நீக்கிக் கொள்ளுவர்
லோக சந்தோஷங்களை.
1. அச்சநெஞ்சன்: இவன் பாவத்துக்கு பயந்து மோட்சத்தை விடுவேன் என்று அஞ்சி தீமை யாவற்றிற்கும் விலகிக் கொள்ளப் பிரயாசப்பட்டான். அவன் இடையூறுகளுக்கும், துன்பங்களுக்கும் மிகவும் பயந்து தத்தளித்த போதிலும் மோட்சம் பெற வேண்டும் என்கின்ற தீர்மானம் அவைகளை எல்லாம் சகித்துக் கொள்ள அவனை ஏவிற்று. அவன் பயங்காளியாய் இருந்தாலும் அவனுடைய விசுவாசமும், பக்தியும் உறுதியுள்ளதாய் இருந்தது. அவன் சகலத்திலும் தன்னைக் குறித்து தனக்குத்தானே சமுசயம் உள்ளவனாய் இருந்தான். என்றாலும் தன் பிரயாணத்தை விட்டுவிடவே இல்லை.
2. தாழ்ந்த நிலைமையானது இந்த வகையானவர்களின் குணத்துக்கு இசைந்ததாய் இருக்கிறது. அவர்களுக்குப் பேராசை இல்லை. இம்மையில் சமாதானமும் மறுமையில் சுகபத்திரமுமாய் இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய அளவற்ற ஆசை.
3. தேவன் ஒவ்வொருவரையும் பற்றி விசேஷித்த கரிசனயுள்ளவராய் இருந்து அவரவர் அவசரத்துக்குத் தக்கதாக ஒத்தாசை அளிக்கிறார். அச்ச நெஞ்சன் மரண நிழலின் பள்ளத்தாக்கில் நடக்கும்போதும், ஆற்றைக்கடக்கும்போதும் விசேஷித்த பிரகாரம் கிருபை பெற்றான்.
4. எல்லா வகையான வாத்தியக் கருவிகளும் உபயோகிக்கப்படுவதுதான் முதல்தரமான கீத வாத்தியம். ஆதலால் பன்னியன் என்பவர் பரலோகத்தின் சங்கீத அலங்காரத்தை குறித்து அது பூலோகத்திலுள்ள சகல வகையான அனுபோகமும் உள்ளவர்களின் பாடல்கள் எல்லாம் சேர்ந்ததாய் இருக்கும் என்கின்றார். ஒவ்வொருவனும் தன் தன் பாடலைப் பாடுவான். அவைகள் எல்லாம் ஒன்றாய்ச் சேரும்போது பரலோகத்தில் இனிமையான சங்கீதமாய் தொனிக்கும்.