பிரயாணிகள் வாழ்க்கைநாடு சேருதல்
இப்பொழுது நான் என் சொப்பனத்தில் கண்டது என்ன வென்றால் அந்தப் பிரயாணிகள் இருவரும் இதற்குள்ளாக மயக்க பூமியைக் கடந்து வாழ்க்கைநாட்டில் 1 வந்து சேர்ந்தார்கள். (ஏசாயா 42 : 4 – 12 உன்னதப்பாட்டு 2 : 10 – 12) அதின் ஆகாயம் மகா இன்பமாயும், சுகத்துக்கு ஏற்றதாயும் இருந்தது. அவர்கள் செல்லும் பாதை அந்த நாட்டுக்கு ஊடே போனது. அவர்கள் அவ்விடத்தில் சற்று இளைப்பாறிக் கொண்டார்கள். அவர்கள் இந்த இடத்தில் குருவிகளின் கூவுதலையும், காட்டுப்புறாக்களின் கனிந்த குரலையும் கேட்டார்கள். இவ்விடத்தில் புஷ்பங்கள் மலர்ந்து கமகமவென்று வாசனை வீசின. இந்த நாட்டில் சூரியன் இரவும் பகலும் பிரகாசிக்கின்றது. ஆகையால் இது மரண பள்ளத்தாக்குக்கும் அகோரபயங்கர ராட்சதன் எல்லைக்கும் அப்பால் இருந்தது. இங்கிருந்து பார்த்தால் சந்தேக துருக்கம் சற்றாகிலும் தெரிய மாட்டாது. அவர்கள் நாடிப்போகும் நகரம் இவ்விடத்தில் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தது. இந்த வாழ்க்கை நாடு மகிமைபொருந்திய மோட்ச பட்டணத்தின் எல்லைக்குச் சமீபமாய் இருந்தபடியால் அங்குள்ள குடிகளாகிய ஒளிமயரூபிகளில் அநேகரை அவர்கள் இங்கே சந்தித்தார்கள். இந்த நாட்டிலேதான் மணவாளனுக்கும் மண வாட்டிக்கும் உண்டாயிருந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது. “மணவாளன் மணவாட்டியின் மேல் மகிழ்ச்சியாயிருப்பது போல அவர்கள் தேவன் அவர்கள் மேல் மகிழ்ச்சியாயிருப்பார்” இவ் விடத்தில் நவ தானியங்களையிட்டாவது திராட்சரசத்தைக் குறித்தாவது அவர்கள் யாதொரு கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் பிரயாணம் முழுவதிலும் கிடையாததெல்லாம் இங்கே சம்பூரணமாய் கிடைக்கக்கூடியதாய் இருந்தது. மேலும் அவர்கள் இங்கே “இதோ உன் இரட்சிப்பு வருகிறது, இதோ அவர்அருளும் பலன் அவரோடும் அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சீயோன் குமாரத்தியை நோக்கிச் சொல்லுங்கள்” என்கிற சத்தம் பட்டணத்துக்கு வெளியே பலத்த சத்தத்தோடு தொனிக்கிறதையும் கேட்டார்கள். வாழ்க்கை நாட்டு மனிதர் எல்லாரும் பிரயாணிகளைக் கண்டவுடனே இவர்களை பரிசுத்த ஜனம் என்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் என்றும் தேடிக்கொள்ளப்பட்டவர்கள்” என்றும் அழைத்தார்கள்.
இந்த நாட்டை அவர்கள் கடந்து போகையில் மோட்ச பட்டணத் துக்கு வெகுதூரத்தில் இருக்கும்போது அனுபவியாத ஆனந்தத்தை எல்லாம் அனுபவித்தார்கள். அவர்கள் போகப்போக உச்சித பட்டணத்தின் அலங்கங்கள் எல்லாம் அதிகத் தெளிவாகத் தெரிந்தது. அது முத்துக்களாலும் விலையேறப்பெற்ற கற்களாலும் கட்டப் பட்டிருந்தது. அதின் தெருக்கள் தங்கத்தால் தளவரிசைப் படுத்தப் பட்டிருந்தது. அதின் இயல்பான ஜோதியோடு அதினுள் பிரகாசித்த சூரியனுடைய ஜோதியும் கூடி ஜொலித்தது. கிறிஸ்தியான் அதின்மேல் உண்டான வாஞ்சையால் வியாதிப்பட்டு மயங்கி விழுந்தான். திடநம்பிக்கையும் அதே வியாதியால் இரண்டு மூன்றுதரம் சோர்ந்து விழுந்தான். இந்த இடத்தில் அவர்கள் இருவரும் சற்று நேரம் மயங்கிக் கிடந்து தங்கள் நோயின் வேதனை பொறுக்கமாட்டாமல் “என் நேசரைக் கண்டீர்களானால் என் நேசத்தால் சோகமடைந் திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லுங்கள்” என்று அழுது புலம்பினார்கள்.
அவர்கள் சற்று தெளிவடைந்து தங்கள் வியாதியை தாங்கும்படி பலங்கொண்ட பிற்பாடு மறுபடியும் நடந்து நகரத்துக்கு சமீபமாய் சேரவே அங்கே நந்தவனங்களும், திராட்சப் பந்தல்களும், தோட்டங்களும் இருந்தன. அதின் வாசல் ராஜபாதைக்கு நேராகவே இருந்தது. இந்த அலங்காரச் சோலைக்குள் வரவே அதின் தோட்டக்காரன் 2 வழியில் நின்றான். அவனைக் கண்டவுடனே அவர்கள் இந்தச் செழிப்பான முந்திரிகைச் செடிகளும் 3 இன்பமான தோப்பும் யாருடையது? என்று கேட்டார்கள். அதற்கு அவன் இவை மகாராஜாவின் சிங்காரத்தோப்பு, மகாராஜா தமக்கு மனமகிழ்ச்சியாகவும் பிரயாணிகளுக்கு முசிப்பாறுதலாய் இருக்கவும் இதை உண்டுபண்ணியிருக்கிறார் என்று சொல்லி அந்த இருவரையும் தோட்டத்துக்குள் கூட்டிக்கொண்டு போய் அந்த இடத்தில் உள்ள மதுரமான கனிகளால் முசிப்பாறிக் கொள்ளும்படி (உபா 23 : 24) சொன்னான். அதுவுமின்றி அவன், மகாராஜா உலாவித் திரியும் தெருக்களையும் அவர் உட்கார்ந்து மனமகிழும் பூப்பந்தல்களையும் அவர்களுக்குக் காட்டினான். இங்கே அவர்கள் சற்று நேரம் தங்கித் தூங்கி இளைப் பாறினார்கள்.
அவர்கள் தங்கள் பிரயாணம் முழுவதிலும் பேசினதைப் பார்க்கிலும் அதிகமாக இந்த நித்திரையில் பேசினதை நான் என் சொப்பனத்தில் கண்டேன். அது எனக்கு சொல்ல முடியாத பிரமிப்பாய் இருந்தது. நான் பிரமிப்பதை அந்த தோட்டக்காரன் பார்த்து: இதற்காக நீ பிரமிக்க வேண்டியதென்ன? இந்த தோட்டத்துத் திராட்ச பழங்களின் குணம் இப்படித்தான். “இது மெதுவாய் இறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப் பண்ணுகிறதுமான நல்ல திராட்ச பழங்களாய் இருக்கின்றது” (உன்னத 7 : 9) என்று சொன்னான்.
அவர்கள் தூங்கி எழுந்திருந்தவுடனே பட்டணத்துக்குப் 4 போகும்படியாக பயணப்படுகிறதை நான் கண்டேன். ஆனால் நான் முன் சொல்லியபடி அந்த நகரம் சுத்தப் பொன்னாய் இருந்தபடியால் (வெளி 21 : 18) அதன்மேல் பிரகாசித்த சூரிய வெளிச்சம் அதை அதிக ஜோதியாய் விளங்கப்பண்ணிற்று. ஆதலால் அதின் மகத்துவங்களை அவர்கள் நேரே பார்க்கக்கூடாமல், அதற்கென்று உண்டுபண்ணப் பட்டிருந்த ஒரு கண்ணாடியினாலே மாத்திரம் பார்த்துக் கொண்டார்கள். (2 கொரி 3 : 18) அவர்கள் தங்கள் வழியே நகரத்தை நோக்கிப் போகையில் இரண்டு மனிதர் அவர்களைச்சந்தித்தார்கள். அவர்கள் வஸ்திரம் பொன் மயமாயும் முகம் ஒளிமயமாயும் ஜொலித்தது.
அவர்கள் இந்தப்பிரயாணிகளைப் பார்த்து: நீங்கள் எங்கே யிருந்து வருகிறீர்கள்? என்று கேட்டார்கள். இவர்கள் அதற்கு உத்தரவு சொன்னார்கள். அப்புறம் இந்தப் பிரயாணிகள் வழியில் தங்கின இடங்கள், சகித்த பாடுகள், அனுபவித்த சந்தோசங்கள் அல்லது ஆறுதல்கள் இவைகள் எல்லாற்றையும் குறித்து அவர்கள் வினவி னார்கள். அதற்குச் சொல்ல வேண்டிய மறுமொழிகளை பிரயாணிகள் சொன்னார்கள். அப்பால் அவர்கள் பிரயாணிகளைப் பார்த்து, உங்களுக்கு இன்னும் இரண்டு விக்கினங்கள் மாத்திரம் இருக்கிறது. அதைக் கடந்துவிட்டால் அப்புறம் மோட்ச பட்டணம் சேருவீர்கள் என்று சொன்னான்.
அப்பொழுது கிறிஸ்தியானும், திடநம்பிக்கையும் அவர்களை நோக்கி, எங்களோடேகூட வழித்துணையாக வாருங்களேன் என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நல்லது, அப்படியே ஆகட்டும் என்று சம்மதித்து நாங்கள் வருகிறது வருகிறோம், ஆனால் நீங்கள்தான் உங்கள் சுயவிசுவாசத்தால் பெறவேண்டியதை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார்கள். அப்புறம் அவர்கள் எல்லாரும் கூடி நடந்து மோட்ச பட்டணத்தின் வாசல் தெரிகிறது மட்டும் ஒன்றாகப் போனதை நான் என் சொப்பனத்தில் கண்டேன்.
1. வாழ்க்கை நாடு என்பது, ஆவிக்குரிய விஷயங்களில் அனுபோகப்பட்ட மெய் விசுவாசிகள் தங்கள் ஜீவியத்தின் கடைசியில் அனுபவிக்கிற தெளிந்த சமாதானத்தையும், நம்பிக்கையையும் குறிக்கிறது. அவர்கள் பெரும்பாலும் சோதனைகளுக்கும், பயங்களுக்கும் விலகி இருக்கிறார்கள். அவர்கள் தேவனோடு அந்நியோந்நியமாய் இருந்து இன்பத்தை அடைகிறார்கள். அவர்கள் தங்களுக்காக ஆயத்தம்செய்து வைக்கப்பட்டிருக்கிற நித்திய மகிமைகளை நினைவுகூரும்போது சொல்லக்கூடாத ஆனந்தத்தால் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் இவ்வுலகத்தைவிட்டுப் பிரியவும் கிறிஸ்துவுடன் போய்க் குடியிருக்கவும் ஆசையாய் இருக்கிறார்கள்.
2. தோட்டக்காரன் என்பது ஒரு உண்மையான சுவிசேஷ ஊழியக்காரனைக் குறிக்கிறது.
3. செழிப்பான முந்திரிக்கைச் செடி என்பது மெய் மார்க்கத்துக்கு அடுத்த வெளியரங்கமான ஆராதனை முதலியவைகளைக் குறிக்கிறது.