தலையங்கம்

"உம்முடைய வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!
நாள் முழுவதும் அது என் தியானம்" (சங்கீதம் 119 : 97)

"உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டு, அவர்களுக்கு இடறலில்லை" (சங்கீதம் 119 : 165)

கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

நீண்ட நாட்கள், ஆம், முழுமையான ஒரு ஆண்டு காலத்திற்கும் கூடுதலான நாட்களுக்குப்பின்னர் இந்த தேவ எக்காள இதழை உங்களுக்கு அளிப்பதற்காக உள்ளத்தில் மிகுந்த துயரமும், பாரமுமடைகின்றேன். வியாதி பெலவீனங்களின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் சரீர மூப்பு, சோர்பு காரணமாக முந்தைய நாட்களில் கர்த்தருக்காக மனமகிழ்ச்சியுடன் தொண்டு செய்ததுபோல இந்த நாட்களில் செய்ய இயலாத நிலையை அதிகமாக உணர்ந்து என்னளவில் துக்கமடைகின்றேன். கடந்த நாட்களில் எனது நோய் பெலவீனம் காரணமாக என்னால் எதுவுமே செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். சரீரத்தில் காணப்பட்ட ஒருவித மயக்கமான நிலை காரணமாக அதிகமான நேரத்தை நான் எனது படுக்கையிலேயே செலவிட வேண்டியதாக இருந்தது. கம்பியூட்டரில் அமர்ந்து தேவ எக்காள பணிகளை தொடர்ந்து என்னால் செய்ய இயலாது போயிற்று. ஆனால், மகிழ்ச்சிக்குரிய காரியம், தினமும் என்னால் முடிந்தவரை அதிகமான நேரத்தை தேவனுடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிட்டேன்.

சரீரத்தில் உறுதியான பெலனும், ஆரோக்கியமும் இருந்த கடந்த கால நாட்களில் மாதந்தோறும் தேவ எக்காளத்தை அச்சிட்டு உங்கள் கரங்களில் கொடுத்த காலங்கள் இருந்தன. தனியனாக, எனக்கென்று உதவிக்கு எந்த ஒரு ஆள் துணையும் வைத்துக்கொள்ளாமல் கர்த்தருடைய பெலனை மட்டும் சார்ந்து கடந்த 46 (நாற்பத்தாறு) நீண்ட ஆண்டு காலமாக தேவ எக்காளத்தை எழுதி வெளியிட்டு வந்திருக்கின்றேன். ஆரம்ப நாட்களில் பல ஆண்டு காலமாக தேவ எக்காளத்தை நான் எனது சொந்தக் கரங்களாலேயே 2 தடவைகள் எழுதுவேன். ஒரு தடவை மேலெழுந்த வாரியாக எழுதிவிட்டுப் பின்னர் அச்சுப்பதிப்புக்கு வசதியாக இரண்டாம் தடவை அதை தெளிவாக எழுதுவேன். அதற்கப்பால் தமிழ் டைப்ரைட்டர் உதவியுடன் தேவ எக்காளத்தை சில ஆண்டு காலம் டைப் செய்து அச்சிட்டு வெளியிட்டேன். கர்த்தருக்குள் நீங்கள் நன்கு அறிந்தபடி இந்த நாட்களில் தேவ எக்காளத்தை கம்பியூட்டரில் டைப் செய்து வருகின்றேன். எனக்கு முன்பாக கம்பியூட்டரில் ஆங்கில கீ போர்ட் (English Key Board) இருந்தபோதினும் அதில் தமிழ் எழுத்துக்களை சிரமமின்றி ஓரளவு விரைவாக தேவ பெலத்தால் டைப் செய்துவிடுகின்றேன். எல்லா துதி ஸ்தோத்திரங்களுக்கும் பாத்திரமானவர் நம் தேவன் ஒருவரே.

எனது கம்பியூட்டருடன் இணையதள வசதி (Internet Connection) இருப்பதால் பரிசுத்த பக்த சுரோன்மணிகளின் வாழ்க்கை வரலாறுகளை பல கோணங்களிலும் அலசி ஆராய்ந்து தேடி எடுத்து தேவப் பிள்ளைகளாகிய உங்களுக்கு ஜெபத்துடன் அளித்து வருகின்றேன். அதற்காக நான் எடுக்கும் கடினமான பிரயாசங்கள் யாவும் தேவனுடைய ஞாபக புத்தகத்தில் உள்ளது. அன்பின் தேவனும் இந்தக் காரியத்தில் எனக்கு வெகுவாக ஒத்தாசை செய்து வருகின்றார்.

இந்த தேவ எக்காள பதிப்பில் 2010 ஆம் ஆண்டு நாம் அச்சிட்டு வெளியிட்ட ஜாண் பன்னியன் என்ற பக்த சிரோன்மணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றையே நான் திரும்பவுமாக அச்சிட்டு வெளியிடும் ஒரு தவிர்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டேன். இங்கிலாந்து தேச பரிசுத்தவான் வில்லியம் பிராம்வெல் என்ற மாபெரும் ஜெப மாந்தனின் வாழ்க்கைச்சரித்திரத்தை இந்த இதழில் அச்சிட்டு வெளியிட நான் பல நாட்களாக கம்பியூட்டரில் உட்கார்ந்து மொழி பெயர்ப்பு வேலைகளை செய்து முடித்து கடைசி நேரத்தில் கம்பியூட்டரில் நான் செய்த ஒரு அறியா தவறு காரணமாக அதில் சேமிக்கப்பட்டிருந்த அனைத்து செய்திகளும் நொடிப்பொழுதில் மறைந்துவிட்டன. அதை திரும்பவுமாக வெளிக்கொண்டு வர கணிப்பொறி வல்லுனர் இரண்டு நாட்கள் எவ்வளவோ முயன்றும் ஒன்றும் பலனளிக்கவில்லை. அதிலும், தேவனுடைய அன்பும், அனந்த ஞானமும் இருக்கவே செய்யும் என்று எண்ணி கர்த்தரில் நான் என்னைத் தேற்றிக்கொண்டேன். தனது சில ஆண்டு கால வேதாகம மொழிபெயர்ப்பு வேலைகளை 1812 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எதிர்பாராதவிதமான தீ விபத்தில் முற்றுமாக இழந்துபோன ராட்சத தேவ பக்தன் மிஷனரி வில்லியம் கேரி அவர்களை அப்பொழுது நான் அதிகமாக நினைவுகூர்ந்து ஆறுதலடைந்தேன்.

கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திற்கு அடுத்தபடியாக வைத்துப் போற்றப்படும் "மோட்ச பிரயாணம்" என்ற புத்தகத்தின் ஆக்கியோன் ஜாண் பன்னியன் அவர்களின் ஆச்சரியமான வாழ்க்கை சரித்திரத்தையும், அவர்களின் இறுதி பிரசங்கத்தையும், தேவ ஆலோசனைகளையும் மீண்டும் ஒரு முறை ஜெபத்தோடு வாசித்து உங்கள் ஆவிக்குரிய வாழ்வுக்கு ஆசீர்வாதமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் "மோட்ச பிரயாணம்" புத்தகம் இருந்தால் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அதை தவறாது வாசியுங்கள். உங்கள் கையிலிருப்பது மோட்ச பிரயாணம் பழைய மொழி பெயர்ப்பு பிரதி என்றால் நீங்கள் நிச்சயமாக பாக்கியசாலிகளே! அதில் சந்தேகமே கிடையாது. சாமுவேல் புவுல் ஐயர் என்ற பரிசுத்தவான் 1882 ஆம் ஆண்டு மொழிபெயர்த்த "மோட்ச பிரயாணம்" என்ற அந்த மிகப் பழமையான புத்தகத்தை நான் இந்நாள் வரை என வசம் பத்திரமாக வைத்து ஜெபத்தோடு வாசித்து வருகின்றேன். ஒரு தடவை தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே சென்றிருந்த சமயம் நான் அதை என்னுடன் எடுத்துச் சென்று அதிலுள்ள 453 பக்கங்களையும் ஒரு மாத காலத்தில் வாசித்து முடித்து திரும்ப அதை எடுத்து வந்தேன். அதற்கு முன்னரும் அதை முழுமையாக நான் வாசித்திருக்கின்றேன். இப்பொழுதும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் அதை வாசித்து ஆவிக்குள்ளாக ஆசீர்வதிக்கப்பட்டு வருகின்றேன். நீங்கள் நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்களானால் ஆங்கிலத்தில் உள்ள மோட்ச பிரயாண Pilgrim's Progress நூலை வாங்கி வாசியுங்கள். மிகுந்த தேவ ஆசீர்வாதம் காண்பீர்கள். தற்பொழுது கிறிஸ்தவ புத்தக கடைகளில் கிடைக்கும் தமிழ் மோட்ச பிரயாண புத்தகம் நமக்கு அத்தனை ஆசீர்வாதமாக இருக்காது.

முழுமையான 12 வருட காலம் இங்கிலாந்திலுள்ள பெட்ஃபோர்ட் சிறைக்கூடத்தில் தனது வாழ்நாட் காலத்தை செலவிட்ட ஜாண் பன்னியனுக்கு கர்த்தருடைய வேத புத்தகம் ஒன்றேதான் சொல்லொண்ணா ஆறுதலையும், பொங்கிப்பூரிக்கும் தேவ சமாதானத்தையும் கொண்டு வந்தது. இரவும், பகலும் அவர் அதையே வாசித்து, தியானித்து, ஆனந்தித்து அகமகிழ்ந்தார். முழு வேதாகமத்தையும் அவர் எத்தனை தடவை வாசித்து முடித்திருந்தார் என்ற எந்த ஒரு கணக்கையும் அவர் நமக்குப் பின் வைக்காதே போனாலும் அவர் எந்த அளவுக்கு தேவனுடைய புத்தகத்தை வாசித்து முடித்து அதில் எத்தனை கரை கண்ட ஞானவானாக இருந்தார் என்பதை அவர் எழுதிய "மோட்ச பிரயாணம்" புத்தகத்தில் நாம் கண்கூடாக காண்கின்றோம். பாலையும், பழத்தையும் ஒன்றாக சேர்த்து பழ ரசம் தயாரிப்பது போல அவர் தமது மோட்ச பிரயாண நூலை முற்றும் தேவனுடைய வசனங்களால் பின்னிப் பிணைத்து குடிக்கக் குடிக்க தெவிட்டாத தேன் பாகாக அதை மாற்றியிருக்கின்றார்.

பாவியாகிய நான் எனது வாழ்வில் சர்வ வல்ல தேவனின் குரலை பல தடவைகளிலும் எனது சொந்தக் காதுகளால் கேட்டிருக்கின்றேன். அந்த வார்த்தைகள் அசரீரியாக என் காதுகளில் தொனிப்பதையும், எனது இருதயத்தில் கணீரென ஒலிப்பதையும் நான் கேட்டிருக்கின்றேன். ஒரே ஒரு தடவை மாத்திரம் ஒரு நள்ளிரவு நேரம் தேவனுடைய வேதபுத்தகத்தை திறந்து அதை வாசிக்கும்படியாக என் உள்ளத்தில் கர்த்தரால் ஏவப்பட்டேன். அந்த நாள் எனது வாழ்வின் ஒரு முக்கியமான நாள். சுமார் 20 ஆண்டு காலம் நான் செய்து வந்த எனது உலகப்பிரகாரமான நல்ல வேலையை விட்டு விட்டு கர்த்தருடைய ஊழியத்தை முழுமையாக செய்ய நான் பிரதிக்கினை மேற்கொண்ட நாள். உலக வேலையைவிட்ட பின்னர் கர்த்தர் என்னைக் கைவிடாமல் நடத்த அவர் எனக்கு ஒரு வாக்குத்தத்தம் அளிக்க வேண்டும் என்று கேட்ட நாள் அது. அப்படியே அந்த சர்வ வல்ல கர்த்தர் எனது வேதாகமத்தை திறந்து தனது வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளும்படியாக என்னை உணர்த்தினார். அந்த வார்த்தைகள் ஏசாயா 60 : 19-20 வசனங்களில் காணப்படுகின்றன. "இனிச்சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் அஸ்தமிப்பது மில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்துபோம்". அந்த வார்த்தைகள் எல்லாம் முழுமையாக கர்த்தருடைய வேத புத்தகத்திலுள்ள தேவ வசனங்களேயல்லாமல் வேறு எந்த ஒரு வார்த்தைகள் அல்ல என்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்திருக்கின்றேன். என்னைப் பாவத்தில் வீழ்த்தி அழிக்க தந்திர சாத்தான் ஒரு இராக்கால நேரம் என்னண்டை அனுப்பிய பெண் காசிப்பட்டணத்தில் என் அருகில் வந்து அமர்ந்திருக்கையில் என் இருதயத்தில் தொடர்ந்து தொனித்துக் கொண்டிருந்த வார்த்தை இதுதான் :- "தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்வது எப்படி?" (ஆதி 39 : 9) அந்த தேவனுடைய வார்த்தை அந்தப் பெண் என் அறையைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும் வரை தொடர்ச்சியாக என் உள்ளத்தில் இடைவெளி விட்டு விட்டு திரும்ப திரும்ப தொனித்துக் கொண்டேயிருந்தது. அந்த தேவனுடைய வார்த்தையை நான் அந்த நேரம் துளிதானும் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் தேவ ஆவியானவர் என்னை எச்சரிப்பதற்கு ஏற்ற தமது வார்த்தையை அந்த நேரம் என் உள்ளத்தில் ஒலிக்கப்பண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு மெய்யான தேவப் பிள்ளையின் உயிர் மூச்சு ஜெபமும், வேத வசன தியானமும்தான். மறுபடியும் பிறந்து பரலோக அனுபவத்துக்குள் வந்த அந்த கர்த்தருடைய பிள்ளைக்கு வேத புத்தகம் என்றால் உயிராகிவிடுகின்றது. எனது 18 ஆம் வயதில் மறுபடியும் பிறந்த நான் தேவனுடைய வேதாகமத்தை இதுவரை முழுமையாக பல தடவைகளிலும் வாசித்து முடித்திருக்கின்றேன். எல்லா துதியும், புகழும் நம் ஆண்டவருக்கே. அப்படி வாசித்து முடித்த எனது வேதாகமங்களை விரும்பிக் கேட்கும் தேவ மக்களுக்கு கொடுத்துவிடுவேன். தற்பொழுது எனது கரங்களில் நான் வைத்திருக்கும் 4 தமிழ் வேதாகமங்களில் 2 வேதாகமங்கள் தேவகிருபையால் நான் பல தடவைகள் வாசித்து முடித்து முழுவதையும் பற்பலவிதமான கலர் பென்சில்களால் அடிக் கோடிட்டவைகளாகும். அவைகளில் ஒன்று 1956 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட மிகவும் பழமையான வேதாகமமாகும். அவைகளை விரும்பிக்கேட்கும் தேவப்பிள்ளைகளுக்கு நான் கொடுப்பதில்லை. காரணம், மீண்டும் நான் எனது வேதாகமத்தில் கோடிட்டு வசனங்களை அதில் குறிப்பிடும் சரீர பெலனை விருத்தாப்பியம் காரணமாக நான் முற்றும் இழந்துவிட்டேன்.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராட்சத பரிசுத்தவான் ஜியார்ஜ் முல்லர் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தை 100 தடவைகள் வாசித்து முடித்திருந்தார்.

"தேவனுடைய வார்த்தைகளோடு நான் வேண்டிய நேரத்தை செலவிடாதபட்சத்தில் அந்த நாளை நஷ்டப்பட்ட ஒரு நாளாகவே நான் துயரத்தோடு கருதுகின்றேன்" என்று அவர் கூறினார். "நான் அநேக காரியங்களை செய்ய வேண்டும். எனக்கு மிகுந்த அலுவல்கள் உண்டு. பலரையும் நான் சந்தித்துப் பேசவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளை வாசித்து தியானிக்க எனக்கு நேரம் எங்கே?" என்று எனது நண்பர்கள் பலர் அடிக்கடி என்னிடம் சொல்லுவதை நான் துக்கத்தோடு கேட்டிருக்கின்றேன். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவெனில்:-

"50 ஆண்டுகளுக்கும் கூடுதலான எனது வாழ் நாட் காலத்தில் ஒரு நாளை கூட நான் தேவனுடைய வார்த்தைகளோடு போதுமான நேரம் செலவிடாமல் கை நழுவ விடவில்லை. ஆண்டுக்கு 30000 கடிதங்கள் உலகத்தின் நானா தேசங்களிலிருந்தும் எனது கரங்களுக்கு வருகின்றன. அவைகளை நான் வாசித்து அவைகளுக்கு நான் பதில் அளிக்க வேண்டும். 10000 (பத்தாயிரம்)அநாதை குழந்தைகளை பசி பட்டினியின்றி போஷித்து பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கின்றது. அத்துடன் 1200 விசுவாசிகளைக் கொண்ட ஒரு தேவனுடைய சபைக்கு நான் மேய்ப்பனாக இருந்து அந்த விசுவாச மக்களின் ஆவிக்குரிய ஆகாரத்தை நான் அவர்களுக்கு கொடுத்து அவர்களை ஜீவ பாதையில் வழிநடத்த வேண்டிய பரிசுத்த கடமை எனக்கு இருக்கின்றது. இத்தனை கடினமான அலுவல்களின் மத்தியிலும் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளோடு தினமும் சில மணி நேரங்கள் செலவிட்ட பின்னரே அந்த நாளை நான் ஆரம்பிக்கின்றேன்." (ஜியார்ஜ் முல்லர்)

காலஞ்சென்ற எனது பரிசுத்த தகப்பனாருக்கு தேவனுடைய வேத புத்தகம்தான் நாள் முழுவதும் அவர்களின் தியானமாகவிருந்தது. தனது வேதாகமத்துடன் வாசிப்பதற்காக எங்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துவிட்டால் மணிக்கணக்காக அதை வாசித்துக் கொண்டிருப்பார்கள். வேதாகமம் முழுவதையும் பல தடவைகளும் வாசித்து முடித்திருந்தார்கள். தனது மரணத்திற்கு முன்பு கூட இறுதியாக ஒரு தடவை அதை வாசித்து முடித்து ஆனந்தித்தார்கள். பரிசுத்த வேதாகமத்தில் ஏசாயா தீர்க்கத்தரிசியின் புத்தகம், சங்கீத புத்தகம் போன்றவை அவர்களுக்கு மிகவும் பரவசமான புத்தகங்களாகும். தனது பரிசுத்த வேதாகமத்தை தனது இரு கரங்களால் ஏந்திப் பிடித்து அதைத்திறந்து அதை முத்தமிட்டே வாசிக்க ஆரம்பித்து அதை முத்தமிட்டே மூடி வைப்பார்கள். அவர்கள் வேதாகமம் அப்படி முத்தமிட்டுப் படித்ததின் காரணமாக எண்ணெய் கறையாகக் காணப்படும். வேதாகமத்தை வாசிக்க இயலாமல் தனது பார்வையை முற்றும் இழந்து போன நாட்களில் தனது படுக்கை அறைக்கு தினமும் காலை மாலை நேரங்களில் வந்து மேஜை மீதிருக்கும் தனது வேதாகமத்தை மிகுந்த பக்திவினயமாக கரங்களில் எடுத்து அதை சற்று நேரம் கரங்களில் வைத்திருந்த பின்னர் அதை முத்தட்டு மேஜை மீது வைத்து விட்டுச் செல்லுவதை நான் கவனித்திருக்கின்றேன்.

தன்னை பாவ அடிமைத்தனத்திலிருந்து மீட்டு இரட்சித்த தனது அன்பின் ஆண்டவரை பத்து மாதங்கள் சுமந்து பெற்று வளர்த்த தனது பரம தாயாக அவர்கள் வைத்திருந்தார்கள். அந்த பரம தாயின் உள்ளம் தனது எந்த ஒரு செயலின் மூலமாகவும் துக்கமடைந்து விடாதபடி தன்னை மிகுந்த விழிப்புடன் தேவ பெலத்தால் காத்து வந்தார்கள். தனது மரணத்திற்கு முன்பாக எனக்கு எழுதிய தனது கடைசி கடிதத்தில் "மகனே, உனது எந்த ஒரு பாவச்செயலின் மூலமாக அந்த பரலோக தாயின் உள்ளத்தை வேதனைப்படுத்திவிடாதே" என்ற வரி இடம் பெற்றிருந்தது.

வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, நமது வாழ் நாட்காலம் மிகவும் குறுகியது. அந்த குறுகிய நாட்களை தேவனுடைய வார்த்தைகளை நம்மால் முடிந்தவரை அதிகமாக வாசித்து தியானிக்க, அவைகளை மனப்பாடம் செய்ய விழிப்பாக இருப்போம். இராக்காலங்களில் நமது படுக்கையில் நித்திரை நமது கண்களுக்கு விலகி, சத்துருவாம் பிசாசானவன் பற்பலவிதமான நினைவுகளைக் கொண்டு வந்து நமது இருதயத்தை கலங்கப்பண்ண முயற்சிக்கையில் நாம் மனப்பாடாக படித்து பொக்கிஷ வைப்பாக வைத்திருக்கும் தேவனுடைய வசனங்களை நாம் நமது நினைவுக்கு கொண்டு வந்து அவைகளை நாம் நமது நெஞ்சத்துக்குள்ளே சொல்ல ஆரம்பிப்போமானால் நமது இருதயம் தேவ சமாதானத்தால் நிரம்பும். அன்பின் ஆண்டவருடைய சிலுவைப்பாடுகளைக் குறித்த வேத பகுதிகள், குறிப்பாக ஏசாயா 53 ஆம் அதிகாரம், அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளார் தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பட்ட பாடுகள் குறித்த பட்டியல் 2 கொரி 11 : 23 - 33. தேவனுடைய படைப்பின் மாட்சிமையை தனக்கே உரிய பரலோக நடையில் வர்ணித்திருக்கும் சங்கீதக்காரரின் 104 ஆம் சங்கீதம். இன்னும் எத்தனை எத்தனையோ அருமையான வேத பகுதிகளை எல்லாம் நாம் மனப்பாடம் செய்து அவைகளை நாம் நமது இராக்கால இளைப்பாறுதல்களில் நமது நினைவுக்கு கொண்டு வருவோமானால் நிச்சயமாக பேரின்பம் காண்போம். அதற்கான கிருபைகளை தேவன்தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக.

காலத்தின் இந்தக் கடைசி நாட்களில் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தின் Internet மூலமாக வெகு திரள் திரளான தேவனுடைய செய்திகளும், உலகச் செய்திகளும் சமுத்திரத்தில் கடல் அலைகள் அடுத்தடுத்து மலைபோல புரண்டு வருவது போல வந்தவண்ணமாக இருக்கின்றன. இணையதளத்தில் முகநூல் FACE BOOK என்ற அமைப்பு கரை காணா சமுத்திரமாக உள்ளது. அவைகளை நாம் வாசிக்கவும், அறிந்து கொள்ளவும் நமது சிறிய வாழ்நாட்காலம் போதாது. இப்படிப்பட்ட அமைப்புகள் வெளியிடும் செய்திகளையும், குறும் படங்களையும் Videos இரவும் பகலும் மாந்தர் பார்த்து பார்த்தே தங்கள் பொன்னான காலங்களை விரயமாக்கிக் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றனர். நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகளும், கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டியவைகளும் இவைகளில் எவ்வளவோ இருந்தபோதினும் ஒரு மனிதனை பாவப்படுகுழிக்குள் வீழ்த்தி அழிக்கும் கொடிய கண்ணிகளையும் நமது ஆத்தும அழிம்பன் பிசாசானவன் இந்த வலைத்தளங்களுக்குள் மனம்போல அள்ளி வீசியிருக்கின்றான் என்பதை நாம் மறக்கலாகாது. அது உங்களுக்குத் தெரியாததல்ல. தேவன் நமக்கு ஈவாக கொடுத்த நமது சிறிய ஆயுட்காலத்தை அவரோடு சஞ்சரிப்பதிலும், அவருடைய மாட்சிமையான வேதாகமத்தை வாசித்து தியானிப்பதிலும், அவைகளை மனப்பாடம் செய்வதிலும் மிகுந்த விழிப்போடு செலவிடுவோம். "தேவனோடு செலவிட்ட நேரமே, சிறப்பாக செலவிடப்பட்ட நேரம்" Time spent with God, time well spent என்று ஒரு தேவ பக்தன் கூறினார். எத்தனை உண்மையும், சத்தியமான வார்த்தைகள்!

மற்ற உலக மக்களைப்போல உலக மாயைகளுக்கு நமது வாழ்நாட் காலத்தை கையளித்து பகல் முழுவதும் தொலைக்காட்சிகள், செய்தி தாட்கள் வாசித்து முடித்து, இனஜனத்தார், நண்பர்கள், அண்டை அயலகத்தாருடன் உலகக் கதைகள் பேசி இறுதியில் நஷ்டப் பட்டவர்களாக நமது மாட்சிமையான வாழ்நாட்காலத்தை ஓடி முடிக்காமல் இந்த கிருபையின் நாட்களில் நமது இரட்சண்ய கன்மலையை அண்டிக்கொள்வோம். நமது ஆத்தும நேசருக்கும் நமக்கும் உள்ள நமது பரலோக உறவை துண்டிக்கும் எந்த ஒரு உலக மாயாபுரி சந்தை சரக்கையும் சாமுவேல் தீர்க்கன் ஆகாகை கில்காலிலே தேவனுக்கு முன்பாக துண்டித்துப்போட்டது (1 சாமு 15:33) போல நாமும் துண்டித்துப் போடுவோம். அதற்கான தேவகிருபைகளை தேவன் தாமே நமக்குத் தந்தருள்வாராக. ஆமென்.


 

இமயமலை தேவ ஊழியச் செய்திகள்

கடந்த தடவை மேற்கொள்ளப்பட்ட இமயமலை தேவ ஊழியங்களைக் குறித்த செய்திகளை இந்த இதழில் தொடர இயலவில்லை. அன்பாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த இதழில் எழுதுகின்றேன்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM