ஒரு காலத்தில் உலகம் முழுவதையும் ஆங்கிலேய மக்கள் அரசாட்சி செய்தார்கள் என்பதை நாம் நன்கு நினைவில் வைத்திருக்கின்றோம். அந்த நாட்களில் அவர்கள் இங்கிலாந்திலிருந்து உலகம் முழுவதுக்கும் தங்கள் மிஷனரிகளை அனுப்பி தேவனுடைய இரட்சிப்பின் சுவிசேஷத்தை பறைசாற்றி திரளான ஜனத்தை ஆண்டவருடைய மந்தைக்கு கொண்டு வந்தார்கள். அவர்களால் கட்டப்பட்ட அழகான தேவாலயங்கள் இன்று வரை நம் கிராமங்களிலும், பட்டணங்களிலும் வானளாவ எழுந்து நிற்கின்றன. அந்த ஆங்கிலேய மிஷனரிகள் நமது நாட்டிற்கு வந்து நம்முடன் வாழ்ந்து, நம்முடன் உண்டு, உறங்கி நம்முடைய மொழிகளைக் கற்று நமது சொந்த பாஷைகளிலேயே நமக்கு பரிசுத்த வேதாகமத்தை தந்ததுடன் நமது மொழிகளுக்கு இலக்கணங்களைக் கூட உருவாக்கிக் கொடுத்தார்கள். அவர்கள் நமக்குச் செய்துவிட்டுச் சென்ற நன்மைகள் கணக்கற்றவை. நமக்கு தேவனுடைய அன்பையும், இரட்சிப்பின் சுவிசேஷத்தையும் அறிவிப்பதற்காக தங்களையே மெழுகு வர்த்திகளாக எரித்து கறைத்துக் கொண்டார்கள். அதைக்குறித்து நீங்கள் நன்கு அறிவீர்களாதலால் நான் கூடுதலாக இங்கு எழுத விரும்பவில்லை.
19 ஆம் நூற்றாண்டில் அந்த ஆங்கிலேய சாம்ராஜ்யம் உலகம் முழுவதுக்கும் வியாபித்துக்கிடந்தது. "பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதில்லை" (The
sun never set on the British Empire) என்ற அளவுக்கு அவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்ததது. உலகம் முழுவதிலுமுள்ள தங்கள் வசமிருந்த நாடுகளை நீதியோடும், நேர்மையோடும், சமாதானத்தோடும் அவர்கள் பரிபாலனம் செய்தார்கள். செல்வமும், செழிப்பும், தொழில் வளமும் கொழித்தது. அந்த நாட்களில் மடகாஸ்கர் நாட்டின் தலைவன் ஒருவன் இங்கிலாந்தில் அப்பொழுது சிம்மாசனத்திலிருந்த விக்டோரியா மகாராணியார் அம்மையாரிடம் சென்று "உலகம் முழுவதும் விரிந்து வியாபித்துக்கிடக்கும் உங்கள் மாபெரும் ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை இத்தனை நீதியோடும், உண்மையோடும், சமாதானத்தோடும் பரிபாலனம் செய்ய உங்களிடம் உள்ள இரகசியம் என்ன?" என்று கேட்டான். அவனுடைய வார்த்தைகளைக் கேட்ட அம்மையார் அங்கிருந்து எழுந்து அரண்மனைக்குள் சென்று சற்று நேரத்திற்குப் பின்னர் கையில் ஒரு அன்பளிப்புடன் அந்த தலைவனிடம் வந்தார்கள். தேவனுடைய வார்த்தைகள் எழுதப்பட்ட அந்த அன்பளிப்பு வேதாகமத்தை அவனுடைய கரத்தில் கொடுத்து "இந்த வேத புத்தகத்திலுள்ள தேவனுடைய வார்த்தைளின்படி நாங்கள் எங்கள் வசமுள்ள நாடுகளை ஆரசாட்சி செய்வதால் அவைகள் சமாதானத்துடன் விளங்குகின்றன. நீங்களும் உங்கள் தனிப்பட்ட வாழ்வின் அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் இதில் எழுதப்பட்டிருக்கும் ஆண்டவருடைய வார்த்தைகளைப் பின்பற்றி அவைகளுக்கு கீழ்ப்படிந்து நடவுங்கள், நீங்கள் ஆசீர்வாதமாக இருப்பீர்கள்" என்று சொன்னார்களாம்.
இந்த பக்தியுள்ள விக்டோரியா மகாராணி அம்மையார் சிறு பிள்ளையாக இருந்தபோது ஒரு சமயம் அரண்மனையிலுள்ள
ஒரு பெரிய புத்தகசாலைக்கு சென்றார்களாம். ஒரு அலமாரியிலுள்ள குறிப்பிட்ட ஒரு புத்தகத்தை அவர்கள் எடுக்க முயற்சித்திருக்கின்றார்கள். ஆனால் அந்த புத்தகத்தை அவர்களால் எடுக்க முடியவில்லையாம். காரணம், அவர்கள் உயரம் குறைவானதால் அதை எடுக்க இயலவில்லை. அதை அருகில் இருந்து கவனித்த அரண்மனை பணியாளன் உடனே ஓடி வந்து கனமான ஒரு பெரிய பழைய புத்தகத்தை அவர்களின் காலடியில் போட்டு அதின் மேல் ஏறி நின்றுகொண்டு தான் விரும்பும் புத்தகத்தை எடுக்க ஆலோசனை கூறினான். அதைக் கவனித்த அம்மையார் அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன என்று அவனிடம் கேட்கவே, அது வேதாகமம் என்று சொன்னவுடன் அதில் தான் ஒருக்காலும் கால் மிதித்து ஏறமாட்டேன். அது தேவனுடைய பரிசுத்தமான புத்தகம் என்று கூறி மறுத்துவிட்டார்களாம். அந்த பரிசுத்த மகாராணி விக்டோரியா அம்மையார் அவர்களின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் பார்ப்பீர்கள்.
இப்படிப்பட்ட பரிசுத்த மகாராணியின் குடும்பத்தில் பிறந்த தற்போதைய இங்கிலாந்து தேச மகாராணி எலிசபெத் அம்மையார் அவர்கள் 6/4/2014 ஆம் தேதி ரோமாபுரியிலுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவர்களை சந்திக்கச் சென்றபோது அவருக்கு இங்கிலாந்திலிருந்து அன்பளிப்பாக என்ன கொண்டு சென்றிப்பார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? உண்மையாகவே தங்க முலாம் பூசப்பட்ட ஒரு அழகான வேதாகமத்தைத்தான் அவர்கள் எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று நாம் திட்டமாக நினைப்போம். அப்படி அவர்கள் செய்திருப்பார்களானால் கர்த்தருடைய நாமம் எத்தனையாக பரிமளித்திருக்கும்! ஆனால், அவர்கள் அதைச் செய்யவில்லை. அதற்கு மாறாக விலையுயர்ந்த மதுபான (Whisky) பாட்டல்களை கூடையில் வைத்து எடுத்துக்கொண்டு சென்று அவருக்கு கொடுத்தார்கள். கூடையில் மதுபாட்டல்கள் இருப்பதையும், ஒரு மது பாட்டலை அம்மையாரின் கணவர் இளவரசர் பிலிப் அவர்கள் தனது கரத்தில் ஏந்தியவராக அதின் சிறப்பை போப் ஆண்டவரிடம் கூறுவதைப்போல நமக்குத் தெரிகின்றது. எத்தனை துயரமான காரியம் பாருங்கள்! ராணியார், போப் ஆண்டவருடன் பேசுவதையும், அன்பளிப்பாக வழங்கப்பட்ட மதுப்பாட்டல்கள் உள்ள அழகான மூங்கில் கூடையையும் படத்தில் நீங்கள் காணலாம்.


இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியம் மதுவை அன்பளிப்பாக வழங்கியவர்கள் அந்த மதுவை விரும்பிப்பருகும் பழக்கமுடையவர்கள் என்பதையும், அந்த அன்பளிப்பைப் பெற்றவர்களும் கூட அதை வழக்கமாக பருகி ஆனந்திக்கும் மக்கள் என்பதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். "மதுபானம் இரத்த வருணமாயிருந்து பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது நீ அதைப் பாராதே....."
(நீதி 23 : 21) என்று தேவனுடைய வார்த்தை நம்மை எச்சரிப்பதுடன் "அந்த மதுவினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல" (நீதி 20 : 1) என்று திட்டமாக நமக்குக் கோடிட்டுக் காண்பிக்கின்றது.
எலிசபெத் மகாராணியார் அவர்களின் காரியம் அதுவென்றால் அவர்கள் வயிற்று மூத்த மகன் பட்டத்து இளவரசர், இங்கிலாந்து தேசத்தை வரும் நாட்களில் அரசாளப் போகும் மன்னர் சார்லஸ் அவர்களின் காரியம் மகா பயங்கரமாகும். "இங்கிலாந்து தேச திருச்சபையின் காவலர்"
(Guardian Angel of Anglican Church) என்று அழைக்கப்படும் அவர் 2013 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மகாநாட்டில் கலந்து கொள்ள வந்த சமயம் இந்தியாவிற்கு வந்து வடஇந்தியாவிலுள்ள ஹரித்துவாரத்தில் உள்ள கோயில்களில் வழிபட்டு, அங்கு ஒழுங்கு செய்யப்பட்ட ஹோம குண்டங்களில் பங்குபெற்று, அவர்கள் அளித்த பிரசாதங்களை அவரும், அவர் மனைவியும் வாங்கிச் சாப்பிட்டு, கழுத்தில் மாலைகளுடனும், கரங்களில் எரியும் அகல் விளக்குகளுடனும் அவர்கள் காணப்படுவதை நீங்கள் இங்குள்ள படங்களில் காணலாம்.


இவைகளை எல்லாம் பார்க்கின்ற இங்கிலாந்து தேச உண்மையான கிறிஸ்தவ மக்கள் மனம் கொதித்து இளவரசர் சார்லஸ் எந்த ஒரு நிலையிலும் இங்கிலாந்து நாட்டை வரும் நாட்களில் ஆளுகை செய்யவே கூடாது, அதற்கு அவர் முற்றும் தகுதியற்றவர் என்று இப்பொழுதே போர்க் கொடி தூக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இங்கிலாந்து தேசம் ஜீவனுள்ள தேவனை புறக்கணித்தபடியால் தேவனும் அவர்களை புறக்கணித்து தள்ளினார். ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கிய இங்கிலாந்து நாட்டின் அழகிய தேவாலயங்கள் எல்லாம் இன்று வணிக மையங்களாகவும், பொருட்களை சேமித்து வைக்கும் வர்த்தக கிடங்குகளாகவும், புறமதஸ்தர்களின் வழிபாட்டு ஸ்தலங்களாகவும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளை உலகமெங்கும் அனுப்பிய அந்த நாட்டின் குழந்தைகளுக்கு "இயேசு" என்றால் யார் என்று தெரியாத நிலையில் இன்று இருப்பதாக சொல்லப்படுகின்றது. எத்தனை துயரமான காரியம் பாருங்கள்! தேசத்தின் செழிப்பு, செல்வம், புகழ் எல்லாம் பறந்து போய்விட்டது. இந்த நாட்களில் உலக மக்கள் அந்த நாட்டை கண்ணேறிட்டு பார்க்கவும் கூட விரும்புவதில்லை. ஆலமரத்தில் பழங்கள் இருந்த நாட்களில் பறவைகள் அதை நாடிப் பறந்து சென்றன. ஆனால் இன்று அது பழங்களற்ற பாழ் மரமாக அல்லவா மாறிவிட்டது. ஜீவனுள்ள தேவனை மறக்கின்ற எல்லாரின் பயங்கரமான முடிவும் இதுவேதான். இந்த பயங்கரமான எச்சரிப்பு தனிப்பட்ட ஒரு நாட்டிற்கு மட்டுமல்ல, தேவனை புறக்கணிக்கின்ற அனைவரின் கடைசி முடிவும் இதுவேதான். தேவ ஜனமே, "கர்த்தரைத் தேடுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள்" (ஆமோஸ் 5 : 6)
|