|
ஃபினிஸ் டேக் 1902 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் 17 வயது வாலிபனாக இருந்தபோது மறுபடியும் பிறந்து மூழ்கி ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டார். தன்னைச் சுற்றிலும் வாழ்ந்த சாட்சியில்லாத, மாய்மாலமும், கபடும் கொண்ட கிறிஸ்தவ மக்களின் மகா கேடான வாழ்க்கையைக் கவனித்த அவர் கிறிஸ்தவத்தை அதுவரை மிகக் கடுமையாக வெறுத்துத் தள்ளி வந்தார். இருப்பினும், தாங்கள் கேட்ட பிரசங்கங்களுக்குத் தக்கவாறு வாழ்க்கை நடத்துகின்ற பரிசுத்த பக்தசீலர்களான சில உண்மைக் கிறிஸ்தவர்களை அவர் கண்டபோது தனது முந்தைய நிலையை மாற்றிக்கொண்டார். அதையடுத்து அவர் தனது வாழ்க்கையைத் தனது அன்பின் ஆண்டவருக்கு முற்றுமாக ஒப்புக் கொடுத்தார்.
தான் மறுபடியும் பிறந்த பின்னர் தனது அன்பின் ஆண்டவரோடு மிகவும் நெருங்கி ஜீவிக்க அவர் தொடர்ந்து கதறிக்கொண்டிருந்தார். மறுபடியும் பிறந்து மூன்று மாதங்களுக்குப் பின்னர் அதாவது 1920 ஆம் ஆண்டு மே மாதம் அவர் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப்பட்டார். அந்த அனுபவத்தைக்குறித்து அவர் கூறும்போது "என் சரீரத்தில் வீசிய விரைந்து செல்லும் ஒரு குழுமையான காற்றின் அசைவைப்போல அது எனக்குத் தெரிந்தது. அந்த அசைவின் மத்தியிலே ஒரு புறா தனது செட்டைகளை அடிக்கும் சத்தமும் எனக்குக் கேட்டது" என்கின்றார் ஃபினிஸ் டேக்.
பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தைத் தொடர்ந்து அதுவரை அவருக்கு இல்லாத ஒரு அசாத்தியமான மனோ ஆற்றல் அவரை ஆட்கொண்டது. அதின் காரணமாக அவர் ஆயிரக்கணக்கான வேத வசனங்களை தேவனுடைய புத்தகத்திலிருந்து சரளமாகக் குறிப்பிடும் கிருபை வரம் அவருக்குக் கிடைத்தது. இதற்கிடையில் அவர் வேதபுத்தகத்திலிருந்து கொஞ்ச பகுதி வரை மாத்திரம்தான் அப்பொழுது படித்திருந்தார். முழுமையாக அவர் வேதாகமத்தை வாசிக்காவிட்டாலும் தேவ ஆவியானவரின் கிருபையால் முழு வேதாகமத்திலிருந்தும் அவர் வசனங்களை இலகுவாகக் குறிப்பிட்டார். மெய்யாகவே இது ஒரு தேவனுடைய பரம ஈவு என்றும் தன்னுடைய கணவர் டேக்கின் ஞாபகசக்தி மிகவும் குறைவானது என்றும் அவருடைய மனைவியே அதற்குச் சாட்சி கொடுக்கின்றார்கள்.
இந்த பரம அனுபவத்திற்குப் பின்னர் அவர் மத்திய வேதாகம கல்லூரியில் வேதாகம கல்வி பயின்று டெக்ஸாஸ் மாநிலத்திலுள்ள ஒரு சபையில் தேவ பணிக்காக நியமிக்கப்பட்டார். அப்பொழுது அவரது வயது 24 மட்டுமேதான். அங்கு அவரும் அவரது மனைவியும் இருந்தனர்.
தேவனுடைய வேதவசனத்தின் மூலமாக தன்னால் ரூபகாரப் படுத்தாத யாதொன்றையும் தனி நபருக்கோ அல்லது சபையினருக்கோ தான் எக்காரணத்தையிட்டும் பிரசங்கிப்பதில்லை என்று அவர் தனது வேதாகம கல்லூரி நாட்களில் தேவனுக்கு முன்பாகத் திட்டமான பொருத்தனை செய்து கொண்டார். மேலும் தேவனுடைய வார்த்தை என்ன சொல்லுகின்றதோ அதை அப்படியே மக்களுக்குப் போதிப்பதாகவும் அவர் பொருத்தனை செய்து கொண்டார்.
ஃபினிஸ் டேக் அநேக கிறிஸ்தவ புத்தகங்களையும், கைப் பிரதிகளையும், சிறுபுத்தக வடிவிலான பிரசுரங்களையும் எழுதி வெளியிட்டார். அவை எல்லாவற்றிற்கும் மேலாக கிறிஸ்தவ உலகம் போற்றும் அவரது ஒத்துவாக்கிய வியாக்கியான வேதாகமம் 1960 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த அகராதியை அவர் தனது மனைவி டாரதி அம்மையாருடன் இணைந்து ஏழு முழுமையான ஆண்டு காலமாக இராப்பகலாக பாடுபட்டு உருவாக்கினார்.
ஒரு நாள் இரவு நான் ஊழியம் செய்து கொண்டிருந்த சவுத்பெண்ட் என்ற இடத்திலுள்ள எனது ஆலயத்திற்கு டேக் வந்திருந்தார். ஆலயத்திலுள்ள எல்லாரும் ஆச்சரியம் அடையும் வண்ணமாக அவர் தனது ஞாபகத்திலிருந்து வெளிப்படுத்தின விசேஷத்தை சபையினருக்கு அப்பொழுது சொல்லப்போவதாக கூறினார். அப்படியே சபை மக்கள் ஒவ்வொரு வசனமாக பார்த்துக்கொண்டு வர முழுப்புத்தகத்தையும் அவர் நாங்கள் ஆச்சரியத்தால் பிரமிப்படையும் வண்ணமாகச் சொல்லி முடித்தார். அப்படி அவர் சொல்லிக் கொண்டு வரும் சமயம் சபை மக்களைப்பார்த்து புன்முறுவல் பூத்தவராக "வசனங்களிலுள்ள நிறுத்தக் குறியீடுகள் (Punctuation
Marks) போன்றவற்றையும் நான் குறிப்பிட வேண்டுமானாலும் சொல்லுகின்றேன்" என்று சொன்னார்.
ஒரு தடவை உள்ளூர் போதகர் ஒருவர் தேவ மனிதரைப்பார்த்து புதிய ஏற்பாடு முழுவதையும் பிழையின்றி மனப்பாடமாக அவரால் சொல்லக்கூடுமா என்று சவால் விடுத்தார். அதை உடனே ஏற்றுக்கொண்ட அவர் அதற்கான ஒரு நிபந்தனையையும் விதித்தார். தான் ஒரு கண்ணாடி ஜன்னலுக்கு பின் பக்கம் உட்கார்ந்து கொண்டு அதைச் செய்வதாகவும், ஆனால் அவர் சொல்லுவதை உள்ளூர் வானொலி எல்லா மக்களும் தான் சொல்வதை கேட்கும்படியாக அஞ்சல் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்படியே அந்த ரேடியோ நிறுவனமும் ஒத்துக்கொண்டது. பரிசுத்த ஆவியானவரால் விசேஷமாக அபிஷேகம் பண்ணப்பட்டிருந்த தேவ மனிதர் ஃபினிஸ் டேக் அவர்கள் மத்தேயு சுவிசேஷம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் முடிவு வரை தனது வேதாகமத்தை எந்த ஒரு இடத்திலும் திறவாமல் முழுவதையும் சொல்லி முடித்தார். ஒவ்வொரு வசனத்தின் எண்ணையும் கூறி வசனத்தைச் சொன்னதுடன் ஒவ்வொரு அதிகாரம் முடிந்து புது அதிகாரம் ஆரம்பிப்பதையும் அவர் கூறினார். என்னே, பரிசுத்த ஆவியானவரின் ஆச்சரிய கிருபை வரம்!
இப்படிப்பட்ட பரிசுத்தவான் டேக், மனச்சாட்சியற்ற ஒரு பொல்லாத பெண்ணால் அபாண்டமாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டு 6 மாத காலம் சிறையில் இருந்தார். அந்த சிறை வாசத்தின் போதுதான் அவர் தனது உலகப் புகழ்பெற்ற வேத வியாக்கியான புத்தகத்தின் கடைசி பகுதியையும் எழுதி முடித்தார். பரிசுத்தவான் ஜாண் பன்னியனும் பெட்ஃபோர்ட் சிறைக்கூடத்திலிருந்துதான் "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த பிரபந்தத்தை எழுதினார் என்பது நமது நிiனைவுக்கு வருகின்றது அல்லவா? நாம் எல்லாரும் பாடுகளின்றி ஆசீர்வாதத்தை எதிர்நோக்குகின்றோம். ஒரு சிலுவை இல்லாத பட்சத்தில் உயிர்த்தெழுதல் இல்லையல்லவா? ஆண்டுதோறும் 30000 டேக் வேத வியாக்கியான வேதாகமங்கள் உலகமெங்கும் விற்பனையாகிக்கொண்டே இருக்கின்றன.
இறுதியாக நான் டேக்கை சந்திக்கச் சென்றபோது அவரும் அவரது மனைவியும் சுழல் நாற்காலியில் வைக்கப்பட்டிருப்பதை நான் துயரத்துடன் கண்டேன். மனைவி மூட்டு வீக்க நோயினாலும், டேக் அவர்கள் பக்கவாத நோயினாலும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவரால் தெளிவாக பேச இயலவில்லை. அவருடைய பிரமாண்டமான அச்சுக்கூடத்தையும், அங்கிருந்து அச்சாகி வெளிநாடுகளுக்குச் சென்று கொண்டிருந்த அவரது புகழ்பெற்ற டேக்ஸ் வியாக்கியான வேதாகமங்களையும் அவர் எனக்குக் காண்பித்தபோது அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. 1939 ஆம் ஆண்டு ஆரம்பித்த எங்களுடைய பரிசுத்த நட்பையும் அப்பொழுது அவர் நினைவுகூர்ந்தார்.
உயர்ந்த நெற்றியும், இளவரசனைப்போன்ற தோற்றமுமுடைய அந்த மனிதர் என்னை அரவணைத்துப் பிடித்து அழுதார். மனதிலும், ஆவிக்குரிய பரிசுத்த நிலையிலும் டேக் ஒரு மாபெரும் தேவ மனிதர் என்பதை நான் அறிந்து கொண்டேன். கிறிஸ்தவ உலகம் உள்ளவரை ஃபினிஸ் டேக் என்ற தேவ மனிதர் ஒரு மகா பெரிய வேத மாணாக்கனாக நினைவுகூரப்படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
(Dr.Lester Sumrall)
(மொழி பெயர்ப்பு)
|