2013 ஆம் ஆண்டு உத்தராஞ்சல் மாநிலத்தைத் தாக்கி அழித்த இமாலயன் சுனாமி (இமாலயா ஜலப்பிரளயம்)

வழக்கமாக உத்தராஞ்சல் அல்லது உத்தராகாண்ட் மாநிலத்திற்கு வரக்கூடிய பருவகால மழை அநேக வாரங்களுக்கு முன்பாகவே 2013 ஆம் ஆண்டு வந்துவிட்டது. அந்த ஆண்டின் ஜூன் மாதம் 17 ஆம் தேதி ஒரே நாளில் மாத்திரம் 340 மில்லி மீட்டர் அதாவது 13 அங்குல மழை கொட்டிற்று. இந்த மழை அளவானது ஆண்டுதோறும் வழக்கமாகப் பெய்யும் மழை அளவைக்காட்டிலும் 375 சதவீதம் கூடுதலாகும். பொதுவாக 66 மில்லி மீட்டர் அதாவது 2 அங்குல மழை பெய்ய வேண்டிய இடத்தில் இந்த அகோர மழை பெய்தது. இந்த மழை 4 நாட்கள் தொடர்ச்சியாக இடைவெளியின்றி பெய்து கொண்டே இருந்தது. அதின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு மடிந்து போய் விட்டனர். அந்த மக்களின் உயிர்ச்சேதம் பற்றிய உண்மைத் தகவல் எந்த ஒரு ஒரு செய்தி தாளிலும் வெளியாகவில்லை. இந்த கோர மழையின் காரணமாக நீண்ட நெடுங்காலமாக அமைந்திருந்த அநேக இமயமலை மலை ரஸ்தாக்கள் முற்றுமாக அழிந்து போய்விட்டன. கேதார்நாத் மற்றும் கௌரிகுண்டம் என்ற இடங்களை இணைக்கும் 14 கில்லோ மீட்டர் உயரமான மலைப்பாதை இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிற்று. அந்த மலைப் பகுதிகளிலிருந்த பல கிராமங்களும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அங்கிருந்த பல பள்ளிக் கூடங்கள், மாணவர்கள், ஆசிரியர்களோடு அப்படியே வாரிக்கொண்டு செல்லப்பட்டுவிட்டன.

கௌரிகுண்டத்திலிருந்து பல நூற்றுக்கணக்கான இந்து யாத்ரீகர்களை கேதார்நாத் கோயிலுக்கு கூட்டிச் சென்று திரும்ப அழைத்து வரும் அநேக மட்டக் குதிரைகளும் அவற்றின் சொந்தக்காரர்களும் இமாலயா ஜலப்பிரளயத்தின் காரணமாக இரவோடிரவாகவே அடித்துக்கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். அவர்கள் விட்டுவந்த மலைக் கிராமங்கள் விதவைகளின் கிராமங்களாகக் காணப்படுவதாகச் சொல்லப்படுகின்றது. கௌரிகுண்டம் என்ற அந்த புகழ்பெற்ற யாத்திரை ஸ்தலமும் வெள்ளம் காரணமாக அழிந்து போனதாகச் சொல்லப்படுகின்றது.

அந்த பயங்கரமான மழை வெள்ளம் காரணமாக பெரிய பெரிய கட்டிடங்கள் எல்லாம் அப்படியே இடிந்து வீழ்ந்து நதிகளில் மூழ்குவதையும், மக்கள் வெள்ளங்களில் அடித்துச் செல்லப்படுவதையும், பல்லாயிரக்கணக்கான மக்கள் செல்லும் வழி இல்லாததால் ஆங்காங்கு மலை உச்சிகளில் திகைத்து நிற்பதையும், தொலைக்காட்சிகள் மற்றும் இணைய தளங்களில் காண்பித்தார்கள். அவைகளை நீங்களும் பார்த்திருப்பீர்கள். ருத்ரபிரயாக், கட்வால் ஸ்ரீநகர், ரிசிகேசம், ஹரித்துவாரம் போன்ற இடங்கள் வெள்ளம் சூழ்ந்த பட்டணங்களாக காணப்பட்டன.

ஜனநெருக்கம் நிறைந்த பட்டணமாக ஒரு காலத்தில் காட்சி அளித்த கேதார்நாத் நகரம் அழிந்துகிடக்கும் காட்சியையும், மலைப்பாதைகள் எல்லாம் ஜலப்பிரளயத்தால் துடைத்து எடுக்கப்பட்டுவிட்டபடியால் எங்கும் செல்ல வழியில்லாமல் திகைத்து நிற்கும் ஒரு கிராம மக்கள் கூட்டத்தையும், பசி பட்டினியால் சோர்ந்து மயங்கிக்கிடக்கும் மக்களையும், விமானம் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருப்பதையும், மலைப்பாதைகள் ஜலப்பிரளயத்தால் அடித்துச் செல்லப்பட்டு விட்டபடியால் யாத்ரீகர்கள் எப்படிச்செல்ல வேண்டும், எங்கே செல்ல வேண்டும் என்று வகையறியாமல் திகைத்து நிற்கும் மகா ஆபத்தான இடங்களில் இந்திய ராணுவத்தினர் மிகுந்த ஜாக்கிரதையாக அவர்களுக்கு வழிகாட்டி நிற்கும் காட்சிகளையும், தங்களுக்கு அருமையானவர்களை இழந்து புலம்பும் துயரக்காட்சியையும் கூட நீங்கள் இங்குள்ள படங்களில் காண்பீர்கள்.

2013 ஆம் ஆண்டு இமாலயன் சுநாமியால் ஏற்பட்ட அழிவின் பயங்கரத்தை இந்தப் படங்களின் வாயிலாக நீங்கள் ஓரளவு கண்டுகொள்ளுவீர்கள் என்று நினைக்கின்றேன்.

2013 ஆம் ஆண்டு ஏற்பட்ட இமாலயா ஜலப்பிரளயம் காரணமாக நாங்கள் வழக்கமாக ஆண்டுதோறும் ஊழியங்களுக்குச் செல்லும் சில பகுதிகளும் அங்குள்ள மலை ரஸ்தாக்களும் கூட அடித்துச்செல்லப் பட்டிருப்பதாக நமது சகோதரன் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் அங்கிருந்து நமக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றார்கள்.



 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM