|
|
20 ஆண்டு காலங்களுக்கு முன்பாக இமயமலை கேதார்நாத் மலைகளில் மேற்கொள்ளப்பட்ட தேவ ஊழியங்களின் மறக்கமுடியாத நினைவுகள்
(மே-ஜூன் 1993 ஆம் ஆண்டு தேவ எக்காளத்தில் வெளி வந்த பழைய செய்தி) |
இனி நாங்கள் எங்கள் இம்மைக்குரிய வாழ்வில் மீண்டும் ஒரு தடவை கேதார்நாத் சென்று தேவ ஊழியம் செய்யப்போவதில்லை. அங்கு செல்லக்கூடிய அழிந்து போன பயங்கரமான மலைப்பாதைகளை மீண்டும் செப்பனிட பல்லாண்டு காலங்கள் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. 20 ஆண்டு காலங்களுக்கு முன்பாக நாங்கள் சென்று ஊழியம் செய்த அந்த கேதார்நாத் ஊழியங்களை தேவ மக்களாகிய நீங்களும் மீண்டும் ஒரு முறை வாசித்து கர்த்தருக்குள் மகிழுங்கள். அங்கு விதைக்கப்பட்ட ஜீவ விதைகள் முப்பது, அறுபது, நூறுமான பலனை ஒரு நாள் தர அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
1993 ஆம் ஆண்டு பாவியாகிய நானும் சகோதரன் நாட்டன் அவர்களும் கேதார்நாத் என்ற இடத்திற்கு சுவிசேஷ ஊழியத்தின் பாதையில் கௌரிகுண்ட் என்ற இடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு செங்குத்தான 12000 அடி உயரமுள்ள கேதார்நாத்திற்குச் சென்று ஒரே நாளில் திரும்பினோம். தனித்த ஒரு நாளில் 28 கி.மீ. தொலைவை நாங்கள் தேவ பெலத்தால் கால் நடையாக நடந்து கடந்திருந்தோம். சமவெளி பிரதேசமானால் எத்தனை கி.மீ. தொலைவானாலும் நாம் நடந்து செல்லலாம். ஆனால், கரடுமுரடான கற்களால் அமைக்கப்பட்ட குறுகலான மலைப்பாதையில் வானத்தை நோக்கி செங்குத்தாக ஏறுவதைப்போன்று 6000 அடிகள் நாங்கள் ஏறவேண்டியதாக இருந்தது. சற்று கால் இடறி கீழே விழுந்தாலும் நாம் அதல பாதாளம் செல்ல வேண்டியதுதான். அந்த பாதளத்தில்தான் கங்கை நதி பேரிரைச்சல் போட்டு ஓடுகின்றது.
|
|
இமயமலைகளில் உள்ள ஹரித்துவாரம், ரிசிகேசம், லால்டாங் போன்ற இடங்களில் தேவ ஊழியத்தை செய்து முடித்திருந்த நாங்கள் இமயமலைகளில் சுமார் 12000 அடி உயரமுள்ள கேதார்நாத்திலும் இறுதியாக தேவனுடைய ஊழியத்தை செய்து திரும்பிவிட ஆவல் கொண்டோம். அந்த ஆவல் கர்த்தருக்கும் பிரியமான ஒன்றாகத்தான் இருந்திருக்கின்றது என்பதை நாங்கள் கண்டோம். காரணம், நாங்கள் கேதார்நாத் சென்ற நாள்தான் அங்கு பயணம் செய்ய கடைசி நாள். அடுத்த நாளே கேதார்நாத் கோயில் பனி பொழிவின் காரணமாக யாத்ரீகர்களுக்கு மூடப்பட்டுவிட்டது. அடுத்து வந்த 6 மாத காலங்களுக்கு அது மூடியே இருக்க அரசாங்கம் ஆணை பிறப்பித்துவிட்டது.
நாங்கள் கர்த்தருடைய ஊழியத்திற்குத் தேவையான ஹிந்தி மொழி துண்டு பிரதிகளை ஆயத்தப்படுத்திக் கொண்டு பிரயாணத்திற்கு தயாரானோம். 12,000 அடி உயரமான பனி உறைந்து கிடக்கும் பகுதிக்குச் செல்லுவதால் அந்த இடத்திற்குத் தேவையான கம்பளி ஆடைகளை எல்லாம் நாங்கள் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டோம். கேதார்நாத்திற்கு பயணம் மேற்கொள்ளுவதற்கு முந்தைய தினம் ரிசிகேசத்திலுள்ள கம்பளி விற்பனை செய்யும் கடைகளில் இரவின் பிந்திய நேரத்தில் எங்களுக்கு தேவையான கம்பளி காலுறைகள், பனி குல்லா, ஒரு கம்பளி போர்வை போன்றவற்றையும் நாங்கள் வாங்கினோம். அன்று தீபாவளிக்கு முந்தைய நாள். மக்களுடைய ஆனந்தக் களிப்பையும், பஜார் கடைகளின் ஜோடனைகளையும் கண்கொண்டு பார்க்க இயலாது.
கேதார்நாத் செல்லுவதற்கான எங்கள் பஸ் டிக்கெட்டுகளை முன்கூட்டியே நாங்கள் வாங்கிக்கொண்டோம். பல்லாண்டு காலத்திற்கு முன்பாக நான் பத்திரிநாத் என்ற இடத்திற்கு தேவ ஊழியத்தின் பாதையில் சென்றபோது இருந்த பஸ் கட்டணத்தைவிட 8 மடங்குகள் பஸ் கட்டணம் உயர்ந்திருப்பதை நான் கவனித்தேன். பணத்திற்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. ஒரு திருப்தியான உணவை சாப்பிட நபர் ஒருவருக்கு ரூபாய் 32 கூட ரிசிகேசத்தில் ஒரு நாள் ஆனதை நான் இப்பொழுது நினைவுகூறுகின்றேன். தங்கும் விடுதி செலவிலிருந்து உண்ணும் ஆகாரம் வரை எல்லா செலவுகளும் அந்த இடங்களில் விஷம் போல ஏறிக்கிடக்கின்றது.
எங்கள் சுவிசேஷ பயணத்தை நாங்கள் தொடர்வதற்கு முன்பாக நாங்கள் இருவரும் தேவ சமூகத்தில் ஊக்கமாக ஜெபித்தோம். "கர்ணம் தப்பினால் மரணம்" என்ற மரண நிழலின் பாதை அல்லவா அது. சற்று டிரைவர் ஏமாந்தால் போதும் ஒரு நபர் கூட பஸ்ஸில் உயிர் பிழைப்பது கடினம். "பஸ் சென்ற பல பயங்கரமான மலை முகடுகளில் நான் எனது கண்களை மூடிக்கொள்ள வேண்டியதாக இருந்தது" என்று சகோதரன் நார்ட்டன் அவர்கள் பின்னர் என்னிடம் கூறினார்கள். அந்த பயங்கரமான பாதையில் கர்த்தர் எங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் ஊழியங்களை ஆசீர்வதிக்கவும் நாங்கள் மன்றாடுவது எங்களுக்கு அவசியமாக இருந்தது.
|
|
பொதுவாக அந்த மலை பிரதேசங்களில் பயணங்களை மிகவும் அதிகாலையிலேயே ஆரம்பித்து விடுகின்றனர். அப்படியே நாங்கள் பயணப்பட்டுச் செல்ல வேண்டிய பேருந்து அதிகாலையிலேயே நாங்கள் தங்கியிருந்த ரிசிகேசத்திலுள்ள ஆந்திர இந்து ஆச்சிரமத்திற்கு வந்துவிட்டது. எங்களுடன் மற்றொரு பயணியும் வந்தார். அவர் பெங்களூரைச் சேர்ந்தவர். தான் மரிப்பதற்கு முன்பாக கேதாரத்தில் எழுந்தருளிய கேதார ஈசுவரரை கடைசியாக தரிசிக்க வருவதாக அவர் எங்களிடம் கூறினார். அவர் நல்ல வயது முதிர்ந்தவர். ஆனால் வைராக்கியமான இந்து பக்தர்.
மூட்டைகளோடும், முடிச்சுகளோடும் மக்கள் கூட்டம் பேருந்தில் நிரம்பி வழிந்தது. ஆனால் எங்கள் மூவருக்கும் இடம் உள்ளேயே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. லாரிக்குள் மூட்டைகளுக்கு நடுவே இருப்பது போல நாங்கள் அமர்ந்து கொண்டோம். எங்களை ஏற்றியதுதான் தாமதம் ஒரு இடத்தில் கூட பேருந்தை நிறுத்தாமல் டிரைவர் வெகு வேகமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். இமயமலைக் காடுகள் வழியாக பேருந்து விரைந்து ஓடிற்று. ரிசிகேசத்திலிருந்து ஒரே மலை ஏற்றம்தான்.
|
| கௌரிகுண்டம் நோக்கிய பாதையில் |
|
டிரைவர் பேருந்தை வெகு வேகமாக ஓட்டி வந்து பொழுது நன்கு புலர்ந்து வரும் வேளையில் இமயமலையின் அடர்ந்த காடுகள் நிறைந்த பயணத்தை முடித்து சமதரை வழியாக வாகனத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். கட்வால் மலை பிரதேசத்தின் முக்கியமான பட்டணமான ஸ்ரீநகர் என்ற பட்டணத்தில் பேருந்தை காலை சிற்றுண்டிக்காக டிரைவர் நிறுத்துவார் என்று பேருந்து பயணிகள் யாவரும் எதிர்பார்த்தோம். ஆனால், பேருந்து ஓடிக்கொண்டே இருந்தது. ருத்ரபிரயாகை என்ற இடத்தை கடந்து ஓரிடத்தில் பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கு காலை ஆகாரத்தை முடித்த பின்னர் நண்பகல் 2 மணி சுமாருக்கு சந்திரபுரி என்ற இடத்தில் மத்தியான உணவுக்காக பேருந்தை டிரைவர் நிறுத்தினார். இமயமலையில் சந்திரபுரி ஒரு அழகான சிறிய பட்டணம். கேதார்நாத்திலிருந்து ஓடி வரும் மந்தாகினி நதி பட்டணத்தின் ஒரு பக்கமாக ஓடுகின்றது. நதியின் குறுக்காக ஒரு பெரிய பாலம் உள்ளது. நாங்கள் உணவருந்திய உணவு விடுதியின் இருக்கைகளில் சில சுவிசேஷ பிரதிகளை அப்படியே ஜெபத்தோடு வைத்து வந்தோம்.
மறுபடியும் பேருந்து புறப்பட்டது. மலைகளில் பேருந்து செங்குத்தாக ஏறுவதும் பிறகு ஒரேயடியாக கீழே இறங்குவதும் திரும்ப மேலே செல்லுவதும் பின்னர் சமதரை வழியாக ஓடுவதுமான பேருந்தின் ஓட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு போல இருந்தது. சிறிதும் பெரிதுமான இமயமலை கிராமங்கள், அடுக்கடுக்கான இமயமலைத் தொடர்கள் அதை எல்லாம் கடந்து அப்பால் நித்திய வெண்பனி சிகரங்கள் போன்றவை கடவுளற்ற நாஸ்தீகனாக ஒரு மனிதன் இருந்தாலும் அவைகளைப் பார்க்கும் போது "தேவன் ஒருவர் மெய்யாகவே உண்டு, அவர் சர்வவல்லவர்" என்பதை தனக்குள்ளாகச் சொல்லிக் கொள்ள நன்கு வகை செய்துள்ளது. சமதரையில் ஓடிக்கொண்டிருந்த எங்கள் பேருந்து மடமடவென்று ஒரு பெரிய மலையை சுற்றி சுற்றி ஏறி அதின் உச்சியில் வந்து நின்றது. மாலை அப்பொழுது 4 மணி இருக்கலாம். அந்த இடத்தின் பெயர் குப்தகாசி என்பதாகும். மலையின் மேல் உச்சியில் அந்த குப்தகாசி உள்ளது. பார்க்க அழகாக இருக்கின்றது. இமயமலைத் தொடர்களுக்கு அப்பால் வெள்ளியால் சாந்து பூசப்பட்டது போல நித்திய வெண்பனி சிகரங்கள் மாலைச் சூரியனின் ஒளியில் வெட்டிப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. ரஸ்தா ஓரமாக கொஞ்சம் டீ கடைகளும், பழக்கடைகளும் உள்ளன. பேருந்திலிருந்த பயணிகள் தேநீர் அருந்தி சற்று நேரம் அங்கு வெளியே நின்றனர். அந்த அழகிய குப்தகாசியை நீங்களும் காண வேண்டும் என்பதற்காக ஒரு புகைப்படம் எடுத்து வந்தேன். அதை நீங்கள் இங்கு காணலாம்.

திரும்பவும் பேருந்து கிளம்பிச் சென்றது. மாலை நேரம் ஆக ஆக இமயமலை கிராம காட்சிகளும், வெண்பனி மலை சிகரக்காட்சிகளும் கண்கொள்ளா பரவச ஆனந்த காட்சிகளாக இருந்தாலும் அதை எல்லாம் எடுத்து விழுங்கிவிடுவது போல பயங்கரமான மலை ஏற்றங்களும், பயமும், கலக்கமும் அந்த மாலை நேரம்தான் அதிகரித்தது. சில இடங்களில் செங்குத்தான மலை உச்சி விழிம்புகளில் பேருந்தின் நான்கு டயர்கள் மாத்திரம்தான் தொட்டுச் சென்றன. பேருந்து செல்லக்கூடிய பயங்கரமான மலைப் பாதையை தூரத்திலேயே நமது கண்கள் சில இடங்களில் கண்டு கொள்ளுகின்றன. அந்த இடங்களில் பேருந்து செல்லும் பொழுதெல்லாம் நமது கால்களும், கைகளும் சற்று உதறத்தான் செய்கின்றன. எப்பேர்ப்பட்ட தைரிய நெஞ்சினனாக இருந்தாலும் அந்த இடங்களில் அவனது மகிழ்ச்சி நிலை தடுமாறாமல் இருக்க இயலாது.
சூரியன் அஸ்தமித்து சற்று நேரத்திற்கெல்லாம் நாங்கள் சோன் பிரயாக் என்ற இடத்தை எட்டிப் பிடித்தோம். நல்ல குளிரான இடம். மக்கள் ஆங்காங்கு உட்கார்ந்து நெருப்பு மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். கொஞ்சம் வாடகை கார்களும் ஒன்றிரண்டு பேருந்துகளும் அங்கே நின்று கொண்டிருந்தன. குதிரை லாயங்கள் போல நீண்ட ஷெட்டுகளையும், சில சிறிய கட்டிடங்களையும் அங்கு காண முடிந்தது. "சுவர்ண கங்கா" என்ற நதியும், கேதார்நாத்திலிருந்து ஓடி வரும் மந்தாகினி நதியும் இங்கு சங்கமமாகிறது. இந்த சோன் பிரயாக் என்ற இடத்திலிருந்து எங்கள் பேருந்து 3 மைல்கள் தூரம் ஓடிய பின்னர் கௌரிகுண்ட் என்ற இடத்தை வந்து அடைந்தது. கௌரிகுண்டத்தை நாங்கள் வந்து சேரும்போது ஒருவர் முகத்தை ஒருவர் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு இருள் சூழத் தொடங்கியது.
|
|
கேதார்நாத் புனித யாத்திரை தொடங்குவோர் இந்த அடிவார கௌரிகுண்டத்திலிருந்துதான் தங்கள் பிரயாணத்தை தொடங்க வேண்டும். மிகவும் குளிரான இடம். இந்த கௌரி குண்டத்தில் இந்து யாத்ரீகர்கள் தங்க வசதியாக நிறைய கட்டிடங்கள் உள்ளன. யாத்ரீகர்கள் தங்கள் வசதிக்கேற்ப பணம் கொடுத்து தங்கிக் கொள்ளலாம். எங்களுடன் பயணம் செய்த ஒரு உயரமான மனிதர் நாங்கள் இருவரும் ஊருக்குப் புதியவர்கள் என்பதை அறிந்ததும் தன்னுடன் அழைத்துச் சென்று ஒரு சிறிய விடுதியில் தங்க வைத்தார். அந்த மனிதரும் எங்களுடன் தங்கிக் கொண்டார். அவர் ஆண்டுதோறும் தவறாது கேதாரக் கடவுளை தரிசிக்க வருவதாக எங்களிடம் பெருமையாக பேசிக் கொண்டார். எங்கள் பங்காக விடுதிக்கட்டணம் ரூபாய் 20 கொடுத்தோம் என்று நினைக்கின்றேன். (ஒரு இரவுக்கு மாத்திரம்) விடுதி என்றதும் பெரிய கட்டிடம் என்று நினைத்து விடாதேயுங்கள். மூங்கில் தட்டிகளால் மறைக்கப்பட்ட ஒரு சிறிய அறை மாத்திரமே. எங்கள் விடுதியை ஒட்டினாற் போலவே மந்தாகினி நதி பேரிரைச்சல் போட்டு ஓடிக்கொண்டிருந்தது. விடுதிக்கு வந்த உடன் பகல் முழுவதும் எங்கள் பிரயாணத்தை ஆசீர்வதித்த கர்த்தருக்கு முழங்காலூன்றி ஜெப விண்ணப்பத்தை ஏறெடுத்தோம்.
அதிகாலை முதல் இரவு வரை பேருந்தில் பயணம் செய்து வந்திருந்தபடியால் எங்கள் சரீரம் மிகவும் களைப்பும், ஆயாசமுமாக இருந்தது. எங்கள் களைப்பை போக்கிக் கொள்ள வசதியாக எங்கள் விடுதிக்கு அருகிலேயே வெந்நீர் ஊற்றின் சுடு நீர் ஒரு பள்ளத்தில் விழுகின்றது. மக்கள் அதில் குளிக்க வசதியாக கற்கள் தளவரிசைப்படுத்தப் பட்டுள்ளது. அந்த வெந்நீர் ஊற்றின் பெயர்தான் கௌரிகுண்டம். அந்த கௌரிகுண்டத்தின் பெயரில்தான் அந்த இடமும் அழைக்கப்படுகின்றது. நாங்கள் இருவரும் எங்களுக்கு புதிதாக அறிமுகமான அந்த உயரமான மனிதரும் அந்த வெந்நீர் ஊற்றில் நன்றாகக் குளித்தோம். அந்த சுடு நீர் ஊற்றுக்கு சுமார் 20 அடி தூரத்தில்தான் மந்தாகினி என்ற கங்கை நதி பனி ஆறாக ஓடுகின்றது. அதில் கைவைக்க முடியாத குளிர். ஆனால் அடுத்த கோணத்தில் கொதி நீர் ஊற்று. தண்ணீர் விழும் இடத்தில் கைவைக்க முடியாத அளவு சூடு. தேவனுடைய படைப்பின் மாட்சியைப் பாருங்கள்! இரா முழுவதும் குளித்துக் கொண்டே இருக்கலாம் போல எங்களுக்கு இருந்தது. அத்தனை இதமாக உள்ளது.
இவ்விதமான வெந்நீர் ஊற்றுகள் அதிக குளிரான இடங்களில் இருப்பதை நாம் காணலாம். நேப்பாள நாட்டிலும் இந்தியாவில் பத்ரிநாத் உட்பட பிற இடங்களிலும் அவைகள் உள்ளன. அவற்றை நான் பார்த்திருக்கின்றேன். ஸ்நானம் செய்தும் உள்ளேன். தேவ எக்காளத்திலும் அதை நான் குறிப்பிட்டுள்ளேன். அவைகள் எல்லாம் தேவனுடைய அதிசயமான படைப்பின் மாட்சி! ஆனால், தந்திர மாந்தர் கட்டுக் கதைகளால் அந்த வெந்நீர் ஊற்றுகளை மக்களிடம் பணம் பறிப்பதற்காக திசை திருப்பிவிட்டிருப்பதுதான் நமக்கு கவலையைத் தருகின்றது.
|
| கௌரிகுண்டத்தில் நாங்கள் கழித்த இரவு |
|
கௌரிகுண்டத்தில் நாங்கள் இருவரும் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் செலவிட்ட இராக்காலம் என்றும் எங்கள் நினைவில் இருக்கும். அந்த சின்ன விடுதியின் சிறிய மாடியில் நாங்கள் படுத்திருந்தோம். எங்களது தலைமாட்டிற்கு சில அடி தூரத்தில் மந்தாகினி நதி பேரிரைச்சல் போட்டு ஓடிக்கொண்டிருந்த சத்தம் இரா முழுவதும் எங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. எங்களது கால்மாட்டிற்கு சில அடிகள் தூரத்தில் கௌரிகுண்டத்தின் கொதி நீர் ஊற்றுத் தண்ணீர் விழுந்து கொண்டிருந்தது. ஆனால் அதின் சத்தம் கேட்கவில்லை. ஊரைச்சுற்றிலும் வான் உயர்ந்த இமயமலைத் தொடர்கள். கடுங்குளிர் காரணமாக எங்களுடன் கொண்டு சென்றிருந்த எங்கள் கம்பளி வஸ்திரங்கள் எங்களுடைய குளிரை தாங்குவதாகத் தெரியவில்லை. அந்த நேரம் விடுதிக்காரர் கொடுத்த ரசாய் மிகவும் கை கொடுத்து உதவியது. சகோதரன் நாட்டன் அவர்கள் எங்கள் இருவருக்கான படுக்கைகளை ஒழுங்கு செய்தார்கள். பின்னர் நாங்கள் ஜெபித்துப் படுத்துக் கொண்டோம். அவர்கள் சற்று நேரத்திற்கெல்லாம் தூங்கத் தொடங்கிவிட்டார்கள். எனக்கு தூக்கம் அத்தனை எளிதாக வரவில்லை. எனது வீட்டு படுக்கையைத் தவிர்த்து வெளியூர்களில் நித்திரை செய்வதென்றால் எனக்கு சற்று சிரமமான காரியம்தான். ஆனால், ஒரு ஆசீர்வாதமான காரியம், அப்படி தூக்கம் வராவிட்டால் அந்த நேரத்தை ஜெபமணி நேரங்களாக்கிக் கொள்ளுவேன். கர்த்தருக்கே துதி உண்டாகட்டும். நான் மூடியிருந்த விடுதிக்காரரின் கம்பளி ரசாயும் கொஞ்சம் வாசனை (நாற்றம்) வீசுவதாக இருந்தது. எங்களைப்போன்று எத்தனை பேர் அதை பயன்படுத்தியிருப்பார்கள்! இரவு கௌரிகுண்டம் ஊரே உறக்கத்தில் இருந்த நள்ளிரவு ஜாமங்களில் அறைக்கு வெளியே நான் வந்து கருமையான இமயமலை தொடர்களையும், மந்தாகினி நதியையும், வெந்நீர் ஊற்றையும் பார்த்து அவற்றின் சிருஷ்டிகராம் கர்த்தரைத் துதித்தேன். தம்முடைய நாம மகிமைக்கென்று எங்களை அந்த இடம் வரை அழைத்து வந்த அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுத்தேன்.
|
| ஸோன்சிங் என்ற துயர மனிதன் |
|
மறுநாள் அதிகாலையிலேயே நாங்கள் கண் விழித்துக் கொண்டோம். கடுங்குளிர் வாட்டுவதாக இருந்தாலும் அந்த நேரத்திலேயே கௌரிகுண்டம் சென்று வெந்நீர் ஊற்றில் நன்றாக ஸ்நானம் செய்து கொண்டோம். பின்னர் எங்களுடைய கம்பளி ஆடைகளை நன்கு உடுத்திக் கொண்டு கர்த்தர் எங்களுடைய சிறிய ஊழியத்தை ஆசீர்வதிக்கும்படியாக அவர் பாதத்தில் எங்களை ஒப்புவித்து ஜெபித்துப் புறப்பட்டோம். நாங்கள் கௌரிகுண்டம் ஊரைத் தாண்டி மந்தாகினி நதிக்கரை ஓரமாக மேட்டிற்கு வந்தோம். அங்கே நிறைய போனிகளும் (Pony) (மட்டக் குதிரைகளும்) கேதார்நாத் செல்லும் யாத்ரீகர்கள் பலரும் நடுக்கும் குளிரில் எங்களைப்போல குளிர் ஆடைகளை நன்கு அணிந்து கொண்டு நிற்பதைக் கண்டோம். அந்த யாத்ரீகர்கள் குதிரைக்காரர்களோடு பேரம் பேசிக்கொண்டிருந்தனர். பெரும்பாலான மக்கள் குதிரைகளிலேயேதான் கேதாரம் போகின்றனர். எங்களுக்கும் குதிரைகளில் செல்லத்தான் மிகவும் ஆசையாக இருந்தது. ஆனால் குதிரை கூலி ஆள் ஒன்றுக்கு ரூபாய் 500 என்றதும் எங்கள் மட்டாக கர்த்தருக்கு துதி செலுத்திவிட்டு நடக்க ஆரம்பித்துவிட்டோம். சில ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாய் 65 ஆக இருந்த கூலி இப்பொழுது 8 மடங்குகள் அதிகரித்துவிட்டதாக கேள்விப்பட்டோம். வசதி இல்லாத ஏழை எளிய மக்கள் கால் கடுக்க நடந்தேதான் செல்லுகின்றனர்.
குதிரையில் பயணம் செய்ய பெலனற்ற விருத்தாப்பியரான பணக்காரர்கள் தண்டியிலோ அல்லது கண்டியிலோ செல்லுகின்றனர். தொட்டில் கட்டி அதில் ஆளை வைத்து நல்ல ஜவான் போன்ற உடல் கட்டுடைய 4 பேர் கைகளில் வலுவான தடி ஊன்றி தூக்கிச் செல்லுவதை "தண்டி" என்றும், நாற்காலி போன்ற கூடையில் நபரை உட்கார வைத்து தனி மனிதர் ஒருவர் தனது முதுகில் தூக்கிச் செல்லுவதை "கண்டி" என்றும் அழைக்கின்றனர். நான்கு பேர் தூக்கிச் செல்லும் "தண்டி" பார்ப்பதற்கு அழகாக இருக்கின்றது. அந்த நான்கு பேரும் தங்கள் கால்களை வெகு நேர்த்தியாக அடிமேல் அடி எடுத்து வைத்துச் செல்லும் நடை ராணுவ ஜவான்கள் செல்லுகின்ற காட்சியாக உள்ளது. ஒரு வயதான பாட்டியை "கண்டியில்" கொண்டு செல்லும் காட்சியை நீங்கள் இங்கு காண்பதுடன் குதிரை சவாரி போகும் யாத்ரீகர்களின் காட்சியையும் காணலாம்.


குதிரை சவாரியும் அத்தனை சொகுசு சவாரி அல்ல. குதிரைமேல் உட்கார்ந்திருப்பவரின் உடலை முன்னும் பின்னும் ஆட்டி அசைத்துப் புண்ணாக்கிவிடும் சவாரி அது. கௌரிகுண்டத்திலிருந்து கேதாரம் வரை செல்லும் 14 கி.மீ. தூரப்பாதையானது கரடு முரடான கற்களாலேயே தளவரிசை போடப்பட்டுள்ளதால் அந்தப் பாதையில் செல்லும் அனைத்து பயணங்களும் மகா கடினமான சித்திரைவதை செய்யும் பயணங்களாகும்.
நாங்கள் தேவனுடைய ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷ பிரசுரங்களுடன் புறப்பட்டோம். வழியில் நாங்கள் சந்தித்தவர்களுக்கு எல்லாம் சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்துக் கொண்டே செல்லவில்லை. அது மிகவும் ஆபத்தான காரியம் மட்டுமல்ல அந்தச் செயல் கர்த்தருக்கு மகிமையைக் கொண்டு வராது என்பதையும் நாங்கள் எங்கள் மட்டாக நன்கு உணர்ந்திருந்தோம். எனினும் சில தனித்த சந்திப்புகளில் யாத்ரீகர்களுக்கு கர்த்தருடைய பிரதிகளை நாங்கள் உள்ளத்தின் பாரத்தோடும், ஜெபத்தோடும் கொடுக்கவும் தயங்கவில்லை.
கௌரிகுண்டத்திலிருந்து நாங்கள் புறப்பட்டு வந்த கொஞ்ச நேரத்திற்குள்ளாக ஒரு துயரமான காட்சியை நாங்கள் காண நேர்ந்தது. கேதார்நாத் செல்லும் யாத்ரீகர்களுக்கு வசதியாக பாதை ஓரத்தில் டீ கடை வைத்திருந்த ஒரு மனிதனுடைய கடை முற்றிலும் தீயினால் எரிந்து தணிந்து கிடந்தது. பாதி எரிந்து போன துணிகள், மற்றும் இதர பொருட்களிலிருந்து அந்த காலை நேரம் புகை எழும்பிக் கொண்டே இருந்தது. அந்த சிறிய கடையின் சொந்தக்கார மனிதன் "ஸோன்சிங்" ஒரு குழந்தையைப்போல கண்ணீர்விட்டு அழுது கொண்டிருந்தான். கண்ணீர் அவனது கண்களிலிருந்து வடிந்தது. தனது 6 மாத கால வருமானம் எல்லாம் போய்விட்டது என்றும் தன்மேல் பொறாமை கொண்ட குதிரைக்காரர்கள் இரவோடு இரவாக தனது கடைக்கு நெருப்பு வைத்துவிட்டார்கள் என்றும் கூறினான். அவனுக்கு ஆறுதல் கூறி அவன் சாப்பிட எங்கள் வசமிருந்த தின்பண்டங்களையும், அவன் படித்து ஆறுதல் அடைய சில தேவனுடைய சுவிசேஷ பிரதிகளையும் அவனுக்குக் கொடுத்துச் சென்றோம்.
|
| ராம்பாடா நோக்கி................................. |
|
கௌரிகுண்டத்திலிருந்து கேதார்நாத் செல்லும் பாதை அத்தனை இலகுவான பாதை என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். 14 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்தப் பாதை ஆரம்ப முதல் முடிவு வரை ஒரே ஏற்றம்தான். கொஞ்ச தூரம் வரை சமதரை என்ற பேச்சுக்கே அங்கு இடம் கிடையாது. ஒவ்வொரு மைல் ஏற்றத்திற்கும் ஒரு முழுமையான ஆயிரம் அடிகள் உயரம் கூடிக்கொண்டே இருக்கின்றது. கேதார்நாத்தை எட்டிப் பிடிக்கும்போது 11,750 அடிகள் ஆகிவிடுகின்றது. உயரம் போகப் போக பிராண வாயு சற்று குறைவுபடுவதால் நாம் சுவாசிப்பது சற்று கடினமாக உள்ளது. எங்கள் வலது கைப்பக்கத்தில் அதல பாதாளம் உள்ளது. சற்று ஏமாந்தால் போதும் நமது ஜீவனற்ற சடலத்தைக்கூட மேலே கொண்டு வர இயலாது. அந்தக் கெடு பாதாளத்தில் மந்தாகினி நதி ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்த மந்தாகினி நதி கங்கை நதியின் ஒரு உப நதியாகும். வலது கைப்பக்கம் வானளாவிய இமயமலைத் தொடர் உள்ளது. அதின் அடர்ந்த காடுகளில் இமயத்தின் நானாவித பறவைகளின் சத்தமும், வண்டுகளின் ரீங்காரமும் விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. நாங்கள் சென்ற பயணப்பாதை எப்படிப்பட்டது என்பதை ஒரு படம் உங்களுக்குத் தெளிவுபடுத்தும். மூன்று யாத்ரீகர்கள் செல்லுகின்றனர். தொலைவில் வெண்பனி சிகரத்தை நீங்கள் காணலாம்.

எங்களுடைய கேதார்நாத் பிரயாணப் பாதை முழுவதும் ஆங்காங்கு தேவனுடைய சுவிசேஷ துண்டுப்பிரசுரங்களையும், சுவிசேஷப் பங்குகளையும் கற்கள் மேலும், பாறைகள் மேலும் யாத்ரீகர்களின் கண்களுக்குத் தெரியுமாறு நாங்கள் வைத்துக் கொண்டே சென்றோம். அவைகள் எல்லாம் மக்களால் பத்திரமாக எடுத்துச் செல்லப்படுவதையும், கவனமாக வாசிக்கப்படுவதையும் நாங்கள் கண்டு ஆவியில் களிகூர்ந்தோம். ஒரு வேளை நாம் இந்த அருமையான தேவனுடைய நற்செய்தியை அந்த மக்களின் கரங்களில் கொடுத்தால் வாங்க மறுப்பவர்களும் உண்டு. சிலர் ஆவலோடு வாங்கினாலும் கூட்டத்திலுள்ள ஒருவனில் தந்திர சாத்தான் புகுந்து "இவர்கள் எல்லாம் மேல்நாட்டுக் கைக்கூலிகள். அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மதத்தை இவ்விதமாக பிரச்சாரம் செய்கின்றனர்" என்று சொன்ன உடன் ஆசை ஆவலோடு கைப்பிரதிகளை நம்மிடம் இருந்து பெற்ற உள்ளங்களும் அப்படியே சோர்ந்து விடுகின்றன. ஆனால் இப்பொழுது அந்த வார்த்தைக்கே இடமில்லை அல்லவா?
கௌரிகுண்டத்திலிருந்து நான்காவது மைலில் ராம்பாடா என்ற ஒரு இடம் வருகின்றது. அங்கு நிறைய டீ கடைகள் எல்லாம் உள்ளன. ஆனால், நாங்கள் போகும்போது 95 சதவிதமான டீ கடைகள் எல்லாம் வெறுமையாகத்தான் கிடந்தன. காரணம், அடுத்த நாள் கேதார்நாத் கோயில் குளிர்காலம் ஆரம்பித்ததை முன்னிட்டு மூடிவிடும்படியாக உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுவிட்டது. அதின் காரணமாக டீ கடைக்காரர்கள் எல்லாரும் தங்கள் கடைகளை காலி செய்துவிட்டு போய்விட்டனர். அங்கிருந்த ஒரு டீ கடையில் எங்கள் பசியை ஆற்றிக் கொண்டு பயணத்தை தொடர்ந்தோம். ராம்பாடாவில் கொஞ்சம் பேருக்கு சுவிசேஷ பிரதிகளை வழங்கினோம். இந்தப்படத்தில் நீங்கள் காண்கின்ற ஆட்டுக்குட்டியை தன் கரங்களில் வைத்துள்ள தம்பியும் எங்களிடம் சுவிசேஷம் பெற்றவன்தான்.

ராம்பாடாவில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் கொஞ்சம் யாத்ரீகர்களையும் நீங்கள் காணக்கூடும்.

நாங்கள் மத்தியான ஆகாரம் அருந்திய ராம்பாடா டீ கடைக்கார தம்பிமார்கள் இருவருக்கும் சுவிசேஷ பிரதிகளையும், சுவிசேஷ பங்குகளையும் நாங்கள் கொடுக்கத் தவறவில்லை. அவர்கள் இருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. காரணம், தமிழ்நாட்டிலிருந்து நாங்கள் வந்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல தமிழ் மக்கள் நல்ல அன்புள்ளம் கொண்டவர்கள் என்பதும் அவர்களுக்கு சற்று நேரத்தில் நன்கு புரிந்து கொண்டது. அவர்கள் கடையில்தான் நாங்கள் எங்கள் பழுவான கம்பளி போர்வை போன்றவற்றை வைத்துவிட்டு கேதார்நாத்திற்குச் சென்றோம்.
|
|
நாங்கள் செல்லும் வழியில் தேவனுடைய சுவிசேஷ பிரதிகளை மறைவாக ஆங்காங்கு விட்டுச் செல்லுவதை நான் ஏற்கெனவே குறிப்பிட்டேன். அப்படி வைத்த பிரதிகளையும் சுவிசேஷ பங்கு ஒன்றையும் ஒரு பெண் ஒருத்தி எடுத்து ஆவலோடு வாசித்து பின்னர் தன் கரத்திலேயே அதை வைத்துக் கொண்டாள். அவளும் அவளது சிறிய மகளும் எங்களுக்கு முன்பாக விரைந்து நடந்து சென்று கொண்டிருந்தார்கள். எனினும் பாதையின் கடினம் காரணமாக சில சமயங்களில் எங்களுக்கு பின்னாகவும் தங்கிவிடுவார்கள். ஆனால் நாங்கள் இளைப்பாற உட்காரும் நேரத்தில் அவர்கள் எங்களை முந்திக்கொண்டு போவதுமுண்டு. எனினும், அவர்கள் இருவரும் கஷ்டத்தோடு சென்று கொண்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. அந்தப் பெண்ணின் கணவனும், வயதான தாயாரும், பெண்ணினுடைய சிறிய பாலகனும் மிகவும் பின்னால் வந்து கொண்டிருந்தனர்.
ஓரிடத்தில் தனது மூட்டைகளையும், தனது ஊன்று கோலையும் ஒரு மேட்டுப்பகுதியில் அவள் போடுவதை நாங்கள் கவனித்தோம். அத்துடன் தனது கரத்திலுள்ள தேவனுடைய பிரசுரங்களையும் பூமியில் போட்டுவிட்டு கஷ்டத்தோடு மேட்டில் ஏறி தனது மூட்டையையும், கோலையும், தேவனுடைய பிரசுரங்கள் யாவையும் பத்திரமாக எடுத்துக்கொண்டு தனது சின்ன மகளோடு பயணத்தை தொடர்ந்தாள். அவள் ஆண்டவருடைய வார்த்தையை பூமியில் போட்ட உடனேயே எங்களுக்கு கலக்கமாக இருந்தது. எங்கே அதை அப்படியே போட்டுவிட்டு போய்விடுவாளோ என்று நாங்கள் பயந்தோம். ஆனால், அவள் அவை எல்லாவற்றையும் வெகு பத்திரமாக எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றாள். எங்களுடைய சந்தோசத்துக்கு அளவேது? அந்தப் பெண்ணின் கதையை மீண்டும் நான் பின்னர் தொடருவேன். அந்தப் பெண் ஓரிடத்தில் எனது சகோதரியின் கணவர் நார்ட்டன் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.

|
|
கேதார்நாத் பயணப்பாதையில் கருடச்சட்டி கடைசி இடமாக உள்ளது. இப்பொழுது நாங்கள் 11,000 அடிகள் உயரம் ஏறி வந்திருந்தோம். இங்கிருந்து கேதாரம் இன்னும் இரண்டரை கிலோமீட்டர் தொலைவுதான். குளிர் காற்று வெண்பனி சிகரங்களிலிருந்து வீசிய வண்ணமாக இருந்தது. கேதாரத்திலுள்ள தங்கள் தெய்வத்தை தரிசித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த மக்கள் "கேதார்நாத்ஜிக்கு - ஜெய்" என்று எங்களைப் பார்த்து குரல் எழுப்பினர். நாங்கள் பதிலுக்கு "ஈசா மசிஹிக்கு ஜெய்" (இயேசு கிறிஸ்துவுக்கு ஜெயம்) என்று மறு குரல் கொடுத்தோம். அந்தக் குரலை நாங்கள் அன்று பல தடவைகள் ஆரம்பத்திலிருந்தே எழுப்பிக் கொண்டுதான் வந்து கொண்டிருந்தோம்.
கருடச்சட்டியின் மலை உச்சியில் சில சாதுக்களும், சந்நியாசிகளும் தகரக் கொட்டகைகளில் இருப்பதைக் கண்டோம். கொட்டகைளின் உச்சியில் மஞ்சள் கொடி பறந்து கொண்டிருந்தது. வானத்தில் பறக்கும் கருடனுக்கு அங்கு ஒரு கோயில் இருப்பதால் அந்த இடத்துக்கு அந்தப் பெயர் ஏற்பட்டுள்ளது. கருடச்சட்டியை விட்டதும் ஓரளவு சமதரை வழியாகவே எங்கள் பாதை செல்லுவதாக தெரிந்தாலும் அதுவும் அப்படியே உயர்ந்து கொண்டேதான் போகின்றது. அந்த இடத்தில் மரம், செடி, கொடிகள் எதுவுமே இல்லை. ஆங்காங்கு எங்களை சுற்றி நிற்கும் மலைகளில் பனி விழத் தொடங்கிவிட்டதை நாங்கள் கவனித்தோம்.
|
மாயமாம் உலகை எனக்கு
நினைப்பூட்டிவிட்டதோர் சம்பவம் |
|
கருடச்சட்டியை தாண்டி நாங்கள் செல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் மேக மூட்டம் போட ஆரம்பித்துவிட்டது. ஒரு பெரிய மழையை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் சற்று நேரத்திற்குள்ளாக வெயில் அடித்து வானிலிருந்து ஜவ்வரிசியைப் போன்ற வெண்மையான உருட்சியான வஸ்துக்கள் எங்கள் மேல் பொழியத் தொடங்கினது. வானத்திலிருந்து மன்னா விழுவதைப்போல அவை விழுந்து கொண்டிருந்தது. எனக்கு ஒரே சந்தோசம், அப்படி விழுந்த ஜவ்வரிசி மணிகளை கையில் வாரி எடுக்கலாம் என்று நினைத்து ஆவலாகக் காத்திருந்தேன். ஆனால் அந்தோ, அவைகள் சற்று நேரத்திற்குள்ளாக அப்படியே தண்ணீராகக் கரைந்து எனது தேகத்தை நனைப்பதை கண்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். "பனி அப்படித்தான் விழுந்து மலைகளை மூடும். அதோ நாம் காண்கின்ற அந்த வெண் பனி மலைகள் எல்லாம் இப்படித்தான் ஆரம்பத்தில் ஜவ்வரிசியாக பனி விழுந்து பின்னர் வெள்ளிப் பனிமலைகளாக மாறிவிட்டன" என்று எனது சகோதரியின் கணவர் என்னிடம் கூறினார்கள். அது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
மானிட வாழ்வில் நாம் அனுபவிக்கும் அற்பமான மாயையின் இன்பங்கள் எல்லாம் அதைப்போலத்தான் உள்ளன என்பதை நான் அப்பொழுது அதிகமாக நினைவுகூர்ந்தேன். தேகத்தில் விழுந்ததும் ஜவ்வரிசி போன்ற வெண்மையான கவர்ச்சி சற்று நேரம் நீடிக்கின்றது. ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அது குளிர்ச்சியான தண்ணீராக மாற்றம் அடைந்து உடலை நனைக்கத் தொடங்கிவிடுகின்றது. "அற்ப நிமிஷத்தாசை காட்டியே அக்கினி கடல் தள்ளுவானே!" என்ற பாடல் அடி எத்தனை உண்மையானது பாருங்கள்!
|
| கேதாரநாதர் தரிசனம் செய்யவில்லையா? |
|
கேதார்நாத்தின் மிக அருகில் நெருங்க நெருங்க மழை சற்று பலமாக பெய்ய ஆரம்பித்தது. தேவகிருபையால் பாதைக்கு அருகாமையிலேயே ஒரு டீ கடை இருந்தது. நாங்கள் இருவரும் உடனே அந்த இடத்தினுள் சென்றோம். அங்கே கேதார்நாத் சென்றுவிட்டு வந்த சில யாத்ரீகர்களும், செல்லக்கூடியவர்களும் அமர்ந்திருந்தனர். குளிருக்காக நெருப்பு மூட்டப்பட்டிருந்தது. சிலர் தங்கள் தேகத்தை அங்கு சூடேற்றிக் கொண்டிருந்தனர்.
நான் சற்று முன்பு குறிப்பிட்ட பெண்ணும் அவளது சிறிய மகளும் அந்த நெருப்பண்டைதான் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரையும் பார்க்க மிகவும் பரிதாபகரமாக இருந்தது. பசியால் வாடிக் கொண்டிருப்பதை அவர்களின் முகங்கள் எடுத்துக் காண்பித்தது. அவர்கள் காசு இருந்தால்தானே ஏதாவது வாங்கி சாப்பிட முடியும்? அவர்கள் அருகில் இருந்தவர்கள் எல்லாரும் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
"நீங்கள் டீ ஏதாகிலும் குடித்தீர்களா?" என்று நான் அவர்களைக்கேட்டேன். "இல்லை, என் கைவசம் காசு எதுவும் கிடையாது. என் கணவர் பின்னால் வந்து கொண்டிருக்கின்றார்" என்றார்கள். தாயும், மகளும் மிகவும் களைப்புடன் காணப்பட்டார்கள். பசி மற்றும் களைப்பின் மிகுதியால் மயக்கமான ஒரு நிலையில் அவர்கள் இருந்தார்கள். உடனே அவர்கள் இருவருக்கும் டீ மற்றும் பிஸ்கட் வாங்கிக் கொடுத்து அந்தப் பெண்ணின் கையில் ரூபாய் 20 கொடுத்து உடனே ஆகாரம் அருந்த அன்புடன் கேட்டுக்கொண்டேன். (20 ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாய் 20 ன் மதிப்பு அதிகமாகும்) ஆரம்பத்தில் பணத்தை வாங்க மறுத்து பின்னர் மிகுந்த சந்தோசத்துடன் வாங்கிக் கொண்டார்கள். அந்த இரு ஜீவன்களும் சோர்ந்து, களைப்புற்று தடுமாறிக் கொண்டிருந்ததை அருகில் இருந்த எவரும் கண்டு கொள்ளவே இல்லை.
அந்த பெண்ணுக்கு நாங்கள் பாராட்டிய அன்பு சுற்றிலுமிருந்தோரை வியப்புக்குள்ளாக்கியது. நாங்கள் இருவரும் புறப்பட இருந்த நேரம் அந்த டீ கடைக்காரர் எங்களைப் பார்த்து "நீங்கள் கேதார நாதர் தரிசனம் செய்யாமலா திரும்பிச் செல்லுகின்றீர்கள்? கேதாரரை தரிசித்தவிட்டுப் புறப்படுங்கள்" என்றான்.
"இந்த பசியாயிருக்கும் உதவியற்ற ஏழைப் பெண்ணுக்கு நாங்கள் செய்த உதவியே எங்களுக்கு கேதாரருடைய தரிசனம் ஆகிவிட்டது. இதைவிட வேறு என்ன தரிசனம் எங்களுக்கு உலகில் தேவை?" என்று சொல்லி நாங்கள் புறப்பட்டோம். கேதார்நாத் எங்களுக்கு மிகவும் சமீபமாகவே இருந்தது. சுற்றிலும் பனி மூடிய மலைகளின் அடிவாரத்தில் அது காணப்பட்டது. எனினும் அங்கு போக மனமில்லாமல் பொழுது சாய்ந்துவிட்டபடியால் அந்த இடத்தை நீங்கள் காண்பதற்காக ஓரிரு புகைப்படங்கள் எடுத்துவிட்டு புறப்பட்டோம்.

இந்த சுவிசேஷ பயணத்தில் எனது சகோதரியின் கணவர் டி.ற்றி.நார்ட்டன் அவர்கள்தான் அதிகமான கஷ்டத்துக்கு உள்ளானார்கள். காரணம், எங்களுடைய பழுவான மூட்டையை கர்த்தருடைய நாம மகிமைக்காக அவர்கள்தான் சுமக்க வேண்டியதாயிற்று. தேவனுடைய பரிசுத்த ஊழியத்தை மிகவும் வாஞ்சையோடு நிறைவேற்றியவர்களும் அவர்களேதான். சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் கரத்தில் ஊன்றுகோல் பிடித்து நிற்கும் அந்த தேவ பிள்ளையையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

|
| வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி |
|
நாங்கள் கேதார்நாத் போய் சேர்ந்த அன்றைய தினம் கேதார்நாத்திலோ அல்லது இடையில் எங்கும் தங்காமல் ஒரே மூச்சில் அடிவாரமான கௌரிகுண்டத்திற்கு சென்று விடுவதென்று தீர்மானித்து விட்டோம். அன்று காலை சரியாக 6 மணிக்கு புறப்பட்ட நாங்கள் மாலை 4 மணிக்குத்தான் கேதார் வந்து சேர முடிந்தது. பாதையின் கஷ்டம் அப்படி. 14 கிலோ மீட்டர்கள் ஒரே செங்குத்து மலை ஏற்றம்தான். மனிதன் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப திரும்பத் திரும்ப பிறவிகள் எடுப்பான் என்பது இந்து மக்களின் நம்பிக்கை என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவின் நானா திசைகளிலிருந்து வரும் வசதியுள்ள யாத்ரீகர்களை கௌரிகுண்டத்திலிருந்து ஏற்றிச் செல்லும் குதிரைகளுக்கு அதுவேதான் கடைசி பிறவியாம். கௌரிகுண்டத்திலிருந்து கேதார்நாத்திற்கு செல்லும் அந்த குதிரைகள் களைப்பின் காரணமாக பெரும்பாடு படுகின்றன. அடுத்த பிறவி என்று அவைகளுக்கு ஒன்றுமே கிடையாதாம். உண்மைதான், அந்தப் பாதையின் கஷ்டம் அப்படிப்பட்டது.
கடைசியாக வாழ்வில் நாங்கள் ஒரு முறை அந்த கேதார்நாத்தைப் பார்த்து எங்கள் ஆவிக்குள் பெருமூச்சு விட்டு விட்டு 14 கிலோ மீட்டர் தூரமுள்ள எங்கள் இறங்குமுகமான பயணத்தை ஆரம்பித்தோம். ஓரிரு கிலோ மீட்டர் தூரம் வரவும் மேலே நான் குறிப்பிட்ட பெண்ணின் கணவர் தனது பாலகனை தோளில் சுமந்து கொண்டு வயதான தாயாருடன் மிகவும் களைப்புடன் தள்ளாடி தள்ளாடி வந்து கொண்டிருந்தார்கள். கையில் காசின்றி மாட்டிக்கொண்ட தனது மனைவி மற்றும் சின்ன மகளுக்காக அந்த மனிதனின் உள்ளம் அதிகமாக தத்தளித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அவர் தனது மனைவியைக் குறித்தும், மகளைக் குறித்தும் எங்களிடம் துயரத்துடன் கேட்டார். நாங்கள் அவரிடம் அவர்கள் கேதாரம் போய் பத்திரமாகச் சேர்ந்துவிட்ட விபரத்தையும் அவர்கள் இருக்கும் இடத்தையும் அவர்களுக்கு நாங்கள் செய்த அற்ப உதவியின் காரணமாக அவர்கள் நல்ல சந்தோசத்தோடு இருப்பதையும் கூறவே அந்த மனிதர் கோவென்று அந்த மலை உச்சியில் குழந்தையைப்போல கதறி அழ ஆரம்பித்துவிட்டார். என்னை அவர் அப்படியே கட்டிப் பிடித்து அழுதார். நாங்கள் அந்த இடத்தில் அவரை ஆற்றி தேற்றி அந்த பொன்னான சந்தர்ப்பத்தை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு கைவசம் இருந்த ஹிந்தி சுவிசேஷ பிரசுரங்கள் எல்லாவற்றிலும் வகைக்கு ஒன்றாகக் கொடுத்து சுவிசேஷ பங்கையும் கொடுத்து "இந்த பிரசுரங்களில் எழுதப்பட்டுள்ள இயேசு இரட்சகருடைய அன்புதான் உங்கள் மனைவிக்கு உதவி செய்ய எங்களைத் தூண்டிவிட்டது, அந்த இயேசு இரட்சகரையே நீங்களும் தெய்வமாக ஏற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பிரதிகளை எல்லாம் கருத்தாகப் படியுங்கள்" என்று கூறினோம். அவைகளை அவர் பத்திரமாக தன் வசம் எடுத்துச் சென்றார். தனது மனைவிக்கு நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப எங்களுக்குத் தர விரும்பினார். நாங்கள் அதை வேண்டாமென்று அன்புடன் கூறிவிட்டோம். கர்த்தர் அந்தக் குடும்பத்தை தமது வசனத்தின் மூலமாக பிடிப்பதற்காக எங்களை கேதாரம் கொண்டு வந்திருப்பார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காரணம், அந்த மனிதனின் மனைவியும் தேவனுடைய வார்த்தைகளை அத்தனை கவனமாக தன்னுடன் எடுத்துச் சென்றார்கள். அந்த மக்களுக்காக நீங்களும் ஜெபித்து வாருங்கள்.
|
| எங்கள் தனித்த இராக்கால பயணம் |
|
அந்த நாளின் பகற் காலத்தில் 10 மணி நேரங்கள் நடந்திருந்த நாங்கள் கட்டாயம் கேதார்நாத்தில் இராத் தங்கியிருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யாமல் பாதை இறக்கம்தானே, சீக்கிரமாக போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டு எங்கள் பயணத்தை தொடங்கினோம். வெகு விரைவாக நடந்தோம். எனது கால்களில் நான் அணிந்திருந்த மலை ஏற்றத்திற்கான சப்பாத்துக்கள் எனது கால் விரல்களில் கடுமையான வேதனையைக் கொடுத்துக் கொண்டிருக்கவே எனது நடை வெகுவாக தளர்ந்தது. ராம்பாடா வந்ததும் அங்கு டீ கடையில் நாங்கள் விட்டு வந்த பொருட்களை எடுத்துக் கொண்டு தேவனுடைய பிரசுரங்கள் இன்னும் சிலவற்றையும் அந்த கடையிலுள்ள வாலிப தம்பிமார்களுக்கு கொடுத்தோம். எங்களை அவ்விடத்தில் இராத்தங்க அவர்கள் வெகுவாக வற்புறுத்தியும் கேட்காமல் நாங்கள் எங்கள் பிரயாணத்தைத் தொடர்ந்தோம்.
கேதாரத்திலிருந்து அன்று கடைசியாக புறப்பட்ட பயணிகள் நாங்கள் இருவர் மாத்திரம்தான். எங்களுக்குப் பின்னால் புறப்பட்ட யாவரும் எங்களை முந்திக்கொண்டு போய்விட்டனர். இப்பொழுது நாங்கள் இருவரும் கடைசி பயணிகளானோம். வானில் நட்சத்திர ஒளியைத் தவிர்த்து எங்களது கரங்களிலுள்ள டார்ச் விளக்கின் ஒளி மட்டுமே. எங்கும் இருள் சூழ்ந்த அந்த காரிருள் வேளையில் எங்களுக்கு இடது கைப்பக்கத்தில் பாதாளத்தில் இரைச்சல் போட்டு ஓடிக்கொண்டிருக்கும் மந்தாகினி நதிக் கரை ஓரமாக நாங்கள் இயேசு அப்பாவுக்கு ஸ்தோத்திரம் செலுத்திக்கொண்டு வந்து கொண்டிருந்தோம். எனது கால் விரல்களின் வலி காரணமாக அடிக்கடி பாறைகளில் உட்கார்ந்து உட்கார்ந்து வந்தோம். எங்கள் கரத்திலிருந்த பிரகாசமான டார்ச் விளக்கு எங்களுக்கு அதிக பயன் உள்ளதாக இருந்தது. எனது சகோதரியின் கணவர் மிகவும் களைத்து தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் தூக்க மயக்கத்தில் சில சமயங்களில் பாதையின் இடது பக்கத்திலுள்ள கெடு பாதாளத்தின் விளிம்பு வரைகூட சென்ற நேரங்கள் பல உண்டு. கர்த்தர் ஒருவரே அந்த இரவில் எங்களைப் பாதுகாத்தார். பகல் முழுவதும் இரவிலும் கர்த்தருக்கு பொதி சுமக்கும் கழுதையாக அவர்கள்தான் பழுவான மூட்டையை தூக்கி வந்தார்கள். அவர்களுடைய பாடுகள் எல்லாம் கர்த்தருடைய ஞாபக புத்தகத்தில் உள்ளன. கர்த்தருக்கே துதி உண்டாகட்டும்.
இறங்கு முகமாக நாங்கள் நடந்து நடந்து கடைசியாக மலை உச்சியிலிருந்து பார்த்தபோது கௌரிகுண்டத்தின் ஊர் வெளிச்சம் மின்மினி பூச்சிகளின் வெளிச்சம்போல எங்களுக்குத் தெரிந்தன. எங்கள் சந்தோசம் அதிகரித்தது. ஆனால் எங்களுக்கு முன்னால் இருந்த மைல் கல்லைப் பார்த்தபோது நாங்கள் இன்னும் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தாக வேண்டும் என்பதைக் காட்டிற்று. மனதைத் தளரவிடாமல் வெளிச்சத்தின் சந்தோசத்தில் நடந்தோம். இறுதியாக தூரத்தில் குதிரைகள் உறுமிக்கொண்டும், பலமாக சுவாசித்துக்கொண்டு புல் மேயும் சத்தமும் அவற்றின் கழுத்தில் கட்டியுள்ள மணிகளின் ஓசையும் காற்றில் மிதந்து வரவே நாங்கள் எங்கள் டார்ச் விளக்கை அதற்கு நேராகப் போட்டுப் பார்த்தோம். அவைகள் கௌரிகுண்டத்தின் குதிரைக்கூட்டம்தான். பகல் முழுவதும் யாத்ரீகர்களை தங்கள் முதுகில் தூக்கிச் சுமந்து தங்கள் பணியை முடித்து நிதானமாக புல் மேய்ந்து கொண்டிருந்தன. குதிரைக்காரர்கள் அவற்றை அங்கு கட்டி வைத்திருந்தார்கள். கடைசிப்பிறவியில் இருந்த அந்தக் குதிரைகள் அதிர்ஷ்டசாலிகள்தான். குதிரைகளைக் கண்டதும் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உண்டானது. நாங்கள் இப்பொழுது கௌரிகுண்டத்திற்கு வந்துவிட்டோம். இரவு சுமார் 10 மணிக்கு நாங்கள் கௌரிகுண்டத்தின் தெரு வழியாக சென்றபோது அங்குள்ள மக்கள் எங்களை மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நாங்கள் கேதாரத்திலிருந்து வருவதை அறிந்ததும் அவர்களுக்கு திகைப்பு உண்டானது. யாரும் அந்த நேரத்தில் வருவதில்லையாம். சிங்கம் ஒன்றைத் தவிர எல்லா கானக விலங்குகளும் வழியில் இருப்பதாக ஒரு வாலிபன் கூறினான்.
கௌரிகுண்டத்தின் கடைகள் எல்லாம் அநேகமாக பூட்டப்பட்டுவிட்டன. பசி எங்களை கிள்ளுவதாக இருந்தது. அன்பின் தேவன் ஒரு டீ கடைக்கார மனிதனுடைய கண்களில் தயவு கிடைக்கச் செய்து அந்த மனிதன் எங்களுக்கு இரவு ஆகாரத்தை தயாரித்துக் கொடுக்க கிருபை செய்தார். அதற்குள்ளாக நாங்கள் கொதி நீர் குண்டத்தில் நன்கு ஸ்நானம் செய்து புண்ணாக வலி எடுத்துக்கொண்டிருந்த எங்கள் கால்களுக்கு கொதி நீர் ஓடி வரும் இடத்திலேயே நன்கு பரிகாரம் செய்து கொண்டோம். சுத்தமாக 28 கிலோ மீட்டர்கள் தூரம் அன்று பயணம் செய்திருந்த கால்கள் அல்லவா அவை! எங்களுக்கு அன்றைய தினம் நல்ல ஊழிய வாய்ப்புகளைக் கொடுத்து எங்கள் பிரயாணத்தையும் ஆசீர்வதித்து எங்களை கண்மணி போல காத்த கர்த்தருக்கு துதி செலுத்தி படுத்துக்கொண்டோம். மறுநாள் ரிசிகேசத்திற்கும் பயணப்பட்டு விட்டோம். காரணம், குளிர்காலம் தொடங்கி பனி பொழிவு ஆரம்பித்துவிட்டதால் கேதார்நாத் கோயில் மூடப்பட்டு கௌரிகுண்டத்து மக்கள் தங்கள் ஊரை காலி செய்து விட்டுப் புறப்படத் தொடங்கி விட்டனர். அடுத்து வரும் 6 மாத காலம் பனியின் பிடியில்தான் அந்த இடங்கள் இருக்குமாம்.
|
| ஒரு நல்ல பயனுள்ள தேவ ஊழியம் |
|
இந்த தடவை ரிசிகேசம், ஹரித்துவாரம், லால்டாங் கானக பகுதிகள், கேதார்நாத் போன்ற இடங்களில் எங்கள் மூலமாக நிறைவேற்றப்பட்ட சிறிய தேவ ஊழியங்களை கர்த்தர் எங்களுக்கு ஆசீர்வதித்து தந்தார். நூற்றுக்கணக்கான சுவிசேஷ பிரதிகள் ஜெபத்தோடு மக்களின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்தன. "என் வாயிலிருந்து புறப்படும் வசனம் வெறுமையாக திரும்பாது" (ஏசாயா 55 :11) என்ற தேவ வாக்கின்படி நாங்கள் ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் வழங்கிய கர்த்தருடைய வார்த்தைகள் ஏற்ற காலத்தில் அதைப் பெற்றுக்கொண்ட ஆத்துமாக்களில் கிரியை செய்யும் என்று உறுதியாக நம்புகின்றோம். கர்த்தர் கிரியை செய்யும்படியாக தொடர்ந்து ஜெபிக்கின்றோம். தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் அதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். எங்கள் இமயமலை தேவ ஊழியத்திற்காக ஜெபித்த, உதவி செய்த, எங்களுக்கு அன்பு செய்த அருமையான தேவப்பிள்ளைகள் யாவரையும் ஆண்டவர் எல்லா இகபர நன்மைகளினாலும் முடிசூட்டி ஆசீர்வதிக்க பரத்தை நோக்கி மன்றாடி வருகின்றோம்.
|
 |
|
நில்! கவனி!
லண்டன் பட்டணத்திற்கு வெளியே கல்லறை ஒன்றில் கீழ்க்கண்ட வாசகம் பொறிக்கப்பட்டுள்ளதாம்:-
"பாதையில் செல்லுவோனே, சற்று நின்று கவனித்துச் செல். இப்பொழுது நான் முடிவில்லாத நித்தியத்தில் இருக்கின்றேன். ஆனால், நீ நித்தியத்தில் இல்லாவிட்டாலும் அதின் பயங்கர விழிம்பில் இருக்கின்றாய் என்பதை திட்டமாக நினைவில் வைத்துக் கொள்" |
|
|