தேவப்பிள்ளையே "வாழ்வில் தனிமை" என்ற
கொடிய கசப்பின் பாத்திரம் உன் கரத்தில் உள்ளதோ?

ஒரு நாளின் முடிவில் அல்லது ஒரு பிரயாணத்தை முடித்து நீங்கள் வீடு திரும்பும்போது உங்கள் வீடு பூட்டப்பட்டு வீட்டின் முன் கதவில் ஒரு பெரிய பூட்டு உங்கள் முகத்துக்கு முன்பாக தொங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் காணும்போது உங்களுடைய உள்ளத்தின் உணர்வு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நான் அறிவேன். வீட்டின் தலை வாசலில் உங்களை வரவேற்கவோ அல்லது மார்புறத் தழுவி உங்களை முத்தமிடவோ யாரும் இல்லாத நிலையில் நீங்கள் எப்படியாக உள்ளம் குமுறுவீர்கள் என்பதை நான் அறிவேன். உங்களுடைய அலுவலை முடித்துவிட்டோ அல்லது உங்களுடைய தேவ ஊழியத்தை முடித்து திரும்பும்போதோ உங்களுடைய முழு வீடும் தூசி படிந்ததாகவும், அழுக்கானதாகவும் இருப்பதை காண்கையில் நீங்கள் எப்படியாக மனம் கலங்குவீர்கள் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் வீடு வந்ததும் உங்களுக்கு சூடான தேயிலைப் பானத்தையோ (Tea) அல்லது சூடான ஆகாரத்தையோ நீங்கள் புசிக்கும்படியாக உங்களுக்கு முன்பாக வைக்க வீட்டில் யாரும் இல்லாதபட்சத்தில் உங்கள் உள்ளம் எத்தனையாக தாங்கலடையும் என்பதை நான் அறிவேன். வீட்டில் பால் இல்லை. உங்களுக்கு டீ வேண்டுமானால் முதலாவது கடைக்குச் சென்று நீங்கள் பால் வாங்கி வரவேண்டும். சமைப்பதற்கு வீட்டில் காய்கறிகள் கிடையாது. நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது குளிர்பதனப் பெட்டியை (Fridge) முழுமையாக காலிபண்ணி சுத்தம் செய்துவிட்டு பெட்டிக்கு வரும் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டுச் சென்றீர்கள். இப்பொழுது நீங்கள் ஏதாவது புசிக்க வேண்டுமானால் முதலாவது கடைத் தெருவுக்குச் சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து சமையல் செய்து சாப்பிட வேண்டும் இல்லையேல் பசியோடும், பெருமூச்சோடும் பட்டினியாக படுக்கைக்குச் செல்ல வேண்டும். சில வேளைகளில் அன்பான அண்டை அயலகத்தார் உங்களை அழைத்து ஒரு வேளை ஆகாரம் கொடுப்பார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். சில ஆண்டு காலங்களுக்கு முன்னர் வீட்டிலும், உன் வாழ்விலும் சந்தோசமும், களிப்பும், ஆரவாரமும் ஆளுகை செய்தது. ஆனால், இப்பொழுது நினையாத திடீர் மரணத்தின் மூலமாக வீடு மரண வீட்டின் அமைதியாகிவிட்டது.

வியாதியாக நீங்கள் தனிமையில் படுத்திருக்கும்போது தங்கள் அன்பான கரத்தால் உங்களை அரவணைக்கவும், உங்களுக்காக ஒரு கோப்பை டீ தயாரித்து கொடுக்கவும், உங்களுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் கொடுக்கவும், உங்களுக்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொடுக்கவும், உங்களை உற்சாகப்படுத்தி, உங்களுக்கு உற்சாகமூட்டும் ஆறுதலான வார்த்தைகளைக் கூறவும் ஒருவரும் இல்லாதபட்சத்தில் நீங்கள் எப்படியாக உள்ளம் கலங்குவீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். உங்களை நேசிக்கும் உங்கள் அன்பான உறவினரும், அன்பர்களும் உங்கள் வியாதிப்படுக்கையில் உங்களைப் பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் போய்விடுவார்கள். அதின் பின்னர் நீங்கள் உங்கள் மட்டாக தனிமையில் வாடவேண்டியதுதான். ஜாண் பிரைட்டன் என்ற ஒரு கர்த்தருடைய பிள்ளையின் மனைவி தனது வியாதியின் கடுமை காரணமாக தன்னறிவு இழந்து கொண்டிருந்த நிலையில் அவர்களைப் பார்ப்பதற்காக வந்திருந்த அவரது நண்பர் அலெக்ஸாண்டர் என்பவர் அவரைப் பார்த்து "தனிமையின் கொடுமை எத்தனை கோரமானது என்பது எனக்குத்தான் தெரியும்" என்று அவரிடம் சொல்லுகின்றார். அலெக்ஸாண்டரின் மனைவி புற்று நோயால் மரித்துப்போனார்கள். அவருக்கு குழந்தைகள் இல்லை.

எல்லா உண்மையோடும், திறந்த உள்ளத்தோடும் நான் உங்களிடத்தில் சொல்லுகின்றேன் நானும் கூட தனிமையின் துயரக் கசப்பை மனங்குளிர அனுபவித்த ஒருவன் ஆவேன். 2004 ஆம் ஆண்டில் என் மனைவி உமா என்னைவிட்டு கடந்து சென்றுவிட்டார்கள். கல்லீரல் புற்று நோயால் அவர்கள் கடும் இன்னலுற்று இறந்தார்கள். நான் பிறப்பதற்கு முன்னர் எனது தகப்பனார் இறந்து போனார்கள். எனக்கு முன்பாக 2 சகோதரிகள் பிறந்து அவர்களும் சிறுமிகளாக இருக்கும்போதே மரித்துவிட்டார்கள். எனது தாயார் 1988 ஆம் ஆண்டு இறந்து போனார்கள். சில வேளைகளில் நான் தமாஷாக "நான் தகப்பனில்லாதவன், தாயில்லாதவன், சகோதரர்கள், சகோதரிகள் இல்லாதவன், மனைவியற்றவன், குழந்தையற்றவன். ஆயினும் ஆனந்தத்துக்குரிய காரியம், நான் தேவனற்றவன் அல்ல கர்த்தர் என்னோடு கூட இருக்கின்றார்" என்று சொல்லுவேன். அல்லேலூயா.

தேவனும், அவருடைய அன்பான பிள்ளைகளும் என்னை அன்பாக நேசித்து என்னுடன் பட்சமாக இருக்கின்றார்கள். காரணம், நான் தேவனுடைய ஊழியத்தில் இருக்கின்றேன். ஒவ்வொரு மாதமும் கர்த்தருடைய ஊழியத்தினிமித்தமாக 15 முதல் 20 நாட்கள் நான் வெளியே போய்விடுகின்றேன். நான் ஊழியத்தின் பாதையில் செல்லும் இடங்களில் தேவனுடைய பிள்ளைகளின் வீடுகளும், அவர்களின் இருதயங்களும் எப்பொழுதும் எனக்காகத் திறந்திருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் ஒரு வித்தியாசமான இடத்திற்குச் செல்லுகின்றேன். நான் ஊழியங்கள் முடித்து வீடு வந்ததும் கர்த்தருடைய பிள்ளைகள் என்னுடன் தொலைபேசி, மொபைல் மற்றும் இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்ளுகின்றனர். நான் கர்த்தருக்குள் நல்ல சுகமாக இருக்கின்றேனா, நான் எனது ஆகாரங்களை ஒழுங்காக சமைத்துச் சாப்பிடுகின்றேனா என்றெல்லாம் அவர்கள் என்னைக் கேட்கின்றனர். நான் அவர்களிடம் "ஆம்" என்று சொன்னால் அவர்கள் பதிலுக்கு "என்ன ஆகாரம் சாப்பிட்டீர்கள்?" என்று என்னைக் கேட்கின்றார்கள். நானும் அவர்களுக்கு உண்மையான பதிலையே கொடுத்து வருகின்றேன். அவர்களுக்கு நான் ஒன்றையும் தேவ சமூகத்தில் மறைப்பதில்லை.

நீண்ட நாட்களாக ஒவ்வொரு தடவையும் நான் தேவ ஊழியம் முடித்து வீடு திரும்பிய சில நாட்களுக்கு என் மன அழுத்தம் அதிகமாக எனக்கு இருந்தது. காரணம், நான் வெளியில் இருந்த நாட்களில் நான் கர்த்தருடைய பிள்ளைகளோடு இருந்தேன். அவர்களுடன் ஒன்றாக ஆகாரம் புசித்தேன். அவர்களுடன் நித்திரை செய்தேன். அவர்களுடன் பேசி மகிழ்ந்து அவர்களுடைய அன்பில் மூழ்கியிருந்தேன். அவர்களின் அன்பான கவனிப்பும், கரிசனையும் என் மேல் இருந்தது. அதின் பின்னர் ஊழியம் முடித்து வீடு திரும்பியதும் உடன்தானே தனிமை என்ற ஆழ்ந்த துயரத்துக்குள் மூழ்கினேன். சுய பரிதாபம், மன அழுத்தம் எல்லாம் என்மேல் மோதவே நான் நிர்ப்பந்தமான நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு தடவை நான் தேவ ஊழியம் எல்லாம் முடித்து வீடு திரும்பியதும் என்னை அன்பாக நேசித்து உபசரித்து வழி அனுப்பி வைத்த மக்களுக்கு மொபைலில் ஒரு செய்தி அனுப்பினேன். "வீட்டிற்கு சுகமாக வந்து சேர்ந்தேன். பாதுகாப்பான வீடு, இனிமையான வீடு, தனிமையான வீடு, அழுக்கான வீடு" என்று அந்த செய்தி இருந்தது. மற்றொரு சமயம் "எனது இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது, எனது சுகர் அளவு உயர்ந்து நிற்கின்றது, எனது கொழுப்பு அளவும் கூடி காணப்படுகின்றது, ஆனால் எனது ஆவிக்குரிய நிலைதான் தாழ்வாக, அனலற்று உள்ளது" என்று தமாஷாக ஒரு எஸ்.எம்.எஸ் செய்தி அனுப்பினேன்.

நீங்கள் ஜாண் பன்னியன் என்ற பரிசுத்தவான் எழுதிய பிரசித்திபெற்ற "மோட்ச பிரயாணம்" என்ற புத்தகத்தை வாசித்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கே ஓரிடத்தில் அகோர பயங்கர ராட்சதன் என்ற அரக்கன் கிறிஸ்தியானையும், உண்மையையும் பிடித்து சந்தேக துருக்கம் என்ற கோட்டைக்குள் அடைத்து வைத்து ஒவ்வொரு நாளும் அடி தண்டமாக அடித்து அவர்களை இம்சித்தான். இருளும், நாற்றமும், ஒரு துளிதானும் வெளிச்சம் இல்லாத அந்த இடத்தில் எந்த ஒரு ஆகாரமும் கொடாமல் அவர்களை வைத்து அடித்தான். அந்த இடத்திலே அவர்கள் நாள் முழுவதையும் பெருமூச்சு விடுவதிலும், அங்கலாய்த்து ஏங்குவதிலும் கழித்தார்கள். அந்த அகோர பயங்கர ராட்சதன் கிறிஸ்தியானையும், உண்மையையும் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொள்ள வெகுவாக வற்புறுத்துகின்றான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிறிஸ்தியான் தனது மடியில் வாக்குத்தத்தம் என்ற திறவுகோல் இருப்பதை கண்டு பிடித்து அதைக் கொண்டு தாங்கள் அடையுண்டு கிடந்த சந்தேக துருக்கம் என்ற கோட்டையின் கதவைத் திறந்து கொண்டு கிறிஸ்தியானும், உண்மையும் அங்கிருந்து தப்பிச் செல்லுவதை நீங்கள் வாசிப்பீர்கள்.

நமது தனிமை வாழ்வில் நம்மை ஆற்றித் தேற்றி அரவணைத்துக் கொண்டு செல்லும் ஒரே துணைவன் தேவனுடைய வாக்குத்தத்தங்கள்தான். "என் தகப்பனுடைய தேவன் என்னோடே கூட இருக்கிறார்" (ஆதி 31 : 5) என்று நமது முற்பிதா யாக்கோபு கூறுகின்றார். "தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர்" (சங் 23 : 4) என்று தாவீது இராஜா சொல்லுகின்றார். "இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்" (மத் 28 : 20) என்று நம் அன்பின் கர்த்தரே நமக்கு வாக்களித்திருக்கின்றார். அவர் நம்மோடு கூட நமது வாழ்வில் எப்பொழுதும் நிழலாக நமக்கு அருகில் இருக்கின்றார். நாம் ஒருக்காலும் தனிமையில் இல்லவே இல்லை. இந்த உறுதியான நம்பிக்கை நமக்கு கிடைத்துவிட்டால் நாம் ஒருக்காலும் தனிமையை உணரவே மாட்டோம். திகிலடைய மாட்டோம். "திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை" (ஏசாயா 54 : 14) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது.

நீங்கள் டோனாவூர் ஏமி கார்மைக்கேல் என்ற காருணிய அம்மாள் அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை வாசித்திருந்தால் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அவர்கள் சிறுமியாக இருந்த சமயம் இரவில் படுக்கும்போது தனது படுக்கையின் தலையணை அருகில் தனது அன்பின் ஆண்டவரும் தன்னருகில் படுத்துக்கொள்ள வசதியாக ஒரு இடத்தை ஆயத்தப்படுத்தி அதில் தனது அருமை இரட்சகர் இயேசுவும் தன்னோடு கூட படுத்திருக்கின்றார் என்ற முழுமையான ஆனந்த நம்பிக்கையோடு நித்திரை செய்ததாக நாம் பார்க்கலாம். அந்த விதமான குழந்தையடைவான ஆழ்ந்த விசுவாசமும், நம்பிக்கையுமே நமது உள்ளத்தில் சாத்தானாம் பிசாசு கொண்டு வரக்கூடிய தனிமை உணர்வையும், துயரத்தையும், திகிலையும் நம்மிலிருந்து துரத்தி நம்மில் தேவப்பிரசன்னத்தை மலரச் செய்யும். "நான் உன்னுடனே கூட இருக்கிறேன்" (அப் 18 : 10) என்று தம்முடைய அடியானுக்கு வாக்களித்த பொய்யுரையாத கர்த்தர் நம்மோடிருக்கின்றார். தேவப்பிள்ளையே கலங்காதே. தனிமை என்ற பேச்சுக்கே உன் வாழ்வில் இடமே கிடையாது.

(Coutesy:- "Harvest Times"
Gospel Literature Service, Mumbai)



 

உங்கள் வெளிச்சம் மனுஷருக்கு முன்பாக பிரகாசிக்கக்கடவது

சில ஆண்டு காலங்களுக்கு முன்னர் நான் சமுத்திரத்தில் பயணிக்கும்போது ஒரு தீபஸ்தம்பத்தை எங்களது கப்பல் கடந்து சென்றது. அப்படி அது அந்த தீபஸ்தம்பத்தை கடந்து செல்லும்போது "தீபஸ்தம்பம் அல்ல, அதிலிருந்து வீசும் வெளிச்சமே பிரதானம்" என்ற எண்ணம் என் உள்ளத்தில் மிகவும் பலமாக பளிச்சிட்டது. அந்த தீபஸ்தம்பம் உண்மையில் அதிசயிக்கத்தக்கதான ஒரு அமைப்புத்தான். அதை நிர்மாணித்த மனிதர் சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு கைதேர்ந்த கட்டிட கலைஞன்தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. தலையைக் கிரக்கச் செய்யும் மிகவும் செங்குத்தான கன் மலையில் அவன் அந்த தீபஸ்தம்பத்தை பிரமிக்கத்தக்கவிதத்தில் கட்டி எழுப்பியிருந்தான். எனினும், அந்த ஆச்சரியமான கட்டிடம் அல்ல, அதிலிருந்து வீசும் வெளிச்சமே கடலில் பயணிக்கும் மாலுமிகளுக்கு அவர்கள் செல்ல வேண்டிய சரியான வழியை அவர்களுக்குக் காண்பிப்பதுடன் அவர்களைச் சந்திக்கக்கூடிய ஆபத்துக்களைக் குறித்தும் அது எச்சரிப்பதாக இருக்கின்றது.

வெறுமனே நான் என்னத்தை சொல்லுகின்றேன் அல்லது என்னத்தை செய்கின்றேன் என்பது அல்ல நான் யார் என்பதே காரியமாகும். அது ஒன்றுதான் என்னைக்குறித்து சாட்சியிடக்கூடியதாகும்.

"நமது பரிமளிக்கும் கவர்ச்சியான பிரசங்கத்தினால் அல்ல நமது ஒளி நிறைந்த பிரகாசமான வாழ்க்கையாலேயே நாம் கர்த்தருக்காக பெரிய காரியங்களை நிறைவேற்ற முடியும்" என்று ஒரு தேவ மனிதர் சொன்ன வார்த்தை எனது நினைவுக்கு வருகின்றது. தேவன் தாமே மற்றவர்களுக்கு ஒளி வீசும் பிரகாசமான கிறிஸ்தவர்களாக நம்மை மாற்றுவாராக.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM