இமயமலை கிராமங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்



"உன் ஆகாரத்தை தண்ணீர்கள்மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனை காண்பாய்" (பிரசங்கி 11 : 1)

சுவிசேஷ கைப்பிரதிகளை ஜெபத்தோடு விநியோகித்து செய்யப்படும் தேவ ஊழியங்கள் ஏற்ற காலங்களில் தேவனுடைய நாமத்திற்கு மகிமையான கனிகளைப் பிறப்பிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமுமே கிடையாது. இதற்கு ஆதாரமாக ஒரு உண்மைச் சம்பவத்தை நமது இமயமலை தேவ ஊழியங்களுக்கு ஆதாரமாக இங்கு குறிப்பிட்டுவிட்டு இமயமலை கிராம தேவ ஊழியங்களைக் குறித்த விபரங்களை நான் எழுத விரும்புகின்றேன்.

ஆண்டவரைச் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு கிறிஸ்தவ மனிதர் ஒரு நதியைக்கடக்க ஒரு நீராவிப்படகிலே பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் அவர் தன் உள்ளத்தில் உண்டான ஆத்தும பாரம் காரணமாக தன் வசம் வைத்திருந்த சுவிசேஷக் கைப்பிரதிகளை எடுத்து தன்னோடு படகில் பிரயாணம் செய்து கொண்டிருந்த தனது சக பிரயாணிகளுக்கெல்லாம் கொடுத்தார். அவர் கொடுத்தவற்றை எல்லாரும் அன்பாகப் பெற்று ஆசை ஆவலாக அவற்றை கவனமாகப் படிக்க ஆரம்பித்தார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் மாத்திரம் அந்த மனிதர் கொடுத்த பிரதியை வாங்கி வாசிக்காமல் அதை தன் வசம் வைத்துக் கொண்டார். அவருக்கு கிறிஸ்தவ மார்க்கத்தின் மீதோ அல்லது பக்தி வாழ்க்கையின் பேரிலோ எந்த ஒரு பற்றும் பாசமும் கிடையாது. சொல்லப்போனால் அந்த மனிதர் கிறிஸ்தவத்தை அடியோடு வெறுப்பவர்.

தனது உள்ளத்தின் வெறுப்பை தன்னோடிருந்தவர்களுக்கும் வெளிப்படையாக காண்பித்துவிடவேண்டும் என்ற மேட்டிமையான எண்ணத்தில் தனக்குக் கொடுக்கப்பட்ட சுவிசேஷ துண்டுப்பிரதியை சில மடிப்புகளாக மடித்து அதைத் தன்னிடமிருந்த பேனா கத்தியால் துண்டு துண்டாக வெட்டி அந்த துண்டுகளை எல்லாம் எல்லாருடைய கண்களுக்கும் முன்பாக நதியிலே போட்டுவிட்டார். அப்படிப் போடப்பட்ட துண்டுத்தாட்களில் ஒரு சிறிய துண்டுத்தாள் அந்த மனிதரின் கோட்டில் நன்கு ஒட்டிக்கொண்டது. தனது கோட்டில் ஒட்டிக்கொண்ட அந்த துண்டுத்தாளை நதித்தண்ணீரில் எடுத்துப் போடுவதற்கு முன்பாக அந்த தாளில் என்னதான் எழுதப்பட்டிருக்கின்றது என்று அவர் வாசித்துப் பார்த்தார். அந்த தாளின் ஒரு பக்கத்தில் "தேவன்" (God) என்று எழுதப்பட்டிருப்பதை அவர் பார்த்தார். அடுத்த பக்கத்தை அவர் பார்த்தபோது அதில் "நித்தியம்" (Eternity) என்று எழுதப்பட்டிருந்ததை அவர் கவனித்தார். அந்த இரண்டு வார்த்தைகளான தேவன், நித்தியம் என்ற வார்த்தைகள் அந்த மனிதரை அப்படியே பற்றிப்பிடித்துக்கொண்டது. அந்த இரண்டு வார்த்தைகளை தனது மனதிலிருந்து அப்பால் போகப்பண்ணும்படியாக அவர் நன்கு மதுபானம் குடித்துப் பார்த்தார், சீட்டு விளையாடிப் பார்த்தார். இன்னும் என்ன என்ன பிரயத்தனங்களோ செய்து பார்த்தார். ஆனால், அந்த வார்த்தைகள் எப்பொழுதும் அவரது மனக்கண்களுக்கு முன்பாக அசைவாடிக்கொண்டே இருந்தது. அந்த மனிதர் நடந்தாலும், படுத்திருந்தாலும், எதைச் செய்து கொண்டிருந்தாலும் அந்த இரண்டு வார்த்தைகளும் அவரின் மனத்திரையில் தோன்றி அவரைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. இறுதியாக அந்த மனிதர் முழங்கால்களில் வீழ்ந்து தன்னை ஆண்டவருக்கு ஒப்புவித்து மனந்திரும்பினார். தன்னால் வெறுப்புடன் கோபத்தால் துண்டிக்கப்பட்ட ஒரு சிறிய துண்டுத்தாள், அதில் எழுதப்பட்ட இரண்டு வார்த்தைகள், அந்த மனிதரின் மனந்திரும்புதலுக்கும், ஆத்தும மீட்புக்கும் போதுமானதாக இருந்தது.

சுவிசேஷ கைப்பிரதிகளின் மேன்மை அதுதான். இந்த உண்மையை மனதில் கொண்டுதான் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை நாங்கள் சுமந்து கொண்டு ஆண்டுதோறும் வடக்கு நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து 83 கி.மீ. தொலைவிலுள்ள டார்ச்சுலா பட்டணம் நோக்கிப் பிரயாணப்பட்டோம். இந்த ஆண்டிலும் அன்பின் பரம தகப்பன் எங்கள் ஊழியங்களை ஆசீர்வதித்துத் தரும்படியாக நாங்கள் எங்களை தேவ சமூகத்தில் தரைமட்டாகத் தாழ்த்தி ஜெபித்துவிட்டு எங்கள் வாகனங்களில் புறப்பட்டோம். வாகனங்கள் இரண்டிலும் போதுமான அளவிற்கு தேவனுடைய பிரசுரங்கள் ஏற்றப்பட்டிருந்தன.

டார்ச்சுலா வழித்தடம் டிடிகாட் என்ற இடத்திற்கு கீழாக பல மைல்கள் தூரம் மிகவும் மோசமாக இருந்ததின் காரணமாக இந்த தடவை நாங்கள் மாற்று வழியில் எங்கள் வாகனங்களுடன் பயணப்பட்டோம். அந்த வழியானது பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து சில கி.மீ. தொலைவிலேயே ஆரம்பமாகிவிடுகின்றது. நாங்கள் அந்த மாற்று வழித்தடத்தில் பிரயாணப்பட்டு மலை உச்சி நோக்கி வந்துவிட்டோம். அந்தப் பாதை மிகவும் நல்லதொரு பாதையாக இருந்தது. எங்கள் எல்லாருக்கும் அது மிகவும் சந்தோசமாக இருந்தது.

 
தேவனுடைய பார்வையில் அருமையாயிருந்த எங்கள் ஜீவன்

நாங்கள் சென்றுகொண்டிருந்த அந்தப்பாதையில் ஓரிடத்தில் கொஞ்சம் வாகனங்கள் ரஸ்தா மேல் நின்று கொண்டிருந்தன. எங்கள் வாகனங்களையும் அங்கு நிற்கும்படி அவர்கள் கேட்டுக் கொண்டனர். பக்கவாட்டிலுள்ள மலை இடிந்து விழுந்து கொண்டிருக்கின்றது என்று அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். நாங்கள் அதை பெரிய பொருட்டாக எண்ணாமல் எங்கள் வாகனங்களை சற்று முன்னான இடத்திலேயே சாவதானமாக கொண்டு வந்து நிறுத்திவிட்டு எங்கள் வாகனங்களிலிருந்து கீழே இறங்கி நின்று கொண்டிருந்தோம். மேலே மலையிலிருந்து அவ்வப்போது சில சிறிய கற்களோ அல்லது மண் கட்டிகளோ விழுந்து கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். சில நிமிடங்களுக்குள்ளாக ஒரு ஸ்கூட்டரில் இருவர் வந்தனர். அவர்கள் ரஸ்தாவைக் கடந்து வந்து எங்கள் அருகில் வந்து சேரவும் மலை இடிந்து வந்து எங்களுக்கு முன்பாகக் காணப்பட்ட ரஸ்தாவை முழுவதுமாக மூடிவிட்டது. நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலேயே எங்களுக்கு முன்பாக அந்த மலை சற்று தூரம் தள்ளி பெரிய உயரமான மதில்போல விழுந்து கிடந்தது. நாங்கள் இன்னும் சில அடிகள் மட்டும் முன்னர் செற்றிருந்தோமானால் எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமின்றி அது எங்களை மூடியிருக்கும். கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் நாங்கள் அந்த இடத்தில் அதிசயமாகப் பாதுகாக்கப்பட்டோம். அந்த இடிபாடுகளை அகற்ற பல நாட்கள் எடுத்திருக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது. அந்த இடத்திலுள்ள மலை ரஸ்தாக்கள் மிகவும் ஆபத்தானவைகளாகும். எந்த நேரம் ரஸ்தாவை ஒட்டிய மலைகள் சரிந்து விழுகின்றன என்று சொல்ல முடியாது. நாங்கள் சென்ற வழித்தடங்களில் அப்படி மலைச்சரிவுகள் ஏற்பட்டு வாகனங்கள் நொறுங்குண்டு ரஸ்தா ஓரமாக இழுத்து நிறுத்தப்பட்டிருப்பதை பல இடங்களிலும் நாங்கள் கண்டிருக்கின்றோம். அந்த வாகனங்களில் பிரயாணம் செய்த மக்கள் எல்லாரும் மாண்டு போயிருப்பார்கள் என்பதில் சந்தேகமே கிடையாது. ஆயினும், இரக்கத்தில் ஐசுவரியமுள்ள கர்த்தரின் பார்வையில் எங்கள் ஜீவன் அருமையாக இருந்தபடியால் அவருடைய பொற்பாதங்களை முத்தமிட்டு வாழ்த்துகின்றேன். அங்கு நின்று கொண்டிருந்த வாகனங்கள் அனைத்தும் பின் நோக்கி திரும்பிச் செல்ல வேண்டியதானது. நாங்களும் அந்த இடத்திலிருந்து மாற்றுப் பாதை எடுத்து வேறு ஒரு வழித்தடத்தில் டார்ச்சுலா நோக்கி வந்தோம்.

 
சௌபாட்டா, காப்ரிகாம், கிவிதா போன்ற
இடங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

நாங்கள் டார்ச்சுலா நோக்கி வந்து கொண்டிருந்த மாற்று வழித்தடத்தில் எங்களுக்கு எதிர்ப்பட்ட கிராமங்களில் எல்லாம் எங்கள் வாகனங்களை நிறுத்தி நிறுத்தி தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்துக்கொண்டே சென்றோம். எங்கள் பாதையில் ஒரு வறட்சியான ஒரு நதியில் மக்கள் தங்கள் லாரிகளை நிறுத்திவைத்துவிட்டு நதியில் கிடந்த கற்கள் மற்றும் மண்ணை சேர்த்துக் குவித்துக்கொண்டிருந்தனர். நமது தேவ ஊழியர்கள் வாகனங்களிலிருந்து இறங்கிச் சென்று அந்த நேரம் அந்த நதியில் அந்த வேலைகளில் ஈடுபட்டிருந்த மக்கள் யாவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை வழங்கினர். அந்தக்காட்சியை நீங்கள் படத்தில் காணலாம்.

கிவிதா என்ற கிராமத்தில் ஒரு ஆரம்ப பள்ளி இருந்தது. அதில் ஒரு ஆசிரியரும் 9 பிள்ளைகளும் இருந்தனர். தலைமை ஆசிரியர் அத்ரி பவன் என்பவருக்கு ஒரு வேதாகமமும் இதர பிரதிகளும் கொடுக்கப்பட்டன. மாணாக்கருக்கு இந்தி லூக்கா சுவிசேஷத்துடன் மற்ற பிரதிகள் கொடுக்கப்பட்டன. நமது வாகனம் ரஸ்தாவில் நிறுத்தப்பட்டிருப்பதையும், கிராமத்திற்கு கீழாக பள்ளி தெரிவதையும் படத்தில் நீங்கள் காணலாம்.

அந்த கிராமத்தில் நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரதிகளை கருத்தோடு ரஸ்தாவில் படித்துக் கொண்டு வரும் ஒரு மனிதனை நீங்கள் பார்க்கலாம்.

நாங்கள் வந்த வழித்தடத்தில் தங்கள் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த இரு பெண்களுக்கு நமது தேவ ஊழியர்கள் சாந்திமார்க்கம் என்ற இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களையும், இதர பிரதிகளையும் கொடுத்தனர். மரத்தின் நிழலில் அமர்ந்து அவர்கள் அவற்றை ஆவலாக வாசிப்பதை காணலாம்.

எங்களுடைய பாதையில் காணப்பட்ட ஒரு கிராமத்தில் தேவனுடைய பிரசுரங்களை கொடுப்பதற்காக பாஸ்டர் சகோதரன் ஓபேத் அவர்கள் தனிமையில் சென்று கொண்டிருக்கின்றார்கள்.

தனக்குக் கிடைத்த லூக்கா சுவிசேஷத்தையும் அத்துடன் வைக்கப்பட்டிருக்கும் பிரதிகளையும் கவனமாக வாசிக்கும் ஒரு முதியவரை நாம் பார்க்கின்றோம்.

ஒரு கிராமத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்களை தங்கள் கரங்களில் வைத்துப் படித்துக்கொண்டிருக்கும் ஓரு சிறு கூட்டம் மக்களை நாம் காண்கின்றோம்.

இப்படியாக நாங்கள் எங்கள் பித்தோர்கார்ட் பட்டணத்தித்திலிருந்து டார்ச்சுலா வரையிலான மாற்று வழித்தடத்தில் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தடன் கொடுத்துக் கொண்டே மாலைமயங்கும் நேரத்தில் டார்ச்சுலா பட்டணம் வந்து சேர்ந்தோம்.

வழக்கம்போல நாங்கள் அங்கிருந்த அரசாங்க ஓய்வு விடுதியில் இரண்டு அறைகள் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தோம். பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், வாகன ஓட்டுனர்கள் இருவர் மற்றும் தேவ ஊழியர்கள் ஐந்து பேர் பொதுவான அறை ஒன்றிலும் (Dormitory) நாங்கள் இருவர் மேல் மாடியில் ஒரு அறையிலும் இருந்தோம். டார்ச்சுலா பட்டணத்தைவிட்டு அரசாங்க ஓய்வு விடுதி முற்றும் தனியாக காளி நதி ஓரமாக அமைந்திருப்பதால் எந்த ஒரு ஜன சந்தடி இன்றி மக்கள் ஆரவாரமின்றி தனித்து இருக்கின்றது. அதின் காரணமாக எந்த ஒரு இடையூறும் இல்லாமல் ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் தரித்திருக்க இந்த இடம் ஏற்றதாக உள்ளது. எத்தனை மணி நேரங்கள் வேண்டுமானாலும் அன்பரின் பாதங்களில் ஜெபத்தில் அமர்ந்திருக்கலாம். அப்படியே ஜெபத்தில் தேவ பெலத்தால் நாங்கள் தரித்திருந்தோம். கர்த்தருக்கே மகிமை.

நாங்கள் இந்த விடுதியில் தங்கியிருந்து கொண்டு எங்கள் ஆகாரங்களை பக்கத்திலுள்ள ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம். ஆகாரத்திற்குத் தேவையான பொருட்களையும், புதிய காய்கறிகளையும் நாங்கள் பஜாரில் வாங்கி ஹோட்டல்காரருக்கு கொடுத்துவிட்டு நல்ல சுவையான ஆகாரத்தை புசிக்க கர்த்தர் எங்களுக்கு உதவி செய்தார். காலையில் பொதுவாக எங்கள் ஆகாரம் பூரியாகவே இருந்தது. அதற்குத் தேவையான பெரிய வெள்ளை கொண்டை கடலையை நாங்களே வாங்கிக் கொடுத்துவிட்டோம். தனது குடும்பத்தினருக்கு பொறுப்போடும், அன்போடும் ஆகாரம் சமைத்துக் கொடுப்பதுபோல பரதேசிகளாகிய எங்களுக்கும் அந்த மக்கள் உணவளித்தார்கள். நாங்கள் கர்த்தருடைய ஊழியத்தின் பாதையில் வெளியிடங்களுக்குச் சென்றுவிட்டு நண்பகலிலோ அல்லது இரவிலோ எந்த ஒரு பிந்திய நேரத்தில் வந்து சேர்ந்தாலும், பஜாரில் உள்ள மற்ற கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டாலும் எங்களுக்காக தனது ஹோட்டலைத் திறந்து வைத்து அந்த மக்கள் அன்போடு எங்களுக்கு உணவளித்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

 
டார்ச்சுலா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேவ ஊழியம்

டார்ச்சுலாவில் உள்ள பெரிய அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் அங்கு கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும், ஆசிரிய பெரு மக்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை அடுத்த நாள் கொடுக்க அன்பின் கர்த்தர் உதவி செய்யும்படியாக நாங்கள் எல்லாரும் தேவ சமூகத்தில் அதிகமாக ஜெபித்து வந்தோம். காலையில் எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் ஜெபத்தோடு அந்தப் பள்ளிக்குச்சென்றோம். கர்த்தர் எங்கள் ஜெபங்கள் கேட்டு அந்த அரசு பள்ளியில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுக்க எங்களுக்கு உதவி செய்தார். அந்தப் பள்ளியின் பிரின்சிபால் மஹேஷ் சந்த் ஜோஷி என்பவர் எங்களை அன்போடு வரவேற்று பள்ளியிலுள்ள பிள்ளைகள் யாவருக்கும், ஆசிரியர்களுக்கும் பிரதிகளை கொடுக்க அனுமதித்தார். "தான் பித்தோர்ட்கார்ட் பட்டணத்திலுள்ள கிறிஸ்தவ மிஷன் பள்ளியில் கல்வி பயின்றதால் கிறிஸ்தவ மார்க்கத்தை குறித்த அன்பு தனக்கு உண்டென்றும், யாவரும் அந்த நற்செய்தியை அறிந்து கொள்ள வேண்டும்" என்றும் எங்களிடம் கூறினார். அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி அந்தப் பள்ளியில் உள்ள 600 மாணவிகளுக்கும் 20 ஆசிரிய பெருமக்களுக்கும் தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்களை நாங்கள் ஜெபத்துடன் வழங்கினோம். பிளஸ் 2 மாணவிகளுக்கு லூக்கா சுவிசேஷத்துடன் 4 அருமையான கைப்பிரதிகளும் அத்துடன் ஒரு ஹிந்தி மொழி புதிய ஏற்பாடும் வழங்கினோம். நாங்கள் அந்தப் பள்ளியில் உள்ள மாணவிகள் யாவருக்கும் பிரதிகளை கொடுத்து முடித்த பின்பு பிரியா என்ற மாணவியும் அவளது சிநேகிதிகள் இருவரும் எங்களண்டை வந்து தங்கள் மூவருக்கும் வேதாகமங்கள் கட்டாயம் வேண்டும் என்றும், அதற்கான விலைக்கிரயத்தை தாங்கள் தந்து விடுவதாகவும், அவைகளை வாசிக்க அவர்களுக்கு அதிகமான ஆவல் இருப்பதாகவும் கூறினார்கள். அவர்கள் எங்களை மிகவும் கெஞ்சிக்கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த வாஞ்சையும், தவனமுமான மூன்று மாணவிகளுக்கும் 3 வேதாகமங்களை இலவசமாகக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் மொத்தம் 24 ஹிந்தி வேதாகமங்கள் கொடுத்திருந்தோம். 600 மாணவிகள் தேவனுடைய பிரசுரங்களைப் பெற்றிருந்தனர். அன்பின் ஆண்டவர் அந்த மாணவச் செல்வங்களின் உள்ளங்களில் தொடர்ந்து பேசும்படியாக தேவப்பிள்ளைகயாகிய நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். டார்ச்சுலா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முகப்பு வளைவை நீங்கள் செய்தியில் காணலாம்.

உங்களில் ஹிந்தி மொழி தெரிந்தவர்கள் அதை வாசிக்கலாம். 1970 ஆம் ஆண்டு முதல் உயர் நிலைப்பள்ளியாக இருந்தது 1980 ஆம் ஆண்டிலிருந்து அரசு பெண்கள் இண்டர் காலேஜ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அதில் ஒரு வரி குறிப்பிடப்பட்டுள்ளது.

 
கைலாசம், மான்சரோவர் வழி தடத்தில்

இந்து மக்களின் புகழ்பெற்ற கைலாச பர்வத யாத்திரை செல்ல வேண்டுமானால் இந்தியா, நேப்பாள எல்லைகளிலுள்ள டார்ச்சுலா பட்டணம் வழியாகவேதான் பயணம் செய்ய வேண்டும். வேறு மாற்றுப்பாதையே கிடையாது. நாங்கள் இந்த கைலாச மலை யாத்திரை பாதையில் இந்த தடவை 36 கி.மீ. தூரம் வரை சென்று தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். எங்கள் வழித்தடம் டோபாட், ஈலாகாட், தவாகாட், கேத், கஞ்சட்டி, சோப்லா வரை சென்றது. ஈலாகாட் கடைவீதியில் நம்முடைய தேவ ஊழியர்கள் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுப்பதையும், தங்கள் கரங்களில் ஆண்டவருடைய வார்த்தைகளை வைத்து வாசித்துக்கொண்டிருக்கும் மக்களையும் நீங்கள் படத்தில் காணலாம்.

டார்ச்சுலாவிலிருந்து நாங்கள் 20 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து தவாகாட் என்ற இடம் வந்ததும் டவ்லி என்ற நதி நுரை தள்ளி பேரிரைச்சல் போட்டுக் கொண்டு எங்களுக்கு முன்பாகச் செல்லுவதை நாங்கள் கடந்த ஆண்டுகளில் கவனித்திருக்கின்றோம். ஆனால் இந்த தடவை அந்த நதியே இல்லாதபடி செய்து அதின் தண்ணீர் முழுவதையும் ஒரு அணையில் தேக்கி அந்த நீரை சுரங்கப்பாதை வழியாக பூமிக்கடியில் கொண்டு சென்று எங்கோ ஓரிடத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வதாகச் சொன்னார்கள். நாங்கள் கேத்தி என்ற அந்த அணைக்கட்டுக்குச் சென்று அந்த அணையின் பாதுகாப்புப் பணியிலிருந்த போபால் சிங் என்பவருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அவர் தேவனுடைய பிரதிகளில் அதிகமான ஆர்வம் காட்டியபடியால் தனது சும்மாயிருக்கும் நீண்ட மணி நேரங்களில் வாசித்து பயன் அடைவதற்காக ஒரு ஹிந்தி மொழி வேதாகமத்தையும் அவருக்குக் கொடுத்தோம். அவர் அடைந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது. அதைக் கவனமாகப் பார்த்துக்கொண்டிருந்த பிரியா பாரத் என்ற மற்றொரு பாதுகாப்பு பணி அதிகாரியும் தனக்கும் ஒரு வேதாகமம் கட்டாயம் வேண்டுமென்று அன்புடன் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அன்பின் ஆண்டவர் அந்த இருவர் உள்ளங்களில் தமது வார்த்தைகள் மூலமாகப்பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் சீறிப்பாய்ந்து நுரை தள்ளி ஓடிய டவ்லி நதி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு கேத்தி அணை நீர் நதியாக சாந்தமாகக் கிடப்பதை நீங்கள் காணலாம்.

கேத் என்ற இடத்தில் ஒரு மேல்நிலைப்பள்ளி இருந்தது. அதின் பிரின்சிபால் ஜெய்ந்குமார் என்பவராவார். அவரது பள்ளியில் உள்ள மாணவ மாணவியர் யாவருக்கும் தேவனுடைய பிரதிகளைக் கொடுக்க எங்களை அனுமதித்தார். நமது தேவ ஊழியர்கள் வகுப்பு வகுப்பாகச் சென்று 300 பிள்ளைகளுக்கு பிரசுரங்களைக் கொடுத்தனர். அந்தப்பள்ளியில் படித்துக்கொடுத்த 11 ஆசிரியர்களுக்கு வேதாகமங்களும் மற்ற பிரதிகளுடன் சேர்த்துக்கொடுக்கப்பட்டன. அந்த பள்ளியிலுள்ள மாணவர்கள் மிகவும் பணிவும் அன்புமான பிள்ளைகளாவார்கள். நாங்கள் பள்ளியில் நுழைந்தவுடன் எங்கள் எல்லாருக்கும் உட்காருவதற்கு நாற்காலிகளைக் கொண்டு வந்து போட்டனர். கேத் மேல் நிலைப்பள்ளியின் முகப்பு வளைவையும் அதில் நமது ஊழியர்கள் நின்று கொண்டு எவ்விதமாக பள்ளியில் பிரதிகளைக் கொடுக்கலாம் என்பதை தீர்மானிப்பதையும் பார்ப்பதுடன் பள்ளியின் ஒரு பகுதியையும் படத்தில் நீங்கள் காணலாம்.

அங்கிருந்து நாங்கள் காஞ்ஜொத்தி என்ற மலைக் கிராமத்திற்குச் சென்றோம். அந்த கிராமத்திலும் ஊழியம் செய்தோம். பஜாரில் உள்ள மக்கள் தங்களுக்கு கிடைத்த தேவனுடைய பிரசுரங்களை ஆவலோடு வாசிப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.

வழியில் ஓரிடத்தில் ஒரு சிறிய குடிசையைப் பார்த்தோம். அந்தப் பக்கத்திலுள்ளவர்களுக்கெல்லாம் கோதுமை, ராகி, சோளம் போன்ற தானியங்களை இலவசமாக அரைத்துக்கொடுக்கும் கொடையாளி அந்தக் குடிசைதான். அந்தக் குடிசைக்குள் ஒரு பெரிய திரிகைக் கல் உள்ளது. யார் யார் மாவு திரிக்க வேண்டுமோ அவர்கள் அந்தக் குடிசைக்குள் சென்று அங்கு ஓரிடத்தில் விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் ஒரு மலை நீர் ஓடையின் தண்ணீரை லாவகமாகத் திருப்பி பெரிய திரிகைக் கல்லின் அடியிலுள்ள சக்கரத்தில் மோதும்படியாக செய்துவைத்துவிட வேண்டியதுதான். உடனே, திரிகை கல் சுழல ஆரம்பிக்கும். நமக்குத் தேவையான தானியங்களை திரித்து எடுத்துக்கொண்டு நமது வேலை முடிந்ததும் ஓடையின் தண்ணீரை கல்லின்மேல் மோதாமல் துண்டித்துவிட்டு வந்து விடவேண்டியதுதான். இப்பொழுது அந்த ஓடையின் நீர் வழக்கம் போல வேறு வழியாக ஓடிக்கொண்டிருக்கும். அந்த மலை நாட்டின் கடையாந்திர கிராமங்களில் இவ்வித குடிசைகளை நாம் காணலாம். குடிசைக்கு மேலாக மலை ஓடை நீர் விழுந்து கொண்டிருப்பதையும், குடிசையையும் நீங்கள் படத்தில் காணலாம்.

நாங்கள் சென்ற கடையாந்திர இமயமலைப் பகுதிகள் சீனர்களின் எல்லையில் இருந்ததால் நமது ராணுவத்தினர் அங்கு இருப்பது தெரிய வந்தது. அங்கிருந்த ராணுவ மருத்துவமனை கூடாரத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. நமது தேவ ஊழியர் பாக்கேலால் ஜெபத்தோடு தைரியமாகக் சென்று அங்கிருந்த டாக்டருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து வந்தார்கள். நாங்கள் டார்ச்சுலாவிலிருந்து 36 கி.மீ. பிரயாணம் பண்ணி சோப்லா என்ற இடம் வரை சென்று திரும்பினோம்.

 
காலிகா என்ற இடத்தில் நடந்த தேவ ஊழியங்கள்

டார்ச்சுலா பட்டணத்திலிருந்து காலிகா என்ற இடத்திற்கு நாங்கள் 8 கி. மீ. தூரம் பிரயாணம் செய்து வந்து காலிகாவிலுள்ள சிறிய கடை வீதியில் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்தோம். காலிகாவின் சிறிய கடை வீதியை நீங்கள் காணலாம்.

இங்கிருந்த மேல்நிலைப்பள்ளியில் இருந்த பிரின்சிபால் சுர்ஷீத் என்பவரிடம் அனுமதி பெற்று இந்தப் பள்ளியிலிருந்த 400 பிள்ளைகளுக்கும் 24 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை கொடுத்தோம். நமது தேவ ஊழியர்கள் தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய பெட்டியை தூக்கிக் கொண்டு பள்ளியின் ஒரு வகுப்புக்குச் செல்லுவதை நீங்கள் படத்தில் காணலாம்.

தனக்குக் கொடுக்கப்பட்ட வேதாகமத்தை தனக்கு அருகில் வைத்து அமர்ந்திருக்கும் பள்ளியின் பெண் குமஸ்தாவை நீங்கள் காண்பீர்கள்.

தேவ ஊழியர்களாகிய எங்கள் எல்லாரையும் பிரின்சிபால் சுர்ஷீத் அன்பாக உபசரித்து எங்கள் எல்லாருக்கும் டீ கொடுத்தார்கள். அங்கிருந்த சிறிய பாலர் பள்ளியில் உள்ள பிள்ளைகள் எல்லாருக்கும் நமது தேவ ஊழியர் பாக்கேலால் பிரதிகளைக் கொடுப்பதை நீங்கள் காணலாம்.

தங்களுக்கு கிடைத்த பிரதிகளை பிள்ளைகள் கட்டாயம் தங்கள் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லுவார்கள். வீட்டிலுள்ள பெரியவர்கள் அவற்றைப்படித்து பயன் அடைவார்கள். ஜீவனுள்ள ஆண்டவரை கண்டு கொள்ள அது வழிவகுத்துக் கொடுக்கும் அல்லவா!

காலிகா மேல்நிலைப்பள்ளியின் முகப்பு வளைவையும், அந்த மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் எல்லாரும் பள்ளியில் நின்று கொண்டிருப்பதையும் படங்களில் நீங்கள் காண்பீர்கள்.

 
புலாவாகோட், டார்ச்சுலா, ஜல்ஜீபியில்
நடைபெற்ற ஊழியங்கள்

டார்ச்சுலா பட்டணத்திலிருந்து புலாவாகோட் என்ற இடத்திற்கு நாங்கள் 20 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தோம். அந்த இடத்தை நாங்கள் நெருங்கவும் எங்கள் பாதையில் வலது கைப்பக்கத்தில் மேலே உச்சியில் ஒரு ஆரம்ப பள்ளி இருப்பதை தெரிவிக்கும் அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். அங்கே எங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு நமது தேவ ஊழியர்கள் மேலே கஷ்டத்துடன் பள்ளிக்கு ஏறிச்சென்று தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்கும் கொடுத்தார்கள். நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்த இடத்தில் ஒரு அத்தி மரம் இருந்தது. அதில் நிறைய பழங்கள் காணப்பட்டன. மத்தியானம் பசியாக இருந்த நாங்கள் அந்தப் பழங்களைப் புசிக்க அதிகமாக ஆசைப்பட்டோம். ஆனால் அந்தோ அந்தப் பழங்களை நாங்கள் புசிக்க முடியாத அளவிற்கு அந்த அத்தி பழங்களுக்குள் புழுக்கள் நிறையக் காணப்பட்டன. அநேக பெயர்க் கிறிஸ்தவ மக்கள் பார்வைக்கும், பழக்கத்திற்கும் இனிமையானவர்களாக இருந்தபோதினும் அவர்களின் உள்ளான கிறிஸ்தவ ஜீவியம் நாம் அவர்களிலே எந்த ஒரு ஆவிக்குரிய நன்மையையும் அனுபவிக்கமுடியாமல் செய்துவிடுவதைப்போன்று அந்த காட்டத்தியும் காணப்பட்டது. பழுத்துக் குலுங்கும் அந்தக் காட்டத்தியை நீங்கள் காணலாம்.

அந்த புலாவாகோட் பகுதியில் இருந்த சில ஆரம்ப பள்ளிகளிலும், ஒரு உயர்நிலைப்பள்ளியிலும் நாங்கள் எங்கள் சுவிசேஷ ஊழியங்களை தேவ கிருபையால் மேற்கொண்டோம். அந்த இடத்திலிருந்த மேல்நிலைப்பள்ளியின் பிரின்சிபால் டம்டா என்பவரிடம் அனுமதி கேட்டுப் பெற்று அவர் மேல் நிலைப் பள்ளியிலிருந்த 600 மாணவ மாணவியருக்கும் 17 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களை வழங்கினோம். நமது தேவ ஊழியர்கள் வகுப்பு வகுப்பாகச் சென்று அனைத்து மாணவர்களுக்கும் அவற்றை வழங்கினார்கள். அந்த குளிரான மலை நாட்டில் பொதுவாக வகுப்புகள் பள்ளிக்கட்டிடங்களுக்கு வெளியே மரத்தடி நிழலில் வைத்து நடத்தப்படுவதை நாங்கள் கவனித்தோம். அங்குள்ள அநேக இடங்களில் இப்படித்தான் வகுப்புகள் நடைபெறுகின்றன. நாங்கள் பிரதிகளை கொடுப்பதையும், பள்ளி வகுப்புகள் திறந்த வெளிகளில் நடைபெறுவதையும் நீங்கள் காணலாம்.

அதின் பின்னர் நாங்கள் டார்ச்சுலா பட்டணத்திற்குத் திரும்பி வந்து அடுத்த நாளின் காலையில் அந்தப் பட்டணத்தின் கடைவீதிகள் முழுவதும் சுற்றித் திரிந்து பல்லாயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்களை மக்களுடைய கரங்களில் ஜெபத்துடன் கொடுத்தோம். சீனா, நேப்பாளம் என்ற இரண்டு நாடுகளின் எல்லைகளில் கடையாந்திரப் பகுதியில் இருக்கும் டார்ச்சுலா பட்டணத்தை நீங்கள் படத்தில் காணலாம்.

அந்த நாளிலேயே நாங்கள் அந்தப் பட்டணத்தை விட்டு பித்தோர்கார்ட் பட்டணம் திரும்பினோம். அந்தப் பெரிய பட்டணத்தை இறுதியாக பார்த்து அந்தப் பட்டிணத்தில் வாழும் மக்கள் ஆண்டவர் இயேசுவை அண்டிக்கொள்ள எங்கள் முகங்களை பரத்திற்கு நேராக ஏறெடுத்தோம். எங்கள் வழித்தடத்தில் ஜல்ஜீபி என்ற இடத்திலும் எங்கள் வாகனங்களை நிறுத்தி அந்தக் கடைவீதி முழுவதிலும் தேவனுடைய பிரசுரங்களை கொடுத்தோம். ஜல்ஜீபி கடைவீதியையும் நீங்கள் படத்தில் காணலாம்.

கொடுக்கப்பட்ட தேவனுடைய பிரசுரங்கள் ஏற்ற காலங்களில் நிறைவான பலன் கொடுக்க தேவப்பிள்ளைகளாகிய நீங்களும் தொடர்ந்து அன்பாக ஜெபித்துக்கொள்ளுங்கள்.


 

ஆ, என் நண்பர்களே! நீங்கள் சாவுக்கேதுவானவர்கள் என்பதை நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ளுவதே மேலான பரிசுத்த நிலைக்கு உங்களை வழிநடத்திச் செல்லும். தன்னுடைய மரணத்தை தினமும் உற்று நோக்குகிறவன் தன்னுடைய பரிசுத்தத்தை தினமும் உற்றுநோக்குகின்றான். தன்னுடைய கல்லறையை அடிக்கடி காண்கின்றவன் தன்னுடைய பரலோகத்தை அடிக்கடி காண்கின்றான்.

(பரிசுத்தவான் தாமஸ் புரூக்ஸ்)


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM