தேவன் உன்னை நியாயத்திலே
கொண்டு வந்து நிறுத்துவார்

"நாம் எல்லாரும் ஆடுகளைப்போல அவனவன் தன் தன் வழியிலே போனோம்" என்ற ஏசாயா 53 ஆம் அதிகாரம் 6 ஆம் வசனத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகள் எனது 12 ஆம் வயதில் எனக்கு அப்படியே பொருந்துவதாக இருந்தது.

நான் எனது வீட்டில் அடங்காதவனாக இருந்தேன். நாளடைவில் எல்லா அதிகாரங்களையும் துச்சமாக மதித்தேன். நான் தேவனுக்குப் பயப்படாதவனும், மனுஷரை மதியாதவனுமாகவிருந்தேன். எனது தாய் நாடான ஸ்காட்லாந்து தேசத்திலுள்ள லங்காஷையருக்கு அருகிலுள்ள நியூலாண்ட்ஸ் என்ற எனது கிராமத்திலிருந்த ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நிலக்கரி தோண்டி எடுக்கும் பணியில் எனது 12 ஆம் வயதில் நான் சேர்ந்தேன். அத்துடன் தேவனுக்குப் பயப்படாமை, எந்த ஒரு மனித மற்றும் கர்த்தருடைய கட்டளைக்கு கீழ்ப்படியாமையும் என்னுடன் வளர்ந்தது. நான் எனது 17 ஆம் வயதை எட்டியபோது "துன்மார்க்கனுடைய வழியோ கரடு முரடானது" என்ற தேவ வார்த்தைக்கேற்றவாறு என் வாழ்க்கை அமைந்திருந்தது.

அநேகமாக இந்த நாட்களில் ஒரு கூட்டம் இளவயதினரான கிறிஸ்தவ வாலிபர்கள் என்னுடைய கிராமத்தில் காணப்பட்டு இயேசு இரட்சகரின் சுவிசேஷத்தைப் பிரசிங்கிக்கத் தொடங்கினர். அது இலையுதிர் காலமான செப்டம்பர் மாதத்தின் ஒரு மாலை வேளையாகும். நான் ஒரு தெருவின் இருளான ஒரு மூலையிலிருந்து எங்கள் கிராமத்திற்கு வருகை தந்த அந்த வாலிப கூட்டத்தினரின் செய்தியைக் கவனித்துக் கேட்டேன். அவர்களில் ஒருவர் பிரசங்கியின் புத்தகம் 11 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். "வாலிபனே உன் இளமையில் சந்தோசப்படு. உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப்பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட, ஆனாலும் இவை எல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி" என்று கூறினார்.

அந்தச் சமயம் முடிவில்லாத நித்தியத்தக்கு அடுத்தவைகளைக் குறித்த காரியங்களிலும், எனது விலையேறப்பெற்ற ஆத்துமாவைக் குறித்த காரியத்திலும் எனக்கு எந்த ஒரு நாட்டமும், தேட்டமும் இல்லாதிருந்தது. இருப்பினும் அந்த வார்த்தைகள் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. அதைப் பிரசிங்கித்த மனிதர் அந்த வார்த்தைகளை இரு பகுதிகளாகப் பிரித்து தனது வார்த்தைகளை எந்த ஒரு வாலிபன் கேட்டுக் கொண்டிருந்தாலும் அந்த வார்த்தைகளைக் கவனிக்கும்படியாகச் சொன்னார். "வாலிபனே, உன் இளமையில் சந்தோசப்படு" என்று தனது வார்த்தைகளை அவர் திரும்பவும் சொன்னார்.

அதைக் கேட்டுக்கொண்டிருந்த நான் "நல்லது, அந்த வார்த்தை எனக்குப் பொருத்தமானது, எனது வாலிபத்தில் நான் இப்பொழுது சந்தோசப்பட்டுக் கொண்டிருக்கின்றேன்" பிரசங்கியார் தனது வார்த்தைகளைத் தொடர்ந்து "உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும், உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட" என்று கூறிவிட்டு தனது வார்த்தைகளுக்குப் பின்னர் கொஞ்சம் இடைவெளிவிட்டு "தேவனுடைய வார்த்தைகளுக்கு பதில் சொல்லக்கூடிய யாராவது ஒரு வாலிபன் இந்தக் கிராமத்தில் உண்டுமோ?" என்று கேட்டார்.

"நான் இந்தக் காரியங்களைச் செய்திருக்கின்றேன்" என்று நான் எனக்குள்ளாக எண்ணிக் கொண்டேன். "நானே அந்த வாலிபன்" என்ற ஒரு எண்ணம் என் உள்ளத்தில் மின்னல் போல பளிச்சிட்டு மறைந்தது.

"உன் கண்ணின் காட்சிகளிலும், நெஞ்சின் வழிகளிலும் நீ நட" என்று பிரசங்கியார் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தார். "நான் அவைகளைச் செய்திருக்கின்றேன், நானே அந்த வாலிபன்" என்று திரும்பவும் நான் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

அந்தப் பிரசங்கியார் கொஞ்ச நேர அமைதிக்குப் பின்னர் "வாலிபனே, இப்பொழுது நீ கவனிக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்" அதின் பின்னர் அவர் பலத்த சத்தத்துடன் "வாலிபனே, அடுத்து வரும் இரண்டு வரிகள் மிகுந்த எச்சரிப்புடன் உனக்கே வருகின்றன. "ஆனாலும் இவை எல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறிந்து கொள்" என்று கூறினார்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த இருளான தெரு முனையிலிருந்து நான் வீட்டிற்குச் சென்றேன். நான் படுத்து தூங்க முயற்சித்தேன். ஆனால் தூக்கம் எனது கண்களுக்கு விலகியோடிவிட்டது. "தேவ உன்னை நியாயத்திலே கொண்டு வந்து நிறுத்துவார் என்று அறி" என்று கூறிய பிரசங்கியாரின் பயங்கரமான வார்த்தைகள் என் உள்ளத்தில் எதிரொலி கொடுத்துக் கொண்டே இருந்தது.

அடுத்த நாள் காலையில் நான் வழக்கம் போல எனது சுரங்க வேலைக்குப் புறப்பட்டுச் சென்றேன். நான் சுரங்கத்துக்குள் இறங்கி நிலக்கரி தோண்டி எடுக்கும் முறை எனக்கு வந்தபோது பூமிக்குள் நான் இறங்கிச் செல்ல மிகவும் அஞ்சி நடுங்கினேன். ஒருக்கால் என்னைப் பூமியின் அடி வயிற்றுக்குள் தூக்கிக் கொண்டு செல்லும் இரும்பு வடம் இடையில் அறுந்துவிடுமானால் நான் உடனடியாக முடிவில்லாத நித்தியத்துக்குள் கடந்து சென்று நரகத்துக்கே சென்றாக வேண்டும் என்று நான் எனக்குள் எண்ணிக்கொண்டு எனக்கு அருகிலுள்ள மனிதனிடம் எனக்காக பூமிக்குள் இறங்க அவனைக் கெஞ்சினேன். அவன் நான் போவதில்லை என்று மறுக்கவே கடைசியில் நானே பூமிக்குள் மிகவும் நடுக்கத்துடனும், மரண பயத்துடனும் இறங்கினேன்.

அடுத்து வந்த 3 வார காலங்கள் எனது வாழ்வில் எனக்கு வியாகுலத்தின் நாட்களாக இருந்தது. என்னில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் எவரிடமும் சொல்லவே இல்லை. நான் மனநிலை பாதிப்புக்குள்ளாகச் சென்று கொண்டிருக்கின்றேன் என்று எனது தாயார் வேதனையுடன் எண்ணிக் கொண்டார்கள். இராக்காலங்களில் நான் தூங்க முடியாமல் எனது படுக்கை அறையிலேயே அங்குமிங்கும் நடந்து கொண்டு எனது இராக்கால நேரங்களை போக்கிக் கொண்டிருந்தேன். எனது மூன்று வார கால வியாகுல நாட்களின் முடிவின்போது எங்களது கிராமத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமை சுவிசேஷ துண்டுப்பிரசுரங்களை மக்களுக்கு விநியோகிக்க வரும் ஒரு தேவ ஊழியரின் நினைவு எனக்கு வந்தது. நான் அவரை எப்படியாயினும் சந்திக்க விரும்பினேன். ஒரு ஓய்வு நாளில் நான் அவரது வருகைக்காக ஆவலோடு காத்திருந்தேன். நான் எதிர்பார்த்தவாறே அவர் சற்று தொலைவில் காணப்பட்டார். அவர் அங்கிருந்தவாறே மக்களுக்குக் கொடுக்கக்கூடிய சுவிசேஷ கைப்பிரதிகளை ஒழுங்குபடுத்திக்கொண்டு எனக்கு கொடுக்க விரும்பிய ஒரு கைப்பிரதியையும் எனது கரத்தில் கொடுத்து விட்டு துரிதமாக என்னைக் கடந்து சென்றுவிட்டார். அவர் என்னுடன் ஏதாவது பேசுவார் என்று நான் ஆவலாக எதிர்பார்த்தேன். ஆனால், அவர் என்னிடம் ஒன்றும் பேசவில்லை.

நான் அந்த மனிதர் என்னைக் கடந்து செல்லுவதை விசனத்துடன் சற்று நேரம் பார்த்துவிட்டு அவர் பின்னாகச் சென்று அவரது தோளில் எனது கரத்தைப்போட்டு "தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கோபாக்கினையிலிருந்து ஒரு வாலிபன் தப்பிக்கொள்ள வழி உண்டுமா?" என்று நான் அவரை உருக்கத்துடன் கேட்டேன். எனது வார்த்தைகளைக் கேட்ட அந்த மனிதர் மிகவும் ஆச்சரியப்பட்டு "நான் உண்மையான திறந்த உள்ளத்தோடு அந்தக் கேள்வியை அவரிடம் கேட்கின்றேனா?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். கடந்த மூன்று வார காலமாக நான் கடந்து சென்று கொண்டிருக்கும் எனது உள்ளத்தின் வியாகுல அனுபவங்களை நான் அவருக்கு தெளிவாக எடுத்துக் கூறினேன்.

"நானும் என்னளவில் ஒரு இளம் விசுவாசிதான். எனது தொழில் புத்தகங்களை பைண்ட் செய்வதாகும். ஆண்டவர் என்னை எவ்வண்ணமாக இரட்சித்தார் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன்" என்று அவர் என்னிடம் கூறினார்.

"புத்தகங்கள் பைண்ட் செய்யும் ஒரு சாதாரண மனிதரை ஆண்டவர் இரட்சித்திருக்கக் கூடுமானால், நிச்சயமாக அவர் என்னை இரட்சிப்பார்" என்று நான் அவரிடம் சொன்னேன். தன்னை தேவன் இரட்சிப்புக்குள் வழிநடத்திய வேத வசனத்தை மிகுந்த நடுக்கத்துடன் அவர் தனது வேதாகமத்தை திறந்து எனக்கு வாசித்துக் காண்பித்தார். "தேவன் தம்முடைய ஒரேபேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்" (யோவான் 3 : 16)

அந்த வசனத்தை அவர் எனக்கு வாசித்துவிட்டு "நீங்கள் அதை விசுவாசிக்கின்றீர்களா?" என்று என்னைப் பார்த்துக் கேட்டார். நான் "ஆம்" என்று பதிலளித்தேன். "அப்படியானால் நீங்கள் இரட்சிக்கப்பட்டு விட்டீர்கள்" என்று அவர் என்னைப் பார்த்துச் சொன்னார். ஆனால், நான் "இல்லை" என்று விடை கொடுத்தேன்.

"நல்லது, அந்த தேவ வசனத்தின் மூலமாகத்தான் என் ஆத்துமா ஆறுதலடைந்தது. அந்த கர்த்தருடைய வார்த்தைதான் எனக்கு மெய்யான சமாதானத்தையும், ஆனந்த சந்தோசத்தையும் அளித்தது" என்றார் அவர். "தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு நான் அஞ்சி நடுங்குகின்றேன். அதிலிருந்து எனக்கு விடுதலை வேண்டும்" என்று நான் அவருக்குப் பதிலளித்தேன். அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அந்த கர்த்தருடைய மனிதர் "என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (யேவான் 5 : 24) என்ற வசனத்தை எனக்கு எடுத்து வாசித்துக் காண்பித்தார். அவர் அந்த வசனத்தை எனக்கு எடுத்துக் காட்டியபோது நான் அவரை நிறுத்தி "ஆக்கினைத் தீர்ப்புக்கு நான் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று தேவன் கூறியிருக்கின்றார். அந்த வார்த்தைகளை நான் அப்படியே விசுவாசித்து ஏற்றுக்கொள்ளுகின்றேன்" என்று நான் அவரிடம் கூறினேன்.

தேவனுடைய வாயிலிருந்து நான் கேட்ட அந்த வார்த்தையால் நான் அடைந்த விடுதலையை என்னவென்று சொல்லுவேன்! என்னுடைய எல்லா பாவங்கள், என்னுடைய எல்லா குற்ற உணர்வின் நடுவில் இரட்சகர் இயேசு என்னுடைய பாவப்பரிகாரத்திற்காக நிறைவேற்றி முடித்த அவருடைய இரட்சிப்பின் கிரியையால் தேவ கோபாக்கினை, நியாயத் தீர்ப்பு எனக்கு இல்லை என்ற அவருடைய வார்த்தை என்னைக் களிகூரச் செய்தது.

ஒரு காலத்தில் நான் எனது இளமையில் எனது அருவருப்பான பாவச் செயல்களில் ஆனந்தித்து அகமகிழ்ந்தேன். ஆனால் இப்பொழுது, எனது மரணத்தையும், எனது பாவ அக்கிரமங்களின் காரணமாக என்மேல் வரவேண்டிய நித்திய நியாயத்தீர்ப்பையும் எனக்காகத் தம்முடைய தோளில் ஏற்றுக்கொண்ட என் அருமை இரட்சகருடைய மகா அன்பின் தயவுக்காக அவரில் களிகூர்ந்து ஆனந்தித்தேன். இந்த எனது இரட்சிப்பின் சரித்திரத்தை நான் உங்களுக்கு எழுதும்போது நான் அந்த இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று 55 ஆண்டுகள் கடந்து சென்றுவிட்டபோதினும் அன்று நான் என் இரட்சகர் இயேசுவில் பெற்றுக்கொண்ட அந்த இரட்சண்யத்தின் பூரண சந்தோசத்தை இன்று நான் பெற்றுக்கொண்டவனைப்போல ஆனந்திக்கின்றேன். அந்த நாளில் நான் பெற்றுக்கொண்ட அந்த இரட்சிப்பின் சந்தோசத்தை அப்பொழுது நான் மக்களுடன் எவ்வண்ணமாகப் பகிர்ந்து கொண்டேனோ அதே வண்ணமாக, அதே பேரானந்த களிகூருதலோடும், உற்சாகத்தோடும் அந்தக் கல்வாரி அன்பை இந்த நாட்களிலும் நான் சந்திக்கும் மக்களுக்குக் கூறி வருகின்றேன். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM