வடக்கே நாங்கள் கர்த்தருடைய கிருபையால் மேற்கொண்ட தேவ
ஊழியங்களைக் குறித்து நாங்கள் விபரமாக நமது தேவ எக்காளத்தில் தேவப்பிள்ளைகளாகிய
உங்களுக்கு எழுதி தெரிவிக்கின்றோம். அது குறித்து எழுதும் விபரங்கள் அந்தந்த
நாளில் செய்யப்பட்ட ஊழியங்களை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டவையாகும். நமது
பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் அதற்காக பிரத்தியேகமாக ஒரு நோட்டுப்
புத்தகத்தை வைத்து நடைபெற்ற ஊழியங்களை உடனுக்குடன் எழுதிவிடுகின்றார்கள்.
குறிப்பாக சென்ற இடங்களின் பெயர்கள், சந்திக்கப்பட்ட கிராமங்கள், பள்ளிகள்
போன்ற அனைத்து விபரங்களும் அதில் இடம் பெறுகின்றன. ஒவ்வொரு நாள் சாயங்காலம்
அவர்கள் எழுதிய நோட்டுப் புத்தகம் எனக்கு கொடுக்கப்படுகின்றது. நான் அதை
இன்னும் முழுமையான விபரங்களுடன் டைப் செய்து கொள்ளுகின்றேன். கடந்த நாட்களில்
நான் நமது தேவ எக்காளத்தை அச்சிடும் நமது குன்னூர் அச்சுக்கூடத்தினரின் சிறிய
டைப்ரைட்டரை என்னுடன் எடுத்துச் சென்று அதில் டைப் செய்தேன் என்பது உங்களுக்கு
நினைவிருக்கும். டைப்ரைட்டர் ஆனபடியால் அதின் எடை அதிகமானது. அத்துடன் அதை
ஆங்காங்கு பாதுகாப்பாக தூக்கிக் கொண்டு செல்லுவதும் எனக்கு மிகவும் கஷ்டமாகக்
காணப்பட்டது.
கர்த்தருடைய பேரன்பால் இந்த தடவை (2012 ஆம் ஆண்டு) எடை மிகவும் குறைவானதும்,
எனது தோளிலேயே உள்ள தோள் பையில் போட்டு எளிதாக எங்கும் எடுத்துச் செல்லக்கூடிய
மடிக் கணினி (Laptop) ஒன்று எனக்குக் கிடைத்தது. அதை ஒரு கர்த்தருடைய
பிள்ளையிடம் ஒரு மாத காலத்திற்கு இரவலாக நான் வாங்கி வந்தேன். அதை எப்படி
உபயோகிக்க வேண்டும் என்ற முழு விபரங்களையும் எனக்குக் கூறி அதையே நான் இந்த
தடவை கட்டாயம் எடுத்துச் செல்லும்படியாக எனது பேரக் குழந்தைகள் என்னை
வற்புறுத்தவே சில நாட்கள் நான் அதில் டைப் செய்ய பழகி என்னை ஆயத்தப்படுத்திய
பின்னர் அதையே இம்முறை வடக்கே எடுத்துச் சென்றேன். ஊழியத்தின் பாதையில் அது
எனக்கு மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருந்தது. கர்த்தருடைய கிருபையால் அதை அநேகமாக
ஒவ்வொரு நாளும் நான் பயன்படுத்தி வந்தேன்.
தேவ ஊழியத்தின் பாதையில் நாங்கள் டார்ச்சுலா என்ற இமயமலைகளின் கடையாந்திர
எல்லைப் பட்டணத்தில் தேவனுடைய ஊழியத்தை செய்து கொண்டு அங்குள்ள ஒரு அரசாங்க
ஓய்வு விடுதியில் தங்கியிருந்தோம். சகோதரன் நார்ட்டன் அவர்களும் நானும் மேல்
மாடியில் ஒரு அறையில் இருந்தோம். ஒரு நாள் நாங்கள் எங்கள் அன்றைய நாளின் தேவ
ஊழியத்தை முடித்துவிட்டு நண்பகல் ஆகாரத்திற்குப் பின்னர் சற்று நேரம் படுத்து
இளைப்பாறினோம். அந்த வேளையில் எங்கள் அறையின் கதவு தட்டப்பட்டது. ஆனால்,
நாங்கள் எங்கள் அறையின் கதவை திறக்கவில்லை. ஆனால், அறையின் கதவை தட்டிய
மாத்திரத்தில் கதவைப் பூட்டிய கொண்டி தானாகவே திறந்து கொள்ளும் விதத்தில் அந்த
அரசாங்க ஓய்வு விடுதிக்காரர்கள் தந்திரம் செய்து வைத்திருந்தார்கள். அது
எங்களுக்குத் தெரியாது. அறையின் கதவு திறந்த மாத்திரத்தில், அவர்கள் எங்கள்
அறைக்குள் துரிதமாக வந்து மேஜை மீது இருந்த எனது செல் போனை எடுத்துச்
சென்றுவிட்டனர். அநேக ஆண்டுகளாக பத்திரமாக என் வசம் வைத்து பயன்படுத்தி வந்த
அந்த செல்போனில் தேவப்பிள்ளைகளின் சில நூறு தொலை பேசி எண்கள் பதிவு
செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. எல்லா எண்களும் அத்துடன் போய்விட்டன.
செல்போனுக்கு அருகில்தான் நான் இரவலாக வாங்கிக் கொண்டு வந்திருந்த விலை
மதிப்புள்ள மடிக்கணினி (Laptop) இருந்தது. அதை அவர்கள் எடுக்கவில்லை.
காரணம், என் உள்ளத்தில் உண்டான ஒரு தேவ உந்துதலின்படி நான் அந்த மடிக்கணினியை
ஒரு துவாலையை வைத்து சற்றும் வெளியே தெரியாதபடி நன்கு மூடி மறைத்திருந்தேன்.
நான் அப்படிச் செய்யாதிருந்திருந்தால் அந்தப் பொருளை கட்டாயம்
திருடிச்சென்றிருப்பார்கள். அதில் கொஞ்சமும் சந்தேகமே கிடையாது. அந்த அரசாங்க
விடுதிக்காப்பாளர்கள் பலத்த கொள்ளையர்கள் என்று நாங்கள் ஆகாரம் சாப்பிட்ட அந்த
இடத்திலுள்ள ஹோட்டல்காரர் எங்களிடம் சொன்னார். கைலாசம், மான்சரோவர் மலைகளுக்கு
யாத்திரைக்காக இந்தியாவின் பல மாநிலங்களிலும் இருந்து வந்து அந்த அரசாங்க ஓய்வு
விடுதியில் தங்கியிருந்த இந்து யாத்ரீகர்களின் விலையுயர்ந்த காமிராக்கள்
மற்றும் நிறைய பணத்தை எல்லாம் சமீபத்தில்தான் அந்த விடுதிக்காரர்கள்
திருடிக்கொண்டதாக அவர் எங்களிடம் சொன்னார். அரசாங்க விடுதியை ஒட்டியேதான்
காவல்நிலையமும் உள்ளது. என்ன இருந்து என்ன பயன்? எல்லாரும் ஒருவருக்கொருவர்
இணைந்து தீச்செயலில் செயல்படுவதால் நமக்கு நியாயம் செய்ய யாரும் கிடையாது.
இருப்பினும், எங்கள் அறையில் நடந்த திருட்டை அரசாங்க ஓய்வு விடுதி மானேஜரிடம்
கூறிவிட்டு வந்தோம். அதைக் குறித்து அந்த மனிதன் சற்றும் கண்டு கொள்ளவில்லை.
அவனில் எந்த ஒரு சலனமும் ஏற்படவில்லை.
கர்த்தருக்கு முன்பாக எல்லாக் காரியங்களிலும் கூடுமானவரை உண்மையாக இருக்க
வேண்டும் என்ற என் உள்ளத்தின் வாஞ்சையை அறிந்த ஆண்டவர் தமது நாமத்திற்கு
மகிமையாக மேஜை மீது செல் போனுக்கு அருகிலிருந்த கணினியை சத்துரு எடுத்துச்
செல்ல அனுமதிக்கவில்லை. கணினியை மூடியிருந்த டவலை சத்துரு தனது கரத்தால்
தொடாதபடி அவனது கரத்தை கர்த்தர் அன்று கட்டிப் போட்டுவிட்டார். அதின் காரணமாக
2012 ஆம் ஆண்டு நடைபெற்ற தேவ ஊழியங்களைக் குறித்த விபரணங்களை அப்படியே
கணினியில் பதிவுபண்ணிக் கொள்ள முடிந்தது. அதை எடுத்துச் சென்றிருந்தால் தேவ
ஊழியங்களைக் குறித்த விபரணம் எதுவும் எழுத இயலாமல் போயிருக்கும். ஆ, தேவன்
எவ்வளவு நல்லவர்! அவருக்கு முன்பாக உண்மையும், உத்தமமுமாக நடக்க மனதார
விரும்பும் அவரது அடியார்களை அன்பின் கருணாகரன் இன்றும் அரவணைத்து ஆதரித்து
நடத்தி தமது பரிசுத்த நாமத்தை அவர்கள் மூலமாக உயர்த்துகின்றார்.
மகிமைப்படுத்துகின்றார். அல்லேலூயா.
|