மீண்டும் ஒரு முறை இமயமலைகளில் தேவ ஊழியம் செய்ய கரம் பிடித்த அன்பின் கர்த்தர்



"ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணி முடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்" (யோபு 9 : 10)

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி,கனம், மகிமை உண்டாவதாக. கடந்து சென்ற ஆண்டுகளைப்போல 2012 ஆம் ஆண்டிலும் நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி உத்திராஞ்சல் மாநிலத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேவனுடைய பரிசுத்த ஊழியத்தை கர்த்தருக்கு மகிமையாக செய்து முடித்தோம். தேவனுடைய சுவிசேஷ பிரசுரங்கள் எல்லா தடவைகளையும் விட மிகவும் அதிகமாக இருந்தபடியால் இந்த தடவை நாங்கள் 10 பேர்கள் கொண்ட குழுவாக தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு 10 ஆவது தேவ ஊழியரும் தூர இடத்திலிருந்து அன்றைய நாள் முழுவதும் பிரயாணம் செய்து மாலை வேளையில் எங்களண்டை வந்து சேர்ந்துவிட்டார்கள். அடுத்த நாள் காலையில் அவர்களும் ஊழியத்தில் கலந்து கொள்ள வேண்டிய இறுதி நேரத்தில் அவர்கள் வந்து சேர்ந்த இரவில் அவர்கள் மனைவியிடத்திலிருந்து உடனடியாக புறப்பட்டு வரும்படியாக தொலைபேசி அழைப்பு வரவே அடுத்து வந்த நாளின் அதிகாலையில் முதல் பேருந்தை பிடித்து புறப்பட்டுவிட்டார்கள். அதற்கப்பால் அவர்களால் எங்கள் ஊழியத்தில் ஒரு நாள் கூட வந்து கலந்து கொள்ளவே முடியவில்லை. தனது மனைவி வேலை விசயமாக ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர்கள் உடனே புறப்பட வேண்டியதாயிற்று. ஆண்டவருடைய இந்த வழிநடத்துதல் எங்கள் அற்பமான அறிவிற்கு எட்டாத உயரமாக இருக்கின்றது.

கடந்து சென்ற எல்லா ஆண்டுகளைக்காட்டிலும் நம் அன்பின் ஆண்டவர் தமது ஊழியத்தை இந்த தடவை ஒரு மாட்சிமையான திருப்பு முனையில் பரதேசிகளாகிய எங்களைக் கொண்டு நிறைவேற்றினார். இந்த தடவை நடைபெற்ற தேவ ஊழியங்களில் தேவன் எங்களை மிகுதியும் பள்ளி மாணவ மாணவியர்களின் மத்தியிலேயே ஆச்சரியமாக பயன்படுத்தினார். அரசாங்க விடுமுறை நாட்களில் பள்ளிகள் மூடப்பட்டுக் கிடந்த நாட்களில் நாங்கள் கிராமங்களிலும், பட்டணத்து வீதிகளிலும் தேவனுடைய பிரசுரங்களை மக்களுடைய கரங்களில் கொடுத்தோம். மற்றப்படி பெரும்பாலும் நாங்கள் மேல் நிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், ஆங்கிலப் பள்ளிகள் (பப்ளிக் ஸ்கூல்) ஆரம்ப பள்ளிகள், நர்சரி பள்ளிகளையே குறிக்கோளாக வைத்து ஆண்டவருடைய ஊழியங்களைச் செய்தோம். கர்த்தாவின் அளவிடற்கரிய கிருபையால் நாங்கள் எங்கள் ஒரு மாத கால தேவ ஊழியத்தில் 24 மேல் நிலைப்பள்ளிகள், 7 உயர்நிலைப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள், 41 ஆரம்ப பள்ளிகள், 5 ஆங்கில பள்ளிகள் (பப்ளிக் ஸ்கூல்ஸ்) 6 நர்சரி பள்ளிகளைச் சந்தித்து கர்த்தருடைய வார்த்தைகளை ஜெபத்துடன் கொடுத்திருந்தோம்.

கடந்த கால நாட்களில் எல்லா பள்ளிகளுக்குள்ளும் தைரியமாக நுழைந்து சென்று தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்க மிகவும் தயங்கின நாங்கள் இந்த ஆண்டு கர்த்தருடைய பெலத்தால் நேரடியாக பள்ளியின் தலைமை ஆசிரியரின் அறைக்கே சென்று அவர் அனுமதி பெற்று பள்ளியின் பிள்ளைகள் அனைவருக்கும், பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியப் பெருமக்களுக்கும் ஜெபத்தோடு ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். பல பள்ளிகளில் காலையில் நடக்கும் மாணவர்களுக்கான அசெம்பிளியில் ஆண்டவர் இயேசு இரட்சகரைக்குறித்து சில வார்த்தைகள் கூறி அதின் பின்னர் பிள்ளைகளுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கும்படியாக தலைமை ஆசிரியர்கள் எங்களைக் கேட்டுக் கொண்டார்கள். அத்துடன் ஆசிரியர்களே தங்கள் மாணாக்கர்களை அவர்கள் கரங்களிலுள்ள தேவனுடைய வார்த்தைகளை கவனமாகப்படித்து பயன் அடையும் படியாகவும், எந்த ஒரு நிலையிலும் அவைகளை வீணாக்காதிருக்கவும், தாங்கள் படித்த பின்னர் அவைகளை மற்றவர்கள் படிக்கும்படியாக கொடுக்கவும் அசெம்பிளியிலேயே வேண்டுகோள் விடுத்தார்கள். இந்தக் காரியம் எங்கள் அற்பமான அறிவுக்கு எட்டாத உயரமாக இருக்கின்றது.

ஒவ்வொரு பள்ளியிலுள்ள தலைமை ஆசிரியரையும், அவருடைய சக ஆசிரியர்களையும் சந்திக்கச் செல்லுகையில் நமது தேவ ஊழியர்கள் தங்கள் கரங்களில் ஹிந்தி மொழி வேதாகமங்கள், ஹிந்தி புதிய ஏற்பாடுகள், தரமான ஹிந்தி கைப்பிரதிகள், பக்தன் சாது சுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய படங்களுடன் கூடிய புத்தகங்கள் பலவற்றையும் ஏந்திச் சென்று அவைகளை அவரிடம் காண்பித்து அவரது முன் அனுமதியைப் பெற்றுக்கொண்டார்கள். கர்த்தருடைய கிருபையால் எந்த ஒரு பள்ளியிலும் நாங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கக் கூடாது என்று எங்களுக்கு அனுமதி மறுக்கப்படவே இல்லை. எல்லா துதிக்கும் பாத்திரர் நம் தேவன் ஒருவரே.

 
தேவனுடைய ஊழியத்திற்காக அச்சிடப்பட்ட, விலை கொடுத்து வாங்கப்பட்ட சுவிசேஷப்பிரசுரங்களின் விபரம்

கடந்து சென்ற அனைத்து ஆண்டுகளைக் காட்டிலும் கர்த்தருடைய பேரன்பால் நாம் நமது இமயமலை தேவ ஊழியங்களுக்கு இந்த தடவை அதிகமான எண்ணிக்கையில் தேவனுடைய பிரசுரங்களை அச்சிட்டும், விலை கொடுத்து வாங்கவும் செய்தோம்.

உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள இந்திய வேதாகம சங்கம், அலகாபாத்திலிருந்து 1000 (ஆயிரம்) ஹிந்தி மொழி வேதாகமங்களை நாம் விலைக்கு வாங்கினோம். ஒரு வேதாகமத்திற்கு ரூபாய் 150 கட்டாயம் வாங்குகின்ற இந்திய வேதாகம சங்கத்தினர் ஆண்டுதோறும் நாம் அவர்களிடம் வாங்கும் ஏராளமான தேவனுடைய பிரசுரங்களை மனதில் கொண்டு ஒரு வேதாகமத்திற்கு ரூபாய் 120 மட்டுமே நம்மிடம் வாங்கினார்கள். ஒவ்வொரு தடவையும் 15000 இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களை நாம் அவர்களிடமிருந்து வாங்குவோம். இந்த தடவை நாம் 20000 இந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களை நமது தேவ ஊழியர் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்களின் முகவரியையும் வழக்கம்போல நாம் அச்சிட்டு வாங்கினோம். பெங்களூரில் அவைகளை அச்சிட்டு நமக்கு அனுப்பியிருந்தார்கள். ஒரு லூக்கா சுவிசேஷத்திற்கு ரூபாய் 6 (ஆறு) கட்டாயம் வாங்கும் அவர்கள் நமக்காக ஒரு பிரதிக்கு ரூபாய் 5 மாத்திரம் பெற்றுக்கொண்டார்கள். லாரி வாடகைக்கும் இதர செலவுகளுக்கும் ரூபாய் 15000 நம்மிடம் பெற்றுக் கொண்டு ஒரு தனி லாரியில் நமது பிரசுரங்களை தொலை தூரமான உத்தர் பிரதேசத்திலுள்ள அலகாபாத் பட்டணத்திலிருந்து நமது பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களுக்கு உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள அவர்கள் வீடு வரை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

மும்பையிலுள்ள சுவிசேஷ கைப்பிரதி கழகத்தில் (Gospel Literature Service) பண்டிட் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய "மோட்ச வாசல்" என்ற இந்தி மொழி கைப்பிரதி 20000 மும் மேற்கண்ட கைப்பிரதி கழகத்தினர் வெளியிட்டுள்ள "தேவனின் சமாதானம்" என்ற கைப்பிரதி 20000 மும் நாம் நமது ஊழியத்திற்காக அச்சிட்டுப் பெற்றுக்கொண்டோம். அதற்காக அவர்கள் நம்மிடம் சுமார் ரூபாய் முப்பத்து ஐயாயிரம் பெற்றுக்கொண்டு அதை லாரியில் அனுப்பும் செலவை எல்லாம் அவர்களே ஏற்று உத்தராஞ்சல் மாநிலத்திற்கே பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் மூலமாக அவர்களுடைய பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள ஒரு அச்சுக்கூடத்தினருக்கு ஏற்பாடு செய்து பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய "தீர்த்த யாத்திரை" என்ற இந்தி மொழி கைப்பிரதி 25000 மும் "ஆண்டவரே, நித்திய ஜீவனை எனக்குத் தாரும்" என்ற இந்தி மொழி கைப்பிரதி 25000 மும் நாம் அச்சிட்டுப் பெற்றுக்கொண்டோம். மேற்கண்ட 2 கைப்பிரதிகளையும் அந்த அச்சுக்கூடத்தினர் உத்தர் பிரதேசத்திலுள்ள லக்னோ (Lucknow) பட்டணத்திலுள்ள ஒரு அச்சுக்கூடத்தினருக்கு ஆர்டர் கொடுத்து அழகாக நமக்கு அச்சிட்டுக் கொடுத்தார்கள். "உங்களுடைய ஆர்டருடன் உத்தராஞ்சல் மாநில அரசாங்கம் எனக்கு கொடுத்த ஆர்டரும் எனக்கு உள்ளது. அரசாங்க ஆர்டரில் எனக்கு நல்ல லாபம் கிடைத்துக் கொண்டது. உங்களுடைய 2 கைப்பிரதிகளும் வெகு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அவைகளைப் படிக்கின்றவர்கள் எவராயினும் கட்டாயம் பயன் அடைவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த நல்ல பணிக்கு எனது காணிக்கையாக ரூபாய் 5000 தருகின்றேன்" என்று கூறி நம்மிடமிருந்து ரூபாய் 50000 பெறவேண்டிய அச்சுக்கூடத்தினர் ரூபாய் 45000 மட்டுமே பெற்றுக்கொண்டனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

டில்லியிலுள்ள "மசிஹி சாஹித்ய சன்ஸ்தா" (Masihi Sahitya Sanstha) என்ற கிறிஸ்தவ இலக்கிய ஸ்தாபனத்தினரிடமிருந்து படங்களுடன் கூடிய சாதுசுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கைப் புத்தகங்கள் 1000 மும் "மெய்ச்சமாதானத்தைத் தேடிக்கொண்டு" (The Search for True Peace) என்ற அருமையான புத்தகம் 800 ம் விலைகொடுத்து வாங்கினோம். இவைகள் இரண்டும் ஹிந்தி மொழியில் உள்ளவைகள். அதிகமான விலைக்கிரயமுடைய இந்த புத்தகங்களுக்கு நமது அருமையான தேவ ஊழியத்தை தங்கள் மனதில் கொண்டு சுமார் 36000 ரூபாய் மட்டும் நம்மிடம் வாங்கினார்கள். அவர்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கின்றோம்.

உத்தர்பிரதேச மாநிலம் மொரதாபாத் பட்டணத்திலுள்ள சகோதரன் நீலாம்பர் டாட் அவர்கள் 600 கிதியோனியர் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகளை நமக்கு இந்த தடவை ஊழியத்திற்கு இலவசமாக கொடுத்தார்கள். கடந்த தடவை ஊழியத்திற்கு 400 கொடுத்த அவர்கள் இந்த தடவை கூடுதலாக 200 புதிய ஏற்பாடுகளை நமக்குத் தந்தார்கள். சுமார் 4400 கிதியோனியர் ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகள் பாஸ்டர் சாமுவேல் சகோதரன் வசிக்கும் பித்தோர்ட்கார்ட் பட்டணத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ வழக்கறிஞர் மூலமாக நமக்கு முற்றும் இலவசமாகக் கிடைத்தது. மேற்கண்ட இரண்டு அன்பான மக்களையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.

நாம் அச்சிட்டுப் பெற்றுக் கொண்ட லூக்கா சுவிசேஷங்கள், கைப்பிரதிகள், மற்றும் விலைகொடுத்து வாங்கிய புத்தகங்களின் படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அத்துடன் இந்த தடவை தேவ ஊழியத்திற்காக நாம் பெற்றுக்கொண்ட அனைத்து தேவனுடைய பிரசுரங்களும் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் வீட்டில் பித்தோர்ட்கார்ட் பட்டணத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை நீங்கள் செய்தியில் காண்பீர்கள்.

 
2012 ஆம் ஆண்டு நமது வாகன சுவிசேஷ ஊழியத்தில் பங்கெடுத்த தேவப்பிள்ளைகள்:

2012 ஆம் ஆண்டு நமது வாகன சுவிசேஷ ஊழியத்தில் பங்கெடுத்த கர்த்தருடைய பிள்ளைகள் பாஸ்டர் என்.சாமுவேல் (பித்தோர்கார்ட்) டி.ற்றி.நார்ட்டன் (நாசரேத்) என்.சாமுவேல் (நீலகிரி) பாக்கேலால் (ருத்ரபூர்) சுனில் (சண்டாக்) பாஸ்டர் ஓபேத் (கதர்பூர்) விக்ரம் சிங் (கதர்பூர்) (வாகன ஓட்டுநர்கள் மனோஜ் (பித்தோர்கார்ட்) நரேஷ் (பித்தோர்கார்ட்) ஆவார்கள். அந்தப்படத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.

வழக்கம்போல இந்த தடவையும் நமது வாகன ஓட்டுநர்கள் சகோதரன் மனோஜ் அவர்களும், சகோதரன் நரேஷ் அவர்களுமாவார்கள். எதிர்பாராதவிதமாக மனோஜ் அவர்கள் கடுமையான மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டு டில்லியில் மருத்துவ சிகிட்சை பெற்று கர்த்தருடைய பேரன்பால் அவர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். 2 சிறிய பெண் பிள்ளைகளுக்குத் தந்தையான அவர்கள் மரணத்தோடு போராடிக் கொண்டிருந்த வேளையில் அவருடைய பெற்றோர் தங்கள் குல தெய்வங்களான கடவுளர்களைப் பற்றிக்கொள்ளும்படியாக எவ்வளவோ முயற்சித்தும் மனோஜ் அதை முற்றும் நிராகரித்து, அந்த தெய்வங்களை கண்ணேறிட்டும் பார்க்காமல் தனது முழு நம்பிக்கையையும் ஆண்டவர் இயேசு ஒருவர் மேலேயே வைத்து கர்த்தர் தனக்கு நல்ல பூரண சுகம் அளிப்பார், அவர் தன்னை ஒருபோதும் கைவிடவேமாட்டார் என்று கூறி தனது விசுவாசத்தில் உறுதியாக இருந்து பரத்திலிருந்து விடுதலையைப் பெற்றுக் கொண்டார்கள். அல்லேலூயா. மனோஜ் தன்னுடைய ஆச்சரியமான சுகத்தை குறித்து ஒரு நாள் தனது கண்களிலிருந்து கண்ணீர் வடிய வடிய எங்கள் ஜெபக்கூடுகையில் அழுதுகொண்டே சாட்சி பகர்ந்தார்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை. மஞ்சள் காமாலை நோயால் தாக்குண்ட நிலையில் மிகவும் பெலவீனமாக காட்சி தரும் மனோஜ் சகோதரனை நீங்கள் படத்தில் காணலாம். ஆரம்பத்தில் ஒரு வாரம் டில்லிக்குச் சிகிட்சைக்காக சென்றபடியால் அவர்களால் எங்களுடன் ஊழியத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலாக மற்றொரு ஓட்டுநர் கலந்து கொண்டார். அதற்கப்பால் மீதமுள்ள நாட்கள் அனைத்திலும் மனோஜ் தனது வாகனத்தை எந்த ஒரு பெலவீனமும் இல்லாமல் ஓட்டி கர்த்தருடைய ஊழியத்தை மகிழ்ச்சியோடு செய்தார்கள். வாகன ஓட்டுநர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் இருவரின் படங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

ஆச்சரியவிதமாக இந்த தடவை நமது 2 வாகனங்களின் ஒரு மாத கால வாடகையை ஒரு கர்த்தருடைய பரிசுத்த பிள்ளை ஆண்டவருடைய ஏவுதலால் சந்தித்தார்கள். ஆ, ஆண்டவருடைய வழிகளையும், அவருடைய அதிசய நடத்துதல்களையும் யாரே அளவிட முடியும்? யார் யார் ஆண்டவருடைய ஊழியங்களை பண ஆசையின்றி, மனுஷனுடைய புகழ் ஆரவாரங்களை எதிர்நோக்காமல், சிலுவை நேசரை மட்டும் உலகுக்கு உயர்த்திக் காண்பிப்பார்களோ அந்த மக்களை தேவன் இன்றும் தமது நாமத்திற்கு மகிமையாக எடுத்துப் பயன்படுத்தவல்ல கர்த்தராக இருக்கின்றார்.

அதற்காக அந்த தேவ மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் இரவும் பகலும் ஒத்தாசையின் பர்வதத்தை நோக்கிக் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியது மட்டுமேதான். தனது தேவைகளை அவன் யாருக்கும் தெரிவிக்காமல், யாருக்கும் விளம்பரப்படுத்தாமல் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருக்கு தனது தேவைகளைக்கூறிவிட்டு அவருடைய பாதங்களில் இரவும், பகலும் ஜெபத்தில் தரித்திருப்பதுதான். "என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது" (சங் 25 : 15) என்று தாவீது இராஜா தனது அனுபவத்தை நமக்குச் சொல்லுவார்.

இந்த தடவை எனது மகன் சுந்தர்சிங், சார்லஸ் பின்னி என்ற இரண்டு மகன்களும் அவர்களது குடும்பங்களும் பிள்ளைகளோடு சென்னை வரை வந்து எங்களை வழி அனுப்பிவிட்டுச் சென்றனர். அந்த நாளின் இரவில் 1:45 மணிக்கு கண் விழித்த நான் அதற்கப்பால் ஜெபத்தில் முழங்கால்களிலேயே நின்றேன். அதிகாலை 4 மணிக்கு எல்லாரும் கண் விழித்துவிட்டார்கள். ஜெபத்திற்குப் பின்னர் எனது இரு மகன்களும் அவர்களது மனைவிமார் எலிசபெத், ஜேஸ்மீன் இருவரும் எங்களுடன் வந்து எங்களை விமான நிலையத்தின் பிரதான வாயிலில் வழி அனுப்பி வைத்துவிட்டுச் சென்றனர்.

சகோதரன் நார்ட்டன் அவர்களும், பாஸ்டர் என்.சாமுவேல் மற்றும் நானும் சென்னையிலிருந்து காலை சரியாக 6 மணிக்குப் புறப்பட்டு 8:30 மணிக்கு டில்லி விமான நிலையம் வந்து சேர்ந்தோம். அங்கிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்ட அடுத்த விமானத்தில் நாங்கள் ஏறி காலை 11:15 மணிக்கெல்லாம் உத்தராஞ்சல் மாநிலத்தின் தலைநகர் டேராடூன் பட்டணத்தின் "ஜாலி கிராண்ட்" என்ற விமான நிலையத்தில் வந்து இறங்கினோம். டேராடூன் பட்டணத்திலிருந்து 26 கி.மீ. தொலைவில் கானகத்திலிருக்கும் அந்த இடத்திலிருந்து நாங்கள் பயணப்பட்டு ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள "அன்மோல்" என்ற ஒரு லாட்ஜில் வந்து தங்கினோம். அந்த நாளின் பகற் காலத்தில் நாங்கள் அங்கிருந்துவிட்டு இரவு சுமார் 11 மணி அளவில் புறப்படும் "டேராடூன் எக்ஸ்பிரஸ்" ரயிலில் காதகோடம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். இரவில் ரயிலில் எங்கள் இளைப்பாறுதல் தேவ சமாதானத்தோடிருந்தது. காதகோடம் ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு அரசாங்க ஓய்வு விடுதியில் நமது ஊழியத்தில் கலந்து கொள்ளும் சகோதரர்கள் பாக்கேலால், ஓபேத், விக்கிரம்சிங், மனோஜ், நரேஷ் ஆகிய நால்வரும் முந்திய நாளே வந்து தங்கியிருந்தனர். அவர்கள் அங்கு வந்து தங்குவதற்காகவே முன்கூட்டியே ஓய்வு விடுதியில் அறை புக் செய்யப்பட்டு ஆயத்தமாக இருந்தது.

எங்களை ஏற்றி வந்த டேராடூன் எக்ஸ்பிரஸ் ரயில் காதகோடம் ரயில் நிலையத்திற்குள் காலை 7:30 மணிக்கு வந்து சேரவும் நம்முடைய சகோதரர்கள் எல்லாரும் எங்கள் வரவை எதிர்நோக்கி எங்களைச் சந்திப்பதற்காக ரயில்வே பிளாட்பாரத்தில் ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ரயிலிலிருந்த இறங்கவும் அவர்கள் அனைவரின் சந்தோசம் பொங்கிப் பூரிப்பதாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை. எனினும் நமது டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்கள் மஞ்சள் காமாலை வியாதியால் தாக்குண்டு எலும்பும் தோலுமாக இருப்பதை நாங்கள் கண்டபோது எங்கள் கண்கள் குளமாயின. நாங்கள் எல்லாரும் ஓய்வு விடுதி அறைக்குச் சென்று குளித்து எங்களை ஆயத்தம் செய்து கொண்ட பின்னர் எங்களைச் சந்திக்க ஹல்த்வானி பட்டணத்திலிருந்து வந்திருந்த பாஸ்டர் சகோதரன் ஜேம்ஸ் அவர்கள் வரவிருக்கும் தேவ ஊழியங்களுக்காக ஜெபித்து எங்களை வழி அனுப்பி வைத்தார்கள்.

எங்கள் வாகனத்திற்கு டீசல் நிரப்பியதும் நாங்கள் அனைவரும் 220 கி.மீ. தொலைவிலுள்ள பித்தோர்ட்கார்ட் பட்டணம் நோக்கி ஜெபத்துடன் பயணப்பட்டோம். கர்த்தருடைய கிருபையால் சுமார் 8 மணி நேர பயணத்திற்குப் பின்னர் மாலை 5 மணி அளவில் நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்து அங்குள்ள உல்கா என்ற விடுதியில் தங்கினோம். நாங்கள் தங்குவதற்கு வசதியாக சில மாதங்களுக்கு முன்பாகவே அது முன்பதிவு செய்யப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

இந்த தடவை நாங்கள் பெரும் எண்ணிக்கையான தேவனுடைய பிரசுரங்களை சரியாக ஒரு மாத காலத்திற்குள்ளாக மக்களுடைய கரங்களில் கொடுத்து முடித்துவிட வேண்டியது அவசியமாக இருந்ததால் அவைகளை மக்களுக்கு கொடுக்கும் விதத்தில் குழுவாக உட்கார்ந்து வகைப்படுத்தும் பணியில் சில நாட்களை செலவிடும் காரியத்தை தவிர்ப்பதற்காக பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் குடும்பத்தினர் சில நாட்களாக இராப்பகலாக உட்கார்ந்து 20000 ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷத்துக்குள் பண்டிட் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய 3 விதமான கைப்பிரதிகளையும், மும்பையிலிருந்து நாம் அச்சிட்டுப்பெற்ற பிரதிகளையும் வைத்து அவைகளைப் பெட்டிகளில் நேர்த்தியாக வைத்துக்கட்டி வைத்துவிட்டார்கள். அவர்களின் அந்த அன்பின் செயலால் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை உடனே ஆரம்பிக்க அனுகூலமாக இருந்தது. அவர்களுக்கு நாங்கள் கர்த்தரில் பெரிதும் நன்றி கடன்பட்டுள்ளோம்.

நாங்கள் பித்தோர்கார்ட் பட்டணம் வந்து சேர்ந்து ஒரு நாள் இளைப்பாறுதலுக்குப் பின்னர் உடனடியாக 83 கி.மீ. தொலைவிலிருந்த டார்ச்சுலா என்ற பட்டணம் நோக்கிப் பயணப்பட்டோம். இந்த டார்ச்சுலா பட்டணம் சீனா மற்றும் நேப்பாள நாடுகளின் எல்லைகளில் உள்ளது. நாங்கள் எங்கள் இரு வாகனங்களையும் சாமுவேல் சகோதரன் வீட்டிலுள்ள கைப்பிரதி பெட்டிகளில் வேண்டியவற்றை டார்ச்சுலா பகுதிகளில் ஊழியத்திற்காக ஏற்றிக் கொண்டோம். பெட்டிகள் எங்கள் வாகனங்களில் ஏற்றப்படுவதை நீங்கள் காண்பதுடன் நாங்கள் அனைவரும் டார்ச்சுலா புறப்படும் முன்னர் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் வீட்டின் முன்னர் நின்று ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்ட காட்சியையும் நீங்கள் காணலாம்.


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM