தேவ ஊழியம் செய்வோரே, நீங்கள் மிகுந்த விழிப்புடன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய மூன்று காரியங்கள்.



ஸ்டீபன் ஜெஃப்ரி, ஜியார்ஜ் ஜெஃப்ரி ஆகிய இரு உடன் பிறந்த சகோதரரும் வேல்ஸ் நாட்டிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார்கள். அக்காலத்தில் வேல்ஸ் நாடானது உலகப் புகழ்பெற்ற நிலக்கரிச் சுரங்க தேசமாக விளங்கியது. அதின் காரணமாக ஸ்டீபன், ஜியார்ஜ் இருவரின் தகப்பனாரும், அவர்களுடைய இனஜனங்களும் நிலக்கரி சுரங்கங்களிலேயேதான் தொழிலாளிகளாக பணி புரிந்தனர். எனினும், ஸ்டீபன் ஜெஃப்ரி, ஜியார்ஜ் ஜெஃப்ரி சகோதரர்கள் கர்த்தரைக் குறித்து அறியவும், தேவதா பக்தி வாழ்வில் வளரவும் மிகவும் வாஞ்சையுடையோராயிருந்தனர்.

ஸ்டீபன் ஜெஃப்ரி 20 ஆம் நூற்றாண்டிலுள்ள அனைத்து தேவ ஊழியர்களிலும் ஒரு அசாதாரணமான அற்புத தேவ ஊழியராக சிறந்து விளங்குவதற்கு காரணமாக இருந்தது அவர் வேல்ஸ் நாட்டில் சென்று கொண்டிருந்த அவரது தேவாலயத்தில் தோன்றிய ஒரு அற்புத காட்சியேயாகும். இரத்தம் வடிந்து கொண்டிருந்த ஒரு ஆட்டுக்குட்டியின் காட்சியே அங்கு தோன்றிய காட்சியாகும். ஏறக்குறைய 300 பேர்கள் அந்த அபூர்வ காட்சியை தேவாலயத்துக்கு வந்து கண்டு சென்றனர்.

அந்தக் காட்சியைக் கண்ட ஸ்டீபன் ஜெஃப்ரி பிரமிப்படைந்து தேவனுக்கு முன்பாகத் தரையில் மூன்று நாட்கள் விழுந்து அழுது கொண்டிருந்தார். இந்த உலக மக்களின் தேவைகளுக்காக, விசேஷமாக வியாதி வேதனைகளால் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் சரீர சுகங்களுக்காக அவர் தேவனை நோக்கிக் கதறினார். அந்த நாட்கள் ஒன்றில் தேவனிடமிருந்து ஒரு விசேஷ அபிஷேகம் ஸ்டீபன் ஜெஃப்ரிக்கு கிடைத்துக் கொண்டதான ஒரு பரிசுத்த ஆவியின் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்த 3 நாட்களுக்குப் பின்னர் அவர் தேவாலயத்திலிருந்து புறப்பட்டபோது, தான் யாராவது வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கும்போது பரத்திலிருந்து அற்புத சுகத்தை அவர்கள் பெற்றுக் கொள்ளுவதை அவர் ஆச்சரியத்துடன் கவனித்தார். அவரது அற்புத சுகமளிக்கும் வரத்தின் காரணமாக கொஞ்ச காலத்திலேயே அவர் எந்த ஒரு பிரமாண்டமான கட்டிடத்தை வாடகைக்கு அமர்த்தினாலும் அந்தக் கட்டிடம் மக்கள் திரளினால் உடனே நிரம்பி வழிவதை அவர் கண்டார். சில பட்டணங்களில் அவர் வாடகைக்கு அமர்த்தியிருந்த கட்டிடத்துக்குள் நுழைவதற்காக ஜனங்கள் 3 நாட்கள் வரை வரிசையில் வெளியே காத்து நிற்க வேண்டியதாக இருந்தது.

ஸ்டீபன் ஜெஃப்ரி ஒரு இரும்பு மனிதனாக இருந்தார். தனக்கு முன்பாக அமர்ந்திருந்த வியாதியஸ்தர்களுக்காக அவர் பாடினார், ஜெபித்தார், பிரசங்கித்தார். அத்தனை பேரையும் கர்த்தருடைய கிருபையால் சுகப்படுத்தினார். அதின் பின்னர் பக்கத்திலுள்ள ஏதாவது ஒரு ஹோட்டலுக்குச் சென்று தனது ஆகாரத்தைப் புசித்து நன்றாகத் தூங்கி சுமார் 2 அல்லது 3 மணி நேரம் இளைப்பாறுவார். அதற்குள்ளாக அவரது சக ஊழியர்கள் வந்திருந்தோர் அனைவரையும் மண்டபத்தின் கதவுகளைத் திறந்து வெளியேற்றி ஒருவரும் இல்லாதபடி காலி செய்துவிடுவார்கள். அது நள்ளிரவு 11 மணி ஆனாலும் அல்லது விடிபகல் 2 மணி ஆனாலும் அதைக் குறித்து மக்கள் கண்டு கொள்ளவதே இல்லை. ஸ்டீபன் ஜெஃப்ரி நன்கு இளைப்பாறிவிட்டு திரும்பவும் பிரசங்க மண்டபத்திற்கு வந்து தனது பாடல்களையும், ஜெபத்தையும், பிரசங்கத்தையும் ஆரம்பிப்பார்.

சுகமளிக்கும் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே ஸ்டீபன் ஜெஃப்ரி பிரசங்க மேடையிலிருந்து குதித்து கூட்டத்தினரின் பின் பகுதிக்குச் சென்று ஒவ்வொரு வியாதிகளின் பெயர்களையும் கூறி அந்த வியாதிகள் மக்களுடைய சரீரங்களிலிருந்து வெளியேறும்படி ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் கட்டளையிடுவார். அவ்வளவுதான், அந்த வியாதியுள்ளோர் அனைவரும் பூரண சுகம் பெற்றனர்.

எலும்புகள் மாறிக்கிடந்த ஒரு மனிதனுக்காக ஜெபம் ஏறெடுக்கப்பட்ட போது அந்த மனிதனுடைய எலும்புகள் "பட்" என்ற வெடிச் சத்தத்துடன் ஒன்று கூடியதை நாங்கள் கண்டோம் என்று அங்கு கூடி வந்திருந்த மக்கள் சாட்சி பகர்ந்தார்கள்.

ஹவ்வார்ட் கார்ட்டர் என்ற தேவ மனிதர் ஒரு தடவை ஸ்டீபன் ஜெஃப்ரியின் சுகமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டபோது ஒரு நாள் இராக்காலம் ஒரு வாலிபன் தனது ஒற்றைக் காலுடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டான். அந்த வாலிபனின் அடுத்த கால் பூரண வளர்ச்சியின்றித் தொங்கிக் கொண்டிருந்தது.

அந்த வாலிபனின் காலைப் பார்த்து "காலே, இயேசுவின் நாமத்திலே நீ வளர்ச்சியடை என்று நான் உனக்குச் சொல்லுகின்றேன்" என்று ஸ்டீபன் ஜெஃப்ரி கூறினார்.

அந்தக் கூட்டத்திலிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே அந்த வாலிபனின் கால் 18 அங்குலம் அதாவது ஒன்றரை அடி அந்த இடத்தில் வளர்ந்தது. இந்தச் சம்பவத்தைக் கூறின ஹவ்வார்ட் கார்ட்டர் என்ற தேவ மனிதர் உண்மை, ஆம், உண்மை ஒன்றையே பேசக்கூடியவராவார். "அந்த ஆச்சரிய காட்சியைக் கண்ட மக்கள் மிகுந்த பரபரப்புக்குள்ளானார்கள்" என்று கார்ட்டர் தொடர்ந்து கூறுகின்றார்.

ஹவ்வார்ட் கார்ட்டர் மேலும் "சகோதரன் சும்ரால் அவர்களே, அந்த மக்கள் தங்கள் கைகளைத்தான் தங்கள் கால்களாக தரையில் ஊன்றி நடக்கவில்லை, மற்றபடி அவர்கள் குதிக்கின்றார்கள், ஓடுகின்றார்கள், "கீச்" என்று அவர்கள் கத்திக் கதறுகின்றார்கள்" என்று கூறினார்.

தேவ ஊழியக்காரருடைய ஜெபங்களால் மக்கள் குணமடையும்போது அந்த தேவ ஊழியர் தாழ்மையை அணிந்து கொள்ளுவது மிகவும் கடினமாகும். ஜனங்கள் உங்களைப் புகழும்போது, ஜனங்கள் உங்களை வாழ்த்தி, உங்களைத் தங்கள் தலையில் வைத்துத் துதி பாடும்போது, அவர்கள் தங்களுடைய செல்வத்தை எல்லாம் உங்களுடைய காலடிகளில் கொட்டும்போது நிச்சயமாக உங்களால் தாழ்மையைத் தரித்துக் கொள்ளவே முடியாது.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக ஸ்டீபன் ஜெஃப்ரி ஆப்பிரிக்க தேசத்தில் நின்று கொண்டிருந்தபோது "அன்பார்ந்த கனவான்களே, தாய்மாரே, உலகம் என்னை வணங்குவதற்காக எனது காலடிகளில் கிடக்கின்றது" என்று கூறியதாக நான் என் காதுகளால் கேட்டேன் என்று ஹவ்வார்ட் கார்ட்டர் என்னிடம் சொன்னார்.

ஸ்டீபன் ஜெஃப்ரி தனது எளிமையான பிரசங்கங்களைத் தொடர்ந்து கொஞ்ச காலம் செய்து வந்தார். ஆரம்ப காலங்களில் நடைபெற்ற அதே வல்லமையான அற்புதங்கள் அவரது கூட்டங்களில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. ஆனால், அவரண்டை சேர்ந்திருந்த அவரது திரண்ட ஐசுவரியம் அவரைப் பாதிக்கத் தொடங்கியது. ஒரு சாதாரண நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளியைப்போல காட்சியளிக்க வேண்டிய தேவ மனிதர் பட்டும் பீதாம்பரமும் உடுத்த கத்தோலிக்க பேராயராக காட்சியளித்தார்.

1936 ஆம் ஆண்டு நான் இங்கிலாந்து தேசத்திற்குத் திரும்பியபோது ஸ்டீபன் ஜெஃப்ரி வியாதிக்குள்ளானார். நான் அவரைக் காண்பதற்காக அவர் வாழ்ந்த வேல்ஸ்க்கு ஒரு ரயில் மூலமாகப் பயணமானேன். காரணம், மேலே கண்ட ஹவ்வார்ட் கார்ட்டருடன் நான் தீபெத், ஜாவா, ரஷ்யா, சைபீரியா போன்ற நாடுகளுக்கு மிஷனரியாக சென்ற எனது வரலாறுகளை வாசித்து பரவசம் அடைந்ததுடன் என்னை எப்படியாவது காண வேண்டுமென்ற ஆவல் ஸ்டீபன் ஜெஃப்ரிக்கு இருந்ததை நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தேன்.

அந்தச் சமயம் ஸ்டீபன் ஜெஃப்ரி, கீல்வாத மூட்டு வீக்க வியாதியால் பெரிதும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். நான் அவரது முகத்தைப் பார்ப்பதற்காக அவருக்கு முன்பாகத் தரையிலே அமர்ந்திருந்தேன். ஆ, அவர் எத்தனையான இனிமையான முகத்தை தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய தலையும், கழுத்தும் சற்று வளைந்து காணப்பட்டது. அவருடைய புயங்களும், தோள் பட்டைகளும் முறுக்கப்பட்டதாக இருந்தன.

அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக வடிந்து கொண்டிருந்தது. "எந்த முதல் தரமான கொடிய வியாதியை நான் மக்களிடமிருந்து விரட்டியடித்தேனோ அந்த பயங்கர வியாதியே இன்று என்னைப் பற்றிக் கொண்டுள்ளது" என்று அவர் என்னிடம் கண்ணீருடன் சொன்னார்.

"நான் உங்களைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன். உங்களுடைய மாபெரும் உயிர் மீட்சி கூட்டங்களைக் குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளிலும் உலகின் இதர பல தேசங்களிலும் நடைபெற்ற உங்களுடைய மாபெரும் சுகமளிக்கும் கூட்டங்களிலே கலந்து கொண்ட மக்கள் அதிசய அற்புதமாக குணமடைந்த சரித்திரங்களை குறித்து நான் மக்கள் சொல்லக் கேட்டிருக்கின்றேன். உங்களைப் பார்ப்பதற்காகவே நான் இப்பொழுது வந்தேன்" என்று நான் கூறினேன்.

"சகோதரன் சும்ரால் அவர்களே, என்னை இந்த அறையில் வந்து எந்த ஒரு பிரசங்கிமார்களும் பார்த்து பல வாரங்கள் ஆகின்றன. நான் சபைகளைக் கொடுத்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆலயத்தையும் கொடுத்த எனது எந்த ஒரு பாஸ்டர்களும் கூட இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை" என்றார் அவர்.

"அதைப்பற்றி நீங்கள் எந்த ஒரு மன துயரமும் கொள்ள வேண்டாம். நீங்கள் எந்த ஒரு அபிஷேகத்தைப் பெற்றிருக்கின்றீர்களோ அந்த அபிஷேகத்தினைக் கொண்டிருக்கும் தேவ மக்களே உங்களைக் காண ஆவல் கொண்டு வருவார்கள். என் வாழ்க்கையில் நான் கண்ட மிகுந்த மனமகிழ்ச்சியின் நாள் இதுவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்" என்று நான் அவரிடம் கூறினேன்.

ஒரு காலத்தில் தேவனுடைய மகா வல்லமையான பாத்திரமாக கர்த்தருடைய அபிஷேகத்தைப் பெற்று அவரால் அநேகருக்கு ஆசீர்வாதமாக பயன்படுத்தப்பட்டு, பின்னர் அந்த பரிசுத்த நிலையிலிருந்து வீழ்ந்துபோன ஒரு மாபெரும் தேவ மனிதரோடு நான் சில மணி நேரங்களைச் செலவிட்டது எனக்கு மிகுந்த சந்தோசமாக இருந்தது. தேவனுடைய கரங்களால் மிகவும் வல்லமையாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதர் இப்படி வீழ்ச்சியடைவது சாத்தியமாகுமா என்று என்னைத் தேவ ஊழியத்தின் பாதையில் பக்குவப்படுத்திய தேவ மனிதர் ஹவ்வார்ட் கார்ட்டரிடம் நான் கேட்டேன்.

"சும்ரால் அவர்களே, தேவன் தமக்கே உரியதான தமது பொன்னையும், மகிமையையும் தமது ஊழியக்காரர் வைத்துக் கொள்ள ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார். வேல்ஸ் நாட்டின் நிலக்கரிச் சுரங்கங்களில் சாதாரண தொழிலாளியாக இருந்த இந்தப் பையன் தனது அறியாமையின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களால் ஏராளம் தாராளமாக அள்ளி வீசப்பட்ட பொன்னையும், தேவனுக்குச் சேர வேண்டிய மகிமையையும் தனக்கென்று எடுத்துக் கொண்டதினால்தான் மாபெரும் தவறு நிகழ்ந்துவிட்டது" என்று அவர் என்னிடம் சொன்னார்.

ஸ்டீபன் ஜெஃப்ரி இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் வெகு சீக்கிரமாகவே மரித்துப் போனார். நான் அவரண்டை சென்றிருந்தபோது அவர் எனக்குச் சொன்ன ஆவிக்குரிய ஞான அறிவுரைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இன்றும் இருக்கின்றன.

ஸ்டீபன் ஜெஃப்ரி நாட்களில் ஏற்பட்ட உயிர் மீட்சியின் காரணமாக ஏற்பட்ட அநேக சபைகளின் பாஸ்டர்கள் அவருடைய மரணப்படுக்கையில் அவரை வந்து பார்க்கவே இல்லை. அந்த தேவ மனிதரின் வீழ்ச்சியிலிருந்து நான் கற்றுக்கொண்ட மாபெரும் பாடத்தை எனது தேவ ஆலோசனைக்காக என் முகத்தை நோக்கிப் பார்க்கும் எனது இளைய தலை முறையினரான தேவ ஊழியர்களுடன் நான் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

ஜீவனுள்ள தேவனுடைய பொன்னையும், அவருக்குச் சேர வேண்டிய மகிமையையும் தொடக்கூடாது என்ற சத்தியத்தை ஸ்டீபன் ஜெஃப்ரிக்கு ஒருவரும் போதிக்கவில்லையாதலால் அவர் தமது தேவ வல்லமையை இழந்து நிர்ப்பந்தனாக மரித்தார்.

 
முற்றும் வித்தியாசமான சகோதரன், முற்றும் வித்தியாசமான படுகுழி:

ஸ்டீபன் ஜெஃப்ரியின் உடன் பிறந்த சகோதரனான ஜியார்ஜ் ஜெஃப்ரி அவரது வாத்திய இசை மேலாளராக அவரோடு பயணம் செய்தார். தனது உடன் பிறந்த சகோதரனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட அதே அபிஷேகமும், தேவ வல்லமையும் தனக்கும் கொடுக்கப் பட்டிருப்பதை ஜியார்ஜ் ஜெஃப்ரி விரைவாகக் கண்டு கொண்டார். எனினும், அவர்கள் இருவரின் உடல் அமைப்புகளிலே பெரிய வித்தியாசங்கள் இருந்தன. ஸ்டீபன் ஜெஃப்ரி மிகுந்த மனமகிழ்ச்சியுடையோராயும், பாடும் மனிதராயும் இருந்தார். அதே வேளை ஜியார்ஜ் ஜெஃப்ரி அமைதியுடையோராயும், கருமை நிறமுடையவராகவும், அழகான உடற்கட்டுடையவராகவும் காணப்பட்டார்.

ஜியார்ஜ் ஜெஃப்ரி கொஞ்சம் சபைகளையே கட்டினார். ஆனால் ஸ்டீபன் ஜெஃப்ரி அநேகம் சபைகளை உருவாக்கினார். அவர்கள் இருவருக்குள் தங்கள் சபைகளைக்குறித்து எந்த ஒரு வாக்குவாதங்களோ, சண்டை சச்சரவுகளோ எழும்பவே இல்லை. அவர்கள் இருவரின் சபைகளும் இரண்டு வாழ்வின் வழிகளாக இரண்டு பெரும் வழி ரஸ்தாக்களைப்போன்று சென்று கொண்டிருந்தன.

ஜியார்ஜ் ஜெஃப்ரி கெம்பீரமான குரல் வளத்தை தன்னகத்தே கொண்டிருந்தார். இங்கிலாந்தின் லண்டன் மா நகரிலுள்ள ராயல் அல்பெர்ட் ஹாலில் அவரது கூட்டங்கள் நடைபெற்றன. 10000 க்கும் அதிகமான மக்கள் அந்தக் கூட்டங்களுக்கு வந்திருந்தனர். அநேக நூற்றுக்கணக்கான மக்கள் அங்கே உட்காருவதற்கு இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர். ஜியார்ஜ் ஜெஃப்ரி தனது சகோதரன் ஸ்டீபன் ஜெஃப்ரியைவிட சிறப்புற்று விளங்கினார். அதின் ஒரே எளிய காரணம், அவர் தனது சகோதரனைக் காட்டிலும் காரியங்களை திறம்பட்ட விதத்தில் ஒழுங்குபடுத்திச் செய்ததுதான்.

ஜியார்ஜ் ஜெஃப்ரியின் ராயல் அல்பெர்ட் ஹால் கூட்டத்தை நான் கவனித்தேன். அவரின் கண்கள் அவருக்கு முன்பாக கூடியிருந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனத்திரளை காண முடிந்தது. தனக்கு முன்பாகக் கூடி வந்த மக்களின் தேவைகளை அவர் அறிகின்றவராக இருந்தார். அவர் ஜெபித்தபோது அற்புதங்கள் நடைபெற்றன.

லண்டனிலுள்ள அரச குடும்பத்தில் யாராவது வியாதிப்பட்டால் ஜியார்ஜ் ஜெஃப்ரியையே ஜெபிப்பதற்காக அரச அரண்மனைக்கு அவர்கள் அழைத்தார்கள். அரச அரண்மனையின் விலையேறப்பெற்ற காரில் அவரை அழைத்துக் கொண்டு வந்தனர். ஜியார்ஜ் ஜெஃப்ரி மிகவும் சாமர்த்தியமான தந்திர மனிதனாகவுமிருந்தார். தனது பெயரையும், தனது புகழையும் காப்பாற்றும் விஷயத்தில் அவர் மிகவும் கருத்துடையவனாக இருந்தார்.

ஜியார்ஜ் ஜெஃப்ரியும் தனது ராஜ பாதையிலிருந்து வழி விலக ஆரம்பித்தார். இங்கிலாந்து தேசமானது இஸ்ரவேலின் காணாமற் போன கோத்திரங்களில் ஒன்று என்று எழுதப்பட்ட ஒரு புஸ்தகத்தை அவர் வாசித்து அதை அப்படியே நம்பத் தொடங்கினார். இந்த நூதனமான விளக்கத்தை அவர் கொடுக்க ஆரம்பித்த உடனேயே அவர் ஸ்தாபித்திருந்த சபைகளின் பாஸ்டர்களில் பாதிப்பேர் அவரிடமிருந்து விலகிச் சென்று விட்டனர். அதற்குப்பின்னர் அவர் மேற்கொண்ட உலகளாவிய ஒரு ஊழியத்தில் மேற்கண்ட விளக்கத்தை அவர் கூறவே அவரது ஊழியம் முடிவு பெற்று அவர் முற்றுமாகத் தனிமைக்குத் தள்ளப்பட்டார்.

யாரோ ஒருவர் எழுதிய ஒரு கொள்கையைப் பின்பற்றி, தான் தனது சிறு பிராய முதல் வேதாகமத்தின் மூலமாகப் போதிக்கப்பட்ட தேவ சத்தியத்திலிருந்து வழி விலகிச் சென்ற போது தேவனுடைய மகிமை ஜியார்ஜ் ஜெஃப்ரியை விட்டுக் கடந்து சென்றுவிட்டது. கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்திலுள்ள தேவனுடைய போதனைகளில் தன்னை நிலைப்படுத்தாமல் மண்ணான மாந்தரின் மாம்சத்தின்படி எழுதப்பட்ட வார்த்தைகளுக்கு அவர் தமது செவியைச் சாய்த்தார்.

நான் எப்பொழுதுமே பிரசங்கிமார்களுக்குச் சொல்லக்கூடிய மூன்று காரியங்கள் யாதெனில், பெருமை, பணத்தின் மேல் பற்று, பெண்ணாசை என்ற தீமைகளைக் குறித்து அவர்கள் மிகுந்த விழிப்போடு இருத்தல் வேண்டும். பெருமையப்போல தேவன் உக்கிரமமாக வெறுக்கும் காரியம் வேறு எதுவுமே இல்லை. பெருமைக்கு அவர் முதல்தரமான எதிரியாவார். நமது தேசத்திலே புகழ்பெற்ற தேவ ஊழியர்கள் இருக்கின்றனர். அவர்களண்டை நீங்கள் நெருங்கவே முடியாது. அதின் ஒரே எளிய காரணம், அந்த தேவ ஊழியர்கள் தங்களை மற்றவர்களைவிட ஏதோ உயர்ந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பதுதான்.

தேவ ஊழியத்திலே கர்த்தரால் நீங்கள் நன்கு பயன்படுத்தப் படும்போது உலகப்பிரகாரமான செல்வம் உங்களண்டை தானாகவே வந்து சேரத் துவங்கும். தேவன் உங்களை அந்த செல்வத்தை வழிந்தோடச் செய்யும் ஒரு வாய்க்காலாக மாத்திரமே நீங்கள் இருக்க விரும்புகின்றார். அதற்கு மாறாக நீங்கள் ஒரு அணையைக்கட்டி உங்களண்டை வருகின்ற செல்வம் அனைத்தையும் ஒரு துளி கூட வெளியேறாதபடி தடுத்து நிறுத்தி ஒரு ஏரியாக அதைக் கட்டுக்குள் வைப்பீர்களானால் அது சவக்கடலாக மாறிவிடும். காரணம், சவக்கடலிலிருந்து எதுவுமே வெளியே செல்லுவதில்லை.

தேவனுடைய ஊழியன் வாங்குகிறவனாக மட்டுமல்ல, அவன் கொடுக்கிறவனாக கட்டாயம் இருக்க வேண்டும். பண ஆசை என்ற பேராசை அல்லது செல்வத்தை குறித்த இச்சை உனக்கு வரும்போது தேவனுடைய பரலோக உறவை நீ முழுமையாக இழந்துபோவாய்.

500 பேர்களை தங்கள் சபையின் அங்கத்தினராகக் கொண்டிருக்கும் தேவ ஊழியர்கள் பலரும் தங்களின் ஐந்நூறு பேர்களிலே 10 பெண்கள் தங்களுடைய சபையின் பாஸ்டர் தங்களுடனே ஒரு இரவைப் படுக்கையில் களிப்பதற்காக தங்களுடைய ஆத்துமாக்களையே பணயம் வைக்கத் தயாராயிருக்கின்றார்கள் என்பதை அநேக பாஸ்டர்கள் அறியாத பேதையான புறாக்களாக இருக்கின்றனர். அதற்காக அவர்கள் தங்கள் பாஸ்டர்களை கடவுளர்களாக எண்ணி அவர்களுக்குப் பணிவிடை செய்து கொண்டிருக்கின்றனர். தங்கள் சபையின் பாஸ்டர்களோடு தாம்பத்திய உறவு கொள்ளுவதை அவர்கள் தங்கள் முழு வாழ்க்கையின் மாபெரும் சாதனையாகக் கருதுகின்றனர். தந்திர சாத்தானும் இது விசயத்தில் அந்த மக்களுக்கு உதவிக் கரம் நீட்டி அவர்கள் மூலமாக தேவனுடைய ஊழியனை நித்திய அக்கினிக்கடலில் தள்ள இராப்பகலாக போராடிக் கொண்டிருக்கின்றான்.

சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் ஒரு தேவ ஊழியன், தான் ஒரு மாபெரும் தேவனின் ஊழியக்காரன் என்றும் தேவனுடைய ஜனத்தின் பணிவிடைக்காரன் என்றும் திட்டமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தேவ ஊழியன் பெரியவன் அல்ல, தேவன் ஒருவரே பெரியவர். விபச்சாரப் பாவத்தில் விழ வேண்டும் என்று தீர்மானித்து அதில் வீழ்ந்த அல்லது அந்தக் கொடிய பாவத்தைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செய்த எந்த ஒரு தேவ ஊழியனையும் நான் உலகில் கண்டதே இல்லை.

பழைய ஏற்பாட்டின் புத்தகத்திலே யோசேப்பு நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்துவுக்கு முன் மாதிரியாக விளங்குகின்றார். அவர் நாம் மேலே கண்ட மூன்று காரியங்களுக்கும் தன்னை விலக்கிக் காத்துக்கொண்ட தேவ மனிதனாவார்.

ஜியார்ஜ் ஜெஃப்ரி மரணமடைந்தபோது இங்கிலாந்து தேசத்தின் செய்தி தாட்கள் "ஜியார்ஜ் ஜெஃப்ரி என்ற இங்கிலாந்து தேச சுவிசேஷகர் இந்த நாளில் மரணமடைந்தார்" என்ற ஒற்றை வரி செய்தியை மட்டும்தான் எழுதியிருந்தது. மாட்சியும், மகத்துவமுமாக, பராக்கிரமசாலிகளாக தேவனுடைய பரிசுத்த ஊழியத்தின் பாதையில் பிரகாசமாக ஓட ஆரம்பித்த ஸ்டீபன் ஜெஃப்ரி, ஜியார்ஜ் ஜெஃப்ரி என்ற இரட்டைச் சகோதரர்களின் சோக முடிவு இதுவேதான்.



 

"ஓ ஐயாமாரே, உங்களது தனிப்பட்ட வாழ்வின் பரிசுத்தம் உங்களது மரணத்தை ஒரு நல்ல விருந்தாளியாகவும், ஒரு நல்ல நண்பனாகவும், நற்செய்தி கொண்டு வரும் ஒரு தூதுவனாகவும் உங்களைக் காணச் செய்யும். அந்த அற்புத பரிசுத்தமானது மரணத்தை அள்ளி அணைத்து முத்தமிட உங்களுக்கு உதவி செய்யும். இத்தாலி நாட்டு தேவ பக்தன் ஃபாலினஸ் தான் இரத்தசாட்சியாக மரித்த நாளில் தனது கொலையாளியை அரவணைத்து முத்தமிட்டது போல உங்களது பரிசுத்தமான வாழ்க்கை உங்களது மரணத்தை வாரி அணைத்து முத்தமாரி பொழிய உங்களுக்கு கைகொடுத்து உதவும்"

(தாமஸ் புரூக்ஸ்)


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM