முடிவில்லாத நித்தியத்தை சந்திக்க நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா?

நான் இப்பொழுதுதான் ஒரு துயரமான சம்பவத்தைக் குறித்து ஒரு செய்தித்தாளில் வாசித்து முடித்தேன். 1981 ஆம் வருடம் வசந்த காலத்தில் ஒரு இளைஞன் அமெரிக்க நாட்டின் வடக்கு அலாஸ்கா என்ற இடத்தின் பாழான பகுதியின் இயற்கை அழகுகளையும், அந்த இடத்தின் வெளிக்கு வராத மர்மங்களையும் வெளி உலகுக்குக் கொண்டு வரும் பொருட்டாக ஒரு விமானத்தை வாடகைக்கு அமர்த்தி அங்கு பறந்து சென்று தரை இறங்கினான். அவன் தன்னுடன் 500 புகைப்படச் சுருள்களையும் கொண்டு சென்றான். காட்டு விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள மிகவும் துல்லிபமாக சுடக்கூடிய துப்பாக்கிகளையும் அவன் தன்னுடன் எடுத்துச் சென்றதுடன் தனது ஆகாரத்துக்காக 1400 பவுண்டுகள் எடையுள்ள உணவுப் பொருட்களையும் கொண்டு சென்றிருந்தான்.

மாதங்கள் கடந்து சென்றிருந்தன. அவனுடைய நாட் குறிப்புப் புத்தகங்களில் அவன் சென்ற இடங்களில் அவன் கண்ட காரியங்களை எல்லாம் ஆச்சரியம் அற்புதமாக அநேக பக்கங்களில் எழுதி வர்ணித்து வைத்திருந்தான். அந்த இடத்தின் அநேக அழகுப் படங்களை எல்லாம் அவன் தனது புகைப்படக் கருவிகளில் எடுத்திருந்தான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் தன் நாட் குறிப்புப் புத்தகங்களில் தனது வியாகுலப் புலம்பல்களை மிகுந்த துயரத்தோடு எழுதுபவனாக இருந்தான். "நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேனோ அதே போன்று நான் எனது வேலைகளை முடித்ததும் இந்த இடத்திலிருந்து வெளியேறிச் செல்லுவதற்கான ஏற்பாட்டை நான் மிகுந்த முன் ஞானத்துடன் கட்டாயம் செய்திருக்க வேண்டும். ஆனால், நான் எத்தனை மதியீனமாக நடந்து கொண்டேன்" என்று ஒரு நாளில் அவன் தனது டயரியில் எழுதி வைத்திருந்தான்.

1981 ஆம் வருடம் நவம்பர் மாதம் அவன் சென்றிருந்த இடத்தின் பெயரில்லாத ஒரு பள்ளத்தாக்கில், பெயரில்லாத ஒரு ஏரிக்கரை ஓரமாக ஃபேர்பாங்ஸ் என்ற இடத்திலிருந்து 225 மைல்கள் தொலைவில் அவன் மரித்துக் கிடந்தான். அரசாங்கம் அவனது மரணத்தைக் குறித்து விசாரணை நடத்தியதில் அவன் தனது ஒரு வழிப்பயணத்திற்கான எல்லாக் காரியங்களையும் மிகுந்த ஞானத்தோடும், விவேகத்தோடும் செய்திருந்தும் அவன் அந்த இடத்தில் தனது திட்டங்களை நிறைவேற்றி முடித்துக் கொண்டு அங்கிருந்து விமானத்தின் மூலமாக வெளி உலகத்துக்குப் பறந்து வர எந்த ஒரு முன்னேற்பாடுகளும் செய்யத் தவறிவிட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

மேற்கண்ட வாலிபனின் புத்தியீனமான செயலைக் குறித்து நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. போவதற்கும், அங்கு பாதுகாப்பாகத் தங்கியிருப்பதற்கும், புசிப்பதற்கும், குடிப்பதற்கும் எல்லா ஏற்பாடுகளையும் மிகுந்த ஞானத்தோடு செய்து கொண்டு சென்ற அவன் அங்கு தனது வேலை முடிந்ததும் குறிப்பிட்ட நாளில் தன்னை அங்கிருந்து அழைத்துக்கொண்டு செல்லும்படியான விமான பயணத்துக்கான ஒழுங்குகளைச் செய்ய அவன் முற்றிலுமாகத் தவறிவிட்டான். எத்தனை சோகமான காரியம்! எத்தனை மதியற்ற செயல்! என்று நாம் அவனை வெகுவாக நொந்து கொள்ளுவோம். ஆனால், நாம் அவனைவிட புத்திசாலிகள் அல்ல என்பதை நம்மை நாமே ஆண்டவருடைய சமூகத்தில் ஆராய்ந்து பார்த்தால் கண்டு கொள்ளுவோம். நம்மில் எத்தனை பேர் இந்த உலகத்தில் நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கும், மனமகிழ்ச்சியாக இந்தப் பூமியில் நமது நாட்களைச் செலவிடுவதற்கும் எத்தனை புத்திசாலித் தனமான திட்டங்களை எல்லாம் தீட்டி எத்தனை ஞானமாகக் காரியங்களைச் செய்திருக்கின்றோம். இரவும் பகலும் நமது காலங்களையும், மணி நேரங்களையும் எத்தனை விவேகத்துடனும், யூகத்துடனும் அதற்காக நாம் செலவிடுகின்றோம். ஆனால், நாம் இந்த உலகத்தை விட்டுப் பாதுகாப்பாக கடந்து செல்லுவதற்கான ஆயத்தங்களைச் செய்திருக்கின்றோமா? இன்று நாம் மரித்தால் நமது நித்தியத்தை எங்கே செலவிடுவோம்? தேவனுடைய வேதாகமம் "அன்றியும் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும் மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" (எபி 9 : 27) என்று வெகு திட்டமாகப் பேசுகின்றது. உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு" (ஆமோஸ் 4 : 12) என்று தம்முடைய இஸ்ரவேல் ஜனத்தை தேவன் எச்சரித்தார். நாமும் அதைப்போல ஆண்டவரைச் சந்திக்கும்படியாக அவரால் அழைக்கப்படுகின்றோம், எச்சரிக்கப்படுகின்றோம். அந்தக் காரியத்தை நாம் இன்றே செய்யும்படியாக தேவனால் உணர்த்தப்படுகின்றோம். மரணத்திற்குப் பின்னால் காரியங்கள் எல்லாம் நம்மால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு அணை கடந்த வெள்ளமான கதையாகிவிடும்.

ஆண்டவரைச் சந்திப்பதற்கு எப்படி ஆயத்தமாவது? நம்முடைய கடந்த கால பாவங்களை எல்லாம் தேவ சமூகத்தில் நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடும், வியாகுலத்தோடும், கண்ணீரோடும் அழுது அறிக்கை செய்து பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் நம் உள்ளத்தில் பெற்று மறுபடியும் பிறந்த பரிசுத்த அனுபவத்துக்குள் கடந்து வந்து ஒப்புரவாக வேண்டியவர்களுடன் ஒப்புரவாகி, நம்மால் நஷ்டமடைந்த காரியங்களுக்கான ஈடுகளைக் கொடுத்து காரியங்களைச் சரிசெய்து கொள்ள வேண்டும். அத்துடன் இந்த உலகத்தில் ஜீவிக்கின்ற காலம் எல்லாம் கர்த்தருக்குப் பயந்து அவருடைய வசனத்தின்படியான பரிசுத்த ஜீவியம் செய்ய வேண்டும். இதைச் செய்வதுதான் பரலோகம் செல்லுவதற்கான பாஸ்போர்ட்டை நமக்கு அளிக்கின்றது. நித்தியத்திற்கான இந்த பாஸ்போர்ட் உனக்கு கிடைத்து விட்டதை உனது உள்ளத்திலேயே நீ உணர்ந்து ஆனந்திக்கலாம் (லூக்கா 17 : 21) நித்தியத்திற்கான இந்த பாஸ்போர்ட் இல்லாமல் நீ இந்த உலகத்தை கடந்து சென்றுவிடாதே. இந்த உலகத்துக்கு வந்த நீ இந்த உலகத்திலிருந்து மிகுந்த பாதுகாப்புடன் முடிவில்லாத நித்தியத்துக்குள், தேவனுடைய பரம இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க இந்தக் கிருபையின் காலத்தில்தானே உன்னை தேவ பெலத்தால் ஆயத்தப்படுத்திக் கொள். அதற்கான கிருபைகளை ஆண்டவர் தாமே உனக்குத் தந்தருள்வாராக.

(மொழி பெயர்ப்புச் செய்தி)


 

தேவ எக்காளம்

இந்த உலகத்தில் நீங்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளவும், தேவனுக்கு பிரியமானதோர் பரிசுத்த ஜீவியம் செய்யவும், இம்மை வாழ்வுக்குப் பின்னர் நீங்கள் ஆண்டவர் இயேசுவோடு பரலோகத்தில் யுகாயுகமாக பேரின்ப வாழ்வு வாழவும் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு எளிய பத்திரிக்கைதான் தேவ எக்காளமாகும். மிகுதியான ஜெபத்தோடும், ஆத்துமப் பாரத்தோடும் முழங்கால்களில் ஆயத்தம் செய்யப்படுகின்ற இந்தப் பத்திரிக்கையை நீங்கள் ஜெபத்தோடும், உண்மையும் உத்தமுமான இருதயதோடும், தாழ்ந்த சிந்தையோடும் வாசித்து பரலோக ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM