தேவப்பிள்ளையே, உங்கள் உருக்கமான ஜெபங்களை ஆவலோடு எதிர்நோக்குகின்றோம்

கர்த்தருக்குச் சித்தமானால், அவருடைய அநாதி அன்பு எங்களைத் தாங்கி அரவணைத்து வழிநடத்துமானால் இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடைந்த சில தினங்களில் நாங்கள் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே கடந்து செல்லுவோம். இந்த தடவையும் ஏழை பரதேசிகளாகிய நாங்கள் வழக்கம்போல ஒரு குழுவாக ஒன்று கூடி அன்பின் ஆண்டவருடைய மாட்சியான உன்னத ஊழியத்தை ஒரு முழுமையான மாத காலம் உத்தராஞ்சல் மாநிலத்தில் நிறைவேற்ற அன்பின் பரம தகப்பன் பாராட்டிய அவருடைய இரக்க புண்ணியத்திற்காக அவருடைய பொற் பாதங்களை முத்தமிட்டு வாழ்த்துகின்றேன்.

கடந்து சென்ற எல்லா ஆண்டுகளையும் விட கூடுதலான அளவில் நாம் நமது தேவ ஊழியத்திற்குத் தேவையான தேவனுடைய பிரசுரங்களை கர்த்தருடைய கிருபையால் பல்வேறு இடங்களில் அச்சிட்டும், விலைக்கும் பெற்றிருக்கின்றோம். அந்த ஏராளமான பிரசுரங்கள் அனைத்தும் மழை காலங்களுக்கு முன்பாக பாதுகாப்பாக நமது கரங்களை வந்தடைய அன்பின் ஆண்டவர் கிருபை செய்திருக்கின்றார்.

உத்தராஞ்சல் மாநிலத்திலும் நாம் சுவிசேஷம் அறிவிக்க எவ்வளவு காலம் நமக்கு வாசல்கள் திறந்திருக்கும் என்று சொல்ல இயலாது. காரணம், அந்த மாநிலத்திலும் சாத்தான் சுவிசேஷத்திற்கு எதிராக அங்குள்ள பல இடங்களில் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கின்றான். குறிப்பாக அங்குள்ள பாகேஷ்வர் என்ற இந்துக்களின் புண்ணிய ஷேத்திரமான இடத்தில் ஒரு காலத்தில் நாம் தேவ சமாதானத்தோடு ஊழியம் செய்து வந்தோம். எந்த ஒரு எதிர்ப்பும் நமக்கு விரோதமாக எழும்பவில்லை. ஆனால், இன்று அந்த இடத்தில் கதவுகள் பலமாக மூடப்பட்டுவிட்டது. இப்பொழுது எவரும் அந்த இடத்திற்குச் சென்று சுவிசேஷ ஊழியம் செய்ய இயலாதவாறு வாசல்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன.

அன்பின் ஆண்டவர் கிருபையாக நமக்கு வழிவாசல்களைத் திறந்து கொடுக்கும் இடங்களில் அவருடைய சுவிசேஷத்தை அறிவிக்க நாங்கள் மிகுந்த ஜெபத்தோடு ஆயத்தமாகி இருக்கின்றோம். இந்த ஊழியங்களுக்காக கடந்த பல மாதங்களாகவே இந்த ஊழியங்களில் கலந்து கொள்ளும் தேவ ஊழியர்களாகிய நாங்கள் தேவ பெலத்தால் தொடர்ச்சியாக ஊக்கமாக ஜெபித்து வந்திருக்கின்றோம்.

தேவப் பிள்ளைகளாகிய நீங்களும் இந்த ஊழியங்களின் ஆசீர்வாதத்திற்காக தொடர்ந்து அன்பாக ஜெபித்து வந்திருக்கின்றீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. வரும் நாட்களிலும் எங்கள் எல்லாருடைய நல்ல உடல் நலத்துக்காக நீங்கள் கருத்தாக ஜெபித்துக் கொள்ளுங்கள். பெரும் பணச்செலவில் நாம் அச்சிட்டுப் பெற்றுள்ள மற்றும் விலை கொடுத்து வாங்கியுள்ள தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளடங்கிய ஏராளமான பிரசுரங்களை பாதுகாப்பாக நாங்கள் தேவன் முன் குறித்துள்ள மக்களின் கரங்களில் ஜெபத்தோடு கொடுக்கவும், அவைகளில் ஒன்று கூட வீணாகப் போய்விடாதபடி கர்த்தர் காத்துக்கொள்ளவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். நாம் வாடகைக்கு அமர்த்திச் செல்லும் 2 வாகனங்களை சாத்தானின் விஷமிகள் சேதம் விளைவியாமல் கர்த்தர் பாதுகாக்க ஜெபியுங்கள். பள்ளிகள், உயர் நிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை நாங்கள் தாராளமாக விநியோகிக்க எந்த ஒரு தடைகளும் இல்லாமல் பள்ளிகளில் எங்களுக்கு அனுமதி கிடைக்க உங்கள் ஜெபங்களை நாங்கள் எதிர்நோக்குகின்றோம். காரணம், தந்திர சாத்தான் தனது ஆட்களை சுவிசேஷத்திற்கு எதிராக எல்லா இடங்களிலும் வைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் தனது அனுமதியை சந்தோசமாக நமக்கு வழங்கினாலும் அதற்கு எதிராக சாத்தான் உதவி தலைமை ஆசிரியரை தன் பட்சத்தில் வைத்திருந்து நமக்கு எதிராகப் போராடுவான். இதை நாங்கள் எல்லா இடங்களிலும் காண்கின்றோம். எனினும், தேவன் நமது பட்சத்தில் இருப்பதால் சத்துரு இறுதியில் தோற்கடிக்கப்படுவதை நாங்கள் கண்டு அவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றோம்.

ஒரு மாதத்திற்கும் கூடுதலான நாட்கள் பல்வேறு இடங்களில் நாங்கள் புசிக்கும் வித்தியாசமான ஆகாரங்கள், குடிக்கும் பானங்களை கர்த்தர் எங்கள் ஆரோக்கியத்திற்கு அனுகூலமாக்கித் தரவும், நாங்கள் தங்குமிடங்களில் இராக்காலங்களில் ஆண்டவர் எங்களுக்கு நல்ல இளைப்பாறுதலைத் தரவும், அந்த இடங்களில் நாங்கள் அதிகமான மணி நேரங்கள் முழங்கால்களில் நின்று அழியும் ஆத்துமாக்களுக்காக போராடி ஜெபிக்கும் கிருபைகளைத் தரவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

ஒரு மாத காலத்திற்கும் கூடுதலான நாட்கள் தங்கள் குடும்பத்தின் அன்பான மக்களை தூர இடங்களில் விட்டு விட்டு இந்த ஊழியத்தில் கலந்து கொண்டிருக்கும் தேவ ஊழியர்களுடைய குடும்பங்களை கர்த்தர் தமது செட்டைகளின் மறைவில் வைத்துக் காத்துக் கொள்ளவும், ஊழிய நாட்கள் முழுமையிலும் தேவ ஊழியர்கள் மிகுந்த தேவ சமாதானத்தோடும், விட்டு வந்திருக்கும் தங்கள் அன்பான குடும்பத்தின் மக்களைக் குறித்து எந்த ஒரு கவலையுமின்றி தங்கள் பணிகளை சந்தோசமாக நிறைவேற்றி முடிக்கவும் தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நான் இதில் குறிப்பிடாமல் விட்டிருக்கும் ஜெபக்குறிப்புகளை கர்த்தர் உங்கள் இருதயங்களில் கிருபையாக உணர்த்துவாரானால் அந்த காரியங்களுக்காகவும் தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

"நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதும் இல்லை என்கின்ற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு" (பிலி 2 : 14) என்று அப்போஸ்தலன் தமது நிருபத்தில் எழுதின வண்ணமாக இந்த அருமையான தேவ ஊழியம் உங்கள் தியாக அன்பின் காணிக்கைகளின் காரணமாக, கர்த்தருடைய கிருபையால் நடைபெறுகின்றது. அதற்கான பிரதி பலனை நாம் மோட்சத்தில் காண வேண்டுமானால் அதற்காக நாம் தொடர்ந்து ஊக்கமாக ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான கிருபைகளை தேவன் தாமே நமக்குத் தந்தருள்வாராக.


 

இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல்,
எவ்விதத்தினாலேயும் எங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

- II கொரிந்தியர் 6 : 3


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM