அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியானவரின் பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரிக்கப்பட்ட தேவ மக்களுக்கு முடிவில்லாத நித்தியமானது சூரிய அஸ்தமனமே இல்லாத ஒளி மயமான பகற்காலமாகும்.
மனந்திரும்பாத, பாவத்தில் வாழ்ந்து, பாவத்தில் மரிக்கின்ற தேவனற்ற மாந்தருக்கு முடிவில்லாத நித்தியமானது எக்காலத்தும் சூரிய உதயத்தை (அருணோதயத்தை) காணாத காரிருளின் இராக்காலமாகும்.
தேவனுடைய தேவ கோபாக்கினையைக் குறித்துப் பேசும்போது அதற்கு முழுமையாக சம்பந்தப்பட்ட எரி நரகத்தைக் குறித்துப் பேசாமல் இருப்பது கூடாத காரியமாகும். பிரசங்க பீடங்களிலிருந்து "எரி நரகத்தை" குறித்து அதிகமான பிரசங்கங்கள் இந்த நாட்களில் பிரசங்கிக்கப்படுவதே இல்லை. பிரசங்கிமார்கள் அந்த "நரகம்" என்ற பொருளில் தங்கள் வாழ்நாட்காலம் முழுவதிலும் ஒரு தடவை கூடப் பேசுவது என்பது மிகவும் அரிதாகும். ஆனால், ஆண்டவருடைய பரிசுத்த வேதாகமம் முழுவதும் நரகத்தைக் குறித்த எச்சரிப்பின் சத்தத்தால் நிரம்பி வழிகின்றது.
எனது தேவ ஊழியத்தின் ஆரம்ப கால நாட்களில் நான் ஒரு இளம் குருவானவராக ஒரு சபையிலே தேவ ஊழியம் செய்து கொண்டிருந்தேன். நரகத்தைக் குறித்து சபை மக்களை எச்சரித்து பிரசங்கித்தால் அவர்கள் தடுமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பயந்து நான் அந்த நாட்களில் அதைக் குறித்துப் பேசுவதே கிடையாது.
அப்படிப்பட்டக் காலக்கட்டத்தில் தேவன் ஒரு நாள் எனக்கு ஒரு தரிசனத்தை தந்தார். எனது முழு வாழ்க்கையிலும் நான் அந்த ஒரு தரிசனத்தைத்தான் கண்டிருக்கின்றேன். என்னுடைய அந்த தரிசனத்தில் மக்கள் நரகத்துக்குள் விழுந்து கொண்டிருப்பதை தேவன் எனக்கு காண்பித்தார். அந்த நாளிலிருந்து நான் நரகத்தைக் குறித்து மிகவும் விழிப்படைய ஆரம்பித்து நரகத்தைக் குறித்து மக்களுக்கு திட்டமும் தெளிவுமாகப்
பேசி வருகின்றேன்.
நான் எனது தரிசனத்தில் லண்டன் மா நகரத்தின் ஜன நெருக்கமான ஒரு பிரதான வீதியில் மக்களோடு மக்களாக நடந்து சென்று கொண்டிருந்தேன். ஜனங்கள் தங்கள் தங்கள் வேலைகளுக்கும், இதர காரியங்களுக்கும் ஒருவரையொருவர் நெருக்கி முண்டியடித்துக் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒரு வேளையாக அது இருந்தது. மக்கள் ஒருவரையொருவர் நெருக்கி முன்னேறிக் கொண்டிருந்த வேளையில் அந்த பிரதான வீதியின் ஓரமாக ஒரு மனிதன் தனது கரத்தில் ஒரு சிகப்பு விளக்கை கையில் ஏந்தியவனாக "ஜனங்களே, பின் நோக்கிச் செல்லுங்கள், ஜனங்களே பின் நோக்கிச் செல்லுங்கள்" என்று சத்தமிட்டுக் கூக்குரலிட்டு எச்சரிக்கை செய்து கொண்டிருப்பதை நான் கண்டேன்.
அந்தச் சமயத்தில் பரிசுத்த ஆவியானவர் என்னை அப்படியே அந்த ஜனக்கூட்டத்திற்கு மேலாகத் தூக்கி எடுத்து அந்த மனிதன் "ஜனங்களே பின் நோக்கிச் செல்லுங்கள், ஜனங்களே பின் நோக்கிச் செல்லுங்கள்" என்று எச்சரிக்கை குரல் எழுப்புவதின் காரணத்தை நான் கண்டுகொள்ளும்படியாகச் செய்தார். அந்தப் பிரதான பெரும் பாதையில் சென்று கொண்டிருக்கும் மக்கள் ஒவ்வொருவராக குறிப்பிட்ட ஓரிடத்தில் வரவும் அதற்கு மேல் செல்ல ரஸ்தா இல்லாமல் அவ்விடத்திலிருந்த அதல பாதாளத்துக்குள் விழுவதை நான் கண்டு பெரும் பீதி அடைந்தேன். தங்களுக்கு முன்பாக மக்கள் ஒவ்வொருவராக விழுவதைக் கண்டு அந்த மக்கள் பின் நோக்கிச் செல்ல விரும்பி பின் நோக்கிப் போக தங்கள் முழு பெலத்தால் போராடி கூட்டத்தை விலக்கிக் கொண்டு முன்னேற விரும்பினாலும், அவர்களை பின்னால் நெருக்கி வந்து கொண்டிருக்கும் மக்கள் அவர்களை திரும்பிப் போக முடியாதவாறு நெருக்கி கெடு பாதாளத்துக்குள் தள்ளுவதை நான் கண்டு நடுநடுங்கிப் போனேன். அந்த மக்கள் ஒவ்வொருவராக அலறிக் கொண்டு முடிவில்லாத நித்தியத்துக்குள் விழுவதை நான் திகைப்போடு கவனித்தேன்.
முடிவில்லாத நித்தியத்தின் கெடு பாதாள பள்ளத்தாக்குக்குள் விழுந்து கொண்டிருந்த அந்த மாந்தர் எழுப்பிய அலறல், அங்கலாய்ப்பின் குரலானது அந்த நாளிலிருந்து என் உள்ளத்தில் அடிக்கடி தொனித்து என்னைச் சஞ்சலப்படுத்துவதாக இருப்பதால் நான் செல்லும் இடங்களில் எல்லாம் நரகத்தைக் குறித்துப் பிரசங்கித்து மக்களை எச்சரித்து வருகின்றேன். இந்தக் கிருபையின் காலத்தில் மக்கள் ஞானமடைந்து இயேசு இரட்சகரில் அடைக்கலம் புகுந்து கொள்ள நான் மக்களை கெஞ்சி மன்றாடுகின்றேன். இதை வாசிக்கும் நீங்களும் ஒருக்கால் ஆண்டவர் இயேசுவை ஏற்று மனந்திரும்பாமல் இதுவரை பாவத்தில் ஜீவித்து வந்திருந்தால் இன்றே அவரை அண்டிக்கொள்ளுங்கள். தாமதித்தால் உங்களுடைய கால தாமதம் நீங்கள் கெடு பாதாளத்தில் விழாமல் தப்பிக்கொள்ளும்படியாக கடைசி நேரத்தில் நீங்கள் பின் நோக்கித் திரும்பினாலும் நீங்கள் தப்பிக் கொளள முடியாமல் கூட்டமானது உங்களை நெருக்கி நரக பாதாளத்தில் தள்ளிப்போடும் என்பதைக் கண்ணீரோடு உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
(Selwyn Hughes)
|