உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு

(அமெரிக்க தேசத்தின் மாபெரும் சுவிசேஷகர் டி.எல்.மூடி பிரசங்கியாரால் தேவனண்டை வழிநடத்தப்பட்ட வில்பர் சாப்மான் என்ற புகழ்பெற்ற அமெரிக்க சுவிசேஷகரால் கொடுக்கப்பட்ட ஒரு தேவச்செய்தி)

இந்த இராக்காலத்திற்கு நான் உங்களுக்குப் பேசும்படியாகத் தெரிந்து கொண்ட கருப்பொருள் "ஆயத்தமாகுதல்" என்பதாகும். நம்முடைய நாட்டின் நலனை நாம் பாதுகாக்கும் விசயத்தில் நாம் ஆயத்தமாக இருக்கக்கூடிய விசயமாக நான் உங்களுக்கு நல்லதோர் சொற்பொழிவை உங்களுக்கு ஆற்ற முடியும். ஆனால், அதைவிட மகா பெரியதோர் முக்கியமானதோர் காரியத்தைக் குறித்து நான் உங்களிடம் இந்த இராக்காலத்தில் பேச விரும்புகின்றேன். அது "காலத்தையும்" "நித்தியத்தையும்" குறித்ததாகும். நமக்குக் கிடைத்த பொன்னான காலத்தில் முடிவில்லாத நித்தியத்துக்கான காரியங்களை நாம் ஆயத்தம் செய்து கொள்ள வேண்டும். இது சம்பந்தமான தேவனுடைய வார்த்தையை நீங்கள் "உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு" என்ற ஆமோஸ் 4 ஆம் அதிகாரம் 12 ஆம் வசனத்தில் கண்டு கொள்ளலாம்.

இந்த இராக்காலத்தில் நீங்கள் உங்கள் தூக்கத்திற்குச் செல்லுவதற்கு முன்பாக நீங்கள் உங்கள் வேதாகமங்களை திறந்து "ஆதியிலே தேவன்" என்று ஆரம்பமாகும் தேவனுடைய வார்த்தையை வாசிக்க வேண்டுமென்று நான் அதிகமாக ஆசைப்படுகின்றேன். தேவனை மறந்துவிடுவதன் அடுத்த விளைவு அழிவாகும். தேவனை புறம்பாக ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் உங்கள் திட்டங்களைப் போடுங்கள், பெரும் புயல் வந்து அந்த திட்டங்களை எல்லாம் வாரி அடித்துக்கொண்டு செல்லும். தேவனற்ற விதத்தில் நீங்கள் உங்கள் குணநலன்களை மாற்றப் பிரயாசப்படுங்கள், அதின் முடிவு தோல்வியாகும். "ஆதியிலே தேவன்" இப்பொழுது வேத புத்தகத்தின் கடைசி புத்தகத்திற்குச் செல்லுங்கள். "மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன்" (வெளி 20 : 12). ஒன்றில் ஆரம்பித்து மற்றொன்றில் முடிப்பதே தேவன் தமது ஜனத்தைக் குறித்துக் கொண்டிருக்கும் திட்டமாகும். தேவனை நாம் சிருஷ்டி கர்த்தாவாகக் காண்கின்றோம். தேசங்களை ஆளுகை செய்பவராக நாம் அவரைப் பார்க்கின்றோம். தம்முடைய பூர்வ ஜனத்தை நியாயம் விசாரித்த நியாதிபதியாக நாம் அவரைக் காண்கின்றோம். இயேசு கிறிஸ்துவின் பிதாவாக நாம் அவரைப் பார்க்கின்றோம். இறுதியாக நாம் அவரை நியாதிபதியாக நியாயாசனத்தில் வீற்றிருக்கின்றவராகப் பார்க்கின்றோம். காலங்கள் முடிவடைந்து கொண்டிருக்கின்றது. புஸ்தகங்கள் திறக்கப்பட்டு மரித்தோராகிய சிறியோரும் பெரியோரும் தேவனுக்கு முன்பாக நிற்கப் போகின்றார்கள். ஒரு கணம் அமர்ந்திருந்து தேவனைக் குறித்து தியானித்துப் பாருங்கள்.

அவர் தமது கரங்களில் காற்றுகளைப் பிடித்திருக்கின்றார். எனினும், அதை நீங்கள் கொஞ்சமும் சிந்தித்துப் பார்க்காமல் அவருடைய பரிசுத்தமுள்ள நாமத்தை கடந்த இரவில் வீணிலே வழங்கினீர்கள். அவருடைய கரங்களின் கீழே வலுமையான சமுத்திரங்கள் நுரை தள்ளிப் பொங்கி அலை மோதிக் கொண்டிருக்கின்றது. ஆயினும், இன்றைய தினம் நீங்கள் உங்கள் பொல்லாத செயல்களின் மூலமாக அவரை தூஷித்திருக்கின்றீர்கள். இந்த உலகத்தில் நீங்கள் தோன்றின கால முதல் அவர் உங்கள் மேல் தமது அன்பையும், கிருபைகளையும் பொழிந்தருளி வந்திருக்கின்றார். ஆனால் நீங்கள் அவரைக் காலாகாலமாக தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கின்றீர்கள். உங்கள் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படுங்கள். அவர் உங்கள் தேவனானபடியால் அவரைச் சந்திக்க ஆயத்தமாகுங்கள்.

பழைய ஏற்பாட்டின் புத்தகத்தில் "தேவன் இல்லை என்று மதி கெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்" என்று நாம் பார்க்கின்றோம். மூடன் மாத்திரம்தான் அவ்விதமாய்ச் சொல்லுவான். இந்த உலகம் மாந்தரின் திட்டங்களால் எங்கும் நிறைந்து காணப்படுவதை நான் காண்கின்றேன். பருவ காலங்கள் வருகின்றன, பருவ காலங்கள் கடந்து செல்லுகின்றன. நட்சத்திரங்கள் தங்கள் பாதையில் ஒழுங்கும் கிரமமுமாக சுழன்று கொண்டிருக்கின்றன. சூரியன் உதயமாகின்றது, மாலையில் அது அஸ்தமனமாகின்றது. அதின் துல்லிபமான சுழற்சியின் காரணமாக விஞ்ஞானிகள் நாட்களையும், மாதங்களையும், ஆண்டுகளையும், சூரியனுடைய சரியான உதய நேரங்களையும், அஸ்தமன நேரங்களையும் கூறிவிடுகின்றனர். இவைகளை எல்லாம் செய்வது யார்? உங்கள் காலடிகளில் காணப்படுகின்ற மலர்கள் தங்கள் தலைகளைத் தூக்கி நிற்பதை நீங்கள் காண்கின்றீர்கள். அவைகள் எத்தனை பரிபூரணமாக சிருஷ்டிக்கப்பட்டுள்ளன. வானவில்லின் வண்ண நிறங்களைத் தங்கள் இறக்கைகளில் ஏந்திக்கொண்டு உங்கள் தலைக்கு மேலாக கீச்..................கீச்....................... என்று குரல் எழுப்பிப் பறந்து செல்லும் பறவைகள். எந்த ஓவியன் தனது திறமையால் அந்த வர்ணங்களை எல்லாம் அவைகளுக்குப் பூசினான்? நீங்கள் மனிதர்களைக் கொன்று சாப்பிடுகின்ற நரமாமிச பட்சிணிகள் வாழ்கின்ற இருண்ட கண்டங்களுக்குச் செல்லுவீர்களானால் அந்த நரமாம்ச பட்சிணிகளான அந்த மக்கள் தங்கள் அறியாமையின் காரணமாக கல்லையும், மரத்தையும், நெருப்பையும், காற்றையும் இன்னும் பலவற்றையும் நமஸ்கரித்து சேவிப்பதை நீங்கள் காணலாம். ஏன்? எதற்காக? அவன் அப்படிச் செய்கின்றான்? தனக்கும் மேலாக இருக்கும் ஒன்றை அவன் வாஞ்சித்துக் கதறுகின்றான். வளர்ச்சியடைந்த இந்த ஒளியுள்ள காலங்களைப் பாருங்கள். அந்த உள்ளத்தின் தாகம் ஒரு உயர்வான நிலைக்குச் செல்லுகின்றது. அந்த ஆவலால் நான் ஜீவனுள்ள தேவனையும், அவரால் எனது உள்ளத்தில் வைக்கப்பட்டுள்ள நித்திய ஜீவனையும் காண்கின்றேன். தண்ணீரில் நீந்தும் மீனுக்கு அதின் செதிள்களும், பறக்கும் பறவைக்கு அதின் இறக்கைகளும் எவ்வண்ணமாக அதின் ஜீவாதார அவசியமோ அதே போன்று என்னில் உள்ள ஆவலால் எந்த ஒரு வாக்குவாதத்திற்கும் இடமின்றித் தேவன் இருக்கின்றார் என்பதை நான் அறிகின்றவனாக இருக்கின்றேன். என்னைப்போன்று நீங்களும் தேவன் உண்டு என்றே சொல்லுவீர்கள். அப்படியானால் அவரைச் சந்திக்க ஆயத்தமாகுங்கள்.

நமக்குச் சமீபமாக உள்ள ஒரு நட்சத்திரத்திற்கு நீங்கள் ஒரு விண்வெளி ஓடத்தில் பறந்து செல்ல விரும்புவீர்களானால் ஊழி ஊழி காலங்களாக நீங்கள் போய்க் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணம் செய்யும் ஒவ்வொரு விண்வெளி மைல்களுக்கும் நீங்கள் அரசாங்கத்துக்குப் பணம் செலுத்த வேண்டுமானால் கோடானு கோடி ரூபாய்களை நீங்கள் அரசாங்கத்துக்கு கொடுத்தாக வேண்டும். எனினும், தேவன் இல்லை என்று மாந்தர் சொல்லுகின்றனர். சூரியன் பூமிக்கு ஒளியை அனுப்புகின்றது. அது தனது ஒளியையும், வெப்பத்தையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தேவன் வானத்தையும், பூமியையும் படைத்த சிருஷ்டிப்பின் காலம் தொட்டே ஒழுங்காக அனுப்பிக் கொண்டிருக்கின்றது. சூரியன் உள்ள தூரத்தையும், ஒளி பிரயாணம் பண்ணும் வகையையும் நாம் கணக்கிடுகின்றபோது இவைகள் எல்லாம் ஏதோ தன்னிச்சையாகத் தோன்றியவை என்று நீங்கள் சொல்லத் துணிவீர்களோ? இல்லை, என்னைக் கேளுங்கள், உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

தேவன் சர்வ வல்லமையுள்ளவர். மிகவும் கனமான ஒரு பீரங்கி குண்டை எடுத்து நான் வீசுவேனானால் சில அடிகள் தூரம் மட்டுமேதான் நான் அதை வீசுவேன். ஆனால், கல்லூரியில் படிக்கும் ஜவானான ஒரு வாலிப பையன் என்னைவிட நல்ல கூடுதலான தூரம் வரை அந்தக் குண்டை வீச முடியும். ஒரு நாள் நான் ஒரு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது என் அருகிலிருந்த என் நண்பன் என்னைப் பார்த்து "அந்தப் போலீஸ்காரரைப் நீ பார்க்கின்றாயா?" என்று என்னைப் பார்த்துக் கேட்டான். "ஆம், நான் அவரைப் பார்க்கின்றேன், அவருக்கு என்ன?" என்று நான் அவனைப் பார்த்துக் கேட்டேன். "உலகத்திலேயே குண்டு வீசுவதில் அந்த மனிதர்தான் அதிகமாக வீசக்கூடியவர். அவருக்கு நிகர் யாரும் கிடையாது. ஆம், சர்வ தேச ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் தங்க மெடல் பெற்றவர் அவர்" என்று என்னிடம் சொன்னான். அந்த மனிதர் இந்த உலகத்தில் வாழ்கின்ற எல்லாரையும்விட அதிகமான தூரத்திற்குக் குண்டு வீச வல்லவனாக இருக்கலாம். ஆனால், சர்வ வல்லமையுள்ள தேவன் இந்த உலகத்தைப்போல எண்ணிக்கைக்கடங்கா உலகங்களை தனது கரங்களில் ஏந்தி அவைகளைக் கூழாங்கற்களைப் போன்று வீசி எறிந்து விளையாடக்கூடிய மாபெரும் ஆற்றல் உடையவர் என்பதை நாம் மறப்பதற்கில்லை. ஆம், அவர் சர்வசக்திமானான தேவன்.

அந்த சர்வ வல்ல கர்த்தருக்கு எல்லாம் தெரியும். நீ என்னை ஏமாற்றலாம். நீ என்னை சுலபமாக ஏமாற்றிவிடுவாய் என்பதை நான் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றேன். ஆனால் தேவனை நீ ஏமாற்ற முடியாது. இந்த நாட்கள் ஒன்றில் நீ அவரைச் சந்திக்க வேண்டியதிருக்கும். உலகத்தில் நீ செய்த பாவ அக்கிரமங்களைக் குறித்து எழுதப்பட்ட புத்தகம் உனக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டிருப்பதை நீ இந்த நாட்களில் எதிர்கொள்ள வேண்டிதாக இருக்கும். இந்த உலகத்தில் உனது வாழ்க்கையை நீ உலக மாய்கையில் பாழாக்கினதைக் குறித்து தேவனுக்கு இந்த நாட்கள் ஒன்றில் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கலாம். அவர் உன்னை முழுமையாக அறிகின்றவராக இருக்கின்றார்.

தேவன் எங்கும் இருக்கின்றார். நான் வாசிக்கும் தேவனுடைய வார்த்தையைக் கவனித்துக்கேள். "உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமூகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர், நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்து செட்டைகளை எடுத்து சமுத்திரத்தின் கடையாந்திரங்களிலே போய்த் தங்கினாலும் அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலது கரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்" (சங் 139 : 7 - 11) தேவனிடமிருந்து நீ தப்பித்துக்கொள்ள முடியவே முடியாது.

சிக்காக்கோ நகரத்திலுள்ள பள்ளிகள் ஒன்றில் ஒரு காரியத்தைக் குறித்து விளக்கப்படுத்திக் காண்பிப்பதற்காக ஒரு கனவான் விரும்பினார். அது சம்பந்தமாக அந்த மனிதர் ஒரு வகுப்பிலுள்ள ஒரு கரும் பலகையில் பார்க்கும் இரண்டு மனித கண்களை வரைந்திருந்தார். அவர் அந்தக் கண்களை மிகவும் நிஜமான விதத்தில் வரைந்திருந்தபடியால் அந்த வகுப்பறையில், வித்தியாசமான கோணங்களில் இருந்த அனைத்துப் பிள்ளைகளும் அந்தக் கண்கள் தங்களையே நேரடியாகப் பார்ப்பதாகக் கண்டனர். அவர்கள் அந்தக் கண்களைக் கண்டு நடுக்கமுற்றதால் அதை உடனே கரும்பலகையிலிருந்து துடைத்துவிடும்படியாக அந்தப் பள்ளியின் நிர்வாகம் அந்த மனிதரைக் கேட்டுக்கொண்டது. மாந்தர், தேவனின் அன்பைத் தங்களின் பாதங்களின் கீழ் வைத்து மிதித்து நசுக்கிக் கொண்டு தங்களுடைய பொல்லாத வழிகளில் துணிந்து சென்று கொண்டிருக்கின்றனர். வேத புத்தகத்திலுள்ள ஒரு வார்த்தையை அவர்கள் மறந்துவிட்டனர். அந்த வசனம் "நீர் என்னைக் காண்கிற தேவன்" (அதி 16 : 13 ) என்று உள்ளது.

அவர் உன்னை நேற்றையத் தினமோ அல்லது கடந்த இரவிலோ நீ பாவம் செய்யும்போது பார்த்தார். அவர் பார்த்த காரியம் ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்த உலக மாந்தர் எப்பொழுதும் ஞாபகப் பட்டியல்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இங்கிலாந்து நாட்டிலுள்ள பிரிட்டிஷ் தொல் பொருட் காட்சி சாலையில் நான் எனது புத்தக அளவிலான ஒரு செங்கலைக் கண்டேன். அது 6 ஆயிரம் ஆண்டு கால வயதுள்ளதாக இருப்பதாக அங்குள்ளோர் என்னிடம் சொன்னார்கள். அந்த செங்கலின் சரி மத்தியில் ஒரு பறவையின் காலடித்தடம் பதிந்திருப்பதை நான் கவனித்தேன். அந்த செங்கல் பச்சையாகவும், மென்மையாகவும் இருந்த சமயம் அந்தப் பறவை எப்படியோ தனது காலை அதில் வைத்திருக்கின்றது. 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு அற்பமான சம்பவம் பதிவு பண்ணப்பட்டுள்ளது. அதை மனதில் கொண்டு வாலிபரே, வயோதிபரே, வியாபாரிகளே, அலுவலகங்களில் வேலை செய்வோரே, சமுதாய சேவைகளில் இருப்போரே நீங்கள் யாராயிருந்தாலும், எந்த வேலைகளில் இருந்தாலும் நீங்கள் உங்கள் தேவனைச் சந்திக்க ஆயத்தமாகுங்கள் என்று உங்களைப் பார்த்து எச்சரிப்பின் குரல் கொடுக்கின்றேன். நீங்கள் விபச்சார வேசித்தன பாவங்களில் இருக்கலாம், குடி வெறி, திருட்டு, பரிதானம், பொய், பெருமை போன்ற வேறெந்த பாவங்களிலாவது இருக்கலாம். "மரித்தோராகிய சிறியோரையும், பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். புஸ்தகங்கள் திறக்கப்பட்டன" அவைகள் திறக்கப்பட வேண்டிய நேரம் வந்தபடியால் திறக்கப்பட்டன. வாசிப்போனே, உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

தேவன் நம் எல்லாரையும் திரட்சியான மூலதனத்தால் இடை கட்டியுள்ளார். அவர் உங்களுக்கு மனதைக் கொடுத்திருக்கின்றார். உங்களுக்கு கரங்களையும், சுய சித்தம் செய்யும் பூரண சுதந்திரத்தையும், நன்மை தீமையை வகையறுக்கும் இருதயத்தையும் கொடுத்திருக்கின்றார். அவர் உங்களுக்கு வலுமையான கால்களையும், வெகு தூரம் வரை துல்லிபமாகப் பார்க்கக்கூடிய கண்களையும், அழகான உதடுகளையும் அளித்திருக்கின்றார். அவர் உனக்குக் கொடுத்த நல்ல அவயவங்களுக்காக நீ ஆண்டவருக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். தேவன் உனக்குக் கொடுத்திருக்கும் இருதயத்தால் அசுத்தமான நினைவுகளை நீ சிந்தித்து வருகின்றாயா? உனது தீய மனது ஆண்டவருக்கும், அவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளுக்கும் எதிராகக் கலகம் செய்கின்றதா? உன்னதத்திற்கு நேராக விரிக்கப்பட வேண்டிய உனது கரங்கள் தீங்கான காரியங்களைச் செய்யும்படியாக இருளான மறைவிடங்களில் தடவித்திரிகின்றதா? உனது கால்கள் உன்னை எந்தெந்த வீடுகளுக்கு அழைத்துச் செல்லுகின்றது? ஆயத்தப்படு. ஆம், உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

நீ உன் தேவனைச் சந்திக்கும்படியாக நான் உன்னைக் கேட்டுக் கொள்ளுவது எதற்கென்றால் நீ நினைப்பதற்கும் முன்பே நீ அவரைச் சந்திக்கும்படியான வேளை உனக்கு வந்து சேரும். உங்களில் எவரையும் இந்த வார்த்தைகளைக் கூறி பயமுறுத்த வேண்டுமென்பது எனது ஆசையல்ல. எனினும் வேறு வழி இல்லை என்றால் நான் அதைத்தான் செய்ய வேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில் நீ வெகு சீக்கிரமாக அவரை முகத்திற்கு முகம் சந்தித்தாக வேண்டும். ஒரு வேளை நாளையத்தினத்தின் காலை வேளைக்கு முன்பாக நீ அவரை சந்திக்க வேண்டியதாகவிருக்கும். நாளைய தினம் காலை 9 மணிக்கு நீ சந்திப்பதாக வாக்களித்திருக்கும் மனிதரோடு நீ சந்தித்துப் பேச உனக்கு என்ன நிச்சயம் உள்ளது? புகழ்பெற்ற டாக்டர் ஒருவர் உன்னோடு இருக்கின்றார் என்று வைத்துக்கொள்ளுவோம். அவரிடமாக நீ திரும்பி "டாக்டர், நாளைய தினம் 9 மணிக்கு நான் ஒரு மனிதனுடன் சந்தித்துப் பேசுவதாக வாக்களித்திருக்கின்றேன். அது நிச்சயமாக நடக்குமா? என்று கேட்டுப் பார். அவர் உனக்கு என்ன பதில் கொடுப்பார் என்பது எனக்குத் தெரியும். "அது ஆண்டவர் ஒருவருக்கு மட்டுமேதான் தெரியும்" என்று அவர் பதில் கொடுப்பார். மேலும் அவர் "நீங்கள் படுக்கைக்குச் சென்று உங்களது கண்களை மூடியதும் உங்களது சரீரத்தின் அனைத்துப் பெலனும் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்ந்து தளர்ந்து இறுதியாக ஒன்றுமில்லாமையின் நிலைக்கு வந்து சேருகின்றது. அதின் பின்னர் அந்த நிலை படிப்படியாக வளர்ந்து, வளர்ந்து அடுத்த நாள் விடிந்து புதிய நாள் ஆரம்பிக்கும்போது நீங்கள் புதிய பெலத்துடன் உங்கள் வேலைகளைச் செய்ய தெம்பு அளிக்கின்றது. அந்தக் காரியத்தைச் செய்ய ஆண்டவருடைய விரல் உங்களைத் தொட்டாக வேண்டும்" என்று கூறுவார். இப்படி நிலையில்லாமல் இருக்கும் நீர் மேல் குமிழி வாழ்க்கையை வைத்துக் கொண்டு லோக மாந்தர் தேவனைவிட்டு வழி விலகி வாழ்வதன் மர்மம் எனக்குப் புரியாமல் இருக்கின்றது. கல்லூரிகளில் படிக்கும் இளைஞர்களே, உங்களையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உலகத்தில் கல்லூரிகள் தோற்றுவிக்கப்பட்டதிலிருந்து இன்றுள்ள கல்லூரிகளில் மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்ற ஞானவான்களான ஆசிரியர்களைப் போன்று அத்தனை அறிவாளிகளை உலகம் கண்டது கிடையாது. இருப்பினும், அந்தப் போதனையாளர்களும், அவர்கள் கல்வி கற்பிக்கும் மாணவர்களும் ஏகமாகப் பாவப் படுகுழிக்குள் விழுந்து கிடக்கின்றனர் என்பதை அறியும்போது பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது. வாசிப்போனே, நினைவில் வைத்துக் கொள் நாளை முடிவில்லாத நித்தியம்.

ஒரு ஆராதனை வேளைக்குப் பின்னர் நான் பிரசங்க பீடத்துக்கு கீழாக நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது சபை அங்கத்தினனாகிய ஒரு மனிதர் என்னண்டை வந்து "எனக்குள்ள நல்ல ஆரோக்கியமும், உடல் நலமும் உங்களுக்கு இருக்கும்படியாக நான் விரும்புகின்றேன். எனது வாழ்க்கையில் இதுவரை எனக்கு ஒரு தலைவலி கூட வந்ததே கிடையாது, எந்த ஒரு வலி வேதனை என் சரீரத்தை அணுகியதே இல்லை, ஏன் இதுவரை நான் எந்த ஒரு டாக்டரையும் கூட நான் என் உடல் நலத்தைப் பார்க்கும்படியாக அழைத்ததே இல்லை" என்று என்னிடம் சொன்னார். நான் அவருடைய சபைப் போதகர். சில மாதங்கள் கடந்து சென்றன. ஒரு நாள் எனது தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியில் பேசிய அந்த மனிதருடைய வீட்டிற்கு வரும்படியாக நான் கேட்டுக்கொள்ளப்பட்டேன். என்னுடன் பேசிய மனிதர் "அவசரம், அவசரம், துரிதப்படுங்கள்" என்று கூறினார். நான் அவருடைய வீட்டிற்குப் போனபோது அவருடைய மகள் மாத்திரம் அவருடன் இருந்தாள். குடும்பத்தின் மக்கள் வெளியே போயிருந்தனர். அந்த மனிதர் என்னைப் பார்த்து "நான் அவசரமாக ஒரு வியாபார சம்பந்தமான காரியத்தைக் கவனிக்க வெளியே செல்ல வேண்டும். நீங்கள் எனது சாப்பாட்டு அறைக்கு வந்து என்னுடன் காலை ஆகாரத்தில் கலந்து கொள்ளுங்கள்" என்று சொன்னார். நான் 15 நிமிடங்கள் அங்கு காத்திருந்தேன். ஆனால் அந்த மனிதர் இன்னும் வரவில்லை. அவரைப் பார்ப்பதற்காக அவருடைய மகள் மெத்தைப் படிகள் ஏறி மாடிக்குச் சென்றாள். அங்கே அவள் நாற்காலியில் அமர்ந்திருந்த தனது தகப்பனின் மடியில் அந்த நாளின் செய்தித்தாள் கிடப்பதையும், அவருடைய தலை பின் நோக்கி சாய்ந்திருப்பதையும், கண்கள் மூடியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து அலறினாள். வாழ்க்கையில் ஒரு தலைவலியோ அல்லது மற்ற எந்த ஒரு வலியோ அறியாத மனிதர், ஏன் தனது வாழ்வில் ஒரு நாள் கூட டாக்டரை அழைக்காத மனிதர் 15 நிமிடங்களில் மாண்டு போனார். 15 நிமிட எச்சரிக்கை மட்டுமே! ஆனால், வாலிபராகிய நீங்கள் என்னைப் பார்த்து "அந்த மனிதருடைய வயது என்ன?" என்று என்னைப் பார்த்துக் கேட்கலாம். "ஓ, அந்த மனிதர் ஒருக்கால் 60 வயதை தாண்டிய முதியவராக இருந்திருந்தபடியால் அப்படியான ஒரு சடுதி மரணம் நேரிட்டிருக்கலாம்" என்பீர்கள். ஒரு நாள் மாலை நேரம் நாங்கள் ஆஸ்திரேலியா நாட்டிலுள்ள ஒரு பட்டணத்தின் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தோம். அப்பொழுது எங்கள் அறையின் கதவு தட்டப்பட்டது. நாங்கள் கதவைத் திறந்தபோது அப்பொழுதுதான் எங்களுக்கு வந்திருந்த ஒரு தந்தி செய்தியை தனது கரத்தில் ஏந்தியவனாக அந்த ஹோட்டலின் பணியாளன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். அந்த தந்தியில் "சார்லஸ் 2 நாட்கள் சுகயீனத்தில் மரணமடைந்தான்" என்று எழுதப்பட்டிருந்தது. சார்லஸ் எனக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரப் பையன். நல்ல விளையாட்டு வீரன். விளையாட்டுக்கான பயிற்சிகள் அவனுக்கு ஒரு ராணுவப் பள்ளியில் கொடுக்கப்பட்டிருந்தது. அவனது வாழ்வில் அவன் ஒரு நாள் கூட சுகயீனமாக இருந்தது கிடையாது. அவன் படித்த கல்லூரியில் அவனுக்கிருந்த உடற்கட்டு வேறு எந்த ஒரு சக மாணவனுக்கும் இல்லாதிருந்தது. அத்தனையான ஒரு பலவானாக அவன் இருந்தான். 2 நாட்களில் அவன் இந்த உலகத்திலிருந்து நிரந்தரமாக கடந்து சென்றுவிட்டான். உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.

தேவனைச் சந்திக்கும்டியாக நீ ஆயத்தமாவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. விஞ்ஞானம் இந்த உலகத்தில் நல்லதொரு சேவையை மாந்தருக்குச் செய்து கொண்டிருக்கின்றது. ஆனால், அது உன்னை முடிவில்லாத நித்தியத்துக்கு ஆயத்தப்படுத்த முடியாது. தத்துவ ஞானம் ஒரு இனிமையான கல்வியாகும். அதினுடைய போதனைகள் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், அது உன்னை நித்தியத்துக்கு இந்தப் பக்கத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டு நழுவிப்போய்விடும். தேவன் இல்லை என்ற நாஸ்தீக வாதம் உனது உடல் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் காலம் வரையிலும், உனக்கு ஏராளமான நண்பர்கள் உன்னைச் சுற்றி இருக்கும் வரைக்கும், உனது குடும்ப பந்த பாசங்கள் உடையாமல் இருக்கும் வரையிலும் அது சரியாக இருக்கும். என்றைக்கு உனது இருதயம் துன்ப துயரத்தால் அங்கலாய்க்கும் போதும், உனது பாசமுள்ள அன்புக் குழந்தை திடீரென மரிக்கும் போதும், உனது அப்பா அல்லது அம்மா இறந்துவிட்டார்கள் என்ற தந்தி செய்தி உனக்கு கிடைக்கும்போது உலகத்திலுள்ள எல்லா நாஸ்தீகமும் ஒன்றாகச் சேர்ந்து உன்னைக் கேலி பண்ணி பரிகாசம் செய்து உன்னைப் பார்த்துக் கைதட்டிச் சிரிக்கும்.

சகோதரனே, நான் உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகின்றேன். தேவனைச் சந்திக்கும்படியான ஒரே வழியிலிருந்து நீங்கள் உங்கள் முகத்தைத் திருப்புவீர்களானால் உங்கள் மானிட வாழ்வின் மகத்துவத்தை இழந்து விடுவீர்கள். ஆயத்தமாவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அந்த வழி என்ன? கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி, உனது பாவங்களிலிருந்து மனந்திரும்பு, அவரை உன்ஆத்தும நேசராக ஏற்றுக்கொள்.

என்னுடைய நண்பன் ஒரு கிராமத்திற்கு பிரசங்கம் செய்வதற்காகச் சென்றான். அவன் பிரசங்கித்த தேவாலயத்தின் மூப்பர்களோடு ஒரு இடத்தில் அவன் பேசிக் கொண்டிருந்தபோது எனது நண்பன் "அந்தக் குரல் என்ன?" என்று கேட்டிருக்கின்றான். அவர்கள் இருந்த வீட்டிற்கு அருகிலிருந்த வீட்டின் ஜன்னல் வழியாக ஒரு மனிதனின் துயரக் குரல் கேட்டிருக்கின்றது. அவர்கள் எல்லாரும் அந்தக் குரலை கவனித்துக் கேட்டபோது "ஓ, இயேசுவே, நீர் எனக்கு உதவி செய்ய மாட்டீரா?" "ஓ, இயேசுவே நீர் எனக்கு உதவி செய்ய மாட்டீரா?" என்ற வார்த்தை திரும்பத் திரும்ப அவர்கள் காதுகளில் விழுந்திருக்கின்றது. அப்பொழுது அங்கிருந்த மூப்பர்களில் ஒருவர் "நாம் கேட்கும் அந்த சத்தத்தை எழுப்புகின்ற மனிதர் இப்பொழுது மரித்துக் கொண்டிருக்கின்றார். அந்த மனிதர் தனது வாழ்நாட் காலம் முழுவதும் அன்பின் ஆண்டவரை முழுமையாக வெறுத்துத் தள்ளிய ஒரு மனிதராவார். அந்த மனிதர் அநேக வாலிப பையன்களையும், வாலிப பெண் மக்களையும் அவர்களுடைய பெற்றோரின் அருமையான பக்தி, பரிசுத்த, விசுவாசப்பாதையிலிருந்து பிரித்து இழுத்து வந்து நரக பாதாளத்திற்கான நாஸ்தீகத்திற்கு நேராக வழிநடத்தியவர் ஆவார்" என்று சொல்லியிருக்கின்றார். அந்த மனிதரின் குரல் திரும்பவும் "ஓ இயேசுவே, நீர் எனக்கு உதவி செய்ய மாட்டீரா?" என்று கேட்டிருக்கின்றது. வாசிப்போனே, உன் தேவனைச் சந்திக்கும்படியாக ஆயத்தப்படு.

எங்களுடைய மேலை நாட்டின் பட்டிணங்களின் தெரு ஒன்றில் ஒரு மனிதன் தனது குதிரைகள் பூட்டிய வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருந்தான். குதிரைகளின் கட்டுப்பாட்டை அதை ஓட்டிய மனிதன் திடீரென தவறவிட்டு விட்டதால் குதிரைகள் கடும் பாய்ச்சலில் இறங்குமுகமாக ஓடிக்கொண்டிருந்தன. அதை ஓட்டிய மனிதனின் உயிரைக் காப்பதற்காக தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு வீரனான மனிதர் தனது உயிரையும் பொருட்படுத்தாது ஷணப்பொழுதில் வண்டியினுள் பாய்ந்து ஏறி குதிரைகளின் சாரட்டுகளைப் பிடித்து அவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அந்த மனிதனுடைய உயிரைக் காப்பாற்றினார். இத்தனை அதிசயமாகப் பாதுகாக்கப்பட்ட அந்த மனிதன் பின் வந்த நாட்களில் ஒரு கொலை பாதகத்தினிமித்தம் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்பட்டான். அவனுடைய வழக்கை விசாரிக்கக்கூடிய நீதிபதி ஒரு சமயம் அந்த மனிதனுடைய குதிரைகள் பூட்டிய வண்டி தனது கட்டுப்பாட்டை மீறி தெருவில் ஓடிக்கொண்டிருந்த சமயம் ஷணப்பொழுதில் வண்டியினுள் பாய்ந்து ஏறி அவனது உயிரைக் காப்பாற்றிய அந்த அன்புள்ளம் கொண்ட மனிதரேதான். அவனுடைய வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு அந்த நீதிபதி அவனுக்கு மரண தண்டனையை வழங்கினார். அந்தக் கொலைக் குற்றவாளி தனக்கு முன்னால் அமர்ந்திருந்த நீதிபதியை நோக்கி "மேன்மை தங்கிய நீதிபதி அவர்களே, என்னை உங்களுக்குத் தெரிகின்றதா" என்று கேட்டான்? நீதிபதி அவனுக்கு பிரதியுத்தரமாக "என்னுடைய கேள்விக்கு நீ பதில் சொல். உன்மேல் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக நீ ஏதாகிலும் சொல்ல இருக்கின்றதா?" என்று அவர் கேட்டார். தனது கரங்களை நீதிபதிக்கு நேராக விரித்து அந்த மரண தண்டனை விதிக்கப்பட்ட மனிதன் "என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு சமயம் என் உயிரைக் காப்பாற்றிய மனிதர் நீங்களேதான். உங்களுக்கு ஞாபகம் இருக்கின்றதா? எனக்குக் கருணை காட்டுங்கள், எனக்கு உயிர் பிச்சை கொடுங்கள்" என்று அந்த மனிதன் கதறினான். "உங்களை எனக்கு நன்கு ஞாபகம் இருக்கின்றது. நீதி விசாரணைக்கு எனக்கு முன்பாக வந்த முதல் நாள் முதல் நான் உங்களை நினைவுகூருகின்றேன். அன்று நான் உங்கள் இரட்சகராக இருந்து உங்களைக் காப்பாற்றினேன். ஆனால், இன்று நீங்கள் செய்த கொலை பாதகத்துக்காக உங்களுக்கு நான் மரண தண்டனையை விதிக்கும் நியாதிபதியாக இருக்கின்றேன். நீங்கள் உங்கள் கொடிய கொலை பாதகச் செயலுக்கான தண்டனையை பெற்றே ஆகவேண்டும்" என்று தனது கண்களில் கண்ணீரை வடித்த வண்ணமாகவே அந்த நீதிபதி அவனுக்கு தீர்ப்பைக் கூறினார்.

அன்பின் ஆண்டவர் இயேசு இன்றைக்கு உங்கள் இரட்சகர். அவருடைய கண்கள் கண்ணீரால் நிரம்பியிருக்கின்றது. அவருடைய கண்களின் புருவங்கள் இரத்தத்தால் நனைந்திருக்கின்றது. அவரது முதுகு ரோம போர்ச் சேவகர்கள் தங்கள் சவுக்குகளால் அடித்த அடிகளால் கிழிக்கப்பட்டு இரத்தத்தை சிந்திக் கொண்டிருக்கின்றது. அவருடைய இருதயம் மாந்தரின் பாவப் பாரத்தால் அழுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் தனது சொல்லொண்ணா வேதனையில் "மகனே, என்னண்டை திரும்பு, என்னண்டை திரும்பு, நீ ஏன் உன் பாவங்களில் சாகவேண்டும்?" என்று உன்னைப் பார்த்துக் கேட்கின்றார்.

ஒரு தடவை மரணம் சம்பவித்த ஒரு அழகான வீட்டில் நான் அடக்க ஆராதனையை நடத்தி முடித்தேன். ஆராதனை முடிந்ததும் மரித்த சடலத்தை தன் பொறுப்பில் எடுத்து கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யும் மனிதன் முன்னால் வந்து நின்று வீட்டிற்கு வந்த அனைவரையும் வெளியே போகச் சொல்லிவிட்டு மரித்தவரின் மிக நெருங்கிய உறவினர்களை மாத்திரம் கடைசியாக அந்தச் சடலத்தைப் பார்த்துவிட்டுச் செல்லும்படியாகக் கேட்டான். அதைத் தொடர்ந்து நெருங்கிய உறவினர்கள் மாத்திரம் தனித்திருந்தனர். அந்த வீட்டின் மகள் தனது தகப்பனை அணைத்தவாறே அழைத்துக்கொண்டு வந்தாள். அவளுடைய தாயார்தான் மரணமடைந்து பிரேதப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தார்கள். அந்த வயதான மனிதர் பிரேதப் பெட்டியண்டை வந்து குனிந்து தனது வாழ்நாட் காலம் முழுவதும் தன்னுடன் வாழ்க்கையில் பயணம் செய்த தனது அன்பு மனைவியைப் பார்த்து "சுகமாய்ப் போய் வாருங்கள் (Good-bye) நான் உங்களை விரைவில் சந்திப்பேன்" என்று சொன்னார். அவருக்குப் பின் அவரது மகளும் அப்படியே சொன்னாள். அவளுக்குப் பிறகு அவளுடைய 2 அல்லது 3 சகோதரர்களும் அவ்வண்ணமாகவே தங்களது தாயின் ஜீவனற்ற சடலத்தைப் பார்த்துச் சொன்னார்கள். மூத்த மகன் ஒரு குடிகாரன். அவன் வீட்டின் கதவண்டை தனது கண்களில் கண்ணீரை வடித்தவண்ணமாக நின்று கொண்டிருந்தான். நான் அவனண்டை சென்று "டாம், நீயும் வந்து அம்மாவுக்கு நல்விடை கொடு" என்று சொன்னேன். தன்னுடைய சரீர பெலவீனம் மற்றும் மதுபானம் காரணமாக அவன் முன்னேறி வர தயக்கம் காண்பித்தான். ஆனால், அந்த வாலிபனைப்போன்று அத்தனை துயரத்துடன் தன் தாய்க்காக அழுத மற்றொரு வாலிபனை நான் காணவே இல்லை. அவன் ஏங்கி ஏங்கி "அம்மா, அம்மா" என்று கதறி அழுதவனாக நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த அவனது சகோதரி அவனண்டை வந்து "டாம், அம்மாவுடைய மரணத்தை நீ மிகவும் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே. அம்மா, மோட்சத்திற்குச் சென்றிருக்கின்றார்கள். நீயும் கூட விரைவில் அவர்களைச் சந்திக்கலாம்" என்று சொன்னாள். அந்த வாலிபன் தனது ஒரு கரத்தை என் மீதும் அடுத்த கரத்தை அவனது சகோதரியின் மீதும் போட்டவனாக "ஓ என் தேவனே, நான் மோட்சம் போகப் போவதில்லை, நான் மோட்சம் போகப் போவதில்லை" என்று சொல்லி கதறி அழுதான்.

வாசிப்போனே, உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. உன் பாவங்களை கண்ணீரோடு உன் இரட்சகரிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்துக்காகவும், இரட்சிப்பின் சந்தோசத்துக்காகவும் நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு கெஞ்சி மன்றாடு. என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்ற ஆண்டவர் உனது பாவங்களை மன்னித்து உன்னைத் தமது சொந்தப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுவதுடன், ஒரு நாள் நீ அவரைச் சந்திக்கும்போது "வாருங்கள், என் பிதாவினால் ஆசீர்வதிக்கப் பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்ட ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்" என்ற உங்கள் இரட்சகரின் ஆர்ப்பரிப்பின் குரலையும் நீங்கள் கேட்பீர்கள்.

(மொழிபெயர்ப்புச் செய்தி)


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM