தேவ ஜனமே, கரும் பெட்டிக்கு (டி.விக்கு)
விலகி ஓடுங்கள்!

"பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள்" (1 தெச 5 : 22) "படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க" என்று தமிழிலே ஒரு முது மொழி உண்டு என்பது நமக்குத் தெரியும். நமது திருச்சபை ஞானோபதேச வினா விடைகளில் மானிட வாழ்வின் பிரதான நோக்கம் என்ன என்பதற்கு "கர்த்தரை மகிமைப்படுத்துவதற்கும், அவரில் சதா நிலைத்திருந்து மகிழ்ந்து களிகூருவதற்குமே" (Man's chief end is to glorify God and enjoy him forever) என்று விடை கொடுக்கப்பட்டுள்ளது.

முடிவில்லாத யுகா யுகங்களை, காலம் காட்டும் கடிகாரமில்லாத முடிவில்லா நித்தியத்தை நம் அன்பின் ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் செலவிட நாம் நம்மை நன்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளுவதற்காக மாத்திரமே நமது பூலோக வாழ் நாட்காலம் நமக்குக் கிருபையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கிருபையின் காலம் சிலருக்கு சற்று கூடுதலாகவும், சிலருக்கு குறைவாகவும் அளிக்கப்பட்டுள்ளது. சிலர் இந்த உலகில் நல்ல பூரண தீர்க்காயுளோடு சுகமாக நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். ஆனால், சிலர் நல்ல வாலிப அல்லது நடுத்தர வயதிலேயே தங்களுக்கு அன்பான மனைவி, பாசமுள்ள மக்களை விட்டு மரணத்தின் மூலமாக சடுதியாகக் கடந்து சென்று விடுகின்றனர்.

நாம் எந்த ஒரு விதத்திலும் ஆண்டவர் இயேசுவோடு பரலோகில் வாழச்சென்று விடக் கூடாது என்பதற்காக மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் இந்த உலகத்தில் நமது கவனத்தை திசை திருப்ப பற்பலவிதமான ஏதுக்களை நமது ஆத்துமாவுக்கு எதிரான கண்ணியாக வைத்திருக்கின்றான். நமக்கும் நம் ஆண்டவருக்கும் நேரடியாக எந்த ஒரு பரலோக ஐக்கியமும் இல்லாத விதத்தில் அவன் நம்மை பிரித்து வைத்துக் கொண்டிருக்கின்றான். அதைத்தான் அவன் ஏதேன் பூங்காவில் செய்து நமது ஆதி தாய் தந்தையரை தேவனை விட்டுப் பிரித்து வைத்திருந்தான். அந்தக் காரியத்தில் பொல்லாங்கனுக்கு இந்தக் கடைசி நாட்களில் மிகவும் கை கொடுத்து உதவும் ஒரு அற்புத சாதனம் கரும் பெட்டியாகும். ஆம், அதுதான் டி.வி. என்ற தொலைக்காட்சி பெட்டியாகும்.

இந்தக் கொடிய சாதனத்தின் மூலமாக சத்துரு இன்று முழு உலகத்தையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து வைத்திருக்கின்றான். எல்லா ஏழை எளிய மக்களின் வீடுகளிலும் கூட கரும் பெட்டி நுழைந்து விட்டது. முற்றும் இலவசமாக அவைகளை சத்துரு வாரி வழங்கிவிட்டான். காலை முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை மக்கள் அதையே பார்க்க வீடுகளில் முடங்கிவிட்டனர். அவைகளில் வரும் அசுத்தமான படங்களைப் பார்த்து பெண் பிள்ளைகளும், பையன்களும் எவ்வளவாக தங்களை கெடுத்துக் கொண்டார்கள் என்பதை நான் உங்களுக்கு இங்கு விவரிக்க வேண்டிய அவசியமில்லை. பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்லும் ஆண், பெண் இரு பாலரின் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளை நீங்களே கவனித்து அறிந்து கொள்ளலாம். ஒரு சமயம் ஒரு பெண்கள் மேல் நிலை பள்ளி ஆசிரியை ஒருவர் என்னிடம் "எங்கள் பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு நாங்கள் எங்கள் மாணவிகளுக்கு எந்த ஒரு நடனப் பயிற்சி போன்றவைகளை இந்த நாட்களில் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமே கிடையாது. பிள்ளைகளுக்கு சொல்லிவிட்டால் போதும் அவர்கள் தங்கள் வீட்டு தொலைக்காட்சி பெட்டியில் தாங்கள் பார்த்ததின்படி சினிமா நடிகை என்ன என்ன கலர் வளையல்கள் தனது கரங்களில் போட்டிருந்தாளோ அவைகளை எல்லாம் அப்படியே கடைகளில் சென்று தங்கள் கரங்களில் வாங்கிப்போட்டு நடிகையின் நடிப்பையும், பாட்டையும் அப்படியே சற்றும் பிசகில்லாமல் எங்கள் பள்ளி மேடையில் ஆடித் தீர்த்துவிடுவாள். அதற்கு, மேல் வகுப்புகளில் படிக்கும் பெரிய பெண் பிள்ளைகள் தேவை இல்லை. வெறும் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுபெண் பிள்ளையே போதுமானவள்" என்று கூறினார்கள். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை சின்னஞ்சிறார்கள் கூட எத்தனை உன்னிப்பாக கவனித்து சினிமாப் பாட்டுகளையும், நடனங்களையும் எவ்வளவாக கற்றுக் கொண்டார்கள் பாருங்கள். இவைகளுக்குப் பின்னணியத்தில் ஆத்தும அழிம்பன் சாத்தான் நின்று கொண்டு புன்முறுவல் செய்வதை உங்களால் காண முடிகின்றதா? தங்கள் வீடுகளிலுள்ள கரும் பெட்டிகளில் வரும் கொலை வெறி படங்களைப் பார்த்து சென்னையிலுள்ள ஒரு மாணவன் தனக்கு பாடம் கற்பித்த தனது வகுப்பு ஆசிரியையே கத்தியால் குத்தி கொலை செய்ததை நாம் கேள்விப்பட்டோம். பேரதிர்ச்சியடைந்தோம். சிறு பாலகர்களுக்கு வீடியோ விளையாட்டுகள் முதல் வாலிபர், நடுத்தர வயதினர், கிழவர்கள் வரை சுவை சுவையான நிகழ்ச்சிகள் என்று வகை வகையான தொடர்களை சத்துரு தனது பண்டகசாலையிலிருந்து இரவும் பகலும் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றான். இந்தக் காரியத்தில் அவன் கஜானா என்றுமே காலியாவதில்லை. சாறிபாத் ஊர் விதவையின் பானையின் மாவும், கலசத்தின் எண்ணெயும் எடுக்க எடுக்க வந்து கொண்டிருந்தது போல பொல்லாங்கனின் பானையும், கலசமும் பொங்கி வழிந்து கொண்டே இருக்கின்றது.

இதில் கிறிஸ்தவ மக்களையும் சத்துரு தனது வலையில் நன்கு சிக்க வைத்திருக்கின்றான். கரும்பெட்டியில் வரும் சீரியல் தொடர்களைப் பார்க்க வசதியாக கிறிஸ்தவர்கள் ஓய்வு நாளின் காலை வேளைகளில் முதலாவது ஆலய ஆராதனைகளிலேயே துரிதம் துரிதமாகப் பங்கெடுத்து விட்டு வீடு திரும்பி சீரியலுக்குப் பாதிப்பில்லாமல் கரும்பெட்டியைச் சுற்றி குந்தி உட்கார்ந்து விடுகின்றனர். சபையினரை பரலோகத்துக்கு வழிநடத்துகின்ற பரிசுத்த குருவானவர் ஞாயிறு ஆராதனைகளை துரிதம் துரிதமாக யந்திர வேகமாக, எந்த ஒரு ஜெப தபமுமில்லாமல், ஆத்தும பாரமில்லாமல் கடமைக்காக நடத்தி முடித்து வந்து குடும்பத்தினருடன் மணிக்கணக்காக ஓடும் நீண்ட சினிமாக்களை கரும்பெட்டியில் சாவதானமாக உட்கார்ந்து பார்த்து ஆனந்திக்கின்றார்.

கிறிஸ்தவ மக்களை கூண்டோடு நரக அக்கினிக்கு வழிநடத்த மனுஷ கொலை பாதகன் இரவும் பகலும் 24 மணி நேரமும் ஓடிக் கொண்டிருக்கக்கூடிய கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை இந்த நாட்களில் ஒளி பரப்பச் செய்து அதில் தனது ஊழியர்களை நடிக்க விட்டிருக்கின்றான். எந்த நேரம் கரும்பெட்டியைத் திறந்தாலும் ஆடல்கள், பாடல்கள், ஜெபங்கள், உருக்கமான மன்றாட்டுக்கள், தீர்க்கத்தரிசனங்கள், ஆவியில் நிறைந்த அனலான தேவச் செய்திகள், ஆராதனை வேளைகள், குறு நாடகங்கள், கோலாட்டங்கள், வாலிபர் கொண்டாட்டங்கள், என்று "உனக்கும் வார்ப்பேன், உன் ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன்" (ஆதி 24 : 14) என்ற வாக்கின்படி கிறிஸ்தவ மக்களுக்கு மனங்கொண்ட மட்டும் சத்துரு தனது குடத்திலிருந்து வார்த்துக் கொண்டே இருக்கின்றான். இவைகளை எல்லாம் பகல் இரவாக உட்கார்ந்து கண் வலிக்கப் பார்த்து தேவ ஜனம் தங்கள் மரணத்திற்குப் பின்னர் மோட்சம் செல்ல வேண்டுமென்ற தாகம் எல்லாம் சத்துருவுக்குக் கிடையாது. எந்த ஒரு நிலையிலும் தேவ ஜனம் கெட்ட குமாரனைப்போல எழுந்து, புறப்பட்டு, பரலோக தகப்பன் வீடு நாடிச் சென்று தகப்பனின் பாதங்களில் வீழ்ந்து அவருடைய மன்னிப்பைப் பெற்று நித்திய இளைப்பாறுதலை (எபிரேயர் 4 : 9) சுதந்தரிக்க ஒட்டாமல் காலமெல்லாம் பன்றிக் குழியில் பன்றிகளோடு வாழ்ந்து இறுதியில் நரகம் செல்ல வேண்டுமென்பதே தந்திர பேயின் ஒரே குறிக்கோளாகும். தேவ மக்கள் எந்த ஒரு நிலையிலும் ஆண்டவருடைய பாதங்களுக்கு எழுந்து வந்து அவருடைய பொன் முகம் நோக்கி தங்கள் இருதயத்தை அவர் சமூகத்தில் கண்ணீரோடு உடைத்து ஊற்றி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக்கொள்ள விடாதபடி கரும் பெட்டியைக் கொண்டே மனுஷ கொலை பாதகன் அவர்களின் முழு வாழ்நாட் காலத்தையும் துண்டாடிப் போடுகின்றான்.

இந்த அன்பான கிறிஸ்தவ மக்களிடம் நாளொன்றுக்கு எவ்வளவு நேரம் தங்கள் ஆண்டவரோடு ஜெபத்தில் தனிமையில் செலவிட்டீர்கள் என்று நீங்கள் கேட்டுப் பாருங்கள். 10 நிமிஷம், அல்லது 15 நிமிஷம் ஜெபித்தாக சொல்லுவார்கள். ஆனால், கரும்பெட்டியில் பல மணி நேரங்களை கண் வலிக்கப் பார்த்திருப்பார்கள். எத்தனை பயங்கரம் பாருங்கள்! நிலையற்ற உலக வாழ்க்கை, கண் மூடி கண் திறந்தால் முடிவில்லாத நித்தியம், நித்திய அக்கினி கடல் வாசம் என்பதை சற்றும் உணராமல் எத்தனை துணிச்சலாக மக்களை சத்துரு வாழ வைத்திருக்கின்றான் பாருங்கள்.

இந்த உலக வாழ்க்கை முழுவதிலும் ஆண்டவருடைய பாதங்கள் எட்டிக்காயாக கசந்து கிடந்த , அவருடைய பாதங்களை வாஞ்சித்து கதற முடியாத இந்த அன்பான கிறிஸ்தவ மக்களுக்கு அவர்களின் மரணத்திற்கு பின்னர் கர்த்தாவின் பாதங்கள் திடீரென தேனிலும் இனிமையாகி, பரிசுத்த பக்தர்கள், தங்கள் அங்கிகளை ஆட்டுக் குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்த தேவ மக்களுடன் ஒன்று சேர்ந்து தேவ ஆட்டுக்குட்டியை அல்லும் பகலும் அனுவரதமும் பரலோகில் எப்படி போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்க முடியும்? அது ஒருக்காலும் முடியாத காரியம். உலக வாழ்க்கையில் கரும்பெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இந்த மக்களுக்கு மரணத்திற்கு பின்னரும் கரும்பெட்டிதான் நிச்சயமாக தேவைப்படும். அது இல்லாமல் அவர்களுக்கு வாழ்வே இல்லை. ஆம், அது இருக்கக் கூடிய இடம் நரக அக்கினி கடல் மட்டுமே. அங்குதான் அவர்கள் அதை நாடிச் செல்ல வேண்டும். கர்த்தர்தான் தமது ஜனத்துக்கு கிருபையாக இரங்க வேண்டும்.

தேவ ஜனமே, நீங்கள் எச்சரிக்கப்படுகின்றீர்கள். உங்களுடைய மனந்திரும்புதல், உங்களுடைய இரட்சிப்பு மெய்யான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் உங்கள் வீடுகளில் கரும் பெட்டிக்கு இடமே இருக்காது. ஒரு தேவப் பிள்ளையின் வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருக்கும் பட்சத்தில் அந்த தேவ பிள்ளையின் இரட்சிப்பின் காரியம் உண்மையாக இருக்க முடியாது, அது நிச்சயமாக மறுபடியும் பிறக்கவில்லை என்று மேல் நாட்டு தேவ பக்தன் ஒருவர் திட்டமாக எழுதி இருக்கின்றார். உண்மையான வரிகள்.

கரும்பெட்டி ஒரு கர்த்தருடைய பிள்ளைக்கு தேவையான ஒன்று என்று கர்த்தர் நினைத்திருப்பாரானால் உங்கள் சகோதரனாகிய எனது வீட்டில் ஒரு பெரிய கரும் பெட்டி அல்லவா இத்தனை நீண்ட ஆண்டு காலங்களும் உட்கார்ந்து கொண்டிருக்கும். எனது வாழ்நாட் காலம் முழுவதும் தேவன் அதை என்னைவிட்டு அப்புறப்படுத்திவிட்டாரே! "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்ற சங்கீதக்காரரின் அனுபவத்தை கிருபையாக பாவியாகிய எனக்குத் தந்து வழிநடத்தினாரே! எனக்கு ஒரு வழி தேவ மக்களாகிய உங்களுக்கு அடுத்த ஒரு வழி இல்லையே! "நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்" (1கொரி 12 : 13) என்றல்லவா தேவ வார்த்தை கூறுகின்றது.

தேவ எக்காளத்தில் நான் காலா காலங்களில் கரும்பெட்டிக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியதின் காரணமாக அநேக தேவ எக்காள வாசகர்களின் வீடுகளிலிருந்து டி.வி. என்றுமாக அப்புறப்படுத்த பட்டிருக்கின்றது. கர்த்தருக்கே மகிமை. ஒரு சமயம் ஈரோடு மாவட்டம் பவானி என்ற ஊருக்கு நான் சென்றிருந்தேன். என்னை தங்கள் வீட்டுக்கு அழைத்திருந்த கர்த்தருடைய பிள்ளை முதல் வேலையாக என்னை தங்களுடைய மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று அங்கு துணியால் சுற்றப்பட்ட ஒரு மூட்டையை எனக்கு சுட்டிக் காண்பித்து "சகோதரனே, நீங்கள் நமது தேவ எக்காளத்தில் எழுதிய தேவ ஆலோசனைக்கு அப்படியே நாங்கள் கீழ்ப்படிந்து டி.வி.யை நிரந்தரமாக மூட்டைக் கட்டி இங்கே போட்டுவிட்டோம்" என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்கள். அந்த மாட்சியான செயலுக்காக அவர்கள் இந்நாள் வரை கர்த்தரில் களிகூர்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்களின் விலையேறப்பெற்ற காலங்கள் ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் மட்டும் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கும். அல்லேலூயா.

இந்தச் செய்தியை வாசித்ததின் மூலமாக கர்த்தர் உங்கள் உள்ளத்தில் இடைபட்டிருப்பாரானால் மேலே கண்ட அன்பான பவானி தேவ மக்களைப் போல உங்கள் வீட்டு கரும் பெட்டியை உங்களை விட்டு உடனே அப்புறப்படுத்துங்கள். அதற்காக நீங்கள் ஒரு நாள் கர்த்தரில் களிகூருவீர்கள். நீர் மேல் குமிழியாம் நமது வாழ்வில் நமது காலங்கள் ஆண்டவரின் பாதங்களில் மட்டும் செலவிடப்படுவதாக. இந்த உலகத்திலேயே மோட்சம் நமது முழங்கால்களில் ஆரம்பமாகட்டும். அது ஒன்றே ஒன்றுதான் நமது இகலோக வாழ்வின் தேவை என்று தேவனே திட்டமாகச் சொல்லியிருக்கின்றார் (லூக்கா 10 : 42) சங்கீதக்காரரும் "பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை" (சங் 73 : 25) என்று தமது வாழ்வின் அனுபவத்தின் மூலம் அதை நமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார். தேவன் நமக்கு கிருபையாக கொடுத்திருக்கும் இந்த பொற் காலங்களை மிகுந்த ஞானத்துடன் பயன்படுத்தி நமக்கு முன்னாலுள்ள நித்திய பேரின்ப வாழ்வுக்கு நம்மை நன்கு ஆயத்தம் செய்து கொள்ளுவோம்.

தேவ ஜனமே, உங்கள் இருதய பலகையில் இரும்பு எழுத்தாணியால் இன்றே எழுதிக் கொள்ளுங்கள். கரும்பெட்டி, அது உங்கள்ஆத்துமாவின் சவப்பெட்டி!


 

"சகோதரரே, அந்த நாள் திருடனைப் போல உங்களைப் பிடித்துக்கொள்ளத் தக்கதாக, நீங்கள் அந்தகாரத்தில் இருக்கிறவர்களல்லவே. நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள். நாம் இரவுக்கும், இருளுக்கும் உள்ளானவர்களல்லவே"
(1 தெச 5 : 4, 5)


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM