தேவப்பிள்ளையே, உங்கள் அன்பான
தொலைபேசி அழைப்புகள்

தேவ எக்காளம் பத்திரிக்கையை முற்றும் தனியனாகவே நான் எழுதி, அச்சிட்டு, வெளியிட்டு வருகின்றேன் என்பது உங்களில் பலருக்கும் நன்கு தெரியும். எனது உதவிக்காக என்னோடு கூட நான் எவரையும் இதுவரை வைத்துக்கொள்ளவில்லை. எனது தேவ ஊழியத்துடன் நானே எனது சமையல் காரியங்கள், மற்றும் அனைத்து இதர வேலைகளையும் கவனித்துக் கொள்ள வேண்டியதாகவிருக்கின்றது. அதின் காரணமாக எனக்கு வரும் எல்லா தொலைபேசி அழைப்புகளையும் உடனுக்குடன் எடுத்துப் பேசுவது என்பது முற்றும் கூடாத காரியமாகும். அதின் நிமித்தமாகவே எனது கடிதங்களிலோ அல்லது தேவ எக்காளம் பத்திரிக்கையிலோ எனது தொலைபேசி எண்ணை நான் ஒருக்காலும் குறிப்பிடாததை நீங்கள் நன்கு கவனித்திருப்பீர்கள். எனினும், எனது தொலைபேசி எண்ணை தொலைபேசி டைரக்டரி மூலமாகவோ அல்லது நமது தேவ எக்காளத்தை அச்சிடும் அச்சகத்தார் அல்லது மற்ற கர்த்தருடைய பிள்ளைகள் மூலமாகப் பெற்று என்னுடன் தொடர்பு கொள்ளுகின்றீர்கள். கர்த்தருக்குள் மகிழ்ச்சியடைகின்றேன். கடந்த கால நாட்களில் நான் உங்களுடைய தொலைபேசி அழைப்புகளுக்கு எல்லாம் பதில் அளித்தேன். இந்த நாட்களில் நான் எனது தேக சுகயீனங்கள் காரணமாக உங்களுடைய அழைப்புகளுக்கு உடனுக்குடன் பதில் கொடுக்க இயலாத நிலையிலிருக்கின்றேன். உங்கள் சகோதரனை தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் அழைப்புகள் எனது ஜெப வேளைகளில் வருமானால் அதை நான் ஒருபோதும் எடுப்பதில்லை. இத்தனை நீண்ட ஆண்டு காலமும் எங்கள் நீலகிரி மலைகளுக்கு மாத்திரம் மின் வெட்டு இல்லாமல் இருந்தது. ஆனால் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தினமும் 4 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அறிவிப்பில்லாத மின் வெட்டுகளும் இடையிடையே வந்து கொண்டிருக்கின்றன. மின்சாரம் இருக்கும் சமயத்தில் கம்பியூட்டரில் தேவ எக்காள செய்திகளை துரிதம் துரிதமாக நான் டைப் செய்ய வேண்டியதாக இருப்பதால் அந்த நேரத்தில் வரும் தொலைபேசி அழைப்புகளையும் என்னால் எடுத்துப் பேச முடிவதில்லை.

தேவப்பிள்ளைகளாகிய நீங்கள் என்னுடன் அவசரமாக தொடர்பு கொள்ள நினைப்பீர்களானால் அன்புகூர்ந்து மின் அஞ்சல் மூலமாக nsamuel13@yahoo.com என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது கஷ்டத்தை பாராமல் கர்த்தருக்காக ஒரு போஸ்ட்கார்ட் எழுதி தகவல் தாருங்கள். இப்பொழுது நீங்கள் எனது நிலையை கர்த்தருக்குள் நன்கு புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். சிரமத்தை கர்த்தருக்காக அன்பாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM