மகனே, ஜெபம் விசேஷம்


"நீங்கள் நித்திரை பண்ணுகிறதென்ன? சோதனைக்குட் படாதபடிக்கு,
எழுந்திருந்து ஜெபம் பண்ணுங்கள்" (லூக்கா 22 : 46 )

சுமார் 55 ஆண்டு காலங்களுக்கு முன்னர் காலஞ்சென்ற எனது பரிசுத்த தகப்பனார் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நான் பிறந்த பிள்ளைவிளை என்ற கிராமத்திலிருந்து என்னை கோவைக்கு வழி அனுப்பி வைக்க எங்கள் ஊருக்கு சில மைல்கள் தொலைவிலிருக்கும் நாசரேத் என்ற பெரிய கிறிஸ்தவ கிராமத்திலுள்ள ரயில்வே நிலையத்திற்கு அழைத்து வருவார்கள். அப்பொழுது நான் நீலகிரி மலைகளிலுள்ள கோத்தகிரிக்கு அருகிலுள்ள ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஒரு தேயிலைத் தோட்டத்தின் அலுவலகத்தில் கடை நிலை குமஸ்தாவாக வேலை செய்து கொண்டிருந்தேன். இப்பொழுது போல அந்த நாட்களில் தொலை தூர பேருந்துகள் எதுவும் கிடையாது. எங்கள் கிராமங்களில் ஓடிய ஓரிரு சின்ன பேருந்துகளும் விறகு கரியால் ஓடின. அந்த பேருந்துகளை ஓடுவதற்கு தயார்படுத்த வேண்டுமானால் ஒன்று அல்லது அதற்கும் கூடுதலான மணி நேரம் பேருந்துக்குப் பின்னாலுள்ள ஒரு சிறிய காற்றாடியை அதற்கென்று வைத்திருக்கும் கைப்பிடியால் சுழற்றி ஒரு பெரிய உயரமான உருளை வடிவமான இரும்பு அடுப்பிலிருக்கும் விறகு கரி முழுவதையும் கனல் பறக்க நெருப்பாக்கி அந்த அனலைக் கொண்டு பேருந்தை ஓட்டுவார்கள். அந்தக் கனல் அடுப்பு பேருந்துக்குப் பின்னால் இருக்கும். நெருப்பின் வேகம் குறைய குறைய திரும்பத் திரும்ப காற்றாடியை சுழற்றி அனல் ஏற்றுவார்கள். நாசரேத் ரயில் நிலையத்துக்கு முன்னாலுள்ள வேப்ப மரங்கள் நிறைந்த சிறிய பேருந்து நிலையத்தில் அந்த நாட்களில் எங்கும் புகை மூட்டமும், பேருந்துகளின் காற்றாடியை பேருந்தின் நடத்துனர் சுழற்றும் சத்தமும்தான் கேட்டுக் கொண்டிருக்கும். ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா?

எனது தந்தை என்னை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் புறப்பட புறப்பட எனது அருகாமையிலேயே ரயிலை ஒட்டி கொஞ்ச தூரம் நடந்து வந்து கை அசைத்து என்னை வழி அனுப்பி வைத்துவிட்டுச் செல்லுவார்கள். அந்த நாட்களின் ரயிலின் ஓட்டமும் மிகவும் குறைவானதாகும். அடிக்கடி நிலக்கரியை போட்டுப் போட்டு புகை மண்டலத்தை உருவாக்கிய வண்ணமாக வண்டியை ஓட்டிச் செல்லுவார்கள். அதில் பிரயாணம் செய்வோர் நிலக்கரி புகையால் கருமையாகிவிடுவார்கள். எனது பரிசுத்த தந்தை என்னை வழி அனுப்பி வைத்துவிட்டு இறுதியாகச் சொல்லிச் செல்லும் ஒரே ஒரு வார்த்தை "மகனே, ஜெபம் விசேஷம்" என்பதே. அந்த தேவ மனிதரின் வார்த்தையை நான் தேவ பெலத்தால் மிக உறுதியாக பற்றிக் கொண்டேன்.

நான் உலக அலுவலில் இருந்த நாட்களிலும், அதைவிட்டு கர்த்தரின் அழைப்பின் பேரில் வெளி வந்த நாட்களிலும், தேவ ஊழியத்தின் பாதையிலும் உபவாசமும், ஜெபமுமே எனது உயிர் மூச்சாக மாறியது. கர்த்தருக்கே மகிமை. நாங்கள் குடியிருந்த நான்கு வாடகை வீடுகளின் அருகிலிருந்த மலைகளுக்கு மாலைப்பொழுதில் தவறாது நான் ஜெபிக்கச் சென்றுவிடுவேன். கையில் டார்ச் விளக்கு இருக்கும். முழங்காலூன்றும் மலைப் பாறையில் தடிப்பமான எனது கம்பளி மஃப்ளரை (Muffler) மடித்துப்போட்டு வானில் நட்சத்திரங்கள் உதயமாகி இருள் நன்றாக சூழும் வரை அங்கேயே முழங்கால்களில் இருப்பேன். பின்னர் டார்ச் விளக்கின் ஒளியின் உதவியால் வீடு வந்து சேருவேன். நாங்கள் மூன்றாம் வாடகை வீட்டில் இருந்த நாட்களில் பக்கத்து வீட்டு நாயும் தினமும் என்னுடன் சேர்ந்து மலை உச்சிக்கு வந்து எவ்வளவு நேரமானாலும் என் அருகில் அமைதியாகப் படுத்திருக்கும். நான் வீட்டுக்கு திரும்பும்போதே அதுவும் என்னுடன் திரும்பும். அந்த அன்பான நாய் காட்டுப் பன்றிக்கு வைத்த கண்ணி வெடியைக் கடித்து மாண்டு போயிற்று. எனது பழைய புகைப்படங்களுடன் அந்த நாயின் படமும் பத்திரமாக பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

கர்த்தாவின் கிருபையோடு கூடிய அந்த ஜெப வாழ்க்கையே தேவனுக்கு முன்பாக என்னை உத்தமனாக நிறுத்தியது. தேவ ஊழியத்தில் வரக்கூடிய பண ஆசை, பெருமை, மாய்மாலம், விபச்சாரம், வேசித்தனம், பணம் காசுகளுக்காக தேவனுடைய சுத்த சத்தியத்தை இந்த கடைசி நாட்களில் தேவ ஊழியர்கள் தங்கள் கால்களின் கீழ்ப்போட்டு மிதித்து அவமதிப்பது போன்ற தீச்செயல்களுக்கெல்லாம் என்னை விலக்கிக் காத்துக்கொண்டது. தேவ ஊழியத்தின் பாதையிலும், பணம் தவறான விதத்தில் வருகின்றது என்றால் நான் அதை ஒருக்காலும் வாங்கவே மாட்டேன். எனது மூத்த மகன் சுந்தர்சிங்கின் படிப்பின் காரியமாக ஒரு அன்பான தேவப்பிள்ளை எனக்கு உதவி செய்து வந்தார்கள். அந்த தேவ பிள்ளை தனது மனைவிக்கு துரோகம் செய்து வேறொரு பெண்ணுடன் தவறாக நடப்பதை அவர்களின் மனைவியும், பிள்ளைகளும் என்னிடம் கண்ணீரோடு சொன்ன போது நான் அவர்களுடைய உதவியை அதற்கப்பால் ஏற்றுக்கொள்ள மறுத்து தேவ சமூகத்தில் கரம் பிடித்த மனைவிக்கு துரோகம் செய்யாமல் அவர்களுடன் மட்டும் கூடி வாழ்ந்து கர்த்தரை கனம் பண்ணினால் உதவி செய்யும்படியாகவும் இல்லையேல் அந்த பண உதவி மகனுக்கு தேவை இல்லை என்றும் திட்டமாக கூறி மறுத்துவிட்டேன். அதற்கப்பால் ஆண்டவர் வேறு வாசலைத் திறந்து எங்களை வழிநடத்தினார். ஒரு சமயம் ஒரு கம்பெனியில் வேலை செய்யும் ஒரு தேவ பிள்ளை தனக்கு கிடைத்த ஒரு ஆர்டர் கமிஷனில் எனக்கு ஒரு பெரிய தொகையை எடுத்துக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்து அதை காணிக்கையாக என்னிடம் தந்தார்கள். நான் அவர்களிடம் அந்தப் பணம் நியாயமாக அவர்கள் வேலை செய்யும் கம்பெனியின் முதலாளிக்கு போக வேண்டியது, அவரை மறைத்தே உங்களுக்கு கமிஷன் கிடைத்திருக்கின்றது என்று கூறி அதை வாங்க மறுத்துவிட்டேன். அந்த நாளிலிருந்து அந்த தேவ பிள்ளை என்னை முன்பைவிட அதிகமாக நேசிக்க ஆரம்பித்தார்கள். கர்த்தருக்கே மகிமை.

4 நொடிப் பொழுது துரிதப்படுத்தி
ஜீவனைக் காத்த தேவ கிருபை

2012 ஆம் ஆண்டின் ஜனுவரி மாதம் 7 ஆம் நாள் எனது வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. அந்த நாளின் காலை 7 மணிக்கு கோவைக்கு ஒரு வாடகை காரில் செல்ல நான் ஒழுங்கு செய்திருந்தேன். தமிழ் வேதாகமங்கள், கிறிஸ்தவ புத்தகங்கள் போன்றவற்றை அங்கு வாங்குவதற்காக நான் செல்ல வேண்டியதாக இருந்தது. தான் பணிபுரியும் பெண்கள் மேல் நிலை பள்ளியில் கல்வி பயிலும் கர்த்தரை ஏற்றுக்கொண்ட, பணம் கொடுத்து வாங்க முடியாத இந்துப் பெண் பிள்ளைகள் மற்றும் ஏழை கிறிஸ்தவ பெண் பிள்ளைகளுக்கு முற்றும் இலவசமாக வேதாகமங்கள் வாங்கிக் கொடுப்பது, அவர்களை கர்த்தருடைய இரட்சிப்புக்குள் வழிநடத்துவது, வறுமைப்பட்ட பிள்ளைகளுக்கு உதவி செய்வது போன்ற காரியங்களை எல்லாம் எனது மூத்த மருமகள் கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக செய்து வருகின்றார்கள். பள்ளியில் பயிலும் பிள்ளைகள் அவர்களுக்கு "பைபிள் ஆண்டி" (Bible Aunty) என்று பெயர் வைத்திருக்கின்றார்கள். கர்த்தருக்கே மகிமை. குறிப்பிட்ட அந்த நாளில் நான் அவர்களுக்கு வேதாகமங்கள் வாங்குவதற்காகவே முக்கியமாக கோவை சென்றேன். அந்த நாளின் அதிகாலை 3:45 மணிக்கெல்லாம் நான் கண்விழித்தேன். நீலகிரியில் அப்பொழுது கடும் குளிர் காணப்பட்டது. ஜெபிப்பதற்காக நான் முழங்கால் ஊன்ற விரும்பிய போது சாத்தான் எனது காதிற்குள்ளாக தொடர்ந்து சற்று நேரம் படுத்திருக்க என்னை மிகவும் பலமாக ஏவினான். அவனது தீய ஆலோசனைக்கு நான் செவி சாயாமல் உடனே முழங்காலூன்றி தொடர்ச்சியாக சுமார் 2 மணி நேரம் ஆண்டவருடைய பாதங்களில் அந்த நாளின் பிரயாணத்தை கர்த்தர் பொறுப்பெடுத்து நடத்தித் தரும்படியாக மன்றாடி ஜெபித்தேன்.

காலையில் நான் எனது பிரயாணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவும் நானும், கிறிஸ்தவ டிரைவர் ஜேக்கப் அவர்களும் ஜெபம் ஏறெடுத்த பின்னரே கார் புறப்பட்டது. அந்த நாளில் வேதாகமங்கள் எல்லாம் வாங்கிக்கொண்டு கோவையிலிருந்து நாங்கள் கோத்தகிரி திரும்பிக் கொண்டிருந்தோம். கோத்தகிரிக்கு இன்னும் சுமார் 7 கி.மீ. தூரம் இருக்கும்போது எங்கள் வாகனம் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தின் வழியாக உச்சி மேட்டில் வந்து கொண்டிருந்தது. அந்த நேரம் காலியான ஒரு பெரிய லாரி இன்னும் உயரமான மேட்டிலிருந்து நாங்கள் வந்து கொண்டிருந்த பள்ளத்தாக்கை நோக்கி விரைந்து ஓடி வந்து கொண்டிருந்தது. ஓடி வந்து கொண்டிருந்தது என்று சொல்லுவதைவிட அது பறந்து வந்து கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது வரும் பயங்கர வேகத்தைப் பார்த்ததும் நான் அருகிலிருந்த டிரைவரிடம் இப்படிப்பட்ட வாகனங்களால்தான் ரஸ்தாவில் அழிவுகள் உண்டாகின்றன என்று சொல்லி வாயை மூடுவதற்குள்ளாக அந்த லாரி இடி முழக்கம்போன்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு எங்களுக்கு பின்னாலுள்ள ரஸ்தாவின் தடுப்புச்சுவரை மோதி உடைத்துக்கொண்டு ஆழமான பள்ளத்தாக்கினுள் போய் விழுந்தது. அந்த லாரி முழுவதும் மூன்று பகுதிகளாக சிதறுண்டு போனதை நாங்கள் எங்கள் கண்களால் கண்டோம். அந்த கெடு பாதாள பள்ளத்தாக்கில் கிடந்த லாரி அண்டை இறங்கிச் செல்லவே இயலாது. சற்று நேரம் நின்று நாங்கள் அந்த துயரத்தைப் பார்த்துவிட்டு கோத்தகிரிக்கு வந்துவிட்டோம். நாங்கள் கோத்தகிரியை நெருங்க நெருங்க தமிழ் நாடு அரசாங்க ஆம்புலன்ஸ் வண்டி 108 அந்த விபத்தில் மாண்டோரையும், காயம்பட்டோரையும் எடுத்து வருவதற்காக துயர ஒலி எழுப்பிக்கொண்டு கோத்தகிரியிலிருந்து புறப்பட்டு வந்து எங்களைத் தாண்டி விரைந்து கடந்து செல்லுவதை நாங்கள் துக்கத்தோடு கண்டோம்.

சில நொடிப் பொழுதிற்கு முன்பாகத்தான் எங்கள் வாகனம் லாரி மோதிய தடுப்புச் சுவரை கடந்து மேலே வந்திருந்தது. "வெறும் 4 நொடிகளுக்கு நாம் பிந்தியிருந்தால் அந்த லாரி நமது காரின் மேல் மோதி நமது காருடன் சேர்த்து அதுவும் கெடு பாதாளம் போயிருக்கும், நாமும் நொறுங்கிப்போயிருப்போம்" என்று டிரைவர் ஜேக்கப் துயரத்தோடு சொன்னார்கள். அந்த லாரியை ஓட்டியவன் அதிகமான குடிபோதையில் இருந்ததாகவும், அவன் தனது லாரிக்கு டீசல் போடும் போதே கோத்தகிரி பெட்ரோல் பங்கில் உள்ளவர்கள் அவனை வாகனத்தை எடுக்கவிடாமல் எவ்வளவோ தடுத்ததாகவும், எச்சரித்ததாகவும் நாங்கள் பின்னர் கேள்விப்பட்டோம். அந்த விபத்து நிகழ்ச்சியானது தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதாகவும், செய்தி தாட்களிலும் வந்திருந்ததாகவும் சொன்னார்கள்.

வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவத்தை நான் முதன் முதலாவதாக பார்த்ததுடன் டிரைவர் ஜேக்கப் அவர்களுக்கும் இதுவே முதல் தடவை என்று சொன்னதுடன் இந்த விபத்தைப் பார்த்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் தனது வாகனத்தை எடுக்கும்போது அதிகமான ஜெபத்தோடும், உருக்கமான மன்றாட்டோடும் எடுப்பதாக அவர் என்னிடம் கூறினார்.

அந்த நாளின் அதிகாலையில் தேவ சமூகத்தில் பாவியாகிய நான் தேவ பெலத்தால் ஏறெடுத்த உருக்கமான 2 மணி நேர ஜெபம் நான்கு நொடிப் பொழுதை எங்களுக்கு ஈவாக முன்கூட்டிக்கொடுத்து அழிவிலிருந்து எங்களைக் காத்துக் கொண்டது. இதை கருத்தோடு வாசிக்கும் தேவ பிள்ளையே, ஜெபத்தை உங்கள் வாழ்க்கையில் ஏனோதானோவென்று ஒருக்காலும் எண்ணிவிடாதேயுங்கள். இடைவிடாது ஜெபியுங்கள் (1தெச 5 : 17) தேவன் உங்கள் உள்ளத்தில் ஜெபிக்க ஏவும்போதெல்லாம் உடனே முழங்கால்களில் விழுங்கள். "மகனே, ஜெபம் விசேஷம்" என்று சொல்லிச் சென்ற அந்த பரிசுத்தவானின் வாழ்க்கை முழுவதுமே ஜெபமாக அமைந்தது. மனிதர்களிடத்தில் பேசுவதைவிட தன்னை ஆட்கொண்ட தன் இரட்சா பெருமானிடத்தில் பேசுவதையே அந்த தேவ மனிதர் பாக்கியமாக எண்ணி எப்பொழுதும் அவருடைய பாதங்களிலேயே அதிகமாகத் தரித்திருந்தார்கள். ஒரு பரிசுத்த மணி மொழி இவ்வாறு உள்ளது "உனது அதிகமான முழங்காலூன்றுதல்கள் ஒரு சிறப்பான பரிசுத்த நிலையில் உன்னை எப்பொழுதும் வைத்துக் காத்துக் கொள்ளும்" (A lot of kneeling will keep you in good standing) என்பதே அந்த வாசகம்.



Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM