|
|
"இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும்
பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை, தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக
நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர்" (2 நாளாகமம் 6 : 14)
"ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக்
கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும்
பயங்கரமுமான தேவனே" (தானியேல் 9 : 3)
"தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு தம்முடைய வல்லமையை
விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது"
(2 நாளா 16 : 9)
|
கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,
நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு
கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருக உண்டாவதாக.
ஆமென்.
தேவ எக்காளத்தின் 44 ஆம் ஆண்டின் கடைசி இதழையும் உங்கள் அன்பின் கரங்களில்
தந்து மகிழும் கிருபையின் சிலாக்கியம் தந்த நம் அன்பின் ஆண்டவரின் ஆணி
கடாவுண்ட பொற் பாதங்களை முத்தமிட்டு வாழ்த்துகின்றேன். சரீர பெலவீனங்களின்
மத்தியிலும் ஆண்டவருடைய கிருபைக்காக அடிக்கடி அவரின் பொன் முகம் நோக்கிக்
கெஞ்சி கெஞ்சி அவரின் பெலன் பெற்று இந்த இதழை நிறைவு செய்தேன்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் வெளி வந்த கடந்த தேவ எக்காள இதழ் உங்களில்
பலருக்கும் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தமைக்காக கர்த்தரில்
மகிழ்ச்சியடைகின்றேன். அந்த இதழின் வரவுக்காக ஆவலாக ஏங்கிக் காத்திருந்ததாக
ஒரு தேவப்பிள்ளை குறிப்பிட்ட வார்த்தை என் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது.
கடந்த இதழில் கர்த்தருடைய கிருபையைக் கொண்டு நான் மொழிபெயர்த்து வெளியிட்ட
தேவ மனிதர் ஹட்ஸன் டெய்லரின் வாழ்க்கை சரித்திரத்தை வாசித்து உள்ளம் உருகிய
தேவப்பிள்ளைகளின் சாட்சிகள் என் உள்ளத்தை தொட்டது. பத்திரிக்கை கிடைத்த
அன்றைய தினம் இரவிலேயே ஹட்ஸன் டெய்லரின் வாழ்க்கை சரித்திரத்தை முழுமையாக
வாசித்து, அவர் தனது அருமைத் தாயாரிடம் இறுதி விடை பெற்றது மற்றும் மரண
இருள் சூழ்ந்த அவரின் கடற்பயண கப்பல் யாத்திரை போன்றவை தனது கண்களில்
கண்ணீரை கொண்டு வந்ததாக ஒரு தேவ பிள்ளை மின் அஞ்சல் செய்தி
அனுப்பியிருந்தார்கள். இதே அனுபவத்தை என்னிடம் நேரில் பகிர்ந்து
கொண்டவர்களும் உண்டு. கர்த்தருக்கே மகிமை. "பாம்பின் வாய் தவளை" செய்தியும்
உங்களில் பலரின் உள்ளத்தை பலமாக அசைத்திருக்கின்றது. செய்தியை வெறுமனே
வாசித்து பரவசம் அடைந்து அத்துடன் நின்றுவிடாமல் முடிவில்லா நித்தியத்தை
ஆண்டவர் இயேசு இரட்சகருடன் பரலோகில் வாழும் சிலாக்கியத்தை பெற்றுக்கொண்டோம்
என்ற நிச்சயத்தை திட்டமாக இந்தக் கிருபையின் நாட்களில்
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். நிச்சயமில்லாமல் ஓடி, ஆகாயத்தை
அடிக்கிறவர்களாக சிலம்பம் பண்ணிவிடாதீர்கள் ( 1 கொரி 9 :26 )
எனது அதிகமான சுகயீனம் குறித்து தேவ எக்காளத்தில் செய்தி வாசித்து மனதில்
மிகுந்த விசாரம் கொண்டு எனது நல்ல சுகத்துக்காகவும், அன்பின் ஆண்டவர்
எனக்கு நீண்ட ஆயுட்காலத்தை தந்து ஆசீர்வதிக்கும்படியாகவும், இன்னும் நான்
நீண்ட நாட்களுக்கு உயிரோடிருந்து தேவ ஜனத்திற்கு எச்சரிப்பின் செய்தியை தேவ
எக்காளத்தில் எழுதி அவர்களை நீதியின் பாதையில் வழிநடத்தும் படியாகவும்
தாங்கள் உள்ளத்தின் பாரத்தோடு ஜெபிப்பதாகவும் உங்களில் பலர் கடிதங்கள்
எழுதி என்னை உற்சாகப்படுத்தியதுடன், உங்களில் சிலர் எனது மருத்துவ
செலவுகளுக்காக தேவ அன்பின் பாசத்தோடு காணிக்கைகளும் அனுப்பி உங்கள் அன்பை
தெரிவித்திருந்தீர்கள். கர்த்தருக்குள் உள்ளம் கசிந்தேன். அதற்கான
பிரதிபலன் பரலோகில் உங்களுக்கு உண்டு. தேவபிள்ளைகளாகிய உங்களின் உருக்கமான
அனுதின ஜெபங்கள்தான் என்னை இம்மட்டாக ஜீவனோடு பாதுகாத்து வழிநடத்தி
வருகின்றது.
கடந்த 2011 ஆம் ஆண்டானது பாவியாகிய எனது வாழ்வில் தேவன் எத்தனை
உண்மையுள்ளவர், ஜீவிக்கின்ற மெய்யான கர்த்தர், வாக்கு மாறாதவர்,
ஒருக்காலும் கைவிடாத கன்மலை, தாம் அளித்த வாக்கை எந்த ஒரு நிலையிலும் கை
நழுவ விட்டுவிடாத இஸ்ரவேலின் பரிசுத்தர் என்பதை மிகவும் பலமாக நிரூபித்துக்
காண்பித்த ஒரு ஆண்டாக அமைந்தது. எனது சுகயீனம் அறிந்ததும் இந்த எளிய தேவ
ஊழியத்திற்கு ஆண்டுதோறும் உதவி ஒத்தாசை அனுப்பி ஆதரித்து வந்த அன்பான
தேவப்பிள்ளைகளாகிய உங்களில் பலரும் உடனே அதை நிறுத்தி விட்டீர்கள்.
காணிக்கை அனுப்பியவர்கள் கூட அதைத் திரும்ப தங்களுக்கு
அனுப்பிவிடும்படியாகக் கேட்டுப் பெற்றுக் கொண்டீர்கள். அதைக் குறித்து நான்
உங்கள் பேரில் மனக்கசப்போ, வருத்தமோ கொள்ளவில்லை. நான் உங்களை கர்த்தரில்
இன்னும் அதிகமாக நேசிக்கின்றேன். உங்களுக்காக தேவ கிருபையால் உள்ளத்தின்
பாரத்தோடு ஜெபித்து வருகின்றேன். ஏனெனில், கடந்த கால நாட்களில் நீங்கள்
இந்த ஊழியங்களுக்கு ஆண்டுதோறும் ஒழுங்காக கரம் நீட்டி உதவி வந்த அன்பான
கர்த்தருடைய பிள்ளைகள். கர்த்தர் உங்கள் உள்ளத்தில் ஏவினதின்படி நீங்கள்
நடந்து கொண்டீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
அதே சமயம் எனது உடல் நலக் குறைவு குறித்து கேள்விப்பட்டதும் ஆண்டுதோறும்
அனுப்பும் ஊழியக்காணிக்கையை விட இரட்டிப்பாக எனக்கு அனுப்பி என்னைக்
கர்த்தருக்குள் பரவசப்படுத்திவிட்ட தேவ பிள்ளைகளும் உங்களில் உண்டு.
அதுமட்டுமல்ல, "கடந்த கால நாட்களில் கர்த்தருக்காக நீங்கள் செய்த தியாக
அன்பின் ஊழியங்களை மனதில் கொண்டு ஆண்டு தோறும் நாங்கள் எங்கள் பங்கை
உங்களுக்கு தொடர்ந்து அனுப்பியே தீருவோம். தேவ எக்காளம் அச்சிட்டு வெளியிட
உங்களுக்கு பொருள் வசதி வேண்டும், நீங்களும் பல தேவ ஊழியங்களுக்கு கரம்
நீட்டி உதவி வருகின்றீர்கள், மிஷனரிகளை தாங்கி ஆதரிக்கின்றீர்கள்" என்று
எழுதிய அன்புள்ளங்களும் உங்களில் இருக்கின்றனர். கர்த்தருக்கே மகிமை.
|
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச்
சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை;
எல்லாம் நிறைவேறிற்று (யோசுவா 21 : 45) |
உலகப்பிரகாரமாக நீலகிரி மலைகளிலுள்ள ஒரு தேயிலை
தோட்டத்தில் கடைநிலை குமஸ்தாவாக நான் பணி செய்த நாட்கள்
19 வருடங்களும் 8 மாதங்களும் ஆகும். 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் நாள்
நான் எனது உலக அலுவலுக்கு என்றுமாக கை அசைத்துவிட்டு ஒரு காலை வேளை எனது
அலுவலகத்தை விட்டு வெளியே வந்தேன். அன்றிலிருந்து சரியாக ஐந்து நாட்களில்
அதாவது 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் நாள் அதிகாலை 3:15 மணிக்கு எனது
ஆழ்ந்த நித்திரையிலிருந்த என்னை உலகப்பிரகாரமான எனது வேலையை விட்டு விட்டு தமது
ராஜரீக ஊழியத்தை முழு நேர ஊழியனாக செய்ய வரும்படியாக வெகு திட்டமாக அழைத்து
எந்த ஒரு நிலையிலும் தான் என்னைக் கைவிடப் போவதில்லை என்று என்னுடன் பேசி
அதற்கு ஆதாரமாக தமது வேத புத்தகத்திலிருந்து "இனிச் சூரியன் உனக்குப் பகலிலே
வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும்,
கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார்.
உன் சூரியன் அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு
நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்துபோம்" (ஏசாயா 60 :
19-20) என்ற வாக்கை எனக்குக் கொடுத்து தேவன் என்னை அழைத்து வந்தார். தேயிலைத்
தோட்டத்தில் நான் பணி செய்ததற்கு எனக்குப் பென்சன் எதுவுமே கிடையாது. எனக்குக்
கிடைத்த சொற்பமான எனது சேமிப்புகள் ஒரிரு மாதங்களில் காலியாகி நான் முற்றும்
கர்த்தாவின் கரங்களில் விழுந்தேன். அன்றிலிருந்து இன்று வரை சுமார் 37 ஆண்டு
காலமாக அந்தக் கைவிடாத கன்மலை எந்த ஒரு தாழ்ச்சியுமில்லாமல் எங்களை அற்புதமாக
வழிநடத்தி வந்திருக்கின்றார். என்னைவிட அதிகமாக சம்பளம் வாங்கி தங்கள்
பிள்ளைகளை இங்கிலீஸ் மீடியத்தில் ஆங்கிலேயர்களிடம் படிக்க வைத்த என்னுடன் வேலை
பார்த்த எனது சக பணியாளர்களின் பிள்ளைகளைக்காட்டிலும் கர்த்தர் எனக்கு
கிருபையாகக் கொடுத்த எனது இரு புதல்வர்களும் சாதாரண தமிழ் மீடியத்தில் எளிய
பள்ளிகளில் படித்து ஏற்ற நாட்களில் இரட்சிப்பின் பாத்திரங்களாகி சிறப்பான
கல்விகளைப் பெற்றுக் கொண்டார்கள். "யாருக்கு டியூசன் எடுத்தாலும் உங்கள்
புதல்வனுக்கு டியூசன் எடுக்க என்னால் முடியாது. அவனுக்கு எந்த ஒரு சிறிய
ஞானமும், அறிவும் கிடையாது" என்று ஆசிரியரால் வெறுத்து ஒதுக்கித் தள்ளப்பட்ட
எனது மூத்த மகன் பின் வந்த நாட்களில் தேவ கிருபையால் நன்றாகப்படித்து தனது
படிப்பில் ஐந்து பட்டங்களைப் பெற்று தான் வேலை பார்க்கும் மேல்நிலைப் பள்ளியில்
தன்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர்களைக் காட்டிலும் கூடுதலாக படித்த
ஆசிரியராக காணப்படுகின்றார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.
கடந்த ஆண்டு எல்லா ஆதரவுகளும் அடைபட்டுப்போவது போலக் காணப்பட்டாலும் எனக்கு
திட்டமான வாக்குத்தத்தம் கொடுத்து உலக வேலையிலிருந்து என்னைக் கரம் பிடித்து
தமது ராஜகரீக ஊழியத்தைச் செய்ய முழு நேர ஊழியனாக என்னை வெளியே அழைத்து வந்த
தேவன் கடந்து சென்ற எல்லா ஆண்டுகளைக் காட்டிலும் நிறை பூரணமாக என்னை
தாழ்ச்சியின்றி வழிநடத்தி "நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும்
அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசம் போலிருக்கும்" (நீதி 4 : 18)
என்ற தமது வார்த்தையை துளிதானும் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தி
மகிமைப்படுத்தினார். அல்லேலூயா. "எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்...........
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும்,
புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்" (2 தீமோ 4 :
16-17) என்றும் "இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை
ஒருவனும் பூட்டமாட்டான்" (வெளி 3 : 8) என்றும் "கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத்
துணை செய்கிறார், ஆகையால் நான் வெட்கப்படேன்,
நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்"
(ஏசாயா 50 : 7) என்ற தேவ வாக்குகளெல்லாம் என் மேல் வந்து எனக்கு பூரணமாகப்
பலித்தது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை.
|
| நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை
அறிந்தேன் |
"நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே
உன்னை அறிந்தேன்" (எரேமியா 1 : 5) என்று தமது தீர்க்கனுக்குச் சொல்லியவாறு
பாவியாகிய என்னையும் தேவன் எனது தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே தமக்கெனத்
தெரிந்து கொண்டார். எனது தாயார் வாலிப பெண்ணாக இருந்த நாட்களில் தான் வாழ்ந்த
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்தோப்பு என்ற அழகான ஊருக்கு அருகில்
ஓடிக்கொண்டிருந்த தாம்பிரவர்ணி என்ற ஆற்றின் ஒரு ஆழமான பகுதியில் மூழ்கி
மரிக்கப்போகும் இறுதி நேரத்தில் அவர்கள் ஏறெடுத்த "ஐயா, காப்பாற்றுங்கள்" என்ற
அபயக் குரலில் அவர்கள் வயிற்றில் இன்னும் உருவாகாமல் இருந்த எனது சிசுக்
குரலும் கூட ஒன்று சேர்ந்து "ஐயா, எங்களைக் காப்பாற்றுங்கள்" என்று தேவனுடைய
செவிகளில் போய் கட்டாயம் எட்டியிருக்க வேண்டும்" என்று நான் அவ்வப்போது
ஆச்சரியத்துடன் யோசித்துப் பார்ப்பேன். அந்தக் குரலை கேட்ட அருகில் ஆற்றில்
தனது துணியை துவைத்துக்கொண்டிருந்த ஒரு நல்ல மனிதர் எனது தாயாரையும்,
அவர்களுடன் மூழ்கிக்கொண்டிருந்த அவர்களது தோழியையும் ஓடோடி வந்து ஏற்ற
சமயத்தில் காப்பாற்றினார். என்னைக் கொண்டு பின் நாட்களில் தமது பரிசுத்த
நாமத்தை மகிமைப்படுத்த வேண்டுமென்பது தேவனின் அநாதி தீர்மானமாக இருந்தது. அதின்
காரணமாக எனக்கு நேரிட்ட பல மரண சந்தர்ப்பங்களிலும் கர்த்தர் என்னை அற்புதமாகப்
பாதுகாத்தார். நான் சிசுவாக இருந்தபோது சோடா பாட்டல் தகர மூடி ஒன்றை எடுத்து
விழுங்கி எனது தொண்டையில் அது அடைத்து, மூச்சு திணறி, கண்கள் இரண்டும் நிலை
குத்தி நான் மரிக்கப்போகும் கடைசி நேரத்தில் "சிவநாசி" என்ற பெயருடைய அன்பான
பாட்டியம்மா தனது விரலை எப்படியோ எனது தொண்டையினுள் லாவகமாகச் செலுத்தி மூடியை
எடுத்து என்னைக் காப்பாற்றியிருக்கின்றார்கள். உயரமான மரங்களிலிருந்து கடினமான
வெட்டாந்தரையில் விழுந்து எந்த ஒரு அடிகளில்லாமல் கர்த்தரால் நான்
பாதுகாக்கப்பட்டிருக்கின்றேன். பல தடவைகளிலும் சாத்தான் என்னை நீர் நிலைகளில்
மூழ்க்கடித்து கொல்லவே பெரிதும் பிரயாசப்பட்டும் கர்த்தர் அவனது கரத்தில்
ஒப்புவிக்காமல் என்னைக் காத்துக் கொண்டார். பின் நாட்களில் ஆண்டவர் என்னைக்
கொண்டு பெரிய காரியங்களைச் செய்யப்போகின்றார் என்பதை முன்னறிந்த சாத்தான் என்னை
எப்படியும் முளையிலேயே கிள்ளி எறிய எவ்வளவோ பிரயாசம் எடுத்தும் அவனால் கூடாது
போயிற்று.
|
| சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்தி
வைராக்கியமாயிருந்தேன் ( 1 இரா 19 : 10) |
அநாதி சிநேகத்தால் என்னை இவ்வண்ணமாக சிநேகித்த
ஆண்டவரை நான் குழந்தைப் பருவத்திலிருந்தே நேசிக்க தொடங்கினேன். நான் சிறுவனாக
இருந்தபோது எங்கள் ஊருக்கு அருகிலுள்ள தேரிக்காட்டில் அமைந்திருந்த "சந்நியாசி
அம்மன்" என்ற இந்துக் கோயிலுக்கு ஒரு நாள் மத்தியான வேளை சென்று அங்குள்ள
மூன்று விக்கிரகங்களிலும் உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால்கள் வரை மூன்று பெரிய
சிலுவை அடையாளத்தை வரைந்துவிட்டு வந்து விட்டேன். இந்தக் காரியத்தை நான்
எவருக்கும் சொல்லாமல் மறைத்துக் கொண்டேன். ஒருக்கால் நான் கண்டு
பிடிக்கப்பட்டிருந்தால் என்னை அடித்துக் கொன்றிருப்பார்கள் என்பதில் சந்தேகம்
கிடையாது. குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்டவர் மேல் என்னை அறியாமல் ஒரு ஆழ்ந்த
நேச வைராக்கியம் ஏற்பட்டது. நான் உயர் நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த
நாட்களில் தினமும் ஓரிரு மைல்கள் தூரம் பக்கத்து ஊருக்கு நடந்து சென்று படித்து
வரவேண்டும். அந்த நாட்களிலும் வழியிலுள்ள சிறு கோயில் விக்கிரகங்களை தண்ணீர்
நிறைந்த கிணற்றில் எடுத்துப்போட்டுவிடுவேன். அவைகளை எனது கரங்களால் தொடாமல்
எனது காலால் தட்டிக்கொண்டு செல்லுவேன். அந்தக் காரியங்களை எல்லாம் நான்
கட்டாயம் செய்திருக்கக்கூடாது. ஆனால், எனது அறியாமையாலும், ஜீவனுள்ள ஆண்டவர்
இயேசு இரட்கரை தவிர உலகில் வேறு எந்த ஒரு தெய்வமும் கிடையாது என்ற எனது
வைராக்கியத்தாலும் அப்படிச் செய்தேன்.
அந்த நேச வைராக்கியம்தான் என்னைத் தன்னந் தனியனாக தேவனுடைய சுவிசேஷத்தை சுமந்து
கொண்டு நேப்பாளம், சிக்கிம், பூட்டான், மேற்கு தீபெத், ஸன்ஸ்கார் பள்ளத்தாக்கு
போன்ற தொலை தூர ஏகாந்தமான நாச மோசம் நிறைந்த இடங்களுக்கு எல்லாம் செல்ல
வைத்தது. மரணமே வந்தாலும் அஞ்சப் போவதில்லை என்ற துணிச்சலில் நான் கர்த்தரை
துணை கொண்டு முன்னேறினேன். பூட்டான் என்ற இமயமலை நாட்டின் பாரு என்ற ஒரு சிறிய
கிராமத்தில் கொடிய பனிப் பொழிவின் காரணமாக ஒரு இரவில் நான் குளிரில் விறைத்து
நிச்சயமாக மடிந்து போக வேண்டிய என்னைக் கர்த்தர் அற்புதமாகக் காப்பாற்றினார்.
அந்தக் கிராமத்தில் இருந்த ஒரு வீட்டில் இராத்தங்க நான் இடம் கேட்டேன். அந்த
வீட்டின் மனிதர் அந்த ஊரிலிருந்த புத்தமத கோயிலில் என்னை தங்க வைக்க இடம்
கேட்கச் சென்றார். ஆனால் அதை கண்காணித்த புத்தமத மூதாட்டி என்னைத் தங்க அனுமதி
மறுக்கவே நான் ஊரின் மையப் பகுதியில் இருந்த ஒரு திறந்த வெளி தகரக் கொட்டகையில்
தங்குவதற்காக செல்லவிருந்த இறுதி நேரத்தில் மனம் இரங்கி தனது வீட்டின் முன்
வாசல் நடை பாதையில் வீட்டுக்கார மனிதர் என்னை தங்க அனுமதித்தார்.
வீட்டுக்குள்ளேயே நான் குளிரில் இரவு முழுவதும் நடுநடுங்கி மிகவும்
பாடுபட்டேன். ஒரு கண்ணுக்கும் நான் தூங்கவில்லை. அடுத்த நாள் காலை கதவைத்
திறந்து பார்த்தபோது வெளியே எங்கும் வெண் பனி கட்டியாக உறைந்து கிடப்பதை
நான்கண்டு அதிர்ச்சியடைந்தேன். அங்கு நான் ஒருக்கால் அந்த இரவில்
படுத்திருந்தால் நிச்சயமாக கடுங்குளிரில் விறைத்து மாண்டிருப்பேன்.
நேப்பாள தேசத்தின் கிராமங்களில் தெருக்களிலும், திண்ணைகளிலும்
பூச்சிக்கடிகளுக்கு தப்பிக் கொள்ள என் உடம்பு முழுவதையும் டி.டி.ற்றி என்ற
வெண்மையான ரசாயான பவுடரைப் பூசிக்கொண்டு படுத்திருந்த நாட்கள் உண்டு. இமாச்சல்
பிரதேசத்தில் சட்லஜ் நதி ஓடுகின்ற கோட்கர்ட் என்ற ஒரு கிராமத்தில் நான் ஒரு
இரவு தங்கியிருந்தேன். சிம்லா மலைகளிலிருந்து சில மணி நேர பிரயாண தூரத்தில் அது
உள்ளது. அந்தக் கிராமம் முழுவதும் ஆப்பிள் மரங்களில் பழங்கள் பழுத்துக்
குலுங்கிக் கொண்டிருந்தன. மாலைச் சூரியன் அஸ்தமித்துவிட்டபடியால்
ஊரிலுள்ளோருக்கு எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது என்பதற்காக ஊரின்
ஆரம்பத்தில் இருந்த ஒரு மலைக் குகையில் தங்க நான் அதிகமாக விரும்பினேன்.
கோட்கர்ட் கிராமத்தின் அந்தக் குகையில் பக்தசிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்கள்
கடந்த காலங்களில் தங்கியிருந்ததை நான் அவருடைய புஸ்தகத்தில்
வாசித்திருக்கின்றேன். அந்தக் குகை தங்குவதற்கு வசதியாக இருப்பதை நான்
கவனித்தேன். ஆனால், அங்கு இராத்தங்க இயலாதவாறு கர்த்தர் என்னை அதிகமாக
உணர்த்தியபடியால் கோட்கர்ட் கிராமத்திற்குச் சென்று கிராமத்திலுள்ள ஒரு
வீட்டில் தங்க இடம் கேட்டேன் அந்த அன்புள்ள குடும்பத்தினர் என்னை அன்புடன்
ஏற்று உபசரித்து, அன்று இரவு எனக்கு உணவளித்து நல்ல உஷ்ணமாக இருக்கக் கூடிய
தங்களது சமையலறையிலேயே அடுப்பண்டையில் என்னைப் படுக்கச் செய்தனர். நான் முதலில்
குறிப்பிட்ட குகையில் இராத்தங்கியிருந்தால் கரடிகள் என்னைப்
பீறிப்போட்டிருக்கும் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ஊரிலுள்ள மரங்களில்
ஆப்பிள் பழங்களை பறித்து உண்டுவிட்டு அந்தக் குகையில் ஒன்று கூடி
இருந்துவிட்டுத்தான் கரடிகள் கானகத்திற்குச் செல்லும் என்று வீட்டுக்கார மனிதர்
என்னிடம் சொன்னார். அந்த கோட்கர்ட் கிராமத்திலிருந்துதான் சாதுசுந்தர்சிங்
அவர்கள் தீபெத்துக்குச் சுவிசேஷம் அறிவிக்கச் செல்லுவார். அவர் சென்ற தீபெத்
நாட்டுப் பாதையில் கோட்கர்ட் ஊருக்கு மேலாக உள்ள மலைப்பாதையில் பாவியாகிய நான்
எனது பாதங்களைத் தூக்கி வைத்து நடந்து கர்த்தருக்குள் ஆனந்தித்தேன்.
காஷ்மீரிலிருந்து 2 முழுமையான நாட்கள் பயண தூரத்திலுள்ள ஸன்ஸ்கார்
பனிப்பள்ளத்தாக்கில் நான் தேவ ஊழியம் செய்த சில நாட்கள் உண்டு. புத்தர்கள்
நிறைந்த அந்த இடத்தில் அக்கம் பக்கத்திலுள்ள கிராமங்களில் நான் ஊழியம் செய்து
திரும்புவேன். அந்த இடங்களில் பிராண வாயு குறைவானதால் சில சமயங்களில் சுவாசிக்க
சற்று கஷ்டமாகத் தெரியும். ஒரு நாள் மத்தியானம் கிராமத்திற்கு அப்பாலிருந்த ஒரு
பனி நதியில் பள்ளத்தாக்கில் நான் குளித்துக் கொண்டிருந்தபோது அந்த
கிராமத்திலுள்ள சில சிறுவர்கள் மேலே இருந்து என்மேல் கற்களை எறிவதை கவனித்தேன்.
எப்படியோ தெய்வாதீனமாக கற்கள் எதுவும் என்மேல் விழாதபடி கர்த்தர் என்னைப்
பாதுகாத்தார். உடனே துரிதம் துரிதமாக நதியிலிருந்து மேலே ஏறி வந்தேன்.
கல்லெறிந்தவர்கள் எனக்கு முன்பாக ஓடிச்செல்லுவதைக் கவனித்தேன். அந்த ஊரிலுள்ள
பொல்லாத புத்தர்கள் நான் அந்த இடத்தில் தங்களுடைய மதத்திற்கு விரோதமான
காரியங்களில் ஈடுபடுவதைக் கண்டு எனக்கு தீங்கிழைக்க தங்கள் சிறுவர்களை
தூண்டிவிட்டிருந்தனர். நான் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற நாளில் எனது
பிரயாணத்தில் ஓரிடத்தில் நான் சென்ற
டிரக் நண்பகல் உணவுக்காக நிறுத்தப்பட்டிருந்த போது ஒரு
கூட்டம் புத்த மக்கள் தங்களது புத்த லாமாவைக்கூட்டிக் கொண்டு
வந்து எனக்கு நேராக கை நீட்டி தங்கள் தீபெத் மொழியில் எனக்கு விரோதமாக
என்னவெல்லாமோ தீது சொன்னார்கள். காரியம் சற்று நேரம் நீண்டு சென்றிருந்தால்
அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து என்மேல் கைபோட்டு எனக்கு பொல்லாப்பு
செய்திருப்பார்கள். எனது நிர்ப்பந்தமான நிலையைப் புரிந்து கொண்ட கார்க்கில்
என்ற இடத்தின் முகமதிய டிரக் டிரைவர் உடனே வாகனத்தை ஓட்டிக்கொண்டு கிளம்பி
வந்துவிட்டார்.
நேப்பாள கிராமங்களில் நான் எனது தலையில் தேவனுடைய பிரசுரங்களை சுமந்து கொண்டு
செல்லுவதைக் கண்டு மக்கள் என்னைப் பரியாசம் செய்ததுண்டு. நேப்பாளத்திற்குள்
சுவிசேஷம் எடுத்துச் செல்லக்கூடாது என்றிருந்த நேப்பாள இந்து அரசர்கள் அரசாட்சி
செய்த நாட்களில் நான் அதற்கு எதிராக செயல்பட்ட காரணத்திற்காக அதிகாரிகளுக்கு
முன்பாக நான் கரங்களில் தேவனுடைய பிரசுரங்களுடன் திருடனைப்போல நிறுத்தப்பட்ட
வேளைகள் இருந்தன.
கடந்து சென்ற நாட்களிலும், காலங்களிலும் பரதேசியாகிய நான் என்னைத் தமக்கென்று
தெரிந்து கொண்ட நம் அன்பின் கன்மலைக்காகவும், அழிந்து போகும்
ஆத்துமாக்களுக்காகவும் எடுத்துக் கொண்ட எல்லா பிரயாசங்களும், பாடுகளும் அவருடைய
ஞாபக புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.
|
| உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி
ஜாக்கிரதையாயிரு (2 தீமோ 2 : 15) |
தேவனுடைய ஊழியத்தின் பாதையில் ஆண்டவருடைய வசனங்களை
விதைப்பதிலும், இருளிலிருந்த ஜனங்களின் கரங்களில் தேவனுடைய ஜீவனுள்ள
வார்த்தைகளை கொடுப்பதிலும் அவருக்காக நான் எவ்வளவு வைராக்கியம் காண்பித்தேனோ
அந்த அளவிற்கு பண விசயங்களிலும் நான் வைராக்கியம் காண்பித்தேன். அந்த நாட்களில்
கோத்தகிரியில் ஒரு சென்ட் நிலம் வெறும் 300 அல்லது 400 ரூபாய்க்கு மாத்திரமே
இருந்தது. நான் வேலை செய்த இடத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு கொஞ்சம் நிலம்
வாங்கிப்போட அந்த நாட்களில் சில அன்பான மக்கள் எனக்கு ஆலோசனை கூறினார்கள். நான்
அதற்குச் சம்மதிக்கவில்லை. கர்த்தருடைய பணத்தில் நிலம் வாங்கினான் என்று பின்
நாட்களில் தேவப் பகைஞர் விரல் நீட்டுவார்கள் என்றும் ஆண்டவருடைய நல்ல நாமம்
அதின் மூலம் தூஷிக்கப்படும் என்று எண்ணி அதை எல்லாம் நான் செய்யவில்லை.
இந்தக் கடைசி கால நாட்களில் தேவ ஊழியர்கள் தங்கள் பணம் கொழிக்கும் தேவ
ஊழியங்களை தங்களுடைய பிள்ளைகளுக்கும், பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கும்
உலகப்பிரகாரமான வியாபாரங்கள், தொழில்களைப்போல பாதுகாப்பாக விட்டுச் செல்லுவதை
நாம் காண்கின்றோம். ஒரு சமயம் ஒரு அம்மா "உங்கள் காலத்திற்குப் பிறகு உங்கள்
ஊழியங்களை உங்கள் பிள்ளைகள் செய்வதற்கு அவர்களை தயாராக்கிவிட்டீர்களா?" என்று
என்னைக் கேட்டார்கள். நான் அவர்களுக்கு மாறுத்தரமாக "அம்மா, இது ஜீவனுள்ள
ஆண்டவருடைய பரிசுத்த ஊழியம், மார்வாடி வட்டிக்கடை தொழில் அல்ல. தகப்பன்
காலத்திற்குப் பின்னர் அவருடைய மகன் வட்டிக்கடை கல்லாவில் பணப்பெட்டி அண்டை
வந்து அமரும் உலக வியாபாரம் அல்ல, என்னைப்போல என் பிள்ளைகளுக்கு கிருபையாக தேவ
எக்காளத்தில் ஒரு வரி கூட எழுத வராது, அவர்களால் அதை ஒருக்காலும் தொடர்ந்து
செய்யவே முடியாது" என்று கூறினேன்.
கர்த்தருடைய மாட்சியான பரிசுத்த ஊழியத்தை, பாவ மனுக்குலத்தின் மீட்புக்காக தமது
பரிசுத்த இரத்தம் சிந்தி சம்பாதித்த இரட்சா பெருமானின் இரட்சிப்பின்
நற்செய்தியை பணம் காசுக்காக செய்யும் துரோகச் செயலை என்னால் நினைத்தே பார்க்க
முடியவில்லை. அப்படி தேவ ஊழியத்தில் பணம் எனது குறிக்கோளாக இருந்திருக்கும்
பட்சத்தில் நான் கடந்த நாட்களில் எனது ஜீவனையே பணயம் வைத்து சுவிசேஷம்
அறிவிப்பதற்காக ஆபத்தான நீண்ட சுவிசேஷ பிரயாணங்களை எல்லாம் ஒருக்காலும் நான்
மேற்கொண்டிருக்க மாட்டேன். காஷ்மீரின் தலை நகர் ஸ்ரீநகர் பட்டணத்திலிருந்து
கார்க்கில் என்ற இடத்திற்குச் செல்லும் வழியில் மிக உயரமான சோஷிலா மலைக் கணவாய்
(Sojila Pass) வருகின்றது. ஒரு பக்கம் வானளாவிய உயர்ந்த இமயப் பனிமலைகள்,
அடுத்த பக்கம் தலையையே சுழலச் செய்யும் இருண்ட கெடு பாதாளம். அந்த இடத்தில்
பேருந்தானது முழுவதும் குறுகலான வழித்தடத்தில் பனிப்பாறைகளுக்கு மேலாகவே ஆமை
வேகத்தில் ஊர்ந்து செல்லுகின்றது. நான் அங்கு பிரயாணம் செய்த நாளில் சில ராணுவ
வீரர்களின் குடும்பங்களும் என்னுடன் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர். அந்த மரண
நிழலின் பள்ளத்தாக்கைக் கண்ட அந்த ராணுவ வீரர்களின் மனைவி, பிள்ளைகள் எல்லாரும்
மரண பயத்தில் கோவென்று சத்தமிட்டு அலறி அழுதார்கள். எனது நோக்கம் வேறுவிதமாக
இருந்திருக்குமானால் நான் எப்படி அப்படிப்பட்ட மரண நிழலின் பள்ளத்தாக்கான
இடங்களுக்கெல்லாம் என் உயிரை துச்சமாக மதித்துச் செல்லுவேன்?
கர்த்தர் எனக்கு ஈவாகக் கொடுத்த எனது இரு புதல்வர்களும், அவர்களது மனைவிமாரும்
மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களாக பணி செய்வதால் எந்த ஒரு பணத் தேவைகளும்
கர்த்தருடைய கிருபையால் அவர்களுக்கு இருப்பதில்லை. மெய்யான இரட்சிப்பின்
பாத்திரங்களான அவர்கள் தங்களுடைய பணங்களை பற்பல தேவ ஊழியங்களுக்கு கொடுத்தும்,
மிஷனரிகளைத் தாங்கியும் வருகின்றனர். நமது தேவ எக்காள ஊழியங்களுக்கும்
தேவப்பிள்ளைகளாகிய அவர்கள் இரு குடும்பங்களும் மாதந்தோறும் ஒரு கணிசமான பெரிய
தொகையை கொடுத்து ஒழுங்காக உதவி வருகின்றனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
மனுஷனுக்கு பண ஆசை என்பது பொதுவாக அவனது குழந்தைப் பருவத்திலிருந்து வரக்
கூடியது. கர்த்தருடைய பேரன்பால், உலகத் தோற்றத்திற்கு முன்பாக என்னை தமக்கென
தெரிந்து கொண்ட அன்பின் கர்த்தர் பண ஆசை என்ற நச்சு வேரை எனது குழந்தைப்
பருவத்திலேயே என்னிலிருந்து கிள்ளி எறிந்துவிட்டார். நான் சிறுவனாக
இருக்கும்போது எனது ஏழை தகப்பனார் இரத்த வேர்வை சிந்தி சம்பாத்தியம் பண்ணும்
பணம் காசுகளை திருட்டளவாக எடுத்து ஊரிலுள்ள ஏழை எளியோருக்கு கொடுப்பேன்.
குழந்தை பருவத்திலிருந்தே இரக்கம், ஈகை, அன்பு என் நெஞ்சத்தில் உருவானது. எனது
தகப்பனார் தனது மனந்திரும்புதலுக்கு முன்னான நாட்களிலிருந்தே முற்றும் பண ஆசை
இல்லாதவர்களாக இருந்தார்கள். ஒரு சமயம் தனது ரயில் பயணம் ஒன்றில் தன்னுடன்
பிரயாணம் செய்த சக பிரயாணி ஒருவர் தனது பெரிய பணப்பையை எப்படியோ தவறுதலாக
விட்டு விட்டு வண்டியிலிருந்து இறங்கிவிட்டார். தனது அருகில் இருந்த அந்த
பணப்பையை எனது தந்தை எடுத்து தான் இறங்கிய ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டரிடம்
கொடுத்து விபரம் சொல்லி அதற்குரிய மனிதர் வந்து அதைக் கேட்கும்போது அதைக்
கொடுத்துவிடும்படியாக கூறிவிட்டு கடந்து வந்ததாக எங்களிடம்
கூறியிருக்கின்றார்கள்.
எனது தகப்பனார் இரட்சிப்பின் பாத்திரமானதும் ஆண்டவரின் பாதங்கள்தான்
அவர்களுக்கு எப்பொழுதும் வாஞ்சையும் தவனமுமானது. உலக பற்று பாசம் எல்லாம்
அவர்களைவிட்டு பறந்தோடிற்று. பணம் சம்பாதிக்க வேண்டும் குடும்பத்தை மேலான
நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணங்கள் எல்லாம் போய்விட்டது. தான் செய்து
கொண்டிருந்த சிறிய கடைத் தொழிலையும் கூட நாளடைவில் விட்டுவிட்டார்கள். எப்படியோ
கஷ்டப்பட்டு தனது மூத்த குமாரத்தியை மட்டும் கலியாணம் செய்து
கொடுத்திருந்தார்கள். நான் உலகப்பிரகாரமான தேயிலைத்தோட்ட குமஸ்தா அலுவலுக்கு
வந்த பின்னர் எனது உடன் பிறந்த இரண்டு தங்கைகளை திருமணம் செய்து கொடுத்தேன்.
எப்பொழுதும் ஆண்டவருடைய பாதங்களில் தரித்திருந்த எனது பரிசுத்த தந்தையை அன்பின்
பரம தகப்பன் அற்புதமாக போஷித்து பராமரித்து வழி நடத்தினார். யாராவது எங்கள்
வீட்டிற்கு வந்து தங்களுக்குள்ள ஆஸ்தி, ஐசுவரியம், செல்வம், செழிப்பு போன்ற
உலகக் காரியங்களை எனது தந்தையிடம் பேசினால் காது கேளாத செவிடனைப்போன்று
அவைகளில் எந்த ஒரு ஆர்வமும், உற்சாகமும் காட்டாமல் அப்படியே அமைதியாக
அமர்ந்திருப்பார்கள். ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அப்படியே
சந்தடியின்றி அங்கிருந்து எழுந்து வீட்டுக்குள் சென்றுவிடுவார்கள். அதின்
பின்னர் அங்கு வந்து உட்காரவே மாட்டார்கள். உள்ளத்தின் ஆசையோடு உலகக் கதை பேச
வந்தவர் வெட்கத்தோடு எழுந்து செல்ல வேண்டியதாகிவிடும். பிள்ளைகளாகிய எங்களிலும்
உலகப் பற்று, பாசம், உலக நேசம் இருக்கவே கூடாது என்று மனதார விரும்பினார்கள்.
பிள்ளைகளாகிய நாங்கள் அறையில் முழங்காலூன்றி தனி ஜெபம் செய்வதை கண்டால்
அவர்களின் உள்ளம் கர்த்தரில் களிகூரும்.
தனது மரணத்திற்கு முன்னர் கடைசி நாட்களில் எனக்கு எழுதிய கடிதங்களில் அன்பின்
ஆண்டவர் இயேசுவாகிய அந்த பரம தாயின் உள்ளம் எந்த ஒரு விதத்திலும்
துக்கமடையாதபடி நான் நடந்து கொள்ளும்படியாக எனக்கு எழுதியிருந்தார்கள்.
"செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை
அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை என் முத்திரை மோதிரமாக வைப்பேன்" (ஆகாய் 2
: 23) என்று என் தந்தைக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் அப்படியே வந்து
நிறைவேறிற்று. கர்த்தருக்கே மகிமை.
தூத்துக்குடி மாவட்டத்தில் பிள்ளைவிளை என்ற நான் பிறந்த கிராமத்தின் தென்
திசையிலுள்ள வயல்வெளிகளில் எனது பாவங்களின் பட்டியல்கள் எழுதப்பட்ட தாட்களை
எனது ஒரு கரத்திலும், தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தை மற்றொரு கரத்திலுமாக
ஏந்திக்கொண்டு தாட்களில் எழுதப்பட்ட எனது பாவங்களை ஆண்டவருக்கு நொறுங்குண்ட
இருதயத்தின் பெருமூச்சோடு அறிக்கையிட்டு வேதாகமத்தில் தாவீது ராஜாவின் பாவ
அறிக்கை சங்கீதமாகிய 51 ஆம் சங்கீதத்தையும் வாசித்து, வாசித்து அழுது கண்ணீர்
சிந்திக்
கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் "யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை, நீ என் தாசன்,
நான் உன்னை உருவாக்கினேன், நீ என் தாசன், இஸ்ரவேலே, நீ என்னால்
மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப் போலவும், உன் பாவங்களைக்
கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன், என்னிடத்தில் திரும்பு, உன்னை நான்
மீட்டுக்கொண்டேன்" (ஏசாயா 44 : 21, 22) என்ற வாக்குரைத்து என் பாவங்களை
எல்லாம் மன்னித்து, உலகம் தரக்கூடாததும், உலகம் எடுத்துக் கொள்ளக்கூடாததுமான
இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும் எனக்குத் தந்து எனது 18 ஆம்
வயதில் என் உள்ளத்தில் கிருபையாக வாசம் பண்ண வந்த கர்த்தர் இந்நாள் வரை என்
உள்ளத்தில் நிறை பூரணமாக வாசம் செய்து வருகின்றார். அந்த அன்பருக்கு நான் என்ன
ஈட்டை செலுத்த முடியும்? எனது பெற்றோர் எனக்கு வைத்த பெயர்களில் இஸ்ரவேல் என்ற
பெயரும் எனக்கு உண்டு. கர்த்தர் எனது பெயரைச் சொல்லியே எனது பாவங்களை
மன்னித்தார். அறிவற்ற நிர்மூடனாகிய, வெறும் சூன்யமாகிய என்னைக் கொண்டு அவர்
தமது நாமத்தை மகிமைப்படுத்தினார். கடந்த 44 ஆண்டு காலமாக தேவ எக்காளம்
பத்திரிக்கையை தேவனுடைய ஜனத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதத்திற்கு அனுகூலமாக
அச்சிட்டு வெளியிட கர்த்தர் எனக்கு கிருபை செய்தார். நமது பத்திரிக்கையை
அச்சிட்டு வெளியிடத் தேவையான பணத்தேவைகளை எல்லாம் கர்த்தர் அருமையாக
சந்தித்தார். இந்நாள் வரை ஒரு பைசா கூட கடனில்லாமல் அற்புதமாக தேவன் அதை
வழிநடத்தினார். அதே போல நாங்கள் குழுவாக மேற்கொள்ளும் எங்கள் வாகன தேவ
ஊழியங்களுக்கும் தேவையான ஒரு பெருந் தொகையை ஆண்டுதோறும் எங்களுக்குத்
தாழ்ச்சியின்றித் தந்து மனுப்புத்திக்கு எட்டாதவிதத்தில் இந்த ஊழியங்களை
பொறுப்பெடுத்து நடத்தி
தமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தி வருகின்றார். இமயமலைகளில் வாழும் தேவனை
அறியாத இந்து மக்களுக்கு இது நாள் வரை பல்லாயிரக்கணக்கான தேவனுடைய பிரசுரங்களை
ஜெபத்துடன் அளிக்க கர்த்தர் உதவி புரிந்துள்ளார். உண்மைதான், தம்மைப் பற்றி
உத்தம இருதயத்தோடிருக்கிற மக்களுக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண இன்றும்
அந்த தேவன் வல்லவராயிருக்கின்றார்
(2 நாளா 16 : 9)
|
| தேவரீர் உமது அடியானை அறிவீர் (1 நாளா 17 : 18) |
மக்கள் இந்தக் கிருபையின் நாட்களில் எப்படியாவது
தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பி தங்கள் இரட்சிப்பை உறுதிப்படுத்தி
ஆண்டவருடைய அடைக்கல செட்டைகளுக்குள் வந்துவிட வேண்டும், எந்த ஒரு நிலையிலும்
அவர்கள் நஷ்டப்பட்ட பாவிகளாக தேவனது எரி நரக அக்கினி தீச்சூழைக்குள்
சென்றுவிடக்கூடாது என்பதே எனது இருதயத்தின் பாரமாகும். வேத பண்டிதர்கள் நமது
ஆண்டவருக்கு "எரி நரக பிரசங்கியார்" (Hell
fire preacher) என்ற பெயரை
வைத்திருக்கின்றனர். சுவிசேஷங்களில் நரகத்தை குறித்து அவர் 56 தடவைகளும்
மோட்சத்தைக் குறித்து 24 தடவைகளும் குறிப்பிட்டு நரகத்தின் நிச்சயத்தை அவர்
திட்டமும் தெளிவுமாக உறுதிப்படுத்தியிருக்கின்றார் என்பதாகக் கூறுகின்றனர்.
நஷ்டப்பட்ட நிலையில் ஒரு ஆத்துமா நித்திய அக்கினிக்குள் பிரவேசிக்கும் மகா
கொடிய நிலையை நாம் சிந்திப்பதற்கு தேவன் தான் நமது மனக்கண்களை திறக்க வேண்டும்.
"ஸ்காட்லாந்து தேசத்தை எனக்குத் தாரும், இல்லையெனில் நான் சாகின்றேன்" என்று
ஜாண் நாக்ஸ் போன்ற தேவ மனிதர்கள் தேவனுக்கு முன்பாக கதறியழுததும், நஷ்டப்பட்ட
ஆத்துமாக்கள் நரக பாதாளத்தில் அனுபவிக்கப்போகும் சொல்லொண்ணா துயரங்களை மனதில்
சிந்தித்ததின் காரணமாகத்தான் கடந்த கால பக்த சிரோன்மணிகள் இரவில்
தூக்கமில்லாமல் தங்கள் அறையின் சுவர்களை தங்கள் வியாகுலப் பெருமூச்சுகளால்
ஈரமாக்கியதாக அவர்களுடைய ஆத்தும பார அனுபவங்களை நாம் புத்தகங்களில்
வாசிக்கின்றோம்.
வில்லியம் சால்மர்ஸ் பர்ன்ஸ் (William
Chalmers Burns) என்ற 18 ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்லாந்து தேச பரிசுத்தவான் 17 வயது பையனாக இருந்தபோது
அவருடைய தாயாருடன் தங்களது கிராமமான கில்சைத் (Kilsyth) என்ற இடத்திலிருந்து
கிளாஸ்கோ பட்டணத்துக்கு வந்த இடத்தில் எப்படியோ ஒருவரைவிட்டு ஒருவர்
பிரிந்துவிட்டனர். இறுதியாக, அவரது தாயார் அவரை பட்டணத்து வீதி ஒன்றில் கண்டு
பிடித்தார்கள். அப்பொழுது, வில்லியம் சால்மர்ஸ் பர்ன்ஸ் ஓரிடத்தில் உட்கார்ந்து
மிகவும் வியாகுலப்பட்டு விம்மி, விம்மி அழுது கொண்டிருந்ததை அவர்கள்
கவனித்தார்கள். "மகனே, அம்மாவை விட்டுப் பிரிந்ததை நினைத்து நீ அழுகின்றாயோ?
அல்லது உனது உடம்புக்கு ஏதாவது சுகயீனம் ஆகிவிட்டதோ?" என்று மகனை அவர்கள்
துயரத்தோடு கேட்டபோது "ஓ என் அருமை அம்மா, அம்மா, அப்படி எல்லாம் எனக்கு
ஒன்றுமில்லை. இந்த வீதியில் நடந்து செல்லுகின்ற மாந்தரின் காலடிகள் அனைத்தும்
முடிவில்லாத நித்திய அக்கினி கடலை நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கின்றதே
என்பதை எண்ணித்தான் அழுகின்றேன்" என்று கண்களில் கண்ணீரை வடித்த வண்ணமாக அழுது
கொண்டே சொன்னாராம்.
ஒரு நஷ்டப்பட்ட ஆத்துமா, ஆம், ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் அவருடைய நித்திய
கோபாக்கினையை (எபி 10 : 31) தனது முரட்டாட்டம், கீழ்ப்படியாமை, பெருமையால்
சம்பாதித்துக் கொண்ட ஒரு ஆத்துமா நரக அக்கினிக்கடலில் முடிவே இல்லாத
யுகாயுகங்களாக பட்டுக்கொண்டிருக்கும் அக்கினியின் அகோர பயங்கர வேதனைகளை
உணரக்கூடிய மனக்கண்களை தேவன் தமது பிள்ளைகளுக்கு கிருபையாக கொடுக்கும்
பட்சத்தில் அந்த பரிசுத்த தேவ ஊழியர்களுக்கு தேவனுடைய உன்னதமான ஊழியங்களை
உலகத்தின் அழிந்து போகும் பணம் காசுகளுக்காக எப்படி உலக வியாபாரமாக்க முடியும்
என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அந்த பரம தரிசனத்தைப் பெற்றுக்கொண்ட
அப்போஸ்தலானாகிய பரிசுத்த பவுல் "வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும்
கர்த்தரைச் சேவித்தேன்" (அப் 20 : 19) என்று சொன்னாரல்லவா? "அவர்கள்
மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல தொய்ந்து போனவர்களும், சிதறப்பட்டவர்களுமாய்
இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகினார்" (மத் 9 : 36 ) என்று
மனுமக்கள்பாலுள்ள தேவமைந்தனின் ஆத்தும பாரத்தைக் குறித்து நாம் வாசிக்கின்றோம்.
பாவ மாந்தரின் மீட்புக்காக இரட்சா பெருமான் சிந்திய அவருடைய பரிசுத்த
இரத்தத்தையும், அவருடைய எல்லையற்ற கல்வாரி அன்பின் நேசத்தையும் உள்ளமுருகி
தியானிக்கும் எந்த ஒரு தேவ ஊழியனால் ஆண்டவருடைய ஊழியத்தை ஏனோதானோ வென்று
நிர்விசாரமாக செய்ய முடியும்? ஆண்டவருடைய ஊழியங்களுக்காக கர்த்தருடைய பிள்ளைகள்
தங்களை ஒடுக்கி, வெறுத்து, தியாக அன்போடு ஈந்த காணிக்கை பணங்களைக் கொண்டு ஒரு
தேவ ஊழியனால் உலகில் எப்படி சுகபோகமாக ஆடம்பர வாழ்க்கை நடத்த முடியும்? அவைகளை
எப்படி தங்கள் பின் சந்ததிக்கு தந்திரமாக பதுக்கி ஒதுக்கி வைக்க முடியும்?
அப்படி தங்கள் பின் சந்ததிக்காக அவர்கள் அந்த பணங்காசுகளை ஒதுக்கி வைத்தாலும்
அந்த செல்வமானது அவர்களுக்கு சாபம், கொடிய வியாதி, வேதனை, துயரம், திகில்,
கலக்கம், கண்ணீரைத் தவிர எந்த ஒரு நிலையிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம், தேவ
சமாதானத்தைக் கொண்டு வராதே!
ஜாண் பிராட்போர்ட் என்ற 15 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து தேசத்து தேவ பக்தன்,
பின் நாட்களில் தன் ஆண்டவருக்காக இரத்தசாட்சியாக மரித்தவர் அவ்வப்போது தனது நேச
இரட்சகரின் கல்வாரி சிலுவை அன்பை எண்ணிவிட்டால் அப்படியே மாலை மாலையாக கண்ணீர்
விட்டு அழுவாராம். இங்கிலாந்து நாட்டின் பிரசங்க வேந்தனாம் ஸ்பர்ஜன் என்ற
பரிசுத்த பக்தனும் தனது நாட்குறிப்பில் அவர் ஒவ்வொரு நாளும் தேவ மைந்தன் பாவ
மாந்தரின் மீட்புக்காக இரத்த வேர்வை சிந்தி ஜெபித்த கெத்செமனே பூங்காவிற்கு
ஆவிக்குள்ளாக சென்று அங்கு இரட்சா பெருமானின் சிலுவைப் பாடுகளின் அன்பை
தியானிக்காமல் இருந்ததில்லை என்று எழுதுகின்றார்.
பக்தசிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களின் பிரகாசமான பரிசுத்த முகத்தை சிறுவனாக
நேரில் கண்டும், பின்னர் ஸ்ரீலங்கா தேசத்துக்கு தனது பிழைப்புக்காகச் சென்ற
இடத்தில் அவரது பிரசங்கத்தை கேட்டும் தேவனுடைய இரட்சிப்புக்குள் வழிநடத்தப்பட்ட
எனது தகப்பனார் சாதுசுந்தர்சிங்கைக் குறித்து சிறுவனாக நான் இருந்தபோது
எனக்குச் சொன்ன அவருடைய பரவசமான தேவ ஊழிய அனுபவங்கள் மிகவும் ஆழமாக என்
இருதயத்தைத் தொட்டது. நான் தேவகிருபையால் இரட்சிப்பின் பாத்திரமானதும்
சாதுசுந்தர்சிங்கின் புத்தகங்களை எல்லாம் ஆசை ஆவலாக வாங்கி வாசித்து அந்த தேவ
பக்தனைப்போல ஊழியம் செய்ய பெரிதும் ஆவல் கொண்டேன். அதின் முதல் கட்டமாக நான்
இமாச்சல் பிரதேசத்திற்கு ஊழியம் செய்ய சென்ற நாட்களில் சாதுசுந்தர்சிங் வாழ்ந்த
அவருடைய கானக பங்களாவில் ஒரு நாள் காலை வேளை திறந்து கிடந்த அவரது அறைகளில்
ஒன்றினுள் பிரவேசித்து என் கண்களிலிருந்து கண்ணீர் வடிய அழுது கொண்டே "ஆண்டவரே,
இந்த பங்களாவில் வாழ்ந்த உமது பரிசுத்த பக்தனைப்போல பாவியாகிய என்னையும் பின்
நாட்களில் உமது கரத்தின் கருவியாக எடுத்து பயன்படுத்தும்" என்று உள்ளம் உருக
ஜெபித்துவிட்டு அவரது பங்களாவின் தாழ்வாரத்தை சுற்றி ஜெப நிலையில் கொஞ்ச நேரம்
அங்குமிங்குமாக சுற்றி நடந்து அந்த பக்தனை அதிகமாக நினைவு கூர்ந்தேன்.
சுந்தரின் இந்த கானக பங்களா இமாச்சல் பிரதேசத்தின் சிம்லா மலைகளிலிருந்து சில
மணி நேர பிரயாண தூரத்தில் சுபத்து என்ற இடத்தில் உள்ளது.
அங்கு நான் அழுத என் அழுகையின் கண்ணீர் தேவ சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டதன்
காரணமாக அடுத்து வந்த ஆண்டுகளில் 7 தடவைகள் நேப்பாள தேசத்திற்கும், 2 தடவைகள்
பூட்டான் தேசத்திற்கும், சிக்கிம், மேற்கு தீபெத் (லடாக்) ஸன்ஸ்கார்
பள்ளத்தாக்கு, கார்க்கில் போன்ற இடங்களுக்கெல்லாம் தேவன் என்னை அழைத்துச்
சென்று என்னைக் கொண்டு தமது பரிசுத்த நாமத்தை மகிமைப்படுத்தினார். கர்த்தருக்கே
துதி உண்டாவதாக.
"தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள், அவர் என்
ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்" (சங் 66 : 16 ) என்ற தாவீது ராஜாவின்
வார்த்தையின்படி 18 ஆம் வயதில் நான் கிருபையாக ஆண்டவரிடமிருந்து பெற்றுக் கொண்ட
உலகம் தரக்கூடாத இரட்சிப்பின் சந்தோசத்தை எல்லாரும் பெற்றுக்கொள்ள வேண்டும்
என்ற தாகம் என்னில் பொங்கினது. தேவன் எனது கரங்களில் தந்த அவரது மாட்சிமையான
பரிசுத்த ஊழியத்தை அதிகமான ஆத்தும பாரத்தோடும், நீண்ட நாட்கள் உபவாசங்கள்,
ஜெபங்களோடும் தேவ பெலத்தால் நிறைவேற்ற கர்த்தர் எனக்கு உதவி செய்தார்.
தேவ ஊழியத்தில் சத்துரு கொண்டு வரக்கூடிய பிரதானமான பண ஆசைக்கு நான் சற்றும்
இடம் கொடுக்கவில்லை. நான் கர்த்தருடைய அன்பில் வளர வளர ஊழியத்திற்குத் தேவையான
அனைத்து பொருளாதாரங்களையும் உபவாசம், ஜெபத்தின் மூலமாக எனது
முழங்கால்களிலிருந்து பெற்றுக்கொள்ள தேவன் எனக்கு உதவி செய்தார். நமது தேவ
எக்காள பத்திரிக்கையில் நமது ஊழியத்திற்கான பணத் தேவைகள் குறித்து நான் எதையும்
எழுதாததை தேவ பிள்ளைகளாகிய நீங்கள் நன்கு கவனித்திருப்பீர்கள். தேவன் தமது
பரிசுத்த இரத்தத்தை முழுமையாக பிலாத்துவின் அரண்மனையிலும் (யேவான் 19 : 1)
கொல்கொதாவிலும் (யோவான் 19 : 17,18) சிந்தி பாவ மனுக்குலத்திற்கு மாட்சியான
இரட்சண்யத்தை சம்பாதித்து ஈந்தளித்தார். அந்த இலவசமான இரட்சிப்பை பூமியின்
மாந்தர் யாவரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே ஆண்டவரின் ஒரே நோக்கமாகும்.
"மனந்திரும்புதலும் பாவ மன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும்
அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச்
சாட்சிகளாயிருக்கிறீர்கள்" (லூக்கா 24 : 47-48) என்று தமது அடியார்களுக்கு
ஆண்டவர் சொன்னார். "எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை
அடையவும் அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோ 2 : 4) என்று அப்போஸ்தலன்
நிருபத்தில் எழுதுகின்றார். ஊழியம் கர்த்தருடையது, ஆத்துமாக்கள்
கர்த்தருடையவர்கள். கர்த்தர் தம்முடைய காரியத்தை வைராக்கியமாக கவனித்துக்
கொள்ளுவார். எந்த ஒரு தனி மனுஷனுடைய தயவினாலும், அவனது இரக்கத்தினாலும், அவனது
விருப்பு வெறுப்பினாலும் நாம் ஆண்டவருடைய ஊழியங்களை செய்ய கர்த்தரால்
அழைக்கப்படவில்லை. நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் (1 தெச 5 : 24) ஒரு
வாசல் அடைபடும்போது தேவன் அடுத்த வாசலை திறந்து கொடுக்கின்றார். "இதோ திறந்த
வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்" (வெளி 3 :
8) என்று அவர் நமக்கு வாக்களித்திருக்கின்றார். "வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்" (சங் 121 : 2)
என்றும் "நீ இந்தக் காலத்தில் மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும்
இரட்சிப்பும் வேறெரு இடத்திலிருந்து எழும்பும்" (எஸ்தர் 4 : 14) என்று
கர்த்தருடைய வார்த்தை பேசுகின்றது.
திருச்சபை சரித்திரத்தில் கர்த்தருக்காக ஜொலித்த பரிசுத்த பக்தர்களை பண ஆசையில்
வீழ்த்த முடியாத மனுஷ கொலை பாதகன் பெண்ணாசை காட்டி வீழ்த்தினான். நமது கண் காண
எத்தனை ராட்சத தேவ பக்தர்கள் அவனது கண்ணியில் சிக்கிக் கொண்டார்கள் என்பது
நமக்குத் தெரியும். "ஸ்திரீயுடனே விபச்சாரம் பண்ணுகிறவன் மதிகெட்டவன், அப்படிச்
செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்" (நீதி 6 : 32) என்று தேவ
வார்த்தை சொல்லுவதுடன் "நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்"
(2 சாமு 13 : 13) என்று விபச்சாரம் செய்யும் மனிதனைக் குறித்து கர்த்தருடைய
வார்த்தை அடித்துக்கூறுகின்றது. ஒரு தேவ ஊழியன் பெண்ணாசையில்
வீழ்ச்சியடைவானானால் அத்துடன் அவனது பொற்காலம் அஸ்தமனமாகிவிடும். அவன்
கர்த்தருக்காக கடந்த காலங்களில் செய்த மாட்சிமையான தேவ ஊழியங்கள், அவன் எழுதிய
அருமையான பக்திவிருத்திக்கான புத்தகங்கள் எதையும் அதின் பின்னர் தேவ மக்கள்
கண்ணேறிட்டுக்கூட பார்க்கமாட்டார்கள். ஒரு காலத்தில் ஆசை ஆவலாக வாங்கி
பொக்கிஷமாக வைத்திருந்த அந்த தேவ மனிதனின் ஆழமான வேதபோதனைகள், வேத
வியாக்கியானங்கள் அடங்கிய ஒலி தட்டுகள், இரட்டை ஒலி பேழைகள்
(DVDs) ஒலி
நாடாக்கள் போன்றவைகள் எல்லாம் படிப்படியாக காலப்போக்கில் குப்பை மேட்டை
சுதந்தரித்துக் கொள்ளும். அந்த தேவமனிதனின் கடந்த கால ஜெபங்கள், உபவாசங்கள்,
கண் விழிப்புகள், பிரயாசங்கள், பாடுகள் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராக
வீணாகிப் போய்விடும். அதற்கப்பால் அந்த தேவ ஊழியனால் தேவ ஜனத்திற்கு முன்பாக
தைரியமாக தலைகாட்ட முடியாது. முன்பு போல தேவனுக்கு முன்பாக தலை நிமிர்ந்து
நிற்க இயலாது. அவன் தன்னளவில் கூனி குருகிப்போவான். அறையில் மின் விளக்கைப்
போட்டதும் அந்த அறையிலுள்ள பூச்சி பொட்டுகள் ஒளியைக் காணச் சகிக்காமல் இருளான
இடங்களை நாடி துரிதம் துரிதமாக ஓடி மறைவது போல அந்த தேவ ஊழியனும் தன்னை தேவ
ஜனத்துக்கு முன்பாக தைரியமாக காண்பிக்க முடியாமல் பதுங்கி மறைய துடிதுடிப்பான்.
எத்தனை பயங்கரம் பாருங்கள்!
இந்தக் காரியத்தில் ஆத்தும அழிம்பனாம் சாத்தான் உங்கள் சகோதரனாகிய என்னை அதம்
பண்ண எடுத்துக் கொண்ட அவனது அக்கினியாஸ்திரங்கள் அனைத்தையும் என்னை தமது
சொந்தமாக்கிக் கொண்ட என் அன்பின் கண்மணி எதிர்த்து நின்று அழித்து
நிர்மூலமாக்கினார். நேப்பாள தேசத்தில் தான்சேன் என்ற இடத்திலும், பாக்லூம் என்ற
இடத்திலும் அழகான நேப்பாள பெண்களை இரவின் பிந்திய நேரத்தில் என்னண்டை அனுப்பி
வைத்து என்னை நிர்மூலமாக்க சத்துரு எடுத்துக்கொண்ட அவனது கொடிய உபாய
தந்திரங்கள் அனைத்தும் என் தேவனின் இரட்சண்ய கேடகத்தால் சிதறடிக்கப்பட்டது.
எனது மனுஷீக பெலத்தாலும், எனது சாமர்த்தியத்தாலும், எனது
புத்திசாலித்தனத்தாலும் நான் சத்துருவை மேற்கொள்ளவில்லை. அநாதி தேவனின்
காருண்யம் என்னை அற்புதமாக சூழ்ந்து காத்துக் கொண்டது. அந்த அன்பருக்கு நான்
என்ன ஈட்டை செலுத்த முடியும்?
கர்த்தருடைய ஊழியத்தில் சாத்தான் ஒரு தேவ ஊழியனுக்கு எதிராக கொண்டு வரக் கூடிய
மிகப் பெரிய கண்ணி பெருமையாகும். பண ஆசை, விபச்சாரம் என்ற மேற்கண்ட இரண்டு
பாவங்களைவிட பெருமை கொடிதான ஒன்றாகும். "விபச்சாரக்காரருக்கு தேவன் எதிர்த்து
நிற்கிறார்" என்று வேதத்தில் எங்கும் எழுதப்படாமல் "பெருமையுள்ளவர்களுக்கு
தேவன் எதிர்த்து நிற்கிறார்" (1 பேதுரு 5 : 5) என்றே எழுதப்பட்டிருப்பதை
நீங்கள் நன்கு கவனிக்கவேண்டும். ஒரு தேவ ஊழியன் தன்னை மற்ற தேவ ஜனங்களை விட
சிறப்பான கிருபைகளைப் பெற்ற ஒரு பெரிய ஊழியக்காரன் என்று தன்னளவில்
எண்ணிவிட்டால் அவன் திரள் கூட்டமான மக்களுக்கு முன்பாக தான் பேசப்போகும்
மேடையில் அமர்ந்திருக்கும் காட்சியே கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த
ஊழியக்காரனுக்கு பணிவிடை செய்ய, ஆம், அவர் பேசும் மைக்கை கைக்குட்டையால் சுற்றி
அவர் கரத்தில் கொடுக்க, குடிப்பதற்கு அவருக்கு பானம் தேவைப்பட்டால் எழுந்து
பானம் கொடுப்பதற்கு, பேசி முடித்ததும் அவருடைய கரத்திலிருந்த மைக்கை வாங்கி
அப்படியே அவரை அணைத்துப் பிடித்து அவருக்காக காத்திருக்கும் குளிர்பதன காரில்
அவரை ஏற்றி வழி அனுப்ப சிலரும் தயார் நிலையில் இருப்பார்கள்.
இந்தப் பெருமைக்கார தேவ ஊழியர்கள் லட்சக்கணக்கான மக்கள் கூடி வந்த கேரளா மாநில
மாராமன் கன்வென்ஷனில் பக்தசிரோன்மணி சாது சிந்தர்சிங் அவர்கள் பேசும்படியாக
பல்லாண்டு காலங்களுக்கு முன்னர் அழைக்கப்பட்டு வந்தபோது அவர் எங்கே
அமர்ந்திருந்தார்? எத்தனை தாழ்மையாக மக்களுக்கு முன்பாக தரையில் சம்மணம் போட்டு
அவர் உட்கார்ந்திருந்தார் என்பதை எல்லாம் அவருடைய புத்தகங்களை வாங்கி வாசித்து
தெரிந்து கொண்டிருந்தார்களானால் அடுத்த முறை மேடை ஏறி உட்காரவே அவர்களால்
முடியாது.
பட்டணத்திலே பேசப்போகும் இந்த பெருமைக்கார தேவ ஊழியர்களின் கூட்டங்களைக்குறித்த
கலர் பட விளம்பர தட்டிகளை
(டிஜிட்டல் போர்ட்) நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா? திரள் கூட்டமான
மக்களுக்கு மேலாக தேவ தூதர்களைப்போல இவர்கள் பெருமையோடு காணப்படுவார்கள். இந்த
விளம்பர போர்ட்டுகள் சந்து பொந்துகளில் எல்லாம் இவர்களின் விருப்பம்
வேண்டுகோளின்படி வைக்கப் பட்டிருக்கும். இப்படியான பெருமையான விளம்பரங்களை
மனதார விரும்பும் மக்களை தேவன் எப்படி தமது ஜனத்திற்கு ஆசீர்வாதமாக எடுத்து
பயன்படுத்த முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? "உலகப்பிரசித்தி பெற்ற
தேவ ஊழியர் சாதுசுந்தர்சிங் பேசுகின்றார்" என்று ஸ்ரீலங்கா தேசத்தில்
ஓரிடத்தில் காணப்பட்ட ஒரு விளம்பரத்தைக் கண்ட சாதுசுந்தர்சிங் அவர்கள் அந்த
நோட்டீசுக்கு முன்பாக நின்று வேர்த்து விறுவிறுத்து நடுநடுங்கினதாக தமது
புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். நம்மிடையே உள்ள மேடையில் பெயர் சொல்லி
அழைக்கும் ஆசீர்வாத பிரசங்கிமாருக்கும் அந்த பரிசுத்த பக்தனுக்கும் உள்ள இடை
வெளியை உங்களால் காண முடிகின்றதா? இப்படிப்பட்ட பெருமைக்கார ஊழியர்களின்
செய்திகளால் உங்கள் ஆத்துமா ஒருக்காலும் எந்த ஒரு ஆசீர்வாதத்தையும்
பெற்றுக்கொள்ளவியலாது. காரணம், முதலாவது இந்த ஊழியக்காரர்களே மனந்திரும்பி
குணப்படவில்லை. அவர்களுடைய மனந்திரும்புதல், இரட்சிப்பு உண்மையாக இருக்கும்
பட்சத்தில் அவர்களால் எப்படி
இத்தனை பெருமையாக நடக்க முடியும்? "நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய்
இருக்கிறேன் என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில்
கற்றுக்கொள்ளுங்கள்" (மத் 11 : 29 ) என்ற அன்பின் ஆண்டவரின் அடியார்களிடத்தில்
பெருமைக்கு இடமேது? "நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்தில் மட்டும்
வாசம்பண்ணும் கர்த்தர்" (ஏசாயா 57 : 15) இந்தப் பெருமைக்கார பேர்வழிகளை
கண்ணேறிட்டுக்கூட பார்க்கமாட்டார் என்பது உங்களுக்குத் தெரியாதா? விழிப்பாக
இருந்து உங்கள் ஆத்துமாவை காத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் ஏழை சகோதரனாகிய என்னைத் தமக்கெனத் தெரிந்து கொண்ட நம் நேச கர்த்தர்
இந்தக் கொடிய பெருமை என்ற பாவத்திலிருந்து கிருபையாக என்னை விலக்கிக் காத்துக்
கொண்டு வந்திருக்கின்றார். தேவாலயங்களில் ஆண்டவருடைய செய்தியைக் கொடுப்பதற்காக
என்னை அழைத்த நாட்களில் எனக்காகப் போடப்பட்டிருக்கும் பிரத்தியேக இருக்கையில்
நான் போய் உட்காராமல் சபை மக்களுடன் தரையில் ஒன்றாக உட்கார்ந்து குருவானவர் பேச
அழைக்கும்போது அங்கிருந்து எழுந்து செல்லுவேன். எங்கே என்னை சிறப்பிக்கவும்,
புகழ்ச்சியாக என்னைக்குறித்துப் பேசவும் விரும்புவார்களோ அந்தக் கூட்டங்களுக்கு
நான் ஒருக்காலும் சென்றதில்லை. நான் தேவச் செய்தி கொடுக்கும் இடங்களில் என்னை
சபை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் போது என்னைக் குறித்து எந்த ஒரு புகழ்
வார்த்தைகளும் சொல்லவே கூடாது என்று கண்டிப்பாக முதலில் குருவானவரை கேட்டுக்
கொள்ளுவேன். பெரிய தேவ ஊழியர்கள் நடுவில் எங்காவது நான் எதிர்பாராதவிதமாக
சந்திக்க நேரிட்டால் நான் யார் என்பதை அவர்கள் என்னிடம் கேட்டால் எனது பெயர்,
தேவ எக்காளம் பத்திரிக்கை பெயர் எதுவும் சொல்லாமல் நான் பிறந்த எனது
கிராமத்தின் பெயரையும் சாமுவேல் என்ற வெறும் பெயரையும் கூறி முடித்துவிடுவேன்.
எந்த நிலையிலும் தேவ பெலத்தால் நான் என்னை மறைத்துக் கொள்ளுவேன். இவைகளை
எல்லாம் என்னுடைய சாதனைகளாகவோ அல்லது நான் உங்களைவிட விசேஷித்தவன் என்ற
எண்ணத்திலோ நான் இங்கு எழுதவில்லை. ஒரு தேவ பிள்ளையின் மனந்திரும்புதலும், பாவ
மன்னிப்பும், இரட்சிப்பும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் இந்த தேவ சுபாவங்கள்
எல்லாம் தானாகவே உண்டாகிவிடும். ஏனெனில், "ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்
புது சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின" (2
கொரி 5 : 17) என்றும் "அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர்
நடந்தபடியே தானும் நடக்க வேண்டும்" (1 யோவான் 2 : 6) என்றும் "கிறிஸ்து
இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது"
(பிலி 2 : 5) என்றும் கர்த்தருடைய வார்த்தை திட்டமும் தெளிவுமாகக்
கூறுகின்றது. கர்த்தருக்கே மகிமை.
"சுவிசேஷத்தை நம்மிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் நம்மை
உத்தமரென்றெண்ணின" (1 தெச 2 : 4) நம் அன்பின் தேவனுக்கு எந்தவிதத்திலும் நாம்
துரோகம் பண்ணாமல் அவர் நமது கரங்களில் கொடுத்த மாட்சிமையான அவரது பரிசுத்த
ஊழியத்தை உண்மையோடும், உத்தமத்தோடும், ஆத்தும பாரத்தோடும், வெகு
மனத்தாழ்மையோடும், பண ஆசையின் பேர் முதலாய் சொல்லப்படாமல் கர்த்தருக்கு
மகிமையாக நிறைவேற்றி ஒரு கூட்டம் மக்களை தேவ சந்நிதானத்தில் நிறுத்தவேண்டிய
கிருபைகளை தேவன் தாமே உங்களுக்கும், பாவியாகிய எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்.
|
 |
|
|