"ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும்
என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்" (தானியேல் 12 : 3)
கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கு துதி கனம் மகிமை உண்டாவதாக. தேவனுடைய
ஜீவனுள்ள வார்த்தைகளை இந்திய நாட்டின் வடகோடி எல்லையிலுள்ள இமயமலைகளில் வாழும்
மக்களுடைய கரங்களில் கொடுக்கும் பாக்கியத்தையும், சிலாக்கியத்தையும் ஏழை
பரதேசிகளாகிய எங்களுக்கு கொடுத்து வரும் தேவ பிள்ளைகளாகிய உங்களை பரலோகத்தின்
தேவன் சகல இகபர நன்மைகளினாலும் முடிசூட்டி ஆசீர்வதிப்பாராக. இந்த ஊழியத்தின்
நித்திய பலனை நாம் ஒரு நாள் பரலோகில் நிச்சயமாக காண்போம். அதில் எந்த ஒரு
சந்தேகமுமே கிடையாது. பண்டிதை ராமாபாய் அம்மையார் வழக்கறிஞரான தனது கணவனின்
நூலகத்தில் தான் கண்டெடுத்த ஒரு சிறிய லூக்கா சுவிசேஷத்தை கருத்தோடு
வாசித்ததின் காரணமாக அன்பின் ஆண்டவர் இயேசு இரட்சகரை தனது சொந்த இரட்சகராக தனது
உள்ளத்தில் ஏற்று அவருடைய அன்பின் அடிமையாகி பின் நாட்களில் அன்பின் ஆண்டவர்
இயேசுவுக்காக எத்தனை அரும்பெரும் காரியங்களை நமது இந்திய நாட்டில் செய்து
முடித்துவிட்டார்கள். அவர்கள் தோற்றுவித்த ராமாபாய் முக்தி மிஷன் இன்றும்
கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக ஏழைகள், அநாதைப் பிள்ளைகளுக்கு ஆதரவு அளித்து
அவர்களை நித்திய ஜீவ பாதையில் வழிநடத்தும் கலங்கரை விளக்காக ஒளி வீசிக்
கொண்டிருக்கின்றதே! மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள பூனா அல்லது பியூன்
பட்டணத்திற்கு அருகிலுள்ள கெட்காம் என்ற இடத்தில் பரிசுத்த தாயார் ராமாபாய்
அம்மையார் தோற்றுவித்த முக்தி ஆச்சிரமத்தையும், ஏழைகள், அநாதைகளைப் போஷிக்கும்
விஸ்தாரமான அவர்களின் வயல் வெளிகளையும், காய்கறி, பழத்தோட்டங்களையும், பால்
பண்ணையையும், பள்ளிகளையும், அநாதைகளின் தங்கும் விடுதிகளையும், யாவுக்கும்
மேலாக அங்குள்ளோர் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்க அவர்கள் கட்டிய அழகான
தேவாலயத்தையும் பல்லாண்டு காலங்களுக்கு முன்பாக கண்டு வந்த பாவி நான்!
பரிசுத்தவாட்டி இறுதியாக வாழ்ந்து பரம எருசலேம் சென்ற அவர்களின் சிறிய அறை,
அந்த சிறிய அறையில் அவர்கள் துயில் கொண்ட சின்ன கட்டில், அவர்கள் மராட்டிய
மொழியில் மொழிபெயர்த்த தேவனுடைய பரிசுத்த வேதாகமம்! அவைகள் எல்லாவற்றையும் கண்
குளிர கண்டு வந்த பரதேசி அல்லவா நான்! அம்மையாரின் மூலமாக 1905 ஆம் ஆண்டில்
அந்த முக்தி ஆச்சிரமத்தில் ஏற்பட்ட உலகப் புகழ்பெற்ற உயிர் மீட்சியையும், அதைத்
தொடர்ந்த ஆத்தும அறுவடையையும் எந்த ஒரு தேவபிள்ளை மறக்க முடியும்? கர்த்தருக்கே
மகிமை உண்டாவதாக.
ஆ, எத்தனை ஆச்சரிய, அற்புதமான காரியங்களை எல்லாம் தன் ஆண்டவருக்காக, அந்த
ஆண்டவரின் துணை கொண்டு அந்த பரிசுத்தவாட்டி சாதித்துவிட்டார்களே! இவை அனைத்தின்
பின்னணியத்திலும் நம் கண்களுக்கு முன்பாக ஓடோடி வருவது அவர்கள் தனது கணவரின்
படிப்பறையில் கண்டெடுத்துப் படித்த ஒரு சிறிய வங்காள மொழி லூக்கா சுவிசேஷ
புத்தகம் அல்லவா! ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? அந்த படிப்பறையில் அந்த லூக்கா
சுவிசேஷம் நீண்ட காலம் இருந்தும் அவர்களுடைய கணவனால் அதை எடுத்து வாசித்து
நித்திய ஜீவ பாதையை கண்டு கொள்ள முடியவில்லை என்பதை நீங்கள் கவனித்தீர்களா?
அதுமட்டுமல்ல, அந்த வங்காள மொழி லூக்கா சுவிசேஷத்தை படிக்கும்படியாக அவரது
கரத்தில் கொடுத்தது ஒரு மிஷனரி என்பது நாம் கவனிக்க வேண்டிய காரியமாகும்.
தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய அந்த லூக்கா சுவிசேஷத்தை குறித்து தனது கணவரிடம்
எடுத்துக் கூறி அதில் குறிப்பிடப்பட்டுள்ள இயேசு இரட்சகர்தான் உலகின் மெய்யான
தெய்வம் என்று அவர்கள் சொன்னபோது அந்த மனிதர் அதை கொஞ்சம் கூட
அங்கீகரிக்கவில்லையே. அதின் முடிவு, கலியாணம் ஆகி 18 மாதங்களுக்குள் அவர் காலரா
என்ற கொள்ளை நோயினால் மாண்டும் போனார் என்பதை நாம் அறிவோம். உலகத் திருச்சபை
வரலாற்றில் பண்டிதை ராமாபாய் அம்மையாரும், ஆண்டவரை சொந்த இரட்சகராக
ஏற்றுக்கொண்ட அவர்களின் ஒரே குமாரத்தி மனோரமா மாத்திரமே தவிர அம்மையாரின்
மனந்திரும்பாத கணவர் பாபு பிபின் பீஹாரிதாஸ் இடம் பெறாமல் அப்படியே நித்தியமாக
மறக்கப்பட்டும் போனாரே! எத்தனை சோகமான முடிவு பாருங்கள்!
நமது இமயமலை தேவ ஊழியத்தின் பாதையிலும் நாம் ராமாபாய் அம்மையாரை நித்திய ஜீவ
பாதையில் கொண்டு வந்து சேர்த்த லூக்கா சுவிசேஷத்திற்கு முதலிடம்
கொடுக்கின்றோம். காரணம், நமது ஆண்டவருடைய பிறப்பு, அவருடைய ஊழியப்பாதையின்
தெளிவான விவரணம், அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் எல்லாம் வெகு சிறப்பாக அதில்
ஞானவானான வைத்தியர் லூக்கா அவர்களால் எழுதப்பட்டுள்ளது. நமது ஒவ்வொரு
ஊழியத்திலும் "சாந்தி மார்க்கம்" என்று அழைக்கப்படுகின்ற ஹந்தி மொழி லூக்கா
சுவிசேஷங்களை நாம் பெரும் எண்ணிக்கையில் வாங்கி அனைத்து தரப்பினருக்கும்
ஜெபத்தோடு கொடுக்கின்றோம். இவைகளில் பெரும் திரளானவை பள்ளிகள், கல்லூரிகளில்
படிக்கின்ற மாண மாணவியருக்கும், ஆசிரியர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ள. நாம்
ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கடந்த நாட்களில் கொடுத்த இந்த லூக்கா
சுவிசேஷங்கள் பண்டிதை ராமாபாய் அம்மையாரைப்போல எத்தனை ஆத்துமாக்களை ஏவி
எழுப்பிவிட்டது என்பதை முடிவில்லாத நித்தியம் மட்டுமே வெளிப்படுத்தும். ஆனால்,
தேவன் கிரியை நடப்பிக்க நாம் தொடர்ந்து தேவபெலத்தால் ஜெபித்துக் கொண்டேயிருக்க
வேண்டும்.
அந்த நாளின் காலை நாங்கள் வழக்கம்போல எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் தேவ
சமூகத்தில் ஒன்றாகக் கூடி ஜெபித்துவிட்டு தேவ ஊழியங்களுக்காக எங்கள்
வாகனங்களில் புறப்பட்டோம். நாங்கள் தங்கியிருந்த சவுக்குட்டியா என்ற
இடத்திலிருந்து பிக்கியாசேன் என்ற இடம் வரையான 35 கி.மீ. தூரம் வரை சிறிதும்
பெரிதுமான 16 கிராமங்களை நாங்கள் எங்கள் வாகனங்களில் கடந்து சென்று ஊழியம்
செய்தோம். கிராமங்களிலுள்ள வயல்வெளிகளுக்குள்ளும் நாங்கள் இறங்கிச் சென்று
தேவகிருபையால் கர்த்தருடைய பிரசுரங்களை வழங்கினோம். இமயமலைகளின் வயல்
வெளிகளையும், வயல்வெளிகளுக்கு உள்ளாக அமைந்துள்ள கிராமங்களையும் நீங்கள்
காண்பதுடன் வயல் வேலைகளில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக்
கொடுக்க அவர்களை நாடிச் செல்லும் நமது தேவ ஊழியர்களையும் நீங்கள் படங்களில்
காணலாம்.



தனக்குக் கொடுக்கப்பட்ட ஹிந்தி லூக்கா சுவிசேஷத்தை ஆசை ஆவலோடு தனது
கரத்தில் வைத்து தனது பண்ணை வீட்டுத் திண்ணையில் அமர்ந்து படிக்கும் ஒரு பெண்ணை
அவளுடைய வயல் வெளி வீட்டில் நீங்கள் காண்பீர்கள்.

எங்கள் வழித்தடத்தில் முதலாவது பாட்கோட் என்ற ஒரு கிராமம் வந்தது. அந்தக்
கிராமத்தில் உள்ள மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அங்கிருந்த
ஆரம்ப பாடசாலையின் மாணாக்கர்களுக்கு ஆண்டவருடைய பிரதிகளைக் கொடுத்தோம்.
ஆசிரியர்கள் 5 பேருக்கும் தேவனுடைய பிரசுரங்களுடன் ஆளுக்கொரு வேதாகமும்
ஜெபத்தடன் வழங்கினோம். அங்கிருந்து பட்டேல்காம் என்ற கிராமத்திற்கு நாங்கள்
வந்து சேர்ந்தோம். அந்த கிராமத்திலிருந்த ஆரம்ப பள்ளியிலும் மாணவர்களுக்கு
சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்ததுடன் அங்கிருந்த ஆசிரியர்கள் 5 பேருக்கும் ஹிந்தி
மொழி வேதாகமங்களைக் கொடுத்தோம். அந்த இடத்திலிருந்த இண்டர் காலேஜில் உள்ள
அனைத்து மாணவ, மாணவியருக்கும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுக்க கல்லூரியின்
பிரின்சிபால் லால் பகாதூர் பால் அனுமதி வழக்கவே அவர்கள் அனைவருக்கும்
மகிழ்ச்சியோடு அவைகளைக் கொடுத்தோம். அந்தப் பள்ளியில் பிள்ளைகளுக்கு பாடம்
கற்பித்த ஆசிரியர்களுக்கு 9 ஹிந்தி மொழி வேதாகமங்களை கொடுத்தோம்.
நாங்கள் சென்ற வழித்தடத்தில் எங்கள் வலது கைப் பக்கம் ராம் கங்கா நதி ஓடினது.
ஆங்காங்கு சில இடங்களில் நதிக்கு மேலாக கட்டப்பட்டிருந்த தொங்கு பாலத்தின்
மூலமாக நதிக்கு அப்பாலுள்ள அழகிய சின்னச் சின்ன கிராமங்கள்
இணைக்கப்பட்டிருந்தது. நாங்கள் ஓரிடத்தில் எங்கள் வாகனங்களை நிறுத்தி அந்த
கிராமத்திலுள்ள மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை விநியோகித்து முடித்து அடுத்த
கிராமத்திற்குப் புறப்படவிருந்த சமயம் ஒரு நடுத்தர வயதையுடைய மனிதர் ஓடோடி
எங்கள் வாகனத்தண்டை வந்து சேர்ந்தார். மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்த மனிதர்
அந்த கிராமத்திற்கு வந்து அந்த இடத்தில் ஒரு சிறிய மருந்தகம் வைத்து வைத்தியராக
தொழில் செய்து கொண்டிருந்தார். நாங்கள் அந்த கிராமத்திற்கு வந்து தேவ ஊழியம்
செய்கின்றோம் என்பதை கேள்விப்பட்டதும் எங்களிடம் எப்படியாவது ஒரு ஹிந்தி மொழி
வேதாகமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தாகத்தில் வந்திருந்தார். அவருடைய
வார்த்தைகளைக் கேட்டதும் நாங்கள் அவருக்கு ஒரு ஹந்தி மொழி வேதாகமத்தைக்
கொடுத்ததுடன் எங்கள் கைவசம் இருந்த நல்ல அருமையான கிறிஸ்தவ பிரதிகளை வகைக்கு
ஒவ்வொன்றாக நாங்கள் அவருக்கு ஜெபத்துடன் வழங்கினோம். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு
அளவில்லை. அந்த தவனமுள்ள ஆத்துமாவின் பெயர் கிசான் தாஸ் என்பதாகும். கர்த்தர்
அந்த மனிதரின் உள்ளத்தில் தொடர்ந்து தமது வசனங்களின் மூலமாகப் பேச நீங்களும்
அவருக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
பட்டேல்காம் என்ற கிராமத்திலிருந்து நாங்கள் பிரயாணப்பட்டு டோங் என்ற
கிராமத்திற்கு வந்தோம். அந்தக் கிராமத்தின் பள்ளிக்கூடம் கிராமத்தைவிட்டு
அப்பால் வெகு தூரத்தில் இருந்தது. நமது வாகனம் அங்கு செல்லக்கூடிய ரஸ்தா வசதி
எதுவும் இல்லாததால் நமது தேவ ஊழியர்கள் ஆண்டவருடைய பிரசுரங்களை தோளின் மேல்
சுமந்து கொண்டு சென்று அங்குள்ள பள்ளியின் மாணவர்களுக்கு விநியோகித்தனர்.
பிள்ளைகளுக்கு படித்துக்கொடுத்த 7 ஆசிரியர்களுக்கு 7 ஹிந்தி வேதாகமங்களும்
கொடுத்துவிட்டு வந்தனர்.
அங்கிருந்து நாங்கள் எங்கள் வாகனங்களில் பயணப்பட்டு ஜேத்வா என்ற கிராமத்திற்கு
வந்தோம். அந்த கிராமத்திலுள்ள மக்களுக்கு சுவிசேஷ பிரசுரங்களை கொடுத்துவிட்டு
அந்த கிராமத்தின் ரஸ்தா ஓரமாக இருந்த கிராமத்தின் சிறிய ஆரம்ப பள்ளியிலுள்ள
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கர்த்தருடைய பிரதிகளைக் கொடுத்தோம். பள்ளியின்
தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் மற்றும் அவருடைய சக ஆசிரியர் ஒருவருக்கும் 2 ஹிந்தி
வேதாகமங்களை வழங்கினோம். ரஸ்தா ஓரமாக அமைந்துள்ள ஜேத்வா பள்ளியை நீங்கள் இந்தச்
செய்தியில் காணலாம்.

நாங்கள் எங்கள் வழித்தடத்தில் மாசி என்ற ஒரு பெரிய
கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்தக் கிராமத்தின் முழு கடை வீதியிலுள்ள
மக்களுக்கும் ஆண்டவருடைய பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்தோம். அந்த நாளில்
அன்பின் ஆண்டவர் காலை முதல் மாலை வரை நல்ல ஊழிய வாய்ப்பினை எங்களுக்குத் தந்து
தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தினார்.
|