கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை
உண்டாவதாக. அன்பின் ஆண்டவருக்குச் சித்தமானால் 2012 ஆம் ஆண்டில் நாங்கள் ஒரு
குழுவாக ஆண்டவருடைய ஊழியங்களை வடக்கே இமயமலைகளில் செய்ய கர்த்தருக்குள்
ஜெபத்துடன் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம். வழக்கம்போல 2 வாகனங்களை முழுமையாக
ஒரு மாத காலத்திற்கு வாடகைக்கு அமர்த்தி நாங்கள் 9 பேர்கள் கொண்ட ஒரு குழுவாக
கர்த்தருடைய ஊழியங்களைச் செய்ய இருக்கின்றோம். 2011 ஆம் ஆண்டில் செய்ய இயலாமற்
போன தேவ ஊழியங்களையும் சேர்த்து சற்று கூடுதலான அளவில் இந்த ஆண்டு செய்ய
கர்த்தருக்குள் பிரயாசப் படுகின்றோம்.
இந்த ஊழியத்திற்குத் தேவையான ஹிந்தி மொழி கைப்பிரதிகள்
மும்பையில் உள்ள சுவிசேஷ இலக்கிய கழக அச்சுக்கூடத்தில்
(Gospel Literature Service) அச்சிட்டுப் பெற்றுக்கொண்டோம். கடந்த ஆண்டுகளை விட
கூடுதலான எண்ணிக்கையில் ஹிந்தி மொழி வேதாகமங்களை
இந்திய வேதாகம சங்கம், அலகாபாத்திலிருந்து நாம் இந்த ஊழியங்களுக்காக விலை
கொடுத்து வாங்கி இருக்கின்றோம்.
இந்தி மொழி லூக்கா சுவிசேஷம் (சாந்தி மார்க்) முந்தைய ஆண்டுகளைவிட அதிகமான
எண்ணிக்கையில் பெங்களூரில் தற்பொழுது அச்சாகிக் கொண்டிருக்கின்றது. அதை
அச்சிடும் இந்திய வேதாகம சங்கம், அலகாபாத்திற்கு அதற்கான பணத்தை எல்லாம் தேவ
கிருபையால் நாம் முன்கூட்டியே செலுத்திவிட்டோம்.
சென்று போன ஆண்டுகளைவிட இந்த தடவை அதிகமான எண்ணிக்கையில் ஹிந்தி மொழி புதிய
ஏற்பாடுகள் முற்றும் இலவசமாக கர்த்தருடைய பேரன்பால் நமக்கு
கிடைத்திருக்கின்றது.
அன்பின் பரம தகப்பன் அனைத்துக் காரியங்களையும் நேர்த்தியாக கைகூடி வரப்பண்ணி
ஏற்ற நாளில் நாங்கள் எங்கள் ஊழியங்களை ஆரம்பிக்க தேவப்பிள்ளைகளாகிய நீங்கள்
உங்கள் ஜெபங்களில் தேவ அன்பின் பாரத்தோடு எங்களுக்காக மன்றாடிக் கொள்ளுங்கள்.
ஊழியத்தில் கலந்து கொள்ளக்கூடிய தேவப்பிள்ளைகளின் நல்ல உடல் நலத்திற்காக
நீங்கள் விசேஷமாக ஜெபிப்பதுடன், அன்பின் ஆண்டவருடைய திருவுளத்திற்கு மிகவும்
உகந்த இந்த தேவ ஊழியத்தை மிகுந்த ஜெபத்தோடும், மெய்யான ஆத்தும பாரத்தோடும்
நாங்கள் செய்ய கர்த்தர் எங்களுக்கு உதவி செய்ய அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு உண்டு.
|