பாம்பின் வாய்த் தவளை

"தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகை தேடிச் சுற்றித்திரிகிறான்" (1 பேதுரு 5 : 8)

நாங்கள் குடியிருந்த எங்கள் நான்காவது வாடகை வீடு தேயிலைச் செடிகளின் நடுவில் இருந்ததால் பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. கொடிய விஷம் நிறைந்த நல்ல பாம்புகள் அந்த இடத்தில் இல்லாதபோதினும் பெரிதும், நீளமுமான சாரைப்பாம்புகள் நிறையக் காணப்பட்டன. ஒரு நாள் ஒரு பாம்பு எங்கள் வீட்டின் சமையல் அறையிலேயே வந்து படுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

இந்தப் பாம்புகள் தவளைகளை பிடித்துச் செல்லும் ஒரு காரியம் எப்பொழுதும் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கின்றது. எங்கள் வீட்டை ஒட்டியுள்ள தோட்டத்திற்கு வந்தால் ஏதாவது ஒரு சமயம் ஒரு பெரிய நீளமான சாரைப் பாம்பு தனது தலையை பூமியிலுள்ள ஒரு மண் பொந்திற்குள்ளாகவோ, அல்லது ஒரு சிறிய கற்குவியலுக்குள்ளேயோ செலுத்திவிட்டு தனது நீளமான உடம்பு முழுவதையும் பூமியில் போட்டு அங்கும் இங்கும் உருண்டு, புரண்டு, வளைந்த வண்ணமாகக் கிடக்கும். பொந்திற்குள் இருக்கும் ஒரு எலியையோ அல்லது ஒரு தவளையையோ அது இப்பொழுது பிடித்துக்கொண்டிருக்கின்றது என்பதை கண்டுகொள்ளும் நான் அது தனது தலையை எடுத்து வெளியே வருவதற்கு பொறுத்திருந்து கவனித்துப் பார்ப்பேன்.

நான் பார்த்த ஒவ்வொரு தடவையும் அது ஒரு தவளையைத்தான் தனது வாயில் கவ்விக்கொண்டு வெளி வருவதை நான் கவனித்தேன். அந்தப் பாம்பானது பொந்திற்குள் தனது தலையை செலுத்தி ஏன் அவ்வளவு நேரம் அங்கு செலவிட்டது என்பதை நான் யோசித்துப் பார்த்தேன். அது அந்த தவளையின் வாயோடு சேர்ந்த முன் பகுதியை கடித்து, கவ்வி வருவதற்கு அவ்வளவு நேரம் செலவிட்டிருந்தது. தான் ஏனொதானோவென்று தவளையைக் கவ்வினால் அது தனது பிடியிலிருந்து ஒரு வேளை நழுவி தப்பிவிடும் என்ற எண்ணத்தில் அது அப்படிச் செய்தது. தவளையை தனது வாயில் வைத்த நிலையில் பாம்பானது வெளி வந்து நிற்பதை நான் கவனித்திருக்கின்றேன். தவளையின் முழு தலைப் பகுதியும் முன் கால்கள் இரண்டும் பாம்பின் வாய்க்குள்ளும், தவளையின் பின் கால்கள் இரண்டுடன் கூடிய சிறிய பகுதி மட்டும் வெளியில் தெரிவதை நான் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றேன். எந்த ஒரு நிலையிலும் தவளை இப்பொழுது தப்பிச் செல்ல வழியே கிடையாது. தான் உயிர் பிழைக்க ஏதாவது முயற்சிக்க வேண்டும் என்ற எண்ணத்தையே பாம்பானது தவளையிலிருந்து முழுமையாக எடுத்துப்போட்டது. ஒரு வேளை தவளை அப்படியே தப்பிக்க முயற்சித்தாலும் பாம்பின் வாய்க்குள்ளேயேதான் இன்னும் ஆழமாக செல்ல வேண்டுமே தவிர வெளி உலகிற்கு வர தவளைக்கு துளிதானும் வாய்ப்பில்லை.

பாம்பு தவளைக்குச் செய்யும் அதே காரியத்தையே சாத்தானாம் பிசாசும் இன்று மக்களுக்குச் செய்கின்றான். இந்த உலகத்தில் இருக்கும் காலபரியந்தம் அந்த தந்திர சாத்தான் தேவ ஜனத்தை மனந்திரும்பி, அவர்கள் தங்களுடைய பாவங்களுக்காக பட்சாதாபப்பட்டு, காரியங்களை ஒழுங்குபடுத்தி ஆண்டவரை அண்டிக்கொள்ள ஒட்டாமல் அவர்களை காலமெல்லாம், ஜெப மலைகளுக்கும், ஜெப கோபுரங்களுக்கும், ஜெப கூடாரங்களுக்கும், ஜெப தோட்டங்களுக்கும் துரத்தியடித்து அவர்களின் விலையேறப் பெற்ற காலங்களை கூட்டத்தோடு கூட்டமாக ஆடலிலும், பாடலிலும், நடனங்களிலும், துதி, ஆராதனைகளிலும், ஸ்தோத்திர பலிகளிலும், செலவிடப்பண்ணி, எந்த ஒரு நிலையிலும் தனித்து முழங்காலூன்றி நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு ஆண்டவரின் பொன் முகம் நோக்கி "தேவனே, பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்" "ஆண்டவரே, உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்" என்று கதறி அழுது புலம்ப நேரம் கொடாமல் உலகில் இருக்கும் காலம் வரை மற்றவர்களின் தேவச்செய்திகளையே காலை முதல் இரவில் படுக்கைக்குச் செல்லும் வரை தொலைக்காட்சியில் கேட்டு கேட்டு ஆண்டவருக்கும், அவர்களுக்கும் இடையே எந்த ஒரு தொடர்பும், உறவும், பரிசுத்த ஐக்கியமும் இல்லாமல் இருக்கப் பண்ணி இறுதியில் "சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்" (நியாதி 16 : 20) என்ற துயரமான மரண குரல் ஒலியுடன் அவர்கள் ஓட்டத்தை நித்திய நஷ்டத்தில் முடிவடையப்பண்ணி எரிநரகத்திற்கு தப்பாது அனுப்பிக் கொண்டிருக்கின்றான்.

மேலே நாம் பார்த்ததுபோல அந்தப் பாம்பானது தவளையின் முழு வாய்ப்பகுதியையும், முன்னங்கால்களையும் தனது வாய்க்குள் பாதுகாப்பாக விழுங்கும் வரை பூமியில் தனது உடம்பை போட்டு போராடி தனது காரியத்தில் ஜெயம் எடுத்ததுபோல மனுஷ கொலை பாதகனும் தேவ ஜனங்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் உலகில் உள்ள காலம் வரை அவர்களுடன் போராடி நிச்சயமாக அவர்கள் நரக பாதாளத்துக்குத்தான் செல்லுவார்கள் என்ற பூரணமான நம்பிக்கை தனக்குக் கிடைக்கும் வரை அவர்களை விட்டு விலகாமல் நிழலாக அவர்களைத் தொடர்ந்து அவர்கள் ஆத்துமாவை அழித்துக் கொண்டிருக்கின்றான்.

தேவ ஜனமே, விழித்துக் கொள்ளுங்கள். பாவத்திலிருந்து மனந்திரும்புங்கள். உங்கள் விலை மதிப்பிட முடியாத ஆத்துமாவைக் குறித்த கவலையின்றி உங்கள் அடி மடியில் உள்ள பணத்தை தந்திரமாகப் பறிக்க மகுடி ஊதும் பொல்லாத ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். பிசாசுக்கு இடம் கொடாமல் தேவ பெலத்தால் உங்களைக் காத்து நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்.


 

"ஓ, அப்படியானால் நரகம் எப்படிப்பட்டதாக இருக்கும்!"

ஸ்காட்லாந்து தேசத்திய ஒரு மெய்யான பரிசுத்த தேவ ஊழியன் ஒரு சமயம் பீங்கான் தொழிற்கூடம் (Glass Factory) ஒன்றைக் கடந்து சென்று கொண்டிருந்தார். தொழிற்கூடத்தின் கதவு திறந்திருப்பதைக் கண்ணுற்ற அவர் உள்ளே சென்று அதனைப் பார்வையிட்டார். சீக்கிரமாகவே, அதின் கொதித்துக் குமுறிக்கொண்டிருக்கும் பயங்கர உலைக்களத்தை அவர் கண்டார். அதைக் கண்ட அவர் தன்னை மறந்தவராக ஆச்சரியத்தில் 'ஓ, அப்படியானால் நரகம் எப்படிப்பட்டதாயிருக்கும்' என்று சத்தமிட்டு கூச்சலிடத் தொடங்கினார்.

தான் இப்படிச் சத்தமிடுவதைத் தனக்கருகாமையில் அந்த அடுப்பைக் கவனிப்போன் (Stoker) நின்று கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதை அந்த தேவ ஊழியர் கவனிக்கவே இல்லை. அநேக வாரங்கள் கடந்து சென்றன. ஒரு நாள் இரவில் மேற்கண்ட மனிதன் தேவ ஊழியரை அவருடைய வீட்டிற்கு வந்து சந்தித்து பீங்கான் தொழிற்சாலையில் நடந்த சம்பவத்தை அவருக்கு நினைப்பூட்டி அந்த உலைக்கள அடுப்பைத் தான் திறக்கும்போதெல்லாம் 'ஓ, அப்படியானால் நரகம் எப்படிப்பட்டதாக இருக்கும்' என்று அவர் கூறின வார்த்தைகளே தன் செவிகளில் பயங்கரமாகத் தொனித்துக் கொண்டிருப்பதாகவும், தான் நரகத்திற்குச் சென்று அதின் அகோர பயங்கர அக்கினியை முடிவில்லாத யுகாயுகமாக தன்னளவில் அனுபவிக்கக் கூடாது என்றும் கண்ணீரோடு கூறி அந்த இராக்காலத்திலேயே அன்பின் இயேசுவைத் தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு மனந்திரும்பினான்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM