"மாரியும், உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, பூமியை நனைத்து, அதில் முளை கிழம்பி விளையும்படிச் செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்" (ஏசாயா 55 : 10 - 11)
கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்திற்கு துதி கனம் மகிமை உண்டாவதாக. மேற்கண்ட தேவனுடைய வசனத்தின்படி ஆண்டவருடைய வசனம் ஒருக்காலும் வெறுமையாகத் திரும்பாமல் அவர் விரும்புகிறதை நிறைவேற்றி முடிக்கும் என்று நாம் திட்டமும் தெளிவுமாகப் பார்க்கின்றோம்.
ரயில் வண்டி விரைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது. ஒரு தேவனுடைய ஊழியர் தனது கரங்களில் தேவனுடைய பிரசுரங்களை ஏந்திக்கொண்டு வந்து வண்டியில் அமர்ந்திருப்போருக்கெல்லாம் பிரசுரங்களை இலவசமாகக் கொடுக்கின்றார். எல்லாரும் மறுப்பின்றி சந்தோசமாக அவரிடமிருந்து அவற்றை வாங்கிப் படிக்கின்றனர். அவர்களில் ஒரு மனிதன் அந்தப் பிரசுரத்தை வாங்கி அவருடைய கண்களுக்கு முன்பாகவே மிகுந்த கோபத்துடன் அதை வெளியே வீசி எறிந்து விடுகின்றான். அதைக் குறித்து அந்த தேவ ஊழியர் எந்த ஒரு கடுஞ்சொல்லும் அவனைக்கூறாமல் அமைதியாகக் கடந்து செல்லுகின்றார். வெளியே வீசப்பட்ட தேவனுடைய பிரதி காற்றினால் அங்கும் இங்கும் அலைசடிப்பட்டு இறுதியில் ரயில் தண்டவாளத்தில் போய் விழுந்து அங்கே பாதுகாப்பாகக் கிடக்கின்றது. எத்தனை நாட்களாக அது அங்கு கிடந்ததோ நமக்குத் தெரியாது. ஒரு நாள் ஒரு மனிதன் தனது வாழ்க்கையில் முற்றும் வெறுப்புற்று இந்த உலகத்தில் உயிர் வாழ்வதை விட சாவதே நலம் என்ற திட்டமான முடிவுக்கு வந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள ரயிலுக்கு முன்பாக வந்து விழும் யோசனையை நலம் என்று தெரிந்து கொண்டு ரயில் தண்டவாளத்தில் ஏறி வந்து நிற்கின்றான். அந்த நேரம் அவனது கண் பார்வை தண்டவாளத்தில் கிடக்கும் தேவனுடைய பிரசுரத்தில் விழுகின்றது. ரயில் இன்னும் வரவில்லையாதலால் அந்தக் கைப்பிரதியை ஏனோதானோவென்று எடுத்து அவன் அதை வாசிக்கின்றான். தேவனுடைய அநாதி அன்பின் தீர்மானத்தின்படி அவனுக்காக அந்தக் கைப்பிரதி வீசப்பட்டிருந்த படியால், அவன் அதை வாசித்த உடனேயே அவனை அறியாமல் ஒரு உறுதியான நம்பிக்கையும், தேவ சமாதானமும் அவனை ஆட்கொண்டதால் அவன் தனது தற்கொலை முயற்சியை உடனே கைவிட்டுவிட்டு தண்டவாளத்திலிருந்து இறங்கி வீடு சென்று கைப்பிரதியில் குறிப்பிட்டபடி தனக்காக தனது ஜீவனையே கொடுத்த தன் ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு அவருடைய அன்பின் அடிமையானான். அந்த மனிதன் எடுத்துப் படித்தது ஒரு அற்பமான துண்டு காகிதமாக இருந்தபோதினும் அதில் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தமையால் அவன் அதை வாசித்து காப்பாற்றப்பட்டு நித்திய ஜீவனுக்கு சுதந்திரவாளியானான்.
இந்த ஒரு சம்பவம் மட்டுமல்ல, கைப்பிரதியை துண்டு துண்டாக கிழித்து வீசப்பட்ட நிலையிலும் அதில் ஒரு துண்டுத்தாளில் காணப்பட்ட தேவனுடைய வார்த்தையை வாசித்து ஜீவன் காக்கப்பட்டோர் அநேகராவார்கள். தேவ ஊழியர்கள், மற்றும் மற்ற மக்களுடைய இரட்சிப்பில் கவனமாக இருக்கும் தேவ மக்கள் எப்படியாவது அவர்களுடைய கரங்களில் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட வேண்டுமென்று துடிதுடிப்பதன் ஒரே காரணம் தேவன் தமது வார்த்தைகளின் மூலமாக அந்த உள்ளங்களில் கட்டாயம் பேசி தமது மேலான நோக்கத்தை நிறைவேற்றிவிடுவார் என்பதுதான். எப்படியாவது தேவனுடைய வார்த்தைகள் அவர்களுடைய கரங்களுக்குச் சென்று கிடைக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
இந்த இதழின் ஆரம்பத்தில் காணப்படும் தேவ மனிதர் ஹட்சன் டெய்லர் என்ற பரிசுத்தவானுடைய வாழ்க்கை சரித்திரத்தில் நாம் வாசிப்பதும் அதுவேதான். சீன மக்களுக்கு எப்படியாவது தேவனுடைய வார்த்தைகளைக் கொடுப்பதில் அவர் கண்ணும் கருத்துமாகவிருந்தார். தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கும் அந்த மனிதருக்கு தனது சுவிசேஷ பிரசுரங்கள் எவ்வளவு தேவையானாலும் அவை அனைத்தையும் இலவசமாக கொடுக்க முன் வந்ததுடன் சீனாவில் அவருடைய வாழ்க்கைச் செலவுகளையும் கூட தானே ஏற்றுக்கொள்ள இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் வேதாகம சங்கத்தினர் முன் வந்ததின் காரணமும் அதைக் கருத்தில் கொண்டுதான்.
கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையாலும், தேவ பிள்ளைகளாகிய உங்களுடைய முழுமையான தியாக அன்பின் காணிக்கைகளைக்கொண்டும் நாங்கள் வடக்கே இமயமலைகளிலும் மேற்கண்ட காரியத்தைதான் ஆத்தும பாரத்தோடும், ஜெபத்தோடும் செய்து கொண்டு வருகின்றோம். முடிந்த அளவு அதிகமான எண்ணிக்கையில் தேவனுடைய சுவிசேஷ பங்குகள், புதிய ஏற்பாடுகள், முழுமையான வேதாகமங்கள் மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்கு நேராக வழிநடத்தக் கூடிய தரமான தேவனுடைய பிரசுரங்களை பயன்படுத்துகின்றோம். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக.
நாங்கள் துவாராகாட் என்ற இடத்திலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலுள்ள சவுக்குட்டியா என்ற இடத்திற்கு வந்து தங்கி அங்கிருந்து சுற்றியுள்ள அநேகக் கிராமங்களில் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்தோம். துவராகாட்டிலிருந்து சவுக்குட்டியா செல்லும் பாதை முற்றும் இறங்குமுகமாகவே இருந்தது. இந்த இடத்தை கனாயி என்றும் அழைக்கின்றனர். கர்த்தருடைய கிருபையால் நாங்கள் வசதியாக தங்கியிருந்து ஊழியம் செய்ய அனுகூலமாக ஒரு நல்ல லாட்ஜ் பட்டணத்தின் ஆரம்பத்திலிலேயே எங்களுக்கு கிடைத்து கொண்டது. எங்கள் வாகனங்களையும் நாங்கள் பாதுகாப்பாக நிறுத்த லாட்ஜ்க்கு முன்பாக இடம் கொடுத்தார்கள். நாங்கள் எல்லாரும் வசதியாக மூன்று அறைகளில் தங்கிக் கொண்டோம். காலையில் நாங்கள் குளிப்பதற்கு நல்ல வெந்நீர் கொடுத்தார்கள். எங்கள் விருப்பம்போல எங்களுக்கு ஆகாரம் செய்து தந்தார்கள். நாங்களும் எங்கள் ஊழியங்கள் முடித்து லாட்ஜ் திரும்பியதும் நல்ல புதிதான காய்கறிகளை கடை வீதிக்குச் சென்று சமையல்காரருக்கு வாங்கிக் கொடுத்தோம். லாட்ஜ்ஜின் பணியாளர்களும் நாங்கள் எல்லாரும் ஒரே குடும்பத்தின் பிள்ளைகளைப்போல நடந்து கொண்டோம். அவர்கள் எங்களுக்குப் பாராட்டிய அன்பு மிகவும் அதிகமாகும். லாட்ஜ்ஜின் பணியாளர்கள் மூவரும் நாங்கள் எல்லாரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட படத்தை நீங்கள் காண்பீர்கள்.

|