தேவ ஜனமே, முடிவிலே மூடராகிவிடாதீர்கள்
(எரேமியா 17 : 11)

இங்கிலாந்து தேசத்து பரிசுத்தவான் ஜே.சி.ரைல் என்பவர் 1880 ஆம் ஆண்டு முதல் 1900 ஆம் ஆண்டு வரை லிவர்பூல் பட்டணத்தில் அத்தியட்சராக இருந்தார். அவர் தனது பரிசுத்த கட்டுரை ஒன்றில் இவ்வாறு எழுதியிருக்கின்றார்.

"மனந்திரும்பி, பரிசுத்தமாக வாழ்ந்த ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்க்கையின் விருத்தாப்பிய காலம் மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும். அவனது வாழ்வின் அஸ்தமன நாட்கள் ஒவ்வொன்றாக கடந்து செல்லச் செல்ல அவனது வாழ்க்கை பிரகாசமாகிக் கொண்டே செல்லும். அவனது அருமை இரட்சகர் அவனுக்காக ஆயத்தம் செய்து வைத்துள்ள மோட்ச பட்டணத்தின் காட்சி நாளுக்கு நாள் அவன் அருகில் வந்து கொண்டே இருக்கும். மெய்யான ஒரு பரிசுத்த தேவ பிள்ளையின் விருத்தாப்பியம் களிகூருதலின் ஆனந்த காலமாகும்.

ஆனால், மனந்திரும்பாமல் காலமெல்லாம் பாவத்தில் வாழ்ந்து தனது வாழ்நாட் காலத்தை முடித்த ஒரு கிறிஸ்தவனின் விருத்தாப்பியம் மகா கொடுமையானது. மகா நிர்ப்பந்தமானது. அவன் தனது நாட்களை சமாதானத்தோடு செலவிட இயலாது. அவனால் சமாதானத்தோடு தூங்க முடியாது. நித்திய நரகத்தின் விடியற்காலை அவனது இந்த விருத்தாப்பியத்திலேயே உதயமாகிவிடும். நாளுக்கு நாள் இருள் அவனை சூழ்ந்து கொண்டே வந்து முடிவில் யூதா 13 ஆம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள என்றென்றைக்குமுள்ள மரணத்தின் காரிருள் அவனை சூழ்ந்து மூடிக்கொண்டு விடும்"

ஆ, பரிசுத்தவானின் வரிகள் எத்தனை உண்மையானவைகள்! நமது கண்களாலேயே நாம் அந்தக் கொடூரக் காட்சிகளைக் காண்கின்றோமே! ஆண்டவர் இயேசுவைத் தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமல், பரிசுத்தமாக வாழாமல், உலக மாயைகளுக்கு தங்களை ஒப்புக் கொடுத்த கிறிஸ்தவ மக்கள் எத்தனை நிர்ப்பந்தராக வாழ்கின்றனர். விருத்தாப்பியத்தின் நாட்களை அவர்களால் தனிமையில் செலவிட இயலாது. தங்கள் அருமை இரட்சகரை தங்கள் உலக வாழ்வில் ஓரம்கட்டி ஒதுக்கி வைத்த அவர்களை அவர்கள் ஆண்டவரும் 1 நாளாகமம் 28 : 9 ன்படி அவர்களது விருத்தாப்பியத்தில் கைவிட்டுவிடவே அவர்களால் ஆண்டவரோடு ஜெபத்தில் நெருங்கி உறவாடி மகிழ இயலுவதில்லை. எனவே, தங்கள் நேரங்களையும், காலங்களையும் உலக மக்களோடு வீண் வார்த்தைகள், வேடிக்கை வார்த்தைகள் பேசி அதைத் தொலைத்துக் கட்ட பேச்சுத் துணைக்கு மக்களை நாடி ஓடுகின்றனர். அவர்களது நிலைமையை புரிந்து கொண்ட மக்கள் அவர்களைக் கண்டதும் பயந்து ஓடி ஒளிக்கின்றனர். "அந்த ஆளிடம் நாம் மாட்டிக் கொண்டால், அவர் நம்மை பேச்சிலே வைத்து அறுத்துவிடுவார்" என்று தங்களுக்குள்ளாகவே எண்ணிக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

தங்களுடன் பேசி நேரம் செலவிட அந்த மக்கள் மற்ற மக்களை பணம் கொடுத்துக்கூட அழைக்கின்றனர். அவர்களில் கணவன் அல்லது மனைவி இறந்து போன விருத்தாப்பியர்களின் நிலையைசொல்லி மாளாது. கணவனை சடுதியாக மரணத்தின் மூலமாக இழந்த ஒரு விருத்தாப்பிய தாய், தனது பெற்ற பிள்ளைகள் யாவராலும் கைவிடப்பட்ட நிலையில் தனது பேச்சுத் துணைக்காக அவர்களுடைய வயதுக்கொப்பான மற்றொரு தாயாரை "அக்கா, நான் உங்களுக்கு இலவசமாக சோறு பொங்கிப் போட்டு உங்களைக் கவனித்துக் கொள்ளுகின்றேன், நீங்கள் என்னுடைய வீட்டுக்கு வந்து என்னுடன் தங்கி எனக்கு பேச்சுத் துணைக்கு இருந்து கொள்ளுங்கள்" என்று அழைத்ததை நான் கேள்விப்பட்டேன்.

ஆண்டவரில்லாத வாழ்க்கை எத்தனை பயங்கரமானது என்று பாருங்கள். "எனக்கோ தேவனை அண்டிக் கொண்டிருப்பதே நலம்" (சங் 73 : 28) என்றார் சங்கீதக்காரன். ஆனால் இந்த மக்களால் தேவனை அண்டி வாழ முடியாது. இவர்களால் அதிக நேரம் ஆண்டவருடைய பாதங்களில் அமர்ந்து ஜெபிக்க இயலாது. இவர்களால் ஆண்டவரைப் பாடித்துதித்து அவரில் ஆனந்திக்க இயலாது. ஏதோ கடமைக்காக கொஞ்ச நேரம் ஜெபிப்பார்கள். அதின் பின்னர் இந்த அன்பான மக்கள் தங்கள் நேரத்தை செலவிட தங்கள் நண்பர்களையும், இனஜன பெந்துக்களையும், தொலைக்காட்சியையும், சினிமாவையும், ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும், பொது வாசகசாலையையும், பொழுதுபோக்கு பூங்காவையும் நாடித்தேடி ஓடுவார்கள். உண்மைதான், யோபு பக்தன் சொன்னது போல அவர்களால் சர்வ வல்லவரில் மனமகிழ்ச்சியாக இருக்க முடியாது, அவர்களால் எப்பொழுதும் தேவனைத் தொழுது கொண்டிருக்க முடியாது (யோபு 27 : 10)

இதைக் கருத்தோடு வாசிக்கும் அன்பான தேவப்பிள்ளையே, உங்களுடைய விருத்தாப்பிய காலமானது மற்ற மக்களுக்கு கனி தந்து புஷ்டியும், பசுமையாக இருக்கவும், உங்களது அந்திய கால நாட்கள் உங்களுக்கு மிகுந்த தேவ சமாதானம் நிறைந்ததாகவும், உங்களது இராக்கால நித்திரைகள் இன்பமாக அமையவும், எந்த ஒரு உலக மாந்தரை பேச்சு துணைக்கு நாடி ஓடாமல் ஆண்டவரின் பாதங்களிலேயே மரியாளைப் போல உங்கள் அஸ்தமன நாட்களை ஆனந்தக் களிப்போடு செலவிடவும், ஒவ்வொரு நாளும் மோட்சத்தைக் குறித்தே ஏக்கங்கொண்டு அந்த பேரின்ப வீட்டை சுதந்தரிக்கப்போகும் நாளுக்காகவும், அதின் அதிபதியாம் இம்மானுவேலரை முகமுகமாக தரிசிக்கப்போகின்ற ஆனந்த நாளின் வரவுக்காகவும் காத்திருக்கும் பாக்கிய சிலாக்கியத்தைப் பெறவும் இன்றே உங்கள் மார்பில் அடித்து மனந்திரும்புங்கள். அவர் சமீபமாக இருக்கும் இந்த நேரத்தில் அவரை நோக்கிக்கூப்பிடுங்கள். உங்களுடைய இரட்சிப்பின் காரியத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் பின்னுக்கென்று ஒத்திப் போடாதேயுங்கள்.

ஏனோதானோவென்று வாழ்ந்து உங்கள் விலையேறப்பெற்ற உலக வாழ்க்கையை குரங்கு கை பூமாலையாக்கிவிடாதீர்கள். ஆரம்பத்தில் கண்ட தேவ வசனத்தின்படி உங்கள் உலக வாழ்வின் முடிவில் உங்களை நீங்களே மூடர் ஆக்கிக்கொண்டு உட்கார்ந்து விடாதீர்கள். உங்களுடைய தலையை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடியில் ஒரு முறைதானும் பாருங்கள். ஆங்காங்கே வெண் முடிகள் துளிர்த்திருப்பதை நீங்கள் காண்கின்றீர்களா? இன்றே இயேசு இரட்சகரின் காயப்பட்ட கரங்களை நோக்கி விரைந்து ஓடுங்கள். விருத்தாப்பியம் உங்களை பூரணமாக ஆண்டுகொள்ளுவதற்கு முன்பாக உங்கள் நித்திய விண் வீட்டின் காரியங்களை தேவ பெலத்தால் ஞானமாக ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். அதற்கான தேவ கிருபைகளை கர்த்தர் உங்களுக்குத் தந்தருள்வாராக. ஆமென்.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM