தேவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கு தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்யுங்கள்


ஆண்டவருடைய வார்த்தைகளை திரள் திரளாக தங்கள் இருதயத்தில் மனப்பாடம் செய்து வைக்க வகை செய்யும் ஏவுகரணங்களை கொடுக்கும் கிறிஸ்தவ ஸ்தாபனமான (The Navigators) என்ற புகழ்பெற்ற கிறிஸ்தவ ஸ்தாபனத்தை தோற்றுவித்த டாவ்சன் டிராட்மான் என்ற தேவ மனிதர் ஒரு சமயம் ஒரு ராணுவ வீரனைப் பார்த்து எத்தனை தேவ வசனங்களை அவன் மனப்பாடமாகப் படித்திருக்கின்றான் என்று கேட்டார். அதற்கு அந்த ராணுவ வீரன் 1500 தேவ வசனங்கள் தனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று கூறினான். "அந்த 1500 வசனங்களையும் இப்பொழுதே உங்களுக்கு மனப்பாடமாக ஒப்புவிக்க முடியுமா?" என்று டிராட்மான் கேட்டார். "ஆம், இப்பொழுதே நான் அவைகளை மனப்பாடமாகச் செல்ல முடியும்" என்று அந்த ராணுவ வீரன் பெருமையோடு கூறினான்.

அதைக்கேட்ட அந்த தேவ மனிதர் "நீங்கள் அந்த 1500 தேவ வசனங்களை என்னிடம் ஒப்புவிக்க வேண்டும் என்று நான் விரும்பாமல் அவைகளில் 5 வசனங்களின்படி நீங்கள் உங்கள் கிறிஸ்தவ வாழ்வில் வாழ்ந்தால் போதுமென்றே நான் விரும்புகிறேன்" என்று சொன்னாராம். அந்த ராணுவ வீரன் தலை அறிவு மாத்திரம் கொண்டிருந்தானேயல்லாமல் இருதயத்தில் தேவ அறிவைப் பெற்றவனல்ல. அதினால் அவன் துக்கத்தோடு சென்றுவிட்டான்.

அநேக ஆண்டுகளுக்கு முன்பாக ரஷ்யா தேசத்திலுள்ள கலோனாவாக்கா என்ற கிராமத்திலுள்ள குருவானவர், தட்டையான மூக்கைக் கொண்ட ஒரு வாலிபன் தான் மனப்பாடமாகப்படித்த வேத வசனங்களை மிகவும் பக்தி வினயமாக ஆலயத்தில் ஒப்புவிப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தார். அந்த குருவானவர் அந்த வாலிபனுக்கு நல்ல சன்மானங்களையும், இதரப் பொருட்களையும் கொடுத்து அவனை வேதாகமத்திலுள்ள நான்கு சுவிசேஷங்களையும் மனப்பாடமாகப் படிக்க வைத்துவிட்டார். அந்த வாலிபன் மனப்பாடமாகப் படித்த அந்த நான்கு சுவிசேஷங்களையும் ஒரு நாள் அந்த குருவானவருடைய தேவாலயத்தில் சபை நடுவில் ஒப்புவிக்க வைத்து அந்த குருவானவர் மிகவும் மனம் மகிழ்ந்தார்.

60 ஆண்டுகளுக்குப் பின்னரும் மேற்கண்ட அதே வாலிபன் தான் ஒப்புவித்த அதே நான்கு சுவிசேஷங்களை திரும்பவும் ஒப்புவிக்க விரும்பினான். அவன் யாரென்று கவனித்தால் அவர்தான் "கடவுள் இல்லை" என்ற தீவிரமான நாஸ்தீக கொள்கையையுடைய ரஷ்ய தேசத்தின் கம்மியூனிச பிரதம மந்திரியான நிக்கிடவ் குருஷேவ் என்பவராவார். மிகவும் ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா!

ஜாண் அலெக்ஸாண்டர் என்ற அமெரிக்க சர்வ கலாசாலை கிறிஸ்தவ ஐக்கியத்தின் முன்னாள் தலைவர் தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்வதைக் குறித்து ஒரு எச்சரிப்பை நமக்கு முன்பாக வைக்கின்றார். வெறுமனே ஆண்டவருடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்வதால் எந்த ஒரு ஆவிக்குரிய பயனும் நமக்குக் கிட்டாது. தேவன் இல்லை என்று சொல்லக்கூடிய ஒரு நாஸ்தீகன் தேவனுடைய வேதபுத்தகத்திலிருந்து நான்கு சுவிசேஷங்களையுமே மனப்பாடமாகப் படித்து வைத்திருக்கலாம். சாத்தானாம் பிசாசானவனும் கர்த்தருடைய வார்த்தைகளை திரள் திரளாகப் படித்து வைத்திருக்கின்றான். அன்பின் ஆண்டவர் இயேசுவை சோதிப்பதற்காக அவன் அப்படி வசனங்களை மனப்பாடமாக படித்திருந்ததை வேதாகமத்தில் நாம் காண்கின்றோம்.

"எனினும், தேவனுடைய வசனங்களை மனப்பாடம் செய்து இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்து அவைகளை தியானம் செய்து வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி அப்பியாசிப்பது ஒரு பெரிய ஆசீர்வாதமாகும்" என்று மேற்கண்ட ஜாண் அலெக்ஸாண்டர் தொடர்ந்து கூறுகின்றார்.

படித்த வேத வசனங்களை திரும்பத் திரும்ப
நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிரு

(வேத வசனங்களை மனப்பாடம் செய்யும் இரகசியம் இது ஒன்றேதான்) எனது ஆரம்ப கால கிறிஸ்தவ வாழ்வில் தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த எனது அறிவு மிகவும் குறைவானதாகும். இரண்டாம் உலகப்போரின் போது நானும் என்னைப்போன்ற மற்றொரு டாக்டரும் ஒன்றாக ஒரு கப்பல் யாத்திரையில் இருந்தோம். அந்த டாக்டர் என்னைப் பார்த்து வேதாகமத்தைக் குறித்து தனக்கு ஏதாவது சொல்லும்படியாக என்னைக் கேட்டார்.

வேதாகமத்தைக் குறித்த அறிவு அப்பொழுது எனக்கு ஒன்றுமில்லையாதலால் நான் அவருக்கு எதையும் சொல்லக் கூடாதவனானேன். அது எனக்கு மிகவும் வேதனையான ஒரு அனுபவமாகவே அப்பொழுது இருந்தது. நான் எனது பள்ளிப் படிப்பு மற்றும் கல்லூரி படிப்பு இன்னும் கடினமான மருத்துவப் படிப்பைக்கூட படித்து முடித்திருந்தேன். அந்தப் படிப்புகளின்போது நான் ஆயிரக்கணக்கான தத்தவ விளக்கங்களையும், விதிகளையும், சமன்பாடுகளையும், தண்ணீர்பட்ட பாடமாக மனப்பாடமாகப் படித்திருந்தேன். ஆனால், தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைக் குறித்த அறிவு எனக்கு பூஜ்யமாகவிருந்தது. சொல்லப்போனால் தேவனுடைய வார்த்தையோடு நான் விளையாடிக்கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஆண்டவர் என்னைப் பார்த்து தேவ வசனங்களை மனப்பாடம் செய்யும்படியாகக் கூறினார். எனக்கும் (டாக்டர் ரால்ப் பைரன்) ஆண்டவருக்கும் இடையிலான சம்பாஷணை இவ்விதமாக அமைந்தது:-

பைரன்:- "ஐயா, உம்முடைய வேத வசனங்களை என்னால் மனப்பாடம் செய்ய இயலாது.

ஆண்டவர்:- "உன்னால் கூடும்"

பைரன்:- "தகப்பனே, உம்முடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் என்னில் இல்லை"

ஆண்டவர்:- "உனக்கு அந்த ஆற்றல் நிச்சயமாக உண்டு"

பைரன்:- "அப்பா, நான் விரைவில் மறந்து போகக்கூடியவன்"

ஆண்டவர்:- "நீ படித்தவற்றை திரும்பத் திரும்ப உன் நினைவுக்கு கொண்டு வந்து கொண்டிரு. அப்பொழுது நீ சிறப்பாக தேவனுடைய வார்த்தைகளை மனப்பாடம் செய்து கொள்ளுவாய்"

எங்கள் இருவருடைய வாக்குவாதத்தின் இறுதியில் ஆண்டவரே வெற்றி பெற்றார். அவருடைய ஆலோசனையின்படி தேவ வசனங்களை ஒழுங்கும் கிரமமுமாகப் படித்து, படித்த பகுதிகளை அடிக்கடி திரும்பத் திரும்ப எனது நினைவுக்குக் கொண்டு வந்து எனது நிலையை நான் நன்கு உறுதிப்படுத்திக் கொண்டேன். இப்பொழுது நான் தேவனுடைய அநேக வசனங்களை எனது இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்துக் கொள்ள முடிந்தது. கர்த்தருக்கே மகிமை.

Taken from the book:- (God's Word Unique, Magnetic, Eternal)



Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM