முன்னுரை


"அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப் பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது"
(லூக்கா 19 : 41-42 ) என்றார்.


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

ஆண்டவருடைய அருமைப் பிள்ளைகளாகிய உங்களை தேவ எக்காளத்தின் இந்த இதழின் மூலமாகத் திரும்பவும் சந்திக்க கிருபை செய்த நம் அன்பின் ஆண்டவருக்கு துதி ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கின்றேன். தேவ எக்காளத்தின் 43 ஆம் ஆண்டின் கடைசி இதழான முந்தின தேவ எக்காள இதழ் உங்களில் அநேகருக்கு கர்த்தருக்குள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்ததாக தொலை பேசி மூலமாகவும், கடிதங்கள், இ-மெயில் செய்திகள் மூலமாகவும் எனக்குத் தெரிவித்திருந்தீர்கள். கர்த்தருக்குள் மிகவும் சந்தோசம் அடைந்தேன். அப்படி எனக்குக் கிடைத்த கடிதங்களில் ஒரு சிலவற்றை கர்த்தருக்கு மகிமையாக தேவ பிள்ளைகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்:-

"உங்களுடைய தேவ எக்காளத்தை ஒரு எழுத்துவிடாமல் படித்து முடித்து விட்டு இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். தேவன் என்னோடு இந்த இதழ் மூலம் அதிகமாகப் பேசினார். கிறிஸ்தவ ஊழியர்களும், விசுவாசிகளும் செய்கிற காரியங்களை கண்டு வெகுவாய் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இந்த இதழ் நல்ல ஒரு வழிகாட்டியாக, கர்த்தர் ஒருவரையே நோக்கிப் பார்த்து ஜீவிக்கும்படியாக எச்சரித்தது.

கர்த்தர் தமது கிருபையினாலும், சொல்லி முடியாத பெரிதான இரக்கங்களினாலும் உங்களை சுகப்படுத்தி இமயமலை ஊழியத்திற்கு அழைத்துச் சென்றதை அறிந்து, நம் ஜெபத்திற்கு பதில் கொடுக்கிற தேவனைத் துதிக்கின்றேன். ஐயா, நீங்கள் சுகபெலத்தோடு இருக்க வேண்டும். என் கடைசி மூச்சு விடும் வரை எனக்கு தேவ எக்காளம் வந்து கொண்டிருக்க வேண்டும்" (டாக்டர்.சரோஜா நடராஜன்)

"அன்பின் ஆண்டவர் உங்களுக்கு நல்ல சுக பெலன் தந்து உங்கள் ஊழியத்தை ஆசீர்வதிப்பாராக. தேவ எக்காளம் பத்திரிக்கை எங்கள் வாழ்க்கையை சீர்ப்படுத்த உதவுகிறது. என் கணவரும் உங்களது தேவ எக்காளம் (பழைய மற்றும் புதிய) பத்திரிக்கைகளில் நீங்கள் எழுதியிருக்கும் நல்ல கருத்துக்களை அடிக்கடி சுட்டிக்காட்டுவார்கள்.

Volume 43 நவம்பர் - டிசம்பர் 2010 தேவ எக்காளத்தில் டி.வியை கருப்பு பெட்டி என்றும், "செழிப்பு உபதேசம்" (Doctrine of Prosperity) பற்றிப் பேசும் தேவ ஊழியர்களை கண் ஏறிட்டுக்கூட பார்க்க வேண்டாம், அவர்களைப் பார்ப்பதே பாவம் என்றும் கூறியுள்ள உங்கள் நல்ல கருத்துக்களை வாசித்து பயன் அடைகின்றோம். இத்தகைய நல்ல கருத்துக்கள் தேவ எக்காளம் வாசிக்க பாக்கியம் கிடைக்காத மற்ற கிறிஸ்தவ மக்களிடம் எப்படி போய்ச் சேரும் என்று ஆதங்கம் அடைகின்றோம். அன்பின் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்துக் காப்பாராக. உங்கள் ஊழியத்தின் மூலம் ஆண்டவரின் நாமம் மென்மேலும் மகிமையடைவதாக" (சகோதரி P.ஜெயசீலி ராஜேந்திரன்)

"தேவ எக்காளம் கிடைக்கப் பெற்றேன். அதிக சந்தோசம். உங்களுக்கு தேவன் கொடுத்த சுகத்திற்காக மிகவும் சந்தோசம். தேவன் தாம் உங்களுக்கு நல்ல சுகம், பெலன், நீண்ட ஆயுள் கொடுக்க வேண்டும். இந்தக் காலத்தில் உங்களைப் போல் உண்மையும், உத்தமமுமான தேவ ஊழியக்காரர்கள் மிகவும் குறைவு. தேவ எக்காளத்தைப் போல ஒரு பத்திரிக்கையையும் காண இயலாது. தேவ எக்காளத்தை ஒரு பெரிய பொக்கிஷமாகக் கருதுகின்றேன்" (சகோதரி.சாந்தி கிறிஸ்டோபர்)

"கடந்த தேவ எக்காளம் வந்து கிடைத்தது. அழகான பச்சை அட்டைப் படம் போட்டது. மிகவும் சந்தோசம். அதில் கண்ட பரிசுத்தவான் ஜாண் பிராட் போர்ட் அவர்களின் வாழ்க்கை என்னை மிகவும் கவர்ந்தது. ஆவிக்குரிய வாழ்வில் அந்த பரிசுத்தவானைப் பின்பற்ற தேவன் எனக்கு ஒத்தாசை செய்வார்" (எஸ். இசபெல், தாம்பரம், சென்னை)

“Beloved Brother in Christ, Loving greetings in the mighty and powerful name of our Saviour, who left every Glory in heaven to become like us and to shed that precious blood which reconciled us to our Father.

I finished reading this issue, as said in my previous mail, I like the bound very much. As you said, Deva Ekkalam does not need any attractions. It has treasure in every word that is written in it, and WORD is God. He reveals his glory through that word, living word that sustains us in every way. God has bestowed you with a Holy Style of writing, which is very special to Deva Ekkalam alone. As I was reading how HE took care of you all these years, how well he disigned this ministry for you is in it marvellous? Praise and all glory to His name alone. I am very much blessed and reminded and admonished in my spirit to take care of my walk in this world. Thank you Brother, May you, family and others in this ministry be richly blessed with all spiritual blessings” (Mrs.Shanthi Thomas, Srichakra Nagar, Madurai)

"வால்யூம் 43 , நவம்பர் - டிசம்பர் 2010 தேவ எக்காள இதழ் கிடைக்கப் பெற்றேன். அதை ஒரு கர்த்தருடைய பிள்ளைக்கு வாசிப்பதற்காகக் கொடுத்தேன். அவரை நான் திரும்பவும் ஆலயத்தில் சந்தித்தபோது "தான் எத்தனையோ கிறிஸ்தவ பத்திரிக்கைகளை வாசிப்பதாகவும், தேவ எக்காளம் மற்ற எல்லா பத்திரிக்கைகளையும் விட முற்றும் வித்தியாசமாக தனக்கு காணப்படுவதாகவும், மோட்சம் செல்ல வேண்டுமானால் இடுக்கமான சிலுவைப்பாதையையே இந்த உலகத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அருமையான சத்தியங்கள் தன்னைத் தொடுவதாகவும், தேவ எக்காளத்தில் இன்னும் சில பிரதிகள் தனக்கு வேண்டும்" என்றும் விரும்பிக் கேட்டதாக ஒருசகோதரி எழுதுகின்றார்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை.

தேவனுடைய வீட்டை கள்ளர் குகையாக்கின
பொல்லாங்கனின் புத்திரர்

திருச்சபை வரலாற்றிலேயே யாரும் எக்காலத்தும் கண்டிராத அளவில் தேவனுடைய மாட்சிமையான சுவிசேஷ ஊழியம் இன்று இந்த உலகத்தின் எத்தனையோ விதவிதமான கவர்ச்சி வியாபாரங்களில் ஒன்றாக ஒன்றரக் கலந்துவிட்டது. அன்பின் ஆண்டவருடைய காலமாகிய முதலாம் நுற்றாண்டிலேயே தேவப் பகைஞர் அதை முதல் தரமான வியாபாரமாக்கிக் கள்ளர் குகையாக ஆக்கி வைத்திருந்தனர் (மத் 21 : 13) ஆனால், இன்று தேவ ஊழியம் செல்வம் கொழிக்கும் ஒரு தொழிலாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு எந்த ஒரு தேவ அழைப்புமின்றி பெயர்க் கிறிஸ்தவ மக்களால் மிகவும் துணிச்சலாக எடுத்து உலக ஆதாயத்துக்காக ஒரு உலக வியாபாரமாகச் செய்யப்பட்டு வருகின்றது.

தேவனுடைய திருச்சபையினை கர்த்தருக்கு நேராக வழிநடத்தி திருச்சபையில் தேவனைப்பற்றி அறியும் அறிவையும், பரிசுத்தத்தையும், தேவ அன்பையும் விளங்கப்பண்ணி கர்த்தருடைய நாமத்தை தனது பதவி கால நாட்களில் பரிமளிக்கச் செய்து, சுத்தமான கரங்களோடு ஆண்டவருடைய பரிசுத்த சபையை நிர்வகித்து மகிமைப்படுத்தி உயர்த்த தேவ ஜனங்களால் திருச்சபை தலைவராக (பேராயர்) தெரிவு செய்து கொள்ளப்படுகின்ற மனிதர் தான் தெரிந்து கொள்ளப்பட்டதன் ஒரே நோக்கம் தனது பதவி காலத்தில் தன்னால் முடிந்த அளவு திருச்சபையைக் கொள்ளையிட்டு தனது சந்ததியை கோடீஸ்வரர்களாகவும், செல்வச் சீமான்களாகவும் உருவாக்க தனக்குக் கொடுக்கப்பட்ட பொற்காலம் என்ற ஒரே எண்ணத்தில் பதவி ஏறினதுமே திறந்து கிடந்த சீரியருடைய பாளயத்தின் கூடாரங்களை இஸ்ரவேலர் மனங்குளிர கொள்ளையிட்டது போல திருச்சபையை தீவட்டிக் கொள்ளையடிக்கத் துணிந்து விடுகின்றனரே! எத்தனை பயங்கரம் பாருங்கள்! உலகத்தில் தங்களைத் தட்டிக் கேட்க எவருமே கிடையாது என்ற துணிச்சல் போலும்! "ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள், அவர்கள் கர்த்தரை அறியவில்லை" (1 சாமு 2 : 12) என்ற தேவ வாக்கின்படி கர்த்தரை அறியாத தேவ பகைஞரிடமிருந்து கர்த்தருக்கு மகிமையாக நாம் எதை எதிர்பார்க்க முடியும்? பொல்லாங்கனின் புத்திரரின் காரியங்கள் அப்படியிருக்க தங்களை அழைத்த தங்கள் அன்பின் ஆண்டவருக்காக உண்மையும், உத்தமமுமாக ஊழியம் செய்து தங்கள் நேச கர்த்தரின் சிலுவைக் கொடியை பட்டொளி வீசி பறக்கச் செய்த மேல்நாட்டு மற்றும் நமது இந்திய பக்த சிரோன்மணிகளின் அருமையான தேவ ஊழியங்கள், அவர்களின் பரிசுத்த வரலாறுகள் நம்மை நமது ஆவிக்குள்ளாக குதூகலமடையப் பண்ணுகின்றதே! தொடர்ந்து ஜெபத்தோடு வாசியுங்கள்.

தங்கள் அழகான தேசங்களையும், ஆண்டு முழுவதும் தங்கள் நாட்டில் நிலவும் மனோகரமான சீதோஷ்ண நிலைகளையும், தங்களின் பெற்றோர் உற்றார் உறவினர் யாவரையும் தங்களை தமக்கென ஆட்கொண்ட தங்கள் ஆண்டவர் இயேசுவுக்காக என்றைக்குமாக மறந்து உதறித் தள்ளிவிட்டு நமது பாரத நாட்டின் தென் கடைக்கோடிப் பகுதிகளுக்கு மிஷனரிகளாக வந்த அந்த பரிசுத்த மக்களின் ஆத்தும பாரத்தை என்னவென்று சொல்லுவது? பரிசுத்த மிஷனரி ராக்லாந்து ஐயர் அவர்கள் வைராக்கியமான இந்து கிராமவாசிகளின் வீடுகளில் அவர்களுடைய பாத்திரங்களில் ஆகாரம் மறுக்கப்பட்ட காரணத்திற்காக தனது தொப்பியில் கூழ் வாங்கிக் குடித்து தன்ஆண்டவர் இயேசுவை அந்த மக்களுக்கு அறிவித்தார். இறுதியில் தனது ஆண்டவருக்காக அவர் சிவகாசிப் பகுதியில் இரத்தசாட்சியாக மரித்தார் என்றும் சொல்லப்படுகின்றது.

அயர்லாந்து தேசத்தில் பிறந்த பரிசுத்த மிஷினரி கால்ட்வெல் ஐயர் அவர்கள் நமது தமிழ்நாட்டின் இடையன்குடி என்ற சிற்றூருக்கு வந்தார். 1838 ஆம் ஆண்டு கப்பலில் சென்னை வந்து சேர்ந்த அவர் 400 மைல்கள் தூரம் கால் நடையாகவே நமது தமிழ் நாட்டின் எண்ணற்ற கிராமங்கள் தேவனுடைய மகத்துவமான சுவிசேஷ வாசனையறியமால் பாவ இருளில் மூழ்கிக்கிடப்பதைக் கண்டு துயருற்றவராக நடந்து நடந்து இறுதியில் பனைமரங்கள் சூழ்ந்த வறட்சியான இடையன்குடி வந்து சேர்ந்தார். கோடை காலத்தில் இடையன்குடி கிராமம் கொடிய வெப்பமுடையதாக விளங்கியதால் இந்தக் கொடிய வெப்பத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள செம்மண் தேரியில் ஆழமாக பள்ளம் தோட்டி அதில் தண்ணீரை நிரப்பி அந்த செயற்கை சுனையில் தனது உடல் வெப்பத்தை தணித்துக் கொண்டார் என்று சொல்லப்படுகின்றது. அந்த பரிசுத்த மிஷனரி தனது நாட்டிலிருந்து இந்தியாவிலுள்ள சென்னை வந்து அங்கிருந்து திருநெல்வேலி செல்லு முன்னர் சுமார் 400 கிறிஸ்தவர்கள் மட்டும்தான் அங்கு வாழ்ந்தார்களாம். அவருடைய வரவுக்குப் பின்னர் அவர் செய்த தேவ ஊழியம் மற்றும் சமூகப்பணிகள் காரணமாக சில ஆண்டுகளில் ஒரு இலட்சம் கிறிஸ்தவர்களாக அந்த எண்ணிக்கை உயர்ந்தது என்றும் சொல்லப் படுகின்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மெய்ஞ்ஞானபுரம் என்ற ஊருக்கு வந்த பரிசுத்த மிஷனரி ஜாண் தாமஸ் ஐயர் அவர்கள் அந்தக் கிராமத்தில் அநேக இந்து மக்களை ஆண்டவருக்குள் வழிநடத்தி பையன்கள், பெண் பிள்ளைகளுக்கு தனித்தனியே பள்ளிகளை நிறுவி, அவர்கள் வசதியாக தங்கிப் படிக்க நல்ல ஹாஸ்டல் வசதிகளை உருவாக்கி, மிஷன் ஆஸ்பத்திரியை ஏற்படுத்தி அந்த ஊரில் மிக அழகான கிறிஸ்தவ தேவ ஆலயத்தையும் கர்த்தருக்கு மகிமையாக கட்டி எழுப்பினார்கள்.

தாமஸ் ஐயர் அவர்கள் நாட்களில் பனை மரங்கள் நிறைந்த அந்த ஊரில் பனை ஏற்றுத் தொழிலைக் கொண்டிருந்த தேவ பக்தியுள்ள கிறிஸ்தவ பனை ஏறிகள் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளில் பனை மரம் ஏறமாட்டார்கள் என்றும், பதனீர் இறக்கமாட்டார்கள் என்றும் சொல்லப்படுகின்றது. சனிக்கிழமை பனை ஏறினதன் பின்னர் திங்கள் கிழமைதான் அவர்கள் பனை ஏறுவார்கள். "என்னை கனம் பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்" (1 சாமு 2 : 30) என்ற கர்த்தருடைய வார்த்தைக்கு இணங்க அந்த கிறிஸ்தவ மக்களை ஆண்டவர் ஆசீர்வதித்து திங்கள் கிழமை இரட்டிப்பான பதனீரை அவர்கள் இறக்க கர்த்தரும் உதவி செய்தார் என்று சொல்லப்படுகின்றது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

பனை ஏறும் தேவ பக்தியுள்ள கிறிஸ்தவ பனை ஏறிகள் தங்கள் அரையில் தொங்குகின்ற குடுவைப் பெட்டியில் தங்கள் கூரிய அரிவாள், கலயத்தில் சுண்ணாம்பு தடவும் பாளையுடன் தங்கள் பரிசுத்த வேதாகமத்தையும் பத்திரமாக வைத்திருப்பார்கள். கர்த்தரைத் தேட வேண்டும் என்ற தாகம் எழுந்த உடன் தங்கள் வேதாகமத்தை எடுத்து பனை மரத்தின் உச்சியில் பனை ஓலைகளுக்குள்ளாக வசதியாக அமர்ந்தவாறே வேதத்தை வாசித்து தியானிக்கத் தொடங்கிவிடுவார்களாம். அந்த பக்தி வாழ்க்கையானது அவர்களை போதையைக் கொடுக்கக்கூடிய "கள்" என்ற மதுவை அவர்கள் ஒருக்காலும் தாங்கள் ஏறும் பனை மரத்திலிருந்து இறக்க அனுமதிக்கவில்லை. தாங்கள் இறக்கிய பதனீரில் கருப்புகட்டி தயாரித்த அந்த கிறிஸ்தவ பக்தர்கள் பூமியில் துணியை விரித்து துணிக்கு மேல் சிரட்டைகளை வைத்து கருப்புகட்டி செய்தார்கள். காரணம், சிரட்டையின் கீழ் உள்ள துவாரத்தின் வழியாக மண்ணானது கருப்புக்கட்டியினுள் வந்துவிடக்கூடாது என்று அவர்கள் அஞ்சினார்கள். ஆனால், இந்த நாட்களில் பெரிய கல்லையே சிரட்டைக்குள் வைத்து அதின் மேல் கூப்பனி பாகை ஊற்றி கருப்புக்கட்டி செய்கின்றார்கள் என்றும் கருப்புகட்டி விலையைவிட சீனி விலை குறைவாக இருப்பதால் கருப்புகட்டியுடன் சீனி தாராளமாக கலக்கப்படுகின்றது என்றும், பனை ஏற்றக்காலங்களில் லாரிக்கணக்கில் சீனி மூட்டைகள் பனை மரங்களுள்ள பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றது என்றும் சொல்லப்படுகின்றது. ஆம், அவர்கள் பொல்லாங்கனின் புத்திரர். ஆனால் நமது பரிசுத்த மிஷனரிகள் அந்த நாட்களில் அத்தனை பரிசுத்தமான, தேவதா பக்தியுள்ள கிறிஸ்தவ பனை ஏற்றத் தொழிலாளர்களை கர்த்தருடைய நாமத்திற்கு மகிமையாக தேவ பெலத்தால் உருவாக்கிக் கொடுத்தார்கள். அதுவேதான் கர்த்தர் விரும்பும் கிறிஸ்தவ ஊழியம்.

பரிசுத்த மிஷனரிகள் சுவார்ட்ஸ் ஐயர், உவாக்கர் ஐயர், கிளார்க் ஐயர், பிஷப் உவாலர், ஸ்டூவார்ட் ஐயர், டாக்டர் எடி, ஏமி கார்மைக்கேல் அம்மையார், அவர்களைச் சேர்ந்த ஆங்கில கிறிஸ்தவ சகோதரிகள் போன்றவர்கள் தமிழ் கிராமங்களில் கர்த்தருக்காகச் செய்த ஊழியங்கள் எவ்வளவோ உண்டு. அவர்களுடன் சென்னை ராயபுரத்தின் புகழ்பெற்ற பரிசுத்த குருவானர் பரமானந்தம் ஐயர், மற்றும் ஞானாயுதம் பிரசங்கியார் போன்றவர்கள் சேர்ந்து அந்த நாட்களில் திருச்சபையில் ஒரு பலத்த உயிர்மீட்சியையே கொண்டு வந்தார்கள். பரமானந்தம் ஐயர் அவர்கள் அந்த நாட்களில் தங்கள் ஊழியங்களில் நடந்த பரவசமான அனுபவங்களை இப்படி விவரிக்கின்றார்கள்:-

கைலாசபுரம் ஆலயத்தில் நாங்கள் கூட்டங்களை நடத்தினோம். கனம் உவாக்கர் ஐயரும், கனம் ஞானாயுதம் பிரசங்கியாரும் நானும் மாறி மாறிப் பிரசங்கித்தோம். ஒரு இரவு நான் மனந்திரும்புதலைப் பற்றி ஆவியின் பலத்தோடு பேசினேன். கொர்நெலியுவின் வீட்டில் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில் ஆவியானவர் இறங்கினது போல நடுப் பிரசங்கத்தில் ஆண்கள் பாவ உணர்வடைந்து ஆசனங்களிலிருந்து முகம் குப்புற விழுந்தார்கள். பெண்கள் இருந்த பக்கத்திலுமிருந்தும் பெண்கள் கீழே சாய்ந்தார்கள். கனம் உவாக்கர் ஐயர் எழுந்து என்னிடம் வந்து "சகோதரனே, கர்த்தர் கிரியை செய்ய ஆரம்பித்து விட்டார். உங்கள் பிரசங்கத்தை நிறுத்துங்கள் என்று சொல்லி, விழுந்து, அழுது புலம்பிக் கொண்டிருந்தவர்களிடம் போய்ப் பேசி ஆறுதல் படுத்தினார்கள். அதுபோலவே டோனாவூர் ஏமி கார்மிக்கேல் அம்மையாரும் ஸ்திரீகள் பக்கம் போய் பேசி தைரியப்படுத்தினார்கள். இது நடந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபோதினும் அந்தக் காட்சி என் கண்களுக்கு மறையவே இல்லை.

திருநெல்வேலியில் சாத்தான்குளத்திற்குப்போய் அங்குள்ள ஆலயத்தில் சபையாருக்கு கூட்டங்கள் நடத்தினோம். வெறும் பிரசங்கங்கள் அல்ல. சபையார் பாவ உணர்வடைந்து மனந்திரும்ப வேண்டுமென்பதே எங்கள் நோக்கம். ஒரு இரவு கனம் உவாக்கர் ஐயர் பேசினார்கள். பிரசங்கம் முடியும் சமயமுமாயிற்று. சபையாருக்குள் பாவ உணர்ச்சி தோன்றவில்லை. ஐயரவர்கள் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டே பேசுவது வழக்கம். சகோதரன் ஞானாயுதம் பிரசங்கியாரும் நானும் பிரசங்க பீடத்தண்டையில் உட்கார்ந்து நிலைமையைக் கவனித்தோம். கனம் ஐயரவர்கள் பேசிக்கொண்டே பின்னாக வந்து, என் தலையைத் தொட்டு, பிரசங்கத்தை முடியுங்கள் என்றார்கள். நான் உடனே எழுந்து நின்று, அவர்கள் பேசின விஷயத்தையே தொடர்ந்து ஊக்கமாகப் பேசினேன். ஆவியானவர் கிரியை செய்தார். சில நிமிடங்களில் சபையார் பாவ உணர்வடைந்து வேண்டிக்கொண்டார்கள். ஒரு பலத்த உயிர் மீட்சி உண்டானது.

கொழும்பில் ஒரு ஆலயத்தில் நான் பிரசங்கித்தபோது பாவ வழி சென்று பலரையும் கெடுத்த ஒரு மனுஷனைத் திருஷ்டாந்தமாகச் சொன்னேன். ஆவியானவரின் கிரியையை அப்பொழுது உணர்ந்தேன். ஆண்கள் பக்கத்தில் கடைசி ஆசனத்தில், தேயிலைத் தோட்டத்துக் கண்காணி ஒருவர் இருந்தார். அவர் உயரமானவர், தேக பலமுள்ளவர். பிரசங்கத்தைக் கவனித்துக் கொண்டிருந்த போதே, அவர் உள்ளத்தில் ஆவியானவர் கிரியை செய்ததால் "ஐயோ, நானே அந்தப் பாவியான மனுஷன்" என்று சொல்லி, தன் மார்பில் அடித்துக் கொண்டு, சபையார் மத்தியில் வந்து கீழே விழுந்தார். அன்றிரவு அநேகர் பாவ உணர்வடைந்தார்கள். வேறொரு சமயம் கொழும்பிலுள்ள ஒரு ஆலயத்தில் நான் பிரசங்கித்தேன். நடுப் பிரசங்கத்தில் சர்க்கார் உத்தியோகஸ்தன் ஒருவர் ஆசனம் விட்டெழுந்து எனக்கு நேரே நடந்து வந்தார். அவர் குருவானவருடைய அறையின் பக்கமாகப் போகிறார் என்று நினைத்தேன். அவரோ நான் நின்ற மேடையில் ஏறி என்னைக் கட்டி அணைத்து முத்தமிட்டார். பிரசங்கத்தை நான் நிறுத்தாமல் பேசிக்கொண்டே போனேன். அன்றிரவு அநேகர் தங்களைத் தாழ்த்தி கர்த்தருடைய இரக்கத்திற்காக கெஞ்சினார்கள். அவர் பிரசங்க பீடத்தில் ஏறி வந்து என்னை முத்தமிட்டது கூடி வந்த ஜனங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆராதனை முடிந்த பின்னர் நான் அவரைக் கேட்டபோது : "என் உள்ளம் பரவசமடைந்தது. என்னையே நான் மறந்து அப்படிச் செய்தேன்" என்றார். கர்த்தருக்கே மகிமை.

1905 ஆம் ஆண்டில் கண்டியில் (ஸ்ரீலங்காவில்) ஒரு கன்வென்ஷன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அங்கே பிரசங்கிக்கும்படி கனம் உவாக்கர் ஐயரும், டாக்டர் எடியும், நானுமாகப் போயிருந்தோம். கொழும்பிலுள்ள தேவ ஊழியர்களும் சபையில் உள்ளவர்களும் அங்கே வந்திருந்தார்கள். வந்திருந்தவர்களில் ஒரு சகோதரியைப் பற்றி குருமார் கவலை கொண்டார்கள். அழகும், ஆஸ்தியுமுள்ள அந்த அம்மாள் பாவ வழியில் துணிந்து நடந்தார்கள். ஆண்டவர் அந்த ஆத்துமாவை இரட்சிக்க வேண்டுமென்று ஜெபித்தார்கள். அதைப் பற்றி அவர்கள் எனக்கு ஒன்றும் சொல்லவில்லை. மூன்றாம் நாள் நான் பேசினபோது ஆவியானவர் அந்த சகோதரியைப் பிடித்து உணர்த்தினார். அதைச் சகிக்க முடியாமல் அவர்கள் எழுந்து ஓடி தன் பாவங்களை உணர்ந்து கதறி அழுதார்கள். அருமை இரட்சகர் அந்த ஏழைப் பாவிக்கு இரங்கினார். அந்த அம்மாள் ஆசீர்வாதம் பெற்றுக் கர்த்தரைத் துதித்தார்கள். இதைக் கண்ணாலே கண்ட கனம் ஜெ.வி.தானியேல் ஐயரும், மற்ற குருமாரும் என்னிடம் வந்து நடந்ததைச் சொல்லி தேவனைத் துதித்தார்கள்.

ஒரு சமயம் சென்னையில் கிண்டியிலுள்ள காந்தி மண்டபத்தில் ஒரு பெரிய வெள்ளிக் கிழமை மாலையில் என்னைப் பேசும்படி கேட்டார்கள். கர்த்தருடைய கிருபையினால் அழைப்பை ஏற்றுக்கொண்டு அங்கே போனேன். அது எல்லா மதத்தினருக்கும் பொதுவான ஒரு கூட்டமாக இருந்தது. அந்தக் கூட்டத்திற்கு அப்பொழுது தமிழ் நாட்டு கவர்னராக இருந்த கவர்னர் ஸ்ரீபிரகாசா அவர்கள் தலைமை வகித்தார். சர்க்கார் உத்தியோகஸ்தர்களும், மேலான அந்தஸ்துள்ளவர்களும், பிரபலமான சினிமா நடிகர், நடிகைகளும், சங்கீத வித்துவான்களும், பற்பல சபைகளில் உள்ளவர்களும் அந்த மைதானத்தில் கூடியிருந்த காட்சி எனக்குப் பரவசமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஆச்சரிய அற்புதமான சந்தர்ப்பத்தை எனக்குத் தந்த அன்பின் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி கவர்னர் ஸ்ரீபிரகாசாவுக்கு அருகிலிருந்த ஆசனத்தில் உட்கார்ந்திருந்தேன். கவர்னருக்கு அருகில் அடுத்த பக்கத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் சக்ரவர்த்தி கனம் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அமர்ந்திருந்தார்கள். சகல மார்க்கத்தாரும், அந்தஸ்துள்ளவர்களுமான புருஷர் ஸ்திரீகள் திரளாகக் கூடி வந்த அப்பேர்ப்பட்ட கூட்டத்தில் நான் இதற்கு முன் ஒருபோதும் பேசினதில்லை. பேச வேண்டிய விஷயத்திற்காக ஆண்டவரை நோக்கிப் பார்த்து வசனத்தை தெரிந்து கொண்டேன். "கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்" (மத் 22 : 42) என்பதே பிரசங்க வாக்கியம். அங்கு கூடிவந்திருந்த அனைவரையும் பார்த்துக் கேட்கும் ஒரு கேள்வியாக அது அமைந்திருந்தது. கிறிஸ்து இரட்சகரின் பிறப்பு, ஜீவியம், உபதேசம், கிரியைகள், மரணம், உயிர்த்தெழுதல், மகிமையடைதல் இவை யாவற்றிலும் அவர் ஒப்பற்ற இரட்சகர் என்றும், உலகில் ஒருவரையாவது அவரோடு ஒப்பிடமுடியாது என்றும், ஆகையால் "எம்மதமும் சம்மதம்" என்று சொல்ல முடியாதென்றும் ஆண்டவர் அவ்வேளை எனக்கு அருளிய வல்லமையோடும், ஊக்கத்தோடும் பேசினேன். ஜனங்கள் அருமையாகக் கவனித்தார்கள்.

கூட்டம் முடிந்தவுடன் கவர்னர் பிரகாசா அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு "மிஸ்டர் பரமானந்தம் அடுத்த வருஷம் பெரிய வெள்ளிக்கிழமை மாலையில் இதே மண்டபத்தில் இதுபோன்ற கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன். நீங்கள் வந்து பேசுவீர்களா?" என்று கேட்டார்கள். அப்படியே செய்கிறேன் ஐயா என்றேன். இதற்கிடையில் அவர்கள் பம்பாய் நகரத்திற்கு கவர்னராக மாற்றப்பட்டுப் போய்விட்டார்கள்.

அன்பின் ஆண்டவர் தமது பரிசுத்த அடியார்களை தமது நாம மகிமைக்காக தென் இந்தியாவின் தென் மாநிலங்களில் பயன்படுத்தியது போல வட மாநிலங்களில் பயன்படுத்திய பாத்திரங்களில் மகாத்துமா சாது சுந்தர்சிங்கிற்கு அடுத்தபடியாக சகோதரன் பக்தசிங் முக்கியமானவர் ஆவார். வைராக்கியமான இந்து சீக்கிய குலத்தவரான அவர் ஆண்டவர் இயேசுவின் அடியானான போது சகோதரன் பக்தசிங் என்ற பெயரில் மட்டுமே அவர் அழைக்கப்பட்டார். அந்த நாட்களில் மேல் நாடு சென்று பொறியியல் கல்வி கற்று பொறியியல் வல்லூநராக விளங்கிய அவர் தன்னை ஆட்கொண்ட தன் இரட்சகருக்காக தனது செல்வந்தமான குலம், கோத்திரம், ஆஸ்தி, ஐசுவரியம், பட்டம் படிப்பு அனைத்தையும் துறந்து தேவனுடைய மாட்சிமையான சுவிசேஷத்தை கரத்தில் எடுத்து அதைப் பிரசங்கிப்பதற்காக களம் இறங்கினார். உலகம் முழுவதிலும் அவருக்கு சபைகள் இருந்த போதினும் அந்த தேவ மனிதர் மிகவும் ஏழை கோலமாகவே வாழ்ந்து எல்லா தேவ மக்களாலும் "சகோதரன் பக்தசிங்" என்றே அன்பொழுக அழைக்கப்பட்டார்.

அன்பின் ஆண்டவர் தம்முடைய பரிசுத்த நாம மகிமைக்காக அவரை பயன்படுத்தின அநேக அனுபவங்களில் ஒரு சிலவற்றை நாம் பார்ப்போம்:-

பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல
என்னுடைய ஆவியினாலே ஆகும்

1933 ஆம் ஆண்டு இந்தியாவில் நான் என் ஊழியத்தைச் செய்ய துவங்கின பொழுது நான் எங்கும் சென்று சுவிசேஷத்தை அறிவிப்பது, என் முழு நேரத்தையும் தேவனுக்கென்று செலவழிப்பதின் மூலமாய் எப்படி தேவனைப் பிரியப்படுத்தலாமென்று நினைத்தேன். சுவிசேஷங்களாலும், துண்டுப்பிரதிகளாலும் என் தோள் பையை நிரப்பிக் கொண்டு என் கைகளிலும் புத்தகங்களை ஏந்தியவனாக காலை முதல் கடை கடையாக, தெருத் தெருவாகச் சென்று அவைகளை ஒவ்வொருவருக்கும் இலவசமாக வழங்கி வந்ததேன். ஒவ்வொரு நாளும் இரு முறை தெரு வீதிகளில் பிரசங்கங்களும், ஒவ்வொரு மாலையிலும் வீடுகளில் கூட்டங்களும் நடத்தினேன். இவ்விதமாய் நான் கடினமாக உழைத்தேன். ஆறு மாதங்கள் இவ்வண்ணமாய்க் கழிந்தன. ஆனால் ஒரு பலனையும் நான் காணவில்லை. நான் என் கடமையை நிறைவேற்றி வருவதாக எண்ணி என்னைத் தேற்றிக் கொண்டேன். இக்கடமையைச் செய்வதில் அநேக தரம் நான் என் ஆகாரத்தை மறந்ததுண்டு. முடிவாக ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடைந்தேன். ஆவிக்குரிய பிரகாரம் நான் வளரவில்லை. அப்பொழுது நான் "தேவனே, என்னிடத்தில் என்ன தவறு இருக்கிறது?" என்று நான் ஜெபித்த போது, என் சொந்த பலத்தினாலும், ஞானத்தினாலும் நான் அவருக்கு ஊழியம்செய்கிறேனென்றும், அதினால் என் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறேன் என்றும் தேவன் எனக்குக் காண்பித்தார். நான் வெளியே போய் ஊழியம் செய்கிறதினால் தேவனோடு நான் செலவிடுகின்ற என் காலை மாலை அமைதி ஜெப நேரத்தை எவ்வளவாய் நான் குறைத்துவிட்டேன் என்பதையும் அவர் எனக்குச் சுட்டிக் காண்பித்தார். என்னுடைய நிர்விசாரத்திற்காக நான் ஆண்டவரிடம் மன்னிப்புக் கோரி, இனி வெளியே போகு முன்பு தேவனுடைய ஆலோசனை, ஒழுங்குக்காக முதலாவது அவரிடம் காத்திருப்பது என்று தீர்மானம் பண்ணினேன். எனது ஊழியங்களில் கனி காண வாஞ்சித்தேன்.

இதற்குப் பின்பு மூன்று மணி நேரம் ஜெபம் பண்ணின பொழுது நான் போர் வீரர்களின் கடை வீதிக்குச் செல்ல (Soldiers Bazaar) வேண்டுமென்று தேவன் என்னிடம் பேசினார். பின்பு நான் என்னுடைய நண்பர்களை அழைத்து அந்நாளின் ஒழுங்கை தேவன் நமக்குத் தந்திருக்கின்றார் என்றும், அந்நாளில் நாம் யாவரும் போர்வீரர்களின் கடைவீதிக்குப் போகவேண்டுமென்றும் சொன்னேன். அவர்களோ "இங்கிருந்து அந்த இடம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறதென்று உமக்குத் தெரியுமா? நான்கு மைல்களுக்கு அப்பால் அந்த இடம் உள்ளதே! இப்பொழுது மணி 10 ஆகின்றது. கடும் வெயிலாயிற்றே! நாளைக்குப் போகலாம்" என்று என்னுடன் தர்க்கம் செய்தார்கள். நானோ "இல்லை, இல்லை இப்பொழுதே நாம் போகவேண்டுமென்று தேவன் என்னிடம் சொன்னார். போர்வீரர்களின் கடை வீதியில் யாரோ ஒருவர் கர்த்தருடைய வார்த்தைக்காகக் காத்திருக்கின்றார்" என்று நான் சொன்னேன்.

அந்நாட்களில் போவதற்கு பஸ்கள் கிடையாது. ஆகையால் நாங்கள் ஒன்றரை மணி நேரம் நடந்து அந்த இடத்தை வந்து சேர்ந்தோம். அங்கு நாங்கள் திறந்த வெளியில் பாடிப் பிரசங்கிக்க ஆரம்பித்தோம். அந்தச் சமயம் தன் கடையை விட்டு ஒரு மனிதன் வெளியே வந்து எங்களை நோக்கி "நான் ஒரு முகமதியன். இந்தக் கடை என்னுடையது. இதற்கு முன்பாக கிறிஸ்தவர்களாகிய நீங்கள் நின்று பிரசங்கிக்க நான் அனுமதிக்கமாட்டேன்" என்று சொன்னான். ஆனால் நானோ "ஆண்டவர் இயேசுவை ஏற்றுக் கொள்ள எந்தவிதமான வற்புறுத்துதலும் கிடையாது. ஆனால், நீ அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துத் தள்ளிப்போட்டால் நியாயத்தீர்ப்பின் நாளிலே தேவனுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும்" என்று பதிலளித்தேன். பின்பு இன்னொரு இடத்துக்குப் போய் அங்கு பாட்டுப்பாடி பிரசங்கிக்க ஆரம்பித்தோம். அப்பொழுது போலீஸ் சேவகன் ஒருவன் அங்கு வந்தான். அங்கு நின்று பிரசங்கிக்க அவனும் இடம் தர மறுத்து விட்டான்.

அப்பொழுது நான் ஆண்டவரை நோக்கி "தேவனே, நீர் எங்களை இந்த போர்வீரர்களின் கடை வீதிக்கு அனுப்பினீரே, ஆனால் இங்கு ஒருவராவது எங்களை விரும்பவில்லையே" என்று ஜெபித்தேன். "நீங்கள் இன்னும் தள்ளிப் போங்கள்" என்று ஆண்டவர் மறுபடியும் சொன்னார். அப்படியே நாங்கள் சிறிது தள்ளிப்போய்ப் பிரசங்கித்தோம். அந்தச் சமயம் பாஞ்சாலத்தை சேர்ந்த கல்லூரி பட்டதாரியான ஒரு இந்து வாலிபன் என்னிடம் வந்தான். அவனிடம் பேசியதிலிருந்து அவன் கடந்த நான்கு ஆண்டு காலங்களாகச் சமாதானத்தைத் தேடி அலைந்தும், இந்தியாவின் பல புண்ணிய ஸ்தலங்களுக்கு யாத்திரைகள் சென்று ஏமாற்றம் அடைந்துள்ளான் என அறிந்தேன். "மெய்யாகவே எனக்கு உதவியளிக்கக்கூடிய ஒரு நல்ல கிறிஸ்தவரை நான் சந்திக்க வாஞ்சிக்கின்றேன் என்று நேற்றுத்தான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன். கடவுள்தான் உங்களை இன்றைக்கு இங்கே அனுப்பி வைத்திருக்கின்றார் என்று நான் நம்புகின்றேன்" என்று அவன் கூறினான்.

இவ்வண்ணமாக ஒவ்வொரு நாளும் சீக்கியர்கள், இந்துக்கள், முகமதியர் மத்தியில் ஒன்றல்ல அநேக ஆத்துமாக்களைக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்தார். இந்தவிதமாக தேவன் எனக்குக் கனியைக் காண உதவினார்.

நமது பணத்தை செலவழிப்பதில் கூட இதே ஒழுங்கு முறை தானுள்ளது. நம் பணத்தை நாம் தவறாகப் பயன்படுத்துகிறோமா?

முன்நாட்களில் நான் என் பையில் சில்லறைக் காசுகளை கொண்டு போவதுண்டு. ஏனென்றால் என்னிடத்தில் கேட்கிறவர்கள் எவருக்கும் பணம் கொடுப்பது எனக்கு வழக்கமாக இருந்தது. ஆனால் ஒரு நாள் வழக்கம்போல நான் பணம் கொடுத்த சமயத்தில் தேவன் என்னைப் பார்த்து "இது உன் பணம் அன்று. அது என்னுடையது, என் பணத்தை செலவழிக்க நீ யார்?" என்றார். அந்நாளிலிருந்து தேவனுடைய அனுமதியின்றி ஒரு காசு கூடச் செலவளிப்பதில்லை எனத் தீர்மானித்தேன்.

உங்கள் நேரமும், பணமும் தேவனுக்குச் சொந்தமானவை. பணத்தை எனக்குச் சொந்தமானதாக நான் ஒரு நாளும் கருதுகிறதில்லை. அதை நான் செலவழிப்பதில் தேவனுக்கு ஒரு நோக்கமிருக்கிறது என்று எனக்கு நிச்சயமேற்படுமட்டும் நான் ஒன்றும் வாங்குவதில்லை. ஒன்று எனக்கு ஞாபகம் வருகிறது. அதாவது நான் அமெரிக்காவிலிருந்த ஒரு சமயம் என் முடியை வெட்ட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு வேண்டிய பணமும் என் வசம் ஆயத்தமாக இருந்தது. ஆனால் நான் என் தலை முடியை வெட்டிக் கொள்ளுவதற்கான சுயாதீனத்தை தேவன் எனக்குக் கொடுக்கவே இல்லை. மூன்று வாரங்களாக நான் அதற்காக ஜெபித்தேன். அந்தச்சமயத்தில் என் தலை முடி நீளமாக வளர்ந்து விட்டது.

பின்பு நான் அமெரிக்காவிலுள்ள மினியாபோலீஸ் (Minneapolis) என்னுமிடத்திற்கு வந்தேன். அப்பொழுது நான் தங்கியிருந்த இடத்திற்குக் கீழேயுள்ள முடி திருத்தகத்திற்குச் சென்று என் தலை முடியை வெட்டிக் கொள்ள ஆண்டவர் என்னிடம் சொன்னார். அவ்வாறே அங்குள்ள நாவிதர் என் முடியைத் திருத்திக் கொண்டிருக்கும்பொழுது நான் அவரைப் பார்த்து "திரு புரூஸ் (Bruce) "நான் மறுபடியும் பிறந்திருக்கின்றேன்" என்று உம்மால் சொல்ல முடியுமா?" என்று நான் அவரைக் கேட்டேன். அப்பொழுது அவர் என்னைப் பார்த்து "இல்லை, ஆனால் நான் மறுபடியும் பிறக்க விரும்புகின்றேன்" என்று பதில் சொன்னார். முடியைத் திருத்தி முடித்த பின்பு என்னுடைய வேதாகமத்தை எடுத்து அதிலிருந்து மறுபடியும் பிறக்கும் வழியை நான் அவருக்கு விவரித்துக் காட்டினேன். பின்னர் அவர் முழங்கால்படியிட்டு ஆண்டவரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். முடிவிலே நான் அவருக்கு முடிவெட்டக் கொடுக்க வேண்டிய கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். இப்படியாகக் கர்த்தர் எனக்கு ஒரு நல்ல முடி அலங்காரம் தந்தது மாத்திரமல்லாமல், அந்த நாவிதரை ஆண்டவரண்டை வழிநடத்தும் சிலாக்கியத்தையும் அருளிச் செய்தார். தேவனுடைய வார்த்தையின்படி நம்முடைய காலத்தைக் குறித்தும் நம்முடைய பணத்தைக் குறித்தும் தேவனுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியவர்களாயிருக்கிறோம் என்று நான் நம்புகின்றேன்.

பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட
ஆவியானவரின் பலத்த அசைவு

பஞ்சாப் மாநிலத்தில் ஏழு இடங்களில் நிகழ்ந்த ஆவியானவருடைய ஒரு பலத்த அசைவுக்கு 1936ம் வருடம் ஒரு துவக்க ஆண்டாக இருந்தது. இந்த எழுப்புதலின் அசைவு முதலாவது பதான்கோட் (Pathankot) என்னுமிடத்தில் ஆரம்பித்தது. பதான்கோட்டில் ஐந்து கூட்டங்கள் நடத்தும்படி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனக்கு அவ்வளவு உடல் நலமில்லை என்றாலும் கூட்டங்கள் நடத்த ஒத்துக் கொண்டேன். எனக்குக் காய்ச்சலும், தலைவலியும், இருமலும் இருந்தது. அந்த இரவில் என்னுடைய அறைக்கு நான் வந்த சமயத்தில் அதிகக் களைப்படைந்தவனாகவும், சுகமில்லாதவனாகவும் இருந்தேன். ஆதலால் அதிக நேரம் ஜெபம் செய்யாமல் தூங்கிவிட்டேன். நடு இராத்திரியில் யாரோ என்னுடைய அறையின் கதவைத் தட்டுகிறதைத் தெளிவாகக் கேட்டேன். தட்டுகிற இந்த சத்தத்தை மூன்று வித்தியாசமான சமயங்களில் நான் கேட்டேன். ஆனால் நான் கூப்பிட்ட சமயத்தில் யாரும் எனக்குப் பதில் தரவில்லை. இதன்பின்பு "ஆண்டவரே, இது என்ன காரியம் என்று எனக்குச் சொல்லும்" என்று ஜெபிக்க வேண்டுமெனத் தோன்றிற்று. அப்பொழுது ஆண்டவர் "எழுந்திருந்து ஜெபம்பண்ணு" என்று தெளிவாக எனக்குப் பதில் சொன்னார். எனக்கோ அதிக களைப்பு, என்றாலும் எழுந்திருந்து ஜெபம் பண்ணினேன். இவ்விதமாக ஐந்து இரவுகள் நடந்தது. ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம் கூட்டத்திற்குப் பின்பு மக்கள் தங்கள் வீடுகளுக்குப் போகப் புறப்பட்ட சமயத்தில் நான் அவர்களை நோக்கி "சாட்சி கொடுக்க வேண்டுமென்று விரும்புகிற யாரோ ஒருவர் இங்கே உண்டு என்று நான் நம்புகின்றேன். தேவன் உங்களோடு பேசி இருப்பாரானால் அதைப்பற்றிச் சொல்லத் தாராளமாக முன் வாருங்கள்" என்று அழைத்தேன். அப்பொழுது 10 வயதுள்ள ஒரு சிறுமி எழுந்து "கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னைச் சந்தித்தார். அவரே என்னை மாற்றினார். என் பாவங்களை அவரே எனக்கு மன்னித்தார்" என்று வெகு தெளிவாகவும் சுருக்கமாகவும் சொன்னாள். பின்பு இரண்டாவது ஒரு பெண், மூன்றாவது ஒரு பெண், இப்படியாக அதே வயதுள்ள சுமார் 10 பெண்கள் அவர்களுடைய பாவங்களைத் தேவன் எவ்வண்ணமாக வெளிப்படுத்தினாரென்றும், பாவ மன்னிப்பைப் பற்றி அவர்கள் எவ்விதமாக நிச்சயப்படுத்தப்பட்டார்கள் என்றும் சாட்சியாய்ச் சொன்னார்கள். இவர்கள் யாவரும் சமீபத்திலிருந்த ஒரு பெண்கள் பாடசாலையிலிருந்து வந்தவர்கள்.

இந்தப் பெண்கள் பள்ளியிலுள்ள ஒரு ஆசிரியை என்னைப் பார்த்து "சகோதரனே, இது நம்புதற்கரியது! இந்த ஆசீர்வாதம் தொடர்ந்து அருளப்படும்படி தயவாய் ஜெபம்பண்ணுவீர்களா?" என்று கேட்டார்கள். நாங்கள் ஜெபம்பண்ண ஆரம்பித்த போது ஒரு தோல் சாட்டையால் ஜனங்கள் அடிபடுவது போலக் காணப்பட்டார்கள். ஏனென்றால் அவர்களில் சிலர் தேவனுடைய இரக்கத்திற்காகக் கண்ணீர் விட்டு கதறி அழுதார்கள். மற்றவர்கள் நடுங்கிக் கொண்டு நாற்காலிகளுக்கும் பெஞ்சுகளுக்கும் அடியில் ஒளிந்து கொண்டார்கள். இவற்றிற்குக் காரணம் ஜனங்கள் பாவ உணர்வால் ஆட்கொள்ளப்பட்டதே.

சில மணி நேரம் இப்படி நடந்து கொண்டிருந்தது. பின்பு "மறுபடியும் பிறவாதவர்கள் எத்தனை பேர் இங்கு இருக்கிறார்கள்?" என்று நான் கேட்டேன். சுமார் முப்பது நாற்பது கைகள் மேலே சென்றன. "நீங்கள் அனைவரும் மறுபடியும் பிறக்கும் வரையிலும் நாம் வீட்டுக்குப் போகப்போவதில்லை" என்று சொன்னேன். விடியற்காலை மூன்று மணி வரையிலும் நாங்கள் ஜெபித்துக் கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தோம். இந்தக் கூட்டம் முந்தின நாள் பிற்பகல் நான்கு மணித்து ஆரம்பமானது. காலைக்குள்ளாக மற்றவர்களும் தங்கள் பிரகாசமான முகங்களோடு தேவன் அவர்களுக்கு என்ன செய்தார் என்பதைக் குறித்துச் சாட்சி கொடுக்க ஆரம்பித்தார்கள்.

இதுவே எழுப்புதலின் ஆரம்பம். பின்பு பாதமாலு, சியால்கோட், மாண்ட்கோமரி, சர்கோதா என்ற இடங்களில் தேவன் தொடர்ந்து வல்லமையோடு கிரியை செய்தார். இதன் பின்பு பாஞ்சாலத்திலுள்ள யங்ஷனாபாத் என்னுமிடத்தில் ஆறு நாட்கள் கூட்டம் நடத்தினேன்.

இந்த இடத்தில் இருக்கும்பொழுது இதற்குச் சமீபத்திலுள்ள மார்ட்டின்பூர் என்னும் கிராமத்திலிருந்து ஒருவர் வந்து அவ்வூர் மக்களோடு நான் ஒரு நாளாவது இருக்க வேண்டுமென்று வற்புறுத்தினார். அது ஒரு கிறிஸ்தவ கிராமம். அங்கு நான் சில கூட்டங்கள் நடத்தும்படி அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். ஆனால் எனக்கு வசதி இல்லை என்பதாக சாக்குச் சொன்னேன். ஏனெனில் அந்த இடத்தினுடைய பொல்லாப்பைப் பற்றியும் அங்குள்ள சபையினுடைய பாவம் நிறைந்த நிலையைப்பற்றியும் நான் கேள்விப்பட்டிருந்தேன். எப்படியெனில் பாதிரியாருக்கு விரோதிகளாய் நூற்றுப்பத்து குடும்பங்களும் அவருக்குச் சாதகமாய் ஏறக்குறைய தொண்ணுற்றைந்து குடும்பங்களும் மீதியாக நடுநிலை வகிக்கிறவர்களாய் ஐம்பந்தைந்து குடும்பங்களும் அங்கு இருந்தன. இப்படியாக அங்கு மூன்று கட்சியினர் இருந்தனர். ஒரு கட்சியினர் தங்கள் ஆராதனையை சபை கட்டிடத்திற்குள் நடத்தும்போது எதிர்க்கட்சியினர் அந்தக் கட்டிடத்திற்கு வெளியே ஆராதனையை நடத்துவார்கள். அவரவர் தங்கள் கட்சியினுடைய ஆராதனைக்குச் செல்ல வழிகாட்டியாக நீண்ட தடியுடன் ஒருவன் அங்கு நியமிக்கப்பட்டிருப்பான். இந்தச் சச்சரவை நீக்க இவர்களிடையில் அனுப்பப்பட்ட குருக்களில் சிலர் கடும் வியாதி அடைந்தார்களெனக் கேள்விப்பட்டிருந்தேன். இவர்களது உணவில் விஷமிடப்பட்டதுதான் காரணம் என்ற ஐயமேற்பட்டது. இவ்வாறாக யாவரும் விலகிக் கொண்டனர். இப்படிப்பட்ட இடத்துக்குப்போக நான் மிகவும் அஞ்சினேன். இது எனது வேலை அல்லவென்றும், இப்படிப்பட்ட காரியங்களில் அனுபவமுள்ள யாரையாகிலும் நீர் அழைத்துக் கொள்ளுவது உமக்கு நலமென்றும் சொன்னேன். என்றாலும், முடிவில் நான் அங்கு சென்றேன்.

ஏழு நாட்கள் வரை திறந்த வெளியில் நாங்கள் கூட்டங்கள் நடத்தினோம். மக்களும் வந்தார்கள். ஆனால், முக்கியமாக என்னைப் பரியாசம் பண்ணவே வந்தார்கள். நான் அவர்கள் பாவங்களைக் கண்ணாரக் கண்டேன். சாராயத்தை தயாரித்து அவர்கள் விற்பனை செய்தார்கள். பெண்களை களவாடி அவர்களை விற்று வந்தார்கள். இது பாவத்தில் மிகவும் பயங்கரமானது. இந்தக் கொடிய நிலையை கண்ட நான் உறக்கமின்றி ஏழு இரவுகள் தேவனிடத்தில் அழுது ஜெபித்தேன். "தேவனே, இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்த ஜனங்களுக்கு ஏதாகிலும் நம்பிக்கை உண்டோ?" என்று கூக்கூரலிட்டேன். உண்மையில் நான் அதைரியப்பட்டேன் என்று உங்களிடம் ஒத்துக் கொள்ளுகின்றேன். கடைசி இரவில் அந்த திறந்த வெளியிலே நான் நின்று அவர்களைப் பார்த்து "இந்த கூட்டங்களில் இதுவே எனது கடைசி கூட்டம். நாளை இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவேன்" என்று சொன்னேன்.

எங்களுடைய கடைசி ஜெப நேரம் வந்தது. நான் முடிவாக ஜெபம்பண்ணிக் கொண்டிருந்த சமயத்தில் எனக்கு முன்னால் இருந்த ஒருவரைத் தேள் கொட்டினது போன்று திடீரென முகம் குப்புற விழுந்தார். பின்பு ஒருவர் பின் ஒருவராக தேவனுடைய இரக்கத்துக்காக கெஞ்சினவர்களாக தரையில் விழுந்தார்கள். ஜனங்கள் தங்கள் முகங்களில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளுவதையும், தங்கள் தலை மயிரை பிய்த்துக் கொள்ளுகிறதையும் என்னுடைய கண்களால் நான் கண்டேன். இந்த வண்ணமாக ஏறக்குறைய மூன்று மணி நேரம் கடந்த பின்பு அங்குள்ள மூப்பர்கள் வந்து அதை நிறுத்தும்படி என்னைக் கெஞ்சிக் கேட்டார்கள். அவர்களுக்கு "நான் இந்தக் காரியத்தை நான் துவங்கவில்லை. இதை நிறுத்தும்படி தேவனை வேண்டிக் கொள்ளுங்கள்" என்று சொன்னேன்.

பாஞ்சாலத்திலிருந்து பூனா (Poona) கெட்கான் (Kedgaon) இந்தோர் (Indore) மாவ் (Mhow) ஜான்சி (Jhansi) ஆக்ரா (Agra) முதலிய இடங்களுக்குப் பரவின எழுப்புதல் இத்தன்மையானது. நூற்றுக்கணக்கான மக்கள் பரிசுத்த ஆவியானவராலே பாவ உணர்வுக்குள்ளாகி தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு இரட்சிக்கப்படுவதை நாங்கள் கண்டோம். ஒவ்வொரு இடத்திலும் மூன்று முதல் ஐந்து வாரங்கள் வரை தங்கியிருந்து வீடுகளில் கூட்டங்கள் நடத்தி, வேத ஆராய்ச்சிகள் நிகழ்த்தி, தெருக்களில் பவனியாகப் போய், சுவிசேஷ புத்தகங்களை விற்று, இப்படியாக ஊழியம் செய்தோம். பரிசுத்த ஆவியானவரின் அருள்மாரி எங்கும் பொழிந்தது. கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. (சகோதரன் பக்தசிங்)

மேல் நாடுகளில் எழுந்த மாட்சிமையான எழுப்புதல்கள்

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் போன்ற நாடுகளில் ஏற்பட்ட மாட்சிமையான எழுப்புதல்கள் எல்லாம் மிகவும் எளிமையான விதத்தில் ஆரம்பமானவைகளாகும். தேவ ஜனத்தின் நடுவில் உயிர் மீட்சியை வாஞ்சித்துக் கதறிய அந்நாட்டின் விரல் விட்டு எண்ணக் கூடிய சொற்பமான பரிசுத்த பக்தர்கள் அந்த நாடுகளையே தங்கள் ஆத்தும பாரம் கொண்ட ஜெபங்களால் அசைத்துவிட்டார்கள். "ஸ்காட்லாந்தை எனக்குத் தாரும், இல்லை என்றால் நான் சாகிறேன்" என்று தேவனுக்கே சவால் விட்டு பெரிய எழுப்புதலைக் கொண்டு வந்தவர் பக்தன் ஜாண் நாக்ஸ் என்பவர் ஆவார். "ஸ்காட்லாந்து தேசத்தின் படைகளுக்கு அல்ல ஜாண் நாக்ஸ் உடைய முழங்கால்களுக்கு (ஆம் அவர் முழங்கால்களில் நின்று ஏறெடுக்கும் அவருடைய ஜெபங்களுக்கு) நான் அஞ்சி நடுங்குகின்றேன்" என்று நாட்டை ஆண்ட கொடிய ராணி இரத்த மேரி சொல்லும் அளவிற்கு அந்த தேவ மனிதரின் ஜெபம் அக்கினியாய் பற்றி எறிந்தது.

நிலக்கரி சுரங்கங்களில் பகற் காலம் முழுவதும் நிலக்கரி தோண்டி எடுத்து தங்கள் உடல் எல்லாம் கரிய நிலக்கரி தூசி படிந்திருக்க நிலக்கரி சுரங்கங்களிலிருந்து சாரை சாரையாக இரவில் ஓய்வுக்காக வீட்டிற்குச் செல்லும் வேளையில் நிலக்கரிச் சுரங்கத்தின் நுழை வாயிலில் கூடி நின்ற அந்த நிலக்கரி சுரங்கத் தொழிலாளிகளுக்கு தேவ பக்தர்கள் கொடுத்த வல்லமையான உயிர் மீட்சி செய்திகளால் இருதயம் நொறுங்குண்டு தங்கள் பாவங்களுக்காக கண்ணீர் சிந்தி கதறிஅழுதார்கள்.

கர்த்தருடைய வல்லமையான தேவச் செய்தியால் தொடப்பட்ட தொழிலாளிகளின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. நிலக்கரியின் கருமையான தூசியால் நிறைந்த அவர்களின் முகங்களில் கண்ணீர் வடிந்த இரண்டு வெள்ளைக் கோடுகள் அனைவரின் முகங்களிலும் பளிச் சென்று தெரிந்தது. அந்த ஏழை தொழிலாளிகளின் நொறுங்குண்ட இருதயங்களில் ஏற்பட்ட பலத்த மாற்றங்களின் காரணமாக குடும்பங்களும் முழு சமுதாயமுமே சொல்லப் போனால் அரசாங்கமே எழுப்புதலின் ஆசீர்வாதத்தை முழுமையாக அனுபவிக்கத் தொடங்கியது.

தேவனால் சந்திக்கப்பட்ட மக்கள் மதுபானத்தை விரும்பாததால் அனைத்து மதுபான கடைகளும் ஒரேயடியாக இழுத்து மூடப்பட்டன. மக்கள் தங்களைப் பரிசுத்தமுள்ளவர்களாகக் காத்துக் கொள்ள விபச்சார, வேசித்தன விடுதிகளைப் புறக்கணித்தனர். அதின் காரணமாக அசுத்தமான அந்த விடுதிகள் மூடப்பட்டன. வாரந்தோறும் மக்கள் தங்கள் நேரங்களையும், பணத்தையும் பாழாக்கும் குதிரைப் பந்தய மைதானங்களுக்குச் செல்லுவதை அறவே நிறுத்திக் கொண்டனர். அதினால் குதிரைப் பந்தய மைதானங்கள் எல்லாம் வெறிச்சோடிக்கிடந்தன. தேவனுக்குப் பிரியமில்லாத பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், சூதாட்டம் எல்லாம் தானாகவே நின்று போயின. நீதிமன்றங்களில் மற்றவர்கள் மேல் வழக்குத் தொடுத்தவர்கள் தாங்கள் தாங்களாகவே முன் வந்து தங்கள் வழக்குகளை வாபஸ் பெற்றுக் கொண்டனர். தங்கள் பட்சம் அநீதி இருந்தவர்கள் அவைகளை மனப்பூர்வமாக விட்டுக் கொடுத்து எதிர் தரப்பினரை மகிழச் செய்தனர். ஒரு காலத்தில் வழக்குகளினாலும், வழக்கறிஞர்களின் வாதாட்டங்களினாலும் நிரம்பி வழிந்த நீதிமன்றங்கள் எந்த ஒரு வழக்குகளும் வராத காரணத்தால் மூடப்பட்டன. நீதிமன்ற நியாதிபதிகளுக்கு கட்டாய ஓய்வு கொடுத்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டனர்.

மறுபடியும் பிறந்து இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்றுக் கொண்ட தேவ மக்கள் வீடுகள் எங்கும் தேவனுடைய இரட்சிப்பின் ஜெய கெம்பீர சத்தம் கேட்டது. மலைகளின் உச்சிகளிலும், விவசாயப் பண்ணைகளிலும், பழத்தோட்டங்களிலும், வேலை ஸ்தலங்களிலும், எல்லா இடங்களிலும் தேவ மக்கள் கர்த்தரைப் பாடித் துதித்தனர். தேவாலயங்களில் சங்கிலித் தொடராக பக்தி விருத்திக்கான உயிர் மீட்சிக் கூட்டங்கள் நடைபெற்றன. வியாபார மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உண்மை நிலவினது. விற்போர் வாங்கினோரை ஏமாற்றிப் பணம் பறிப்பது எல்லாம் மறைந்தே போயிற்று. பூலோகத்திலேயே பரலோக சந்தோசம் வந்திறங்கிற்று. இந்தவித ஆச்சரிய சம்பவங்களும், இன்னும் எண்ணடங்கா மனமகிழ்வின் காரியங்களும் தேவனுடைய உயிர்மீட்சியால் சந்திக்கப்பட்ட மேல் நாட்டுப் பட்டணங்களிலும் கிராமங்களிலும் காணப்பட்டன.

தேவன் நம்மிடையே இன்று எதிர்பார்ப்பதும்
இந்த அற்புத உயிர் மீட்சியே

எக்காலத்தும் இல்லாத அளவில் இன்று நம் தமிழ் நாட்டில் எத்தனை எத்தனையோ சபை பிரிவுகள், கவர்ச்சிகரமான விதவிதமான ஊழியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாவத்தைக் குறித்து மக்களை கண்டித்து உணர்த்தும் தேவச் செய்திகள் கிடையாது. கர்த்தருடைய மாட்சிமையான பரிசுத்த தேவ ஊழியங்கள் முதல்தரமான பணம் கொழிக்கும் வியாபாரமாக அடையாளம் கண்டு கொள்ளப்பட்டு தேவப் பகைஞரான கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்களால் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வழிப்பறி கொள்ளையாக மிகவும் துணிச்சலாக செய்யப்பட்டு வருகின்றது. செழிப்புபதேச சாத்தானின் ஊழியக்காரர்கள் தங்களுடைய மனதை மயக்கும் வார்த்தைகளால் திரளான தேவ ஜனத்தை தங்களண்டை கவர்ச்சித்து இழுக்கின்றனர். அற்புதங்களை செய்கிற பிசாசுகளின் ஆவிகளின் உதவியால் (வெளி 16: 14) அவர்கள் அற்புதங்களையும் நிகழ்த்துகின்றனர். தேவ ஜனத்திற்கு எந்த ஒரு தேவையும் இல்லாத தீர்க்கத் தரிசனங்களைக் கூறி அவர்களைக் கலங்கப் பண்ணுகின்றார்கள். இந்த ஊழியக்காரர் தங்கள் கூட்டங்களில் மக்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிடுகின்றனர். அப்போஸ்தலர் காலம் முதல் இதுவரையான திருச்சபை வரலாற்றை நீங்களே உங்கள் கைப்பட எடுத்து வாசித்துப் பாருங்கள். எந்த ஒரு கர்த்தருடைய ஊழியனும் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை என்பதை நீங்கள் திட்டமாகக் கண்டு கொள்ளுவீர்கள். தன்னண்டை சாரை, சாரையாக வந்த தன்னுடைய எபிரேய மக்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டு அவர்களை வாழ்த்தி வரவேற்று ஆசீர்வாதத்தை பொழிவதற்குப் பதிலாக "விரியன் பாம்புக் குட்டிகளே, வருங்கோபத்திற்கு தப்பித்துக் கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்" என்ற மிக கடினமான வார்த்தைகளால் அவர்களை கூவி அழைத்து அவர்களுடைய பாவங்களைச் சுட்டிக் காண்பித்து கண்டிப்பதையும், அவர்கள் தேவனுக்கு முன்பாக எப்படிப்பட்ட பரிசுத்தர்களாக வாழ வேண்டும் என்ற வகையைக் காட்டுவதையும் யோவான் ஸ்நானகனைக் குறித்து எழுதப்பட்ட பகுதிகளில் நாம் காண்கின்றோம் (லூக்கா 3 : 8 - 14)

"நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று பொது மக்களும், ஆயக்காரரும், போர்ச்சேவகரும் தனித்தனி பிரிவுகளாக அவரிடம் ஆலோசனை கேட்பதையும், அதற்கு அந்த மாபெரும் தீர்க்கன் பொறுமையாக அவர்களுக்குப் பதில் கூறுவதையும் நாம் காண்கின்றோம் (லூக்கா 3 : 10 - 14)

தேவன் வெறுக்கும் கொடிய பாவத்தின் மேல் வெறுப்புணர்வு கொண்ட அந்த உத்தம தீர்க்கன் நாட்டையாளும் ஏரோதுவின் கொடிய பாவத்தையே இறுதியில் துணிந்து சுட்டிக்காட்டி தம்முடைய ஜீவனையே இழந்து போவதை நாம் வேதாகமத்தில் ஆச்சரியத்துடன் பார்க்கின்றோம். மெய்யான தேவ மக்கள் யாவரும் தங்களுக்கு முன்பாக கூடி வரும் தேவ ஜனத்திற்கு பாவத்தின் அகோரத்தையும், அதின் கொடிய எதிர் விளைவுகளையும், அதிலிருந்து தப்பிக்கொள்ள பிராயச்சித்தமாகவுள்ள தேவ மைந்தனின் சிலுவை மரணத்தையும், அதின் மூலமாக உள்ள இரட்சிப்பைக் குறித்து மட்டுமே பேசுவார்கள்.

இராக்காலத்தில் மூன்று தடவைகள் திரும்பத் திரும்ப சாமுவேலைப் பெயர் சொல்லி கூப்பிட்ட சர்வ வல்ல தேவன் "சாமுவேலே, நான் உன்னை ஆசீர்வதிக்கின்றேன். உன்னுடைய ஆசீர்வாதத்தை இப்பொழுதே, இந்த நிமிஷமே பெற்றுக் கொள்" என்று நம்மிடையே உள்ள ஆசீர்வாதப் பிரசங்கியாரைப்போல கூறாமல் பாவத்துடன் துணிகரமாக விளையாடிக் கொண்டிருந்த ஆசாரியன் ஏலியின் குமாரருக்கு நேரிடப்போகும் பேரழிவையும், சங்காரத்தையும் குறித்து மட்டுமே பேசினார்.

தேவ ஜனமே, எந்த ஒரு தேவ ஊழியன் பெயர் சொல்லி கூப்பிடும் தேவன் விரும்பாத அருவருப்பான காரியத்தை தனது கூட்டங்களில் கூறி தனது பெயர் புகழை நிலைநாட்டி தேவ ஜனத்தின் பணம் காசுகளை தந்திரமாகப் பறிப்பானோ அவனது கூட்டங்களை நாடி ஒருக்காலும் ஓடாதேயுங்கள். எந்த ஒரு தேவ ஊழியன் கூட்ட மேடையில் தான் ஒரு விசேஷித்த பரிசுத்தவான் என்ற தோரணையில் பெருமையாக அமர்ந்திருந்து பொய்யான கட்டுக்கதைகள், ஆம், இந்த மேடையில் இயேசு இப்பொழுதுதான் வானத்திலிருந்து இறங்கி வந்து என்னிடம் அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று கட்டுக்கதைகளை எடுத்துவிடும் அண்டப் புளுகர்களின் கூட்டங்களை நாடிப் போகாதேயுங்கள்.

எந்த ஒரு தேவ ஊழியன் இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரேயன்றி வேறொன்றையும் (செழிப்பு, செல்வம், சரீர சுகம்) உங்களுக்கு அறிவியாதிருப்பானோ (1 கொரி 2 : 2) எந்த ஒரு தேவ ஊழியன் உங்களது பாவங்களை எடுத்துக் கூறி உங்களை எச்சரித்து உங்களை பாவ மன்னிப்பின் நிச்சயத்துக்கும், இரட்சிப்புக்கும், மறுபிறப்பின் மாட்சிமையான பரலோக அனுபவத்துக்கும், நித்திய ஜீவனுக்கும், இந்தக் கிருபையின் காலத்தில் அன்பின் ஆண்டவரை உடனே அண்டிக்கொள்ளும் படியாக உங்களை அவருடைய பாதார விந்தங்களுக்கு வழிநடத்துவானோ அவனது கூட்டங்களுக்குச் செல்லுங்கள். எந்த ஒரு தேவ ஊழியன் எரி நரகத்தையும், முடிவில்லாத நித்தியத்தையும், நினையாத வேளை உங்களை சந்திக்கும் உங்கள் திடீர் மரணத்தையும், எந்த நேரம் மரணம் உங்களை சந்தித்தாலும் நீங்கள் கர்த்தரைச் சந்திக்க ஆயத்தமாக இருக்க வேண்டியதன் தீராத அவசியத்தையும் திட்டமும் தெளிவுமாகக் கண்ணீரோடு பேசுவானோ அவனது கூட்டங்களுக்குச் செல்லுங்கள். எந்த ஒரு தேவ ஊழியன் தனது ஊழியத்திற்கு பணங்கள் தேவை என்று தனது செய்திகளில் கூறி, தான் வெளியிடும் தனது பத்திரிக்கைகளில் தனது வங்கிக் கணக்கு எண்களோடு விளம்பரப்படுத்துகின்றானோ அவனது கூட்டங்களுக்குச் செல்லாதேயுங்கள். எங்கும் எந்த ஒரு இடத்திலும் தாராளமாக நாம் நெருங்கிப் பேசவும், தங்களை ஒன்றுமில்லாமல் வெறுமையாக்கி வைத்திருக்கும் தாழ்மையின் பாத்திரங்களாக காணப்படும் ஏழை தேவ ஊழியன் பேசும் கூட்டங்களுக்குச் செல்லுங்கள். கூட்டங்களில் பெயர் சொல்லிக் கூப்பிட்டு அந்தக் கண்கவர் கவர்ச்சி ஊழியத்தின் மூலமாக பெரும் தனவந்தர்களாகி கோடீஸ்வரர்களாக உருவெடுத்து செல்வந்தர்களாக, சுகபோகமாக வாழ்கின்ற சாத்தானின் கைக்கூலிகளான கள்ள அப்போஸ்தலர்களின் கூட்டங்களுக்கு ஒருக்காலும் சென்று விடாதீர்கள். அவர்களுடைய செய்திகளால் நீங்கள் ஒருக்காலும் மனந்திரும்பி பரலோகம் செல்ல முடியாது என்பதையும், இறுதியில் எரி நரகமே உங்கள் பங்காகத் தீரும் என்பதையும் உங்கள் இருதய பலகையில் திட்டமும் தெளிவுமாக எழுதிக் கொள்ளுங்கள்.

தேவ ஜனமே ஒன்றை மட்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னர் நீங்கள் நிச்சயமாக ஆண்டவருடைய பரலோக பாக்கியத்தை சுதந்தரித்துக் கொள்ளலாம் என்ற உறுதியான நம்பிக்கை உங்களுக்கு உண்டுமா என்பதை இந்த உலகத்திலேயே பூரணமாக நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். நம்முடைய பாவங்களுக்காக நாம் தேவ சமூகத்தில் மனங்கசந்து அழுது புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் பெற்றுக்கொண்டுவிட்டால் நாம் கிறிஸ்துவுக்குள் புதியசிருஷ்டிகளாகி விடுகின்றோம். அதின் காரணமாக நாம் எப்பொழுதும் ஆண்டவருடைய பாதங்களை மாத்திரம் வாஞ்சித்துக் கதறுவோம் (சங் 42 : 1) எப்பொழுதும் நாம் தேவனை அண்டிக்கொண்டிருப்போம் (சங் 73 : 28 ) மரியாளைப் போல ஆண்டவர் இயேசுவின் பாதங்கள் மாத்திரமே எப்பொழுதும் நமது களிகூருதலாக இருக்கும் (லூக்கா 10:39 ) அதின் காரணமாக நாம் தொலைக்காட்சிகளை நாடி ஓடமாட்டோம். தேவ தூதர்களே அந்த கிறிஸ்தவ தொலைக்காட்சியில் வந்து நடிப்பதாக இருந்தாலும் அதை நாம் கண்ணேறிட்டும் பார்க்கமாட்டோம். முழங்கால்களில் நின்று ஆண்டவருடைய வார்த்தைகளை வாசித்து தியானித்து அவரைப் பாடித்துதித்து அவரில் மகிழுவோம். பரலோகத்தில் நாம் அனுபவிக்கப்போகும் மோட்சானந்த பாக்கியங்களை நமது உள்ளத்தில் பூலோகத்திலேயே அனுபவித்துக் கொண்டிருப்போம். அதை மனதில் கொண்டுதான் அன்பின் ஆண்டவரும் "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" (லூக்கா 17 : 21) என்று கூறினார்.

இந்தப் பரலோக ஆச்சரிய அனுபவம் (யோவான் 3 : 3) உங்களுக்கு இல்லையெனில் இன்றே தேவ பெலத்தால் உங்களை தேவ சமூகத்தில் தரைமட்டாகத் தாழ்த்தி அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஒப்புரவாக வேண்டியவர்களோடு ஒப்புரவாகுங்கள். வாங்கிச் செலுத்தாமல் இருக்கும் நாள்பட்ட கடன்களை எல்லாம் உடனே செலுத்துங்கள். "இதோ படித்துவிட்டுத் தருகின்றேன்" என்று பிற தேவ மக்களிடம் இரவலாக வாங்கி இதுவரை கொடுக்கப்படாமல் உங்கள் வீட்டில் தூசிபடிந்து கிடக்கும் கிறிஸ்தவ புத்தகங்கள், ஒலி நாடாக்கள் அனைத்தையும் வாங்கிய நபர்களிடம் திரும்பக் கொடுத்துவிடுங்கள். தேவாலயத்தின் காணிக்கையை ஓய்வு நாளில் ஆலயத்தில் பெரிய பரிசுத்தவான் போல அமர்ந்து அதை எண்ணும்போது நூறு, இரு நூறு என்று ஒவ்வொரு வாரமும் மறைவாக உங்கள் பாக்கெட்டில் எடுத்துப்போட்டுச் சென்ற காணிக்கைப் பணத்தை எல்லாம் திரும்பவும் ஆலயத்தில் சேர்ப்பியுங்கள். நீண்ட ஆண்டுகளாக செலுத்தாமல் இருக்கும் தேவாலயத்தில் ஏலத்தில் எடுத்த பொருட்களின் ஏலப்பாக்கி பணத்தை உடனே கொடுத்துவிடுங்கள். தேவனுக்கு விரோதமாக நீங்கள் செய்த எல்லா பாவ தவறுகளையும் ஆண்டவரிடம் நொறுங்குண்ட இருதயத்தோடு அறிக்கையிட்டு பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" (நீதி 28 : 13) "வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்" (ஏசாயா 1 : 18) "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" (1 யோ 1 : 9)

இந்த கிருபையின் காலத்தில் உங்கள் பாவங்களை தேவ சமூகத்தில் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக்கொள்ளத் தவறும் பட்சத்தில் நீங்கள் கண்ணீர் சிந்தும் நாட்கள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றது. ஒரு வேளை இப்பொழுது உங்களைச் சுற்றிலும் உங்கள் பிள்ளைகளும், பெந்து மித்திரரும், கணவனும், மனைவியும் ஏன்? முழு உலகமுமே உங்களோடிருப்பதாகத் தெரியும். உங்கள் உடல் நலம் மிகவும் வலுவாக இருப்பதாகவும் நீங்கள் இன்னும் பல்லாண்டு காலம் நோய் நொடியின்றி வாழலாம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எல்லாம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், நீங்கள் நினையாத நேரம் கொடிய வியாதி போன்ற ஏதோ ஒரு காரணமாக நீங்கள் முற்றும் தனிமைக்குத் தள்ளப்படுவீர்கள். நீங்கள் கட்டில் கிடையில் விழும்போது உங்களை உயிருக்குயிராக நேசித்தவர்கள் போலக் காணப்பட்டவர்கள் எல்லாரும் பகலவனைக் கண்ட பனி போல உங்களைத் தனிமையில் விட்டு விட்டு அப்படியே மறைந்து போய் விடுவார்கள் கர்த்தர் உங்களோடு இல்லாதபட்சத்தில் உங்கள் நிலைமை மகா பரிதாபகரமாகி விடும். அந்தக் கொடிய சூழ்நிலையை உங்களால் ஒருக்காலும் தாங்கிக் கொள்ளவே இயலாது. சவுல் ராஜா சொன்னது போல "நான் மிகவும் நெருக்கப் பட்டிருக்கிறேன், பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம் பண்ணுகிறார்கள், தேவனும் என்னைக் கைவிட்டார்" ( 1 சாமு 28 : 15) என்று கதறுவீர்கள்.

காலமெல்லாம் தேவனைத் தேடாமல் மனதும் மாம்சமும் விரும்பும் வழியில் வாழ்ந்துவிட்டு மரணம் தனது குளிர்ந்த கரங்களை நீட்டி உங்களைத் தொட வரும் இறுதி நேரம் மனந்திரும்ப முயற்சிப்பது வீணும் வியர்த்தமுமாக முடிவு பெறும். அது ஒருக்காலும் சாத்தியமாகாது. முடிவில்லாத யுகா யகங்களை தேவன் தம்மில் அன்பு கூருகிறவர்களுக்கு ஆயத்தம் பண்ணிய பேரின்ப பரலோக நாட்டில் செலவிட உங்களுக்குக் கிடைத்த இந்தப் பொன்னான கிருபையின் வாய்ப்பை ஞானமாக பயன்படுத்தி இன்றே மனந்திரும்பி இரக்கமுள்ள தேவனை அண்டிக் கொள்ளுங்கள். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM