|
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி கனம் மகிமை உண்டாவதாக. கடந்த தேவ எக்காள இதழின் 51 ஆம் பக்கத்தின் இரண்டாம் பத்தியில் அச்சிடாமல் தவறாக விடுபட்டுப்போன 2 படங்களை இந்த இதழில் அச்சிட்டு வெளியிடுகின்றேன். சிரமத்தை அன்பாகப் பொறுத்துக் கொள்ளுங்கள். அந்த இதழில் காணப்படும் பாராவையும் அப்படியே உங்களுடைய கவனத்திற்காகக் கீழே நான் தருகின்றேன்:-
"அடுத்து வந்த நாள் 3/10/2010 ஆம் தேதி கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளாக இருந்தபடியால் நாங்கள் எல்லாரும் ஒன்று கூடி கர்த்தரைப்பாடித் துதித்து அடுத்து நாங்கள் செய்யவிருக்கும் கர்த்தருடைய ஊழியங்களுக்காக தனித்தனியாக ஜெபித்தோம். அப்படி நாங்கள் காதகோடம் என்ற நாங்கள் தங்கியிருந்த இடத்தில் கர்த்தரைப் பாடித் துதிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்"


3/10/2010 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நாங்கள் கர்த்தரைப் பாடித் துதித்து தனித்தனியாக நாங்கள் ஒவ்வொருவரும் ஜெபித்தோம். பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் நாங்கள் கர்த்தரைப் பாடித்துதிப்பதற்கு வசதியாக ஹிந்தி பாட்டுப்புத்தகங்களையும் கைத்தாளங்களையும் தன்னுடைய ஊரிலிருந்து எடுத்து வந்திருந்தார்கள். அதின்பின்னர் நாங்கள் ஹல்த்வானி பட்டணத்திற்குச் சென்று எங்கள் காலை ஆகாரத்தை முடித்த பின்னர் எங்கள் வாகனங்கள் இரண்டிற்கும் முழுமையாக எரிபொருள் நிரப்பிக் கொண்டு ராணிகேத் என்ற அழகிய பட்டணத்தை நோக்கிப் பயணப்பட்டோம். ஹல்த்வானியிலிருந்து ராணிகேத் 90 கி.மீ. தொலைவில் உள்ளது. கடந்த நாட்களில் பெய்த வரலாறு காணாத கனமழைகளின் காரணமாக நாங்கள் சென்ற பாதை பலத்த அழிவுகளுக்கு உட்பட்டிருப்பதை எங்களால் காண முடிந்தது. விசேஷமாக ஹல்த்வானிக்கும் பொவ்வாலி என்ற இடத்திற்கும் இடையே மலை ரஸ்தா மிகவும் பழுதடைந்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம்.
மாலை 4:30 மணிக்கு நாங்கள் ராணிகேத் வந்து சேர்ந்தோம். சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் அழகான ராணிகேத் பட்டணம் ஆங்கிலேயர் கால நாட்களிலிருந்தே இந்திய ராணுவ பாசறையாக விளங்கி வருகின்றது. உத்தராஞ்சல் மாநிலத்தின் குமானி படைத்தளம் பட்டணத்தின் முகப்பிலும் நாகா படைத்தளம் பட்டணத்தின் அடுத்த கடைசி விழிம்பிலும் இருப்பதை நாம் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் ராணுவ வீரர்கள் கர்த்தரை ஆராதிக்கும்படியாக ஆங்கிலேய மக்களால் கட்டப்பட்ட அழகான ஆலயங்கள் சில அடர்ந்த சோலை மரங்களுக்குள் பாழடைந்து கிடப்பதை நாம் இன்றும் காணலாம். ஒரு அழகான பெரிய தேவாலயம் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமாக உள்ளது. ராணுவ வீரர்களின் விதவைகள் செய்த பொருட்கள் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. என்ன பரிதாபம் பாருங்கள்! ராணிகேத் முழுவதும் தேவதாரு மரச்சோலைகளால் நிறைந்து காணப்படுகின்றது. இந்தப் பட்டணத்தில் அனைத்துப் பொருட்களும் விலையுயர்ந்தே காணப்படுகின்றது. அழகான பட்டணமாக உயர்ந்த மலைகளில் இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு முழுவதும் நிரம்பி வழிகின்றது. இந்தப்பட்டணத்தில் நாங்கள் தங்கியிருந்த "ராணிகேத் கிராண்ட்" என்ற ஹோட்டலில் எங்கள் 9 பேருக்கும் நாளொன்றுக்கு ரூபாய் 3000 வாங்கினார்கள். நாங்கள் 3 அறைகளில் இங்கே தங்கியிருந்தோம். ஒரு வேளை சாப்பாட்டுக்கு 9 பேருக்கும் 450 ரூபாய் வாங்கினார்கள். மரக்கறி உணவு தருகின்றோம் என்று கூறி பெரும்பாலும் உருளைக் கிழங்குதான் எங்களுக்குப் பறிமாறினார்கள். கர்த்தருடைய கிருபையால் எங்களுடைய அறைகளில் சுடு தண்ணீருக்கான வசதிகள் இருந்தமையால் ஒவ்வொரு நாளும் நாங்கள் நன்கு குளித்துக் கொண்டோம்.
முழுமையாக 2 நாட்கள் நாங்கள் ராணிகேத் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் காலை முதல் மாலை வரை அமர்ந்து ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷத்தினுள் பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் எழுதிய "தீர்த்த யாத்திரை" "மோட்ச வாசல்" "தேவா, நித்திய ஜீவன் தாரும்" என்ற 3 கைப்பிரதிகளையும் ஒன்றிணைத்தோம். மூன்றாம் நாள் அதிகாலையில் நாங்கள் எழுந்து தேவ சமூகத்தில் போதுமான நேரம் ஜெபத்தில் செலவிட்ட பின்னர் எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் நாங்கள் மிஷன் மேல் நிலைப்பள்ளிக்கு வந்து சேர்ந்தோம். அந்தப் பள்ளியில் மொத்தம் 600 பிள்ளைகளும் 30 ஆசிரியர்களும் இருப்பதை நாங்கள் ஏற்கெனவே கேட்டறிந்து அதற்குத்தக்கதாக அவர்களுக்கு கொடுப்பதற்கு வசதியாக சுவிசேஷ பிரசுரங்களை ஒழுங்கு செய்து வைத்துக் கொண்டோம்.
சரியாக காலை 9 மணிக்கு பள்ளி மாணவ மாணவியருக்கு எங்களுடைய சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுக்கும்படியாக பள்ளியின் உதவி பிரின்சிபால் அனுமதி அளித்தார்கள். அந்தப் பெரிய பள்ளியின் பிள்ளைகள் அனைவரும் அசெம்பிளி மைதானத்திலிருந்து தங்கள் தங்கள் வகுப்புகளுக்குச்செல்லும் 2 பிரதான நுழைவாயில் இடங்களில் நமது சுவிசேஷகர்கள் நின்று கொண்டு ஏற்கெனவே ஆயத்தமாக வைத்திருந்த பிரசுரங்களை துரிதம் துரிதமாகக் கொடுத்தார்கள். பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும் சகோதரன் நார்ட்டன் அவர்களும் சகோதரன் விஜய்சிங் அவர்களும் ஓரிடத்திலுமாக நின்று கொண்டார்கள். அடுத்து சகோதரன் பாக்கேலால், நிர்மல் சிங், விக்ரம் சிங் ஆகிய மூவரும் மற்றொரு இடத்திலுமாக நின்று கொண்டு வேகமாகக் குழந்தைகளுக்கு பிரசுரங்களைக் கொடுத்தார்கள். நமது டிரைவர் சகோதரர்கள் மனோஜ் மற்றும் நரேஷ் இருவரும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் நமது சகோதரர்களுக்கு பக்க பலமாக நின்று உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
"சாதுசுந்தர்சிங்", "மெய்ச்சமாதானத்தை தேடிக் கொண்டு", "வேதாகமத்தின் மொத்த சாரம்", "வேதாந்த மோட்ச யாத்திரை" போன்ற புத்தகங்களும், ஹிந்தி வேதாகமம் ஒன்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்டன. அத்துடன் ஹிந்தி லூக்கா சுவிசேஷங்களும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்த பிரசுரங்களுடன் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. அன்பின் ஆண்டவர் அந்த நாளில் ஒரு அற்புதமான தேவ ஊழியத்தை எங்களுக்குத் தந்தார். கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக ஆண்டவர் அந்த ஆசிரியப் பெருமக்கள், மாணவ மாணவியரின் உள்ளங்களில் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
ராணிகேத் மிஷன் பெரிய மேல் நிலைப் பள்ளியையும், அங்கு நடைபெற்ற தேவ ஊழியத்தின் போது பள்ளி மாணவ, மாணவியர்கள் தேவனுடைய பிரசுரங்களை எங்களிடமிருந்து பெற்றுச் செல்லும் காட்சிகள் சிலவற்றையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.





ராணிகேத்தில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை முடித்துக்கொண்டு அங்கிருந்து 30 கி.மீ. தூரம் பிரயாணம் செய்து அடுக்கடுக்கான அழகிய மலைகளைத் தாண்டி துவாராகாட் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த துவாராகாட் என்ற இடம் இந்து மக்களின் ஒரு புண்ணிய ஸ்தலமாக கருதப்படுகின்றது. பஞ்சபாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது தங்கள் குரு துரோணாச்சாரியாருடன் இங்கு வந்து தந்தியிருந்ததாகவும், அவர் இங்கு தவம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்த மலைகளில் மனிதனின் தீராத நோய் பிணிகள் தீர்க்கும் அபூர்வ மூலிகைகள் பல இருப்பதாகச் சொல்லப்படுவதுடன் ராவணனின் மகன் மேகநாதனுடைய அம்பால் பலத்த காயம் அடைந்த லட்சுமணன் சுகமடைய அனுமான் இந்த மலைகளுக்குப் பறந்து வந்து இங்குள்ள ஒரு மூலிகை ஒன்றைத்தான் கொண்டு சென்று சுகப்படுத்தியதாக புராணம் கூறுகின்றதாம்.
புராணக் கதைகள் எப்படி இருந்தபோதினும் இந்த துவாராகாட் ஒரு அழகிய மலை நாடு. இங்கு ஒரு பெரிய பொறியற் கல்லூரி உள்ளது. நாங்கள் இந்த ஊருக்கு முகப்பிலுள்ள பெரு வழிச்சாலையின் ஓரத்திலிருந்த ஒருஹோட்டல் ஒன்றில் தங்கினோம். நாளொன்றுக்கு ரூபாய் 1100 விடுதிக்கட்டணமாக நாங்கள் கொடுத்தோம். சாப்பாட்டுக்கு நபர் ஒருவருக்கு ஒரு வேளைக்கு ரூபாய் 45 வாங்கினார்கள். ஆனால் ஆகார வகைகள் அத்தனை திருப்தியளிக்காததால் அவ்வப்போது அருகிலுள்ள பஜாருக்கு நாங்கள் சென்று எங்கள் செலவில் காய்கறிகள் வாங்கிக் கொடுத்து சமைத்துக் கொடுக்கக் கேட்டுக் கொண்டோம்.
ஹோட்டல் நல்ல சுத்தமாக இருந்தது. நாங்கள் தங்கிக் கொள்ள காற்றோட்டமான அறைகள் அடித்தளத்தில் கொடுத்தார்கள். தனி ஜெபத்திற்கும், கர்த்தரைத் தியானிப்பதற்கும் அந்த அறைகள் அருமையாக இருந்தன. அதிகாலையிலேயே சூரிய ஒளிக் கதிர்கள் எங்கள் அறைக்குள் வந்துவிடும். எங்கள் அறைகளின் கண்ணாடி ஜன்னல்கள் மூலமாக எங்களுக்கு எதிராக இருந்த அழகான துவாராகாட்டையும், அதின் அழகான காட்சிகளையும் எங்களால் காண முடிந்தது. அந்தக் காட்சிகளில் ஒன்றிரண்டை நீங்களும் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.


எங்கள் இரண்டு வாகனங்களையும் பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ள எங்களுக்கு இடமும் கிடைத்தது.
குறிப்பிட்ட அந்த நாளின் அதிகாலையில் நாங்கள் எழுந்து தேவ சமூகத்தில் அதிகமான நேரத்தை ஜெபத்தில் செலவிட்டு விட்டு எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு ஊழியத்திற்காகப் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் ஏற்கெனவே விட்டு வந்த ராணிகேத் மலை ரஸ்தாவில் பின் நோக்கிச் சென்றோம். எங்கள் வழித்தடத்தில் மல்லி மிராய் என்ற கிராமம் இருந்தது. கிராமத்தின் மேடான பகுதியில் ஒரு ஆரம்ப பள்ளி நடந்து கொண்டிருந்தது. நம்முடைய சகோதரர்கள் நார்ட்டன் அவர்களும் விஜய்சிங் அவர்களும் மிகவும் கஷ்டத்துடன் செங்குத்து மலை ஏறி அங்குள்ள சின்னஞ்சிறிய மாணவ மாணவியர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தார்கள். அந்தப் பள்ளியின் இளஞ்சிறார்கள் அவற்றை வாங்கி வாசிப்பதை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.


அதின் பின்னர் தல்லி மிராய் என்ற இடத்திலிருந்த ஆரம்ப பள்ளியில் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். அங்கிருந்து நாங்கள் கொஞ்ச தூரம் பிரயாணம் பண்ணி கப்பாடா என்ற கடைவீதிக்கு வந்து அங்கிருந்த மக்களுக்கு ஆண்டவருடைய பிரதிகளை வழங்கினோம். சகோதரன் நார்ட்டன், விஜய்சிங் மற்றும் விக்ரம்சிங் ஆகிய மூவரும் கடைவீதியின் இரு பக்கங்களிலும் இருந்த கடைகளுக்கும், அங்கு கூடியிருந்த மக்களுக்கும் பிரசுரங்களைக் கொடுத்தார்கள். மக்கள் தங்கள் கரங்களில் நாங்கள் கொடுத்த தேவனுடைய வார்த்தைகளை வாசிக்கப் பத்திரமாக எடுத்துச் செல்லும் காட்சி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தது.
அதற்கப்பால் நாங்கள் சுலோலி என்ற கிராமத்தில் தேவனுடைய பிரசுரங்களை வழங்கிவிட்டு அங்கிருந்து மட்டேலா என்ற கிராமத்திற்கு வந்தோம். அங்கிருந்த ஆரம்ப பாடசாலையில் 58 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கு பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு நமது சகோதரர்கள் விஜய்சிங்கும், விக்ரம்சிங்கும் தங்கள் தோள் பைகளை தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டார்கள். எவ்வளவு பிரசுரங்கள் வைத்தாலும் கிழியாத பைகளை நல்ல உறுதியான காக்கி துணி வாங்கி மொத்தம் 9 தோள் பைகள் தைத்து நீலகிரியிலிருந்து நான் கொண்டுசென்றிருந்தேன். அந்தப் பைகளில் பிரசுரங்களை போட்டு எடுத்துக் கொண்டு மட்டேலா கிராமத்தின் வீடுகள் யாவற்றிலும் தேவகிருபையால் ஜெபத்துடன் கொடுத்துத் திரும்பினார்கள். நாங்கள் மேலேயிருந்த பேருந்து ரஸ்தா ஓரமாக நின்று அவர்களுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தோம். பேருந்துக்காக காத்திருந்த 3 பெண்கள் நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களுடன் காணப்படுவதை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பதுடன் முழு கிராமத்திற்கும் சுவிசேஷம் அளிக்கப்பட்ட மட்டேலா கிராமத்தையும் நீங்கள் காணலாம்.


பின்னர் நாங்கள் ககாஸ் ஊர் கடைவீதிக்கு வந்து அங்குள்ள சிறிய கடைவீயில் டீ குடித்துவிட்டு அந்தக் கடைவீதியிலுள்ள மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். அந்த ஊர் மேட்டின் மேல் ஒரு உயர் நிலைப் பள்ளியும் (144 + 10) ஒரு ஆரம்ப பாடசாலையும் (25 + 2) என்ற விகிதாசாரத்தில் மாணவர்களும் ஆசிரியர்களும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். மேட்டின் மேல் இருந்த ககாஸ் ஊர் பள்ளியின் கட்டிடங்களை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அதின் பின்னர் நாங்கள் ஜனா கோலா என்ற கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த உயர் நிலைப்பள்ளியில் 250 மாணவர்களும் 12 ஆசிரியர்களும் இருந்தனர். அவர்களுக்கு நாங்கள் கைப்பிரதிகளை கொடுத்தோம். தொடர்ந்து எங்கள் பயணப்பாதையில் எங்களுக்கு எதிர்ப்பட்ட கீழ்க்காணும் ஊர்களில் உள்ள பள்ளிகளில் சுவிசேஷ பிரசுரங்களை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஜெபத்துடன் கொடுத்தோம்:-
செய்யாலி கிராமம் : 20 மாணவர்கள் 2 ஆசிரியர்கள்
மணேலா கிராமம் : 18 மாணவர்கள் 2 ஆசிரியர்கள்
மல்லிமிராய் கிராமம் : 38 மாணவர்கள் 4 ஆசிரியர்கள்.
கப்பாடா கிராமம் : 56 மாணவர்கள் 4 ஆசிரியர்கள்.
டன்கல் கிராமம் : 14 மாணவர்கள் 2 ஆசிரியர்கள்.
தாராகோட்டி லிருந்து நாங்கள் 18 கி.மீ. தொலைவு வரை பிரயாணம் செய்து டன்கல் என்ற இடம் வரை வந்திருந்தோம்.
|