"துன்மார்க்கரும் தேவனை மறக்கிற
எல்லா ஜாதிகளும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்"

அன்றொரு நாள் ஒரு மனிதன் என்னண்டை வந்து "உங்களுடைய பிரசங்கம் எனக்கு நன்கு பிடித்திருக்கின்றது, காரணம், நீங்கள் நரகத்தைக் குறித்துப் பிரசங்கிப்பதே இல்லை. அதிலிருந்து நீங்கள் நரகத்தை நம்பாதவர்கள் என்று நான் நினைக்கின்றேன்" என்று கூறினான். தேவனுடைய நியாயத்தீர்ப்பின் நாளில் எந்த ஒரு மனிதனாவது எழுந்து நின்று எனக்கு நேராக தனது கரத்தை நீட்டி "இதோ தேவனுடைய வார்த்தையை உண்மையாகப் பிரசங்கியாத ஒரு மனிதன்" என்று என்னைக் குற்றப்படுத்த நான் அனுமதிக்கமாட்டேன். தேவன் எனக்குத் தந்த அவருடைய வார்த்தையை அப்படியே அவருடைய ஜனத்துக்குப் பிரசங்கிப்பது என்மேல் விழுந்த கடமையாகும். தேவனுடைய வார்த்தைகளில் இங்கொன்றும், அங்கொன்றுமாக என் இஷ்டப்படி வார்த்தைகளைப் பொறுக்கி எடுத்து "அந்த வசனத்தை நான் விசுவாசியாதபடியால் அதைக்குறித்து நான் பிரசங்கிக்கமாட்டேன்" என்று சொல்ல எனக்கு எந்த ஒரு அதிகாரமுமே கிடையாது. தேவனுடைய வார்த்தைகளில் ஒன்றை நான் தூர வீசுகிறேனென்றால் முழு வோதாகமத்தையுமே நான் கண்டிப்பாக வீசி எறிந்தாக வேண்டும். காரணம், அந்த வேதாகமத்தில்தான் வெகுமதிகளையும், தண்டனைகளையும் ஆம், மோட்சத்தையும், நரகத்தையும் குறித்து நாம் வாசிக்கின்றோம்.

தேவமைந்தனாம் இயேசுவைப் போல நரகத்தைக் குறித்த படத்தை வரைந்தவர் எவருமில்லை. அவரைப் போல அதை வரைய எவராலும் கூடவும் கூடாது. காரணம், அவர் ஒருவருக்குத்தான் நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா தனது வாழ்வின் முடிவில் சந்திக்கப் போகும் கொடிய துயர நிலை தெரியும். தேவ கோபாக்கினையின் தீச்சூழையின் காரியத்தை தேவ மைந்தன் ஒளித்து மறைத்து வைக்காமல் அதை அவர் திட்டமும் தெளிவுமாகப் பேசினார். ஒரு பரிசுத்த தாய், பாவத்தில் வாழ்கின்ற தனது குமாரன் தனது வாழ்வின் முடிவில் அடையப் போகின்ற நரக ஆக்கினையைக் குறித்து அவனை உள்ளமுருகி எச்சரிப்பது போல அன்பால் பொங்கினவராக அவர் மாந்தரை எச்சரித்தார்.

பூலோக வாழ்வில் நமக்கிருந்த நினைவுகளை இந்த உலக வாழ்க்கைக்குப் பின்னர் நாம் செல்லும் மறுமை உலகத்துக்கும் நம்முடன் எடுத்துச் செல்லுவோம் என்று கர்த்தருடைய ஆவியானவர் கூறுகின்றார். நமது வாழ்வில் நாம் செய்த அநேக தவறான காரியங்களை நாம் மறந்துவிட நினைப்போம். தனது தாயை மிகவும் கொடுமையாக நடத்தின அந்த வேதனையான நினைவு தன்னைவிட்டு நீங்கிவிடும்பட்சத்தில் தனது வலது கரத்தை அதற்கு ஈடாக தான் வெட்டித் துண்டித்துக் கொடுத்துவிட ஆயத்தமாக இருப்பதாக காஃப் என்ற ஒரு மனிதர் கூற நான் கேட்டிருக்கின்றேன். அவர்கள் புழு சாகாமலும் என்று நாம் வேதத்தில் வாசிப்பதைப் போன்று நமது நினைவுகளும் நரகத்தில் சாவதில்லை. நாம் செய்த தவறான காரியங்களைக் குறித்த நினைவுகள் இப்பொழுது மறந்துவிட்டன என்று நாம் சொல்லுகின்றோம். நமது நினைவுகளிலிருந்து என்றுமாக அவைகள் நீங்கிப் போய்விட்டதைப் போல நாம் நடந்தும் கொள்ளுகின்றோம். ஆனால், நாட்கள் வருகின்றது, அப்பொழுது நாம் அவைகளை திரும்பவும் நினைவு கூருவோம். அவைகள் நமது நினைவிலிருந்து ஒருக்காலும் மறக்கப்பட்டுப் போவதே இல்லை.

தேவனுடைய நீதிமன்றத்தில் நமக்கு விரோதமாக குற்றஞ்சாட்ட எவருமே அவசியமில்லை. நமது சொந்த மனச்சாட்சியே நமக்கு எதிராக சாட்சியாக எழுந்து நின்று நம்மை குற்றவாளியாகத் தீர்க்கும். தேவன் தமது நீதிமன்றத்தில் நம்மை குற்றவாளியாகத் தீர்ப்பதில்லை. நம்மை நாமே நியாயந்தீர்த்துக் கொள்ளுவோம். நமது ஞாபகசக்தி தேவனுடைய அதிகாரியாகும். "மகனே, மகளே, அதை நினைத்துக் கொள்" என்று கூறி அவர் நமது உள்ளந்திரியங்களைத் தொடும் போது திடு திப்பென்று நாம் இதுவரை செய்த பாவங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் நமக்கு முன்பாக நின்று கொண்டிருக்கும்.

நான் எனது வாழ்வில் இரண்டு தடவைகள் மரணத்தின் நிச்சயமான பிடியில் சிக்கியிருக்கின்றேன். ஒரு தடவை நான் தண்ணீரில் மூழ்கி மரிக்கப் போகும் கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கின்றேன். அந்த மரண சமயம் கண் இமைக்கும் நேரத்தில் நான் பேசியது, நான் செய்தது, நான் நினைத்தது போன்ற அனைத்துக் காரியங்களும் எனது மனத்திரையில் மின்னல் ஒளி போல பளிச்சிட்டு வந்து நின்றது. ஒரு ஷணப் பொழுதில் மனிதனுடைய வாழ்வில் நடந்த காரியங்கள் எல்லாம் எதற்காக அவ்வண்ணமாக முண்டியடித்துக் கொண்டு வந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. மற்றொரு சமயம் கிளார்க் தெருவிலுள்ள நதிப் பாலத்தில் நான் சிக்குண்டு மரணத் தருவாயில் இருந்தேன். அந்தச் சமயமும் நான் என் வாழ்வில் செய்த காரியங்கள் யாவும் ஒரு இமைப் பொழுதில் என் நினைவுக்கு வந்து நின்றது. அதைப்போலவே, நாம் செய்த காரியங்கள் அனைத்தும் நமது நினைவிலிருந்து முற்றுமாக அற்றுப்போயிற்று என்று நாம் நினைக்கும் வேளையில் "மகனே அதை நினைத்துக் கொள்" என்று கர்த்தர் குரல் கொடுக்கும்போது மறைந்தவைகள் யாவும் நம் கண்களின் முன்னர் வந்து நிற்கும். எனவே, நமது மனந்திரும்புதலின் காரியத்தை பின்னுக்கென்று தள்ளிப் போட்டு காலம் மிகவும் பிந்திப் போகு முன்னர் நமக்குக் கிடைத்த இந்தக் கிருபையின் காலத்தில் நமது பாவங்களை தேவ சமூகத்தில் கண்ணீரோடு அறிக்கையிடுதல் நமக்கு ஆசீர்வாதமானது.

நாம் சிந்தித்த நமது நினைவுகள் ஒவ்வொன்றும் துரிதமாகவோ அல்லது காலம் தாழ்ந்தோ திரும்பவும் நமது நினைவுக்கு வரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு வீட்டில் வேலை செய்த ஒரு வேலைக்கார பெண் பிள்ளை தனது எஜமானர் சப்தமாக எபிரேய பாஷையை வாசிக்க தனது காதுகளால் கேட்டாள். பின் நாட்களில் அந்த வேலைக்கார பெண் கொடிய விஷக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு படுத்த படுக்கையிலானாள். அந்த நாட்கள் ஒன்றில் அவள் தனது படுக்கையில் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் தான் தனது எஜமானரிடம் கேட்ட எபிரேய பாஷையை சரளமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.

தனது தம்பி ஆபேலை 6000 ஆண்டுகளுக்கு முன்பாக கொலை செய்த போதினும் தான் கொலை செய்த தனது தம்பி ஆபேலின் முகத்தை இன்று வரை காயீனால் மறக்கப்பட்டிருக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? தனது எஜமானராம் கர்த்தரை தனது முத்தத்தால் காட்டிக் கொடுத்த யூதாசால் அந்த முத்தத்தையோ அல்லது "யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக் கொடுக்கிறாய்" என்ற ஆண்டவரின் வார்த்தைகளையோ அவனால் மறந்திருக்க முடியும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்களா? ஜலப்பிரளய காலத்தில் வாழ்ந்த மக்கள் நோவாவின் பேழையையும், பெரு வெள்ளம் வந்து அவர்கள் எல்லாரையும் வாரிக்கொண்டு போனதையும் மறந்து விட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றீர்களா?

என் சிநேகிதரே, தகுந்த காலத்தில் நீங்கள் எச்சரிப்படைந்து விழிப்படைவது நல்லது. சாத்தான் ஏவாளைப் பார்த்து "நீங்கள் ஒருக்காலும் சாவதில்லை" என்று சொன்னான். இன்றும் அநேக மக்கள் தாங்கள் செய்த எல்லா பாவங்களின் மத்தியிலும் தங்கள் ஆத்துமாக்கள் கடைசியாக மீட்கப்பட்டு பரலோகம் சென்றடையும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

நோவாவின் ஜலயப் பிரளய காலத்தில் மடிந்து போன அந்தப் பொல்லாத கொடிய பாவிகள் அனைவரையும் தேவன் அப்படியே வாரிக் கொண்டு போய் மோட்சத்தில் சேர்த்துவிட்டு நீதிமானாகிய நோவாவை மட்டும் பிரளயத்தில் கிடந்து தத்தளித்துக் கொண்டிருக்கும்படி வைத்துவிட்டார் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? சோதோம், கொமோரா பட்டணங்களின் மேல் தேவன் தமது நீதியைச் சரிக்கட்டும்போது தேவ தூதர்களையே அறிய வேண்டுமென்று வாலிபர் முதல் கிழவர் மட்டுமுள்ள அனைவரும் இச்சை வெறி கொண்டு லோத்துவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே பிரவேசிக்க முயற்சித்த அந்தக் கொடிய அசுத்தர்களை எல்லாம் அப்படியே பரிசுத்த தேவனுடைய சமூகத்துக்கு எடுத்துக் கொண்டு நீதிமான் லோத்தை மட்டும் பாடனுபவிக்கும்படியாக தனித்து விட்டுவிட்டார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து நீங்கள் பகடி செய்து சிரிக்கின்றீர்கள். நஷ்டப்பட்ட உலகத்தில் கிடக்கும் மக்கள் தங்களுடைய கரங்களில் தேவனுடைய ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமம் மட்டும் கிடைக்கும்பட்சத்தில் சொல்லி முடியாத பொக்கிஷங்களை அதற்கு ஈடாக கொடுக்கக் காத்திருக்கின்றனர். உங்கள் நடுவிலிருக்கும் தேவ ஊழியர்களைக் குறித்து நீங்கள் கேலி, பரிகாசம், செய்து வேடிக்கை பொருளாக்கலாம். ஆனால், நஷ்டப்பட்ட உலகத்தில் சுவிசேஷத்தை பிரசிங்கிக்க எவரும் கிடையாது என்பதை உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த உலகத்தில் அவர்கள் உங்களுக்கு தேவனுடைய தூதுவர்கள். உங்கள் ஆத்துமாக்களை நேசிக்கும் அன்பான சிநேகிதர்கள். உங்கள் ஆத்துமாவின் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் நல்ல அன்புள்ளம் கொண்ட மக்களை இன்று நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். ஆனால் நஷ்டப்பட்ட உலகத்தில் உங்கள் ஆத்துமாவுக்காக ஜெபிக்க எவருமே கிடையாது. உங்கள் தோளில் கைபோட்டு உங்களை அரவணைத்து உங்களுக்காக அழுது உங்களை இயேசு இரட்சகரண்டை வரும்படியாக வருந்தி அழைக்க அங்கு ஒருவரும் கிடையாது. இந்த எனது உயிர்மீட்சி கூட்டங்களை ஏளனம் செய்ய கொஞ்சம் மக்கள் இங்கு வந்து அமர்ந்து இருக்கின்றனர். ஆனால், நஷ்டப்பட்ட உலகமான நரகத்தில் கேலி கிண்டல் பேச எந்த ஒரு எழுப்புதல் கூட்டமும் கிடையாது என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஒன்றில் ஒரு மனிதன் வைக்கப்பட்டிருந்தான். அவன் அடிக்கடி தனக்குள்ளாக பயத்தால் மிகவும் திகிலடைந்தவனாக "நான் மட்டும் கீழ்ப்படிந்திருந்தால்" என்று அவ்வப்போது துயரமாக கூக்குரலிட்டுக் கொண்டிருந்தான். நடந்த சம்பவம் இதுவேதான், ஒரு பெரிய நதிக்கு மேலாக உள்ள ஒரு இழுவை பாலத்திற்கு அவன் பொறுப்பாளனாக வைக்கப்பட்டிருந்தான். அந்த இழுவை பாலத்தின் வழியாக விரைவு ரயில் ஒன்று விசேஷித்தவிதமாக அந்த குறிப்பிட்ட நாளின் குறிப்பிட்ட மணி நேரத்தில் வருவதாக அவனுக்கு தகவல் கிடைத்தது. அந்த உத்தரவின்படி அவன் தனது பொறுப்பிலுள்ள இழுவை பாலத்தை ரயில் போவதற்கு வசதியாக நதியின் மேல் தாழ்த்தி வைத்திருந்தான். அந்தச் சமயம் அவனது ஆப்த நண்பன் ஒருவன் நதியில் தனது படகில் வந்து தனது படகு ஒரு நொடிப் பொழுது கடந்து செல்ல வசதியாக சற்று நேரம் பாலத்தை மேலே உயர்த்தும்படியாக அவனைக் கெஞ்சியபோது அவன் மனம் இரங்கி இழுவை பாலத்தை மேலே உயர்த்தினான். அவன் அப்படி உயர்த்தவும் குறிப்பிட்ட அந்த விரைவு ரயில் வேகமாக வந்து நதிக்குள் பாய்ந்து மூழ்கினது. அதின் காரணமாக அதில் பயணம் செய்த பலரும் மாண்டு மடிந்து போனார்கள். அந்தச் சம்பவத்தால் அந்த பாலத்துக்கு பொறுப்பான அந்த மனிதனும் தனது கடும் துயரத்தால் பைத்தியக்காரனாகி "நான் மட்டும் கீழ்ப்படிந்திருந்தால்" என்று அடிக்கடி துயரக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தான். இரட்சிப்பின் காரியமாக தேவ ஏவுதல்களுக்கு கீழ்ப்படியாமல் காரியங்களை தங்கள் சுய இஷ்டத்துக்கு கரங்களில் எடுப்போர் யாவரின் முடிவும் இதுவேதான்.

ஒரு தேவனுடைய ஊழியக்காரர் ஒரு அலங்காரமான கட்டிடத்தை கடந்து சென்று கொண்டிருக்கையில் அதற்குள்ளாக இருந்து தனது குதிரையில் அமர்ந்தவனாக வெளியே வந்த ஒரு இளம் வாலிபன் அந்த தேவ மனிதரை பரிகாசம் பண்ண வேண்டும் என்ற அகந்தையில் அவரை சப்தமாக கூவி அழைத்து "போதகரே, நரகத்திற்கு இங்கிருந்து இன்னும் எவ்வளவு தூரம்?" என்று கேட்டான். அந்த தேவ மனிதர் அந்த பரியாசக்காரனுக்கு எந்த ஒரு பதிலும் கொடாமல் தனது வழியில் நடந்து கொண்டிருந்தார். அவர் சில ரஸ்தாக்களைக் கடந்து ஓரிடத்திற்கு வரவும் அந்த பரியாசக்காரனை சுமந்து வந்த குதிரை அவனை நிலத்தில் வீசி எறிந்து அவன் கழுத்து முறிந்து பூமியில் செத்துக் கிடப்பதைக் கண்டார். என் சிநேகிதர்களே, நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன். எந்த ஒரு சூழ்நிலையிலும் முடிவில்லாத நித்தியத்துக்கடுத்த காரியங்களோடு விளையாடிவிடாதீர்கள்.

இந்த இரவிலேயே நீங்கள் இரட்சிக்கப்படக்கூடும். உங்களை எப்படியாவது இயேசு இரட்சகருக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டுவிடும்படியாக தேவ ஊழியர்களாகிய நாங்களும் முயற்சிக்கின்றோம். ஆனால், நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி உயிர் மீட்சிக்கூட்டங்கள் நடக்கும் இந்தக் கட்டிடத்திலிருந்து நேராக எரி நரகத்துக்குப்போகும் பட்சத்தில் இந்தக் கூட்டங்களை நீங்கள் கட்டாயம் நினைவுகூறுவீர்கள். தேவ ஊழியர்களாகிய நாங்கள் எப்படி இங்கிருந்தோம். தேவச் செய்திகளைக் கேட்க வந்த மக்கள் கூட்டத்தினர் எப்படியிருந்தனர். தேவனுடைய பிரத்தியட்சமான பிரசன்னம் இந்தக் கூட்டங்களில் எப்படி அசைவாடினது என்பதை எல்லாம் நீங்கள் நினைப்பீர்கள். நீங்கள் கடந்து சென்றிருக்கும் அந்த நஷ்டப்பட்ட எரிநரக உலகத்தில் "நாசரேத் ஊர் இயேசு போகிறார்" என்ற அழகான பாடலை நீங்கள் கேட்க முடியாது. அங்கு கடந்து செல்ல எந்த ஒரு இயேசுவும் இனி வரவுமாட்டார். சீயோனின் இனிமையான பாடல்களை நீங்கள் அங்கு கேட்க முடியாது. தங்கள் கடின நெஞ்சமுள்ள தாய் தந்தையர்களுக்காக ஜெபிக்க அங்கு சிறு குழந்தைகள் இருக்கமாட்டார்கள். இப்பொழுதே இரக்கத்தின் காலம், இன்றே கிருபையின் நாள். தேவன் இந்த உலகத்தை தம்மண்டை வரும்படியாக அழைக்கின்றார் "நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பி பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன். திரும்புங்கள், திரும்புங்கள், நீங்கள் ஏன் சாகவேண்டும்?"

இவ்வளவு பெரிதான இரட்சிப்பை நீங்கள் அலட்சியப்படுத்துவீர்களானால் நீங்கள் எப்படி தப்பிக் கொள்ளுவீர்கள்? இதை அலட்சியப்படுத்தும் உங்களுக்கு வேறு என்ன நம்பிக்கை உண்டு? உங்கள் நினைவுகள் பூரணமாக விழிப்படையட்டும். கிறிஸ்து இரட்சகர் இந்தக் கூட்டத்திலேயே நின்று கொண்டிருக்கின்றார். உங்கள் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் இரட்சிப்பை அருளுவதற்காக அவர் நம் நடுவில் நின்று கொண்டிருக்கின்றார். இங்குள்ள ஒருவராகிலும் கெட்டுப்போவது அவருக்கு விருப்பமில்லை. அவர்கள் மனந்திரும்பி நித்திய காலமாக தம்மோடு வாழ்வதையே அவர் வாஞ்சிக்கின்றார்.

1867 ஆம் வருடம் பாரீஸ் பட்டணத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு நான் சென்றிருந்தேன். அந்தக் கண்காட்சியில் ஒரு சதுர அடி அகலமுள்ள எண்ணெய் கலவையால் வரையப்பட்ட ஒரு சித்திரத்தை நான் கண்டேன். அந்தப் படத்தில் காணப்பட்ட மனிதனின் உருவம் பார்ப்பதற்கு மிகவும் விகாரமாக, பயங்கரமாக இருந்தது. அந்தப்படமானது 700 ஆண்டு காலங்களுக்கு முன்பாக வரையப்பட்ட ஒன்று என்று என்னிடம் சொன்னார்கள். அந்தப் படத்தை ஒரு சிறிய வெள்ளைத்தாளுடன் இணைத்திருந்தார்கள். அதில் "களைகளை விதைப்போன்" என்று எழுதப்பட்டிருந்தது. களைகளை விதைக்கும் அந்த மனிதனின் உருவம் மனிதனின் சாயலாக இல்லாமல் ஒரு பிசாசின் சாயலாக இருப்பதை நான் கவனித்தேன். அவன் களைகளை விதைக்கும் போது பாம்புகளும், அருவருப்பான ஜீவராசிகளும் அவனது சரீரத்தில் ஊர்ந்து நகர்ந்து செல்லுவதைக் காண முடிந்தது. அவனைச் சுற்றியிருந்த கானகத்தில் தங்கள் இரைக்காகப் பதுங்கிச் செல்லும் ஓநாய்கள் போன்ற கொடிய கானக விலங்கினங்கள் காணப்பட்டன. அந்தப் படத்தை அதற்கப்பால் நான் பல தடவைகளிலும் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். ஆ! அறுப்புக் காலம் வருகின்றது. நீ மாம்சத்துக்கென்று விதைத்தால் மாம்சத்துக்கென்று அழிவை அறுப்பாய். நீ காற்றை விதைத்தால் சூரைக்காற்றை அறுப்பாய். நீ தேவனண்டை வந்து அவருடைய இரட்சிப்பை ஈவும் இலவசமுமாகப் பெற்றுக் கொள்ள அவர் விரும்புகின்றார். நீ விரும்பினால் உனது நித்திய வாழ்வின் காரியத்தை இன்றே நிச்சயித்துக் கொள்ளலாம். இந்த உயிர் மீட்சிக்கூட்டத்திற்கு முன்பாக மோட்சமும், நரகமும் வைக்கப்பட்டுள்ளது. எதைத் தெரிந்து கொள்ளுவாய் என்று நீ அழைக்கப்படுகின்றாய்? நீ இரட்சகர் இயேசுவை தெரிந்து கொள்ளும் பட்சத்தில் அவர் உன்னைத் தம் மார்போடு அரவணைத்து வரவேற்க ஆவலாக காத்திருக்கின்றார். நீ அவரை புறக்கணித்துத் தள்ளுவாயானால் அவரும் உன்னை அப்பால் தள்ளிப் போடுவார்.

நண்பரே, எக்காலத்தும் இருந்திராத அளவில் ஆண்டவராகிய இயேசு இரட்சகர் இன்று உங்களை இரட்சித்து தம்மண்டை சேர்த்துக் கொள்ள ஆவலாக இருக்கின்றார். எக்காலத்தும் இருந்திராத அளவு வல்லமையோடு இன்று அவர் உங்களை தமது வல்லமையால் மீட்டுக் கொள்ள ஆயத்தமாக இருக்கின்றார். தேவனுடைய அளவற்ற இரக்கக் கிருபை உங்களுக்கு முன்பாக வழங்கப்படும் இந்த வேளையில் உங்கள் மனதை நீங்கள் திடப்படுத்திக் கொண்டு இரட்சிக்கப்படமாட்டீர்களா?

சில ஆண்டு காலங்களுக்கு முன்பாக நான் தேவ ஊழியம் செய்த திருச்சபையில் கர்த்தருடைய ஆவியானவர் பலமாக அசைவாடிக் கொண்டிருந்ததை நான் காண முடிந்தது. ஒரு நாள் எனது இரவு கூட்டத்தை முடிக்கும் வேளையில் கர்த்தருக்குத் தங்களை யாராகிலும் ஒப்புக்கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் இருக்கையில் எழுந்து நிற்கும்படியாக நான் அன்பாக கேட்டேன். அப்பொழுது ஒரு மனிதன் நான் சந்தோசத்தால் களிகூரும் விதத்தில் எழுந்து நின்றான். இரட்சிப்பின் விசயத்தில் கொஞ்ச நாட்களாகவே அவன் ஆர்வம் காண்பித்து வந்ததை நான் கவனித்து வந்திருந்தேன். நான் அவனுடைய இருக்கைக்குச் சென்று அவனது கரத்தைப் பற்றிப் பிடித்து "நீங்கள் எழுந்து நிற்பதைப் பார்க்கும்போது எனக்கு சந்தோசமாக இருக்கின்றது. இப்பொழுது நீங்கள் ஆண்டவர் இயேசுவுக்காக உத்தம இருதயத்தோடு முன் வந்திருக்கின்றீர்கள். அப்படித்தானே?" என்றேன் நான்.

"அப்படித்தான் நான் நினைக்கின்றேன். ஆயினும் ஒரே ஒரு காரியம் மட்டும் என் பாதையில் இடைமறித்து நிற்கின்றது" என்றான் அவன்.

"அது என்ன காரியம்? " என்று நான் கேட்டேன்.

"நல்லது" அவன் தனது வார்த்தைகளைத் தொடர்ந்தான். "எனக்கு நெஞ்சுத் திடம் அவ்வளவாக இல்லை. நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன், இன்ன பெயரை உடைய எனது நண்பன் (அவன் தனது நண்பனின் பெயரை என்னிடம் கூறினான்) இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தால் நான் எழும்பி நிற்க மாட்டேன். காரணம், இந்தக் காரியத்தை அவன் பார்த்தால் வாய்விட்டுச் சிரிப்பான். அவனிடத்தில் பேச எனக்குத் தைரியமும் கிடையாது"

"நீ கர்த்தரிடம் வருகிறதாக இருந்தால் தைரியமாக அவருக்கு உன்னை ஒப்புக் கொடுத்து முன் வர வேண்டும்" என்றேன் நான்.

நான் அவனோடு பேசிக் கொண்டிருக்கையில் அவனது உள்ளங்கால் முதல் உச்சந்தலை மட்டும் நடுக்கம் அவனை ஆட்கொண்டிருப்பதை நான் கவனித்தேன். கர்த்தருடைய ஆவியானவர் அவனோடு பரிந்து மன்றாடிக் கொண்டிருக்கின்றார் என்று நான் எனக்குள்ளாக யூகித்துக் கொண்டேன். அவன் எனது மறு நாள் கூட்டத்திற்கு வந்தான். அதற்கு அடுத்த நாள் கூட்டத்திற்கும் கூட வந்தான். மூன்றாம் நாள் கூட்டத்திற்கும் வந்து கலந்து கொண்டான். கர்த்தருடைய ஆவியானவர் அவனுடைய இரட்சிப்பின் காரியத்தில் அடுத்து வந்த நாட்களில் அவனோடு போராடிக் கொண்டிருப்பவராகக் காணப்பட்டார். மோட்சத்தின் தலைவாசல் படிக்கே அவன் வந்து சேர்ந்தவனாக இருந்தான். அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரம சீயோன் பாக்கிய நாட்டிற்கு அற்புதமாக சறுக்கி வந்து சேர்ந்துவிட்டவனைப் போல அவன் காணப்பட்டான். எனினும், அவனது பழைய நண்பர்கள் அவனைப் பரிகாசம் பண்ணுவார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவன் ஆண்டவரை ஏற்றுக் கொள்ளுவதை பின் தள்ளிப் போட்டு கால தாமதம் செய்ததைக் குறித்து என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

இறுதியாக கர்த்தருடைய ஆவியானவர் அவனை விட்டு விலகினார், அவனோடு அவர் போராடும் காரியம் ஒரு முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து ஆறு மாதங்களுக்குப் பின்னர் அவன் அதிக சுகயீனமாக இருப்பதாகவும், நான் அவனை உடனே வந்து பார்க்கும்படியாகவும் எனக்கு அவன் தகவல் அனுப்பினான். நான் துரிதமாக அவனிடம் சென்றேன். அவன் அதிக வியாதியாக இருந்தான். சொல்லப் போனால் அவன் மரித்துக் கொண்டிருந்தான். தனக்கு ஏதாவது நம்பிக்கை உண்டுமா என்று அவன் என்னிடம் கேட்டான். நிச்சயமாக நம்பிக்கை உள்ளது, தேவன் தம்முடைய குமாரனாம் கிறிஸ்து இரட்சகரை அவனை மீட்பதற்காகவே உலகத்திற்கு அனுப்பினார் என்று சொல்லி நான் அவனுக்காக ஜெபித்தேன்.

அவன் கட்டாயம் மரித்துவிடுவான் என்ற எங்கள் எல்லாருடைய எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட விதத்தில் அவன் பூரண சுகம் அடைந்தான். ஒரு நாள் நான் அவனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். அது ஒரு அழகான பிரகாசமான நாள். அவன் தனது வீட்டிற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருந்தான்.

"நீங்கள் கர்த்தருக்காக என்னண்டை வருகின்றீர்கள், அப்படித்தானே?" என்றான் அவன். "நீங்கள் விரைவில் பூரண சுகம் பெற்று எங்களுடைய உயிர் மீட்சிக் கூட்டங்களுக்கு திரும்பவும் வருவீர்கள்" என்றேன் நான்.

"மூடிப் பிரசங்கியார் அவர்களே, நான் இரட்சிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவனாவதற்கு நான் எனக்குள் திட்டமாக நிச்சயித்துக் கொண்டேன். என் உள்ளமும் அதற்கு ஒட்டு மொத்தமாக சம்மதித்துவிட்டது. ஆனால், இந்தக் கணமே நான் அப்படியாகிவிட முடியாது. நான் மிச்சிக்கன் பட்டணம் சென்று அங்கு எனக்கு ஒரு பண்ணையை வாங்கி அங்கு நான் குடியேறியபின்னர் நான் ஒரு கிறிஸ்தவனாகிவிடுவேன்" என்றான் அவன்.

"நீங்கள் பூரண சுக நிலையைப் பெற்றுக் கொள்ளுவீர்கள் என்ற நிச்சயம் உங்களுக்குத் தெரியாதே" என்றேன் நான்.

"ஓ, நான் முழுமையான உடல் ஆரோக்கியத்தை இன்னும் சில தினங்களுக்குள்ளாகப் பெற்றுவிடுவேன். எனக்கு ஒரு புதிய குத்தகை வாழ்வு நிச்சயமாக கிடைத்துள்ளது" என்றான் அவன்.

இரட்சிப்பை அவன் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அவன் தனது உறுதியான நிலைப்பாட்டை உடனே அவன் தீர்மானிக்கும்படியாக நான் அவனுடன் எவ்வளவோ பரிந்து மன்றாடினேன். இறுதியாக அவன் "மூடி அவர்களே, நான் வசிக்கும் இந்த சிக்காக்கோ பட்டணத்தில் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்க முடியாது. என்னைப் பரியாசம் பண்ணும் எனது நண்பர்கள், கூட்டாளிகள் வாழும் இவ்விடத்திலிருந்து விலகி நான் மிச்சிக்கன் பட்டணம் செல்லும்போது நான் உடனடியாக கிறிஸ்தவனாகிவிடுவேன்" என்றான் அவன்.

"இந்த சிக்காக்கோ பட்டணத்தில் உன்னை இரட்சிப்பதற்கு ஆண்டவருடைய கிருபை போதுமானதாக இல்லாதபட்சத்தில் நீ செல்லப்போகும் மிச்சிக்கன் பட்டணத்தில் உன்னை இரட்சிப்பதற்கு அவருடைய கிருபை போதுமானதாக இருக்கவியலாது" என்று நான் திட்டமாகப் பதிலளித்தேன்.

இறுதியாக, அவன் எனது பதிலில் சற்று எரிச்சலடைந்தவனாக என்னைப் பார்த்து "மூடி அவர்களே, எனது இரட்சிப்பைக் குறித்த காரியத்தில் நான் என் மட்டாக உத்திரவாதம் எடுத்துக் கொள்ளுவேன்" என்று கூறவே நான் அவனை விட்டு விலகினேன்.

"அந்த வாரத்தின் நாள் எனக்கு மிகவும் நன்றாக நினைவில் உள்ளது. சரியாக எங்களுடைய அந்த சந்திப்பிற்குப் பின்னர் ஒரு வாரம் கடந்து ஒரு வியாழக்கிழமை மத்தியானம் நான் உடனடியாக வரும்படியாக அவனுடைய மனைவி எனக்கு துரிதமாகத் தகவல் அனுப்பினார்கள். நானும் துரிதமாகப் புறப்பட்டுச் சென்றேன். அவனுடைய ஏழை மனைவியை நான் அவர்கள் வீட்டு வாசலில் சந்தித்து நிலவரத்தைக் கேட்டேன்.

"எனது கணவருக்கு அந்தப் பழைய வியாதி மீண்டும் திரும்பிவிட்டது. நான் இங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனை குழுவில் விசாரித்தபோது இந்த தடவை எனது கணவர் உயிர் பிழைப்புக்கு எந்த ஒரு நம்பிக்கையுமே இல்லை என்றும், அவரை மரிப்பதற்காக அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்றும் கூறினாள்.

"உங்கள் கணவர் என்னைப் பார்க்க விரும்பினார்களா?" என்று நான் அந்த ஸ்திரீயைக் கேட்டேன்.

"இல்லை" என்று அவள் பதிலளித்தாள்.

"அப்படியானால் நான் வரும்படியாக என்னை ஏன் அழைத்தீர்கள்?" என்று நான் கேட்டேன்.

"மனந்திரும்பி இரட்சிக்கப்படாத இந்தக் கொடிய நிலையில் எனது கணவர் மரிப்பதை பார்க்க என்னால் சகிக்கவில்லையாதலால் நான் உங்களை அழைத்தேன்" என்றாள் அவள்.

"உங்கள் கணவர் உங்களிடம் என்ன சொன்னார்? " என்று நான் அவளிடம் கேட்டேன்.

"எனது ஆக்கினை என்றுமாக முத்திரையிடப்பட்டுவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் நான் நரகத்தில் இருப்பேன்" என்று சொன்னார்.

நான் அந்த மனிதன் படுத்திருந்த அறைக்குள் பிரவேசித்தேன். அவன் தனது கண்களை என்மேல் வைத்தவனாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன். ஆனால், அவனோ அமைதியாக இருந்தான். நான் அவனது கால்கள் நீட்டப்பட்டிருந்த பகுதிக்குச் சென்று அவனது முகத்தைக் கூர்ந்து பார்த்து "நீங்கள் என்னிடம் பேசமாட்டீர்களா?" என்று நான் கேட்டேன். இறுதியாக அவன் தனது கடைசியான கோர பயங்கரமான மரணப் பார்வையை என் மீது வைத்தவனாக:-

"மூடி பிரசங்கியார் அவர்களே, நீங்கள் இனி என்னோடு அதிகமாகப் பேசவேண்டாம். காலம் பிந்திவிட்டது. நீங்கள் எனது மனைவியோடும், எனது பிள்ளைகளோடும் பேசி அவர்களுக்காக ஜெபியுங்கள். எனது இருதயம் அதோ அந்த இரும்பு கனல் அடுப்பைப்போன்று கடினமாகிப்போய்விட்டது. எனது ஆக்கினை முத்திரையிடப்பட்டுவிட்டது. நான் இன்னும் சற்று நேரத்தில் நரகத்தில் இருப்பேன்" என்றான்.

ஆண்டவர் இயேசுவின் அன்பையும், அவரது எல்லையற்ற மன்னிப்பின் பிரவாகத்தையும் நான் அவனுக்குச் சொன்னேன். "மூடி அவர்களே, எனக்கு நம்பிக்கையே இல்லை என்று நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள ஆசைப்படுகின்றேன்" என்றான் அவன். நான் அவனது படுக்கைக்கு அருகில் ஜெபிக்கும்படியாக முழங்காலூன்றியபோது "நீங்கள் எனக்காக ஜெபிக்க வேண்டாம். மிக விரைவில் விதவையாகப் போகும் எனது மனைவிக்காகவும், தந்தையற்றவர்களாகப் போகும் எனது பிள்ளைகளுக்காகவும் ஜெபியுங்கள். உங்கள் ஜெபம் அவர்களுக்குத் தேவை. ஆனால், கட்டாயம் எனக்காக ஜெபிக்க வேண்டாம்" என்று அவன் சொன்னான்.

நான் அவனது படுக்கையருகே முழங்காலூன்றி அவனுக்காக ஜெபித்தபோது எனது ஜெபமானது எனது தலைக்கு மேலாகப் போகவில்லை. எனக்கு மேலாக உள்ள வானம் வெண்கலமாக எனக்குக் காணப்பட்டது. அடுத்த நாள், அவனது மனைவி என்னிடம் அந்த மனிதர் மத்தியானத்திலிருந்து சூரிய அஸ்தமன நேரம் வரை கட்டிலில் அப்படியே கிடந்து அடிக்கடி "அறுப்புக்காலம் சென்றது, கோடைகாலம் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை" என்ற தேவனுடைய அந்த பயங்கரமான வார்த்தையைக் கூறிக்கொண்டிருந்தார் என்றாள். அவனது கடைசி மூச்சு ஒடுங்கும் இறுதி நேரம் அவனது உதடுகள் மெதுவாக அசைவதைக் கண்ணுற்ற அவனது மனைவி அவன் உதடுகளிலிருந்து பிறக்கும் கடைசி வார்த்தைகள் என்னவென்று அறியும்படியாக தனது காதை அவனது உதடுகளுக்கு அருகில் வைத்துக் கவனித்தபோது "அறுப்புக்காலம் சென்றது, கோடை காலம் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை" என்று முணுமுணுப்பதைக் கவனித்தாள்.

அந்த மனிதன் ஒரு கிறிஸ்தற்ற வாழ்க்கை வாழ்ந்து கிறிஸ்தற்ற மரணத்தை கடைசியில் சந்தித்தான். நாங்கள் அவனது ஜீவனற்ற சடலத்தை கிறிஸ்தற்ற பிரேதச் சீலையால் சுற்றி கிறிஸ்தற்ற கல்லறையில் புதைத்து அவனை அப்புறப்படுத்தினோம்.

இந்த உயிர் மீட்சிக் கூட்டத்தில் தங்களைக் கர்த்தருக்கு ஒப்புவித்து இரட்சிக்கப்படும்படியாக பரிந்து மன்றாடிக் கேட்டுக் கொள்ளப்படுவோர் பலர் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் இரட்சிப்புக்காக எடுக்கும் எந்த ஒரு தீர்மானத்திலிருந்தும் எந்த ஒரு காரியமும் உங்களை தடுத்தி நிறுத்திவிடாதபடி உங்களைக் காத்துக் கொள்ளுங்கள் என்ற எனது பணிவான தேவ ஆலோசனையை தயவாக ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றே தேவனுடைய மார்புக்கு நேராகப் பறந்து வாருங்கள். நீங்கள் உங்கள் இருதயத்தை ஆண்டவருக்கு திறப்பீர்களானால் இப்பொழுதே இரட்சிப்பைப் பெற்று உள்ளும் புறமும் மேய்ச்சலைக் கண்டடைவீர்கள்.

D.L.Moody
(மொழி பெயர்ப்புச் செய்தி)


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM