"சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும்" (லூக்கா 18 : 1)
"புருஷர்கள் பரிசுத்தமான கைகளை உயர்த்தி எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ண வேண்டும்" (1 தீமோ 2 : 8)
மிகவும் முக்கியமானதும், உங்களுடைய உடனடி ஆலோசனைக்குப் பாத்திரமானதுமான ஒரு கேள்வியை நான் உங்களுக்கு முன்னர் வைக்க விரும்புகின்றேன். உங்களுடைய கண்கள் நோக்குகின்ற இந்தச் செய்தியின் தலைப்பே அந்தக் கேள்வியாகும். அது இரண்டே இரண்டு சிறிய வார்த்தைகளடங்கிய "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்பதாகும்.
இந்தக் கேள்வியானது மற்ற எவரும் உங்கள் ஸ்தானத்தில் உங்களுக்காக நின்று பதில் சொல்லாமல் நீங்கள் மட்டுமே விடையளிக்கக் கூடிய கேள்வியாக இருக்கின்றது. நீங்கள் உங்கள் ஆலய ஆராதனையில் கலந்து கொள்ளுவீர்களோ இல்லையோ அது உங்கள் குருவானவருக்கே தெரியும். நீங்கள் உங்கள் குடும்ப ஜெபங்களில் பங்கு எடுப்பீர்களோ இல்லையோ அது உங்கள் இனத்தவர்களுக்குத் தெரியும். ஆனால், நீங்கள் தனிமையில் ஜெபிக்கின்றீர்களோ இல்லையோ அது உங்களுக்கும் உங்கள் ஆண்டவருக்கும் இடைப்பட்ட காரியமாகும்.
வாசிப்போனே, நான் உங்களுக்கு முன்பாக என் நெஞ்சார்ந்த அன்போடு கொண்டு வரும் கேள்வியை நீங்கள் உடனடியாக ஆராய்ந்து பாருங்கள். நான் உங்களிடம் கேட்கும் கேள்வியானது உங்கள் மூச்சைத் திணறப்பண்ணக்கூடிய மிகவும் இரகசியமான கேள்வி என்று நீங்கள் சொல்லாதேயுங்கள். தேவனுடைய பார்வையில் உங்கள் இருதயம் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்களை பயமுறுத்த அந்தக் கேள்வியில் எதுவுமே இல்லை. "உங்களுடைய ஜெபத்தை நீங்கள் சொல்லிக் கொண்டிருங்கள்" என்று கூறி எனது கேள்வியை நீங்கள் அப்பால் தள்ளிப் போடாதேயுங்கள். ஜெபத்தைச் சொல்லுவது என்பது ஒரு காரியமாகும். ஆனால் ஜெபிப்பது என்பது அதி மேன்மையானதாகும். எனது கேள்வி தேவையற்றது என்று என்னிடம் சொல்லாதேயுங்கள். நான் சொல்லுவதை சில நிமிடங்கள் நீங்கள் பொறுமையாக இருந்து கேட்பீர்களானால் நான் கேட்கும் கேள்வியானது எத்தனை அவசியமானது என்பதை நான் உங்களுக்கு விளக்கிக் காண்பிப்பேன்.
1. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா? என்று நான் உங்களைக் கேட்பதன் காரணம், ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு ஜெபம் இன்றியமையாத தேவையாகும்.
ஆம், ஜெபம் அத்தியாவசியமானது என்று நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். குழந்தைகளோடும், முட்டாள்களோடும் நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கவில்லை. தேவனை அறியாத அஞ்ஞானிகள் வாழ்கின்ற நாட்டின் காரியத்தை நான் சீராக்க எழுந்து நிற்கவில்லை. யாரிடத்தில் கொஞ்சமாகக் கொடுக்கப்படுகின்றதோ அவர்களிடம் கொஞ்சமாகக் கேட்கப்படும் என்பதை நான் அறிவேன். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்ற கிறிஸ்தவர்களால் நிரம்பி வழியும் நம்முடைய சொந்த நாடான இங்கிலாந்து தேசத்தைப் பார்த்துக் கூறுகின்றேன். இதில் வாழ்கின்ற எந்த ஒரு மனிதனும், ஸ்திரீயும் ஜெபிக்காத பட்சத்தில் இரட்சிப்படைய முடியவே முடியாது.
"கிருபையினாலே இரட்சிப்பு" என்ற காரியத்தை யாரைக் காட்டிலும் வலுவாக நான் உயர்த்திக் காண்பிப்பேன். இந்தப் பூமியின் முகத்தில் வாழ்கின்ற பாவிகள் யாவரிலும் கொடிய மாபெரும் பாவிக்கு தேவனுடைய ஈவும் இலவசமுமானதும் முழுமையானதுமான பாவ மன்னிப்பை நான் மிகுந்த மனமகிழ்வோடு வாக்குப்பண்ணுவேன். அந்தப் பாவியின் மரணப்படுக்கையண்டை எந்த ஒரு தயக்கமுமில்லாமல் நான் நின்று "கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை இப்பொழுது விசுவாசி, அப்பொழுது நீ இரட்சிக்கப்படுவாய்" என்று சொல்லுவேன். ஆனால், அந்த பாவியான மனிதன் தன்னளவில் வாய் திறந்து அந்த இரட்சிப்பை தன் ஆண்டவரிடம் கேட்காமல் பெற்றுக் கொள்ளுவது என்பது நான் வேதத்தில் பார்க்க முடியாத ஒரு காரியமாகும். தனது அந்தரங்க ஆத்துமாவை தேவ சமூகத்துக்கு நேராக கண்ணீரின் பெருமூச்சோடு ஏறெடுத்து தனது பாவங்களுக்கான மன்னிப்பை "அன்பின் ஆண்டவர் இயேசுவே, எனது பாவங்களை மன்னித்து, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் எனக்குத் தாரும்" என்று கதறாத எந்த ஒரு மனிதனுக்கும் அது கிடைத்ததை நான் எங்கும் காணவில்லை.
ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவன் தனது வேதாகமத்தை வாசிக்க வேண்டும் என்பது முழுமையான அவசியம் இல்லை. ஒரு மனிதன் படிப்பறிவில்லாத நிர்மூடனாகவோ அல்லது கண் பார்வை இழந்த கபோதியாகவோ இருப்பினும் இரட்சகர் இயேசு அவனது உள்ளத்தில் வாசம் செய்கின்றவராக இருக்கலாம். அதே போல, சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் ஒரு இடத்தில் ஒரு மனிதன் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. சுவிசேஷம் பிரசங்கிக்கப்படாத இடத்தில் அவன் ஒருக்கால் வாழலாம் அல்லது அவன் நோய் பிணியால் கட்டில் கிடையாகக் கிடக்கலாம் அல்லது காது கேட்காத செவிடனாக இருக்கலாம். ஜெபத்தைக் குறித்து இந்தவிதமான தாற்பரியங்கள் எழுப்பிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு மனிதனுடைய இரட்சிப்புக்கு அவன் உள்ளம் நொறுங்குண்டு தேவ சமூகத்தில் ஜெபிக்க வேண்டியது தீராத அவசியமாகும்.
சரீர சுகத்துக்கடுத்த காரியமானாலும் சரியே அல்லது கல்விக்கடுத்த விஷயமானாலும் சரியே அதற்காக எந்த ஒரு தனிப்பட்ட ராஜ பாதையும் கிடையாது. இளவரசர்களானாலும், ராஜாக்களானாலும், ஏழை மக்களானாலும், விவசாயிகளானாலும் அவர்கள் அனைவரும் தங்களுடைய சரீர சம்பந்தப்பட்ட காரியங்களானாலும், அறிவுக்கடுத்தக் காரியங்களானாலும் எந்த ஒரு வேற்றுமையுமின்றி அவரவர் காரியங்களை அவர்களேதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எந்த ஒரு மனிதனும் மற்ற ஒரு மனிதனுக்காக புசிக்கவோ, குடிக்கவோ, அல்லது தூங்கவோ முடியாது. எந்த ஒரு மனிதனும் மற்ற ஒரு மனிதனுக்காக தன்னளவில் மொழியின் அரிச்சுவடியைப் படிக்க இயலாது. இந்தக் காரியங்கள் யாவும் மாந்தர் அவரவருடைய பிரயோஜனத்துக்காக அவர்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியங்களாகும். அப்படி அவர்கள் செய்யாதபட்சத்தில் அவர்கள் ஒருக்காலும் அதின் பயனை அனுபவிக்க இயலவே இயலாது.
அதைப்போலவேதான், மனது, சரீரம், ஆத்துமாவின் காரியங்களும் இருக்கின்றன. ஆத்துமாவின் ஆரோக்கியத்திற்கும் அதினுடைய வளர்ச்சிக்கும் சில முக்கியமான நடபடிகள் தவிர்க்க முடியாத, அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன. இந்தக் காரியங்களை சம்பந்தப்பட்ட அந்தந்த தனிப்பட்ட நபர்களே பொறுப்பெடுத்து கவனிக்க வேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே மனந்திரும்ப வேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே இயேசு இரட்சகரை தங்கள் இருதயத்தில் சொந்த இரட்சகராக ஏற்று நெஞ்சார அவரை அனுபவிக்கவேண்டும். ஒவ்வொருவரும் அவரவராகவே ஆண்டவர் இயேசுவோடு பேசவேண்டும், அவரை நோக்கி ஜெபிக்க வேண்டும், அவரை நோக்கிக் கெஞ்ச வேண்டும். அந்தக் காரியத்தை நீ ஒருவனேதான் உன் மட்டாக செய்தாக வேண்டும். உனக்குப் பதிலாளாக இந்தக் காரியத்தை வேறு எவராலும் செய்யவே இயலாது.
"அறியப்படாத ஒரு தெய்வத்தால்" நீ எப்படி உனது இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஜெபம் இல்லையேல் நீ தேவனை எவ்வாறு அறிந்து கொள்ளுவாய்? இந்த உலகத்திலுள்ள மக்களுடன் நீ பேசி பழகி இருக்காத பட்சத்தில் அவர்களைக்குறித்து உனக்கு ஒன்றும் தெரியாது அல்லவா? அப்படித்தானே, உன் ஆண்டவருடன் ஜெபத்தின் மூலமாகப் பேசாதபட்சத்தில் உன்னால் தேவனை அறிந்து கொள்ள முடியாது. உன் ஆண்டவருடன் மோட்சத்தில் நீ இருக்க விரும்புவாயானால் ஆண்டவருடைய நண்பர்களில் ஒருவனாக நீ இந்தப் பூவுலகத்தில் கண்டிப்பாக வாழ்ந்தாக வேண்டும். ஆண்டவருடைய நண்பர்களில் ஒருவனாக நீ இருக்க விரும்புவாயானால் நீ கட்டாயம் ஜெபித்தே ஆக வேண்டும்.
வாசிப்போனே, கடைசி நாளில் கிறிஸ்துவின் வலது பக்கத்தில் அநேகர் நின்று கொண்டிருப்பார்கள். வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் இருந்து பரிசுத்தவான்கள் கூட்டிச் சேர்க்கப்படுவார்கள். ஒருவராலும் எண்ணித் தொகையிட முடியாத திரள் கூட்டம் அது. அந்த திரள் கூட்டத்தினரின் மீட்பின் காரியம் இறுதியாக நிறைவடையும்போது மீட்பின் ஜெய கீதம் அவர்கள் அனைவரின் வாயிலிருந்தும் வெடித்துக் கிளம்பும். மெய்யாகவே அந்தப் பாடல் மகிமையான ஒரு பாடலாகும். அனைவராலும் ஒரே நேரத்தில் பாடப்படுகின்ற அந்தப் பாடலின் ஓசையானது திரளான தண்ணீர்களின் இரைச்சல்களைப் பார்க்கிலும், பெரும் இடி முழக்கங்களைப் பார்க்கிலும் பலத்த ஓசையுடையதாகவிருக்கும். ஆனால் மகா ஆச்சரியமானதொரு காரியம் என்னவெனில், அந்தப் பாடலில் எந்த ஒரு ஏற்றத் தாழ்வோ அல்லது மாறுபட்ட, வித்தியாசமான கருத்துக்களோ இல்லாமல் அந்தப் பாடல் ஒரே நிலையில் அற்புதமாக அமைந்திருக்கும். அதைப் பாடுகின்ற அந்த திரள் கூட்டம் ஒரே இருதயத்தோடும் ஒரே குரலோடும் அந்தப் பாட்டைப் பாடுவார்கள். அவர்கள் அனைவரின் அனுபவங்களும் மொத்தத்தில் ஒன்றாகவேதான் இருக்கும். அவர்கள் எல்லாரும் விசுவாசித்தவர்களாயிருப்பார்கள். அவர்கள் அனைவரும் அடிக்கப்பட்ட தேவ ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்தால் தங்கள் பாவங்களறக் கழுவப்பட்டிருப்பார்கள். அவர்கள் யாவரும் மறுபடியும் பிறந்திருப்பார்கள். அவர்கள் அனைவரும் ஜெபிக்கிறவர்களாயிருப்பார்கள். ஆம், பூலோகத்தில் நாம் கட்டாயம் ஜெபிக்க வேண்டும். பூலோகத்தில் நாம் ஜெபிக்காவிட்டால் பரலோகத்தில் நாம் நிச்சயமாக ஆண்டவரை பாடித் துதிக்க முடியாது.
வாசிப்போனே, ஜெபிக்காமலிருப்பது என்பது தேவனில்லாமல் இருப்பது என்பதாகும். ஜெபிக்கமாலிருப்பது என்பது கிறிஸ்து இரட்சகர் இல்லாமலிருப்பது, தேவ கிருபை இல்லாமலிருப்பது, நம்பிக்கை இல்லாமலிருப்பது, மோட்சம் இல்லாமலிருப்பது என்பதுவே அதின் பொருளாகும். அந்த வழி நரகத்தின் வழியாகும். "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்று நான் உங்களிடம் கேட்ட கேள்வியின் தார்ப்பரியம் இப்பொழுது உங்களுக்கு நன்கு புரிந்திருக்கும் என்று நான் நம்புகின்றேன். நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?
2. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா? என்று நான் உங்களிடம் கேட்கின்றேன். காரணம், ஒரு உண்மையான மெய்க் கிறிஸ்தவனின் நிச்சயமான அடையாளம் அவனது ஒழுங்கான ஜெபப் பழக்கம் மட்டுமே.
இந்த உலகத்திலுள்ள தேவனுடைய பிள்ளைகள் யாவரும் இந்தக் காரியத்தில் ஒரேவிதமான ஒத்த கருத்தையே கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கிறிஸ்தவ பக்தி வாழ்வில் ஜீவனும், உண்மையும் இருக்கின்றது என்று நாம் அவர்களைக் காண்கின்ற வேளையிலேயே அவர்கள் ஜெபத்தில் இருந்து கொண்டிருப்பதை நாம் நிச்சயமாகக் கண்டு கொள்ளலாம். உலகத்தில் பிறக்கும் ஒரு சிசு உயிரோடு இருக்கின்றது என்பதை அதினுடைய சுவாசித்தலின் மூலமாக மக்கள் அடையாளம் காண்பது போல மறுபடியும் பிறந்த ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அவர்களின் முதல் செயல் அவர்களுடைய ஜெபத்திலேயேதான் அடங்கியிருக்கின்றது.
தேவன் தெரிந்து கொண்ட அவருடைய மக்கள் அனைவரிலும் காணப்படும் அடையாளங்களில் இதுவும் ஒன்றாகும். "இரவும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள்" (லூக்கா 18 : 7) என்று தேவனுடைய வார்த்தை அதை தெளிவுபடுத்துகின்றது. அவர்களை கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டிகளாக மாற்றிய பரிசுத்த ஆவியானவர் "அப்பா, பிதாவே என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியையும் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றார்" (ரோமர் 8 : 15) அவர்களை உயிர்ப்பித்த தேவனானவர் அவர்களுக்கு ஒரு குரலையும், ஒரு நாவையும் கொடுத்து "இனி நீங்கள் ஊமையர்களாக இருக்காதீர்கள்" என்று கூறியிருக்கின்றார். தேவனுக்கு ஊமைப் பிள்ளைகள் எவரும் கிடையாது. தேவனிடமிருந்து அவர்கள் பெற்றுக் கொண்ட புது சிருஷ்டியின் சாயலில் ஜெபிப்பதையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். ஆம், ஒரு குழந்தைக்கு "அழுவது" என்பது எப்படியாக அதினுடன் ஒட்டின சுபாவமாக இருக்கின்றதோ அதைப்போன்று தேவ மக்களுக்கும் எப்பொழுதும் அவர்கள் ஜெபித்துக் கொண்டிருப்பது அவர்களின் பரிசுத்த சுபாவமாக இருக்கின்றது. தேவனிடமிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய அவருடைய கிருபையையும், இரக்கத்தையும், தயவையும் குறித்த அத்தியந்த தேவையை அவர்கள் அதிகமாக தங்கள் மட்டாக உணருகின்றார்கள். அதே சமயம் தங்களுடைய ஒன்றுமில்லாமையையும், வெறுமையையும், சத்துவமில்லாமையையும் மனதார உணருகின்றார்கள். தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று உணர்ந்த அவர்கள் ஆண்டவரை நோக்கி ஜெபத்தில் கதறுகின்றார்கள்.
தேவனுடைய பரிசுத்த வேதாகமத்தில் காணப்படுகின்ற தேவனுடைய பரிசுத்தவான்களைக் குறித்த அவர்களுடைய வாழ்க்கைகளை நான் மிகவும் கவனமாக ஆராய்ந்து பார்க்கின்றேன். ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை காணப்படுகின்ற அவர்களின் வாழ்க்கைச் சரித்திரங்களில் அவர்களில் ஒருவராகிலும் ஜெப மாந்தனாக இருந்ததில்லை என்பதை என்னால் கண்டு கொள்ள முடியவில்லை.
வேதாகம காலத்திற்குப் பின்னர் இந்தப் பூமியில் வாழ்ந்த அநேக சிறந்த கிறிஸ்தவ பக்தர்களைக் குறித்து நான் வாசித்திருக்கின்றேன். அவர்களில் சிலர் ஐசுவரியவான்களாகவும், சிலர் தரித்திரராகவும் இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் கல்விமான்களாகவும், சிலர் கல்வியறிவற்றவர்களாகவும் இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலர் எப்பிஸ்கோப்பியர்களாகவும், பிரஸ்பிட்டேரியன்களாகவும், சிலர் பாப்டிஸ்ட் சபைப் பிரிவினராகவும், வெஸ்லியன் திருச்சபையைச் சேர்ந்தவர்களாகவும், சிலர் கால்வினிஸ்ட்டுகளாகவும், சிலர் அர்மீனியர்களாகவும் இன்னும் நானாவித சபைப் பிரிவினர்களாகவும் அவர்கள் காணப்பட்டிருக்கின்றனர். ஆயினும், இவர்கள் யாவரும் பொதுவாக ஒரு காரியத்தைக் கொண்டிருப்பதை நான் மிகுந்த ஆச்சரியத்துடன் காண்கின்றேன். ஆம், அவர்கள் எல்லாரும் ஜெபிக்கும் மனிதர்களாக இருந்தனர்.
நம்முடைய காலத்திலுள்ள பல்வேறு மிஷனரி ஸ்தாபனங்கள் செய்கின்ற மகத்தான தேவ ஊழியங்களின் அறிக்கைகளை நான் வாசிக்கின்றேன். பூலோகத்தில் பல்வேறு கடையாந்திர பகுதிகளில் வாழ்கின்ற புறமதஸ்தர்களான ஆண்களும், பெண்களும் தேவனுடைய சுவிசேஷத்தை ஏற்று அவருடைய மந்தையின் ஆடுகளாக சேர்வதைக் குறித்து நான் மிகுந்த சந்தோசமடைகின்றேன். இருண்ட கண்டமாகிய ஆப்பிரிக்காவில் மக்கள் கிறிஸ்தவர்களாகின்றனர். அப்படியே நியூஸிலாந்தில், அப்படியே இந்துஸ்தான் நாட்டில், அப்படியே அமெரிக்கா தேசத்தில் புற மதஸ்தர் ஆண்டவருடைய அடியார்களாகின்றனர். இப்படி கிறிஸ்தவர்களாகின்ற அந்த நாடுகளின் மக்கள் இயற்கையாக தங்கள் இனஜனத்தவர்களிலிருந்து எந்த ஒரு வெளிப்படையான மாற்றமின்றிக் காணப்பட்டாலும் இவர்கள் அனைவரிலும் மிகவும் பிரகாசமாக மின்னல் கீற்று போன்ற வித்தியாசத்தில் காணப்படுகின்ற ஒரு காரியத்தை நான் எல்லா மிஷனரி ஸ்தாபனங்களிலும் கவனித்திருக்கின்றேன். அந்தக் காரியம் யாதெனில், இந்தவிதமாக புறமதஸ்தர்களிலிருந்து கிறிஸ்தவர்களாகும் மக்கள் எப்பொழுதும் ஜெபிக்கின்றவர்களாக இருக்கின்றார்கள் என்பதுதான்.
வாசிப்போனே, ஒரு மனிதன் உள்ளான மனமாற்றமின்றியும், உண்மையில்லாமலும் ஜெபிக்கலாம் என்பதை நான் மறுக்கவில்லை. ஒரு மனிதன் ஜெபிக்கின்றான் என்ற ஒரே காரணத்திற்காக அவனுடைய ஆத்துமாவைக் குறித்த அனைத்துக் காரியங்களும் சீரும் செம்மையுமாக இருக்கும் என்று நான் ஒரு கண நேரம் கூட பாசாங்கு செய்து சொல்ல மாட்டேன். மார்க்கத்தின் அடுத்த பக்கத்தில் எங்கும் காணப்படுகின்ற அதே ஏமாற்றமும், மாய்மாலமுமான காரியமே இங்கும் உள்ளது.
எனினும், ஒரு மனிதன் ஜெபிக்கவில்லை என்றால் அவன் உண்மையான கிறிஸ்தவனே அல்லன் என்பது ரூபகாரப்படுத்தப்பட்ட, அதாவது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். அவன் தன்னளவில் தான் செய்த பாவங்களுக்காக பட்சாதாபப்படாமல் இருக்கலாம். அவன் தேவனை நேசிக்காமல் இருக்கலாம். அவன் தனது ஆண்டவருக்கு அவருடைய கல்வாரி அன்புக்குத் தான் கடனாளி என்பதை நெஞ்சார உணராமல் இருக்கலாம். அவன் பரிசுத்தத்தை வாஞ்சிக்காமல் இருக்கலாம். பரலோக பாக்கிய வாழ்க்கையின் மேல் அவன் விருப்பமில்லாமல் இருக்கலாம். அவன் இன்னும் மறுபடியும் பிறந்த அனுபவத்துக்குள் வராமல் இருக்கலாம். அவன் புது சிருஷ்டிப்பின் மாட்சியான பரிசுத்த நிலைக்குள் இன்னும் பிரவேசியாமல் இருக்கலாம். இவை எல்லாம் அவனுக்கு இல்லாமலிருந்த போதினும் அவன் தன்னைத் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட பாத்திரம் என்றும், விசுவாசம், நம்பிக்கை, கிருபை, தேவனைப் பற்றிய அறிவு எல்லாம் தனக்கிருப்பதாக அறியாத கிறிஸ்தவர்களிடம் கூறி அவர்களை ஏமாற்றலாம். ஆனால், அவன் ஜெபிக்காதவனாக இருந்தால் இவைகள் எல்லாம் வெறும் வாய் ஜாலமான மாய்மால வார்த்தைகளேயன்றி பிறிதொன்றுமில்லை.
நான் உங்களுக்கு இன்னும் கூடுதலாக சொல்ல ஆசைப்படுகின்றேன். பரிசுத்த ஆவியானவர் ஒரு இருதயத்தில் மெய்யாகவே கிரியை நடப்பிக்கின்றார் என்றால் அதின் பூரண திருப்தியான நிச்சயமான அடையாளம் யாதெனில் அந்த ஆத்துமா தேவனோடு இருதயம் நிறைந்த ஜெப பழக்கத்தில் வாசம் செய்து கொண்டிருக்கும். ஒரு மனிதன் தவறான உள்ளத்தின் நினைவுகளோடு பிரசங்கம் பண்ணலாம். ஒரு மனிதன் கிறிஸ்தவ மார்க்க சம்பந்தமாக புத்தகங்கள் எழுதலாம், தேவ ஜனத்திற்கு முன்பாக அழகான பிரசங்கங்களைச் செய்யலாம், நற்கிரியைகளைச் செய்வதில் மிகவும் கருத்துள்ளவனாக இருப்பவனாக தன்னை மற்றவர்களுக்கு காண்பிப்பவனாக இருக்கலாம். இவைகளை எல்லாம் அவன் செய்தாலும் அவன் ஒரு யூதாஸ் காரியோத்தாக இருக்கலாம். ஆனால், ஒரு மனிதன் தன் தனிமைக்குச் சென்று தேவனுடைய சமூகத்தில் தன் உள்ளத்தை உடைத்து ஊற்றி ஜெபிக்கின்றான் என்றால் அந்த மனிதன் நிச்சயமாக உண்மையுள்ளவனாக இல்லாதபட்சத்தில் அப்படிச் செய்ய இயலாது. நமது அருமை இரட்சகர் இயேசு தாமே ஒரு மனிதனின் உண்மையான மனந்திரும்புதலின் உள்ளங் கை நெல்லிக் கனியான அடையாளம் அவனுடைய ஜெபம் என்பதை முத்திரையிட்டு நமக்கு உறுதிப்படுத்தியிருக்கின்றார். தமஸ்கு பட்டணத்திலுள்ள நேர்த் தெருவில் யூதா என்பவன் வீட்டிலிருந்த சவுலினிடத்தில் கர்த்தர் அனனனியாவை அனுப்பும் போது சவுலின் மனந்திரும்புதலின் காரியமாக அவனுக்குக் கொடுத்த உறுதியான ஒரே அத்தாட்சி "இப்பொழுது அவன் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கின்றான்" (அப் 9 : 11) என்பது மட்டுமே.
ஒரு மனிதன் உண்மையாகவே ஜெப நிலைக்கு வருவதற்கு முன்பாக அவனது மனத்திரையில் அநேக உணர்வுகள், விருப்பங்கள், நோக்கங்கள், தீர்மானங்கள், நம்பிக்கைகள், பயங்கள் போன்றவைகள் இருக்கும் என்பது எனக்குத் தெரியும். இவைகள் எல்லாம் உறுதியற்ற ஆதாரங்கள் ஆகும். இவைகள் தேவனற்ற மக்களிடம் காணப்படும் காரியங்களாகும். இவைகள் எல்லாம் நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்பது அல்ல. காலை வேளைப் பனியானது மேகக்கூட்டம் கலையும் வரை புல்லின் மேல் தங்கியிருப்பதைப் போன்றது. காலைச் சூரிய ஒளி தலை காட்டவும் அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இருதயத்தின் ஆழத்திலிருந்து வரும் இருதயம் நிறைந்த ஜெபமானது நொறுங்குண்டதும், நறுங்குண்டதுமான இருதயத்திலிருந்து வெளி வரும்.
வாசிப்போனே, சுவிசேஷத்தை மக்களுக்குப் பிரசங்கிக்கின்ற தேவ ஊழியர்கள் ஆழமான ஜெப அனுபவங்களில் இருக்கின்றார்கள் என்பதை நீ கேள்விப்படும்போது அதைக் குறித்து நீ ஒருக்காலும் ஆச்சரியப்பட வேண்டாம். இந்த ஜெப அனுபவத்துக்குள் உன்னை வழிநடத்தவும், நீ அதை அறிந்து கொள்ளவும் வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். வேதாகம சத்தியங்களைக் குறித்த உனது கண்ணோட்டங்கள் சரியாக இருக்கலாம். புராட்டஸ்டண்ட் மார்க்கத்தைக் குறித்த உனது அன்பும், வைராக்கியமும் அனலானதாகவும், தவறாததாகவும் இருக்கலாம். எனினும், இவை எல்லாம் வெறும் மண்டை அறிவும், வறட்டு சபை வைராக்கியமுமே அல்லாமல் பிறிதொன்றுமில்லை என்பதை நீ மறந்து விடுவதற்கில்லை. நாங்கள் உன்னைக் குறித்து நீ தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்புவதெல்லாம் மெய்யாகவே நீ தேவனுடைய கிருபாசனத்துடன் அந்நியோந்நிய சகவாசம் கொண்டிருக்கின்றாயா? உன்னோடு பரலோக தேவனுடன் நெருங்கி உறவாட முடிகின்றதா? அந்த தேவனைக் குறித்து மற்றவர்களிடம் உன்னால் பேச முடிகின்றதா? என்பதுதான். வாசிப்போனே, நீ உன்னை ஒரு உண்மைக் கிறிஸ்தவனாக அடையாளம் கண்டு கொள்ள விரும்புகின்றாயா? அப்படியானால், "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்ற எனது கேள்விக்கு நீங்கள் முதன்மையான முக்கியத்துவம் கொடுத்தாக வேண்டும்.
3. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா என்று நான் உங்களைக் கேட்பதன் காரணம் கிறிஸ்தவ மார்க்கத்தில் தனி ஜெபத்தைப் போன்று வேறு எதுவும் புறக்கணிக்கப்படவில்லை என்பதுதான்.
கிறிஸ்தவ பக்தி வழிபாட்டுக்கான காரியங்கள் நிரம்பி வழியும் ஒரு காலக்கட்டத்தில் நாம் இப்பொழுது இருந்து கொண்டிருக்கின்றோம். ஆண்டவரைக் கூடி தொழுது கொள்ளக்கூடிய தேவாலயங்கள் முன்பு என்றுமே இருந்திராத அளவில் இன்று நிறைய இருக்கின்றது. இங்கிலாந்து ஒரு தேசமாக காலூன்றத் தொடங்கிய காலம் தொடங்கி இதுவரை இருந்திராத அளவில் இன்று ஏராளமான மக்கள் அந்த ஆலயங்களுக்குச் சென்று கர்த்தரை ஆராதிக்கின்றார்கள். இவை எல்லாம் இருந்தபோதினும் மக்களிடத்தில் தனி ஜெப வாழ்க்கையானது பெருமளவிற்கு புறக்கணித்துத் தள்ளப்பட்டிருப்பதை நான் துயரத்துடன் காண்கின்றேன். தங்களைக் கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் பெரும்பாலான மக்கள் ஜெபிப்பதே கிடையாது.
நான் சொல்லுகின்ற இந்த வார்த்தைகள் மிகவும் அதிர்ச்சியடையப் பண்ணுவதாகவும், அநேகரை ஆச்சரியத்துக்குள்ளாக்குவதாகவுமாகவும் இருக்கலாம் என்பதை நான் அறிவேன். ஆயிரக்கணக்கானோர் ஒரு வார்த்தை கூட சொல்லி ஜெபிப்பதில்லை என்பதை நான் நம்புகின்றேன். அவர்கள் புசிக்கின்றார்கள், அவர்கள் குடிக்கின்றார்கள், அவர்கள் உறங்குகின்றார்கள், அவர்கள் படுக்கையிலிருந்து எழும்புகின்றார்கள். அவர்கள் தங்கள் வேலைக்கும் பண்ணைக்கும் செல்லுகின்றார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு மாலைப் பொழுதில் திரும்பி வருகின்றார்கள். அவர்கள் தேவனுடைய ஆகாயத்தை சுவாசிக்கின்றார்கள். அவர்கள் தேவனுடைய சூரிய ஒளியைக் காண்கின்றார்கள். தேவனுடைய இரக்கங்களையும், அவருடைய கிருபைகளையும் வாழ்வில் அனுபவித்து ஆனந்திக்கின்றார்கள். சாவுக்கேதுவான சரீரங்களை அவர்கள் சுமந்து திரிகின்றார்கள். தேவனுடைய நியாயத் தீர்ப்பையும், முடிவில்லாத நித்தியத்தையும் தங்களுக்கு முன்பாக வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒருக்காலும் தங்கள் ஆண்டவரோடு பேசுவது கிடையாது. அழிந்து போகும் மிருகங்களைப் போல அவர்கள் வாழ்கின்றார்கள். தங்களிடத்தில் ஒரு அழியாத ஆத்துமா இருக்கின்றது என்ற எண்ணமற்றவர்களாக அவர்கள் நடந்து கொள்ளுகின்றார்கள். தங்களுடைய ஜீவனையும், ஜீவ சுவாசத்தையும் தம்முடைய கரங்களில் வைத்திருப்பவரும், தங்களுடைய நித்திய நியாயத் தீர்ப்பை அவரது வாயிலிருந்து ஒரு நாள் கேட்கப் போகின்றோமே என்ற எண்ணம் கூட இல்லாமல் அவரோடு ஒரு வார்த்தை கூட பேசாமல் கல் நெஞ்சினர்களாக வாழ்கின்றனர். இது எத்தனை பயங்கரமான காரியம் என்று பாருங்கள்!
பல்லாயிரக்கணக்கான மக்களின் ஜெபங்கள் எந்த ஒரு அர்த்தமும், பொருளும் இல்லாமல் வெறுமனே திரும்பத் திரும்ப பாடப்படும் ஒரு பாடல் பல்லவியாக இருக்கின்றது என்று நான் நம்புகின்றேன். தாங்கள் குழந்தைகளாக இருந்தபோது ஓய்வு நாள் பள்ளியில் படித்த சில வார்த்தைகளை ஆத்திரம் அவசரமாக தங்கள் ஜெபங்களில் சொல்லி அத்துடன் திருப்தியடைந்து விடுகின்றனர். சிலர் கர்த்தருடைய ஜெபத்தைக் கூறுவதுடன் மன நிறைவு கொண்டு விடுகின்றனர். சில ஏழை மக்கள் இந்த நாள் வரை பண்டைய காலத்து கத்தோலிக்கர்களுடைய பாரம்பரிய வழக்கத்தின்படி கீழ்க்கண்ட அடியைப் பாடி இரவில் தங்கள் தூக்கத்திற்குச் செல்லுகின்றனர்:-
மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவானே
படுக்கைக்குச் செல்லும் எனக்கு நல்ல தூக்கம் தாருங்கள்.
இவ்விதமாகத் தங்கள் துணிகளைத் துவைக்கும் போதும், ஆடைகளை உடுத்திக்கொள்ளும்போதும் தாங்கள் ஒரு காலத்தில் மனப்பாடமாக படித்து உள்ளத்தில் வைத்திருக்கும் இரண்டு அல்லது மூன்று அடிகள் கொண்ட வார்த்தைகளை ஜெபங்களாகக் கூறி அதில் மன நிறைவு கொண்டு விடுகின்றனர். இது ஜெபமாகாது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து முழு இருதயத்தோடு வராத எதுவும் ஜெபமாகாது. அந்த ஜெபத்தால் நமது ஆத்துமாக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைக்காது. அநாகரீகமான ஏழை புற மதஸ்தவரான மக்கள் தங்களின் கல், மண்ணால் உருவாக்கப்பட்ட ஜீவனற்ற விக்கிரகங்களுக்கு முன்பாக தாரை, தப்பட்டை, கொட்டு, மேளம் அடிக்கும் விருதா செயல்களை அது குறிப்பதாகும். எந்த ஒரு ஜெபத்தில் இருதயம் இல்லையோ அந்த ஜெபம் வெறும் உதடுகளின் மற்றும் நாவின் வேலையே தவிர கர்த்தர் கவனிக்கக்கூடிய காரியம் அதில் எதுவும் இருக்காது. அது ஜெபம் ஆகாது. தமஸ்கு செல்லும் பாதையில் ஆண்டவர் சவுலை சந்திப்பதற்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமின்றி சவுல் ஒரு காலத்தில் நீண்ட ஜெபங்களை எல்லாம் செய்திருப்பார். ஆனால், கர்த்தரால் அவர் சந்திக்கப்பட்டு இருதயம் நொறுங்குண்ட நிலையில் அவர் ஜெபித்தபோதுதான் "அவன் இப்பொழுது ஜெபம் பண்ணுகிறான்" என்று அவரைக் குறித்து ஆண்டவர் சாட்சி கொடுத்தார்.
வாசிப்போனே, இது உனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லையா? நீங்கள் என்னைக் கவனியுங்கள். நான் உங்களுடன் காரணத்தோடு பேசுகின்றேன். நான் உங்களிடத்தில் உண்மையையே பேசுகின்றேன். இயற்கையாக எல்லாராலும் ஜெபிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஒருக்காலும் கூடவே கூடாது.
4. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா என்று நான் உங்களை கேட்பதன் காரணம், கருத்தான ஜெபம் சிறந்த பரிசுத்தத்தின் இரகசியமாகும்
எந்த ஒரு விவாதமோ, கருத்து வேற்றுமையோ இல்லாமல் உண்மைக் கிறிஸ்தவ மக்கள் பெரியதொரு வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மாபெரும் இடைவெளியானது எப்படி இருக்கின்றது என்றால் தேவனுடைய போர்ப்படையில் யாவருக்கும் முந்திய ராணுவ முன்னணியும், எல்லாருக்கும் பிந்திய கடைக்கோடி ராணுவ பின் அணியாகவும் உள்ளது.
எல்லாரும் அந்த நல்ல போராட்டத்தைத்தான் போராடுகின்றார்கள்! ஆனால் அவர்களில் சிலர் எத்தனை வீராவேசமாக மற்றவர்களைக் காட்டிலும் கடுமையாக சமர் புரிகின்றார்கள். அவர்கள் எல்லாரும் தேவனுடைய ஊழியத்தைத்தான் செய்கின்றார்கள். ஆனால் அவர்களில் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் எத்தனை அதிகமாகச் செய்துவிடுகின்றனர்! அவர்கள் எல்லாரும் தங்கள் ஆண்டவருக்காக வெளிச்சம் வீசிப் பிரகாசிக்கின்றார்கள் என்பது உண்மைதான்! ஆனால் அவர்களில் சிலர் மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாக ஒளி வீசிப் பிரகாசிக்கின்றார்களே! அவர்கள் எல்லாரும் ஒரே பந்தயத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கின்றனர். எனினும், அவர்களில் சிலர் தங்களுடன் ஓடி வந்த அநேகரைக் காட்டிலும் மிக விரைவாக முன்னோக்கி ஓடிவிட்டார்களே! அவர்கள் எல்லாரும் ஒரே ஆண்டவர் இயேசுவை நேசித்தவர்கள்தான், ஆனால் அவர்களில் சிலர் மற்றவர்களைக்காட்டிலும் வெகு அதிகமாகத் தங்கள் ஆண்டவரை நேசித்து விட்டார்களே! நான் இங்கு குறிப்பிட்டது சரிதானே என்று எந்த ஒரு உண்மைக் கிறிஸ்தவனையும் கேட்கின்றேன். காரியங்கள் இப்படி இருக்கவில்லையா?
அநேக கர்த்தருடைய பிள்ளைகள் தாங்கள் மறுபடியும் பிறந்த காலத்திலிருந்து எந்த ஒரு வளர்ச்சியும் காண்பிக்காமல் தங்கள் வாழ்நாள் காலம் முழுவதும் பாலுண்கின்ற குழந்தைகளாகவே இருக்கின்றனர். அவர்கள் கிறிஸ்துவின் பள்ளியில் ஏ, பி, சி, என்ற ஆரம்ப அச்சரங்களுக்கு மேல் செல்லாமல் இன்னும் அதே கடைக்கோடி பாடத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தேவனுடைய மந்தைக்குள் எந்த ஒரு சலனமுமின்றி படுத்த நிலையிலேயே கிடக்கின்றனர். வருடத்திற்கு வருடம் அவர்களுடைய அதே பழைய பாவங்கள் அவர்களில் அப்படியே குடி கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அவர்கள் தங்கள் பழைய அனுபவங்களையே சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்வில் சற்றும் முன் செல்ல விருப்பமில்லாமல் அதே பழைய பாலுணவில் அவர்கள் இருப்பதுடன் பலமான ஆகாரத்தை அவர்கள் வெறுக்கின்றவர்களாக இருக்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்பாக நீங்கள் அவர்கள் வாழ்வில் எந்த ஒரு சிறுபிள்ளைத்தனத்தை கவனித்தீர்களோ அதே சிறு பிள்ளைத்தனம், அதே பெலவீனங்கள், அதே குறுகிய மனப்பான்மை, அதே திருக்கான இருதயம், தங்களுடைய குறுகிய வட்டத்துக்கு அப்பால் சென்றுவிடாத அதே அற்பமான விருப்பங்கள். உண்மையில் அவர்கள் மோட்ச பிரயாணிகள்தான். ஆனால், யோசுவாவின் புஸ்தகத்தில் நாம் வாசிக்கின்ற தந்திரமான கிபியோனின் குடிகளான பிரயாணிகள் அம்மக்கள். அவர்கள் அப்பம் எப்பொழுதும் உலர்ந்தும், பூசணம் பூத்ததுமாகவே இருக்கும். அவர்கள் பாதரட்சைகள் பழையதும், கிழிந்ததுமாகவே இருக்கும். அவர்கள் வஸ்திரங்கள் அழுக்கும், கிழிந்ததுமாகவே இருக்கும். இந்த வார்த்தைகளை நான் துயரத்தோடும், வேதனையோடும் கூறுகின்றேன். எனினும், எந்த ஒரு உண்மைக் கிறிஸ்தவனும் இதை உண்மையென்று என்னுடன் சேர்ந்து ஒத்துக் கொள்ளுவான்.
தேவனுடைய ஜனத்தில் மற்றொரு கூட்டத்தினர் உண்டு. அவர்கள் எப்பொழுதும் பலத்தின் மேல் பலம் பெற்று முன்னேறிச் செல்லும் மக்களாவார்கள். மழைக்குப் பின்னர் பசுமையும் செழிப்புமாக வளர்கின்ற பச்சைப் பசேரென்ற புல்லைப்போல அவர்கள் வளருவார்கள். எகிப்து தேசத்திலே இஸ்ரவேலர் பலுகிப் பெருகினதுபோல அவர்கள் பெருகுவார்கள். சில சமயங்களில் அவர்கள் சோர்புற்றவர்களாகக் காணப்பட்டாலும் கிதியோனைப் போல எப்பொழுதும் முன்னேறுகிறவர்களாக இருப்பார்கள். அவர்கள் கிருபையின் மேல் கிருபை பெற்று, விசுவாசத்தின் மேல் விசுவாசம் அடைந்து, பெலத்தின் மேல் பெலன் பெற்று முன் செல்லுவார்கள். நீங்கள் அவர்களைச் சந்திக்கின்ற ஒவ்வொரு சமயமும் அவர்களின் இருதயம் விசாலமானதாகவும், அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சி பெரியதாகவும், உயரமானதாகவும், வலிமையானதாகவும் இருக்கக் காண்பீர்கள். தங்களுடைய விசுவாசத்தை உங்களுக்கு உறுதிப்படுத்தி மெய்ப்பிக்க தங்கள் வசம் நற்கிரியைகளை அவர்கள் கொண்டிருப்பதுடன் அவர்கள் தங்கள் விசுவாசத்தில் வைராக்கியமுடையவர்களாக இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். அவர்கள் தங்கள் ஆண்டவருக்காக பெரிய காரியங்களை முயற்சித்து அவருக்காக பெரிய காரியங்களைச் செய்வார்கள். அவர்கள் அதில் தவறும்பொழுது திரும்பவும் அதைச் செய்ய முயற்சிப்பார்கள். அவர்கள் விழும்போது உடனடியாக எழுந்து நிற்பார்கள். இவை யாவற்றிலும் அவர்கள் தங்களை அப்பிரயோஜனமற்ற ஏழை ஊழியர்கள் என்று நினைத்துக் கொள்ளுவதுடன் தங்கள் அன்பின் ஆண்டவருக்காக இதுவரை ஒன்றுமே செய்யவில்லை என்று எண்ணி தங்களுக்குள் புலம்பிக் கொள்ளுவார்கள். இந்த தேவ மக்கள்தான் தேவனுடைய ஜீவனுள்ள கிறிஸ்தவ மார்க்கத்தை உலக மக்கள் அனைவரின் பார்வையில் அருமையும், பெருமையும், அலங்காரமுமாக்கி நிற்கின்றனர். மனந்திரும்பாத மக்களிடமிருந்து புகழ்ச்சியையும், சுயநலம் நிறைந்த இந்த உலக மக்களிடமிருந்து மேன்மையான புகழ் ஆரங்களையும் தங்கள் ஆண்டவருக்காக இந்த மக்கள் பெற்றுவிடுகின்றனர். நீங்கள் இந்த தேவ மக்களைச் சந்திப்பீர்களானால் தேவனுடைய சமூகப் பிரசன்னத்திலிருந்து அப்பொழுதுதான் இறங்கி வந்த மோசே முனிவரை சந்தித்தது போன்ற தேவப் பிரசன்னத்தை நீங்கள் உணருவீர்கள். இந்த மக்களை நீங்கள் சந்தித்துவிட்டு பிரிந்து செல்லும்போது நெருப்பண்டை அனல் காய்ந்துவிட்டு கடந்து செல்லும் ஒரு மனிதனைப் போன்று உங்கள் ஆத்துமா ஆவிக்குரிய அனலால் எரியூட்டப்பட்டிருப்பதை நீங்கள் ஆச்சரியத்துடன் காண்பீர்கள். இப்படிப்பட்ட தேவ மக்கள் அபூர்வமாக இருக்கின்றனர். எனினும், இப்படிப்பட்ட கர்த்தருடைய பிள்ளைகள் இருக்கவே செய்கின்றனர் என்பதை யாரால் மறுக்க முடியும்?
இரு சாராருக்கு இடையேயுள்ள ஒரு பெரிய வித்தியாசத்தை மேலே நான் உங்களுக்கு இப்பொழுதுதான் விளக்கிக் காண்பித்தேன். சில விசுவாச தேவ மக்கள் மற்றவர்களைக்காட்டிலும் பிரகாசமாகவும், பரிசுத்தமாகவும் ஏன் காணப்படுகின்றனர்? அதின் காரண காரியம் என்ன? நான் அறிந்தமட்டில் 20 க்கு 19 வரையான மக்களின் காரியங்களில் அவர்களுடைய வித்தியாசமான தனி ஜெபப் பழக்க வழக்கங்களே அதின் விடையாகும். எந்த ஒரு தேவ மக்கள் பரிசுத்தத்தில் சிறந்து விளங்கவில்லையோ அவர்கள் கொஞ்சமாக ஜெபிக்கின்றார்கள். யார் பரிசுத்ததில் மேன் மக்களாக உள்ளனரோ அவர்கள் அதிகமாக ஜெபிக்கின்றார்கள்.
நான் சொன்ன கருத்து உங்களில் அநேகரை ஆச்சரியத்துக்குள்ளாக்கலாம். சிறந்த பரிசுத்தவான்களாக இருப்பது என்பது ஆண்டவர் ஒரு சிலருக்குக் கொடுத்த ஒரு கிருபையின் வரம் என்றும் அதை எல்லாராலும் அல்ல விசேஷித்த ஒரு சிலரே பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தேவ மக்கள் நினைக்கின்றனர். அப்படிப்பட்ட பரிசுத்தவான்களைக் குறித்துப் புத்தகங்களில் வாசிக்கும்போது அவர்கள் ஆச்சரியமடைகின்றனர். அந்த பரிசுத்த பக்தர்களைப் போன்று தாங்கள் ஆவது என்பது கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாத காரியம் என்றும் அந்த வரங்கள் எல்லாம் ஆண்டவர் பிரத்தியேகத்துவ உரிமை வைத்து வெகு சிலருக்கு மட்டும் வழங்கும் காரியம் என்றும் நிச்சயமாக அது யாவருக்கும் அல்ல என்றும் அந்த மக்கள் சொல்லுகின்றனர்.
இந்த வார்த்தைகள் மிகவும் ஆபத்தான தவறான வார்த்தைகளாகும். ஒரு மனிதன் பக்திக்கடுத்த காரியமானாலும் சரியே, அல்லது தனது சரீரப் பிரகாரமான உயர்வுக்கானாலும் சரியே அவனுடைய விருப்பமும், முயற்சிகளும் அதில் நிச்சயமாக அடங்கியிருக்கின்றது. ஒரு மனிதன் கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாகும்போது ஆண்டவர் அருளிய கிருபைகளைக் கொண்டு அவன் பரிசுத்தத்தில் சிறந்து விளங்க முடியும். அநேக பரிசுத்த பக்தர்கள் தேவனுடைய திருச்சபையில் எரிந்து ஜொலித்திருக்கிறார்கள் என்றால் அது அவர்களின் உள்ளமுருகிய கருத்தான அந்தரங்க ஜெப வாழ்க்கையேயன்றிப் பிறிதொன்றுமில்லை. வேதாகம காலங்களிலும், திருச்சபையின் நாட்களிலும் தேவனுக்காக ஒளி வீசிப் பிரகாசித்த பரிசுத்த பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கைகளைப் பாருங்கள். கர்த்தருடைய தாசனாகிய மோசே, தாவீது, தானியேல், பவுலைப் பாருங்கள். திருச்சபை சீர்திருத்தவாதிகளான ராட்சத பக்தர்கள் மார்ட்டின் லூத்தர், பிராட்ஃபோர்ட் என்பவர்களைக் குறித்த வரலாறுகளைக் கவனியுங்கள். ஜியார்ஜ் விட்ஃபீல்ட், சிசில், வென், பிக்கர்சித், மர்ரே மச்செயின் போன்ற பரிசுத்த பக்தர்களின் அந்தரங்க தியான வாழ்க்கைகளைக் கவனியுங்கள். இந்த தேவ மனிதர்கள், இரத்த சாட்சிகள் யாவரின் வாழ்க்கைகளிலும் யாவரும் காணத்தக்கவிதமாக ஒளி வீசிப் பிரகாசித்த ஒரே ஒரு ஆச்சரிய அதிசய வார்த்தை "அவர் ஒரு ஜெப மாந்தன்" என்பதே. வாசிக்கும் என் அன்பான சகோதரனே, அந்த வார்த்தையைச் சார்ந்து கொள், அதை உறுதியாகப் பிடித்துக் கொள், அதை விட்டுவிடாதே! ஆம், "ஜெபம் வல்லமையுள்ளது"
நமது இருதயத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளதும், நம்மால் அப்புறப்படுத்த முடியாததுமான பாவ அசுசிகள் மற்றும் சாத்தானுடைய அக்கினியாஸ்திரங்களுக்கு நிச்சயமான பரிகாரம் ஜெபமாகும். எந்த ஒரு பாவத்திற்கு எதிராக நாம் நமது முழு இருதயத்தோடு ஜெபிக்கின்றோமோ அந்தப் பாவம் ஒருக்காலும் காலூன்றி நிற்க இயலாது. நம்மோடு ஆளுகை செய்து கொண்டிருக்கும் சாத்தானை துரத்திவிடும்படியாக நாம் தேவ சமூகத்தில் பரிந்து மன்றாடும் ஜெபத்திற்கு முன்னர் சாத்தானால் நீண்ட நாட்கள் தாக்குப்பிடித்து நிற்க இயலாது. நம்முடைய அந்தராத்துமாவில் குடிகொண்டிருக்கும் சிறிதும் பெரிதுமான எல்லா குட்டி சாத்தான்களையும் தேவனுடைய பாதங்களுக்கு இழுத்துக் கொண்டு வந்து அவைகள் எல்லாவற்றையும் திரும்பவும் பாதாளக் குழிக்குத் தள்ள ஆண்டவரை நோக்கி நாம் கதற வேண்டும்.
வாசிப்போனே, தேவனுடைய கிருபையில் நீ வளர்ந்து அவருக்கு முன்பாக ஒரு பிரகாசமான பரிசுத்த கிறிஸ்தவனாக காணப்பட நீ விரும்புகின்றாயா? நீ அதை வாஞ்சிப்பாயானால் நிச்சயமாக உனது நினைவில் வைத்துக் கொள், உனக்கு முன்னாலுள்ள மிகவும் முக்கியமான கேள்வி "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்பதுதான்.
5. நீங்கள் ஜெபிக்கின்றீர்களா? என்று நான் உங்களைக் கேட்பதன் காரணம், பின்மாற்றத்தின் ஒரு மாபெரும் காரணம் ஜெபத்தை அசட்டை செய்வதாகும்
கிறிஸ்தவ மக்கள் கலாத்தியர்களைப் போல ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நன்றாக ஓடலாம். அதற்கப்பால் கொண்டை ஊசி வளைவைப்போன்று எதிரிடையாகத் திரும்பி கள்ளப் போதகர்களின் பின்னால் செல்லலாம். தங்கள் பக்தி மார்க்கம் சிறப்பானதொன்று என்று சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும் நாட்களில் அவர்கள் அறிக்கை செய்யலாம். பேதுருவும் அப்படித்தான் செய்தார், ஆனால், சோதனை மணி நேரம் வந்தபோது தன் அருமை இரட்சகரை சபித்து சத்தியமிட்டு மறுதலித்துப் போய்விட்டார். எபேசியர்களைப் போன்று மக்கள் தங்கள் ஆதி அன்பை விட்டுவிடலாம். பவுலின் கூட்டாளி மாற்குவைப்போல மக்கள் தங்கள் பக்தி வைராக்கியத்தில் அனலின்றி குளிர்ந்து போகலாம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மக்கள் தேமாவைப் போல் ஒரு அப்போஸ்தலனை பின்பற்றிச் சென்றுவிட்டு அதற்கப்பால் உலகத்திற்குத் திரும்பிச் சென்றுவிடலாம். இவைகளை எல்லாம் மக்கள் செய்வார்கள்.
ஆண்டவரை சொந்த இரட்சகராக ஏற்று ஒரு காலத்தில் அவரில் களிகூர்ந்த ஒருவன் பின்மாற்றக்காரனாகிப் போவது என்பது மிகவும் பரிதாபகரமானதாகும். ஒரு கிறிஸ்தவனில் வந்து விழுகின்ற அனைத்து துக்கமான காரியங்களிலும் அவன் ஆண்டவரைவிட்டுப் பிரிந்து பின்மாற்றம் அடைந்து சென்று விடுவது மகா கேடான நித்திய அழிவின் காரியம் என்று நான் சொல்லுவேன். அப்படிப்பட்ட பின்மாற்ற நிலை சொரி மணலில் சிக்கிக் கொண்ட ஒரு அழகான கப்பல், வான வீதியில் மேகங்களுடன் போட்டியிட்டு உயர் ஸ்தலங்களில் பறக்க வேண்டிய கழுகு சிறகொடிந்து நிர்ப்பந்தமாக பூமியில் துடிதுடித்துக் கொண்டு கிடப்பது, ஒரு அழகான மலர்ப்பூங்காவனம் முற்றும் காட்டுக் களைகளால் மூடிக்கிடப்பது, மதுரமான குரல் எழுப்ப வேண்டிய கின்னரம் தனது தந்திக் கம்பிகள் துண்டித்த நிலையில் கிடப்பது, தேவ ஜனங்கள் கூடி வந்து ஆண்டவரை துதித்து ஆராதிக்க வேண்டிய ஒரு தேவாலயம் பாழடைந்து நிற்பது. ஆம், இந்தக்காட்சிகள் அனைத்தும் துக்கமானவைகளாகும். ஆனால், ஒரு பின்மாற்றக்காரனின் நிலையோ இவைகள் யாவிலும் ஒப்பிடமுடியாத மகா துயரமானதாகும்.
இரட்சிப்பின் சந்தோசத்தை பெற்றுக்கொண்ட நாளில் பெற்ற அந்த மெய்யான தேவ கிருபை ஒருக்காலும் அணைந்து போகாது. அந்த நாளில் இரட்சகர் இயேசுவோடு ஒன்றாக இணைந்த அந்த பரலோக ஐக்கியம் ஒருக்காலும் உடைந்து போகவே போகாது. அதைக் குறித்து எந்த ஒரு சந்தேகமுமே இல்லை. எனினும், ஒரு மனிதன் தான் பெற்ற இரட்சண்யத்திலிருந்து படிப்படியாக வீழ்ச்சியடைந்து, வீழ்ச்சியடைந்து தான் பெற்ற தனது கிருபையிலிருந்து தனது பார்வையை விலக்கி, இறுதியாக தனது இரட்சிப்பைக் குறித்து அவன் அவநம்பிக்கை கொள்ளும்போது அவனது நிலை மிகவும் பரிதாபகரமான ஒன்றாகும். அந்த நிலை நரகத்துக்குச் சமமானதாக இருக்காவிட்டாலும் அதற்கு அடுத்த ஸ்தானத்தில் அது உள்ளது என்று நான் நிச்சயமாகக் கூறுவேன். அந்த காயப்பட்ட மனச்சாட்சி, தன்னளவில் வியாதி கொண்ட மனம், தன்னைக் குற்றப்படுத்தும் ஞாபகங்களால் நிறைந்த உள்ளம், தேவனுடைய அம்புகளால் துளைக்கப்பட்ட இருதயம், குற்ற உணர்வுகளின் பாரத்தால் நொறுக்கப்பட்ட ஆவி போன்றவைகள் எல்லாம் நரகத்தின் முன் ருசியைக் கொடுக்கக் கூடியவைகளாகும். அது பூமியிலேயே ஒரு நரக அக்கினியின் அனுபவம்.
அநேக பின்மாற்றங்களின் காரணம் என்ன? அனைத்துப் பின்மாற்றங்களின் பிரதானமான ஒரு காரணம் தனி ஜெபத்தை அசட்டை செய்தலாகும். உண்மையில் பின்மாற்றம் ஏற்படக் காரணம் என்ன என்ற அந்த இரகசிய சரித்திரம் கடைசி நாளில்தான் தெரியும். எனினும், கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்ற ஸ்தானத்தில் எனது அபிப்பிராயத்தை நான் பகிர்ந்து கொள்ள முடியும். அந்த எனது கருத்தை திரும்பத் திரும்ப நான் தெளிவாக கூற முடியும், அதாவது பின்மாற்றம் பொதுவாக ஆரம்பிக்கும் ஸ்தானம் தனி ஜெப வாழ்க்கையை உதாசீனம் பண்ணுவதுதான்.
ஜெபமில்லாமல் வேதத்தை வாசிப்பது, ஜெபமில்லாமல் பிரசங்கங்களைக் கேட்பது, ஜெபமில்லாமல் திருமணங்களைச் செய்வது, ஜெபமில்லாமல் பிரயாணங்களைச் செய்வது, ஜெபமில்லாமல் வீடு வாசல்களை வாங்குவது, ஜெபமில்லாமல் நண்பர்களை தேர்ந்தெடுப்பது, மற்றும் அன்றாடக ஜெபங்களும் ஆத்திர அவசரங்களில் செய்வது அல்லது உள்ளத்தில் எந்த ஒரு பாரமுமில்லாமல் நிர்விசாரமாக கடமைக்காகச் செய்வது போன்றவைகள் எல்லாம் ஆவிக்குரிய வாழ்வில் வீழ்ச்சியடைவதற்கான நிச்சயமான படிக்கட்டுகளாகும். அதுமட்டுமல்ல, ஆண்டவரும் அவர்களை அதின் மூலம் பயங்கரமான வீழ்ச்சிக்கு அனுமதித்து விடுகின்றார்.
இந்தவிதமான நிர்விசாரமான நிலைகள்தான் தாமதித்துக் கொண்டிருக்கும் லோத்துக்களையும், ஸ்திரத்தன்மையற்ற சிம்சோன்களையும், மனைவியை தெய்வமாகக் கொண்டாடிய சாலொமோன்களையும், முரண்பாடான ஆசாக்களையும், அங்கும் இங்கும் வளைந்து கொடுக்கும் யோசபாத்துக்களையும், தேவனுக்கு அப்பால் மட்டுக்கு மிஞ்சிய கவனம் எடுத்துக்கொள்ளக்கூடிய மார்த்தாள்களையும் உருவாக்கிக் கொடுத்தது. இந்தவிதமான எளிமையான சரித்திரங்கள் எல்லாம் அதை உருவாக்கியவர்களின் தனி ஜெபத்தைக் குறித்த கவலையீனத்தை காண்பிப்பதாக இருக்கின்றது.
வெளியரங்கமாக இவர்கள் வீழ்ச்சியடைவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பாகவே அவர்கள் தனிமையில் விழுந்துவிட்டார்கள் என்பதை நீ மிகவும் உறுதியாக நிச்சயப்படுத்திக் கொள்ளலாம். உலகத்தின் கண்களில் வெளிப்படையாக பின்மாற்றம் அடைவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் முழங்கால்களில் பின்மாற்றம் அடைந்துவிட்டார்கள். பேதுருவைப் போல அவர்கள் தங்கள் ஆண்டவரின் "விழித்திருந்து ஜெபியுங்கள்" என்ற அவருடைய எச்சரிப்பை ஆரம்பத்தில் அல்லத்தட்டிவிட்டு பின்னர் அவர்களின் பெலன் எல்லாம் போன பின்பு, சோதனை நேரத்தில் பேதுருவைப்போல அவர்கள் தங்கள் ஆண்டவரை மறுதலித்துவிடுகின்றனர்.
உலகம் அவர்களுடைய வீழ்ச்சியை அடையாளம் கண்டு கொண்டு சப்தமாகக் கைதட்டிப் பரிகாசித்து சிரிக்கின்றது. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் குறித்து உலகத்துக்கு ஒன்றுமே தெரியாது. சரித்திரத்தில் நாம் வாசித்த ஒரு சம்பவம் நமக்கு நினைவுக்கு வருகின்றது. அந்த பண்டைய கிறிஸ்தவன் ஒரிஜினை விக்கிரக வழிபாட்டுக்காரான புற மதஸ்தர் அந்த நாளில் கட்டாயப்படுத்தி தங்களுடைய விக்கிரகத்திற்கு சாம்பிராணி புகைத்து தூபம்காட்டி பூஜை செய்ய வைத்துவிட்டார்கள். தவறும் பட்சத்தில் ஒரிஜினை கொல்லப்போவதாக பயமுறுத்தினார்கள். ஒரிஜின் அவர்கள் நிர்ப்பந்தத்துக்கு அடிபணிந்து கோழையானான். ஒரிஜின் அவனுடைய சத்துருக்களின் மிரட்டல்களுக்கு அடிபணிந்ததன் காரணம் ஏன் என்று அவர்களுக்குத் தெரியாது. ஆனால், அதின் காரணத்தை ஒரிஜினே நமக்குக் கூறுகின்றான். ஆம், அந்த நாளில் அவன் தனது படுக்கையிலிருந்து எழும்பும்போது, தான் செய்யும் தனது வழக்கமான ஜெபத்தை ஒழுங்காக செய்து முடிக்காமல் ஆத்திர அவசரத்தில் எழும்பி விட்டான் என்பதுதான்.
வாசிப்போனே, நீ ஒரு உண்மைக் கிறிஸ்தவனாக இருக்கும் பட்சத்தில் நீ ஒருபோதும் ஒரு பின் மாற்றக்காரனாக இருக்கவே முடியாது. நீ ஒரு பின்மாற்றக்காரனாக இருக்கக்கூடாது என்று உன்னளவில் நீ மனதார விரும்புவாயானால் நான் சொன்ன "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்ற எனது கேள்வியை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்.
6. "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்று நான் உங்களைக் கடைசியாக கேட்பதன் காரணம் ஜெபமானது சந்தோசத்தையும், மனநிறைவையும் நிச்சயமாகக் கொடுக்கக் கூடியவைகளாகும்.
துயரம் நிரம்பி வழியும் ஒரு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பாவம் என்றைக்கு உலகில் பிரவேசித்ததோ அன்றிலிருந்து இந்த உலகத்தின் கதி அதுதான். பாவம் இல்லாமல் துயரம் இருக்க முடியாது. பாவம் உலகத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்டாலொழிய துன்ப துயரத்திற்கு ஒருவர் தப்பி வாழ முடியும் என்பது அபத்தமான பேச்சாகும்.
சந்தேகத்திற்கிடமின்றி சிலர் மற்றவர்களைக் காட்டிலும் மகா கசப்பான துயரத்தின் பாத்திரத்தை பருகுவதற்காக தங்கள் கரங்களில் வைத்திருக்கின்றனர். நம்முடைய சரீரங்கள், நமது உடமைகள், நமது குடும்பங்கள், நமது பிள்ளைகள், நமது சுற்றத்தினர், நமது நண்பர்கள், நமது அண்டை அயலகத்தார், நமது உலக அழைப்புகள் போன்றவைகள் நமது கவலைகளுக்கு ஊற்றுக்கண்களாக இருக்கின்றன. வியாதிகள், மரணங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், பிரிவுகள், நன்றியின்மை, புறங்கூறுதல் போன்றவைகள் சர்வ சாதாரண காரியங்களாக இருக்கின்றன. அவைகள் இல்லாமல் நாம் வாழ்க்கையை கொண்டு செல்ல முடியாது. ஒரு நாள் அவைகள் எப்படியாகிலும் நம்மை கண்டு பிடித்துக் கொண்டு விடும். நமது அன்பு எத்தனை பெரியதோ அத்தனைக்கு நமது துன்பங்களும் ஆழமாக இருக்கும். எத்தனை அதிகமாக நாம் நமது சொந்தபந்தங்களில் அன்புகூருவோமோ அத்தனைக்கு அதிகமாக நாம் ஏங்கி அழவேண்டியதாகவிருக்கும்.
துன்பம் நிறைந்த இப்படிப்பட்ட உலகில் நாம் மனமகிழ்ச்சியைப் பெற்றுக் கொள்ளுவது எப்படி? கண்ணீரின் பள்ளத்தாக்கான இந்த உலகத்தில் குறைந்த வேதனையோடேயாவது நாம் கடந்து செல்லுவது எங்கனம்? நம்முடைய காரியங்களை எல்லாம் ஜெபத்தின் மூலமாக ஆண்டவரண்டை எடுத்துச் செல்லும் பழக்கத்தைவிட நான் அறிந்தமட்டில் வேறு பரிகாரம் இல்லவே இல்லை.
வேதாகமத்தின் பழைய, புதிய ஏற்பாடுகளில் இந்த தெளிவான தேவ ஆலோசனைதான் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. சங்கீதக்காரராம் தாவீது இராஜா என்ன சொல்லுகின்றார் பாருங்கள் "ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு, நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்" (சங் 50 : 15) "கர்த்தர் மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார், நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்" (சங் 55: 22) அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் என்ன சொல்லுகின்றார் "நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும், வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும், உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்" (பிலி 4 : 6-7) அப்போஸ்தலனாகிய யாக்கோபு சொல்லுவது என்ன? "உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்" (யாக் 5 : 13) வேதாகமத்தில் காணப்படுகின்ற எல்லா பரிசுத்த பக்தர்களின் அனுபவப் பூர்வமான சரித்திரம் இதுவேதான். தன் அண்ணனாகிய ஏசாவுக்குப் பயந்த சமயம் யாக்கோபு இதையேதான் செய்தார். முரட்டாட்டமான இஸ்ரவேல் மக்கள் தன்னை கல்லெறிந்து கொல்ல ஆயத்தமானபோது மோசே தீர்க்கன் இதையேதான் செய்தார். ஆயிக்கு முன்பாக இஸ்ரவேலர் முறியடிக்கப்பட்டபோது யோசுவா இதையேதான் செய்தார். சனகெரிப்பிடமிருந்து துர்ச்செய்தியைத் தெரிவிக்கும் கடிதம் தனக்கு வந்தபோது எசேக்கியா ராஜா இதையேதான் செய்தார். பேதுருவை கொலை செய்யும்படியாக கொலைஞன் ஏரோது அவரை சிறையில் வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருந்த போது திருச்சபை இதையேதான் செய்தது. பிலிப்பி பட்டணத்திலுள்ள இருண்ட நிலவறை சிறைக்கூடத்தில் பவுல் போடப்பட்டிருந்தபோது அவரும் இதையேதான் செய்தார்.
பாடுகள் நிறைந்த உலகத்தில் நாம் உண்மையாகவே சந்தோசமாக இருக்க ஒரே வழி நமது கவலைகளை எல்லாம் நமது ஆண்டவர் மேல் வைத்துவிடுவதுதான். தங்களுடைய பாரங்களை தாங்களாகவே சுமந்து கொண்டு செல்ல பிரயாசப்படும் விசுவாசிகள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆனால், அவர்கள் தங்கள் துன்ப துயரங்களைக் கர்த்தரிடம் சொல்லுவார்களானால் காசா பட்டணத்து மிகவும் பாரமான இரும்புக் கதவுகளை மிக எளிதாக சிம்சோன் தூக்கிச் சென்றதுபோல அவர்கள் தங்கள் பாடு துன்பங்களை எளிதாக சுமந்து செல்ல தேவன் அவர்களுக்கு உதவி செய்வார்.
நாம் உள்ளம் திறந்து நமது துயரங்களைச் சொல்லும்போது ஒரு நண்பர் நமக்கு உதவி செய்ய எப்பொழுதும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றார். அந்த நண்பர் இந்த உலகத்தில் மானிடனாக வாசம் பண்ணின நாட்களில் ஏழைகள், வியாதி பிணிகளில் வாடியோர், மனக்கிலேசம் நிறைந்தோர் மேல் உள்ளம் உருகினார். 33 ஆண்டுகளாக மானிடனாக நம்முடன் வாழ்ந்த அவர் துக்கம் நிறைந்தவரும் பாடு அனுபவித்தருமாக இருந்தார். துயரம் அனுபவித்த மக்களுடன் அவர் வாழ்ந்து அழுகிறவர்களுடன் சேர்ந்து அவர் அழுதார். அவரால் சீர்ப்படுத்த இயலாத எந்த ஒரு பூவுலகப் பாடுமே கிடையாது. அவர்தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து. நாம் சந்தோசமாக இருப்பதற்கு ஒரே வழி நமது இருதயங்களை அவருக்கு முன்பாகத் திறப்பதுதான்.
ஆண்டவர் இயேசுவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டதன் காரணமாக சித்திரவதை செய்யவும், கொலை செய்யவும் ஆயத்தமான தனது சக கருப்பு இனத்தவர்களைப் பார்த்து அந்த ஏழை கிறிஸ்தவ நீக்ரோ மனிதன் சொன்ன ஒரே வார்த்தை "உங்கள் நடபடிகளை எல்லாம் நான் கட்டாயம் என் கர்த்தர் இயேசுவிடம் சொல்லுவேன்" என்ற அந்த உன்னத அனுபவம் நமக்கு இருக்கும் பட்சத்தில் நாம் எத்தனை பாக்கியசாலிகளாக இருப்போம்!
நம்முடைய சிலுவைகள் எத்தனை பாரமானதாக இருந்தாலும் ஜெபம் அவைகளை இலகுவாக்கிக் கொடுக்கும். நாம் செல்லும் நம்முடைய பாதையானது முன்னால் தடுப்புச் சுவர் வைத்து தடைகட்டப்பட்டது போல நமக்குத் தெரிந்தாலும் ஜெபமானது அதின் ஊடாக வழி உண்டு பண்ணிக்கொண்டு செல்லும். "வழி இதுவே, இதிலே நடவுங்கள்" என்று சொன்னவரண்டை ஜெபம் நம்மை வழி நடத்திச் செல்லும். நமது பூவுலக அனைத்து பிரகாசமான எதிர்பார்ப்புகளும் இருள் சூழ்ந்து நிற்பது போல நமக்குத் தோன்றினாலும், ஜெபமானது அதின் ஊடாக நம்பிக்கையின் ஒளிக் கதிரை வீசக்கூடியதாகும். "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, நான் உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று திருவுளம்பற்றிய சர்வ வல்லவரிடம் ஜெபம் நம்மைக் கொண்டு வரக் கூடியது. உலகில் நம்மை அதிகமாக நேசித்தவர்கள் உலகிலிருந்து மரணத்தின் மூலமாக எடுக்கப்பட்டு, உலகமே நமக்கு வெறுமையானதாக தெரிந்தாலும் ஜெபம் நமக்கு பரத்திலிருந்து உதவியைக் கொண்டு வரும்.
வாசிப்போனே, நீ சந்தோசமாக இருப்பதை நான் மனதார விரும்புகின்றேன். இது சம்பந்தமாக "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?" என்ற கேள்வியைத் தவிர வேறு எதையும் நான் உங்களிடம் கேட்க முடியாது. வேறு எந்த ஒரு கேள்விகளும் உங்களுடைய ஆத்துமாவுக்கு பயன் உள்ளதாக இருக்காது.
வாசிப்போனே, இப்பொழுதும் நான் இந்தச் செய்தியை முடிவுக்குக் கொண்டு வர ஆசைப்படுகின்றேன். உன்னுடைய கவனத்தை ஆழமாக சிந்திக்க வைக்கக்கூடிய காரியங்களை நான் உனக்கு முன்பாக கொண்டு வந்தேன் என்று நான் நம்புகின்றேன். நான் உனக்கு முன்பாக வைத்த செய்திகளை கர்த்தர் உனது ஆத்துமாவுக்கு ஆசீர்வதித்துத் தரும்படியாக நான் உள்ளம் கசிந்து ஜெபிக்கின்றேன்.
ஜெபிக்காதவர்களுக்கு நான் ஒரு கடைசி வார்த்தை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். இந்த எனது செய்தியை வாசிக்கும் அனைவரும் ஜெபிக்கும் மக்கள் என்று நான் நினைக்கவில்லை. நீ ஒரு ஜெபியாத ஆத்துமாக இருப்பாயானால் தேவனுடைய சார்பாக நான் உன்னோடு பேச விரும்புகின்றேன்.
ஜெபிக்காத ஆத்துமாவே, நான் உன்னை மிகவும் கருத்தோடும், நடுக்கத்தோடும் எச்சரிக்கின்றேன். நீ மிகவும் ஆபத்தான ஒரு நிலையில் இருந்து கொண்டிருக்கின்றாய் என்று நான் உன்னை எச்சரிக்கின்றேன். தற்போதைய இந்த நிலையில் நீ மரிக்கும் பட்சத்தில் நீ ஒரு நஷ்டப்பட்ட ஆத்துமாவாக இருப்பாய். பெயர்க் கிறிஸ்தவர்களே, நான் உங்களை எச்சரிக்கின்றேன், நீங்கள் தப்பிக் கொள்ள உங்களுக்கு எந்த ஒரு சாக்குப் போக்கும் கிடையவே கிடையாது. பூவுலகில் நீங்கள் ஜெபமின்றி வாழ்ந்ததற்கு தேவனுக்கு முன்பாக எந்த ஒரு காரணமும் காட்ட முடியாது.
எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியாது என்று நீ சொல்ல முடியாது. ஜெபத்தைப் போல எளிமையான காரியம் வேறு எதுவுமே கிடையாது. சாதரணமாக தேவனோடு பேசுவதே ஜெபமாகும். அந்த ஜெபத்தை ஆரம்பிக்க கல்வியோ, ஞானமோ, வேத அறிவோ அவசியமில்லை. அதைச் செய்ய இருதயமும் மன வாஞ்சையும் மட்டுமே தேவை. பசி எடுக்கும் போது பெலவீனமான பச்சிளம் குழந்தை வீறிட்டு அழுகின்றது. மிகவும் தரித்திரனான ஏழைப் பிச்சைக்காரன் பிச்சைக்காக தனது கரத்தை நீட்டுகின்றான். பிச்சை கேட்கும் மனிதனிடம் பேச வேண்டிய கனிவான வார்த்தைகளுக்காக அவன் காத்திருப்பதில்லை. அடிமட்டமான அறியாமை கொண்ட மனிதன் கூட அவன் மனம் வைக்கும் பட்சத்தில் தேவனிடம் சொல்ல அவனிடம் வார்த்தைகள் உண்டு.
நான் ஜெபிப்பதற்கு வசதியான இடம் எனக்கு இல்லை என்று நீ சொல்ல முடியாது. ஒரு மனிதன் விரும்பும் பட்சத்தில் அவன் ஒரு மறைவிடத்தைக் கண்டு கொள்ளலாம். நம்முடைய ஆண்டவர் ஒரு மலையில் ஜெபித்தார். பேதுரு மேல் வீட்டில் ஜெபித்தார். ஈசாக்கு வயல் வெளியிலும், நத்தானியேல் அத்தி மரத்தின் கீழும், யோனா மீன வயிற்றிலும் இருந்து ஜெபித்தனர். எந்த ஒரு இடமும் நமக்கு மறைவான இடமும், தனிமையில் ஆண்டவரை தொழுது கொள்ளும் ஸ்தலமும், ஒரு பெத்தேலுமாக நமக்கு மாறி தேவனுடை சமூகப்பிரசன்னத்தை நம்மண்டை இழுத்துக் கொண்டு வந்து விடும்.
எனக்கு ஜெபிக்க நேரமில்லை என்று நீ சொல்லுவது தேவையில்லாத பேச்சாகும். மனிதன் கையாளும் பட்சத்தில் அவனுக்கு ஏராளமான நேரமுண்டு. காலம் குறுகியதுதான், ஆனால், ஜெபிப்பதற்கு போதுமான நீண்ட காலமுண்டு. தனது கரத்தில் ஒரு பெரிய ராஜாங்கத்தின் முழுப் பொறுப்பையும் தானியேல் வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அவர் ஜெபித்தார். வலிமையான ஒரு நாட்டின் அதிபதியாக இருந்த தாவீது ராஜா தினமும் நேரம் கண்டு பிடித்து "அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்" (சங் 55 : 17) என்றார். நமக்கு நேரம் தேவைப்படும் போதெல்லாம் எப்பொழுதும் நேரம் இருக்கவே செய்கின்றது.
விசுவாசமும், புதிய இருதயமும் கிடைக்கும் வரை நான் பொறுமையாக உட்கார்ந்திருந்து அதற்கு காத்திருப்பேன் என்று நீ சொல்லுவது விஷமத்தனமானது. இது பாவத்தோடு பாவத்தை கூட்டும் காரியமாகும். நரக பாதாளத்துக்குச் செல்ல இது சரியான வழியாகும். "எனக்குத் தெரியும், எனினும், நான் தேவனுடைய இரக்கத்திற்காகக் கெஞ்சவில்லை" என்ற ஒரு வாதம் உண்டு. இந்தவிதமான வாதத்துக்கு தேவனுடைய வார்த்தை உத்திரவாதம் அளிப்பதில்லை. "கர்த்தரை கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள், அவர் சமீபமாயிருக்கும்போது அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்" (ஏசாயா 55 : 6) "இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு" (ஓசியா 14 : 1) "நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி தேவனை நோக்கி வேண்டிக் கொள்" (அப் 8 : 22) என்று தேவனுடைய வார்த்தை திட்டமும் தெளிவுமாகப் பேசுகின்றது. உனக்கு விசுவாசமும், புதிய இருதயமும் தேவையானால் அவற்றிற்காக தேவனை நோக்கி கெஞ்சி மன்றாடு. ஐயகோ! ஊமைப் பிசாசைப் போன்ற பயங்கரமான பிசாசு எதுவுமே கிடையாது.
ஓ, ஜெபிக்காத நண்பனே! தேவனிடமிருந்து எதையும் கேட்காமல் இருப்பதற்கு நீ யார்? உனது மரணத்தோடும், எரி நரகத்தோடும் நீ உடன்படிக்கை பண்ணிக் கொண்டாயோ? நரக அக்கினியோடும், சாகாத புழுவோடும் நீ சமாதானமாயிருக்கின்றாயோ? மன்னிக்கப்பட வேண்டிய பாவங்கள் உன்னிடம் ஒன்றுமில்லையோ? நரகத்தின் நித்திய மா கொடிய வாதையைக் குறித்து உனக்குப் பயமும், நடுக்கமும் இல்லையோ? தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணி வைத்துள்ள மோட்சானந்த பாக்கியங்கள் மேல் உனக்கு நாட்டமும், தேட்டமும் இல்லையோ?
வாசிக்கும் நண்பா, உனது தற்போதைய மதியீனத்திலிருந்து கண் விழித்துக் கொள். விரைவில் உனக்கு சம்பவிக்கப்போகும் காரியங்களை குறித்து யோசித்துப் பார். இந்தக் கிருபையின் காலத்தில் விழித்தெழுந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடு. ஐயோ, ஒரு நாள் விரைந்து வருகின்றது, அப்பொழுது அநேகர் "ஆண்டவரே, ஆண்டவரே எங்களுக்குத் திறக்க வேண்டும்" என்று பலத்த குரல் எழுப்புவார்கள். ஆனால், அந்தோ காலம் கடந்துவிட்டது. தங்களுக்குக் கிடைத்த கிருபையின் காலத்தில் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட மனமற்று வாழ்ந்த அந்த இருதயக்கடினத்தினர் ஒரு நாள் மலைகளை நோக்கி, எங்கள் மேல் விழுங்கள் என்றும், குன்றுகளை நோக்கி எங்களை மறைத்துக் கொள்ளுங்கள் என்றும் கதறி அழுவார்கள்.
வாசிப்போனே, வேண்டுமானால் நான் உனது கால்களைப் பிடித்து கெஞ்சி மன்றாடிக் கேட்கின்றேன், உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை நித்தியமான நஷ்டத்துக்கு, நரக பாதாள அக்கினிக்கு ஒப்புவித்து விடாதே. தேவனுடைய ஈவும் இலவசமுமான இரட்சிப்பு உனக்கு மிகவும் அருகாமையிலேயே உள்ளது. தேவன் தமது மக்களுக்காக ஆயத்தம்பண்ணி வைத்துள்ள மகா மாட்சியான மோட்சானந்த பாக்கியத்தை நீ அவரிடம் கேட்காததினால் ஆம், ஆண்டவரை நோக்கி ஜெபிக்காத ஒரே காரணத்திற்காக நீ இழந்து விடாதபடி இன்றே அவரை நோக்கி ஜெபிக்கத் தொடங்கு. தேவ ஜனமே "நீங்கள் ஜெபிக்கின்றீர்களா?"
John Charles Ryle
(மொழி பெயர்ப்புச் செய்தி) |