|
|
| இமயமலைகளில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. கர்த்தருடைய மட்டற்ற அன்பின் கிருபையால் நாங்கள் நேப்பாள நாட்டின் எல்லைப்புற சிறிய பட்டணமான டார்ச்சுலாவிலும், இந்திய டார்ச்சுலா பட்டணத்திலும், அதின் அருகாமையிலுள்ள பல இமயமலை கிராமங்களிலும் தேவனுடைய ஊழியத்தை அதிகமான ஜெபத்தோடு செய்து முடித்துவிட்டு டார்ச்சுலாவிலிருந்து 65 கி.மீ. தூரம் பிரயாணம் பண்ணி டிடிகாட் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். டிடிகாட் என்ற பெயரைக்கேட்டதும் உங்களுக்கு வேடிக்கையான ஒரு பெயராகத் தெரியலாம். அந்தப் பெயர் வந்த விதத்தை கவனியுங்கள்.
|
|
இரண்டு பெண்கள் இந்த ஊரில் எங்கோ ஓரிடத்தில் மலையில் புல் அறுத்துக் கொண்டிருந்தனராம். அந்தச் சமயத்தில் ஒரு ஆங்கிலேய சுற்றுலாப் பிரயாணி ஒருவர் அங்கு வந்து நின்று அந்த ஊரின் பெயர் என்னவென்று அந்தப் பெண்களிடம் கேட்டிருக்கின்றார். இந்தச்சமயம் பார்த்து பெண்களில் ஒருத்தி தனது கவனக்குறைவால் தனது புல் அறுக்கும் சிறிய அரிவாளால் தனது கரத்தை வெட்டிக்கொள்ளவே கையிலிருந்து இரத்தம் பீறிட்டு வரவே, அதைக் கண்ட மற்ற பெண் ஆத்திரத்தில் "திதி, ஹாத்" என்று சத்தமிட்டிருக்கின்றாள். அதின் ஹந்தி மொழி அர்த்தம் "அக்கா, கை" என்பதாகும். அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆங்கிலேயர் கிராமத்தின் பெயர் "டிடிகாட்" என்று நினைத்துக்கொண்டதாகவும், அதிலிருந்து அந்தப் பெயரே அந்த ஊரின் பெயராகிவிட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த செய்தியை நமக்குச் சொன்னது நமது தேவ ஊழியர் பாஸ்டர் என்.சாமுவேல் சகோதரன் அவர்கள்தான். நாங்கள் தங்கியிருந்த அரசினர் ஓய்வு விடுதியிலிருந்து பார்த்தால் நமது கண்களுக்குத் தென்படும் டிடிகாட் என்ற அந்த இடத்தின் படத்தை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

இந்த இடத்தில் நாங்கள் வந்து தங்குவதற்கு வசதியாக பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் முன்கூட்டியே இங்கு வந்து அறைகளை ஆயத்தம் செய்து வைத்திருந்தார்கள்.
டிடிகாட் என்ற இடத்திலுள்ள அரசினர் ஓய்வு விடுதியில் நாங்கள் தங்கியிருந்து கொண்டு அதைச் சுற்றியுள்ள பல இடங்களுக்கும் எங்கள் வாகனங்களில் சென்று கர்த்தருடைய ஊழியத்தைச் செய்தோம். டிடிகாட் அரசினர் ஓய்வு விடுதிக்கு அருகாமையில் பஜாரில் உள்ள ஒரு சிறிய ஹோட்டலில் எங்கள் ஆகாரங்களை உட்கொண்டோம். எங்களுக்கு ஆகாரம் தேவைப்படும் நேரங்களில் சுத்தமாகவும், நியாயமான விலையிலும் ஹோட்டல்காரர் உணவு செய்து அளித்தார். ஒவ்வொரு நாளும் பருப்பும் காய்கறி உணவுகளாக இருந்தபடியால் மனம் சோர்ந்து ஒரே ஒரு நாள் இறைச்சி எடுத்து வந்து அரசினர் ஓய்வு விடுதியில் அதின் மானேஜர் அனுமதியோடு நமது தேவ ஊழியர்கள் ஆகாரம் சமைத்து உட்கொண்டனர். அந்த நாளில் மானேஜருக்கும் மற்ற ஓரிரு விடுதியின் பணியாளர்களுக்கும் ஆகாரம் கொடுத்ததுடன், காஸ் சிலிண்டரை நாங்கள் பயன்படுத்தினதினால் அதற்கும் நாங்கள் தனியாக பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தது. எனினும், எங்களுக்கு அன்பு செய்த அவர்களுக்கு நாங்கள் எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டோம். நமது தேவ ஊழியர்களில் சிலர் சிறந்த சமையல்காரர்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. சமையல் செய்து சாப்பிடக்கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் அவர்கள் நன்கு பயன்படுத்தி எங்களுக்கும் நல்ல ருசியான ஆகாரத்தை தயாரித்துக் கொடுத்தனர். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.
|
டிடிகாட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
ஒரு நாள் அதிகாலை நாங்கள் எழுந்திருந்து எங்கள் காலை ஆகாரத்திற்குப் பின்னர் எங்கள் இரண்டு வாகனங்களையும் தேவனுடைய பிரசுரங்களால் நிறைத்துக் கொண்டு காலை 8:45 மணிக்கெல்லாம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பிரதான வாயிலில் எங்கள் வாகனங்களுடன் போய் ஆயத்தமாக நின்று கொண்டோம். அந்தப் பள்ளி டிடிகாட்டிலிருந்து 2 கி.மீ. தொலைவில் ஊருக்கு அப்பால் உள்ளது. அக்கம் பக்கம் ஊர்களிலிருந்தும், டிடிகாட்டிலிருந்தும் அந்த நாளில் பெண் பிள்ளைகள் சிறு சிறு கூட்டமாக வரத் தொடங்கினார்கள். நாங்கள் 7 பேர்கள் பள்ளிக்கு முன்னாலுள்ள பிரதான நுழை வாயிலிலும், சகோதரன் பாக்கேலாலும், சோனுசிங் இருவரும் பள்ளியின் கீழ்ப்பகுதியிலும் நின்று கொண்டோம். சிறிய வகுப்புகளில் படிப்போருக்கு சாந்தி மார்க்கம் என்று அழைக்கப்பட்ட ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷங்களையும், மேல் வகுப்பு மாணவிகளுக்கு சத்திய மார்க்கம் என்ற விரிவாக எழுதப்பட்ட ஹந்தி மொழி யோவான் சுவிசேஷங்களையும் கொடுத்தோம். மாணவிகளுடன் அவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியை பெருமக்களும் சாரை சாரையாக எங்களிடம் வந்து தேவனுடைய பிரசுரங்களை ஆர்வமாக வாங்கிச் சென்றனர். நாங்கள் அவர்களுக்கு வேதாகம சுருக்கம், புதிய ஏற்பாடு, சாது சுந்தர்சிங், மெய்ச் சமாதானத்தை தேடி போன்ற தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். அந்த மேல் நிலைப் பள்ளியில் மொத்தம் 532 மாணவிகளும் 27 ஆசிரியைகளும் இருப்பதாகச் சொன்னார்கள். டிடிகாட் அரசாங்க பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவிகள் கர்த்தருடைய சுவிசேஷப்பிரதிகளை நமது ஊழியர் என்.சாமுவேல் மற்றும் டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்களிடமிருந்து வாங்கிச் செல்லுவதையும், காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகும் பள்ளியின் அசெம்ப்ளிக்கு பிள்ளைகள் ஒன்று கூடி நிற்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.



|
டிடிகாட் தேவ ஊழியங்களின்
ஆசீர்வாதமான அறுவடை |
டிடிகாட்டில் கர்த்தருடைய கிருபையால் நாங்கள் செய்த ஊழியங்களின் பிரதிபலனை வெகு விரைவிலேயே நாங்கள் காண முடிந்தது. டிடிகாட்டிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களைப் பெற்றுக் கொண்ட பெண்களில் 7 அல்லது 8 பேர்கள் அந்த நாட்களிலேயே பித்தோர்கார்ட் பட்டணத்திலுள்ள நம்முடைய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களுடைய வீட்டிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கின்றனர். நாங்கள் கொடுத்த சுவிசேஷப் பிரசுரங்களில் பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் தெளிவான முகவரியும், அவர்களின் தொலைபேசி நம்பரும் அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், அவரைக் குறித்து மற்றவர்களிடமும் சொல்ல ஆசைப்படுவதாகவும் தகவல் தெரிவித்தார்கள். அத்துடன் கிறிஸ்தவர்களான பின்னர் அதின் அடையாளமாக சிலுவையைத் தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டுமா என்றெல்லாம் இந்த மக்கள் கேட்டிருக்கின்றனர். அத்துடன் அவர்கள் மேற்கொண்டு வாசிப்பதற்கு கூடுதலான ஆண்டவருடைய பிரதிகளையும் கொடுக்கும்படியாகக் கேட்டிருக்கின்றனர். அவர்களுடன் பேசிய பாஸ்டர் சாமுவேல் சகோதரன் அவர்களின் மனைவி விஜி அவர்கள் தனது கணவர் தேவ ஊழியம் முடித்து வீடு திரும்பியதும் நேரில் வந்து அவர்களைச் சந்திப்பார்கள் என்றும் மேற்கொண்டு ஆண்டவர் இயேசுவைக் குறித்து அவர்களுக்கு சொல்லுவார்கள் என்றும் கூறியிருக்கின்றார்கள். அதின்படியே தேவ ஊழியங்கள் முடிந்ததும் பாஸ்டர் என்.சாமுவேல் அவர்கள் டிடிகாட் என்ற அதே இடத்திற்கு வந்து நாங்கள் தங்கியிருந்த அதே அரசாங்க ஓய்வு இல்லத்தில் தங்கி வாஞ்சையுள்ள அந்தப் பெண் மக்களை அவர்கள் இல்லம் ஒன்றில் சந்தித்து கூடி ஜெபித்து, ஆண்டவரைப் பாடித் துதித்து, கர்த்தருடைய வசனத்தையும் பகிர்ந்து கொண்டு வந்திருக்கின்றார்கள். ஆண்டவரைப் பாடித் துதிக்க பாட்டுப்புத்தகத்தை அவர்கள் தங்களுக்கென்று விரும்பியிருக்கின்றார்கள். அத்துடன் தங்களுக்கென்று சொந்தமாக ஹிந்தி மொழி வேதாகமங்களும் வேண்டும் என்றும் கேட்டிருக்கின்றார்கள்.
அந்த தவனமுள்ள ஆத்துமாக்களின் வாஞ்சையை நிறைவேற்றும் வண்ணமாக உடனே டில்லியிலுள்ள ஒரு கிறிஸ்தவ புத்தக நிலையத்துக்கு ஆர்டர் கொடுத்து வேண்டிய கிறிஸ்தவ பாட்டுப்புத்தகங்களை வாங்கினதுடன், அதே போல அலகாபாத்திலுள்ள இந்திய வேதாகம சங்கத்துத்துக்கு உடனே ஆர்டர் கொடுத்து வேண்டிய ஹிந்தி மொழி வேதாகமங்கள் வாங்கி ஏற்ற நாளில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு பாஸ்டர் சகோதரன் இந்த தடவை தனது மனைவியையும், தனது வாலிப மகள் கிளாடிசையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு டிடிகாட் வந்து அதே அரசு ஓய்வு இல்லத்தில் தங்கி பெண்களை அவர்கள் இல்லம் ஒன்றில் கூடிவரச் செய்து அவர்களுக்கு பாட்டுப்புத்தகங்களை இலவசமாகக் கொடுத்து பாட்டுகளைக் கற்றுக் கொடுத்திருக்கின்றார்கள். அப்படியே அங்கு கூடி வந்த 16 தவனமுள்ள பெண்களுக்கு 16 ஹிந்தி மொழி வேதாகமங்களை இலவசமாகக் கொடுத்திருக்கின்றார்கள். அந்த நாளில் சகோதரனின் மகள் கிளாடிஸ் தன்னுடன் கொண்டு சென்றிருந்த பெரிய படச் சுருளை பெண்களுக்குக் காண்பித்து கர்த்தருடைய செய்தியை கொடுத்திருக்கின்றது. சகோதரனின் மகள் கிளாடிஸ் ஏற்கெனவே சுவிசேஷப் பணி இயக்கம் என்ற கிறிஸ்தவ ஸ்தாபனத்தில் (Operation Mobilization) தனது பள்ளி லீவு நாட்களில் ஒன்றிணைந்து இந்தியாவின் தொலை தூர பகுதிகளுக்குச் சென்று பெண்கள் மத்தியில் தேவ ஊழியம் செய்து நல்ல அனுபவத்தை பெற்ற மகளாவார்கள். வாலிப பிள்ளையான கிளாடிஸ் தன்னைப் போன்ற வாலிப வயதில் உள்ள பிள்ளைகளுக்குச் சொன்ன தேவ ஆலோசனைகள் மிகவும் ஆசீர்வாதமாக இருந்திருக்கின்றது. சகோதரனும் அவர்களின் மனைவியும் கூட பெண் மக்கள் கர்த்தரில் வளர அனுகூலமான தேவ ஆலோசனைகளைக் கூறி கர்த்தருடைய வசனத்தையும் பிரசிங்கித்திருக்கின்றார்கள். அந்தக் கூட்டத்தில் வியாதியாக வந்த ஒரு ஆத்துமா கூட கர்த்தருடைய கிருபையால் நல்ல சுகம் பெற்றதாக அந்த பெண் மக்களில் ஒருவர் சந்தோசமாக நமது சகோதரனிடம் சாட்சி கூறினதாகச் சொன்னார்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இந்த பெண் மக்கள் தொடர்ந்து தங்கள் கரங்களில் உள்ள பாட்டுப் புத்தகங்களை கொண்டு கர்த்தரை பாடித்துதித்து, அவர்கள் வசமுள்ள வேதாகமங்களை வாசித்து தியானித்து ஆண்டவரில் வளர்ந்து வருவார்கள் என்பதை நாம் நிச்சயமாக கர்த்தரில் நம்பலாம். நமது பாஸ்டர் சகோதரன் இருக்கும் இடத்துக்கும் பெண் மக்கள் இருக்கும் டிடிகாட்டுக்கும் உள்ள தூரம் 60 கி.மீ தொலைவாகும். அடிக்கடி வந்து அவர்களை ஆவிக்குள் உற்சாகமூட்ட சகோதரனுக்கு இயலாத போதினும் தொலைபேசி மூலமாக அவர்களை உற்சாகப்படுத்துவதுடன் தனக்கு சமயம் கிடைக்கும்போது அவர்கள் டிடிகாட்டுக்கு கட்டாயம் வந்து ஜெப ஐக்கியத்தில் கலந்து கொண்டு பெண் மக்கள் ஆண்டவரில் வேர் ஊன்றி வளர அனைத்துப் பிரயாசங்களையும் மேற் கொள்ளுவார்கள். நாமும் அதற்காக ஜெபிப்போம். "உன் ஆகாரத்தை தண்ணீர்கள் மேல் போடு, அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனை காண்பாய்" (பிர 11 : 1) என்ற தேவ வாக்கு டிடிகாட் ஊழியங்களில் நிறைவேறியிருக்கின்றது. கர்த்தருக்கே மகிமை. |
கோர்பெட்டா, சவ்பாட்டி, ஆடிசோராவில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் காலை ஆகாரங்களுக்குப் பின்னர் டிடிகாட்டிலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோர்பெட்டா என்ற நாற்சந்திப்பு (நான்கு ரோடுகள்) இருக்கும் இடத்திற்கு வந்து அந்த இடத்தில் காணப்பட்ட மக்களுக்கு தேவனுடைய பிரதிகளைக் கொடுத்துவிட்டு கானகப்பாதை வழியாக அல்மாடி என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அந்த இடத்தில் சில சிறிய கடைகளும் ஒரு டீ கடையும் இருந்தது. அங்குள்ள மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் எங்கள் குழுவினரில் ஒரு பகுதியினர் மல்லா ஜல்லா என்ற கிராமத்திற்குச் சென்று அங்கிருந்த நடுநிலைப் பள்ளியில் இருந்த 150 மாணவ மாணவியர்களுக்கு சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்து ஊழியம் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அந்தப் பள்ளியில் இருந்த 7 ஆசிரியர்களின் விருப்பப்படி அவர்களுக்கு 7 ஹிந்தி மொழி வேதாகமங்களைக் ஜெபத்துடன் கொடுத்திருக்கின்றார்கள்.
நாங்கள் அங்கிருந்து திரும்பவுமாக கோர்பெட்டா என்ற நாற்சந்திப்புக்கு வந்து அங்கிருந்து சவ்பாட்டி என்ற கிராமத்திற்குச் சென்றோம். அந்த ரஸ்தா மார்க்கத்தில் அதுவேதான் கடைக்கோடி கிராமமாகும். அங்கிருந்த ஆரம்ப பாடசாலையில் 2 ஆசிரியர்களும் 20 மாணவர்களுமிருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்தோம். ஆசிரியர்கள் இருவருக்கும் வேதாகமங்கள் கொடுத்தோம். எங்கள் வழித்தடத்தில் கடைசியாக இருந்த சவ்பாட்டி என்ற கிராமத்தையும் அதிலுள்ள பண்டைய கால பாழடைந்த வீடு ஒன்றையும், வீட்டிற்கு அருகில் இருவர் தங்கள் கழுதையில் பழு ஏற்றிக்கொண்டிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

அந்த நாளின் மாலை வேளையிலேயே நாங்கள் டிடிகாட்டிலிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள ஆடிச்சோரா என்ற ஏகாந்தமான மலைக் கிராமத்திற்கு தேவ ஊழியத்திற்காக எங்கள் வாகனங்களில் சென்றோம். நாங்கள் சென்ற பாதை குறிப்பாக ஒரே ஒரு இடத்தில் மிகவும் பயங்கரமாக இருந்தது. வாகனத்தின் நான்கு டயர்கள் மாத்திரம் தொட்டுச் செல்லுகின்ற அளவிற்கே ரஸ்தா அத்தனை இடுக்கமாக இருந்த ஒரு இடம் அது. சற்று அப்பாற் சென்றாலும் பல நுற்றுக்கணக்கான அடிகள் கெடு பாதாளத்திற்கு வாகனம் உருண்டு விடும். அன்பின் ஆண்டவர் எங்களை கிருபையாகப் பாதுகாத்துக் கொண்டார். ஆடிச்சோரா என்ற அந்த சிறிய ஏகாந்தமான இமயமலை கிராமம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கக் கூடும்.

இந்த கிராமத்திலுள்ள சிறிய கடை வீதியிலுள்ள மக்களுக்கு நாங்கள் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். பஜாரில் ஒரு நடுத்தர வயதையுடைய மனிதர் நாங்கள் கொடுத்த ஹிந்தி புதிய ஏற்பாட்டை மிகுந்த ஆர்வமாக வெகு நேரம் படித்துக் கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். அவர் ஒரு தவனமுள்ள ஆத்துமா என்பதை நாங்கள் கண்டறிந்து அவரண்டை நெருங்கி அவருடன் பேச்சுக் கொடுத்தோம். அவரோடு நாங்கள் தொடர்ந்து பேசியபோது அவர் ஒரு துக்கம் நிறைந்த ஆத்துமா என்பதனைக் கண்டறிந்தோம். சரீரத்திலுள்ள சர்க்கரை நோயின் கொடுமை காரணமாக அவரது வலது காலின் பெரு விரலை மருத்துவர் எடுத்துவிட்டார். இரவில் நல்ல தூக்கம் இல்லாமல் அந்த மனிதர் பெரிதும் கஷ்டப்படுவதாகச் சொன்னார். நம்முடைய பாடுகளை ஏற்று நமது துக்கங்களைச் சுமந்த நமது அன்பின் ஆண்டவர் இயேசுவை அவருக்குக் கூறி அவரையே அண்டிக் கொள்ளும்படியாகவும், தனது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு பாவ மன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக் கொள்ளும்படியாகவும், தனது நோய் பிணியின் வேதனையை ஆண்டவர் இnசுவிடமே சொல்லி நல்ல சுகத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாகவும் பரிவுடன் சொன்னோம். அவரும் அதை மிகுந்த பொறுமையோடு ஏற்றுக் கொண்டு அப்படியே செய்வதாக எங்களிடம் உறுதி கூறி எங்களிடம் பெற்றுக் கொண்ட கர்த்தருடைய வார்த்தைகளையும் தொடர்ந்து வாசிப்பதாக கூறினார். அவருடைய பெயர் திரிலோக் சிங் என்பதாகும். காலின் பெருவிரலை இழந்து காலில் பெரிய கட்டுப்போட்ட நிலையில் மிகுந்த ஆர்வத்துடன் நாங்கள் கொடுத்த புதிய ஏற்பாட்டை ஆவலோடு வாசித்துக்கொண்டிருக்கும் அவரை நீங்கள் இந்தச் செய்தியில் நீங்கள் காணலாம்.

இந்தக் கிராமத்தின் இறக்கமான பள்ளம் ஒன்றினுள் இருந்த ஒரு நடு நிலைப்பள்ளியில் ஆசிரியர்களுக்கும், பிள்ளைகளுக்குமாக தேவனுடைய பிரசுரங்களை அளித்தோம். அந்த நடுநிலைப்பள்ளியில் மொத்தம் 60 மாணவ மாணவிகளும் 3 ஆசிரியர்களும் இருந்தனர். ஆசிரியர்கள் மூவருக்கும் அவர்கள் விருப்பப்படி 3 ஹிந்தி மொழி வேதாகமங்களும் ஜெபத்துடன் கொடுத்தோம். அங்கிருந்த ஒரு ஆரம்ப பாடசாலையிலும் பிரதிகளைக் கொடுத்தோம். அங்கு 30 மாணவ மாணவியரும் ஒரு ஆசிரியரும் இருந்தார்கள். |
டூனாகோட், கேதார் கிராமங்களில்
நடைபெற்ற தேவ ஊழியங்கள். |
ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் வாகனங்களில் தேவனுடைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு டிடிகாட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள டூனாகோட் என்ற கிராமத்திற்கு ஜெபத்துடன் பிரயாணமானோம். டூனாகோட் என்ற அந்த இடம் டிடிகாட்டிலிருந்து அடர்ந்த கானகப்பாதைக்கு அப்பால் அடிவாரத்தில் உள்ள ஒரு மலைக் கிராமமாகும். சமீப நாட்களில் பெய்த பலத்த மழைகளின் காரணமாக வளைந்து வளைந்து சென்ற கானகப் பாதையின் பல இடங்களிலும் உடைப்புகள் ஏற்பட்டிருந்தன. இருண்ட கானகமாக இருந்தபடியால் அந்த காடுகளில் மாத்திரம் வாழக்கூடிய ஒரு வித வண்டினங்கள் நொய்......... நொய்............... என்று இடைவெளிவிட்டு கிரீச்சென்ற சத்தம் போட்டுக் கொண்டிருந்தன. எங்களது இரு வாகனங்களும் அடுத்தடுத்து ஒன்றாக அதே சமயம் மிகவும் மெதுவாக போய்க் கொண்டிருந்தன. இறுதியாக நாங்கள் டூனாகோட் வந்து சேர்ந்தோம். இரு பக்கம் வானளாவ உயர்ந்து நின்ற அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் அடியில் அந்த இடம் இருந்தது. சில வீடுகளுக்கு முன்பாக பெரிய மலைத் தேன் பெட்டிகள் வைத்திருந்தனர். சற்று நீளமாக இருந்த அந்த சிறிய பஜாரில் இருந்த எல்லாருக்கும் அநேகமாக நாங்கள் ஆண்டவருடைய சுவிசேஷப் பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். நாங்கள் எங்களுடைய பஜார் ஊழியத்தை முடிப்பதற்கு முன்பாகவே நமது குழுவிலுள்ள விஜயசிங் மற்றும் சோனுசிங் ஆகிய இருவரும் தங்கள் ஜோல்னா பைகளை கர்த்தருடைய பிரசுரங்களால் முழுமையாக நிரப்பிக் கொண்டு டூனாகோட்டுக்கு அப்பால் இருந்த கேதார் கிராமத்தில் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்ய புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.
கேதார் கிராமத்திற்கு சென்ற அவர்கள் கர்த்தருடைய கிருபையால் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கர்த்தருடைய பிரசுரங்களைக் கொடுத்திருக்கின்றனர். அதற்கப்பால் கேதார் கிராமத்திற்கு மேலாக உச்சி மேட்டில் இருந்த கேதார் கிராம பள்ளிக்கூடத்திற்குச் சென்று அப்பொழுது அந்தப் பள்ளியிலிருந்த 26 மாணவர்களுக்கும் 2 ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்ததுடன் ஆசிரியர்கள் இருவருக்கும் ஹிந்தி மொழி வேதாகமங்களைக் கொடுத்துள்ளனர். மலைப்பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அழகான கேதார் கிராமத்தையும், மiலை உச்சியில் உள்ள பள்ளிக்கூடத்தையும் நீங்கள் காணலாம்.


கேதார் கிராமத்தையும், மலை உச்சியில் ஏகாந்தமாக இருக்கும் பள்ளிக்கூடத்தையும் அடைவதற்கு முன்பாக நமது தேவ ஊழியர்கள் படத்தில் நீங்கள் காண்கின்ற தொங்கு பாலத்தின் வழியாக கஷ்டத்துடன் ஒரு மலை ஓடையை கடக்க வேண்டியதாக இருந்தது என்பதை நாம் மறப்பதற்கில்லை.

டூனாகோட் கிராமத்திலும் ஒரு நடுநிலைப் பள்ளியும் ஒரு ஆரம்ப பள்ளிக்கூடமும் இருந்தன. நடுநிலைப் பள்ளியில் 62 மாணாக்கரும் 4 ஆசிரியர்களும் ஆரம்பப் பள்ளியில் 29 மாணாக்கரும் 2 ஆசிரியர்களும் இருந்தனர். அனைவருக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்ததுடன் ஆசிரியர்களுக்கு ஹிந்தி மொழியிலான பரிசுத்த வேதாகமங்களை ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும், கர்த்தர் தம்முடைய வார்த்தைகளின் மூலமாக அவர்களுடன் பேசி அவர்களுக்குத் தம்மை ஜீவனுள்ள ஆண்டவராக வெளிப்படுத்த வேண்டும் என்ற உள்ளத்தின் பெருமூச்சோடு கொடுத்தோம். அந்த நாளில் ஆண்டவர் எங்களுக்கு ஒரு அருமையான ஊழியத்தை கிருபையாகத் தந்து தம்முடைய நாமத்தை மகிமைப்படுத்தினார். அவருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்? |
சூனாகோட், ஓக்லா, சிங்காலி, சௌஞ்ஸால்
கிராமங்களில் நடைபெற்ற தேவ ஊழியங்கள் |
ஒரு நாள் காலை நாங்கள் வழக்கம்போல எழுந்து எங்கள் வாகனங்களை தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு ஜெபத்துடன் டிடிகாட்டிலிருந்து சிங்காலி என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் சென்ற வழித்தடத்தில் பள்ளத்திற்குள்ளாக ஒரு நடுநிலைப் பள்ளிக்கூடம் இருந்தது.

நாங்கள் அங்கே இறங்கி அங்குள்ள பள்ளி மாணாக்கர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு திரும்பும்போது எங்கள் பாதையில் நாங்கள் சந்தித்த ஒரு காலை இழந்த ஒரு துயரமான மனிதருக்கு எங்கள் கைவசம் இருந்த அனைத்து தேவனுடைய பிரசுரங்களிலும் வகைக்கு ஒன்றாக ஒவ்வொரு பிரசுரங்களையும் ஜெபத்துடன் கொடுத்தோம். அந்த மனிதர் அடைந்த சந்தோசம் அதிகமாக இருந்தது. அவருடைய படத்தை நீங்கள் செய்தியில் காணலாம்.

அதற்கப்பால் ஓக்லா என்ற இடத்திலிருந்த சில ஆங்கிலப் பள்ளியில் படித்த மாணாக்கர்களுக்கு பிரதிகளை விநியோகித்துவிட்டு சிங்காலி என்ற இடத்திற்குச் செல்லும் பாதையில் காணப்பட்ட சிறிதும், பெரிதுமான சுமார் 8 பள்ளிகளில் பிரசுரங்களைக் கொடுத்தோம். அவர்களில் வாஞ்சையுள்ள ஆசிரியர்களுக்கு ஹிந்தி மொழி பரிசுத்த வேதாகங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். நாங்கள் சென்ற பாதையில் வெகு தொலைவில் ஒரு பள்ளிக்கூடம் தெரிந்தது. எங்களுடைய வாகனம் அங்கு செல்லுவதற்கு எந்த ஒரு ரஸ்தாவும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட இடம் சென்ற பின்னர் கட்டாயம் நடந்தேதான் அங்கு செல்ல வேண்டும். வெகு தொலைவில் இருந்த அந்தப் பள்ளிக்கு யார் செல்லுவது? எங்களுக்கு அருகிலிருந்த அறிவிப்பு பலகையின் தகவலின்படி சௌஞ்ஸால் என்ற அந்த பள்ளிக்கூடம் இருந்த இடம் ஒரு கி.மீ. என்று எழுதப்பட்டிருந்தது. அவர்கள் கணக்கின்படி ஒரு கி.மீ. என்றால் நமது கணக்கின்படி 3 கி.மீ தூரம் ஆகும். சகோதரன் விஜயசிங் அவர்கள் தனது ஜோல்னா பையில் பிரசுரங்களை நிரப்பிக் கொண்டு, புதர் நிறைந்த பாதை வழியாக தனது பிரயாணத்தை உடனே ஆரம்பித்தார்கள். நாங்கள் யாவரும் பிரதான ரஸ்தாவில் நின்று கர்த்தர் அவர்கள் ஊழியங்களை ஆசீர்வதிக்கும்படியாக ஜெபித்துக் கொண்டிருந்தோம். அந்தப் பள்ளியின் அறிவிப்பு பலகையை நீங்கள் இந்தச் செய்தியில் காண்பீர்கள்.

சகோதரன் அங்கு சென்றதும் வெறுமனே தேவனுடைய பிரசுரங்களை மட்டும் கொடுத்துவிட்டு திரும்பிவிட நினைத்த அவர்களை கர்த்தர் பயன்படுத்த சித்தம் கொண்டிருக்கின்றார். 36 மாணாக்கர்களும், 2 ஆசிரியர்களும் இருந்த அந்த ஆரம்ப பள்ளியில் பிள்ளைகள் எல்லாரையும் ஒன்று கூடி வரச் செய்து அமரச் செய்து ஆண்டவர் இயேசுவைக் குறித்து பிள்ளைகளுக்கு சில வார்த்தைகள் கூறும்படியாக ஆசிரியர்கள் நமது சகோதரனை அன்பாகக் கேட்கவே, நமது சகோதரனும் சந்தர்ப்பதை பயன்படுத்திக் கொண்டு மிகுந்த மகிழ்ச்சியோடு இரட்சகர் இயேசுவைக் குறித்தும், மனுமக்களின் பாவங்களிலிருந்து அவர்களை மீட்டு இரட்சித்து அவர்களைப் பரலோக வாசிகளாக்கும் பொருட்டு தன்னையே உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்த தேவாட்டுக் குட்டியாக பலியான அவரது மட்டற்ற கல்வாரி அன்பையும் குறித்து அருமையாகப் பேசியிருக்கின்றார்கள். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. சௌஞ்ஸால் ஆரம்ப பள்ளியின் படத்தையும் நீங்கள் காணலாம். வெகு தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்.

டிடிகாட்டைச் சுற்றியிருந்த அநேக இடங்களுக்குச் சென்று கர்த்தருடைய ஊழியங்களை நாங்கள் செய்து திரும்பினோம். ஏராளமான பள்ளிகளுக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கும், உயர்நிலைப் பள்ளிகளுக்கும், மேல் நிலைப்பள்ளிகளுக்கும் சென்று அநேக மாணவ மாணவிகள், ஆசிரியப் பெருமக்கள் கரங்களில் எல்லாம் வானத்தையும், பூமியையும் படைத்த சர்வ வல்ல தேவனின் ஜீவனுள்ள வசனங்களை ஜெபத்தோடும், ஆத்தும பாரத்தோடும் கொடுத்து திரும்பினோம். அவைகள் ஒவ்வொன்றையும் விஸ்தாரமாக எழுத எங்களால் கூடாது. எவராலும் கூடாத காரியம் அது. நாங்கள் செய்த ஊழியங்கள், நாங்கள் அவைகளுக்காக எடுத்துக் கொண்ட பிரயாசங்கள், கஷ்டங்கள் அனைத்தையும் ஆண்டவருடைய கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன. அவைகள் அவருடைய ஞாபக புஸ்தகங்களில் எழுதப்பட்டுள்ளது.
நாங்கள் கர்த்தருக்கு ஊழியஞ்செய்த சில படங்களையும், எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய வார்த்தைகளைப் பெற்று ஆசை ஆவலாகப் படிக்கும் அந்த இமயமலைகளில் வாழ்கின்ற மக்கள் சிலரின் படங்களையும் நீங்கள் பார்க்கலாம். அந்த மக்களின் உள்ளங்களில் ஆண்டவர் தமது வார்த்தைகளின் மூலமாக தொடர்ந்து பேசவும், நாம் கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்காக எடுத்துக் கொண்ட நமது பிரயாசங்கள், பாடுகள், தியாகங்கள் வீண் போகாதிருக்கவும், தேவ பிள்ளைகளாகிய நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
|
 |
|
|