ஐயோ, நரக அக்கினி ஜூவாலைகள் எரிகின்ற பாதாளத்துக்குள் நான் இறங்கிக் கொண்டிருக்கின்றேனே!

அநேக ஆண்டு காலங்களுக்கு முன்பாக "மரண வாசலுக்கு அப்பால்" என்றதோர் புத்தகம் டாக்டர் மாரிஸ் ராலிங்ஸ் என்பவரால் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. டாக்டர் ராலிங்ஸ் சிறந்ததோர் இருதய அறுவை சிகிட்சை நிபுணர் ஆவார். மருத்துவ ரீதியாக மரித்துப் போனார்கள் என்று தள்ளப்பட்ட பலரையும் அவர் தனது மருத்துவ ஆற்றலால் மீண்டும் உயிர் பிழைக்க வைத்திருக்கின்றார். டாக்டர் ராலிங்ஸ் ஒரு ஊறிப்போன நாஸ்திகனாவார் என்பது குறிப்பிடத்தக்க காரியமாகும். "உலகின் எல்லா மதங்களும் மக்களை ஏமாற்றும் மோசடிக்காரர்கள் என்றும் மரணம் என்பது மனிதனை அவனது உலக துன்ப துயரங்களிலிருந்து அழகாக விடுவித்துவிடும் ஒரு அற்புத சஞ்சீவி" என்றும் ராலிங்ஸ் கூறி வந்தார். ஆனால், 1977 ஆம் ஆண்டு அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அசாதாரண சம்பவமானது அவரது முழு வாழ்க்கையையுமே தலை கீழாக மாற்றி அமைத்து விட்டது. அந்த ஆண்டில் அவர், முழுமையாக மரித்துப்போனான் என்று தள்ளப்பட்ட ஒரு பிணத்தை தனது மருத்துவ ஆற்றலின் திறமையால் மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார். அவனுடைய உயிர் அவனுக்குள் வந்ததும் அவன் "ஐயோ, நரக அக்கினி ஜூவாலைகள் எரிகின்ற பாதாளத்துக்குள் நான் இறங்கிக் கொண்டிருக்கின்றேனே" என்று பயத்தால் பெரிதும் தாக்குண்டவனாக வீரிட்டு சத்தமிட்டுக் கதறி அலறி அழுதான்.

ராலிங்ஸ் ஒவ்வொரு சமயமும் அந்த மனிதனின் இருதய துடிப்பை சீரான நிலைக்குக் கொண்டு வரும்போதும், அவனுடைய சுவாசம் உள்ளிருந்து வெளிவரும் சமயங்களில் எல்லாம் "ஐயகோ, நான் நரகத்தில் இருக்கின்றேனே" "ஐயகோ, நான் நரகத்தில் இருக்கின்றேனே" என்று அந்த மனிதன் பெரும் துயரத்தால் பெருமூச்செறிந்து துயரக் குரல் எழுப்பினான். "அவன் பயத்தால் திகைத்துக் கலங்கி, "ஐயோ நான் மரிக்க அஞ்சுகின்றேன், எனக்கு உதவி செய்ய மாட்டீர்களா?" என்று என்னை நோக்கிக் கெஞ்சினான்" என்று டாக்டர் ராலிங்ஸ் கூறுகின்றார். "அதற்கப்பால், உண்மையாகவே ஒரு பயத்தின் உணர்வு அவனுடைய முகத்தில் இருப்பதை நான் கவனித்தேன். ஜீவன் பிரியும் இறுதி நேரம் பொதுவாக மக்களுக்குள்ள அந்த சாவின் நடுக்கத்தின் திகைப்பு அவனில் காணப்பட்டது. அவன் கண்விழிகள் விரைந்து சுழன்று கொண்டிருந்தது. அவனுடைய உடலிலிருந்து வியர்வை கொட்டிக் கொண்டிருந்தது. அவன் என்னைப் பார்த்த போது அவனது தலை முடி பயத்தால் நெட்டுக்குத்தாக நின்று கொண்டிருந்தது"

இந்தச் சமயத்தில் மற்றுமொரு துயரமான காரியமும் நடந்தது. அந்த மனிதன் என்னைப் பார்த்து "என்னை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? நான் நரக அக்கினியில் இருக்கின்றேன். என்னைத் திரும்பவுமாக நரகத்துக்கு அனுப்பிவிடாதீர்கள்" என்று கூறினான். அவன் தனது வார்த்தையில் திட்டமாக இருந்தான். "அவன் உண்மையாகவே ஒரு மாபெரும் துயர நிலையில் இருக்கின்றான் என்பதை இறுதியாக நான் கண்டு கொண்டேன். அவனைப் போன்று அத்தனை கோர பயத்தால் தாக்குண்ட எந்த ஒரு மனிதனையும் நான் என் வாழ்வில் காணவே இல்லை" என்று கூறுகின்றார் டாக்டர் ராலிங்ஸ். அந்த மனிதன் எழுப்பிய கண்ணீரின் புலம்பல்களையும், அவன் அப்பொழுது காணப்பட்ட கோர நிலையையும் நேருக்கு நேர் காண்கின்ற எந்த ஒருவனாலும் அவன் மெய்யாகவே நரக அக்கினிக்குள் இருந்து கொண்டிருக்கின்றான் என்பதை திட்டமும் தெளிவுமாகக் கண்டு கொள்ளலாம் என்கின்றார் ராலிங்ஸ்.

வாசிப்போனே, கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் எரி நரகம் என்று ஒரு இடம் இருப்பதை தொடர்ச்சியாக கோடிட்டுக் காண்பித்துக் கொண்டே செல்லுகின்றது. புதிய ஏற்பாட்டில் மட்டும் நரகத்தைக் குறித்து 162 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆண்டவராகிய இயேசு இரட்சகர் தாமே தமது வாயால் 70 தடவைகளுக்கும் மேலாக நரகத்தைக் குறித்து பேசியிருப்பதாக தெரிகின்றது.

தேவ கோபாக்கினையின் இடமான அந்த தீச்சூழைக்குச் நீ செல்லாமல் இன்னும் பூலோகத்திலேயேதான் நீ இருந்து கொண்டிருக்கின்றாய். நீ எத்தனை பாக்கியசாலி! உனக்குக் கிடைத்த இந்த பொன்னான கிருபையின் காலத்தில் உனது பாவத்திலிருந்து மனந்திரும்பி, பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்று உனக்காக மூன்றாணிகளில் கல்வாரி மாமலை மேல் ஈனச் சிலுவையில் தொங்கிய அன்பின் ஆண்டவர் இயேசுவை அண்டிக் கொள். அவரை அண்டிக் கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள் (சங் 2 : 12)

(மொழி பெயர்ப்புச் செய்தி)


 
 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM