"நான் பிடித்த கொம்பு முருங்கைக் கொம்பாயிற்றே"

பல்லாண்டு காலங்களுக்கு முன்பாக தமிழ் நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற தமிழ் அறிஞரும், சிவ பக்தரும், அஷ்டாவதானியும் (அஷ்டாவதானி என்றால் எட்டு கேள்விகள் ஒரே நேரத்தில் கேட்டால் அந்த எட்டு கேள்விகளுக்கும் ஒவ்வொன்றாக வரிசைக் கிரமமாக பதில் அளிக்கக் கூடிய மாபெரும் ஆற்றல் கொண்டவர்) யமுகக்கோவை, கழுகாசலக்கோவை, செந்தூர் சிலேடை, வெண்பா, அடைக்கலச் சதகம், போற்றிமாலை முதலிய நூல்களின் ஆசிரியருமான வைரவநாதக் கவிராயர் என்பவர் அணியாபரணநல்லூர் என்ற ஊரைச் சேர்ந்தவராவார்.

வாழச் செய்தாலும் உனக்கே யடைக்கலம் வாழ்க்கையின்றித்
தாழச் செய்தாலும் உனக்கே யடைக்கலம் தாழ் நரகில்
வீழச் செய்தாலும் உனக்கே யடைக்கலம் ஈண்டுயரில்
ஆழச்செய்தாலும் செந்தூரா (திருச்செந்தூர் முருக கடவுளே) உனக்கே யடைக்கலம்

என்று தன்னைத் தத்தம் பண்ணித் திட நம்பிக்கையோடே இருந்தவர் தனது மரணப் படுக்கையில் தனது பக்கத்திலிருந்த தனது மனைவி மக்கள் முதலானோருக்கு சொன்னதாவது "நான் பிடித்த கொம்பு முருங்கைக் கொம்பாயிற்றே" என்று மிகுந்த துயரத்தோடு கூறினார். அவருடைய வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தைகள் "நந்தவனம் அழிந்தது. கழுதை மேய்ந்தேன். குதிரை மேய்ந்தேன்" என்பதாகும்.

அவரது மரணப் படுக்கையில் அவர் வாயிலிருந்து புறப்பட்ட அந்த துயர வார்த்தைகளைக் கேட்டு நடுநடுங்கிய அவரது குமாரன் ஷண்முகநாதக் கவிராசர் இயேசு கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்று அவரை விசுவாசித்து இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று பின் நாட்களில் "ஏசுநாதக் கவிராயர்" என்ற பெயர் பூண்டு சிறந்த கிறிஸ்தவ பக்தனாக விளங்கினார்.

இதைக் கருத்தோடு வாசிக்கும் தேவப் பிள்ளையே, நீ கிறிஸ்தவனாக இருக்கலாம். ஆலய ஆராதனைகளிலும், கர்த்தருடைய பந்தியிலும் ஒழுங்காக கலந்து கொண்டு வரலாம். ஏராளமான காணிக்கை, தசமபாகம் கொடுக்கலாம். பல மிஷனரி ஊழியர்களை தாங்கலாம், வருடத்துக்கு ஒரு ஆலயம் வட இந்தியாவில் கட்டிக் கொடுக்கலாம். விசுவாச ஜெப வீட்டிற்கு (Faith Home) சென்று கர்த்தரை பாடித் துதித்து ஆரவாரித்து ஆர்ப்பரிக்கலாம், அந்நிய பாஷைகளில் பேசி தீர்க்கத்தரிசனங்களை உரைக்கலாம். கால் கழுவி, பரிசுத்த முத்தமிட்டு ராப்போஜனம் எடுக்கலாம். ஆவியில் நிரம்பி குதித்து ஜெப வீட்டைச் சுற்றி வலம் வரலாம். இப்படி நீ ஓராயிரம் காரியங்களைச் செய்தாலும், நீ உன் பாவங்களுக்காக மார்பில் அடித்து மனங்கசந்து அழுது பிரலாபித்து தேவ சமூகத்தில் பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக்கூடாதததும், உலகம் எடுத்துக் கொள்ளக் கூடாததுமான இரட்சிப்பின் சந்தோசத்தையும், பரலோக தேவ சமாதானத்தையும், மறுபடியும் பிறந்த மாட்சியான அனுபவத்தையும் உன் உள்ளத்தில் பெற்றிராதபட்சத்தில் பக்திக்கடுத்த மற்ற எல்லாக் காரியங்களும் விழலுக்கிறைத்த நீராக வீணாக முடிவடையும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை.

அன்பின் ஆண்டவருடைய சமூகத்தில் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அமர்ந்து ஜெபிக்கக்கூடிய அற்புத கிருபை, மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல தேவ சமூகத்தை வாஞ்சித்து கதறும் பாக்கியம் உனக்குண்டா? இந்த உலகத்தின் மாயாபுரிச் சந்தைச் சரக்குகள் எதிலும் உனக்கு சற்றும் நாட்டமும், தேட்டமும் இல்லாமல் இருக்கின்றதா? "பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்று உன்னால் சொல்லக்கூடுமா? பூலோகத்தில் உனக்கு மோட்சம் ஆரம்பித்து மோட்சத்தில் அனுபவிக்கும் மோட்சானந்த பாக்கியங்களை இந்த உலகத்தில் ஆண்டவருடைய பாதங்களில் தினமும் அனுபவித்து ஆனந்தித்து வருகின்றாயா?

இந்த மாட்சியான அனுபவங்கள் உனக்கு இல்லாமல் இருக்குமானால், உனது மனந்திரும்புதலையும், உனது இரட்சிப்பையும் குறித்து உனக்கு நிச்சயமான ஆனந்த நம்பிக்கை இல்லாதிருக்கும் பட்சத்தில் ஆரம்பத்தில் கண்ட வைரவநாதக் கவிராயரைப் போல உனது மரணப் படுக்கையில் "நான் பிடித்த கொம்பு முருங்கை கொம்பாயிற்றே" "நந்தவனம் அழிந்தது. கழுதை மேய்ந்தேன். குதிரை மேய்ந்தேன்" என்ற மன வியாகுலத்தின் துயரத் தொனிகளை நிச்சயமாக நீ எழுப்பியவாறு நரகம் நோக்கிச் செல்ல வேண்டும்.

தேவ ஜனமே, அவரது சுதந்திரவீதமே, நின்று கவனியுங்கள். செழிப்பு, செல்வம், ஆஸ்தி, ஐசுவரியம், ஆசீர்வாதம், நோய் பிணிகளிலிருந்து விடுதலைக்காக அதைப் பிரசங்கிக்கும் கள்ள அப்போஸ்தலர், கபடமுள்ள வேலையாட்களின் செய்திகளைக் கேட்க மலைகளையும், குன்றுகளையும், குகைகளையும், கூடாரங்களையும் நோக்கி ஓடாமல் உங்கள் முழங்கால்களில் தரித்து நின்று தேவனுடைய வார்த்தைகள் சொல்லுவதை கவனித்து அவருடைய வேதவசனத்தின் வெளிச்சத்தில் "கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கின்றேன்" என்று குரல் கொடுத்து அவருடைய வார்த்தைகளின்படி நடவுங்கள். அப்பொழுது உங்கள் இகலோக வாழ்வின் முடிவு மிகுந்த ஆசீர்வாதமாகவிருக்கும். "நீதிமான் மரிப்பது போல நீங்கள் மரிப்பீர்கள். உங்கள் முடிவு அவனது முடிவு போலிருக்கும்" (எண் 23 : 10)


 
 

வையகத்தில் மிகச் சிறந்த காரியம்

ஒரு தேவ ஊழியர் ஒருவர் தமது கரத்தை ஒரு வாலிபனின் தோளின் மேல் அன்பொழுக வைத்து, "எனது நண்பனே, இந்த உலகத்தில் மிகச் சிறந்த ஒரு காரியம் என்னவென்று நீ என்னிடம் சொல்லக் கூடுமா?" என்று கேட்டார்.

சுற்றிலும் அந்த வாலிபன் பார்த்துவிட்டு அந்த கிறிஸ்தவ ஊழியரின் முகத்தை நோக்கி "என்னால் சொல்லக் கூடும் ஐயா. நான் பள்ளிக்குச் சென்று அதிகமாகப் படிக்காவிட்டாலும் தேவன் தமது ஆவியினால் அந்தக் காரியம் என்னவென்று எனக்குப் போதித்திருக்கின்றார். இந்த உலகத்தில் மிக மேலான காரியம் என்ன என்று எனக்குத் தெரியும். வரப்போகும் விண் நித்திய பேரின்ப வாழ்வுக்கு எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதே அந்த மகத்தான காரியமாகும்" என்றான் அந்த வாலிபன்.

மேற்கண்ட காரியத்தை விட வேறு சிறப்பானதொன்று எதுவாக இருக்க முடியும்? நீ ஆயத்தமாக இருக்கின்றாயா? மோட்சத்திற்கு நீ ஆயத்தமா? கிறிஸ்து இரட்சகரோடு வாழும் நித்திய பேரின்ப வாழ்விற்கு நீ ஆயத்தம்தானா? ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற காரியம் இருப்பதற்காகவும் அதை நாம் அறிந்ததற்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.

வாசிப்போனே நீ ஆயத்தம்தானா? ஆயத்தமாக நீ இல்லாத பட்சத்தில் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமாவது உனக்கு உண்டா? இப்பொழுதே நீ ஆயத்தமாக இருக்க உனக்கு விருப்பமுண்டா? அப்படியானால் நீ தேவனண்டை திரும்பி இப்பொழுதே மனம் திரும்பு. இயேசு கிறிஸ்துவை இன்றே விசுவாசி. உன்னுடைய பாவங்களுக்காக அந்த மீட்பரின் இரத்தம் சிந்தப்பட்டது என்பதை முழு இருதயத்தோடு விசுவாசி. இப்பொழுது இயேசு இரட்சகரை உன் வாயினால் அறிக்கையிட்டு உனது பாவங்களுக்காக அவர் மரித்த அற்புத தேவ அன்பை நீ முழு மனதார அப்படியே நம்புவதாக அவரிடம் சொல்லு. அப்படியானால் நீ இன்றே இரட்சிக்கப்படுவாய்.

(courtesy:- "Echoes of Grace")


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM