"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் கர்த்தர் சித்தமுள்ளவராயிருக்கிறார்" (1 தீமோ 2 : 4)
"அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார், இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷர் எல்லாருக்கும் கட்டளையிடுகிறார்" (அப் 17 : 30)
நமது நேச கர்த்தாவின் அளவற்ற அன்பின் கிருபையால் இந்த ஆண்டிலும் தேவனுடைய மகிமையின் சுவிசேஷத்தை இமயமலைகளிலுள்ள கட்வால் பகுதிகளில் அறிவிக்க நாங்கள் ஜெபத்தோடு ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றோம். கடந்த ஆண்டுகளைப்போல நாங்கள் ஒரு குழுவாக 2 வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி தேவ ஊழியத்தை மேற்கொள்ளவிருக்கின்றோம். கட்வால் மலைப்பகுதி உத்தராஞ்சல் மாநிலத்தின் அடுத்த ஒரு பகுதியாகும். இந்து மக்களின் பிரசித்திபெற்ற புண்ணிய ஸ்தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி போன்றவைகள் இந்த கட்வால் மலைப் பகுதியில்தான் அமைந்துள்ளன.
இந்தப் பகுதிகளில் உள்ள மலை ரஸ்தாக்கள் மிகவும் அபாயகரமானவைகளாகும். இந்தப் பகுதிகளில் தேவனுடைய ஊழியம் செய்வதும் அத்தனை எளிதான ஒன்றல்ல. எனினும், "நீங்கள் உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்" (மாற்கு 16 : 15) என்ற நம் அருமை இரட்சகரின் அறைகூவலை ஏற்று அந்த அன்பரின் பெலத்தோடு முன்னேறிச் செல்லுகின்றோம்.
இந்த ஊழியத்திற்கு தேவையான மிகவும் பயனுள்ள ஹிந்தி மொழி கைப்பிரதிகள் இப்பொழுது அச்சாகிக் கொண்டிருக்கின்றது. "சாந்தி மார்க்கம்" என்று அழைக்கப்படும் ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷங்கள் பெங்களூரில் அச்சில் உள்ளது. கடந்த ஆண்டைப் போல நல்ல தரமான ஹிந்தி சுவிசேஷ பிரசுரங்களை டில்லியில் உள்ள "மசிஹி சாகித்திய சன்ஸ்தா" மற்றும் "ஆப்பரேஷன் மொபிலைசேஷன்" என்ற கிறிஸ்தவ ஸ்தாபனங்களிலும் கூடுதலான விலை கொடுத்து வாங்கவிருக்கின்றோம்.
கட்வால் பகுதிகளுக்கு நாங்கள் செல்ல வேண்டுமானால் நாங்கள் எங்கள் வாகனங்களுக்கு கணிசமான தொகை உத்தராஞ்சல் அரசுக்கு செலுத்தி ஒரு மாத காலத்திற்கு பிரத்தியேகமான பெர்மிட் வாங்க வேண்டும். கர்த்தருடைய தயவால் அனைத்துக் காரியங்களும் செவ்வனே செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை நாங்கள் ஊழியஞ்செய்த உத்தராஞ்சல் மலை நாட்டிலுள்ள குமான் மலைப்பகுதியில் நாங்கள் தங்கி இளைப்பாறக் கூடிய ஓரளவு நல்ல வசதி வாய்ப்புகளை இந்த தடவை நாங்கள் செல்லக்கூடிய கட்வால் பிரதேசத்தில் எதிர்பார்க்கவியலாது. அதுபோல ஆகார காரியங்களும் எங்களுக்கு ஒழுங்காக இருக்காது என்பதை நாங்கள் நன்கு அறிவோம். இன்னும் பல கஷ்டங்களையும் கூட நாங்கள் சந்திக்க வேண்டியதாக இருக்கலாம். எனினும், நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமாவானது முடிவில்லாத யுகாயுகமாக நரக தீச்சூளையில் அனுபவிக்கப்போகும் சொல்லொண்ணா வேதனைகளை நாம் எண்ணும்போது எங்களுடைய ஒரு மாத கால பாடுகள் ஒன்றுமே இல்லை.
அன்பின் பரம தகப்பன் நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் ஒரு மாத கால வாகன தேவ ஊழியத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இதுவரை எங்களுக்கு முன் நின்று நடத்தி தந்தது போல இந்த தடவையும் எங்களுக்கு நடத்தித் தரவும், நாங்கள் செய்யக்கூடிய தேவ ஊழியங்களை மெய்யான ஆத்தும பாரத்தோடும், நொறுங்குண்ட இருதயத்தின் பெரு மூச்சோடும், மிகுந்த ஜெபத்தோடும், மனத்தாழ்மையோடும் செய்யவும் தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் தயவாக எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு நாள் ஊழியத்திற்கு பின்பும் நாங்கள் பாதுகாப்பாகத் தங்க நல்ல இட வசதிகளை கர்த்தர் அமைத்துத் தரவும், வாகனங்கள் இரண்டையும் இராக்காலங்களில் தீய சக்திகள் சேதப்படுத்திவிடாதபடி காத்துக் கொள்ளவும், ஊழிய நாட்கள் முழுமையிலும் தேவ ஊழியர்களாகிய எங்கள் எல்லாருக்கும், வாகனங்களின் டிரைவர்களுக்கும் எந்த ஒரு நோய் பிணிகள் அணுகாதிருக்கவும், விட்டு வந்திருக்கும் குடும்பத்தினருக்கும் தேவன் நல்ல சுக பெலன் அருளவும் உங்கள் ஊக்கமான ஜெபங்களை வேண்டி நிற்கின்றோம்.
கர்த்தருக்குச் சித்தமானால் நாங்கள் இந்த ஆண்டின் செப்டம்பர் மாதக் கடைசி வாக்கில் வடக்கே பிரயாணப்பட்டு அக்டோபர் மாதம் முழுமையிலும் தேவ ஊழியத்தின் பாதையில் வடக்கே இருப்போம். மிக விரைவாக கடந்து மறையும் ஒரே ஒரு குறுகிய கால வாழ்க்கை. இந்த வாழ்க்கையில் நாம் நமது அன்பின் ஆண்டவருக்காகச் செய்யக்கூடிய ஆத்தும ஆதாயப் பணியை நமது முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும் அவருடைய கிருபையைக் கொண்டு செய்து அவரது ஜீவனுள்ள நாமத்தை மகிமைப்படுத்துவோம். அந்த ஒரு காரியத்தைச் செய்யவே தேவன் நம்மை உலகத் தோற்றத்திற்கு முன்பாகத் தெரிந்து கொண்டாரே தவிர வேறு எதற்கும் அல்ல என்பதை நீங்கள் உங்கள் இருதய பலகையில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். |