முன்னுரை


"நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம், அவர் யூதருக்கு இடறலாயும், கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். ஆகிலும், யூதரானாலும், கிரேக்கரானாலும், எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவ பெலனும், தேவ ஞானமுமாயிருக்கிறார்" (1 கொரி 1 : 23 - 24)

"இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்" (1 கொரி 2 : 2)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக. ஆமென்.

மிகவும் அதிக காலதாமதமாக இந்த தேவ எக்காள இதழை உங்களுக்கு அனுப்புவதை முன்னிட்டு நான் மிகவும் மனம் வருந்துகின்றேன். எனினும், அந்தக் கால தாமதத்திலும் ஆண்டவருடைய ஆசீர்வாதம் இருப்பதை என்னால் நன்கு புரிந்து கொள்ள முடிகின்றது. கடந்த இரண்டு மாத காலமாக நான் கடந்து வந்த பாதையில் ஆண்டவர் எனக்குப் பாராட்டிய அளவற்ற ஆச்சரிய அன்பை எண்ணி அவருக்குள் ஆனந்திக்கின்றேன். அந்த அன்பின் செயலை தேவ பிள்ளைகளாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள கர்த்தரால் ஏவப்படுகின்றேன். அந்த தேவ அன்பு உங்கள் விசுவாசத்தை கட்டாயம் பலப்படுத்தும் என்று கர்த்தருக்குள் நான் நம்புகின்றேன். பொதுவாக எனது இடது கண் பார்வை சற்று மங்கலாக இருந்த போதினும் எனது வலது கண் பார்வை மிகவும் பிரகாசமாக இருந்து வந்தது. சமீப நாட்களில் ஒரு நாள் திடீரென எனது வலது கண்ணில் கடுமையான வலி ஏற்பட்டது. கோவைப் பழம்போல கண்ணானது சிவேரென்று மாறினது. வலியைப் போக்க அதற்கேற்ற மருந்தை வாங்கி சில தினங்கள் ஊற்றி வந்தோம். வலி நன்கு மாறுவதாகத் தெரிந்தது. ஆனால் படிப்படியாக வலது கண் பார்வை மங்கலாகி இறுதியில் இடது கண் பார்வையைவிட மிகவும் மோசமாகிவிட்டது. எழுத்துக்களை வாசிக்க முடியாத நிலைக்கு நான் தள்ளப்பட்டேன். எனது சிறிய புத்தகசாலையில் நான் வாங்கி வைத்திருக்கும் அநேக பூர்வ காலத்து பக்த சிரோன்மணிகளின் அருமையான புத்தகங்களை எல்லாம் இனி ஒருக்காலும் நம்மால் வாசிக்க இயலாது, அவைகளை வாசித்து மொழிபெயர்த்து தேவ எக்காளத்தில் உங்களுக்கு எழுத இயலாது என்று நான் நினைத்தபோது மிகவும் உள்ளம் கலங்கி நின்றேன். அந்தப் புத்தகங்களை எனது கரத்தில் எடுத்துப் பார்த்துவிட்டு மிகவும் துக்கத்தோடு அது இருந்த இடத்தில் அப்படியே வைத்து விடுவேன்.

இந்தக் கண்ணீரின் நேரத்தில் நமது தேவ எக்காளத்தின் மிகவும் பழைய வாசகரான ஒரு அன்பான கர்த்தருடைய தாசனும் ஊழியக்காரருமான தேவப்பிள்ளையிடம் எனது காரியத்தைச் சொன்னேன். அவர்கள் என்னைத் தேற்றி கோவையில் உள்ள ஒரு நல்ல கண் மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஒரு அதிசயமான காரியம் என்னவென்றால், அதை நடத்துகின்ற முதன்மை டாக்டர் என்னை அழைத்துச் சென்ற கர்த்தருடைய பிள்ளையின் கரத்தின் கீழ் கடந்த காலத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூர் என்ற இடத்திலுள்ள ஸ்டேன்ஸ் ஆங்கில மேல் நிலைப் பள்ளியில் படித்த ஒரு மாணவன் என்பதுதான். தனது சொந்த ஆசிரியர், மட்டுமல்ல அந்த ஆசிரியர் பள்ளியின் பிரின்சிபால் என்ற காரணத்தால் எனக்குச் சிறப்பான கவனம் எடுத்துக் கவனித்தார்கள். எனது சரீரத்தில் சர்க்கரை அளவு மிகவும் கூடுதலாக (373) அந்த நேரம் இருந்தபடியால் அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மற்றொரு மருத்துவ மனையின் தலைமை மருத்துவரை தன்னண்டை வரவழைத்து அவருடன் பேசி அவரது மருத்துவமனையில் என்னை இரண்டு நாட்கள் தங்க வைத்து சர்க்கரை நோய்க்கு சிகிட்சை அளித்து அதைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து பின்னர் அறுவை சிகிட்சை செய்தார்கள். ஆப்பரேஷன் தியேட்டருக்கு செல்லுவதற்கு முன்பும், திரும்பி வந்த பின்னரும் என்னை அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அந்த அன்பான தேவப்பிள்ளை கர்த்தருக்கு நன்றி செலுத்தி ஜெபித்து சென்றார்கள். கர்த்தர் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

கர்த்தருடைய அளவற்ற அன்பின் கிருபையால் அறுவை சிகிட்சை நன்றாகச் செய்யப்பட்டு முடிந்து எனது வலது கண் பார்வை இப்பொழுது பூரணத் தெளிவாக இருக்கின்றது. கர்த்தர் எனக்குக் கிருபையாக மறுபடியும் தந்த கண் ஒளியை அவருடைய பரிசுத்த வேத எழுத்துக்களை அவருடைய பெலத்தால் முடிந்த அளவு வாசித்து மனப்பாடம் செய்து என் இருதயத்தில் பொக்கிஷ வைப்பாக வைத்துக் கொள்ள தேவ சமூகத்தில் பொருத்தனை செய்து ஜெபித்தேன். கர்த்தருக்கே துதி உண்டாவதாக.

எனது கண் அறுவை சிகிட்சைக்கு முன்னும், பின்னும் நடந்த காரியங்கள்தான் நாம் மிகவும் கவனிக்க வேண்டியவைகளாகும். இதுவரையான எனது முழு வாழ் நாள் காலத்திலும் நான் எந்த ஒரு மருத்துவமனை சென்று அங்கு தங்கியிருந்து சிகிட்சை பெற்றது இதுவேதான் முதல் தடவையாகும். ஆப்பரேஷன் நடந்த நாளின் காலையில் "நீ தண்ணீர்களைக் கடக்கும் போது நான் உன்னோடு இருப்பேன், நீ ஆறுகளைக்கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை, நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய், அக்கினி ஜூவாலை உன் பேரில் பற்றாது" (ஏசாயா 43 : 2) என்ற அருமையான வாக்குத்தத்தையும் "உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்" (மீகா 7 : 15) என்ற வாக்கையும் கர்த்தர் எனக்குத் தந்தார். என்னுடன் மருத்துவமனையில் தங்கியிருந்த எனது மூத்த மகன் சுந்தர்சிங் அவர்களிடம் இதை நான் அன்று காலையில் கூறினேன். கர்த்தர் சொன்னபடியே நாங்கள் அந்த நாளின் மாலையில் அதிசயத்தை காணவே செய்தோம். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

அறுவை சிகிட்சைக்குப் பின்னர் சுமார் ஒரு மாத காலம் நான் எனது கண்ணுக்கு அவ்வப்போது மருந்து ஊற்றிக்கொண்டு முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியதானது. என்னை கண் மருத்துவமனையில் சேர்த்துச் சென்ற மேற்கண்ட தேவ தாசன் என்னிடம் "சகோதரனே, நாம் சுகமாக இருக்கும் நாட்களில் கர்த்தர் நம்மிடம் பேசுவதைவிட நாம் வியாதி பெலவீனங்களில் நாம் நமது படுக்கையில் தனிமையில் இருக்கும்போதுதான் அவர் நம்மிடம் அதிகமாகப் பேசுவார். அப்படித்தான் ஒரு தேவ பக்தன் தமது புத்தகம் ஒன்றில் எழுதியிருக்கின்றார். எனக்கும் அந்த சொந்த அனுபவம் உள்ளது. எனவே உங்கள் எழுத்து வேலைகளை முற்றும் தவிர்த்து நன்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள். அந்த கர்த்தருடைய பிள்ளையின் வாக்கின்படியே நான் தனிமையாக எந்த ஒரு எழுத்து வேலையும் செய்யாமல் படுத்திருந்த நாட்களில் தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களினால் என்னைப் பெலப்படுத்தினார்.

பகல் முழுவதும் தேவப்பணி காரணமாக கம்பியூட்டர் முன்பாகவோ அல்லது பக்த சிரோன்மணிகளின் புத்தகங்களை வாசித்துக் கொண்டோ, அல்லது அவைகளை மொழி பெயர்த்துக் கொண்டோ அல்லது இதர தேவ பணிகளை துரிதம் துரிதமாகச் செய்து கொண்டிருக்கும் நான் இப்பொழுது எந்த ஒரு வேலையும் செய்யாமல் படுக்கையில் இருப்பது என்பது எனக்கு மிகவும் கஷ்டமாகவே இருந்தது. ஆனால், கர்த்தருடைய கிருபையால் அந்த நாட்களை எல்லாம் எனது ஜெப நாட்களாக ஆக்கிக் கொண்டேன். பெரும்பாலும் எனது முழங்கால்களிலேயே ஜெபத்தில் நான் நின்றேன். அந்த தனிமை நாட்களில் கர்த்தர் என்னை எனது உலகப் பிரகாரமான வேலையிலிருந்து தமது பரிசுத்த ஊழியத்திற்கு முழு நேர ஊழியனாக அழைத்தபோது 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அதிகாலை 3:15 மணிக்குக் கொடுத்த "இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தனது வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்துபோம்" (ஏசாயா 60 : 19-20) என்ற வாக்குத்தத்தையும் 1977 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் கொடுத்த "என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும், கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங் 23 : 6) என்ற வாக்குத்தத்தையும் எனக்கு மீண்டும் நினைப்பூட்டி, தாம் கொடுத்த இந்த வாக்குத்தத்தங்களை கடைசி வரை எனக்கு நிறைவேற்றித்தரப்போவதாகவும் அதற்கு ஆதாரமாக "கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று" (யோசுவா 21 : 45) என்ற வாக்குத்தத்தையும் "சாமுவேல் வளர்ந்தான், கர்த்தர் அவனுடனே கூட இருந்தார், அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடவில்லை" (1 சாமு 3 : 19) என்ற வாக்குத்தத்தையும் திட்டமாகக் கொடுத்து உறுதிப்படுத்தினார். அல்லேலூயா.

தேவன் ஒரு வாக்குத்தத்தத்தை நமக்குக் கொடுக்கின்றார் என்றால் அதின் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால் நமது வாழ்வில் நாம் என்ன செய்யலாம், யாரிடம் உதவிக்காகப் போகலாம், இந்த சிக்கலான சூழ்நிலையை எவ்வாறு கடந்து செல்லலாம் என்று நாம் அங்கலாய்த்து திகைத்து நிற்கும் கண்ணீரின் வேளைகளில் கர்த்தர் நமக்குக் கொடுத்த வாக்குத்தத்தை நாம் அவருக்கு சுட்டிக் காண்பித்து அவரை நாம் நினைப்பூட்டுவதற்கு முன்பாகவே அவர் நமக்குக் கொடுத்த தமது வாக்கை அவரே நமக்கு தெரிவித்து எந்த ஒரு நிலையிலும் அவர் நம்மைக் கைவிடப்போவதில்லை என்று உறுதி கூறி அவர் நம்மைத் தமது மார்போடு அரவணைத்து நிற்பார் என்பதுதான். இந்த மாட்சியான அனுபவம் தேவப் பிள்ளைகளாகிய உங்களில் பலருக்கும் கட்டாயம் இருக்கும் என்று நான் நினைக்கின்றேன். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக.

ஒரே ஒரு உதாரணத்தை மாத்திரம் கர்த்தருக்கு மகிமையாக நான் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். எனது மூத்த மகன் சுந்தர்சிங் அவர்களை பிளஸ் 2 படிப்பு முடிந்ததும் பாளையங்கோட்டையிலுள்ள புனித யோவான் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்க்க இங்கிருந்து கீழே அழைத்துச் சென்றேன். எவ்வளவோ பிரயாசப்பட்டும், அங்குள்ள ஓரிரு பேராசிரியர்களை மன்றாடியும் காரியம் வாய்க்கவில்லை. எங்களுக்கு ஒத்தாசையாக அந்த இடத்திலுள்ள ஒரு அன்பான சகோதரனே வந்திருந்து முயற்சிகள் எடுத்தும் ஜெயம் கிடைக்கவில்லை. அங்கு இடம் கிடையாதபடியால் நான் மகனைக் கூட்டிக் கொண்டு மிகுந்த மன துக்கத்தோடும், மனச்சோர்போடும் வழி நடந்து வந்து கொண்டிருந்தேன். நாங்கள் பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள சமாதானபுரம் என்ற இடம் வரவும் அங்குள்ள சிறிய தேவாலயத்துக்கு அருகிலுள்ள ஒரு வீட்டின் தலை வாசல் நிலைக்கு மேல் கர்த்தர் என்னை தமது ஊழியத்துக்கு அழைத்தபோது கொடுத்த "இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும்................." (ஏசாயா 60 : 19-20) என்ற வாக்குத்தத்தம் ஒரு தகர போர்டில் பெரிய எழுத்துக்களில் தெளிவாக எழுதி வைக்கப்பட்டு, அந்த அதிசய வார்த்தைகள் பளிச்சிட்டு அந்த நேரம் என்னோடு பேசுவதை நான் ஆச்சரியத்துடன் கண்டேன். அந்த இடத்திலேயே தேவன் எனக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தைக் கொண்டு என்னைப் பெலப்படுத்தினார். அவரது மாறாத வாக்குப்படியே அன்றைய தினமே மகனுக்கு நாகர்கோவிலிலுள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பி.ஏ. வகுப்புக்கு இடம் கிடைத்து அங்கேயே அவர்கள் எம்.ஏ. படிப்பு வரை படித்து முடித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சந்தோசத்தோடு வெளியேறக் கருணாகரக் கர்த்தர் கிருபை செய்தார். அவருக்கே மகிமை உண்டாவதாக.

கடந்த தேவ எக்காளம் உங்களில் பலருக்கும் ஆசீர்வாதமாக இருந்ததற்காக ஆண்டவருக்குத் துதி ஏறெடுக்கின்றேன். அதில் காணப்படும் "நஷ்டப்பட்ட ஆத்துமாக்களின் நித்திய பயங்கர வாசஸ்தலம்" என்ற தேவச் செய்தியை உங்களில் சிலர் ஜெராக்ஸ் எடுத்து உங்களுக்கு அருமையானவர்களுக்குக் கொடுத்து படிக்கச் செய்ததை அறிந்தேன். தேவன் தாமே அவர்களோடு பேசும்படியாக ஜெபிக்கின்றேன். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு கிறிஸ்தவ கிராமத்தில் வசிக்கும் தேவ எக்காளத்தின் சந்தாதாரரான ஒரு பரிசுத்த தேவப்பிள்ளை அநேகமாக மாதத்தின் இரண்டாம் வாரம் தனது கிராமத்தைச் சுற்றிலும் உள்ள ஊர்களின் தேவாலயங்களில் மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும், நஷ்டப்படும் ஆத்துமாக்களுக்காக உள்ள எரி நரகத்தையும் குறித்து எச்சரிப்பின் செய்தியை கொடுத்து வருவதாகக் கூறினார்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

தேவ எக்காளம் சந்தாதாரர்களில் ஒரு தேவ பிள்ளை தனது இனத்தவரில் குடிப்பழக்கத்தை உடைய ஒரு சகோதரனை நித்திய நரகத்தைக் குறித்து எச்சரித்தபோது அந்த மனிதர் மிக அசட்டையாக "அதை செத்த பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்று கூறிவிட்டார் என்று தங்கள் கடிதத்தில் மிகவும் விசனத்தோடு எழுதியிருந்தார்கள்.

அதே சமயம், மற்றொரு தேவப் பிள்ளை நரகத்தின் செய்தியை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்ட போது அவர்களின் சின்ன மகன் அந்தச் செய்தியால் தொடப்பட்டதுடன் அவன் தன்னுடன் படிக்கும் சக மாணவனான கிருஷ்ணனைக் குறித்துப் பாரமடைந்தவனாக "அம்மா, கிருஷ்ணனால் நரக அக்கினியை தாங்கிக் கொள்ள முடியவே முடியாது. அது எனக்கு நன்றாகவே தெரியும்" என்று சொல்லிக் கொண்டு தங்கள் தேவாலயத்தில் ஒரு சமயம் வந்து பேசிய ஒரு கர்த்தருடைய ஊழியனின் தேவச்செய்தியைக் கேட்க வரும்படியாக அவன் வீடு சென்று அழைத்த போது கிருஷ்ணனின் தந்தை ஹைதரபாத்தில் இருந்தபடியால் தனது தந்தையின் செல் போனின் உதவியால் அவனுடைய தகப்பனாரிடம் பேசி அனுமதி பெற்று அவனைத் தங்கள் காரில் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று கர்த்தருடைய செய்தியை கவனிக்கும்படியாக அவனைத் தன் அருகில் உட்கார வைத்து அவ்வப்போது தனது நண்பன் கிருஷ்ணன் கர்த்தருடைய வார்த்தையை ஒழுங்காக கவனிக்கின்றானா என்பதை அவன் முகத்தை எட்டிப்பார்த்து, எட்டிப்பார்த்து கண்காணித்துக் கொண்டதுடன் கூட்ட முடிவில் தான் அழைத்து வந்த தனது நண்பன் கிருஷ்ணனை பிரசங்கியாரிடம் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்திய காரியத்தையும் அவர்கள் பாட்டியம்மா என்னுடன் பரவசமாகப் பகிர்ந்து கொண்டபோது நானும் அவர்களுடைய சந்தோசத்தை முழுமையாக எனக்கு உரித்தாக்கிக் கொண்டேன். கர்த்தருக்கே எல்லா துதி, கனம், மகிமை உண்டாவதாக. இவ்வண்ணமாக நமது எளிய தேவ எக்காள பத்திரிக்கை சிறியோருக்கும், பெரியோருக்கும், பாலகருக்கும் பயன் உள்ளதாக இருப்பது நமக்கு சந்தோசத்தை அளிப்பதாக இருக்கின்றது.

இரண்டாவதாகக் குறிப்பிட்ட அந்தப் பாலகனுக்குள்ள கவலையின் உணர்வைக் கவனித்தீர்களா? "அம்மா, கிருஷ்ணனால் நரக அக்கினியை தாங்கிக் கொள்ள முடியவே முடியாது. அது எனக்கு நன்றாகவே தெரியும்" இந்தப் பாலகனுடைய இருதய பாரத்தை நமது தமிழ் நாட்டு தேவ ஊழியர்கள் கொண்டிருப்பார்களானால் நமது தமிழ் நாட்டில் எப்படிப்பட்ட தோர் ஆவிக்குரிய எழுப்புதல் உருவாகியிருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள். நமது தமிழ்நாட்டின் பிரபலமான தேவ ஊழியர்களுக்கு மேற் கண்ட பாலகனின் நரகத்தைக் குறித்த உணர்வு இருந்தால் செழிப்பையும், செல்வத்தையும், நீர்மேல் குமிழி போல ஒரு ஷணப் பொழுதில் கடந்து மறைந்து போகும் நிலையற்ற உலக ஆசீர்வாதங்களையும் தங்களுக்கு முன்னால் கூடி வரும் திரள் கூட்டமான தேவனுடைய ஜனத்துக்கு மேடையில் நின்று பிரசங்கிக்க முடியும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? ஒருக்காலும் கூடவே கூடாது. தேவனுடைய பரிசுத்தமானதும், உன்னதமானதுமான அவருடைய ஊழியத்தை இந்த பொல்லாத ஊழியர்கள் முதல் தரமான உலக வியாபாரமாக மாற்றிப் போட்டார்கள். தேவனுடைய திருச்சபையை தப்பவிடாத இந்த கொடிய ஓநாய்கள் (அப் 20 : 29) நியாயத் தீர்ப்பின் நாளில் ஆண்டவருக்கு எப்படி கணக்கு கொடுப்பார்களோ நமக்குத் தெரியவில்லை.

 

உன்னதமான தேவனின் ராஜரீக ஊழியத்தை
உலகத்தின் அற்பமான வெள்ளிக்காசுகளுக்காக
விற்றுப்போட்ட தந்திர சாத்தான்

நீலகிரி மலைகளிலுள்ள எங்கள் அழகான கோத்தகிரியில் இப்பொழுது 75 சபைப் பிரிவுகள் இருக்கின்றது என்றால் நீங்கள் அதை நம்ப மறுப்பீர்கள். ஆனால் அது உண்மையோ உண்மைதான். ஒரு காலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சபைகள் மட்டும் இருந்த இடத்தில் இன்று இத்தனை சபைகள் புற்றீசல் போல பெருகிவிட்டது. இந்து மார்க்கத்திலிருந்து ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் ஒரு மனிதன் இந்த 75 சபைப் பிரிவுகளில் எந்த சபையில் போய் சேரத் தீர்மானிப்பான் என்று நீங்கள் நினைத்துப் பாருங்கள்? எதற்காக இத்தனை சபைகள்? தேவ ஊழியம் என்றால் எந்த ஒரு கஷ்டமுமில்லாத ஒரு நல்ல ஆதாயத் தொழிலாக மக்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டார்கள். கரத்தில் தேவனுடைய வேத புத்தகத்தை எடுத்து அதை ஒரு ஜோல்னா பையில் போட்டுத் தோளில் தொங்கவிட்டுக் கொண்டு வீடு வீடாகச் சென்று வந்தால் வேண்டிய பணம் மிக எளிதாக சம்பாதித்து விடலாம். அதோடு இந்த ஊழியர்கள் கள்ள தீர்க்கத்தரிசனங்களையும் தங்கள் பக்க பலமாக வைத்துக் கொண்டு, ஏறி இறங்கும் வீடுகளில் ஜெபிக்கும்போது தீர்க்கத்தரிசனங்களைக் கூறி சில துளிகள் முதலைக் கண்ணீரையும் தந்திரமாக வடித்துக் கொண்டால் வருமானத்தை சொல்லவே வேண்டாம். அப்பாவி ஏழை கிறிஸ்தவ மக்கள் இந்த கபடஸ்தரான ஊழியர்களின் வலையில் வெகு துரிதமாக உடனே விழுந்து விடுகின்றனர். அவர்களை முழுமையாக நம்பியும் விடுகின்றனர்.

இந்த 75 சபை ஊழியர்களில் ஒருவர் ஒரு சமயம் கோத்தகிரிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஒரு வீட்டை தனது புகைப்படக் கருவியால் படம் எடுத்துக் கொண்டிருந்ததை எனக்குத் தெரிந்த கோத்தகிரியிலுள்ள ஒரு குருவானவர் ஐயா நேரில் பார்த்திருக்கின்றார்கள். அந்த ஊழியர் அந்த வீட்டைப் படம் எடுத்ததின் காரணத்தையும் அவர்கள் என்னிடம் துக்கத்தோடு சொன்னார்கள். அந்தப் படத்தை அவர் காப்பிகள் எடுத்து மேல் நாட்டிலுள்ள தேவ மக்களுக்கு அனுப்பி ஏழை அநாதைக் குழந்தைகளுக்காக தான் வீடு கட்டிக் கொண்டிருப்பதாகவும், கட்டிடம் பூர்த்தியாக இன்னும் இவ்வளவு தொகை தேவை என்றும் கூறி வேண்டிய பணத்தை தந்திரமாக அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு விடுகின்றார் என்றும் கூறினார்கள்.

கிறிஸ்தவ தேவ ஊழியம் என்றால் இன்று அது ஒரு முதல் தரமான வியாபாரம் என்பதை அநேகமாக எல்லாரும் அறிந்து கொண்டார்கள். இந்த வியாபாரத்தின் காரியம் புற மதஸ்தருக்கும் பட்டப் பகல் போல வெட்ட வெளிச்சமாக நன்கு தெரியும். இங்கு எங்கள் கோத்தகிரியிலுள்ள ஒரு கிறிஸ்தவ சகோதரன் ஊட்டியிலுள்ள மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் புகைப்படத் தொழிற் கூடத்தில் பணி செய்து கொண்டிருந்தார்கள். அந்த தொழிற்கூடம் நஷ்டத்தில் இயங்குவதால் அங்கு வேலை செய்யும் அநேகர் விருப்ப ஓய்வு பெற்று வெளியே வந்து விட்டனர். மேற்கண்ட சகோதரனும் விருப்ப ஓய்வு பெற்றுக் கொள்ள எழுதிக் கொடுத்தார்கள். இப்படி தங்கள் வேலைகளிலிருந்து வெளியே செல்லுவோரை வருங்காலத்தில் தாங்கள் என்ன என்ன தொழில் செய்யப் போகின்றார்கள் என்பதை நிறுவனத்தின் உயர் அதிகாரி நேரில் கேட்டு தங்களிடம் பெற்றுக்கொள்ளும் பணத்தை நல்ல விதமாக பயன்படுத்திக் கொள்ள ஆலோசனையும் சொல்லுவாராம். அந்தப்படியே நமது கிறிஸ்தவ சகோதரனிடம் ஓய்வுபெற்ற பின்னர் தான் செய்யப் போகும் தொழிலைக் கேட்டபோது "நான் ஆண்டவருக்கு ஊழியம் செய்யப் போகின்றேன்" என்று கூறினாராம். அதைக் கேட்ட அந்த உயர் அதிகாரியான இந்து மனிதர் வாய்விட்டுச் சப்தமாகச் சிரித்துச் சொன்ன பதில் இதுவேதான் "நீங்கள் தெரிந்து கொண்ட தொழில் மிகவும் ஆதாயம் கொடுக்கக்கூடிய நல்ல தொழில். முதலாவது நீங்கள் உங்கள் வேத புத்தகத்தை எடுத்து உங்கள் அக்குளுக்குள் (கைக்கும் உடலுக்கும் இடையில் உள்ள தோள் பட்டைப் பகுதி) வைத்துக் கொண்டு தெருத் தெருவாகச் செல்லுவீர்கள். பின்னர் கொஞ்ச காலத்திற்கப்பால் மிதி வண்டி சைக்கிளில் பைபிளைக் கொண்டு செல்லுவீர்கள். அதற்கப்பால் நாட்கள் செல்லச் செல்ல மோட்டார் சைக்கிளில் போவீர்கள். இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பின்னர் ஒரு நாள் ஒரு அழகான காரில் பயணித்துக் கொண்டு கடவுளுடைய ஊழியம் செய்வீர்கள். எந்த ஒரு நஷ்டமும் ஏற்படாத மிகவும் நல்ல தொழிலை நீங்கள் தெரிந்து கொண்டீர்கள். நீங்கள் நல்ல அதிர்ஷ்டசாலி"என்று ஏளனமாகக் கூறி சிரித்தாராம். ஆண்டவருடைய ஊழியத்தைச் செய்யும் பல போலி கிறிஸ்தவ மக்களைத் தனது சொந்த வாழ்வில் நன்கு கவனித்து அவர்கள் செய்யும் தொழில் லாபகரமானது என்பதை கண்டறிந்து அந்த வார்த்தைகளை அந்த மேலதிகாரி பேசியிருக்கின்றார். நாம் வெட்கத்தால் தலை குனிய வேண்டிய காரியம் அது.

கிறிஸ்தவர்கள் நிரம்பிய தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பெரிய கிறிஸ்தவ கிராமத்தில் சமீபத்தில் ஒரு கிறிஸ்தவ பேரின்ப பெரு விழா ஒழுங்கு செய்து அதில் பேசும்படியாக ஒரு ஊழியரை அழைத்து வந்தார்களாம். அந்தப் பெரிய கிறிஸ்தவக் கிராமத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் தனக்கு ஒரு நல்ல புகழை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்ற மாம்ச பிரகாரமான எண்ணத்தில் அவர் தன்னுடன் தந்திரமாக ஒரு வாலிபனை அழைத்து வந்திருக்கின்றார். கூட்டத்தில் அவர் நோயாளிகளை சுகப்படுத்தியும், பிசாசுகளைத் துரத்தியும் தனது சாமர்த்தியத்தையும், திறமையையும் காண்பித்திருக்கின்றார். அந்தக் கூட்டத்தில் பிசாசு பிடித்த ஒரு வாலிபன் அங்கும் இங்கும் புரண்டு உருண்டு மிகவும் கூக்குரலிட்டு அமளி செய்த போது பெரு விழாவில் பேசும்படியாக அழைக்கப்பட்ட மேற்கண்ட தேவ ஊழியர் மிகவும் அற்புதமாக தனது ஜெபத்தின் வல்லமையால் அந்தப் பிசாசை துரத்தி அந்த வாலிபனை எல்லாரும் ஆச்சரியப்படும் வண்ணம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அடக்கி அமர்த்தி லேகியோனை நமது ஆண்டவர் சொஸ்தப்படுத்தி தனது பாதங்களண்டை உட்கார வைத்தது போல தேவ ஊழியரும் செய்து தனது ஊழியத்தின் வல்லமையை சபை நடுவே வெளிப்படுத்தியிருக்கின்றார். ஆனால் நடந்த காரியம் எல்லாம் ஒரு கபட நாடகம் என்பதை அங்குள்ள சபையின் குருவானவர் ஒருவர் தெய்வாதீனமாக கண்டு பிடித்தார். அந்த விசயத்தை அவர் கூடி வந்த பெண்கள் கூட்டத்தில் முதலில் தெரிவிக்க, கடைசியாக யாவருக்கும் அந்த விசயம் தெரிய வந்தது. அந்த ஊழியர் அந்த வாலிபனை முன்கூட்டியே பேசி வைத்து எப்படி எப்படி பிசாசு பிடித்தவனைப்போல நடிக்க வேண்டும், அதற்கு அவர் மேற்கொள்ளும் பதில் நடபடிகள் என்ன என்பதை எல்லாம் அவர்கள் முன்கூட்டியே பேசி தீர்மானித்து நடித்து ஒத்திகை பார்த்து வந்திருக்கின்றார்கள்.

அவரை பெரு விழாவில் பேச அழைத்த கிறிஸ்தவ கிராமத்தின் மக்களில் சிலர் அவருடைய அந்த அக்கிரமச் செய்கையால் கொந்தளிப்படைந்து கிராமத்தின் மூன்று பொது சந்திகளில் வைக்கப்பட்ட மூன்று பெரிய டீஜிட்டல் படுதாக்களில் காணப்பட்ட மேற்கண்ட அற்புத சுகமளிக்கும் பிரசங்கியாரின் உருவப் படத்தை அப்படியே கத்தரித்து துண்டித்து எடுத்துவிட்டார்களாம். இது உண்மையாக நடந்த சம்பவம். கர்த்தருடைய பரிசுத்த ஊழியங்கள் பணங்காசுகளை சம்பாதிக்கும் நோக்கத்தோடும், பெயர் புகழ்ச்சிக்காகவும் நடைபெறும் விதங்களைக் கவனித்தீர்களா? இப்படிப்பட்டதான பயங்கரமான காரியங்களின் மூலமாக நமது விலையேறப் பெற்ற ஆத்துமாவை தந்திரமாக நாசப்படுத்தி அழிக்கக் காத்திருக்கும் சாத்தானைக் குறித்து நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

 

தேவ ஜனமே உங்கள் ஆத்துமாவை
தேவ பெலத்தால் காத்துக் கொள்ளுங்கள்

நம்முடைய ஆத்துமா விலையேறப்பெற்றது. "மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்?" (மத் 16 : 26) என்று நம் அருமை இரட்சகர் கேட்டார். நமது இகலோக வாழ்வுக்குப் பின்னர் நமது ஆத்துமா முடிவில்லா நித்தியத்தை சந்திக்கும். "முடிவில்லாத நித்தியம்" என்பது என்ன என்பதை மாந்தர் கண்டு கொள்ளவிடாதபடி தந்திர சாத்தான் மக்களுடைய மனக் கண்களை குருடாக்கி வைத்திருக்கின்றான். நித்தியம் எவ்வளவு நீண்டது என்பதைக் குறித்து நமது தேவ எக்காளத்தில் நான் பல தடவைகளிலும் எழுதி வந்திருப்பதை நீங்கள் வாசித்து வந்திருக்கின்றீர்கள்.

வேத பண்டிதர் ஒருவர் முடிவில்லாத நித்தியத்தைக் குறித்து எழுதும் ஒரு உவமானத்தைப் பாருங்கள் "100 மைல்கள் நீளம், 100 மைல்கள் அகலம், 100 மைல்கள் உயரமுள்ள மிகவும் பிரமாண்டமான ஒரு கருங்கற் பாறை. இந்தப் பாறை வானளாவ உயர்ந்து எவ்வளவு பிரமிப்பாக உயர்ந்து நிற்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகின்றேன். இந்தக் கற்பனைக்கு அப்பாற்பட்ட மேகங்களையும் தாண்டி உயர்ந்து நிற்கும் இரும்பைப்போன்ற கருங்கல் பாறைக்கு 1000 வருடங்களுக்கு ஒரு தடவை எங்கேயோ இருந்து நம் உள்ளங் கைக்குள் வைத்து நாம் மறைத்து வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சின்னஞ் சிறிய தேன் சிட்டுப் பறவை பறந்து வந்து தனது ஊசி போன்ற சின்னஞ் சிறு அலகால் ஒரே ஒரு தடவை மட்டும் அந்தப் பாறையை உரசிவிட்டுப் போய்விடுமாம். இப்படி அந்த தேன் சிட்டுப் பறவையானது ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு தடவை திரும்பத் திரும்பப் பறந்து வந்து, தனது அலகை அந்தப் பாறையில் உரசி உரசி அந்தப் பாறை முழுவதையும் இருந்த இடம் தெரியாமல் தேய்த்து முடித்து விட்டது என்று வைத்துக் கொள்ளுவோம். அப்படி அந்தப் பாறையை அந்த தேன் சிட்டுப் பறவை முற்றுமாக தனது அலகால் உரசி தேய்த்து முடித்த நாளானது முடிவில்லாத நித்தியத்தின் ஆரம்ப நாளாகும்" என்று கூறினார். ஆரம்ப நாளே அப்படி நீண்டதானால் முடிவில்லாமல் நீண்டு கிடக்கும் நித்தியத்தை நம்மால் எண்ணியே பார்க்க முடியாது. ஒரு தேன் சிட்டுப் பறவை அப்படிப்பட்ட பிரமாண்டமான பாறையை தேய்த்துக் கறைக்க முடியுமா? நித்தியத்துக்கு முடிவில்லை என்பதை காண்பிக்கவே இந்தவிதமான உவமானங்கள் சொல்லப்படுகின்றது. இந்த "நித்தியம்" (ETERNITY) என்ற வார்த்தை நம் ஒவ்வொருவரையும் நமது ஆவிக்குரிய வாழ்வில் நடு நடுங்கப்பண்ணுவதாக இருத்தல் வேண்டும். இந்த நித்தியம் என்ற அதி பயங்கரமான வார்த்தையை நம்மிடையே மேடைகளில் தோன்றும் ஆசீர்வாத பிரசங்கிகள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை கூட தேவ ஜனத்துக்கு கூறியிருப்பார்களா என்பது சந்தேகமே!

இப்படிப்பட்ட முடிவில்லாத நித்தியத்தை நாம் நமது ஜீவிய கால ஓட்டத்திற்குப் பின்னர் மோட்சத்திலா அல்லது நரகத்திலா எங்கு செலவிடப் போகின்றோம் என்பதை இந்த உலகத்தில் நாம் திட்டமாக நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். நம்மை தேவன் இந்த உலகத்தில் வைத்திருப்பதின் ஒரே நோக்கமும் காரணமும் நாம் நமது நித்தியத்தை குறித்த காரியத்தை இங்கேயே நிச்சயமாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இந்தக் காரியத்தில் நாம் ஞானமற்றவர்களாக இருப்போமானால், ஏனோ தானோவென்று அசட்டையாக இருப்போமானால் அதினால் ஏற்படும் நஷ்டம் மா கொடிதாகும்.

 

எந்த ஒரு சபையும் நம்மை இரட்சிக்காது

கோத்தகிரியில் 75 சபைகள் இப்பொழுது இருக்கின்றது என்று நான் மேலே குறிப்பிட்டேன். எனக்கு நன்கு தெரிந்த இங்குள்ள கத்தோலிக்க குடும்பம் ஒன்று அதைவிட்டுவிட்டு ஒவ்வொரு சபையாக மாறி மாறி இப்பொழுது 5 ஆவது சபையில் இருக்கின்றது. அந்த ஐந்தாவது சபையும் திருப்தி அளிக்காததால் அதைவிட்டு விட்டு வேறு எந்த சபைக்குப் போகலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட மக்கள் ஓராயிரம் சபைகளுக்குச் சென்றாலும் எந்த ஒரு சபையிலும் அவர்களால் நிலைத்து நிற்க முடியாது. எந்த ஒரு சபையும் நம்மை இரட்சிப்பதில்லை. நாம் நமது பாவங்களுக்காக நமது மார்பில் அடித்து அழுது புலம்பி, கண்ணீரோடு நாம் நமது ஆண்டவரைத் தேடி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக பாக்கிய அனுபவத்தையும் அவருடைய கரங்களிலிருந்து பெற்று இந்த உலகத்தில் ஆண்டவரோடு கூட செடியும், கொடியுமானதொரு பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்.

 

மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்

தனது தந்தையின் ஆஸ்தியை வேசிகளிடத்தில் அழித்துப்போட்டு கந்தை அணிந்தவனாக நிர்ப்பந்தமான கோலத்தில் வீடு வந்து சேரும் கெட்ட குமாரனுக்கு பெற்ற தந்தையால் அன்பு முத்தமாரிகளும், பாச அரவணைப்புகளும், ஆரவாரமான ஆடல் பாடல் வரவேற்புகளும், சிறந்த உபசரிப்புகளும் கிடைப்பதை காண்கின்ற மூத்த மகன் மிகுந்த துக்கத்தோடு வீட்டுக்குள் வர மனமற்று வெளியே நின்று தனது அன்புத் தந்தை தன்னை ஒருக்காலும் தனது தம்பிக்குப் பாராட்டிய அன்பைத் தனக்கு பொழியவில்லையே என்று கண்ணீரின் துயரத்தோடு அவரிடம் கேட்ட போது அந்த அன்புத் தந்தை தனது மைந்தனுக்கு அளித்த ஒரே ஒரு மா மாட்சியான பதில் "மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்" என்பதுதான்.

நாம் நமது பாவ அக்கிரமங்களுக்காக தேவ சமூகத்தில் அழுது புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் பெற்றுக் கொள்ளும்போது நாம் மறுபடியும் பிறந்து கர்த்தருக்குள் புது சிருஷ்டியாக மாற்றம் பெறுகின்றோம். சாமுவேல் தீர்க்கன் தாவீதை தைலக் கொம்பைக் கொண்டு அபிஷகம் பண்ணின நாள் முதற்கொண்டு கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின் மேல் வந்து இறங்கியிருந்தார் (1 சாமு 16 : 13) என்ற கர்த்தருடைய வசனத்தின்படி மறுபடியும் பிறந்த தேவ மக்களின் உள்ளத்தில் கர்த்தர் எப்பொழுதும் வாசம் செய்கின்றவராக இருக்கின்றார். "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார்" (ரோமர் 8 : 16) என்றும் "கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம்" (கொலோ 1 : 27) என்றும் பவுல் அப்போஸ்தலன் நிருபங்களில் எழுதுவதை நாம் காண்கின்றோம்.

"மகனே நீ எப்போதும் என்னோடிருக்கிறாய்" எத்தனை பரவசமான வார்த்தை பாருங்கள். மெய்யாகவே, மறுபடியும் பிறந்த ஒரு தேவப் பிள்ளை, மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவது போல எப்பொழுதும் கர்த்தரை வாஞ்சித்துக் கதறிக் கொண்டிருக்கின்றது. அந்த ஆத்துமா ஆண்டவருடைய பாதங்களை அடிக்கடி நாடித் தேடி ஓடுகின்றது. தனக்கு சமயம் கிடைக்கும் போதெல்லாம் கர்த்தருடைய பாதங்களில் அமர்ந்து ஆண்டவரின் அமர்ந்த மெல்லிய குரலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றது. ஆண்டவருடைய பாதங்களில் அமரவிடாமல் உலகத்தின் செய்தித்தாட்களோ, கிறிஸ்தவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோ, உற்றார் உறவினர், பாசமுள்ள பெந்து மித்திரர் எவர்களின் உறவுகளோ எதுவும் அவர்களை தடை செய்ய இயலாது. உலக மக்களைப்போல தங்கள் நேரங்களை எப்படியாவது ஓட்டி முடிக்க வேண்டுமே என்பதற்காக பொழுது போக்கு பூங்காக்களிலோ, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலோ அல்லது பொது வாசகசாலைகளிலோ போய் அமர அவர்களால் முடியாது. சந்திக்கும் நபர்களிடம் தங்கள் வார்த்தைகளை சுருக்கிப் பேசி (பிரசங்கி 5 : 2, 10 : 14) தங்கள் நேசரோடு அவர்கள் அதிகமாக பேசி ஆனந்திக்கின்றவர்களாக இருக்கின்றனர். அவர்களின் நேசரும் "எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகும் மட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி வெளிமான்கள் மேலும், வெளியின் மரைகள் மேலும் ஆணையிடுகின்றேன்" (உன் 2 : 7) என்று ஆணையும் இட்டு விடுகின்றார்.

ராஜாவின் அரண்மனையில் அமர்ந்து ராஜ குடும்பத்தினருடன் பந்தியிருக்கையில் கூட தனக்கு முன்னாலுள்ள ராஜ போஜனத்தை சற்று நேரம் அப்பால் வைத்துவிட்டு தன் கர்த்தரண்டை தனித்துச் சென்று முழங்காலூன்றி அவருடைய காதுக்குள் "ஆண்டவரே நான் எப்பொழுதும் உம்மோடுதான் இருக்கின்றேன். நான் உம்மை என் முழு மனதால் நேசிக்கின்றேன். ராஜ அரண்மனையில் ராஜ போஜனத்திற்கு முன்பாக நான் அமர்ந்திருந்தாலும் என் இருதயம் எப்பொழுதும் உம்மோடுதான் இருக்கிறது" என்று ஒரு குட்டி ஜெபத்தை ஏறெடுத்துவிட்டு திரும்பவும் தனது போஜனத்திற்கு முன்பாக அமருகின்றார் அந்த பரிசுத்த மகாத்துமா. ஆம், அவர்தான் பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங்.

 

பூலோகத்தில் ஆரம்பிக்கும் பரலோகம்

இந்த மறுபடியும் பிறந்த தேவ மக்களுக்கு மோட்சம் இந்தப் பூவுலகத்திலேயே ஆரம்பமாகிவிடுகின்றது. உலகப்பிரகாரமான செய்தித்தாட்களையும், இதர உலக சஞ்சிகைகளையும் வாங்கி வாசித்து, தங்கள் வீட்டிலுள்ள பெரிய கரும் பெட்டிக்கு முன் அமர்ந்து அங்கே எழுப்புதல் பிரசங்கங்களையும், பரலோகப்பாடல்களையும் நாங்கள் கேட்கின்றோம் என்று கூறி தங்கள் விலை மதிப்பிட முடியாத காலத்தை பாழாக்கும் அந்த கிறிஸ்தவ மக்கள் நிச்சயமாக மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல என்பதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. அவர்களின் மறுபிறப்பின் காரியம் தவறானது. நிச்சயமாக அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை.

"பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பம் இல்லை" (சங் 73 : 25) என்றாரே சங்கீதக்காரர். காரணம், அவருக்கு மோட்சம் பூலோகத்திலேயே ஆரம்பமாகியிருந்தது. மறுபடியும் பிறந்த தேவ மக்களுக்கு மோட்சம் பூலோகத்தில் ஆரம்பித்து அந்த மோட்ச வாழ்வு அவர்கள் மரணத்திற்குப் பின்னர் அவர்களுடன் தொடர்கின்றது. "தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" (லூக்கா 17 : 21) என்று அன்பின் ஆண்டவர் சொன்னதும் இதை மனதில் வைத்துத்தான். "உனக்கு இரண்டு மோட்சம் இல்லையேல் ஒரு மோட்சமும் கிடையாது. இந்தப் பூவுலகத்தில் உனக்கு மோட்சம் இல்லாதபட்சத்தில் பரலோகிலும் உனக்கு மோட்சம் கிடையாது" என்று ஆண்ட்ரூ போனர் என்ற இங்கிலாந்து தேச பரிசுத்தவான் கூறினார். நமது தமிழ் நாட்டிலுள்ள திருப்பத்தூர் என்ற இடத்தில் கிறிஸ்து குல ஆச்சிரமத்தை தோற்றுவித்த பரிசுத்த சந்நியாசி டாக்டர் சவரிராயன் ஏசுதாசன் அவர்கள் "பெரிய அண்ணன்" என்று அழைக்கப்பட்டார்கள். அவர் தமது பரவசமான கிறிஸ்தவ பாடல்கள் ஒன்றில் "இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்கு, அகமும் ஆண்டவன் அடியே" என்று பாடியிருக்கின்றார். (பொருள்:- உம்முடைய பக்தர்களுக்கு இந்த உலகமும், வரப்போகிற பரலோகமும் ஒன்றேதான். அவர்களுடைய இருதயம் உமது பரிசுத்த பாதங்கள் நிலை கொண்டுள்ள இடம்).

சீனாவில் கம்மியூனிச சிறைக்கூடங்களில் தன் ஆண்டவருக்காக 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து சொல்லொண்ணா சித்திரவதை பாடுகளின் மத்தியிலும் தன் நேச இரட்சகரை மறுதலிக்காமல் வாச்மேன் நீ என்ற சீன தேச கிறிஸ்தவ பக்தனால் மிகுந்த தேவ சமாதானத்தோடு கடந்து செல்ல முடிந்ததன் ஒரே காரணம் அவர் உள்ளத்தில் மோட்சம் இருந்ததுதான். மோட்ச பிரயாண பிரபந்தத்தின் ஆக்கியோன் ஜாண் பன்னியன் என்ற பரிசுத்த பக்தன் தன் அருமை இரட்சகர் இயேசுவின் சுவிசேஷ நற்செய்தி அறிவித்த ஒரே காரணத்திற்காக இங்கிலாந்து தேசத்திலுள்ள பெட்ஃபோர்ட் என்ற இடத்தில் எந்த ஒரு வசதியும் அற்ற இருள் சூழ்ந்த குளிரான சிறைக்கூடத்தில் 12 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட அவர் மிகுந்த தேவ சமாதானத்தோடு வாழ முடிந்ததன் ஒரே காரணம் அவருடைய இருதயத்தில் மோட்சம் இருந்ததுதான். இரட்சகர் இயேசுவின் சுவிசேஷகன் என்ற ஒரே காரணத்திற்காக ருமேனியா நாட்டு கம்மியூனிஸ்ட்டுகளால் 14 ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளை அனுபவித்து அதின் காரணமாக 18 ஆழமான காயங்களை தன் சரீரத்தில் வைத்திருந்த ரிச்சர்ட் உர்ம்பிராண்ட் என்ற ருமேனிய நாட்டு பரிசுத்த தேவ பக்தன் தனது பாடுகளின் மத்தியிலும் நிறைவான தேவ சமாதானத்தோடும் ஆனந்த மகிழ்ச்சியோடும் உயிர் வாழ முடிந்ததின் இரகசியம் பரலோக மோட்ச பேரானந்தம் அவருடைய உள்ளத்தில் இருந்தமையால்தான். பூமிக்கு கீழாக 30 அடி ஆழத்தில் இருந்த வெப்பமான இருண்ட சிறைக்கூடத்தில் மூன்றாண்டு காலமாக சூரிய சந்திர ஒளியைக் காணாமலும், புல் பூண்டு, பூக்கள் போன்ற எந்த ஒரு இயற்கையைப் பாராமலும் கைகள் இரண்டையும் முதுகுக்குப் பின்னால் வைத்து விலங்கிடப்பட்ட நிலையில் தனக்கு முன்னால் வைக்கப்பட்ட ஆகாரத்தை நாயைப்போல நக்கிச் சாப்பிட்ட நிர்ப்பந்தமான சூழ்நிலைகளிலும் தேவனின் பிரசன்னத்தின் ஒளியில் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரை வாழ வழி செய்தது அவருடைய உள்ளத்தில் வந்து அமர்ந்திருந்த மோட்ச பாக்கியம்தான்.

உண்மைதான், மறுபடியும் பிறந்த தேவ மக்கள் தங்கள் உள்ளத்தில் மோட்சானந்த பாக்கியங்களை சுமந்து திரியும் பாக்கியசாலிகள். ஆம் அவர்கள் உள்ளத்தில் அவர்களுடைய மோட்சமாகிய அவர்களின் நேச இரட்சகர் வாசம் செய்கின்றார் அல்லவா?

 

பூமியில் பரதேசிகள்

"நான் பரதேசி" (ஆதி 47: 9) என்று நமது முற்பிதா யாக்கோபு பார்வோனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்திக் கூறுவதை நாம் காண்கின்றோம். "பூமியிலே நான் பரதேசி" (சங் 119 : 19) என்றார் தாவீது ராஜா. இந்த உலகத்தை அரசாண்ட ராஜாக்களுக்கெல்லாம் ராஜாவாகிய அந்த மா மன்னர் தன்னை பரதேசி என்று அடையாளம் கண்டு வைத்திருந்தார். "நான் உமக்கு முன்பான அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்" (சங் 39 : 12) என்று தனது தேவனுக்கு முன்பாக தன்னை அவர் வெறுமையாக்குவதை நாம் பார்க்கின்றோம். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பேதுரு தன்னுடைய நிருபத்தில் தேவ ஜனத்தை "தெரிந்து கொள்ளப்பட்ட பரதேசிகள்" (1 பே 1 : 2) என்று குறிப்பிட்டு எழுதுவதை நாம் கவனிக்கின்றோம்.

மெய்யாகவே, மனந்திரும்பி இரட்சிக்கப்பட்ட மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளை தன்னை இந்த உலகத்தில் "அந்நியனும், பரதேசியுமாக" அடையாளம் காண்கின்றது. தாங்கள் இந்த உலகத்துக்குரியவர்கள் அல்ல என்பதை நிச்சயமாக கண்டு கொள்ளுகின்றது. "நான் உலகத்தானல்லாதது போல அவர்களும் உலகத்தாரல்ல" (யோவான் 17 : 16) என்று அன்பின் ஆண்டவர் தமது அடியார்களைப் பார்த்துச் சொன்னார். "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" (யோ 14 : 30) என்று உலகத்துக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லை என்பதை ஆண்டவர் திட்டமாகத் தெளிவுபடுத்துவதை நாம் பார்க்கின்றோம்.

நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிரோடு எழுப்பப்பட்ட லாசரு அதற்கப்பால் தனது உலக வாழ்வில் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிரிக்கவே இல்லை என்று வேத பண்டிதர்கள் கூறுகின்றனர். மோட்சானந்த பாக்கியங்களை தன் கண்களால் கண்டு அதை நான்கு நாட்கள் மனங்குளிர அனுபவித்துவிட்டு பூலோகத்திற்கு திரும்பியிருந்த அவர் இந்தப் பாழுலகில் சிரிப்பதற்கு ஒன்றுமேயில்லை என்பதை திட்டமாக அடையாளம் கண்டு கொண்டு விட்டார். நமது அருமை இரட்சகரும் தமது உலக வாழ்வில் அழுததை தவிர அவர் சிரித்ததை எவருமே கண்டதில்லை என்று வேத சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்.

இந்த உலகத்தின் மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும் (சங் 119 : 37) என்று தாவீது ராஜா தனது ஆண்டவரை நோக்கிக் கெஞ்சுவதையும் "மாயையை எனக்குத் தூரப்படுத்தும்" (நீதி 30 : 8) என்று ஞானி சாலொமோன் கர்த்தரிடம் கேட்பதையும் நாம் வாசிக்கின்றோம். "உலகத்திலும், உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள், ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை" (1 யோ 2 : 15) என்று அப்போஸ்தலனாகிய யோவான் தமது நிருபத்தில் எழுதுவதை நாம் பார்க்கின்றோம்.

"மோட்ச பிரயாணம்" புத்தகத்தில் கிறிஸ்தியானும், உண்மையும் மாயாபுரி சந்தை வழியாக உச்சிதப்பட்டணம் செல்லும்போது அந்த மாயாபுரிச் சந்தை சரக்குகள் எதையும் வாங்கவுமில்லை அதைக் கண்ணேறிட்டுக் கூட பார்க்கவுமில்லை என்று நாம் வாசிக்கின்றோம். மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளை இந்த உலக மாயாபரிச் சந்தை சரக்குகள் எதிலும் நாட்டம் செலுத்துவதில்லை. இந்த உலகத்தில் அவர்கள் வாழ்ந்தாலும் உலகத்தால் அவர்கள் தங்களை கறைப்படுத்திக் கொள்ளாமல் தண்ணீரில் கிடக்கும் அன்னப்பட்சி பகல் முழுவதும் தண்ணீரில் கிடந்தாலும் தான் பறந்து செல்ல வேண்டிய மாலைப் பொழுது வரும்போது தனது இறக்கைகளை ஓங்கி அடித்து தன் மேலுள்ள தண்ணீரை முற்றுமாக உதறிவிட்டு தண்ணீரின் அடிச்சுவடே தெரியாமல் வான வீதியில் பறந்து செல்லுவது போல மறுபடியும் பிறந்த மெய் தேவ மக்களும் உலக மாய்கையிலே காலமெல்லாம் வாழ்ந்தாலும் தங்களது பரம அழைப்பின் நேரம் வரும்போது உலகத்தின் எந்த ஒரு பற்று பாசம் இல்லாமல் பூரண பக்தர்களாக இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லுகின்றனர்.

 

அவருக்கு (அருமை இரட்சகர் இயேசுவுக்கு)
ஒப்பாயிருப்போம்

"பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை, ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்" (1 யோ 3 : 2)

மறுபடியும் பிறந்த ஒரு தேவ பிள்ளை கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக (2 கொரி 5 : 17) இருப்பது மாத்திரமல்ல அந்த தேவ பிள்ளை தனது பரிசுத்த வாழ்வின் மூலம் தன் ஆண்டவரை மற்றவர்களுக்கு காண்பிப்பதாக இருக்கின்றது. "நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" (மத் 5 : 14) என்று ஆண்டவர் சொன்னதும் அதை மனதில் கொண்டுதான் பேசினார். "என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான்" (யோ 8 : 12) என்ற கர்த்தாவின் வார்த்தையின்படி அவருடைய மெய்யான தேவ மக்கள் அவருடைய பரிசுத்த வாழ்க்கையின் மூலமாக தங்களிலுள்ள ஜீவ ஒளியை மற்றவர்களுக்கும் காண்பிப்பார்கள்.

"மனுஷர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி" என்று ஆண்டவர் சொல்லாமல் "உங்கள் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது" (மத் 5 : 16) என்று அவர் சொன்னார். பக்த சிரோன்மணி சாது சுந்தர்சிங் அவர்களின் பிரசங்கங்களைக் கேட்டு மனந்திரும்பியவர்களைக் காட்டிலும் அவருடைய பரிசுத்த முகத்தில் வீசிய ஒளியைக் கண்டு மனந்திரும்பியவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். காலஞ் சென்ற எனது பரிசுத்த தகப்பனார் சிறுவனாக எங்கள் ஊருக்கு அருகிலுள்ள மெய்ஞ்ஞானபுரம் என்ற பெரிய கிறிஸ்தவ கிராமத்திலுள்ள சி.எம்.எஸ். உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது தனது வகுப்புக்கு வந்து மாணவர்களுக்கு இரு கரங் கூப்பி வாழ்த்துதல் சொன்னதை தன் கண்ணாரக் கண்டு அவரது முகத்தில் வீசிய பரிசுத்த ஒளியினால் ஆண்டவர் இயேசுவின் அடியானார்கள். அந்தவிதமாக அவருடைய முகத்தின் ஒளி பிரகாசத்தால் ஆண்டவரண்டை இழுக்கப்பட்ட ஒரு பரிசுத்தவான் சென்னையிலுள்ள காலஞ்சென்ற பாஸ்டர் சுந்தரம் ஐயா அவர்கள் என்று சொல்லப்படுகின்றது. காலஞ்சென்ற பரிசுத்தவான் சூ.தானியேல் ஐயா அவர்களும் கூட சுந்தர்சிங்கின் பரிசுத்த வாழ்க்கையால் தொடப்பட்டவர்களாவார்கள். சுந்தர்சிங் தனது அங்கிகளில் ஒன்றை தானியேல் ஐயா அவர்களுக்கு கொடுத்ததையும் அதை அவர்கள் தனக்குக் கிடைத்த பரலோக பொக்கிஷமாக தங்களுடைய ஃபெல்லோஷிப் அறை ஒன்றில் வைத்திருப்பதையும் நம்மில் பலர் பார்த்திருக்கின்றோம், கேள்விப்பட்டிருக்கின்றோம்.

ஒரு மறுபடியும் பிறந்த பரிசுத்த தேவ பிள்ளையின் கண்ணீரின் கதறுதல் "நான் என் ஆண்டவரைப் போல மாற வேண்டும். என்னைப் பார்க்கின்றவர்கள் என் இயேசுவை என்னில் பார்க்க வேண்டும்" என்பதாக இருக்கும். அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடியாரும் இரட்சகர் இயேசுவை நம்மைப் பார்க்கின்றவர்கள் நம்மில் காண வேண்டும் என்ற தாகத்தோடு "என் சிறு பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகுமளவும் உங்களுக்காக கர்ப்ப வேதனைப்படுகின்றேன்" (கலாத்தியர் 4 : 19) என்று கலாத்தியா சபைகளுக்கு எழுதுவதை நாம் காண்கின்றோம்.

 

என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கக்கூடும்?

"என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக் கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படி சகிக்கக் கூடும்? " (எஸ்தர் 8 : 6)

என்று ஒரு தேவ பிள்ளை இரட்சிப்பின் சந்தோசத்தைப் பெற்று மறுபடியும் பிறந்த பரிசுத்த அனுபவத்துக்குள் கடந்து வருமோ அன்றே அது மனந்திரும்பாமல், பாவத்தில் வாழ்ந்து நரகத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் நஷ்டப்பட்ட ஆத்துமாக்களுக்காக இருதய பாரம் அடையத் தொடங்கி விடுகின்றது. தான் பெற்ற இரட்சிப்பின் சந்தோசத்தை தன் மட்டாக அடக்கி வைத்துக் கொள்ளாமல் தான் பெற்ற பரலோக பொக்கிஷத்தை மற்றவர்களுடனும் அது பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து விடுகின்றது. ஜீவ தண்ணீரைக் கண்டடைந்த சமாரியா ஸ்திரீ தன் குடத்தை வைத்துவிட்டு ஊருக்குள்ளே போய் ஜனங்களிடம் "நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார், அவரை வந்து பாருங்கள்" (யோ 4 : 29) என்று அறை கூவி அழைப்பதை நாம் பார்க்கின்றோம்.

வைராக்கியமான சீக்கிய குலத்தில் பிறந்து, மத வைராக்கியம் காரணமாக தனக்குப் பள்ளியில் கிடைத்த புதிய ஏற்பாட்டை தீ வைத்துக் கொழுத்திய சாது சுந்தர்சிங் அருமை இரட்சகரில் தனது இரட்சிப்பைக் கண்டடைந்து மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தைப் பெற்றதும் சுவிசேஷத்துக்கு தனது கதவுகளை அடைத்துக் கொண்டிருந்த தீபெத் நாட்டை நோக்கி திரும்ப திரும்பச் சென்று சுவிசேஷம் அறிவித்து இறுதியில் அந்த நாட்டிலேயே தனது ஜீவனை இரத்த சாட்சியாக அர்ப்பணம் செய்ததை நாம் காண்கின்றோம்.

உலகம் எங்கும் சுவிசேஷத்தை எடுத்துச் சென்ற எத்தனை எத்தனையோ மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறுகளை நாம் வாசிக்கும்போது அந்த தேவ மக்கள் தேவனுடைய இரட்சிப்பின் சந்தோசத்தை தங்கள் வாழ்வில் கண்டடைந்ததும் நஷ்டப்பட்ட ஆத்துமாக்களை சாத்தானுடைய வல்லடியிலிருந்து மீட்டு அவர்களைக் கர்த்தருக்காக ஆயத்தம் செய்வதற்காக உடனே கடல்கள் கடந்து கர்த்தரின் தூதுவர்களாக புறப்பட்டுச் சென்றதை நாம் ஆனந்த பரவசத்துடன் வாசிக்கின்றோம்.

அநேகம் பிசாசுகள் பிடித்திருந்த லேகியோன் அன்பின் ஆண்டவரால் பிசாசுகள் துரத்தப்பட்ட பின்னர் அவரோடு கூட இருக்கும்படி உத்தரவு கேட்ட போது ஆண்டவர் அவனுக்குச் சொன்ன வார்த்தை என்னவெனில் "நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய் தேவன் உனக்குச் செய்தவைகளை எல்லாம் அறிவி" (லூக்கா 8 : 39) என்பதாகும்.

இதை மிகவும் கருத்தோடும், உள்ளத்தின் பாரத்தோடும் வாசிக்கின்ற அன்பான தேவப் பிள்ளையே, உனது பாவங்களுக்காக உன் மார்பில் அடித்து புலம்பி அழுது பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோ 3 : 3) என்று அன்பின் ஆண்டவர் நிக்கொதேமுவிடத்தில் சொன்ன அந்த மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் பெற்றுக் கொண்டாயா? மறுபடியும் பிறவாத நிலையில் நீ எந்த ஒரு சபையில் இருந்தாலும், அந்த சபைக்காக நீ எத்தனை காரியங்களைச் செய்தாலும், அந்தச் சபை சடங்காச்சரங்களில் எத்தனை தீவிரமாக நீ பங்கு எடுத்துக் கொண்டாலும் அதினால் உனக்கு எந்த ஒரு பிரயோஜனமும் கிடையாது. நீ மெய்யாகவே மறுபடியும் பிறந்திருந்தால் நான் முன்பு குறிப்பிட்டபடி அதிகமாக ஆண்டவருடைய பாதங்களில் அமர்ந்து அவரோடு ஒட்டி உறவாடி மகிழ வாஞ்சித்துக் கதறுவாய். நீ மறுபடியும் பிறந்திருந்தால் இந்தப் பாழுலகத்தின் எந்த ஒரு காரியங்களிலும் உனக்குப் பற்றும் பாசமும் இருக்காது. இந்த உலகத்தில் சொற்ப காலம் மாத்திரம் தங்கி விரைந்து கடந்து செல்லும் ஒரு அந்நியனும் பரதேசியுமாக நீ உன்னை அடையாளம் கண்டு கொள்ளுவாய். உன் கண்கள் எப்பொழுதும் உனக்காக உன் இரட்சகர் ஆயத்தம் செய்து வைத்துள்ள கை வேலையில்லாத நித்திய வாசஸ்தலங்களை நோக்கிய வண்ணம் இருக்கும். உனது மறுபிறப்பு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உன்னைக் காண்கின்றவர்கள் உன் ஆண்டவர் இயேசுவை உன்னில் காண வேண்டுமே என்று நீ பெரிதும் ஆசைப்படுவாய், அதற்காக நீ தேவ பெலத்தோடு பிரயாசப்படுவாய். அந்த மறுபிறப்பு உன்னில் இருக்குமானால் நீ உன் வாழ்வில் பெற்ற அந்த இரட்சிப்பின் நற்செய்தியை, நீ உன் இருதயத்தில் பெற்றுக் கொண்ட அந்த ஜீவ ஒளியை அழியும் மனுக்குலத்திற்கு கூறி அறிவிப்பதில் தீவிரம் காண்பிப்பாய். அதை மரக்காலால் மூடி மறைக்க ஒருக்காலும் நீ விரும்பமாட்டாய். அதற்காகவே உன் வாழ்வை அர்ப்பணம் செய்துவிடுவாய். அந்த மறுபிறப்பு உன் வாழ்வில் இடம் பெற்றது மெய்யானால் சிலுவையின் மரணபரியந்தம் தன்னைத் தாழ்த்தின உன் ஆண்டவர் இயேசுவைப் போல நீ மிகுந்த மனத்தாழ்மையுடையவனாக இருப்பாய். பட்சிக்கின்ற அக்கினியில் வீசப்பட்ட சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற கர்த்தருடைய தாசர்களின் சால்வைகளிலோ அல்லது அவர்கள் உடம்பிலோ அக்கினியின் மணம் வீசாமல் இருந்தவண்ணமாக பெருமையின் சிறிய மணம் கூட உன்னில் வீசாமல் இருக்கும்.

உங்கள் சகோதரனாகிய நான் எனது 18 ஆம் வயதில் என்னுடைய பாவ அக்கிரமங்களுக்காக அழுது கண்ணீர் சிந்தி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், மறுபடியும் பிறந்த பரலோக அனுபவத்தையும் தேவ கிருபையால் பெற்றேன். அன்று எனது உள்ளத்தில் வாசம் பண்ண வந்த தேவ ஆவியானவரின் ஆளுகையும், அரவணைப்பும், வழிநடத்துதலும் இன்று வரை நீங்காமல் என்னுடன் நிலைத்திருப்பதை நான் ஆச்சரியத்துடன் காண்கின்றேன். அன்று என் இருதயத்தில் ஏற்றப்பட்ட நித்திய ஜீவ வாழ்வின் தீபத்தை பயத்தோடும், நடுக்கத்தோடும் கடைசி வரை நான் தேவ பெலத்தால் காத்துக் கொள்ள தேவ பிள்ளைகளாகிய நீங்கள் எனக்காக ஜெபிப்பதுடன் நீங்களும் உங்கள் வாழ்க்கையில் மறுபடியும் பிறந்த பரிசுத்த அனுபவம் இதுவரை இல்லாமலிருந்தால் தன்னிடத்தில் வரும் எவரையும் தள்ளாத நேச இரட்சகரிடம் வந்து உங்கள் பாவங்களை நொறுங்குண்ட இருதயத்தின் பெருமூச்சோடு அறிக்கையிட்டு பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், உலகம் தரக் கூடாததும், உலகம் எடுத்துக் கொள்ளக் கூடாததுமான இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும், மறுபடியும் பிறந்த நிச்சயமான அனுபவத்தையும் பெற்று உங்கள் நித்திய ஜீவ வாழ்வை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.


 

Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM