|
|
தேவ கோபாக்கினைப் பாத்திரங்களின்
நித்திய பயங்கர வாசஸ்தலம் |
உண்மையான எரி நரகத்தை ஒரு சில மக்கள் மாத்திரமே நம்பக்கூடிய ஒரு கொடிய காலக்கட்டத்திற்கு நாம் இப்பொழுது வந்து சேர்ந்திருக்கின்றோம். எனினும், நரகம் வேதாகமத்தில் இடம் பெற்று உள்ளது. இன்னும் உண்மையான காரியம், தேவனுடைய வார்த்தை சத்தியமானது. மனிதன் தனது கருத்துகளையும், அபிப்பிராயங்களையும் காலத்திற்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம், ஆனால், தேவனுடைய சத்தியம் எப்பொழுதும் மாறாமல் அப்படியே நிலைத்திருக்கும். கிறிஸ்து இரட்சகரை மறுதலித்து தேவனின்றி ஜீவிக்கும் யாவருக்கும் நித்திய நரகாக்கினை உண்டு என்று சர்வ வல்ல நித்திய தேவன் கூறியிருக்கின்றார். நரகத்தைக் குறித்த பிரசங்கங்கள் தேய்பிறை போல தேய்ந்து மறைந்து அடிச்சுவடு தெரியாமலே போய் விட்டது. இந்த நாட்களில் நாம் மிகவும் மென்மையான, நமது உணர்வுகளை எந்த ஒரு நிலையிலும் பாதிக்காத சமாதானத்திற்கு அடுத்த பிரசங்கங்களையும், மனமகிழ்ச்சிக்கடுத்த சிரிப்பு பிரசங்கங்களையும், கதைகள், தமாஷ்கள் நிறைந்த சாதுர்ய பிரசங்கங்களையும், அன்பு, சகோதரத்துவம், சமுதாய சேவை சுவிசேஷ பிரசங்கங்களையும், இவ்வுலக வாழ்வில் பாலும், தேனும் பாய்ந்தோடும் செழுமையின் ஆசீர்வாத பிரசங்கங்களையும், தொட்டதெல்லாம் பொன்னாவது எப்படி என்ற அற்புத பிரசங்கங்களையும் கேட்கின்றோம். ஆனால், அநேக சபைகளில் நரகத்தைக் குறித்து ஒரு தடவை கூட மக்கள் பிரசங்கம் கேட்கவில்லை. யாராவது தவறுதலாகக் கூட நரகத்தைக் குறித்து தனது சபையினருக்கு பிரசங்கம் செய்துவிடக்கூடாது என்ற விஷயத்தில் பாஸ்டர்மார்கள் மிகவும் விழிப்பாக இருந்து அப்படிப் பேசும் ஊழியர்களை ஆலயப்படிக்கட்டுகளில் காலடி கூட எடுத்து வைக்கவிடாமல் விழிப்பாக இருந்து, நாட்டைப் பாதுகாத்து நிற்கும் ராணுவ வீரர்களைப் போன்று சபையை பாதுகாத்து நிற்கின்றனர்.
பண்டிதர் ராம்சே பல்லார்ட் என்பவர் நாக்ஸ்வில்லா என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் குருவானவராக பணி செய்து கொண்டிருந்த நாட்கள் ஒன்றில் அவரது சபையின் வாலிபர்கள் எப்பிஸ்கோப்பல் விடுதியிலிருந்து ஒரு பையனை ஒரு இரவு ஆராதனையில் கலந்து கொள்ளும்படியாக அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். ஆராதனை முடிந்து அந்தப் பையன் வீடு திரும்பியபோது அவனது தந்தை அவனைப் பார்த்து ஆலயத்தில் பிரசங்கம் எப்படி இருந்தது என்று கேட்டார். "ஓ, அது ஒரு அருமையான பிரசங்கம், நான் அதை விரும்புகின்றேன்" "ஆனால் ஒரு காரியம், அந்த குருவானவர் ஒரு அசுத்தமான வார்த்தையை அந்த பிரசங்க பீடத்திலிருந்து உச்சரித்துக் கொண்டிருந்தார்" "ஆம், நரகம் என்ற அந்த அசுத்தமான வார்த்தையை மீண்டும் மீண்டும் அங்கிருந்து சொல்லிக் கொண்டிருந்தார்" என்று சொன்னான். நரகம் என்ற வார்த்தை விரும்பத்தகாத சந்தர்ப்பத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஒரு அசுத்தமான வார்த்தை என்று அந்தப் பையன் அறிந்திருந்தானேயல்லாமல் அந்த வார்த்தையைக் குறித்து பேசப்பட்ட எதையும் அவன் ஒருக்காலும் கேள்விப்படவே இல்லை. உண்மைதான், நரகத்தைக் குறித்த பேச்சோ, பிரசங்கமோ இல்லாமல் இன்று சபைகள் குளிர்ந்து அனலிழந்து போய்விட்டது. ஆனால் நரகம் என்றுமில்லாத விதத்தில் இன்னும் ஜூவாலித்து எரிந்து கொண்டிருக்கின்றது. மாமாட்சிமையான மோட்ச ராஜ்யத்தையும், அதின் மகிமைகளையும் விவரித்துப் பேசும் பரிசுத்த வேதாகமம் எரிமலைக் குழம்பாக கொந்தளித்துக் கொண்டிருக்கும் அக்கினியும், கந்தகமும் கலந்து எரியும் நரக அக்கினிக் கடலின் பயங்கரங்களையும் திட்டமும் தெளிவுமாகப் பேசுகின்றது. தேவன் மோட்சத்தை எவ்வளவு நிச்சயமாக உண்டாக்கினோரோ அந்த அளவிற்கான நிச்சயத்திலேயே நரகத்தையும் உருவாக்கினார். ஒன்று எத்தனை உண்மையும், அத்தியந்த தேவையோ அந்த அளவிற்கு அடுத்த ஒன்றும் உண்மையும், தீராத அவசியமும் என்றும் நித்தியமாக நிலைத்து நிற்க வேண்டியதாகவும் இருக்கின்றது. |
| நரகத்தை குறித்துப் பேசுவதன் காரணங்கள் |
|
நரகத்தை குறித்து நாம் மக்களுக்கு கட்டாயம் பிரசங்கம் செய்ய வேண்டும், காரணம், அது தேவனுடைய வேதாகமத்தில் இடம் பெற்றுள்ளது. தேவ ஊழியர் தனது சொந்தக் கருத்துக்களையும், மன அபிப்பிராயங்களையும் பேச வேண்டுமென்று நீங்கள் விரும்புகின்றீர்களா? அல்லது தேவனுடைய வார்த்தையைப் பேச வேண்டுமா? "தேவனுடைய வார்த்தையை மட்டும் அவர் பேசட்டும்" என்று நீங்கள் பதில் சொல்லுவீர்கள். எனவே தேவ ஊழியர் தேவனுடைய முழு ஆலோசனையையும் கட்டாயம் பிரசங்கித்தே ஆகவேண்டும். அவர் மோட்சத்தைக் குறித்துப் பிரசங்கித்து அதில் களிகூர வேண்டும். அதே சமயம் நரகத்தை அவர் விரும்பாதபோதினும் அதையும் அவர் கண்டிப்பாக மக்களுக்குச் சொல்ல வேண்டும். தான் நம்புவதை பிரசங்கிக்கவோ, அல்லது அவருடைய சபை எதை விரும்புகின்றதோ அதைப் பிரசங்கிக்கவோ, அல்லது யாரோ ஒருவர் ஒரு பத்திரிக்கையில் எழுதினதை பிரசங்கிக்கவோ அவர் அழைக்கப்படவில்லை. தேவன் சொல்லுவதை மாத்திரம்தான் அவர் கட்டாயம் பிரசங்கிக்க வேண்டும். தேவன் சொல்லுவது உண்மையென்று நாம் அறிவோம். ஒரு நரகம் உண்டு என்பதை நாம் நன்கறிவோம். வரப்போகும் நரகம் என்ற தேவ கோபாக்கினைக்கு மக்கள் ஓடித் தப்பித்துக் கொள்ள நாம் அவர்களை எச்சரிக்க வேண்டும் என்ற தீராத அத்தியந்த அவசியத்தையும் நாம் அறிவோம்.
ஆகவே, இன்றைய பிரசங்கியார் நரகத்தைக் குறித்துப் பிரசங்கிப்பாராக. ஆனால், அவர் அதை அன்பால் பிரசங்கிப்பாராக. ஒரு மாபெரும் வேதாகம ஆசிரியர் தனது இறையியல் வேத மாணாக்கர்களுக்கு ஒரு தடவை இவ்விதமாகச் சொன்னார் "வாலிபரே, நீங்கள் நரகத்தைக்குறித்து கட்டாயம் பிரசங்கிக்க வேண்டும். ஆனால் உங்கள் பிரசங்கம் நொறுங்குண்ட இருதயத்தோடும், உங்கள் கண்கள் கண்ணீரால் நிரம்பிய நிலையிலும் இருப்பதாக" என்றார். தேவ கோபாக்கினைப் பாத்திரங்களுக்குள்ள நித்திய நரக அக்கினியைக் குறித்து நாம் அவர்களுக்குச் சொல்லும்போது அவர்கள் மேல் நாம் மெய்யான மன உருக்கத்தோடும், மன துயரத்தோடும் சொல்ல வேண்டும். அதே சமயம் அவர்களுக்காக மரித்த அன்பான இரட்சகர் இயேசுவின் மரணம் அவர்களை நரகத்திலிருந்து தப்பிக்கொள்ள அவர்களுக்கு வகை செய்திருக்கின்றது என்பதையும் நாம் அவர்களுக்குச் சொல்ல வேண்டும். |
கிறிஸ்தவர்களை விழிப்படையச் செய்ய நாம்
நரகத்தை பிரசங்கிக்க வேண்டும். |
நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் நரக அக்கினி ஜூவாலையை நெருங்கி வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எத்தனை கொடிய பேரழிவின் விழிம்பில் இருந்து கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் உணராமல் நாம் நம்மட்டாக ஆழ்ந்த நித்திரையில் இருக்கின்றோம். அவர்களில் ஒருவர் உங்களுக்கு அருமையான, உங்கள் இருதயத்துக்கு அன்பானவராக இருக்கலாம். அவர்களுடைய நஷ்டப்பட்ட நிலையையும், நரகம் அவர்களுக்காக எப்படியாக காத்திருக்கின்றது என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேனானால் நீங்கள் அவர்களுக்காக ஜெபிக்கவும் அவர்களுடைய இரட்சிப்புக்காக பிரயாசப்படவும் செய்வீர்கள்.
இரட்சண்ய சேனையைத் தோற்றுவித்த வில்லியம் பூத் என்ற பரிசுத்தவான் தன்னுடைய சேனையின் சுவிசேஷகர்களுக்கான பயிற்சி அளிப்பு பட்டமளிப்பு விழாவில் பேசும்போது "இந்த இள வயது சுவிசேஷகர்கள் சில ஆண்டு காலங்களாக இங்கே தங்கியிருந்து கர்த்தருக்கு எப்படி ஊழியம் செய்ய வேண்டும்? எப்படி ஆத்துமாக்களை அவருக்கு ஆதாயம் பண்ண வேண்டும்? என்பதை எல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்" அந்த பரிசுத்தவான் தனது வார்த்தைகளைத் தொடர்ந்து கூறுகையில் "வாலிபர்களே, எனக்கென்று என் இருதய வாஞ்சையின்படி என் காரியம் நிறைவேற ஆண்டவர் எனக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் இத்தனை ஆண்டு காலமும் நான் உங்களை வெறும் வேதாகம பயிற்சி மட்டும் இங்கு கொடுத்துக் கொண்டிருக்க மாட்டேன். நான் உங்களை 24 மணி நேரங்கள் நரகத்தில் போட்டு நீங்கள் உங்கள் மட்டாக நரகத்தின் வேதனையையும், அக்கினியும் கந்தகமும் கலந்து எரியும் எரிமலைக் குழம்பில் கிடந்து நீங்கள் உழன்று கதறவும், துடிதுடிக்கவும் செய்து நரக அக்கினி என்றால் என்ன? அதை அனுபவிப்பதில் உள்ள சொல்லொண்ணா வேதனையின் பாடுகள் எவை என்பதை நீங்களே முதலில் கண்டு கொள்ளவும், அங்கு கிடக்கும் மக்கள் சதா காலமும் எழுப்பும் அழுகையையும், பற்கடிப்பையும், புலம்பல்களையும் நீங்கள் உங்கள் காதுகளாலேயே கேட்கவும் வகை செய்திருப்பேன். அதற்கப்பால் நான் உங்களை நரகத்திலிருந்து எடுத்து மனந்திரும்பாத பாவிக்கு தேவனால் ஆயத்தம் செய்யப்பட்ட நித்திய நரக அக்கினியின் மா கொடிதான வேதனை என்ன என்பதை உங்கள் சொந்த அனுபவத்திலிருந்து உலகிற்குச் சென்று பறைசாற்றவும், அவர்களை எச்சரிக்கவும் நான் உங்களை அனுப்பி வைப்பேன்" என்று சொன்னார். தளபதியும் பரிசுத்தவானுமான வில்லியம் பூத் அவர்கள் சொன்னது சரியே. எரி நரகின் உண்மை நிலையை நாம் நம்மட்டாக அறிந்திருப்போமானால் மக்களை இயேசுவண்டை வரும்படியாக அறைகூவல் விடுக்கும் நம் பரிசுத்த பணியிலிருந்து நம்மைத் தடுத்து நிறுத்த இந்த உலகில் எவராலும் கூடாது. எனவே, நாம் நரகத்தைக் குறித்துப் பிரசங்கித்தே ஆக வேண்டும். அதைக் கேட்கும் மக்கள் நரகத்திற்குச் செல்லும் தங்கள் நண்பர்களுக்காகவும், தங்களுக்கு அருமையானவர்களுக்காகவும் நிச்சயமாக உள்ளத்தில் பாரமடைவார்கள். |
பாவிகளை எச்சரிக்க நரகத்தை குறித்து
நாம் பிரசிங்கிக்க வேண்டும் |
அடுத்த நிமிடத்தில் நீ நரகத்தில் இருப்பாய் என்ற காரியத்தை எண்ணுவது கற்பனையால் கூட எண்ணிப் பார்க்க இயலாத மா பயங்கரமான ஒரு காரியமாகும். உலகில் எந்த ஒரு டாக்டராலும் அடுத்த ஒரு நிமிட நேர வாழ்க்கைக்கு உங்களுக்கு உத்திரவாதம் கொடுக்க இயலாது. "மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கின்றது" (1 சாமு 20 : 3) என்று தாவீது ராஜா கூறுகின்றார். எனது பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கும் எனது சபையின் மக்களை நான் பார்க்கின்றேன். உங்களில் ஒருவர் நல்ல பூரண உடல் நலத்தோடு இருக்கின்றீர்கள். நல்ல உடற்கட்டு, மிகுந்த பலசாலியான அவர் வருகிற ஞாயிற்றுக் கிழமைக்குள்ளாக ஆண்டவரோடு கூட இருப்பதற்காகச் சென்று விடுகின்றார். அந்த சம்பவம் உங்களில் ஒருவருக்கு நேரிடலாம். ஏன்? எனக்கே வந்து பலிக்கலாம். நீங்கள் ஆயத்தமாக இல்லாதபட்சத்தில்? கிறிஸ்து உங்கள் இரட்சகராக இல்லாவிடில்? என்றென்றைக்கும் உள்ள சதா காலங்களுக்கான நித்திய தேவ கோபாக்கினையை அடைவீர்கள்.
கொஞ்ச மக்களுக்கு சுவிசேஷம் தேவைப்படுவதில்லை. அவர்கள் பிரசங்கிமாரைப் பகைக்கின்றனர், வேதாகம சத்தியங்களை எள்ளி நகையாடுகின்றனர். அந்த மக்கள் இப்பொழுது நரக அக்கினியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவரோடு நாம் ஒரு நிமிட நேரத்திற்கு இப்பொழுது சம்பாஷிக்கலாமா?
"நரகத்திற்கு வர வேண்டும் என்றே நீங்கள் தீர்மானித்திருந்தீர்களா?"
"ஒருக்காலும் இல்லவே இல்லை" என்று அவர் பதில் கொடுக்கின்றார். "எனது முழு வாழ்க்கையிலும் நான் ஒரு கிறிஸ்தவனாகி மரணத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டுமென்றே நான் எண்ணினேன். ஆனால், நான் மிகவும் கால தாமதம் செய்து விட்டேன். நினையாத பிரகாரமாக மரணம் என்மேல் நழுவி வந்துவிட்டது. அடுத்த கணத்தில் நான் நரக அக்கினியில் இருப்பதை உணர்ந்தேன்".
"நீங்கள் ஒரு பொல்லாத மனிதனா? நீங்கள் ஒரு குடிகாரனா? அல்லது ஒரு திருடனா? ஒரு கொலைகாரனா அல்லது ஒரு விபச்சாரக்காரனா?"
"ஓ, இல்லவே இல்லை" என்று அவன் பதிலளித்தான். "நான் மிகுந்த ஒரு நல்ல ஜீவியம் செய்து வந்தேன். ஆனால், ஒரே ஒரு காரியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை எனது வாழ்க்கைக்கு அப்பால் புறம்பாகத் தள்ளி வைத்திருந்தேன்"
எனவே, நரகத்தைக் குறித்துப் பிரசங்கித்து மக்களை நாம் எச்சரிக்க வேண்டும். உங்களைச் சுற்றியுள்ள நஷ்டப்பட்ட ஆத்துமாக்களை நீங்கள் பாருங்கள். மக்கள் தினந்தோறும் செத்து மடிந்து கொண்டிருக்கின்றனர். உங்களுடைய வேளையும் விரைந்து வந்து கொண்டிருக்கின்றது. நித்திய நரகாக்கினையின் பயங்கரத்தை மனதில் எண்ணியவர்களாக விரைந்து இயேசுவண்டை வாருங்கள். நரக அக்கினியிலிருந்து தப்பிக் கொள்ள இது ஒன்றே வழியாகும். |
| நரகத்தின் நிலை மாறா உண்மை |
அதிகமாக கல்வி கற்ற ஞானவான்கள் நரகம் இருப்பதை இன்று திட்டவட்டமாக மறுதலிக்கின்றனர். மனிதனை சகோதரத்துவத்திலும், ஆண்டவரை, எதையும் கண்டு கொள்ளாத ஒரு அன்புத் தந்தையின் ஸ்தானத்திலும் வைத்து மிகவும் இலகுவாக பேசும் ஒரு காலக்கட்டத்திற்கு நாம் வந்து சேர்ந்திருக்கின்றோம். ஆண்டவரை ஒரு பெரிய கிறிஸ்மஸ் தாத்தாவாக (சாந்தா கிளாஸ்) வானிலிருந்து அவர் புன்முறுவல் பூத்தவராக மனுமக்களுக்கு நன்மையை வாரி வழங்கும் விதத்தில் இருப்பவராக நாம் அவரை எண்ணிக் கொள்ளுகின்றோம். ஆண்டவர், அனைவருக்கும் தந்தை அல்ல. உண்மைதான், அவர் அனைவரையும் சிருஷ்டித்தவர்தான். ஆனால், அவர் எல்லாருடைய தகப்பன் அல்ல. நாம் கிறிஸ்துவுக்குள் வரும்பொழுது மட்டுமே அவருடைய பிள்ளைகளாகின்றோம். "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் (யோவான் 1 : 12) இவர்கள்தான் தேவனை தங்கள் தகப்பன் என்று உரிமை கொண்டாட முடியும். அவர்கள் மீட்கப்பட்டவர்கள், இரட்சிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒருக்காலும் நரகம் செல்ல மாட்டார்கள். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து ஆண்டவரிடம் வரும் வரை நீ அவருடைய பிள்ளை அல்ல என்பதை திட்டமாக மனதில் வைத்துக் கொள்.
ஒரு பிரசங்கியார் நரகத்தைக் குறித்து பிரசங்கம் செய்ததைக் கேட்ட ஒரு அம்மாள் அந்தப் பிரசங்கியாருக்கு பிள்ளைகள் உண்டுமோ என்று அவரைக் கேட்டாள். தனக்கு பிள்ளைகள் உண்டு என்று அவர் பதில் அளித்தார். "நீங்கள் உங்கள் பிள்ளைகளை நேசிக்கின்றீர்களா?" என்று அவள் கேட்டாள். "நிச்சயமாக நான் அவர்களை அதிகமாக நேசிக்கின்றேன்" என்று பிரசங்கியார் பதில் கொடுத்தார். "நல்லது" என்று சொல்லிக் கொண்டே "தனது பிள்ளைகளை நரக அக்கினியிலிருந்து காப்பாற்றக்கூடிய ஒரு தகப்பன் அப்படிச் செய்ய மறுப்பானானால் அவனை நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?" "அவன் ஒரு ஈவு இரக்கமற்ற கொடிய பாதகன், அவன் ஒரு அரக்கன்" என்று பிரசங்கியார் அவளுக்கு பதில் கொடுத்தார். "நீங்களும், கடவுளை அப்படிப்பட்ட இரக்கமற்ற ராட்சதனாகத்தான் மாற்றுகின்றீர்கள். நரகத்திற்குச் செல்லும் தன்னுடைய பிள்ளைகளை தனது வல்லமையால் காப்பாற்றுவதற்குப் பதிலாக அவர்களை நரகத்திற்கு அனுப்பி அங்கே அழுந்தச் செய்கின்ற ஒரு தகப்பன் கருணையற்ற அரக்கனேதான்" என்றாள் அவள். "ஆனால் அம்மாவே" அந்தப் பிரசங்கியார் தனது வார்த்தையைத் தொடர்ந்தார். "நீங்கள் ஒரே ஒரு தவறு செய்கின்றீர்கள். தேவனுக்கு நரகத்தில் எந்த ஒரு பிள்ளைகளுமே இல்லை. அங்கு அவருக்கு ஒருக்காலும் பிள்ளைகள் இல்லை. நரகத்தில் இருக்கும் மக்கள் சாத்தானுடைய பிள்ளைகள். ஆண்டவருடைய பிள்ளைகள் எல்லாரும் மோட்சத்தில் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் அல்லது மோட்சம் செல்லும் பாதையில் இருக்கின்றார்கள். தேவன் தம்முடைய பிள்ளைகளை வைத்திருக்க ஒரு வீட்டை வைத்திருக்கின்றார். அப்படியே சாத்தானும் தன்னுடைய மக்களை வைத்திருக்க நரகம் என்ற ஒரு வீட்டை ஆயத்தம் செய்து வைத்திருக்கின்றான்" என்றார் அந்தப் பிரசங்கியார்.
அந்தப் பிரசங்கியார் சொன்ன வார்த்தைகள் சரியானதே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து மறுபடியும் பிறந்தவர்களுக்கு மாத்திரம் தேவன் தகப்பனாக இருக்கின்றார். தாங்கள் செய்த பாவங்களை தேவன் தமது மிகுந்த தயவினிமித்தம் மன்னித்துக் கொள்ளுவார் என்று மிகுதியான மக்கள் தவறாக எண்ணிக் கொண்டிருப்பதுடன் "நாம் நமது மனதும் மாம்சமும் விரும்பும் வழிகளில் வாழுவோம், தேவன் நம்மைத் தண்டிப்பதற்கு அத்தனையான இரக்கமற்ற கல் நெஞ்சினன் அவர் அல்ல" என்று மதியீனமாக நினைக்கின்றனர். இந்த மக்கள் அலறி அடித்து அங்கலாய்க்கும் ஒரு அதிர்ச்சி நாள் விரைந்து வந்து கொண்டிருக்கின்றது.
தேவனுடைய சத்திய வேதாகமம் மோட்சமும், நரகமும் உண்டு என்று கூறுகின்றது. ஒன்றை நாம் ஏற்றுக் கொண்டு மற்றதை நாம் புறக்கணிப்போமானால் தேவனுடைய சத்திய வார்த்தையை நாம் தூஷிக்கின்றவர்களாக இருப்போம். மண்ணான மனிதனின் கருத்துக்களிலும், அவனுடைய யூகங்களிலும், அவனுடைய கற்பனைக் கதைகளிலும் நாம் சிக்கிக் கொள்ளாமல் தேவனின் நிலை மாறா உண்மையான சத்தியத்திலும், அவருடைய ஜீவனுள்ள வார்த்தைகளிலும் நாம் நம்மை உறுதிப்படுத்திக் கொள்ளுவோமாக.
நரகம் என்று ஒன்று இருக்கின்றது என்ற உண்மையை நீ மறுதலிக்கலாம். அதினிமித்தம் நிஜமாக உள்ள நரகத்தை நீ மாற்றிவிட முடியாது. நெருப்பு சுட்டெரிக்கின்றது. அதை நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது எப்பொழுதும் சுட்டெரிக்கவே செய்யும். விஷம் கொல்லக்கூடியது. அதை நீ நம்பினாலும், நம்ப மறுத்தாலும் அது தனது காரியத்தை செய்து கொண்டிருக்கும். பூமி உருண்டை வடிவமானது. நீ அதை நம்பினாலும், நம்ப மறுத்தாலும் அது எக்காலத்தும் உருண்டையாகவே இருந்து கொண்டிருக்கும். அதைப் போல நீ நம்பினாலும், நம்பாதபட்சத்திலும் நரகம் என்பது நித்திய அக்கினிக் கடல் என்பது நிலை மாறாத உண்மையாகும். கர்த்தராகிய இயேசு இரட்சகர் மூலமாக உள்ள அவரது ஈவும், இலவசமுமான இரட்சிப்பை இன்று ஏற்றுக்கொள்ளாவிடில் நீ நரகத்துக்குச் செல்லுவாய் என்பதில் எந்த ஒரு சந்தேகமே கிடையாது. அதை நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதின் பலாபலன் உன்னைப் பொறுத்ததாகும்.
ஆண்டவராகிய இயேசு சொல்லுவதை இப்பொழுது நீங்கள் கவனியுங்கள். நரகத்தை பற்றிய உண்மை அவருக்குத் தெரியும். குறிப்பிட்ட ஒரு ஐசுவரியவான் மரித்து நரகத்திற்குச் சென்று அங்கு அவன் நரக அக்கினியில் வேதனைப்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறினார். "இந்த அக்கினி ஜூவாலையில் வேதனைப்படுகிறேனே" என்று அந்த ஐசுவரியவான் கதறியதாக ஆண்டவர் சொன்னார். அந்த மனிதன் தனது உடன் பிறந்த சகோதரர்களுடைய மனந்திரும்புதலில் கவலைப்பட்டதையும், எந்த ஒரு நிலையிலும் அவர்கள் அந்த நரக அக்கினியின் வேதனைக்குள் வந்துவிடக்கூடாது என்பதையும் குறித்து தவித்தவனாகக் காணப்பட்டான் என்பதையும் அவர் அடிக்கோடிட்டுக் காண்பித்தார்.
ஒரு மனிதன் தனது தேசத்தின் சட்டத்தை மீறும்பட்சத்தில் அவனைத் தண்டிப்பதைத்தவிர வேறு என்ன செய்வார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? அவனுடைய குற்றத்தின் கடுமையை மனதில் கொண்டு ஒன்று அவனை காவலில் போடுவார்கள் அல்லது மரணத்திற்கு ஒப்புக் கொடுப்பார்கள். ஒரு மனிதன் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ் செய்து, கலகம் பண்ணி அவருடய நேச குமாரனை தனது காலின் கீழ்ப்போட்டு மிதிப்பானானால் அப்படிப்பட்டவர்களை தேவன் நரகம் என்ற சிறைக்கூடத்தில் போடுவதை தவிர அவருக்கு வேறு என்ன இருக்கின்றது? சட்டத்தை மீறுவோரை மனிதன் நிச்சயமாக தண்டிக்கும்போது தேவனும் அதையேதான் கட்டாயம் செய்வார்.
ஒரு ரயில் வண்டி 500 பிரயாணிகளை ஏற்றிக் கொண்டு கீழ் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்றும் நீங்களும் நானும் அந்த ரயில் வண்டி வரும் தண்டவாளத்தில் 20 மைல்களுக்கு அப்பால் நின்று கொண்டிருக்கின்றோம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். ரயில் முன்னால் செல்லக்கூடிய ஒரு பெரிய ஆற்றுப் பாலத்தின் தூண்கள் சாய்ந்து தண்டவாளங்கள் அந்தரத்தில் தொங்குவதை நாம் காண்கின்றோம். ரயில் விரைந்து வந்து கொண்டிருப்பதை காண்கின்ற நான் அதைக் கட்டாயம் தடுத்து நிறுத்தி உயிர்களைக் காக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். ஆனால் நீங்கள் "ஐயோ, நான் அதைச் செய்ய மாட்டேன். பாலம் இடிந்து கிடக்கின்றது என்று நான் சொல்லும் பட்சத்தில் அவர்கள் பயத்தால் அலறி அடித்து பதறிப் போய்விடுவார்கள், அவர்களில் அநேகர் மயக்கம் போட்டும் விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு முன்பாக நான் மென்மையாக நடந்து கொள்ளுவேன், அவர்களுக்குத் துக்கமான செய்தி சொல்லி அவர்களைக் கலங்கப்பண்ண மாட்டேன்" என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். அதின் முடிவு அந்த ரயில் பேரழிவுக்கு நேராக ஓடி அதின் பயணிகள் யாவரும் ஆற்றில் முழ்கி மடிந்து போவார்கள்.
நான் சரியான காரியத்தைச் செய்யவில்லையா? அன்பினால் ஏவப்பட்டு நான் அதைச் செய்யவில்லையா? என்று நீங்கள் சொல்லலாம். இல்லை, முற்றிலும் இல்லவே இல்லை. பிரயாணிகளை நான் நேசித்திருந்தால் நான் அவர்களை எச்சரித்திருப்பேன். அதைப் போல நஷ்டப்பட்ட, நரக பாதாளத்துக்கு நேராகச் செல்லும் ஆத்துமாக்களுக்கு நேராக எனது வேதாகமத்தை எனது கரங்களில் ஏந்தி "இது தேவனுடைய வார்த்தையாகும். இரட்சகர் இயேசுவை புறக்கணிப்போர் அனைவருக்கும் நரகம் உண்டு என்று அது சொல்லுகின்றது. அந்த இயேசுவண்டை வாருங்கள், இரட்சிப்பைப் பெற்று பயங்கர நரகாக்கினைக்குத் தப்பிக்கொள்ளுங்கள்" என்று சொல்லுவேன்.
எனவே, நான் எனது சொந்த ஞானத்தைக் கொண்டல்ல, ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை சொல்லுவதை உங்களுக்குச் சொல்லுகின்றேன். மோட்சம் என்ற ஒரு இடம் எத்தனை நிச்சயமாக உள்ளதோ அத்தனை நிச்சயமாக நரகம் என்ற ஒரு இடம் இருக்கின்றது. கிறிஸ்து இரட்சகரை புறக்கணிப்பவர்கள் எரி நரகத்திற்குச் செல்லுவது எத்தனை உண்மையோ அப்படியே அவரை தங்கள் சொந்த மீட்பராக ஏற்றுக் கொள்ளுபவர்கள் மோட்ச பேரானந்த மகிமைக்குள் பிரவேசிப்பதும் மெய்யான ஒரு காரியமாகும். |
| நரகத்தைக் குறித்து வேதாகமம் விவரிக்கும் காரியங்கள் |
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் நரகத்தைக் குறித்து விவரிக்கும் காரியங்களை ஒரு நிமிடம் நின்று நீங்கள் கவனியுங்கள். நரகத்தை "அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல்" என்றும் "அக்கினிக்கடல்" என்றும் "நித்திய அக்கினி" என்றும் "அவியாத அக்கினி" என்றும் "பட்சிக்கிற அக்கினி" என்றும் "அக்கினி ஜூவாலை" என்றும் "பாதாளம்" என்றும் "சதா காலங்களிலும் வாதிக்கப்படும் இடம்" என்றும் "அழுகையும் பற்கடிப்பும் நிறைந்த இடம்" என்றும் "புறம்பான இருள்" என்றும் "வேதனைப்படும் இடம்" என்றும் "மனுஷருக்கு இளைப்பாறுதலில்லாத இடம்" என்றும் "நித்திய அழிவின் இடம்" என்றும் இன்னும் பலவாறாக தேவ வார்த்தை நரகத்தைக் குறித்துப் பேசுகின்றது.
1. தேவனிடமிருந்து பிரிக்கப்பட்ட ஒரு இடம்
தேவனிடமிருந்து துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு நொடிப் பொழுது கூட நாம் இங்கு உயிர் வாழ இயலாது. ஆனால் நரகத்தில் கிடக்கும் நிலையை எண்ணிப் பாருங்கள். ஆண்டவருடைய சமூகத்திலிருந்து என்றுமாக நாம் துண்டிக்கப்பட்ட இடம் அது. இந்த உலகத்தில் நாம் ஜெபிக்கலாம், கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடலாம். ஆனால், நரகத்தில் நமது ஜெபங்கள் நமக்கு உதவி செய்யாது. காரணம், மனிதன் என்றுமுள்ள சதா காலங்களுமாக தேவனைவிட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடம் அது.
2. நமது ஆசைகள் நிறைவேறாத இடம்
இந்த உலகத்தில் நாம் நமது மனதின் ஆசைகளை நம்மால் முடிந்த ஓரளவிற்கு நிறைவு செய்து கொள்ளுகின்றோம். ஒரு மனிதன் பணத்தை வாஞ்சிப்பானானால் அதை அவன் பெற்றுக் கொள்ள அநேக வழிகள் இருக்கின்றன. அவன் மதுபானத்தை விரும்பும் பட்சத்தில் அதை அவன் பெற்றுக் கொள்ளலாம். தனது சரீர பிரகாரமான ஆசை இச்சைகளை பூர்த்தி செய்ய அவன் விரும்பும் நிலையில் அவைகளையும் அவன் அடைய வழிகள் உண்டு. ஆனால் நரகத்தில் அவன் தனது ஆசை இச்சைகளோடு அவன் வெந்து கொண்டிருக்க வேண்டுமே தவிர அவைகளை அவனால் எந்த ஒரு வழிகளிலும் நிறைவு செய்ய இயலாது. ஐசுவரியமுள்ள மனிதன் நரகத்தில் லாசருவின் விரலின் நுனித் தண்ணீருக்காகக் கதறினான். ஆனால் அது அங்கு அவனுக்குக் கிடைக்கவில்லை. மனந்திரும்பாத தனது சகோதரர்களுடைய இரட்சிப்புக்காக அவன் ஏறெடுத்த மன்றாட்டு அங்கீகரிக்கப்படவில்லை. அப்படியே நரகத்திலுள்ள மாந்தர் தங்கள் இருதய வாஞ்சைகள், இருதயத்தின் கதறல்கள் எதுவும் நிறைவுசெய்யப்படாத நிலையில் புலம்பிக் கதறிக் கொண்டிருப்பார்கள்.
3. பொல்லாத பாவிகளோடு சேர்ந்து வாழும் இடம்
சமுதாயத்தில் மிகவும் மோசமான மக்கள், அற்பமானவர்கள், ஈனர்கள், நீசர்கள், கொடூரர்கள், அசுத்தமானவர்கள், கொடியவர்கள் அங்கிருப்பார்கள். சிலருக்கு நரகமானது இன்னும் பயங்கரங்களைச் சேர்க்கும் இடமாக இருக்கும். காரணம், அவர்கள் நல்ல சுத்தமான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் நல்ல நண்பர்களோடும், நல்ல அந்தஸ்தில் உள்ளவர்களோடும் பழகி வாழ்ந்து இந்த உலகத்தில் நல்லதொரு குடி மக்களாக வாழ்ந்திருப்பார்கள். ஒரே ஒரு காரியம் ஆண்டவர் இயேசுவை மட்டும் அவர்கள் தங்கள் வாழ்க்கையிலிருந்து புறக்கணித்துத் தள்ளியிருப்பார்கள். அந்த மக்கள் நரகத்தில் ஒரு நாள் தள்ளப்படும்போது தங்கள் நித்தியம் முழுவதிலும் பொய்யர்கள், விபச்சாரக்காரர், கொலைகாரர்கள், குடிகாரர், ஓரினச் சேர்க்கை கொண்ட அருவருப்பானவர்கள் போன்ற மிகவும் கீழ்த்தரமான அசுத்தர்களோடு சேர்ந்து நரகத்தில் கிடந்து அழுந்த வேண்டும். இந்தச் சேர்க்கை அவர்களுக்கு சற்றும் பொருந்திப் போகாத காரியமாகும். எனினும் முடிவில்லாமல் அவர்களோடுதான் அங்கு இருந்தே ஆகவேண்டும். தங்கள் மரணத்தின் மூலமாக தங்களோடுள்ள கொடியவர்களை விட்டுப் பிரிந்து விடலாம் என்றால் அவர்கள் ஒருக்காலும் சாகவே மாட்டார்கள். அவர்களை விட்டுப் பிரிந்து விடலாம் என்றால் அங்கிருந்து எழுந்து எங்கும் தப்பிச் செல்லவும் இயலாது.
4. எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாத இடம்
இந்த உலக வாழ்க்கையில் நம்பிக்கை என்ற பிரதான கம்பிச் சுருளே நாம் தொடர்ந்து முன்னேறிச் செல்ல உறு துணையாக இருந்து கொண்டிருக்கின்றது. நாம் சரீர சுகயீனமாக இருந்தால் எப்படியும் விரைவில் குணமடைந்துவிடுவோம் என்று நம்புகின்றோம். நாம் ஏழைகளாக இருந்தால் காலப்போக்கில் நமது ஏழ்மை நிலை மாறி ஒரு செழிப்பான நிலைக்கு மாறுவோம் என்று நம்புகின்றோம். நாம் சந்தோசமில்லாதவர்களாக இருந்தால் சீக்கிரம் சந்தோசமடைவோம் என்று நம்புகின்றோம். நாம் விரும்பாத ஒரு வேலையில் இருந்தால், எப்படியும் நமக்கு ஒரு நல்ல வேலை விரைந்து கிடைக்குமென்று எதிர்பார்க்கின்றோம். ஆனால், நரகத்தில் எந்த ஒரு நம்பிக்கையுமே கிடையாது. அங்கு நீங்கள் துடிதுடித்து வேதனைப்பட்டுக் கொண்டு எந்த ஒரு நம்பிக்கையுமே இல்லாமல் கிடக்க வேண்டும். பண்டைய கால அரசன் ஒருவனுடைய கோட்டையில் இருந்த சிறைக்கூடம் ஒன்றின் நுழை வாயிலில் "உனக்குள்ள அனைத்து நம்பிக்கைகளையும் புறம்பே தள்ளிவிட்டு இங்கே பிரவேசி" என்ற வார்த்தை உள்ளனவாம். இந்த வரிகளை எல்லாம் நரகத்தோடு நாம் எந்த ஒரு நிலையிலும் ஒப்பிடுவதற்கில்லை. ஒரு நொடிப் பொழுது நேரத்திற்குக் கூட நரகத்தில் நம்பிக்கை கிடையாது. நீ நரகத்தில் வீசப்பட்டதும் யாவும் என்றுமுள்ள சதா காலங்களுக்குமாக முத்திரையிடப்பட்டு முடிந்து விடுகின்றது.
5. வேதனைப்படும் இடம்
இதைக் குறித்து கூடுதலாக நான் விளக்க வேண்டிய அவசியமில்லை. வேதாகமம் நரகத்தை மா கொடிய வேதனையின் இடம் என்றும் அது முடிவில்லாத நித்திய மா அகோர அழுந்துதலின் இடம் என்றும் கூறுகின்றது. எரிமலை குழம்பான அக்கினி கடலில் கிடக்கும் ஒரு ஆத்துமாவின் பாடுகளை விவரிக்க வார்த்தைகள் எங்கே உண்டு? ஒரு ஸ்திரீயை எனக்கு நன்கு தெரியும். அவர்கள் இப்பொழுது நரகத்தில் அதிகமான வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். தன்னுடைய மரணம் விரைவாக வந்து கொண்டிருக்கின்றது என்பதை அறிந்த அவர்கள் "அனைத்தும் விரைவாக ஒரு நிரந்தரமான முடிவுக்கு வந்து விடும்" என்று சொன்னார்கள். அந்த வார்த்தையை நரகத்தில் எவரும் சொல்ல முடியாது. அந்த கொடிய துயரங்களுக்கு என்றும் முடிவில்லை.
6. கடந்த கால நினைவுகள் வாட்டி வதைக்கும் இடம்
பொல்லாத தீச் செயல்களைச் செய்த மாந்தர் தாங்கள் செய்த கொடிய காரியங்களைக் குறித்த வாட்டி வதைக்கும் நினைவுகளை தாங்கிக் கொள்ள இயலாமல் இந்த உலகத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம். அந்தக் காரியத்தை நீ நரகத்தில் செய்ய இயலாது. அங்கே நீ அந்த நினைவுகளோடுதான் என்றுமாக வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். உனது பூலோகத்திய நினைவுகள் அனைத்தையும் உன்னைச் சுற்றி 10000 நிலைக் கண்ணாடிகள் நின்று அவைகளை மிகவும் தெளிவாகவும், துலக்கமாகவும் உனக்கு பிரதிபலித்துக் காட்டுவதாக இருக்கும். பூமியில் நீ செய்த அநியாய அக்கிரமங்கள், பதவி அதிகாரம் உனது கரங்களில் இருந்ததால் உன்னைத் தட்டிக் கேட்க ஆள் இல்லை என்று எண்ணி உன் மனம் போல நீ போட்ட சர்வாதிகார ஆட்டங்கள், உனது மதியீனங்கள், உனது பெருமையான துணிகரங்கள் யாவும் அங்கே உன் கண்களுக்கு முன்பாக திரைப்படத்தில் விழுவது போல விழுந்தவண்ணமாக இருக்கும். உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை உலக இன்பங்களுக்கு விற்றுப் போட்டதை நீ நினைவுகூருவாய். உனது பக்தியுள்ள தாயாரும், உனது நண்பர்களும், குடும்பமும் உனது இரட்சிப்புக்காக எத்தனையாக போராடிப் பிரயாசப்பட்டார்கள் என்பதை நீ நினைப்பாய். கிறிஸ்து இரட்சகருக்காக நீ எடுக்க வேண்டிய தீர்மானங்கள் யாவையும் எப்படியான அசட்டுத்தனத்தோடு நீ அடக்கி அமர்த்திக் கொண்டாய் என்பதை வேதனையோடு நினைவு கூருவாய். இவைகளை நீ நினைக்கும்போது இந்த நினைவுகளே உனக்கு மற்றொரு தனி நரகமாக உருவெடுத்து உன்னை வாதிக்கும்.
நரகத்தில் வந்து அழுந்தி வேதனைப்படாமல் மோட்சம் சென்று தேவ ஜனங்களோடு ஆண்டவர் தமது மக்களுக்காக உலகத்தோற்ற முதல் ஆயத்தம் செய்து வைத்துள்ள பேரின்ப பாக்கியங்களை அனுபவித்து ஆனந்தித்துக் கொண்டிருக்கலாமே என்று நீ நினைப்பாய். எத்தனை எளிமையான விதத்தில் நீ உனது பாவங்களிலிருந்து மனந்திரும்பி இரட்சிப்பைப் பெற்றிருக்கலாமே என்று நீ நினைப்பாய். நித்திய ஜீவனை எத்தனை எளிதாக தேவனிடமிருந்து கேட்டுப் பெற்றிருக்கலாமே! அதை விட்டு விட்டு அவர் அளித்த நித்திய ஜீவனை நீ அல்லத்தட்டி எத்தனை மட்டரக விலைக் கிரயத்துக்கு உனது விலையேறப்பெற்ற ஆத்துமாவை சாத்தானுக்கு விற்றுப் போட்டாய் என்பதையும், பரலோகத்தின் மோட்சானந்த ஆனந்த கீதங்களின் மாமாட்சியான ஆரவாரம் கேட்பதற்குப் பதிலாக அழுகையும், பற்கடிப்பும் கேட்கின்றோமே என்றும் நீ நினைத்துக் கதறுவாய், துடிதுடிப்பாய்.
இந்த உலகத்தில் நீ இருந்த நாட்களில் உன்னுடைய பாவங்களுக்கு மற்ற கிறிஸ்தவர்களை குற்றம் சாட்டினாய். ஒரு கூட்டம் மாய்மாலக்காரர்கள் என்று கிறிஸ்தவர்களை நீ குற்றப்படுத்திக் கொண்டு அன்பின் ஆண்டவருக்கு நீ உன் முதுகைக் காட்டி தொடர்ந்து உனது பாவங்களில் நிலைத்திருந்தாய். நீ மனந்திரும்பாததற்கு மற்ற ஒவ்வொருவரையும் குற்றம்சாட்டிக் கொண்டு இந்த உலகத்தில் உன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்து கொண்டு இருந்தாய். ஆனால், நரகத்தில் நீயே முழுமையான குற்றவாளி என்பதை உன்னளவில் நினைவு கூருவாய். இரட்சிப்பின் காரியம் உனக்கும், உன் ஆண்டவருக்கும் உள்ளது என்பதையும் அதற்கு மற்ற எவரும் உடந்தையாக மாட்டார்கள் என்பதை இப்பொழுதாவது நீ நினைவுபடுத்திக் கொள். உனது பாவங்களுக்கு நீயேதான் ஆண்டவருக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். நீ குற்றப்படுத்தும் அந்த மாய்மாலக்கார கிறிஸ்தவர்கள் உனது பாவங்களுக்காக கணக்கு கொடுக்க மாட்டார்கள். நீ உனது முடிவை துணிந்து தீர்மானித்துக் கொண்டது உனது குற்றமேயல்லாமல் வேறு யாருடைய குற்றமுமல்ல.
நரகத்திற்குச் செல்லுவது என்பது அத்தனையான எளிதான ஒரு காரியம் அல்ல. நீ நரகத்திற்கு போவதற்கு முன்பாக தேவாலயத்திலும், பரிசுத்த வேதாகமத்திலும், இரட்சிப்புக்கேற்ற சுவிசேஷ பிரசங்கங்கள் மேலும், உனது மனச்சாட்சி மேலும், உனது இருதயத்தின் நல்ல தீர்ப்பின் மேலும், பரிசுத்த ஆவியானவர் மேலும், நீ மனந்திரும்ப ஆண்டவர் உனக்கு கொடுத்த அனைத்து கிருபையின் பொன்னான வாய்ப்புகள் மேலும் நீ ஏறி நின்று அவைகளை மிதிக்க வேண்டும். கடைசியாக, நீ கல்வாரி சிலுவையில் ஏறி அதில் மூன்றாணிகளில் தொங்கிய தேவ மைந்தனை உனது கால்களின் கீழ்ப்போட்டு மிதித்து அவமானப்படுத்த வேண்டும். கடைசியாக நீ நரகம் சென்று இந்தக் கொடிய காரியங்களை எல்லாம் நீ செய்தாய் என்பதை கண்ணீரோடு நினைவுகூருவாய். |
| நரகம் எப்பொழுது ஆரம்பிக்கின்றது? |
கிறிஸ்து இல்லாத வாழ்வின் முடிவில் நரகம் ஆரம்பிக்கின்றது. கிறிஸ்து இரட்சகர் இல்லாமல் வாழும் உனது வாழ்வில் நீ மரிக்கும்போது உனது ஆத்துமா வேதனைகளை உணரும் ஒரு நிலைக்குள் பிரவேசிக்கின்றது. ஓ மனிதனே, இரட்சகர் இல்லாத உன் வாழ்வில் எரி நரகத்தை நீ எத்தனை அதிகமதிகமாக கிட்டி நெருங்கிக் கொண்டிருக்கின்றாய் என்பது உனக்குத் தெரியுமா? இந்த நாளின் நள்ளிரவுக்குள்ளாகவே உனது இருதயத் துடிப்பு நின்று போய் முடிவில்லாத நித்திய எரி நரகின் வேதனையும், வியாகுலமும் ஆரம்பமாகலாம்.
இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உனது வாழ்வின் நாயகராக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் இந்த உலகத்தில் நீ எதை எதிர் நோக்க முடியும்? மிஞ்சி மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டு கால உலக வாழ்க்கை உனக்குக் கிடைக்கலாம். அந்த உலக வாழ்க்கைக்குரிய மாயையான உலக இன்பங்களும், ஒரு கணம் நிலைத்து நின்று மறையும் மாயாபுரி சந்தை வாழ்வின் வாண வேடிக்கை காட்சிகளும், கம்பி மத்தாப்பு, பூச்சர வெடிகளின் வண்ண ஒளிகளும் உன் பங்காகத் தீரலாம். அதே சமயம் அதற்குரிய பாடுகளும், துயரங்களும், கண்ணீர்களும் கூட உனக்கு கட்டாயம் இருக்கவே இருக்கின்றது என்பதை நீ மறப்பதற்கில்லை. அதற்கப்பால் எந்த ஒரு நம்பிக்கையும் இல்லாத மரணம் உன்னைச் சந்திக்கின்றது. அதின் முடிவு நித்திய ஆக்கினையாகும். அதே சமயம் மனந்திரும்பிய, மறுபடியும் பிறந்த, ஆண்டவரின் வருகையை எப்பொழுதும் எதிர்நோக்கி வாழும் ஒரு மெய்க்கிறிஸ்தவனை நீங்கள் கவனியுங்கள். கொஞ்ச காலம் இந்த உலகத்தில் அவன் வாழ்ந்து பின்னர் மரணத்தின் மூலமாக பரலோக நித்திய பேரின்ப வாழ்வின் கதவு அவனுக்கு திறக்கப்பட்டு பரம எஜமானராம் தனது ஆண்டவருடைய நித்திய சந்தோசத்துக்குள் அவன் பிரவேசிக்கின்றான். ஓ என் அருமை சிநேகிதா, இந்த உலகத்தில் தேவனின்று வாழ்ந்து மோட்சத்தை இழப்பது எத்தனை மதியீனமான காரியம்! |
| நரகத்திற்கு நாம் எப்படி தப்பிக் கொள்ளலாம்? |
உனது மாம்சத்தின் சொந்தக் கிரியைகளின் மூலமாக நரகத்திற்கு நீ ஒருக்காலும் தப்பிக் கொள்ள முடியாது. தேவனுடைய இரக்கத்தைப் பெற நீ அநேக காரியங்களைச் செய்யலாம். உலகப்பிரகாரமாக ஒரு சபையில் சேர்ந்து, திரு முழுக்குப் பெற்றிருக்கலாம். உனது செல்வத்தை ஏழை எளிய மக்களுக்குக் கொடுத்து உதவி செய்து உலகத்தில் நீ ஒரு நல்ல வாழ்க்கை வாழலாம். ஆனால், இந்தக் காரியங்கள் எல்லாம் உன்னை இரட்சிக்க இயலாது. இரட்சிப்பு உள்ளான மனிதனில் நடைபெறும் ஒரு பரிசுத்த கிரியையாகும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நாம் விசுவாசிப்போமானால் நரகத்தின் கதவுகள் என்றுமாக நமக்கு அடையுண்டு போகும்.
உண்மையில் நீ நித்திய மரண ஆக்கினைக்கு ஒப்புக் கொடுக்கப்பட்டவன். ஆனால், நீ மரித்து நரக பாதாளத்துக்குப் போவதை தேவ மைந்தனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவர் தமது பிதாவைப் பார்த்து "தகப்பனே, நான் அவனுக்குரிய விலைக்கிரயத்தை செலுத்துகின்றேன். மரணத்தின் உபாதைகளை நான் அவனுக்காக அவனுடைய ஸ்தானத்தில் நின்று ஏற்று அனுபவிக்கின்றேன். அவனைக் குறித்து நீதிப் பிரமாணம் எதை எதை எல்லாம் வேண்டி நிற்கின்றதோ அவை அனைத்தையும் நானே செலுத்தி அதைப் பூரணப்படுத்துகின்றேன்". அப்படியே அவர் தமது வாக்கின்படி சிலுவை மரத்திற்குச் சென்று நம்முடைய பாவங்களுக்கான தண்டனையை பூரணமாக செலுத்தி தீர்த்தார். அவர் செலுத்திய சிலுவை அன்பின் தியாக பலியை நமது முழு இருதயத்தோடு ஏற்று நமது பாவங்களுக்காக நாம் மனங்கசந்து, நமது மார்பில் அடித்து அழுது புலம்பி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் தேவன் நமக்குத் தரும்படியாகக் கெஞ்சுவோமானால் அவர் நமது பாவங்களை நமக்கு மன்னித்து, உலகம் தரக்கூடாத தேவ சமாதானத்தை நமது உள்ளத்தில் தந்து நம்மை புது சிருஷ்டியாக மாற்றுவார்.
உனது பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும், அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும் என்று தேவன் சொல்லுகிறார். உனது பாவங்களின் அகோரம் எத்தனை கொடுமையானதாக இருந்தாலும் அன்பின் தேவனிடத்தில் திரண்ட இரக்கம் உண்டு. உனது மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, உன்னுடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், உனக்கு சமாதானத்தை உண்டாக்கும் ஆக்கினை அவர் மேல் வந்தது. உன்னை வாரி அணைக்கும் கரங்களோடு உன்னருகில் ஆவலாக நின்று "மகனே, என்னண்டை வா, நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்கின்றார். பொன்னான தருணத்தை நழுவ விட்டுவிடாமல் அவரை முத்தம் செய்து அவரை அண்டிக் கொள்.
(Dr.W.Herschel Ford)
(மொழி பெயர்ப்பு செய்தி) |
|
|
|