முன்னுரை


"மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்"
(லூக்கா 21 : 36)

"உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டுகிறபோது உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்"
(லூக்கா 12 : 35 - 36)


கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அருமையானவர்களே,

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருக உண்டாவதாக.

கர்த்தருடைய பரிசுத்த பிள்ளைகளாகிய உங்களைத் திரும்பவும் இந்த தேவ எக்காள இதழின் மூலமாக சந்திக்கவும், அவர் உங்களுக்குத் தரும் தேவ ஆலோசனைகளை எழுதவும் கிருபை செய்த அன்பின் ஆண்டவரை நன்றி நிறைந்த உள்ளத்தோடு துதித்து ஸ்தோத்திரிக்கின்றேன்.

உங்கள் கரங்களில் இருப்பது தேவ எக்காளத்தின் 42 ஆம் ஆண்டின் கடைசி இதழாகும். தேவ எக்காளத்தை ஆரம்பித்த 1968 ஆம் ஆண்டில் கொஞ்ச மாதங்களாவது நாம் இந்த பத்திரிக்கையை தொடர்ந்து அச்சிட்டு வெளியிட முடியுமா என்று நான் அதிகமாக யோசித்ததுண்டு. ஆனால், என் தாயின் வயிற்றில் நான் உருவாகுமுன்னே என்னைத் தமக்கென்று தெரிந்து கொண்ட அன்பின் ஆண்டவர் இந்த எளிய பத்திரிக்கையின் மூலமாக தமது விலையேறப்பெற்ற இரத்தத்தை சிந்தி மீட்டுக் கொண்ட தம்முடைய ஜனத்திற்கு அவர் விரும்பும் சுத்த சத்திய தேவச் செய்திகளை நான் எழுதி வெளியிட கடந்த 42 ஆண்டு காலம் எனக்கு ஒத்தாசையாக இருந்து இந்த ஆச்சரியமான காரியத்தைச் செய்து விட்டார். அந்த அன்பருக்கு நாம் என்ன ஈட்டைச் செலுத்த முடியும்?

இந்த 42 ஆம் ஆண்டை பாவியாகிய நான் ஒரு அதிசயத்தை காணும்படியாகச் செய்து முடியப்பண்ணியிருக்கின்றார். அதின் விபரத்தை நான் உங்களுக்குத் தருகின்றேன். கர்த்தருக்குள் நீங்கள் நன்கு அறிந்தவாறு நமது தேவ எக்காளம் கடந்த 2007 ஆம் ஆண்டிலிருந்து இணையதளத்தில் (Website) உள்ளது. அதின் காரணமாக உலகமெங்கிலுமுள்ள தமிழ் கிறிஸ்தவ மக்கள் அதைப் படித்து ஆவிக்குள்ளாக மிகுந்த தேவாசீர்வாதம் பெற்று வருகின்றனர். எல்லா துதி, கனம், மகிமை நம் ஆண்டவர் இயேசு ஒருவருக்கே உண்டாவதாக.

கடந்த தேவ எக்காளத்தில் தேவ ஒத்தாசையோடு நான் பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்து நமது தேவ எக்காளத்தில் வெளியிட்டேன். அந்தச் செய்தியை வாசித்த உங்களில் அநேகர் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றீர்கள். குறிப்பாக, கிறிஸ்தவ சகோதரிகள் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் மனைவி ஆஷா அவர்களைப் போன்று தங்கள் நீடிய பொறுமையினாலும், மிகுந்த தேவ அன்பினாலும் தங்கள் குடும்பத்தின் பிள்ளைகளை ஆண்டவருக்கென்று ஆதாயப்படுத்திக் கொள்ளும் ஒரு மேலான இரகசியத்தைக் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக.

பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை நமது இணைய தளத்தில் வாசித்த ஒருவர் அது குறித்து அரசியல் வட்டாரத்தில் மேலிடத்தில் பேசி நமது தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களை நமது இந்திய பாராளுமன்ற கிறிஸ்மஸ் கூடுகைக்கு வரவழைத்து 15/12/2009 ஆம் தேதி நடைபெற்ற அந்த விழாவில் அவர் தன்னுடைய அனுபவ சாட்சியைக் கொடுக்கச் செய்திருக்கின்றனர். நிச்சயமாக கர்த்தர் அவர்களை தமது நாம மகிமைக்கென்று அந்த நாளில் மிகுதியும் பயன்படுத்தியிருப்பார் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். அதற்காக நம்மில் சிலர் அந்த நாளிலும், அதற்கு முன்பாகவும் ஜெபித்துக் கொண்டிருந்தோம். தேவ எக்காளம் மூலமாக தர்ம் பிரகாஷ் சர்மா அவர்கள் தெரிந்து கொள்ளப்பட்டபடியால் நானும் புது டில்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளும்படியாக எனக்கும் இ-மெயில் லட்டர் அனுப்பியிருந்தார்கள். கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. ஆனால், நான் அதில் கலந்து கொள்ள இயலவில்லை. அன்று நடந்த கிறிஸ்மஸ் கூடுகையில் நமது பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் கலந்து கொண்டு கிறிஸ்மஸ் கேக் வெட்டினதையும், நிறைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நிகழ்ச்சிக்கு வந்து கலந்திருந்ததையும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டில்லியிலுள்ள கர்த்தருடைய பிள்ளைகள் நமக்குத் தகவல் தந்திருக்கின்றனர். எல்லாப் புகழ்ச்சியும் ஆண்டவருக்கே.

கடந்த தேவ எக்காளத்தில் எனது தலையங்க செய்தியில் அன்பின் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எனது பெற்ற தாயாராக நான் நினைத்து அவரால் அரவணைக்கப்பட்டு வருவதைக் குறித்து நான் உங்களுக்கு எழுதியிருந்தேன். உண்மைதான், அவர் நம்மைப் பெற்ற தாயேதான். "உன்னைப் பெற்ற தேவன்" (உபாகமம் 32 : 18) என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் வடக்கே நடைபெற்ற தேவ ஊழிய நாட்கள் முழுமையிலும் அந்த பரம தாயின் அன்பு பிரவாகித்து ஓடுவதை என்னால் நன்கு காண முடிந்தது. ஊழியம் முடித்து இங்கு திரும்பி வரும் போதும் அந்த தாயின் எல்லையற்ற அன்பு என்னை வழிநடத்திக் கொண்டு வருவதைக் கண்டு உள்ளம் கசிந்தேன்.

ஊழியம் முடித்து திரும்பி வருவதற்கான சரியான தேதி எல்லாம் முன்கூட்டியே கர்த்தருடைய ஆலோசனையின்படி அவரிடத்தில் கேட்டு ஜெபித்து நான் ரயில்வே டிக்கெட் எடுத்திருந்தேன். அந்த தேதியில் ஒரிரு நாட்கள் பிந்தி நான் இங்கு வந்து சேரும் விதத்தில் ரயில்வே டிக்கெட் நான் ரிசர்வ் பண்ணியிருந்தாலும் நான் பெரிய கஷ்டங்களில் சிக்கியிருக்க வேண்டும். எனது மூத்த மகன் கோவை ரயில் நிலையம் வந்து என்னை அழைத்துக் கொண்டு வரும் வழியிலேயே மழை தூறத் தொடங்கியது. நாங்கள் மேட்டுப்பாளையம் பட்டணத்துக்குள் வரவும் அங்கிருந்து உதகை செல்லும் மலை ரஸ்தா பாதையானது போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டு அந்த ரஸ்தாவின் குறுக்கே தடைகள் வைக்கப்பட்டு தடுக்கப்படுவதை நாங்கள் கவனித்தோம். அன்று நள்ளிரவு நாங்கள் சுகபத்திரமாக கோத்தகிரி வந்து சேர்ந்தோம். அடுத்த நாள் காலை இளைய மகனின் குடும்பம் ஊட்டியிலிருந்து கோத்தகிரி வந்து சேர்ந்தது. நோவா தனது குடும்பத்தினருடன் பேழைக்குள் பிரவேசித்த உடனேயே பெரு மழை கொட்டத் தொடங்கியது போல பிள்ளைகள் இருவரின் குடும்பங்களும் இங்கு வந்து சேர்ந்த உடன் பயங்கரமான காற்றுடன் பலத்த மழை இரவும் பகலும் பெய்யத் தொடங்கியது.

நீலகிரி மலையே அழிந்து போகும் என்ற அளவிற்கு மழை கொட்டினது. நீலகிரி மலைகளை ஒன்றிணைக்கும் அனைத்து ரஸ்தாக்களும் முற்றுமாகத் துண்டிக்கப்பட்டு அது ஒரு தனித்த தீவாக மாறியது. வரலாறு காணாத அந்த மழையின் காரணமாக வீடுகள் அப்படியே இடிந்து விழுந்து அநேகர் மாண்டு மடிந்தனர். பொருட் சேதம் பல கோடியாகும். மழையால் அழிந்து போன ரஸ்தாக்களை முற்றுமாக சீர்ப்படுத்த இன்னும் சில மாதங்கள் ஆகும் என்று சொல்லுகின்றனர். செய்தி தாட்களில் நீங்கள் அந்த அழிவின் செய்திகளை எல்லாம் வாசித்திருப்பீர்கள் அது சம்பந்தமான படங்களையும் பார்த்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

வட இந்திய தேவ ஊழியம் முடித்து மிகுந்த களைப்புடனும், சரீர பெலவீனங்களோடும் வந்து சேர்ந்திருந்த நான் ஒரே ஒரு நாள் இடைவெளிக்குப் பின்னர் திரும்பவும் சமயலறை சென்று எனது ஆகாரங்களை நானே கவனிக்க வேண்டுமே என்ற கவலையின் எண்ணத்தில் இருந்த நேரத்தில் அன்பின் ஆண்டவர் அடுத்து வந்த 12 நாட்களுக்கு பிள்ளைகள் என்னைவிட்டு சற்றும் அகலாமல் என்னோடு கூட இருந்து எனது ஆகாரங்களை நேரத்திற்கு நேரம் தயார் செய்து தந்து என்னை அருமையாக கவனித்துக் கொள்ள ஒழுங்கு செய்துவிட்டார். எந்த ஒரு சமயத்திலும் பிள்ளைகள் இப்படி என்னோடு இத்தனை நீண்ட நாட்கள் தங்கியிருந்து என்னைக் கவனிக்கவில்லை. ஆம், அரசாங்கம் நீலகிரி பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக ஒரு நாள் இரு நாள் என்று நீடித்து 12 நாட்கள் விடுமுறை அளித்திருந்தது. மிகவும் பெலவீனமாக காணப்பட்ட தனது பிள்ளைக்கு அந்த பரம தாய் 12 நாட்கள் தக்க உணவளித்து போஷிக்க அற்புதமாக ஏற்பாடு செய்துவிட்டார்கள். அந்த பரலோக தாய் அன்புக்கு என்ன ஈட்டைச் செலுத்த முடியும்! எனது பிள்ளைகள் கோத்தகிரி வரவும் உதகை - கோத்தகிரி, உதகை - குன்னூர், உதகை - மேட்டுப்பாளையம் ரஸ்தா மார்க்கங்கள் எல்லாம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டுவிட்டன. ஆண்டவருடைய வழிநடத்துதல்களின் மாட்சியை என்னவென்று சொல்லுவது!

கடந்த தேவ எக்காளத்தில் கிறிஸ்தவ தொலைக்காட்சிகளையும் கூட நீங்கள் பார்க்க வேண்டாம் என்றும் அந்த விலையேறப்பெற்ற நேரத்தை ஆண்டவருடைய பாதங்களில் ஜெபத்தில் செலவிடுங்கள் என்றும் நான் உங்களை அன்பாகக் கேட்டுக் கொண்டேன். அதின்படி தேவப் பிள்ளைகளாகிய உங்களில் சிலர் கேபிள் டி.வி. களைக் கூட துண்டித்து அந்தக்காட்சிகளையும் பாராமல் உங்களை விலக்கிக் காத்துக் கொண்டதற்காக ஆண்டவருக்கு துதி ஏறெடுக்கின்றேன்.

"வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொலைக்காட்சியில் ஒரு தேவ ஊழியருடைய செய்தியை நான் தவறாது கட்டாயம் கேட்டுவிடுவேன். தேவ எக்காளத்தில் உங்கள் எழுத்தை வாசித்த பின்னர் இந்த வாரம் அதையும் பாராமல் எனது வேதாகமத்தை என்னுடன் எடுத்துச் சென்று அந்த நேரத்தில் முழங்காலில் நின்றேன்" என்று சென்னையிலிருந்து ஒரு தேவ பிள்ளை எனக்கு தகவல் கொடுத்தார்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. இந்த ஞானமான செயல்களுக்காக நீங்கள் ஆண்டவரில் களிகூரும் ஒரு நாள் கட்டாயம் வந்தே தீரும். இந்த நாட்களில் நான் இது குறித்து எழுதும் காரியங்கள் உங்களில் பலருக்கு சோதோம், கொமோரா பட்டணங்களை தேவன் அக்கினியால் தகனிக்கப் போகின்றார் என்று லோத்து அவனது மருமக்கள்மாரை எச்சரித்தபோது அந்த செயல் அவர்களை பரியாசம் பண்ணுகிறது போலத் தெரிந்ததைப் போல உங்களுக்கும் தெரியலாம். ஆனால், ஒரு நாள் வரும், அப்பொழுது, கர்த்தருடைய ஆவியானவரின் தூண்டுதலால் எழுதிய இந்த ஏழைப் பரதேசியின் எழுத்துக்கள் எத்தனை உண்மையும், சத்தியமுமாக இருந்தன என்பதை நீங்கள் கண்டு கொள்ளுவீர்கள். இதில் காண்கின்ற சத்தியங்களின்படி நீங்கள் நடந்தால் உங்கள் வாழ்வின் முடிவு மிகவும் ஆசீர்வாதமாக இருக்கும்.

மதுரையில் ஜோசப் ஐயா என்ற ஒரு விருத்தாப்பிய பரிசுத்தவான் இருந்தார்கள். தேவ எக்காளம் பத்திரிக்கையை அதிகமாக நேசித்த ஒரு தேவ பிள்ளை அவர்கள். தனது பிள்ளைகள், இனத்தவருக்கெல்லாம் தேவ எக்காளத்தை அறிமுகப்படுத்தி அதை வாங்கச் செய்து அதைப் படிக்க வைத்தார்கள். தன்னளவில் அதை பல்லாண்டு காலமாக வாங்கி வாசித்து பிரதிகளை புத்தக ரூபமாக பைண்ட் செய்து அவைகளை திரும்ப திரும்ப வாசித்து மகிழ்ந்தார்கள். தேவ எக்காளத்தில் வரும் பக்த சிரோன்மணிகளின் வாழ்க்கையின்படி வாழ்ந்து அதின்படி ஜீவித்தார்கள். அந்த பரிசுத்தவானின் மரணத்தைக் குறித்து அவர்களுடைய மகள் பியூலா அவர்கள் இவ்வாறு என்னிடம் சொன்னார்கள். "அப்பாவின் மரணம் மிகவும் அருமையானது. மரிப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் மருமகன் சாலொமோனிடம் "சாலொமோன் நேற்று இரவு முழுவதும் உனது வாத்தியக் கருவிகளை வாசித்துக் கொண்டிருந்தாயோ? இரவு முழுவதும் மதுரமான வாத்திய இசைக்கருவிகளின் ஓசைகள் என் காதில் கேட்டவண்ணமாக இருந்தன" என்றார்கள். (மருமகன் வாத்தியக் கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்) "மாமா, நான் வாத்தியம் எதுவும் கடந்த இரவில் வாசிக்கவில்லை" என்று பதிற் கூறினார்கள். மரணக்கட்டிலில் படுத்திருந்தவர்களாக ஜீவன் பிரியும் கடைசி நேரம் ஐயா அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்தவர்களாக "இதோ மகிமையின் இராஜா" என்ற ஆரவார வார்த்தையோடு தன் ஓட்டத்தை முடித்தார்கள்" என்று அவர்களுடைய மகள் சொன்னார்கள். எத்தனை பரவசமான சாட்சி பாருங்கள்! நமது கிறிஸ்தவ வாழ்வின் பரிசுத்த ஓட்டம் இந்தவண்ணமாகவே கட்டாயம் முடிவு பெறவேண்டும். "நீதிமான் மரிப்பது போல நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல இருப்பதாக" (எண் 23 : 10) அதற்கான கிருபைகளை ஆண்டவர் தாமே உங்களுக்குத் தந்தருள்வாராக.

இந்த தேவ எக்காள இதழ் உங்கள் கரங்களை வந்தடையும் போது அநேகமாக நீங்கள் புதிய ஆண்டுக்குள் கடந்து சென்றிருப்பீர்கள். உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன். இந்த 2010 ஆம் ஆண்டு உங்களுக்கு எல்லா தேவ ஆசீர்வாதமும், தேவ சமாதானமும் நிறைந்த பாக்கிய ஆண்டாக இருக்க அன்பின் பரம தகப்பன் தயைபுரிவாராக. இந்தப் புதிய ஆண்டு கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியின் ஆண்டாக இருக்க வேண்டுமானால் நாம் கர்த்தரோடிருக்க வேண்டும். "நீங்கள் கர்த்தரோடிருந்தால் அவர் உங்களோடிருப்பார்" (2 நாளா 15 : 2) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகின்றது. ஆண்டவர் நம்மோடு கூட இருக்கும்போது நமது வாழ்வின் காரியங்களை எல்லாம் அவரே பொறுப்பெடுத்து அருமையாக நடத்துவார். "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" (சங் 138 : 8) என்று கர்த்தருடைய வார்த்தையில் நாம் வாசிக்கின்றோம். "எங்கள் கிரியைகளை எல்லாம் எங்களுக்காக நடத்தி வருகிறவர் நீரே" (ஏசாயா 26 : 12) என்றும் தேவ வார்த்தை பேசுகின்றது.

ஒவ்வொரு நாளையும் உங்களால் முடிந்த அளவு அதிகமான ஜெபமணி நேரங்களோடு தரை மட்டாக தேவ சமூகத்தில் உங்களைத் தாழ்த்தி ஆரம்பியுங்கள். உலகப் பிரகாரமான அலுவல்களில் இருக்கும் மக்களுக்கு பகற்காலங்களில் தனிமையாக ஆண்டவருடைய பாதங்களில் அமர்வது கடினமான காரியமாகும். ஆனால், இராக்காலங்களில், எப்படியாவது எழும்பி ஜெபியுங்கள். ஆண்டவர் அதற்கான கிருபைகளை உங்களுக்குத் தந்து இரவில் உங்களை எழுப்பும்படியாக அவரை நோக்கிக் கெஞ்சுங்கள். கர்த்தர் உங்களுக்குக் கட்டாயம் உதவி செய்வார். உங்கள் சுய பெலன், முயற்சிகள், பிரயாசங்கள் எதுவும் அதில் நடக்காது. ஆகையால்தான் சங்கீதக்காரர் "என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை" (சங் 44 : 6) என்று சொன்னார். இராக்காலங்களில் ஜெபிக்க எழும்ப கடிகாரத்தில் நாம் அலாரம் வைத்து படுக்க வேண்டிய அவசியமில்லை. "அப்பா, இத்தனை மணிக்கு ஜெபிக்க என்னை எழுப்பி விடுங்கள்" என்று ஆண்டவரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு படுங்கள். அது ஒன்றே போதுமானது. ஆண்டவர் உங்கள் விலாவைத் தட்டி சரியான நேரத்திற்கு எழுப்பி உங்களை அருமையாக ஜெபிக்க வைத்து விடுவார். அவர் உங்களை ஜெபிக்க எழுப்பி நீங்கள் ஜெபிக்கும் ஜெபம் மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கும்.

 

காலம் ஆதாயப்படுத்து
உனது வாழ்வு கடலின் அலையில் துரும்பு

நமக்கு முன்னாலுள்ள முடிவில்லாத நித்தியம் என்ற மாபெரும் சமுத்திரத்தில் நமது வாழ்நாட்காலம் என்பது நாம் நமது சிறுவிரலின் நுனியால் அந்த சமுத்திர ஜலத்தைத் தொடும் போது அந்த விரலின் நுனியில் கசியும் ஒரு சிறு துளி நீர் மட்டுமேதான். அந்த சிறு துளி நீர் ஒருக்கால் 70 அல்லது 80 வருடங்களாக இன்னும் கூடிப்போனால் 100 வருடங்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். ஆனால் முழுச் சமுத்திரத்தின் நீரின் அளவு அதற்குத்தக்கதான கால எண்ணிக்கை கணக்கில் அடங்காத ஒன்றாகும். அந்த கணக்கிட முடியாத முடிவில்லாத நித்தியத்தை ஆண்டவர் இயேசுவோடு அவர் தமது ஜனத்துக்காக உலகம் உண்டானது முதல் ஆயத்தம் செய்து வைத்துள்ள பரலோகில் செலவிட்டே ஆகவேண்டும். தேவன் நமக்கு கிருபையாகக் கொடுத்துள்ள நமது மிகக்குறுகிய வாழ்நாட்காலம் அந்த பேரின்ப வாழ்க்கைக்காக நம்மைப் பூரணமாக ஆயத்தப்படுத்திக் கொள்ளுவதற்கேயன்றி வேறொன்றிற்கும் அல்ல. ஆகவேதான் அருமை இரட்சகர் "அழிந்து போகிற போஜனத்திற்காக அல்ல, நித்திய ஜீவன் வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்" (மத் 6 : 27) என்று சொன்னார்.

இந்த பரம சத்தியத்தை மக்கள் உணராமல் இந்த உலக வாழ்க்கையே தங்களுக்கு என்றும் நிரந்தரமான ஒன்று என்று தவறாக எண்ணி உலகத்தின் மாயைகளை நாடித் தேடி தாகத்தால் நாவறண்டவன் கானல் நீரை நிஜமான நீர் என்று எண்ணி அதில் தனது தாகம் தீர்க்க ஓடி, ஓடி இறுதியில் மாண்டு மடிந்தது போல மடிந்து போகின்றனர். எனவேதான் தாவீது ராஜா "மாயையைப் பாராதபடிக்கு நீர் என் கண்களை விலக்கி உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்" (சங் 119 : 37) என்று கதறினார்.

தந்திர சாத்தான் இது விஷயத்தில் மக்களின் மனக் கண்களைக் குருடாக்கிவிட்டான். மனிதனை சடுதியாக சந்திக்கப்போகும் மரணம், முடிவில்லாத நித்தியம், நித்திய நரகம் போன்ற மகா முக்கியமான சத்தியங்களை எந்த ஒரு நிலையிலும் கருத்தோடு சிந்தித்து தேவனிடத்தில் மனந்திரும்பி விடாதபடி சாத்தான் இராப் பகலாக மக்களைக் கண்காணித்து வருகின்றான். அன்பின் ஆண்டவர் தமது தாசனாம் பவுல் அப்போஸ்தலனை தமது ஊழியத்தின் பாதையில் அனுப்புகின்றபோது "................அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும் பொருட்டு இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன்" (அப் 26 : 18) என்று கூறுவதை நாம் கவனிக்கின்றோம். எருசலேம் மாந்தரின் இரட்சிப்பின் காரியமாக அந்த நகரத்தைப் பார்த்து அதற்காக கண்ணீர்விட்டழுது................... இப்பொழுது அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது (லூக்கா 19 : 41-42) என்று ஆண்டவர் சொல்லுவதிலிருந்து சாத்தான் அந்த இரட்சிப்பின் காரியத்தை எருசலேம் மக்கள் கண்டு கொள்ளவிடாதபடி அவர்கள் கண்களை மறைத்துப் போட்டான் என்று நாம் பார்க்கின்றோம்.

எந்த ஒரு நிலையிலும் நமது ஆபத்தான நிலை எண்ணி ஆண்டவரை அண்டி மனந்திரும்பி விடாதபடி நம்மை கண்ணும் கருத்துமாக கண்காணித்து, நமது மனந்திரும்பக்கூடிய பொன்னான சந்தர்ப்பங்களை எல்லாம் நம்மைக் கொண்டு தட்டிக் கழிக்க வைத்து கடைசியாக நமது மரணம் நெருங்கி வரும் கடைசி நேரத்தில் "சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள்" (நியா 16 : 20) என்று சொல்லும் வேளையில் நாம் ஆயத்தமற்ற, நஷ்டப்பட்ட நிலையில் மரணத்தைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியின்றி செய்து விடுவான். மனுஷ கொலை பாதகனான அவன் ஈவிரக்கமற்ற கொடியவன். 2 ஆம் உலகப்போரின் சமயத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் என்ற கொடிய சர்வாதிகாரியைக் கொண்டு 13 முதல் 18 மில்லியன் (180 இலட்சம்) எண்ணிக்கை அளவுக்கு அப்பாவி யூத மக்களை பெரும் ரசாயன உலைக்களங்களில் வைத்து எரித்து சாம்பாலாக்கிவிட்டான். கீவ் என்ற இடத்திற்குச் சமீபமாக இருந்த ரசாயன உலைக்களத்தில் மட்டும் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையான எண்ணிக்கையில் யூத மக்களை இரண்டே நாட்களில் எரித்துப் பொசுக்கி சாம்பலாக்கினான். அந்த யூத மக்கள் உலைக்களத்திற்குச் செல்லுவதற்கு முன்பு அவர்களை ஒட்டு மொத்தமாக சின்னச் சின்ன அறைகளில் மூச்சுத் திணறிச் சாகத்தக்கதாக அந்தக் காட்டு மிருகம் அவர்களை ஒருவர் மேல் ஒருவராக அடுக்கினான். அந்த கொடிய தீச்செயலை செய்தது ஹிட்லராயினும் அதற்கு ஆலோசனை கொடுத்து காரியத்தை செய்து முடித்தவன் சாத்தானாவான். சாத்தான் எத்தனை குரூபி பாருங்கள்! அவன் மனுஷ கொலைபாதகன்!

தங்கள் வாழ் நாட் காலத்தில் ஆண்டவர் இயேசுவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்று, இரட்சிப்பின் சந்தோஷத்தையும், மறுபிறப்பின் நிச்சயத்தையும் பெற்று தாங்கள் பெற்ற அந்த இரட்சிப்பின் சந்தோசத்தை பத்திரமாக கடைசி வரை தேவ பெலத்தால் பாதுகாத்து வாழ்க்கை நடத்தாதவர்கள், மற்றும் வாழ்க்கையில் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளாதவர்களின் மரணக்கட்டில் மகா துயரமானது ஆகும். இப்படிப்பட்ட மக்கள் தனிமையில் நித்திரை கொள்ள அஞ்சி நடுங்குவார்கள். ஒரு கிறிஸ்தவ சகோதரனை எனக்குத் தெரியும். தனது வாழ்க்கையில் கர்த்தரைத் தேடாமல் மதுவுக்கு அடிமைப்பட்டு, பெருமையிலும், அகங்காரத்திலும் வாழ்ந்தவர். தனது சக ஆசிரியர்களின் வாழ்க்கையில் மண்ணைப் போட்டு அவர்களை நாசம் செய்து வாழ்ந்தவர். பணி ஓய்வு பெற்று தனது மனைவி மரணமடையவும் அவர் முற்றும் தனிமைக்கு தள்ளப்பட்டார். இப்பொழுது அவரால் தனிமையில் இருக்க முடியவில்லை. பகலின் 12 மணி நேரமும், அவர் தூங்கிக் கொண்டிருக்கும் இரவு முழுவதும் தொலைக்காட்சி பெட்டியின் நிகழ்ச்சிகளின் சத்தங்கள் அவருடைய காதுகளில் பலமாக விழுந்து கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் அவருக்குப் பணிவிடை செய்யும் கிறிஸ்தவ பணிப் பெண் தொலைக்காட்சியில் கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை வைத்தாலும், அவர் எழுந்து போய் உடனே அதை நிறுத்திவிட்டு உலக நிகழ்ச்சிகளை வைத்துவிடுவார். அந்த சத்தங்களின் நடுவில் படுத்தால்தான் அவருக்கு தூக்கம் வரும். தனது வாழ்வு காலத்தில் தன் ஆண்டவரை தன்னைவிட்டுத் துரத்திவிட்ட அந்த இடத்திற்கு சாத்தான் வந்து தனது கொடியை ஏற்றி அங்கு உறுதியாக நின்று கொண்டான்.

மனந்திரும்பாத சில விருத்தாப்பிய கிறிஸ்தவ மக்களுக்கு தூக்கம் என்பது ஒரு கண்ணுக்கும் வருவதில்லை. "ஐயோ, பிசாசு வருகின்றானே, என்னைத் துரத்துகின்றானே, என் குரல் வளையை நெறிக்கின்றானே" என்று நள்ளிரவு நேரங்களில் பயந்து அலறுகின்றார்கள். ஒரு கிறிஸ்தவ சகோதரன் தனது மரணக்கட்டிலில் அடிக்கடி சத்துருவாம் பிசாசைக் கடிந்தவண்ணமாகவே இருந்ததாக அவர்களுடைய மனைவி என்னிடம் சொன்னார்கள்.

மற்றொரு கிறிஸ்தவ மனிதரை சாத்தான் அவர்களது மரண நேரம் துரத்திக் கொண்டே ஓடியிருக்கின்றான். "ஐயோ, சாத்தான் என்னை விரட்டுகின்றானே" என்று தான் சந்திக்கும் மக்களிடம் சொல்லிக் கொண்டே அந்த இரவு நேரம் ஓடி, ஓடி கடைசியாக ஓரிடத்தில் விழுந்து மரணம் அடைந்தார். எத்தனை கொடூரம் பாருங்கள்!

இரத்தசாட்சியாக மரித்த ஹக் லாட்டிமர் என்ற பரிசுத்தவான் சாத்தானுடைய குரூர குணம் குறித்து ஒரு உண்மை நிகழ்ச்சியை சொல்லுவார். அவருக்கு தெரிந்த பரிசுத்த பக்தன் ஒருவருடைய மரணக்கட்டிலின் போது அவர் தன்னுடைய ஆவியை தேவ தூதருக்கு ஒப்புவிக்க காத்திருக்கும் அந்தக் கடைசி வேளையில் அவர் ஆச்சரியத்தால் திகைப்படையும் வண்ணமாக சாத்தானாம் பிசாசு அவருடைய ஆவியை கொண்டு செல்ல அவருக்கு முன்பாக வந்து நின்றானாம். ஆவிக்குள்ளாக முதிர்ச்சி பெற்ற அந்த தேவ பக்தன் சாத்தானுடைய தந்திரம் அறிந்து அவனை கடிந்து கொண்டு பலத்த குரலில் விரட்டி அடித்தாராம். சாத்தான் மறையவும் தேவ தூதர் கூட்டம் அறையை வந்து சூழ்ந்து கொண்டார்களாம். அதற்கப்பால், அவருடைய மரணம் மிகுந்த களிகூருதலாக இருந்திருக்கின்றது. அந்தக் கடைசி நேரத்தில் கூட சாத்தான் எந்த ஒரு மனச்சாட்சியுமில்லாமல் தனது தந்திரத்தால் காரியம் சாதிக்கப் பார்த்திருக்கின்றான் பாருங்கள்! உண்மையில் அவன் மகா தந்திரசாலி, கற்பனை பண்ணி பார்க்க முடியாத அளவிற்கு அவன் பஞ்சமா பாதகன்.

"தேவ கோபாக்கினைப் பாத்திரங்களின் நித்திய பயங்கர வாசஸ்தலம்" என்ற தலைப்பில் இந்த இதழில் காணப்படும் மொழிபெயர்ப்புச் செய்தியை நீங்கள் கட்டாயம் ஜெபத்தோடு வாசியுங்கள். தங்கள் ஆத்துமாவை நஷ்டப்படுத்திக் கொள்ளுவோர் யாராயினும் இறுதியாக அவர்கள் சென்றடையும் இடம் அதுவேதான். இவைகள் எல்லாம் ஏதோ கட்டுக்கதையோ அல்லது கற்பனையோ அல்ல. உங்களைப் பூச்சாண்டி காட்டி உங்களைப் பயமுறுத்தும் பொய்யான வார்த்தைகள் அல்ல. உண்மையும், சத்தியமும், நீங்கள் நேருக்கு நேர் மிக விரைவில் தத் ரூபமாக சந்திக்கப் போகும் நிஜமான காரியமாகும். நம் ஆண்டவர் உலகில் உயிரோடிருந்த நாட்களில் எல்லாம் இந்தக் காரியங்களைத்தான் மக்களுக்குப் பேசி அவர்களை அடிக்கடி எச்சரித்து வந்தார். "உன் கண் உனக்கு இடறலுண்டாக்கினால் அதைப் பிடுங்கி எறிந்து போடு" "உனது வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால் அதைத் தரித்து எறிந்து போடு" "உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்" என்று அத்தனை கண்டிப்பாக அவர் பேசினார். இந்த நரகாக்கினையிலிருந்து நீயும், நானும் தப்பிக்கொள்ளத்தான் அவர் கெத்சமனே பூங்காவில் இரத்த வேர்வை சிந்தினார். தனது மூன்றரை லிட்டர் பரிசுத்த இரத்தத்தை பிலாத்துவின் அரண்மனையிலும், கபாலஸ்தலத்தில் சிலுவையிலும் வடித்துக்கொடுத்ததும் அதே காரியத்தை மனதில் கொண்டுதான்.

வேத பண்டிதர்கள் அவரை நரகப் பிரசங்கியார் (Hell Fire Preacher) என்றே அழைக்கின்றனர். நரகத்தைக் குறித்து 56 தடவைகளிலும், மோட்சத்தைக் குறித்து வெறும் 24 தடவைகள் மட்டுமே அவர் கூறியிருப்பதாகச் சொல்லுப்படுகின்றது. காரியம் இத்தனை பயங்கரமானதாகவிருக்கும்போது, தேவ ஆலோசனையில் ஒன்றையும் மறைத்து வைக்காமல் (அப் 20 : 26) தேவனுடைய ஜனத்துக்கு நீதியைப் பிரசங்கிக்க வேண்டிய நம் நடுவே உள்ள ஆசீர்வாத பிரசங்கிமார்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை கூட மேடையில் நின்று நரக அக்கினி குறித்து பிரசங்கித்திருப்பார்களா என்பது முற்றும் சந்தேகமான காரியமே! உண்மைதான், கானல் நீர்க் காட்சியாம் இவ்வுலக மாயாபுரிச் சந்தை வாழ்க்கை, நினையாத மரணம், முடிவில்லாத நித்தியம், நரகம் போன்ற காரியங்கள் குறித்து அவர்கள் தங்கள் மேடைகளில் பேசும் பட்சத்தில் அவர்கள் கூட்டத்திற்கு யார் வந்து அவர்களுடைய செய்தியைக் கேட்பார்கள்? காணிக்கை வசூல் அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? அவர்களுக்குப் போய்ச் சேரவேண்டிய புகழ்ச்சிகள், ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள் எல்லாம் தங்களுக்கு செட்டைகளை உண்டுபண்ணிக் கொண்டு ஆகாய மார்க்கமாக தங்கள் மட்டாகப் பறந்து போய்விடுமே! ஆனால் பூர்வ காலத்து மெய் பரிசுத்த பக்தர்கள் யாவரும் அதை மட்டுமேதான் தங்கள் சத்தத்தை எக்காளத்தைப் போல உயர்த்தி கர்த்தருடைய ஜனத்துக்குப் பிரசங்கித்தார்கள். யோனத்தான் எட்வர்ட்ஸ், ஜியார்ஜ் ஒயிட்ஃபீல்ட், டிஎல்.மூடி, ஜாண் பன்னியன், இரட்சண்ய சேனையைத் தோற்றுவித்த வில்லியம் பூத் போன்ற திரள் திரளான பக்த சிரோன்மணிகள், இரத்தசாட்சிகள் அனைவரும் அதையேதான் பேசி மக்களை எச்சரித்தனர்.

 

v¥bghGJ« b#g«g©Â ÉʤâU§fŸ

(The spirit of prayer is more precious than treasures of gold and silver) "ஒரு தேவ பிள்ளையின் ஜெப ஆவியானது விலையேறப்பெற்ற பொன் வெள்ளி பொக்கிஷங்களைப் பார்க்கிலும் மா சிறந்தது" என்றும் (Pray often, for prayer is a shield to the soul, a sacrifice to God and a scourge to Satan).. "அடிக்கடி ஜெபம்பண்ணு, அந்த ஜெபமானது நமது ஆத்துமாவின் பாதுகாப்பு கேடயம், நமது தேவனுக்கு நாம் ஏறெடுக்கும் தகன பலி அது, நமது ஆத்தும அழிம்பனாகிய சாத்தானுக்கு நாம் கொடுக்கும் பலத்த கசை அடி அது" என்றார் வேதாகமத்திற்கு அடுத்த ஸ்தானத்தில் வைத்துப் போற்றிப் புகழ்ந்து கிறிஸ்தவ உலகத்தால் ஆர்வத்தோடு வாசிக்கப்படும் "மோட்ச பிரயாணம்" என்ற பரிசுத்த பிரபந்தத்தை எழுதிய ஜாண் பன்னியன் என்ற தேவ பக்தன்.

நமது பூவுலக கிறிஸ்தவ வாழ்க்கை வெற்றியோடு முடிக்கப்பட்டு பரலோகில் அது ஜெயகெம்பீரமாகத் தொடர வேண்டுமானால் நமது ஜெப வாழ்க்கை இரட்சகர் இயேசுவுக்குள் ஆழமாக வேர் ஊன்றியிருக்க வேண்டும். எந்த ஒரு கர்த்தருடைய ஊழியனும் கர்த்தரால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றான் என்றால் அதின் முழுமையான இரகசியம் அவன் கர்த்தரோடு மேற்கொண்டிருந்த அவனது ஜெப வாழ்க்கை மட்டுமே என்பதை அவனுடைய வாழ்க்கைச் சரித்திரத்தை வாசிக்கும் போது நாம் இலகுவாகக் கண்டு கொள்ளலாம்.

தன்னைக் கண்டவர்கள் யாவரையும் தன் இரட்சா பெருமானண்டை கவர்ச்சித்து இழுத்த பக்த சிரோன்மணி சாதுசுந்தர்சிங் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை எடுத்துப் படித்துப் பாருங்கள். அவரது முழு வாழ்வுமே ஜெபத்திலேயே நகர்ந்து கொண்டிருந்தது என்று நாம் திட்டமாகச் சொல்லலாம். இரவும், பகலும் அவர் அநேகமாக ஜெப நிலையிலேயே காணப்பட்டார். இரவு நேரங்கள் வந்து விட்டால் ஒன்று தனது அறையில் முழங்கால்களில் நிற்பார் அல்லது அருகிலுள்ள இமயமலை கானகத்தின் பாறை ஒன்றில் தன்னுடைய முழங்கால்களை முடக்கிவிடுவார். அந்த ஜெப நேரங்களில் நடக்கின்ற பரவசமான பரலோக ஆனந்த அனுபவங்கள் எத்தனை எத்தனையோ உண்டு. அவைகளில் ஒரு சில மட்டுமே நமக்கு கிடைத்திருக்கின்றன. கடித்துப் பட்சிக்கும் வேங்கைப் புலி ஒன்று கானகத்திலிருந்து புறப்பட்டு வந்து அவர் வளர்க்கின்ற செல்ல நாயாக அவருடைய பாதங்களில் அமைதியாகக் கொஞ்ச நேரம் படுத்துக் கிடக்கின்றது. பக்தனின் பரிசுத்த கரங்கள் அதைத் தடவிக் கொடுக்கவும் சற்று நேரத்தில் அது மெதுவாக எழுந்து நகர்ந்து இருண்ட கானகத்துக்குள் நழுவி மறைகின்றது.

இரவின் மயான அமைதி வேளையில் தனக்கு முன்னாலுள்ள பட்டணத்தினைப் பார்த்து தனது பரம எஜமானர் எருசலேமைப் பார்த்து கண்ணீர் விட்டு ஜெபித்தவண்ணமாக சுந்தர்சிங் அதைப் பார்த்து ஜெபித்துக் கொண்டிருக்கின்றார். அந்த வேளை கரத்தில் பிச்சைப் பாத்திரத்தினை ஏந்தியவண்ணமாக பிச்சைக்காரன் ஒருவன் அவர் முன் தோன்றி அவரிடம் பிச்சைக் கேட்கின்றான். சுந்தரிடம் அவனுக்குக் கொடுக்க கரத்தில் எதுவுமே கிடையாது. "சகோதரனே, நானும் உன்னைப் போல ஒரு பிச்சைக்காரன்தான். உனக்குக் கொடுக்க என் வசம் எதுவும் கிடையாது. அதோ நமக்கு முன்னால் தெரிகின்ற பட்டணத்துக்குள் சென்று அங்கு பிச்சை கேட்டுப் பார், மக்கள் உனக்கு ஏதாவது கொடுப்பார்கள்" என்கின்றார். அந்த வார்த்தையைக் கேட்கவும் அந்தப் பிச்சைக்காரன் உடனே மறைந்து விடுகின்றான். தன்னிடத்தில் பிச்சைக் கேட்க வந்த நபர் யார் என்பதை சுந்தர் அறிந்து அழுகின்றார். ஆம், அவருடைய ஆண்டவரே ஏழ்மைக் கோலம் பூண்டு அவரண்டை வந்து பிச்சைக் கேட்ட பிச்சைக்காரன் என்பதை அவர் மிகுந்த ஆச்சரியத்துடன் காண்கின்றார்.

இப்படி சாதுசுந்தர்சிங்குடைய இராக்கால ஜெப மணி வேளைகளில் அதிசயங்கள், அற்புதங்கள் ஒரு பக்கம் நிகழ்கின்றன. பகற்கால நேரங்களிலும் ஜெபத்திற்கு எப்பொழுது நேரம் கிடைக்காது என்று கதறும் அவருக்கு சுவையான உணவு படைக்கப்பட்டிருக்கும் போஜன பந்தி மேஜையில் நேரம் கண்டு பிடித்து அதை அப்படியே வைத்துவிட்டு தனது பரம பிதாவின் சமூகத்தில் முழங்காலூன்றி அவர் முகம் நோக்கிப் பார்க்க மெதுவாக எழுந்து நகருகின்றார். அவர் அழைக்கப்பட்டிருந்தது அரச அரண்மனை, அவருக்கு முன்னால் இருந்தது ராஜ போஜனம். அதைக் குறித்தெல்லாம் அவருக்கு அக்கரை கிடையாது. தன் பரம தந்தையோடு கொஞ்ச நேரம் பேசி அளாவிட வேண்டும். என்னே அவருடைய ஜெபத்தின் வாஞ்சை பாருங்கள்!

உங்கள் பாவ அறிக்கை, உங்கள் மனந்திரும்புதல் உங்கள் வாழ்வில் மெய்யாகவே நடந்திருந்து நீங்கள் உண்மையாகவே மறுபிறப்பின் பரிசுத்த அனுபவத்தை உடையவர்களாயிருப்பீர்களானால் நீங்கள் எப்பொழுதும் ஆண்டவருடைய பரிசுத்த பாதங்களில் ஜெபத்தில் தரித்திருப்பதையே அதிகமாக வாஞ்சித்துக் கதறுவீர்கள். உங்கள் முழங்கால்களில் மோட்சம் ஆரம்பித்திருக்கும். "மானிட வாழ்வின் பிரதான நோக்கம் கர்த்தரை மகிமைப்படுத்துவதும் அவரை என்றுமாக ருசித்துப் புசித்து ஆனந்திப்பதுமே" (Man's chief end is to glorify God and enjoy him forever) என்ற பூர்வ பரிசுத்த பக்தர்களின் வாக்கின்படி ஆண்டவரில் களிகூர்ந்து மகிழ்ந்து கொண்டிருப்பீர்கள். உலகம் அளிக்கும் எந்த ஒரு இன்பங்களும் ஆண்டவருடைய பரிசுத்த பாதங்கள் அளிக்கும் பரிபூரண ஆனந்தத்தையும், அவரது வலது பாரிசம் அளிக்கும் நித்திய பேரின்பத்தையும் உங்களைவிட்டுத் தடுத்து நிறுத்த இயலாது.

இன்று நீங்கள் கிறிஸ்தவ தொலைக்காட்சிகளையும், செய்தி தாட்களையும், உலகம் அளிக்கும் கிரிக்கெட் போன்ற விளையாட்டு நிகழ்ச்சிகளையும் பார்த்து உங்கள் விலைமதிப்பிடமுடியாத நேரத்தை பாழாக்குகின்றீர்கள் என்றால் அதின் ஒரே காரணம் உங்கள் இரட்சிப்பு உண்மையானதொன்றல்ல. அதில் துளிதானும் சந்தேகமே கிடையாது. நள்ளிரவைத் தாண்டிய நேரம் வரை ஒரு கிறிஸ்தவ வாலிபன் தொலைக்காட்சியில் கிரிக்கெட் நிகழ்ச்சியைப் பார்த்து மிகுந்த பரபரப்பான மன அழுத்தத்தோடு படுக்கைக்குச் செல்லுகின்றான். படுத்த சற்று நேரத்திற்கெல்லாம் மாரடைப்பு அவனுக்கு வருகின்றது. அப்படியே அவன் மரிக்கின்றான். அவன் எங்கே சென்றிருப்பான் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? இப்படி கிரிக்கெட் விளையாட்டு நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்த நிலையில் சடுதியாக மரணம் அடைந்த கிறிஸ்தவர்கள் எவ்வளவோ பேர்கள் உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். தங்கள் எஜமானருடைய வரவுக்கு அவர்கள் காத்திராமல் (லூக்கா 12 : 36) தங்கள் அபிமான கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் அடிக்கும் சதத்திற்கும், பவுண்டரிகளுக்கும் வெறிபிடித்தவர்களாக துடிதுடித்துக் காத்திருந்த அவர்கள் இறுதியில் எங்கே சென்றிருப்பார்கள் என்பதை எவரும் இலகுவாகச் சொல்லிவிடலாம். தேவனுடைய வார்த்தையும் அதையே உறுதிப்படுத்தி நிற்கின்றது (லூக்கா 12 : 46)

தேவ ஜனமே, எப்பொழுதும் விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். உங்கள் வாழ்வின் ஒரே குறிக்கோள் உங்கள் பூவுலக ஓட்டத்தை வெற்றியோடு ஓடி முடித்து ஜீவ கிரீடத்தைப் பெற்றுக் கொள்ளுவதாக இருப்பதாக. உலகத்தையும் நேசித்து அது அளிக்கும் இன்பங்களையும் ஆசை தீர அனுபவித்து ஆனந்தித்துக் கொண்டு அதே சமயம் தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் செய்து வைத்துள்ள நித்தியானந்த மோட்ச பாக்கியங்களையும் நான் அனுபவிப்பேன் என்பது "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்ட என்றும் நிறைவேறக்கூடாத கற்பனைக் கதையில்" முடிவடையும்.

பூர்வ காலத்தில் ஒரு புகழ்பெற்ற அரசிளம் வீராங்கனை ஒருத்தி இருந்தாள். மிகவும் அழகு சௌந்தரியவதியான அவள் புகழ்பெற்ற ஓட்டக்காரியுமாவாள். அவளை ஓட்டத்தில் வெற்றி கொள்ளுவோர் அவளை மனைவியாக அடைந்து ராஜ்யத்தையும் கைப்பற்றிக் கொள்ளலாம் என்று அவள் பறைசாற்றியிருந்தாள். தவறும்பட்சத்தில் அந்த மனிதன் தனது உயிரை இழக்க நேரிடும் என்ற கடுமையான நிபந்தனையையும் அவள் விதித்திருந்தாள். இறுதியாக ஒரு ஓட்டப் பந்தய வீரன் அவளோடு ஓடி அவளை மணந்து கொள்ள முன் வந்தான். ஓட்டப் பந்தயம் குறிப்பிட்ட நாளில் ஆரம்பமாயிற்று. அந்த மாபெரும் வீரன் மிகவும் எளிதாக அவளை முந்தி கொண்டு ஓடிக்கொண்டிருந்தான். அதைக் கண்ணுற்ற அவள் தனது கரத்திலிருந்த ஒரு அழகான பொற்பழத்தை அவனது ஓடு பாதையில் அவனுக்கு முன்பாக உருட்டிவிட்டாள். பொன் பழத்தைக் கண்ட அவன் ஆசை ஆவலில் விரைந்து ஓடி அதை எடுத்துக் கொண்டு இன்னும் அவளை இலகுவாக முந்தி ஓடிக்கொண்டிருந்தான். அந்த வீராங்கனை திரும்பவுமாக ஒரு பொற் பழத்தை அவனுக்கு முன்பாக உருட்டிவிட்டாள். அதையும் அவன் எடுத்துக் கொண்டு மான் போல அவளை முந்தி ஓடிக்கொண்டிருந்தான். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் அந்த வீரன் பொற்பழங்களை சேகரித்துக் கொண்டு ஓடியதன் காரணமாக இறுதியில் தனது ஓட்டத்தை இழந்து தனது அருமையான ஜீவனையும் இழந்து விட்டான் என்பதுதான் அதின் சோக முடிவாகும்.

மனுஷ கொலை பாதகனான தந்திர சாத்தான் அளிக்கும் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை, ஜீவனத்தின் பெருமையாகிய உலக மாய்கை என்ற பொற்பழங்களும் வேண்டும், அதே சமயம் தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம் செய்து வைத்துள்ள (1 கொரி 2 : 9) கண்காணா பேரின்ப பாக்கியங்களும் வேண்டும் என்ற இரட்டை ஆசையில் உலகத்தின் மாய லோக ஓடு களத்தில் ஓடிக்கொண்டிருக்கும் தேவ பிள்ளையே ஏற்ற சமயத்தில் கண்விழித்துக் கொள். உலகம் அளிக்கும் அனைத்து வகை மாயா ஜால கண்காட்சிகளையும், மாயாபுரி சந்தைச் சரக்குகளின் மயக்கங்களையும் உதறித் தள்ளிவிட்டு, பாவச் சேற்றிலிருந்து உன்னைத் தூக்கி எடுத்து உன் பாதங்களை கன்மலையின் மேல் தூக்கி நிறுத்திய உன் இரட்சகரின் பாதங்களை இறுகப் பற்றிக் கொள். எப்பொழுதும் விழித்திருந்து ஜெபித்து நினையா நேரம் உன்னை சடுதியாகச் சந்திக்கும் மரணத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு சந்திக்க ஆயத்தப்படு.

இந்த நித்திய ஜீவ பாதையிலிருந்து உன் பாதங்களை வழி விலகச் செய்யும் சாத்தானாம் பிசாசின் தந்திர கைக்கூலிகள், ஒளியின் வேஷம் தரித்த அவனது நித்திய மரண அடியாட்கள், அவனது மரணக்கண்ணியாம் கனியற்ற வீண்மோடி சபைகள், அவனது கபடதாரிகளான உலக நேச ஊழியக்காரர்களின் நித்திய நாசம் என்ற நரகத் தீச்சூழைக்கு உன் பாதங்களை விலக்கிக் காத்து உனக்காக மூன்று ஆணிகளில் சிலுவையில் தொங்கி மரித்த உன் ஆண்டவர் இயேசுவின் பாதங்களைப் பற்றிக் கொள். அதற்கான கிருபைகளை தேவன் தாமே உங்களுக்கும், பாவியாகிய எந்தனுக்கும் தந்தருள்வாராக. ஆமென்.


 

நோய் நொடியற்ற ஆரோக்கியமான சரீர சுகம், வங்கிகளிலே திரண்ட செல்வ சேமிப்பு, நாளின் 24 மணி நேரமும் மகிழ்ச்சி பொங்கி வழியும் வளமான வாழ்க்கை, தொட்டதெல்லாம் பொன்னாகும் காரிய சமர்த்து, இப்படியானதொரு கிறிஸ்தவ செழிப்பு வாழ்க்கை என் பங்காகத் தீருமானால், நான் பின்பற்றிச் செல்லும் என் நேசர் ஏழை கோலமாக மாட்டுத் தொழுவத்தில் பிறக்காமல் ராஜ குமாரனாக அரண்மனையில் பிறந்து தங்கத் தொட்டிலில் அல்லவா தாலாட்டப்பட்டிருக்க வேண்டும். செழுமையும், கொழுமையும் அல்ல பாடுகளும், போராட்டங்களும், கண்ணீரும் நிறைந்த சிலுவை பாதை தான் பரம கானானின் எனது பாதுகாவலான ராஜ பாதை. அதை மட்டுமே நான் வாஞ்சித்துக் கதறுவேன்.


Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM