|
|
உலக வாழ்வில் மீண்டும் ஒரு ஆண்டு தமது
ஊழியத்தை இமயமலைகளில் நிறைவேற்ற
கரம் பிடித்த கன்மலையாம் தேவன் |
"என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்று எண்ணி இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால் அவரை ஸ்தோத்திரிக்கின்றேன்" (1 தீமோ 1 : 12)
"எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் தூராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய் தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே நாங்கள் மனுஷருக்கு அல்ல எங்கள் இருதயங்களை சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை, தேவனே சாட்சி" (1 தெச 1 : 2 : 3 - 5)
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. ஆமென்.
சகோதரன் பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் சாட்சி இடம்பெற்ற கடந்த தேவ எக்காள இதழை வடக்கே நமது தேவ ஊழியத்தில் கலந்து கொள்ளும் டிரைவர் சகோதரன் மனோஷ் அவர்கள் தற்செயலாக அதைப் பார்த்துவிட்டு அதில் தேவனுடைய வார்த்தைகளைப் பெற்றுப் படிக்கும் மக்களின் படங்களைப் பார்த்துக்கொண்டு வரும் வேளையில் கடைசிப்பக்கத்தின் அடியில் தேவனுடைய வார்த்தைகளை ஆவலாக வாசிக்கும் நடுத்தர வயதுடைய ஒருவரின் படத்தை பார்த்துவிட்டு அவர் தனக்கு நன்கு தெரிந்தவர் என்றும், அந்த மனிதரின் பெயர் கேசவ்ரூப் பட் என்றும் அவர் மஜர்கானா கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் திடீரென்று அவர் மாரடைப்பால் காலமாகிவிட்டார் என்றும் நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களிடம் கூறியதை அவர்கள் என்னிடம் சொன்னார்கள். அந்த மனிதருக்கு அவருடைய வாழ்வின் கடைசி நேரம் தேவனுடைய சுவிசேஷத்தை அளித்து அவர் தனது ஆண்டவரை சந்திக்க தன்னைஆயத்தப்படுத்திக் கொள்ளும்படியாக எங்களை அவருடைய மஜர்கானா கிராமத்துக்கு ஆண்டவர் நிச்சயமாக அனுப்பி வைத்தார் என்று நாங்கள் கர்த்தருக்குள் உறுதியாக விசுவாசிக்கின்றோம்.
திரும்பத் திரும்ப தேவன் எங்களை உத்தராஞ்சல் மாநிலத்திற்கு தம்முடைய மகிமையின் சுவிசேஷத்தை அறிவிக்க கரம் பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றார் என்றால் அதில் அவருடைய நிச்சயமான பரம நோக்கம் இருக்குமென்று நாம் உறுதியாக நம்பலாம். ஏனென்றால் இந்த தேவ ஊழியங்கள் எல்லாம் அவருடைய திருவுள சித்தத்தின்படி, அவரால் மாத்திரம் நடந்து கொண்டிருக்கின்றது. |
| சாத்தானின் கடும் போராட்டமான ஆண்டு |
|
எந்த ஒரு ஆண்டிலும் இல்லாத அளவிற்கு சாத்தானின் கடுமையான போராட்டம் நிறைந்த ஆண்டாக இந்த 2009 ஆம் ஆண்டு எங்களுக்கு அமைந்திருந்தது. உங்கள் சகோதரனாகிய எனது உடல் நலம் மிகவும் பெலவீனமாகி ஒரு மாத காலத்திற்கு வட இந்திய உணவு, தங்கும் இடங்கள் மற்றும் தொடர்ச்சியான பிரயாணங்கள் எப்படி ஒத்துப்போகும் என்பதைக் குறித்து நான் அதிகமாக யோசித்தேன். அந்த ஊழிய நாட்களை நினைத்த போது அன்பின் ஆண்டவருக்கு திரும்பவும் ஒரு தடவை இமயத்தின் கடையாந்திர கிராமங்களில் ஊழியம் செய்யப்போகும் அருமையான சந்தர்ப்பத்தை தேவன் கிருபையாக தந்ததற்காக ஆவிக்குள் அதிகமான சந்தோஷம் அடைந்தாலும், சர்க்கரை நோயால் நன்கு தாக்குண்ட சரீரம் உடன் ஒத்துழைக்குமா என்பதைக் குறித்து பாரமடைந்ததுடன் வரப்போகும் அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போதெல்லாம் மனுஷீகப் பிரகாரமாக அதிகமான சோர்பு வரவேதான் செய்தது.
ஊழியத்திற்காக நான் கர்த்தருடைய பெலத்தால் இந்த 2009 ஆம் ஆண்டு லெந்து காலத்தில் மேற்கொண்ட எனது தொடர்ச்சியான நீண்ட உபவாச ஜெபங்களும் நான் எதிர்பார்த்த அளவிற்கு மிகுந்த ஆசீர்வாதமாக அமையவில்லை. சரீரத்தில் எக்காலத்தும் இல்லாத பெலவீனத்தின் நடுக்கம் காணப்பட்டதால் சூரிய அஸ்தமனத்திற்கு வெகு முன்பதாகவே பல நாட்களும் நான் எனது அந்த நாளின் உபவாசத்தை வலுக்கட்டாயமாக முடிக்க வேண்டியதாகவிருந்தது. அது எனக்கு உண்மையில் சோர்பாகவே காணப்பட்டது. ஆனால், ஜெப வாழ்க்கையில் நான் உறுதியாகத் தரித்திருந்தேன். எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வடமாநில தேவ ஊழிய ஆசீர்வாதத்திற்காக அதிகமாக ஜெபித்தேன். வடக்கே ஊழிய நாட்களிலும் அநேக மணி நேரங்களை அன்பின் ஆண்டவர் ஜெபத்தில் செலவிட எனக்கு மிகவும் ஒத்தாசை ஈந்தார். வடக்கே ஊழியத்தில் இருந்த நாட்களில் நான் அதிகமாக இராக்கால ஆகாரங்களை எடுக்கவில்லை. அதிகமான பசி உணர்வு இல்லாத காரணத்தால் நான் அதை விலக்கினேன். அந்த நேரங்களையும் தேவ சமூகத்தில் நான் ஜெபத்தில் செலவிட்டேன்.
நமது ஊழியத்தை முன்னின்று நடத்திச் செல்லக்கூடிய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் எதிர்பாராத விதமாக ஊழியம் ஆரம்பமாகவிருந்த கடைசி வார நாட்களில் காய்ச்சலினால் நன்கு பாதிக்கப்பட்டு எப்படியோ தெய்வாதீனமாக சுகநிலைக்குத் திரும்பினார்கள். நமது வாடகை வாகனங்களைப் பொறுப்பெடுத்துக் கொண்டு வரும் டிரைவர் சகோதரன் மனோஷ் அவர்கள் கொடிய மஞ்சள் காமாலை நோயால் பீடிக்கப்பட்ட நிலையிலேயே, வியாதியின் இறுதிக்கட்ட நிலையில் நமது ஊழியத்தில் கலந்து கொள்ள வேண்டியதாகவிருந்தது. அந்தப் பெலவீனத்தின் மத்தியில் தனது வாகனத்தை ஓட்டினார்கள். ஆனால், சாப்பிடும் ஆகார விஷயங்களில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு எடுத்தார்கள். அநேக நாட்களில் வெறும் வெள்ளரிக்காயும், தயிறும் அவர்களின் ஆகாரமாக இருந்தது. அன்பின் ஆண்டவர் படிப்படியாக அவர்களுக்கு நல்ல சுகம் அளித்து இறுதியில் மருத்துவ பரிசோதனையில் அவர்கள் பூரண சுகம்பெற்றுவிட்டதாக மருத்துவ சான்றிதழ் கொடுத்தார். அதற்காக நாங்கள் எல்லாருமே ஆண்டவர் சமூகத்தில் அதிகமாக கெஞ்சி வந்தோம்.
வழக்கமாக ஆண்டுதோறும் நமது ஊழியங்களில் இதுவரை கலந்து வந்த பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் இந்த தடவை தனது இயலாமையை கடைசி நேரத்தில் தெரிவித்தபடியால் அவர்களுடைய ஸ்தானத்தில் இரு சகோதரர்களைத் உடனடியாகத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டியது அத்தியாவசியமாக இருந்தபடியால் அந்தக் காரியத்திலும் தேவ பெலத்தால் வெற்றிபெற்றோம். டணக்பூரிலுள்ள நமது சகோதரன் விஜயசிங் அவர்கள் அந்தக் காரியத்தை தன் மேல் போட்டு சோன்சிங் மற்றும் அர்ச்சுன் ஆகிய இரு வாலிப கிறிஸ்தவ தம்பிமாரை தன்னுடன் அழைத்து வந்தார்கள்.
டார்ச்சுலா என்ற இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்து அடுத்த நாள் ஊழியம் ஆரம்பிக்க வேண்டிய நிலையில் நாங்கள் ஊழியத்தை தொட.ங்க முடியாவண்ணம் அடை மழை சில தினங்களுக்கு நன்கு பிடித்துக் கொண்டது. சற்றும் இடைவெளியின்றி பெய்து கொண்டிருந்த மழையைக்கண்டு நாங்கள் மனம் பதறினோம். இப்படியாக இந்த தடவை எங்கள் தேவ ஊழியங்கள் சாத்தானுடைய பலத்த போராட்டங்களின் நடுவில் தொடங்கியது. எனினும், கர்த்தரே இறுதியில் வெற்றி சிறந்தார். எல்லா ஆண்டுகளைவிட இந்த ஆண்டே நாங்கள் அதிக அளவு எண்ணிக்கையில் ஆண்டவருடைய சுவிசேஷ பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்து முடித்திருந்தோம். அத்துடன் எல்லா தடவைகளையும் விட மக்களின் ஆர்வமான தொடர்பு இந்த தடவைதான் மிகவும் கூடுதலாகக் காணப்பட்டது. கர்த்தருக்கே மகிமை. |
| பொருளாதார தேவைகளைச் சந்தித்த அற்புதர் |
"கர்த்தருடைய ஊழியம், கர்த்தர் விரும்பும் பாதையில் செய்யப்படும் போது, கர்த்தருடைய போஷிப்பு அந்த ஊழியத்திற்கு தப்பாமல் கிடைத்துக் கொண்டே இருக்கும்" என்ற பக்தர்களின் வாக்கின்படி நமது எளிய தேவ ஊழியத்திலும் தேவனுடைய போஷிப்பு ஆச்சரியம் அற்புதமாக இந்த ஆண்டிலும் இருந்தது. கர்த்தருக்குள் நீங்கள் நன்கு அறிந்தபடி நாம் நமது தேவைகளை நமது பத்திரிக்கையில் எழுதி விளம்பரப்படுத்துவதுமில்லை, நமது தேவைகளை கர்த்தருடைய பிள்ளைகளுக்கு தெரிவிப்பதுமில்லை.
"இந்த தேதியில் நாங்கள் வடக்கே பிரயாணப்படுகின்றோம்" என்ற வார்த்தையைக்கூட தேவ எக்காளத்தில் வெளியிடக்கூடாது என்ற திட்டமான தேவ ஏவுதலின்படி கடந்த 2 ஆண்டுகளாக அந்த வார்த்தையைக் கூட நான் நமது பத்திரிக்கையில் எழுதாததை நீங்கள் கட்டாயம் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அப்படி நான் எழுதும்போது அந்த எழுத்தும் கூட "நீங்கள் துரிதமாக உங்கள் காணிகையை அனுப்புங்கள், நாங்கள் வடக்கே புறப்படப் போகின்றோம் என்று உங்களுக்கு தகவல் கொடுத்துவிட்டு நாங்கள் உங்கள் காணிக்கைக்காக ஆவலாக காத்திருக்கும் ஒரு சூழ்நிலையை மறை முகமாக உருவாக்குவதை நான் உணர்ந்தேன்"
சீன மிஷனரி ஹட்ஸன் டெயிலர், பல்லாயிரக்கணக்கான அநாதைக் குழந்தைகளை பல்லாண்டு காலமாக ஆதரித்து போஷித்த ஜியார்ஜ் முல்லர் போன்ற பக்த சிரோன்மணிகளின் பிரமாண்டமான தேவைகளை அற்புதம் அதிசயமாக அன்று சந்தித்த ஆச்சரிய கர்த்தர் பரதேசிகளாகிய எங்களுடைய அற்பமான ஊழியத் தேவைகளை சந்திப்பது அவருக்கு கடினமான காரியமாக இருக்கவில்லை.
ஊழியத்திற்கு யார் யார் கட்டாயம் கரம் நீட்டுவார்கள் என்ற எங்களுடைய திட்டமான எதிர்பார்ப்புகளை எல்லாம் ஆண்டவர் முற்றும் வெறுமையாக்கி சற்றும் எதிர்பாராத இடங்களிலிருந்தெல்லாம் தேவன் எங்களுக்கு ஒத்தாசையை ஆச்சரியமாக அனுப்பினார்.
எங்களுடைய தேவைகளுக்கு போதுமான ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கலயத்தில் எண்ணெயையும், பாத்திரத்தில் மாவையும் எங்களுக்குத் தந்து தேவைகளின்போது அவைகளிலிருந்து எடுத்து கடைசி வரை பயன்படுத்திக் கொள்ளும்படியாக ஆச்சரிய கர்த்தர் எங்களை அற்புதமாக வழிநடத்தினார். கடைசி வரை எந்த ஒரு தாழ்ச்சியுமில்லாமல் தேவன் எங்களை அருமையாக வழிநடத்தினார். அல்லேலூயா. |
| தேவ ஊழியத்திற்குத் தேவையான சுவிசேஷ பிரசுரங்கள் |
கடந்த தேவ எக்காள இதழில் எந்த ஒரு வைராக்கியமான இந்து மனிதரையும், கர்த்தர் இயேசு ஒருவரே மெய்யான ஜீவனுள்ள தேவன் என்பதைக் கண்டு கொள்ள வழிநடத்தக்கூடிய பண்டிற் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களின் கண்கண்ட அற்புத சாட்சியை நாம் வெளியிட்டிருந்தோம். அந்த சாட்சியால் தொடப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஏராளம் ஏராளம். தேவ எக்காளம் சந்தாதாரர் பலரும் அந்த தேவ எக்காள பிரதியை தங்கள் இந்து நண்பர்களுக்குக் கொடுத்து படிக்க வைத்திருக்கின்றனர். கர்த்தருக்கே மகிமை.
அந்த தேவ மனிதர் தர்ம் பிரகாஷ் சர்மா அவர்களே தனது கைப்பட இந்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு கைப்பிரதியை ஹிந்தியில் எழுதியிருக்கின்றார்கள். அதின் பெயர் "மோட்ச வாசல்" என்பதாகும். மகாபாரத யுத்தம் முடிந்ததும் அந்த யுத்தத்தில் சிந்திய இரத்தத்திற்கான பாவ விமோச்சன யாகத்தை பஞ்சபாண்டவர்கள் செய்து முடித்து இறுதியில் ஹரித்துவாரம் வந்து அங்கு உள்ள கங்கை நதியின் கர்க்கி-பூடி என்ற இடத்தில் நீராடி சொர்க்க லோகம் செல்ல முயற்சிக்கும் பஞ்ச பாண்டவர்களின் முயற்சி வெற்றிபெற்றதா? அவர்கள் இறுதியில் பாதுகாப்பாக மோட்சம் சென்று அடைந்தனரா? என்ற கேள்வி குறியோடு துவங்கி அந்தக் கைப்பிரதியின் இறுதியில் "நானே வழியும், சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்ற இரட்சா பெருமான் இயேசு கிறிஸ்து ஒருவர் மூலமாக உள்ள மெய்யான இரட்சிப்பின் சத்தியத்தில் முடிவு பெறுகின்றது.
மேற்கண்ட அருமையான கைப்பிரதி ஒன்று உள்ளது என்பதை எப்படியோ அறிந்த நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் மும்பையிலுள்ள (Gospel Literature Service) என்ற ஸ்தாபனத்தினருடன் தொடர்பு கொண்டு அதே சுவிசேஷ பிரதியை 15000 பிரதிகள் நமது வாகன தேவ ஊழியத்திற்காக தனிப்பட்ட விதத்தில் அச்சுப்போட்டு வாங்கினார்கள். இந்த தடவை இந்தக் குறிப்பிட்ட கைப்பிரதியானது இந்து மக்கள் மத்தியில் ஒரு ஒரு பெரிய அசைவையே உண்டுபண்ணியுள்ளது என்பதை நாம் கர்த்தருக்குள் திட்டமாகச் சொல்லலாம். அந்த குறிப்பிட்ட கைப்பிரதியை மக்கள் ஆவலாக படிப்பதிலும், அதைக் குறித்து விசாரிப்பதிலுமிருந்து நாங்கள் அதைக் கண்டோம். ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக.
கடந்து சென்ற ஆண்டுகளில் நாம் வடக்கே விநியோகித்த அனைத்துக் கைப்பிரதிகளைக் காட்டிலும் இந்த தடவை நாம் கொடுத்த பிரதிகளின் எண்ணிக்கை மிகவும் கூடுலாகும். எண்ணிக்கை மட்டுமல்ல, மிகவும் தரமான பிரதிகளையும் இந்த தடவை நாம் சேர்த்துக் கொண்டோம். டில்லியிலுள்ள மசிஹி சாகித்ய சன்ஸ்தா (M.S.S) என்ற கிறிஸ்தவ ஸ்தாபனத்திற்குச் சென்று "சாது சுந்தர் சிங்" மற்றும் "மெய்ச்சமாதானத்தைத் தேடிக்கொண்டு" என்ற இரண்டு அருமையான புத்தகங்களிலும் தலா 200 காப்பிகளை பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் வாங்கினார்கள்.
அத்துடன் வழக்கம்போல "நற்செய்தி பணி இயக்கம்" (Operation Mobilization) என்ற உலகளாவிய கிறிஸ்தவ ஸ்தாபனத்திடமிருந்து மிகவும் விலை சகாயமாக கீழ்க்கண்ட புத்தகங்களையும், சிறு புத்தகங்களையும் விலைகொடுத்து வாங்கினார்கள். (1) 258 பக்கங்களைக் கொண்ட வேதாகம சாராம்சம் 400 புத்தகங்கள் (2) நற்செய்தி 1500 சிறு புத்தகங்கள் (3) உலகின் ஒளி இயேசு 1500 சிறு புத்தகங்கள் (4) தேவனின் அன்பு 3000 சிறு புத்தகங்கள். மேற்கண்ட ஸ்தாபனத்தினர் நமது சகோதரனுக்கு அவைகளைக் கொடுக்கும்போது "வரும் நாட்களில் நாங்கள் உங்களுக்கு இப்படி எங்கள் பிரசுரங்களை குறைந்த விலையில். கொடுக்கவியலாது. உலகச் சந்தை வீழ்ச்சியடைந்துவிட்டபடியால் நாங்கள் கர்த்தருக்காகச் செய்யும் கணிப்பொறி வர்த்தகமும் பாதிக்கப்பட்டுவிட்டது. அதின் ஆதாயத்திலிருந்துதான் நாங்கள் உங்களுக்கு அத்தனை விலை சகாயமாக இதுவரை கொடுத்து வந்தோம். எனவே, இதுவேதான் நாங்கள் உங்களுக்கு கொடுக்கும் கடைசியான தள்ளுபடி விற்பனை" என்று கூறிவிட்டார்களாம். இத்தனை ஆண்டு காலங்களாக நமக்கு அவர்கள் பாராட்டிய அன்புக்குத் தக்க பிரதி பலனை தேவன் அவர்களுக்கு தந்தருள்வாராக. மந்த நிலையில் இருக்கும் அவர்கள் கணிப்பொறி தொழிலை தேவன் திரும்பவும் எடுத்து நிலை நிறுத்துவாராக. உத்திரபிரதேசம் மொராதாபாத்திலுள்ள அன்பான சகோதரன் நீலாம்பர் டாட் அவர்களிடமிருந்து இந்த தடவை 400 கிதியோன் ஹிந்தி புதிய ஏற்பாடுகளும் கிடைக்கப் பெற்றோம்.
வழக்கம்போல அலகாபாத் வேதாகம சங்கத்தினரிடமிருந்து 15000 சாந்திமார்க்கம் (ஹிந்தி லூக்கா சுவிசேஷங்கள்) விலைக்கு வாங்கினோம். அத்துடன் சத்திய மார்க்கம் என்று அழைக்கப்படும் 157 பக்கங்களுள்ள ஹிந்தி மொழி யோவான் சுவிசேஷம் படங்கள் மற்றும் விளக்கவுரைகளுடன் சிறப்பாக அச்சிடப்பட்ட சுவிசேஷம் 3000 பிரதிகள் வாங்கினோம். எல்லா தடவைகளையும் விட கூடுதலாக இந்த தடவை 150 ஹிந்தி மொழி வேதாகமங்கள் அவர்களிடமிருந்தே நாம் விலைக்குப் பெற்றுக் கொண்டோம்.
நாம் ஒவ்வொரு வருடமும் சிவகாசியிலுள்ள ஓரேப் அச்சுக்கூடத்தினரிடம் ஆர்டர் கொடுத்து அச்சிட்டு வாங்கும் ஹிந்தி மொழி சுவிசேஷ பிரசுரங்கள் இந்த தடவையும் சற்று கூடுதலாகவே அச்சிட்டு வாங்கினோம். தேவ பிள்ளைகளாகிய அவர்கள் எந்த ஒரு ஆதாயமுமின்றி முற்றும் அடிமட்டமான நம்ப முடியாத குறைந்த அச்சுக்கூலியில் கர்த்தருடைய நாம மகிமைக்காக அவைகளை நமக்கு அச்சிட்டுத் தந்தார்கள். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அங்கிருந்து நாம் பெற்றுக் கொண்ட ஹிந்தி சுவிசேஷ பிரதிகளின் எண்ணிக்கை (1) சமாதான காரணர் 11750 சிறு புத்தகங்கள் (2) தேவன் உங்களை நேசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 15750 பிரதிகள் (3) உங்கள் வாழ்வின் உற்ற நண்பர் 15750 பிரதிகள்.
அலகாபாத், சிவகாசி, மும்பை, டில்லி, மொரதாபாத் ஆகிய 5 இடங்களிலிருந்து 47 பெட்டிகளில் கிறிஸ்தவ பிரசுரங்கள் பித்தோர்காட் பட்டணத்திலுள்ள சகோதரன் என்.சாமுவேல் அவர்களின் வீட்டிற்கு பத்திரமாக வந்து சேர்ந்திருந்தன. அதற்காக அவர்கள் அலைந்த அலைச்சல்களும், பட்டபாடுகளும் மிக அதிகமாகும். தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக. அவர்கள் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த பெட்டிகளின் படங்களை நீங்கள் காண்பதுடன் நாங்கள் மக்களுக்கு விநியோகித்த சுவிசேஷப் பிரதிகளின் மாதிரிகள் ஒவ்வொன்றையும் கூட நீங்கள் இந்தச் செய்தியில் பார்க்கலாம். |
 |
 |
| ஊழியத்தில் கலந்து கொண்ட தேவ பிள்ளைகள் |
"நீங்கள் என்னைத் தெரிந்து கொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்து கொண்டேன்" (யோவான் 15 : 16) என்ற ஆண்டவருடைய வார்த்தையின்படி ஒவ்வொரு தடவையும் நமது வாகன தேவ ஊழியத்திற்கு தேவையான மக்களை அவரே தெரிவு செய்து விடுகின்றார். அந்தப்படியே இந்த 2009 ஆம் ஆண்டு ஊழியத்தில் கலந்து கொள்ளக்கூடியவர்களை அந்த அன்பரே தெரிவு செய்து அழைத்து வந்தார்.
வழக்கம்போல பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், சகோதரன் டி.ற்றி.நார்ட்டன் அவர்களும், என்.சாமுவேல், கதர்பூர் என்ற இடத்திலிருந்து சகோதரன் பாக்கேலால் அவர்களும், நேப்பாள எல்கையை ஒட்டி அமைந்துள்ள டணக்பூர் என்ற இடத்திலிருந்து சகோதரன் விஜய்சிங் அவர்களும், சோன்சிங் மற்றும் அர்ச்சுன் அவர்களும் இந்த தடவை நடைபெற்ற நமது ஊழியத்தில் கலந்து கொண்டனர்.
பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்களும், அந்தப்பட்டணத்திலிருந்து நேப்பாளம் செல்லும் வழியில் சில கி.மீ. தொலைவிலுள்ள படா ஆலூ என்ற கிராமத்திலிருந்து டிரைவர் சகோதரன் நரேஷ் அவர்களும் நமது வாடகை வாகனங்களின் ஓட்டுனர்களாக நம்முடன் இணைந்து கொண்டனர். மனோஜ் அவர்கள் ஓட்டின வாகனம் அவர்களுக்குச் சொந்தமாகும். இந்த தடவை நம்முடைய ஊழியத்தில் கலந்து கொண்ட தேவ பிள்ளைகளையும், நம்முடைய டிரைவர் சகோதரர்களையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.



முழுமையான ஒரு மாத காலத்திற்கும் சற்று கூடுதலான நாட்கள் இந்த தேவ மக்கள் தங்கள் மனைவி, பிள்ளைகள், அன்பான குடும்பத்தினர் யாவரையும் விட்டுவிட்டு ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஒன்றாக இளைப்பாறி, ஒன்றாக இணைந்து கர்த்தருக்கு ஊழியம் செய்து ஒன்றாகக் கர்த்தரைத் துதித்து மகிமைப்படுத்தினோம். நாங்கள் கர்த்தரைப் பாடித்துதித்து மகிமைப்படுத்தும் படத்தையும் நீங்கள் பார்க்கலாம்.

|
| சுவிசேஷ பிரசுரங்களை நாங்கள் வகைப்படுத்திக் கொண்டது |
செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் ஞாயிறன்று காலை நாங்கள் எல்லாரும் இமயமலைத் தொடர்களின் அடிவாரப்பட்டணம் காதகோடம் இரயில் நிலையத்தில் ஒன்று சேர்ந்தோம். ஏற்கெனவே நாங்கள் இளைப்பாற ஆயத்தம் செய்து வைத்திருந்த ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள அரசாங்க ஓய்வு விடுதி சென்று குளித்து எங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டோம். மற்ற தேவ பிள்ளைகள் முந்தின நாளே அங்கு வந்து தங்கி எங்கள் வருகைக்காக ஆவலாகக் காத்திருந்தனர். ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் நாங்கள் திரும்பவும் ஒருவரையொருவர் சந்தித்தது கர்த்தருக்குள் எங்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியாக இருந்தது.
அன்றைய தினம் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளாக இருந்தபடியால் நாங்கள் எல்லாரும் கர்த்தரைப் பாடித் துதித்து ஆராதித்து வரவிருக்கும் தேவ ஊழியங்களுக்காக உள்ளத்தின் பாரத்தோடு ஜெபித்தோம். அதின் பின்னர் அங்கிருந்து அருகிலுள்ள ஹல்த்வானி பட்டணம் சென்று எங்கள் இரு வாகனங்களுக்கும் முழுமையாக எரி பொருள் நிரப்பிக் கொண்டு, எங்கள் நண்பகல் ஆகாரத்தை அங்கேயே முடித்துவிட்டு உடனே எங்கள் பிரயாணத்தை ஆரம்பித்தோம். அதிகாலை சரியாக 6 மணி அளவில் வரவேண்டிய எங்களுடைய ரயில் சுமார் 11 மணி அளவில் மிகவும் கால தாமதமாக வந்தபடியால் காலையிலேயே பித்தோர்கார்ட் பட்டணம் புறப்பட வேண்டிய நாங்கள் சில மணி நேர கால தாமதத்துடன் புறப்பட்டோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் 225 கி.மீ தொலைவாகும். பித்தோர்கார்ட் பட்டணத்திற்கு 30 கி.மீ. தொலைவில் அடிவாரத்தில் ஓடுகின்ற காளி கங்கா என்ற நதிப் பாலத்திற்கு "காட்" என்று பெயராகும். அந்த இடத்திற்கு நாங்கள் இரவு 8 மணிக்கு முன்பதாக கட்டாயம் சென்றடைந்தாக வேண்டும். தவறும் பட்சத்தில் அங்குள்ள போலீஸ் காவலர்கள் எங்கள் வாகனத்தை பாலத்திற்கு அப்பால் நிறுத்தி வைத்து அடுத்த நாள் காலையில்தான் அதை கடந்து செல்ல அனுமதி அளிப்பார்கள். இது மிகவும் கண்டிப்பான அரசாங்க ஆணையாகும். அந்த இடத்தின் மலைப் பாதை மிகவும் பயங்கரமானதாகையால் விபத்துக்களைத் தவிர்க்க இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கின்றனர். எனவே நமது டிரைவர் சகோதரர்கள் வாகனங்களை சற்று பயத்தோடு மிக விரைவாக ஓட்டி வந்து கர்த்தருடைய கிருபையால் சுமார் 7:30 மணிக்கெல்லாம் நதிப் பாலத்தை நாங்கள் கடந்து சென்று விட்டோம் பித்தோர்கார்ட் பட்டணத்திற்குள் நாங்கள் வரும்போது இரவு சுமார் 9 மணி ஆகிவிட்டது. எங்களுக்காக ஏற்கெனவே ஆயத்தம் செய்யப்பட்டிருந்த உல்க்கா பிரியதரிசினி என்ற லாட்ஜில் 3 அறைகளில் நாங்கள் தங்கியிருதோம். நமது பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்களும், சகோதரன் மனோஜ் அவர்களும் தங்கள் வீடுகளில் தங்கிக் கொண்டனர்.
எங்களுடைய ஆகாரங்கள் கடந்த தடவையைப் போன்று பாஸ்டர் சகோதரனுடைய வீட்டிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அன்று இரவு ஆகாரத்திற்குப் பின்னர் நாங்கள் எங்கள் இளைப்பாறுதலுக்காக லாட்ஜ்க்கு வந்து சேர்ந்தோம். அடுத்த நாளிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நாங்கள் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சகோதரனுடைய வீட்டிற்கு வந்திருந்த 47 பெட்டிகளில் உள்ள பிரதிகளை வகைப்படுத்தினோம். ஹிந்தி மொழி லூக்கா சுவிசேஷம் ஒவ்வொன்றினுள்ளும் 4 பிரதிகளை ஒன்றாக வைத்தோம். எங்களுக்கு உதவியாக பிரசுரங்களை ஒழுங்குபடுத்துவதற்கு சுரேஷ் என்ற மலையாள தேவ ஊழியரையும் நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். இந்து மார்க்கத்திலிருந்து கர்த்தரை ஏற்றுக்கொண்ட அவர்களும் நல்லதோர் தேவ பிள்ளையாவார்கள். எங்களுடன் இணைந்து பணிசெய்யும் அவர்களுடைய படத்தையும் நீங்கள் காண்பீர்கள்.


கடைகளிலிருந்து காலி அட்டைப் பெட்டிகளை வாங்கி வந்து மூன்று நாட்கள் அமர்ந்து 69 அட்டைப் பெட்டிகளில் நாங்கள் வகைப்படுத்தின லூக்கா சுவிசேஷங்களை வைத்துக் கட்டினோம். அது நீங்கலாக வேதாகமங்கள், புதிய ஏற்பாடுகள், சத்தியமார்க்கம் போன்றவைகள் தனிப் பெட்டிகளில் அவைகள் வந்த வண்ணமாகவே இருந்தன. தேவைப்படும்போது அவைகளை நாங்கள் பிரித்து எடுத்துக் கொண்டோம். கைப்பிரதிகளை நாங்கள் ஒழுங்கு செய்வதையும், எங்கள் ஆகார வேளையையும் கூட நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.






இந்த எளிய தேவ ஊழியத்தைச் செய்ய உங்கள் கஷ்ட சம்பாத்தியத்திலிருந்து காணிக்கைக் கொடுத்து எங்களை வடக்கே அனுப்பிவைத்த தேவ மக்களாகிய உங்களுக்கு நாங்கள் செய்த ஊழியங்களையும், முடிந்த அளவு எங்களுடைய அனைத்து நடபடிகளையும் எழுத்தின் மூலமாகவும், அதை உறுதிப்படுத்தும் ஒரு சில படங்களின் மூலமாகவும் உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியது கர்த்தருக்குள் எங்கள் கடமையாக இருக்கின்றது என்பதை நாங்கள் அதிகமாக உணருகின்றோம். இந்த ஊழியச் செய்திகளின் எழுத்துக்களில் உண்மையே காணப்பட வேண்டும் என்பதற்காக இந்த தடவை நமது குன்னூர் அச்சகத்தாரிடம் அவர்களுடைய சிறிய ஆங்கில டைப் ரைட்டரை இரவல் வாங்கிக் கொண்டு சென்று ஒவ்வொரு நாள் தேவ ஊழியம் முடிந்ததும் அல்லது சில நாட்கள் சேர்த்தும் ஊழியச் செய்திகளை நான் டைப் செய்து கொண்டேன். நம்முடைய பாஸ்டர் சகோதரன் என்.சாமுவேல் அவர்கள் தன்னுடன் எப்பொழுதும் ஒரு நோட்டை வைத்து அவ்வப்போது ஊழியம் முடிந்ததும் உடனுக்குடன் கிராமங்களின் பெயர்கள், பள்ளிகளின் விபரங்கள், மாணவர்கள், ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் ஊழியம் செய்த விபரங்களை கேட்டு எழுதிவிடுவார்கள். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் அப்படித்தான் செய்து வருகின்றார்கள்.
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமத்தில் ஒரு தேவனுடைய வார்த்தை நம்மை மிகவும் நடுங்க வைப்பதாக இருக்கின்றது. பரலோகத்தில் ஆண்டவரோடு கூட இருப்போர் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் (வெளி 17 : 14) என்று அது கூறுகின்றது. நமது தனிப்பட்ட வாழ்வில், நமது ஊழியங்களில் பரிசுத்த தேவன் உண்மையை அதிகமாக எதிர்பார்க்கின்றார். முதலாவது தேவனுக்கு நாம் உண்மையுடையோராக இருக்க வேண்டும். அடுத்தது நமக்கு நாமே உண்மையுடையவர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது நாம் மற்றவர்களுக்கு உண்மையுடையோராக இருந்தல் வேண்டும். (Faithful to God - Faithful to self - Faithful to others)
பித்தோர்கார்ட் பட்டணத்தில் 3 நாட்கள் நாங்கள் அமர்ந்து மக்களுக்கு விநியோகிக்கக் கூடிய சுவிசேஷப் பிரதிகளை ஒழுங்கு செய்து கொண்டு அந்தப் பெட்டிகளில் ஒரு பகுதியை எங்களுடைய 2 வாகனங்களிலும் ஏற்றினோம். மிகவும் மேடான பகுதியில் சாமுவேல் சகோதரனுடைய வீடு இருந்ததால் அங்கிருந்து கீழே கொண்டு வர 2 நேப்பாளி சுமை தூக்குவோரை ஒழுங்கு செய்து கொண்டோம். அவர்களில் ஒருவர் தனது தோளில் நமது அட்டைப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு வந்து நமது வாகனத்துக்கு நேராக வருவதை நீங்கள் காணலாம்.

அதின் பின்னர் நாங்கள் எல்லாரும் தேவ சமூகத்தில் எங்களைத் தாழ்த்தி வரவிருக்கும் ஊழியங்களை ஆண்டவர் பொறுப்பெடுத்து ஆசீர்வதித்து நடத்துமாறு ஜெபித்து விட்டு அக்டோபர் மாதம் முதலாம் நாள் காலையில் பித்தோர்கார்ட் பட்டணத்திலிருந்து 93 கி.மீ. தொலைவில் நேப்பாள எல்கையில் அமைந்துள்ள டார்ச்சுலா என்ற இடத்தை நோக்கிப் பிரயாணப்பட்டோம். கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. |
|
சகலவித சந்தோசங்களுக்கும், மனமகிழ்ச்சிகளுக்கும் உன்னைக் கொண்டு செல்லும் மிகச் சுலபமானதும், மிக நிச்சயமுமான பாதை இதுவேதான்:-
உனது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு காரியத்துக்காகவும் தேவனுக்கு நன்றி செலுத்தி அவரைத் துதிப்பதை ஒரு திட்டமான குறிக்கோளாக எப்பொழுதும் மனதில் வைத்துக் கொள். உனது வாழ்வைத் தாக்கும் எந்த ஒரு பெருந்துன்பத்திற்காகவும் கர்த்தருக்கு நன்றி கூறி அவரை ஸ்தோத்திரிக்கும் போது நீ அதினை மெய்யாகவே ஒரு ஆசீர்வாதமாக மாற்றி விடுகின்றாய்.
|
|
|