சம்பாவத் பகுதியில் நடைபெற்ற
எங்கள் இறுதி ஊழியங்கள்



கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. லோஹாகாட் பகுதிகளில் நாங்கள் எங்கள் தேவ ஊழியங்களை முடித்துவிட்டு அங்கிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள சம்பாவத் என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். மலை உச்சியில் கட்டப்பட்ட ஒரு அழகான பட்டணமாக இது விளங்குகின்றது. ஒரு காலத்தில் சாந்த் பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் இந்த இடத்தை தலைநகராகக் கொண்டு அரசாண்டதாகக் கூறப்படுகின்றது. அந்த இடத்தின் உச்சியில் உள்ள அவர்களுடைய பழைய கோட்டையில்தான் இப்பொழுது ஜில்லா காரியாலயம் உள்ளதாம். இந்த இடத்திற்கு உள்ள இரண்டு சிறப்பு அம்சங்களில் ஒன்று உலகப் புகழ்பெற்ற ஆங்கிலேய வேட்டைக்காரர் ஜிம் கார்ப்பெட் அவர்கள் இங்குள்ள அநேக மக்களை சுமார் 1500 பேரை கொன்று தின்ற பல புலிகளை சுட்டுக் கொன்று மக்களுக்கு விடுதலையையும், சந்தோசத்தையும் அளித்து தனது புகழ்பெற்ற "குமானி மலை நர மாம்ச பட்சிணிகள்" (Man eaters of Kumaon) என்ற உலகப் பிரசித்தி பெற்ற தமது புத்தகத்தை எழுதி வெளியிட்டது இந்த சம்பாவத் என்ற இடத்தில்தான் என்று சொல்லப்படுகின்றது. ஜிம் கார்ப்பெட்டை இங்குள்ள மக்கள் சாது அல்லது புனிதர் என்று அழைக்கின்றனர். அடுத்தது ஒரு இந்துக்கடவுளைக் குறித்தான ஒரு காரியமாகும். அதைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள அவசியமில்லையாதலால் அதை நான் விட்டுவிடுகின்றேன்.

இந்த சம்பாவத் என்ற இடத்தில் நாங்கள் வசதியாக தங்கிக் கொள்ள அன்பின் ஆண்டவர் இங்குள்ள அரசாங்க ஓய்வு விடுதியில் எங்களுக்கு இடம் அமைத்துக் கொடுத்தார். எங்களில் 7 பேர்கள் பொதுவான டார்மிட்டரி ஹாலிலும் இருவர் தனி அறையிலும் தங்கினோம். இந்த அரசாங்க ஓய்வு விடுதியின் மானேஜர் நமது டிரைவர் சகோதரன் மனோஜ் அவர்களுக்கு மிகவும் அறிமுகமானவராதலால் எங்களுக்கு வேண்டிய அனைத்து ஒத்தாசைகளையும் செய்தார். விசேஷமாக, நாங்கள் எங்கள் ஆகாரத்தை அவர்களுடைய சமயலறையில் அவர்களுடைய பாத்திரங்களைக் கொண்டு சமைத்துச் சாப்பிட எங்களுக்கு அனுமதி அளித்தார்கள். நாங்கள் சம்பாவத் கடை வீதியிலுள்ள சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிட்டிருப்போமானால் நிச்சயமாக எங்கள் நிலை பரிதாபகரமாயிருந்திருக்கும். அதற்கு நன்றி கடனாக அந்த மனிதருக்கு அவ்வப்போது நாங்கள் ஆகாரம் கொடுத்து உதவியதுடன், அந்த ஓய்வு விடுதியின் ஒரு ஏழை பணியாளருக்கு ஒழுங்காக ஆகாரம் கொடுத்ததுடன், சமையல் வாயுவுக்கான பணத்தையும் நாங்கள் கொடுத்துவிட்டோம். விடுதியின் மானேஜர் தனது குடும்பத்தை தூர இடத்தில் விட்டுவிட்டு தனது பணியின் காரணமாக அவருக்கென்று ஒதுக்கப்பட்ட அரசாங்க இல்லத்தில் எங்களுக்கு அருகாமையிலேயே இருந்தார்.

சம்பாவத்தில் நாங்கள் தங்கியிருந்த அரசாங்க ஓய்வு விடுதியின் படத்தையும், அங்கு பணி செய்த மக்களின் படத்தையும், அவர்களுடன் அந்த விடுதியின் மானேஜர் நின்று கொண்டிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம். அவர்கள் எல்லாருக்கும் சுவிசேஷ நற்செய்தி சொல்லி ஆண்டவருடைய பிரசுரங்களையும் வகைக்கு ஒன்றாக அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். கர்த்தர் தமது வார்த்தைகளுடன் அவர்களுடன் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

 

பல்சோனில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

ஒரு நாள் நாங்கள் சம்பாவத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள லால்வாபானி என்ற இடத்திற்கு ஊழியத்திற்காகக் பிரயாணப்பட்டோம். போகும் வழியில் பான்லேக் என்ற இடம் வந்தது. அங்குள்ள ஆரம்ப பள்ளியில் 30 மாணவ மாணவியர் இருந்தனர். அவர்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து ரஸ்தாவில் நாங்கள் போய்க் கொண்டிருக்கும்போது ரோட்டின் மேல் கீழே ஒரு பள்ளிக்கூடம் இருக்கின்றது என்பதைக் காண்பிக்கும் அறிவிப்பு போர்ட்டு வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். பள்ளிக்கூடம் இன்னும் திறக்கவில்லையாதலால் ரஸ்தா ஓரமாக எங்கள் இரு வாகனங்களையும் நிறுத்தி வைத்துவிட்டு எங்கள் ஜோல்னா பைகளுடன் கீழே பள்ளிக்கு இறங்கினோம். சிலர் ரோட்டின் மேலேயே நின்று கொண்டோம். அது ஒரு உயர்நிலைப்பள்ளியாகும். நேரம் செல்லச் செல்ல மாணவ மாணவியர் பள்ளிக்கு வர ஆரம்பித்தனர். பிள்ளைகள் வர வர நாங்கள் சுவிசேஷ பிரதிகளை ஜெபத்துடன் அவர்களுக்கு கொடுக்க ஆரம்பித்தோம். அநேகமாக பள்ளிக்கு வந்த பெரும்பாலோனோருக்கு பள்ளி ஆரம்பிக்கும் சமயத்திற்குள்ளாக நாங்கள் கொடுத்து முடித்துவிட்டோம். இந்தச் சமயத்தில் பள்ளி ஆசிரியர்கள் வரத்தொடங்கினர். அவர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்களைக் கொடுப்பதற்காக நமது தேவ ஊழியர்கள் பள்ளிக்குள் சென்றனர். அவர்களைக் கண்டதும் தலைமை ஆசிரியர் கடுமையாகப் பேசியிருக்கின்றார். "ஒரிசாவில் அவர்களுடைய மதத் தலைவரைக் கொன்றது கிறிஸ்தவர்கள் என்றும், ஒரிசா கலவரத்துக்கு காரணமும் அவர்களே என்று கூறினதுடன் எங்கள் இந்து மார்க்கம் நலமான மார்க்கம், அதிலேயே நாங்கள் இருந்து கொள்ளுவோம். நீங்கள் கிறிஸ்தவ மார்க்கத்தை இந்தியாவில் ஒருக்காலும் பரப்பக்கூடாது" என்று பேசி நமது தேவ ஊழியர்கள் கொடுத்த பிரசுரங்களை வாங்க மறுத்துவிட்டனர்.

நமது ஊழியர்கள் எல்லாரும் மேட்டுக்கு வந்து பள்ளியில் நடந்த காரியத்தை துக்கத்துடன் பகிர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருந்தனர். அத்துடன், கர்த்தருடைய கிருபையால் பள்ளி ஆரம்பிப்பதற்கு முன்னரே பெரும்பாலான மாணவ மாணவியருக்கு பிரசுரங்களைக் கொடுத்து விட்ட தேவச் செயலை எண்ணி சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தோம். இந்த வேளையில் கீழே பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் மேடு ஏறி எங்களண்டை வந்து கொண்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். அவர் எங்களண்டை வந்து "ஆண்டவர் இயேசுவை தான் நேசிப்பவர் என்றும், அவருடைய வார்த்தைகளைப் படிக்க அவருக்கு அளவு கடந்த ஆசை உள்ளது என்றும், தனக்கு ஒரு ஹிந்தி வேதாகமம் கண்டிப்பாக வேண்டும் என்று கூறி எங்களிடமிருந்து ஒரு ஹிந்தி வேதாகமத்தையும், இதர சுவிசேஷப் பிரசுரங்களையும் ஆவலோடு தைரியமாகப் பெற்றுச் சென்றார். அந்த ஆசிரியரின் பெயர் பிரசாத் என்று கூறினார்" கர்த்தருக்குத் துதி உண்டாவதாக. பள்ளித் தலைமை ஆசிரியரின் வார்த்தைகளால் மனம் சோர்ந்திருந்த எங்களுக்கு அந்த நிகழ்ச்சி மிகவும் சந்தோசத்தை அளிப்பதாக இருந்தது. கர்த்தருக்கே மகிமை.

ரஸ்தாவின் ஓரத்தில் நாட்டப்பட்டிருந்த பல்சோன் உயர்நிலைப்பள்ளி அறிவிப்பு பலகையையும், அந்தப் பள்ளியையும், நாங்கள் கொடுத்த தேவனுடைய பிரசுரங்களை வாங்கிக் கொண்டு செல்லும், மற்றுஅமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளையும் நீங்கள் படங்களில் காணலாம், அந்தப் பள்ளியில் மொத்தம் 70 பிள்ளைகளும் 5 ஆசிரியர்களும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அங்கிருந்து நாங்கள் பிரயாணப்பட்டு மார்தாய் என்ற இடத்திலுள்ள ஒரு உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆண்டவருடைய பிரதிகளை வழங்கினோம். அங்கு 50 பிள்ளைகள் இருந்தனர்.

லல்லுவாபானி என்ற இடத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில் 3 ஆசிரியர்களும் 57 மாணாக்கரும் இருந்தனர் அவர்களுக்கு தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்தோம்.

 

மஞ்சு-தாம்லி என்ற இடத்தில் நடைபெற்ற தேவ ஊழியங்கள்

ஒரு நாள் காலை நாங்கள் எங்கள் ஜோல்னா பைகளை தேவனுடைய பிரசுரங்களால் நிரப்பிக் கொண்டு நாங்கள் அனைவரும் ஒன்று கூடி ஜெபித்த பின்னர் சம்பாவத்திலிருந்து 35 கி.மீ. தொலைவிலுள்ள மஞ்சு-தாம்லி என்ற இடத்திற்கு எங்கள் வாகனங்களில் பயணமானோம். நாங்கள் சென்ற வழித்தடத்தில் இருமருங்கிலும் அடர்ந்த இருளான கானகமே மண்டிக்கிடப்பதை நாங்கள் கவனித்தோம். அதிகமான தொலைவிற்கு எந்த ஒரு ஆள் அரவமோ, அல்லது குடியிருப்புகளோ தென்படவே இல்லை. இடையில் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு காட்டாறு ரஸ்தாவின் குறுக்கே நுரை தள்ளி விரைந்து ஓடிக்கொண்டிருக்கும். அந்த ஆற்றின் குறுக்கே எப்பொழுதோ விழுந்த மரங்கள் இத்துப்போய் பாசி பிடித்து கிடக்கும். கருங்கானகத்தில் மட்டுமே வாழும் பறவையினங்கள் எழும்பும் குரலோசைகளையும் நாங்கள் அவ்வப்போது கேட்க முடிந்தது. அத்துடன் பண்டைய நாட்களில் நம்முடைய நாட்டுப் புறங்களில் பெண் மக்கள் மாறி மாறிப் பாடும் குறவஞ்சி பாடல்களைப் போன்று கானக வண்டுக்கூட்டம் நொய்.................. என்று சற்று நேரம் நமது காதுகளே இரையும் வண்ணமாக கொஞ்ச நேரம் சத்தமிட்டு இரைச்சல் போட்டுவிட்டு அமைதியாகிவிடும். சற்று நேரத்திற்கெல்லாம் அடுத்த ஒரு வண்டுக்கூட்டம் மற்றொரு பக்கத்திலிருந்து நொய்...................... என்று குரல் எழுப்பி குறவஞ்சி பாடலை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும்.

அந்த நாட்களில் அங்கு மனிதர்களை அடித்துச் சாப்பிட்ட புலிகள் இந்தக் கானகங்களில்தான் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை நாம் யூகிப்பதுடன் ஜிம் கார்ப்பெட் என்ற ஆரம்பத்தில் குறிப்பிட்ட வேட்டைக்காரர் இந்தக் கானகத்தில்தான் தனது வேட்டையை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்பதையும் நாம் நிச்சயமாக நம்பலாம்.

நாங்கள் எங்கள் பாதையில் வந்து கொண்டிருந்த வேளையில் ஓரிடத்தில் கானக மரக்கன்றுகளை வளர்க்கும் நர்சரி நாற்றங்கால் ஒன்றில் சிலர் வேலை செய்து கொண்டிருப்பதையும், அதை ஒரு வனத்துறை அரசாங்க அதிகாரி கண்காணித்துக் கொண்டிருப்பதையும் நாங்கள் கண்டோம். அங்கே நாங்கள் இறங்கி அந்த மக்களுக்கெல்லாம் தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் கொடுத்தோம். அந்த இடத்திலிருந்து செங்குத்தாக இறக்கத்தில் கானகத்துக்குள் 3 கி.மீ. தொலைவில் மான்போக்ரி என்ற இடத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருப்பதை அங்குள்ள அறிவிப்பு பலகையின் உதவியால் அறிந்து கொண்டோம். நாங்கள் எல்லாரும் அந்த வழித்தடத்தில் கீழே இறங்குவது கடினமான காரியமாகையால் நமது ஊழியர்களில் சிலர் மட்டும் இறங்கிச் சென்று தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துவிட்டு நீண்ட நேரத்திற்குப் பின்னர் மிகுந்த களைப்புடன் வந்து சேர்ந்தனர். அந்த இரண்டு பள்ளிகளிலும் 80 மாணாக்கரும் 6 ஆசிரியர்களும் இருந்ததாகக் கூறினர். ஊழியமும் எந்த இடையூறு இல்லாமல் நடந்ததாகவும் சொன்னார்கள்.

எங்கள் வழித்தடத்தில் கொக்யா என்ற ஒரு கிராமம் இருந்தது. மிகவும் பழமையான பண்டைய கால கிராமம் அது. கிராமத்திற்கு மேலே அடர்த்தியான பெரிய கானகம் இருந்தது. அந்தக் கிராமத்தின் வீடுகள் எல்லாம் சிலேட் கற்களால் (Slate Stones) கூரை வேயப்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். கானகத்தில் வெட்டப்பட்ட பெரிய பெரிய மரத் துண்டுகள் ரஸ்தா ஓரமாகப் போடப்பட்டிருந்தது. அந்தக் கிராமத்திலும் நாங்கள் எங்கள் வாகனங்களை நிறுத்தி அந்தக் கிராம மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்துடன் விநியோகித்தோம். நாங்கள் கொடுத்த ஆண்டவருடைய பிரதிகளை ஆவலாக வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வயதான மனிதரை நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.

அங்கிருந்து நாங்கள் ஊருக்கு சற்றே அப்பால் சென்ற போது பள்ளத்திற்குள் காட்டுப் பகுதியில் சிறியதொரு பள்ளிக்கூடம் இருப்பதைக் கவனித்தோம். ஒரு ஆசிரியையும் 23 பிள்ளைகளும் இருந்த அந்தப் பள்ளியிலும் கர்த்தருடைய ஊழியத்தைச் செய்து விட்டு வழியில் ராமர் என்ற ஊரிலும் பிரதிகளை கொடுத்து இறுதியில் மஞ்ச் என்ற இடத்திற்கு நாங்கள் வந்து சேர்ந்தோம். எங்களுக்கு முன்பாக எந்த ஒரு கானகமும் இல்லாத விசாலமான அழகிய பள்ளத்தாக்கு இப்பொழுது காணப்பட்டது. அந்த இடத்தைப் பார்க்க எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. சற்று நேரத்திற்கு முன்பதாக ஒளியே இல்லாத ஆப்பிரிக்காவின் இருண்ட கானகத்தில் இருந்த நாங்கள் இப்பொழுது நல்ல சூரிய ஒளியுள்ள பள்ளத்தாக்கில் இருந்தோம். அந்த இடம் நேப்பாளம், சீனா எல்லைப் புறங்களில் இருப்பதால் நமது இந்திய ராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதை நாங்கள் அறிந்தோம். அந்த சிறிய இடத்திலும் ஒரு ஸ்டேட் பாங்க் இருப்பதை ஆச்சரியத்துடன் கண்டோம். அங்கு வேலை செய்து கொண்டிருந்த சில வங்கி அதிகாரிகளுக்கும் கர்த்தருடைய பிரதிகளைக் கொடுத்தோம். அங்குள்ள ஒவ்வொரு வீடாகச் சென்று நமது ஊழியர்கள் பிரதிகளைக் கொடுத்தனர்.

அந்த இடத்தில் சற்று தொலைவில் அடிவாரப் பகுதியில் இருந்த ஒரு உயர் நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் பயிலுகின்ற மாணாக்கர்களுக்கும் நமது ஊழியர்கள் தேவனுடைய பிரதிகளை விநியோகித்திருக்கின்றனர். நாங்கள் அந்தப் பகுதியில் ஊழியம் செய்து கொண்டிருக்கின்றோம் என்பதை கேள்விப்பட்ட ஒரு ராணுவ வீரர் சற்று தொலைவிலுள்ள தனது ராணுவ முகாமிலிருந்து நடந்து வந்து நமது ஊழியர்களை அணுகி தனக்கு எந்த ஒரு கிறிஸ்தவ புத்தகத்தைக் காட்டிலும் கட்டாயம் ஒரு ஹிந்தி மொழி வேதாகமம் தந்தே ஆக வேண்டும் என்ற வேண்டுகோளோடு வந்து சேர்ந்திருக்கின்றார். நமது சகோதரன் நார்ட்டன் அவர்கள் ஒரே ஒரு ஹிந்தி வேதாகமத்தை தன் வசம் பத்திரப்படுத்தி வைத்து யாராவது ஒரு தவனமுள்ள ஆத்துமா அதைக் கேட்கும் பொழுது அதைக் கொடுக்க வேண்டுமென்று வைத்திருக்கின்றார்கள். ஹிந்தி வேதாகமம் கேட்டவர் டெஹ்ரி கட்வால் பகுதியைச் சேர்ந்தவராவார். அது உத்தராஞ்சல் மாநிலத்தின் அடுத்த பகுதியாகும். அதைப் பெற்ற அந்த ராணுவ வீரர் அடைந்த மகிழ்ச்சி அதிகமாக இருந்தது என்று சொன்னார்கள். அவருடைய பெயர் அனுப் குமார் என்பதாகும். தேவன் தம்முடைய ஜீவனுள்ள வார்த்தைகளின் மூலமாக அந்த ஆத்துமாவோடு பேச நீங்களும் தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள். மஞ்ச்-தாம்லி ஊர் அறிவிப்பு பலகையின் அருகில் நமது தேவ ஊழியர் என்.சாமுவேல் அவர்கள் நின்று கொண்டிருக்கின்றார்கள். அந்த இடத்தில் அன்பின் ஆண்டவர் எங்களுக்கு நல்லதோர் ஊழிய வாய்ப்பைத் தந்தார். அவருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி செலுத்துகின்றோம்.

 

சிப்தி கிராமத்தில் நிறைவேற்றிய தேவ பணிகள்

சம்பாவத்திலிருந்து சிப்தி என்ற இடம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மலை ரஸ்தாவில் வளைந்து வளைந்து அடிவாரம் சென்று இறுதியில் எங்கள் வாகனங்கள் இந்த ஊரை வந்தடைந்தது. இந்த ஊரில் ஒரு சிறிய கடை வீதி உள்ளது. அதின் அருகிலேயே மரங்களடர்ந்த பகுதிக்குள் ஒரு இண்டர்மீடியட் கல்லூரி உள்ளது. நமது இடத்தில் மேல் நிலைப்பள்ளி என்பதை அங்கு அவர்கள் கல்லூரி என்று அழைக்கின்றனர். அப்படியேதான் எழுதியும் வைத்திருக்கின்றனர். உங்களுக்கு ஹிந்தி தெரியுமானால் படத்தில் காண்பதை வாசித்துப் பாருங்கள். அங்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களை மாணாக்கர்கள் விரிவுரையாளர்கள் என்றும் தலைமை ஆசிரியரை பிரின்சிபால் என்றுமே அழைக்கின்றனர்.

சம்பாவத்திலிருந்து நாங்கள் சற்று காலை நேரத்திலேயே புறப்பட்டு சிப்தி கிராமத்தை வந்தடைந்துவிட்டோம். பொதுவாக மேல் நிலைப் பள்ளிகளில் மாணாக்கருக்கு கிறிஸ்தவ பிரசுங்களை கொடுக்க ஆசிரியர்கள் அனுமதி அளிப்பதில்லை. அப்படியே பள்ளியின் தலைமை ஆசிரியரே வகுப்புகளுக்குள் சென்று பிரதிகளை பிள்ளைகளுக்கு கொடுக்கும்படியாக சந்தோசமாக அனுமதி கொடுத்துவிட்டாலும் அந்த இடத்தில் தந்திர சாத்தான் தனது ஆளை ஆயத்தமாக வைத்துக் காத்துக் கொண்டிருப்பான். அங்கு ஒரே ஒரு ஆசிரியர் அதற்கு எதிராக போர்க் கொடி ஏந்தி தலைமை ஆசிரியரிடம் மதமாற்ற பிரச்சாரம் என்ற வார்த்தையைப் போட்டு அவரை மேற்கொண்டு எங்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்து நிறுத்தி விடுவான். சாத்தானுடைய இந்தக் கலையை நாங்கள் பல்லாண்டு காலமாகக் கண்கூடாக கண்டிருப்பதால் அவனுடைய தந்திரத்திற்கு நாங்கள் எங்களை விலக்கிக் காத்துக் கொண்டு விடுகின்றோம்.

அதின் காரணமாக பள்ளிக்கு வரும் பாதைகளிலேயே நாங்கள் நின்று தேவனுடைய சுவிசேஷ பிரதிகளை பிள்ளைகளுக்கு ஜெபத்துடன் விநியோகித்து விடுகின்றோம். பிள்ளைகளும் அவைகளைப் பத்திரமாக தங்கள் பாடப் புத்தகங்களுடன் வைத்து வாசித்துவிட்டு பாதுகாப்பாக வீட்டிற்கு எடுத்துச் சென்று விடுவார்கள். அவர்களுடைய பெற்றோர் அவைகளை வீடுகளிலே வாசிக்க அது நல்ல சந்தர்ப்பமாகிவிடுகின்றது. கர்த்தருக்கே துதி உண்டாவதாக. அந்த நாளிலும் நாங்கள் அனைவரும் பிள்ளைகள் பள்ளிக்கு வரும் சில வழித் தடங்களை முன்கூட்டியே கேட்டறிந்து ஆங்காங்கு போய் எங்கள் ஜோல்னா பைகளை பிரசுரங்களால் நிறைத்து நின்று கொண்டோம். இந்தப் பொறுப்பான பணியில் நமது டிரைவர் சகோதரர்களும் நமக்கு தோளோடு தோள் கொடுத்து நிற்பார்கள். அப்படி அவர்கள் ஆண்டவருக்கு தொண்டு செய்யும் ஒரு படத்தை அதாவது நமது டிரைவர் சகோதரன் நரேஷ் அவர்கள் தனது கை நிறைய பிரசுரங்களை எடுத்துக் கொண்டு தேவையான நமது ஊழியர் ஒருவருக்குக் கொடுக்க விரைந்து கொண்டிருப்பதை நீங்கள் படத்தில் காணலாம்.

நாங்கள் அப்படிக் கொடுப்பதை அறிந்த அருகிலிருந்த ஒரு கிராமத்திலுள்ள கற்றறிந்த பெண் மக்களும் தங்கள் கிராமத்திலிருந்து ஏறி வந்து எங்களிடம் தேவனுடைய பிரசுரங்களைக் கேட்டு வாங்கிச் சென்றனர். அப்படி ஓரிடத்தில் நமது தேவ ஊழியர் விஜயசிங் அவர்கள் சிப்தி மேல் நிலைப் பள்ளிப் பிள்ளைகளுக்கு பிரசுரங்களை கொடுத்துக் கொண்டிருப்பதையும், மற்றொரு படத்தில் நமது சகோதரர்கள் நார்ட்டன் மற்றும் நரேந்தர் அவர்கள் தங்கள் பணிகளில் கருத்தாக இருப்பதையும், நமது பாஸ்டர் சகோதரன் எம்.சி.ஜேம்ஸ் அவர்கள் தேவனுடைய பிரசுரங்கள் அடங்கிய பெட்டி ஒன்றை தனது தலையில் தூக்கிச் சுமந்து செல்லுவதையும் மற்றொரு படத்தில் விஜயசிங் அவர்களும், நரேந்தர் அவர்களும் கிராமப் பெண்களுக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். சிப்தி மேல் நிலை பள்ளியில் 300 பிள்ளைகள் படிப்பதாகச் சொன்னார்கள். அங்கிருந்த ஒரு ஆரம்ப பள்ளியிலும் 60 பிள்ளைகள் படிப்பதாக அறிந்தோம். அவர்களுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்திருந்தோம்.

சிப்தியில் நாங்கள் எங்கள் ஊழியத்தை முடித்துவிட்டு அங்குள்ள சிறிய கடை வீதியிலும் அனைவருக்கும் சுவிசேஷ பிரசுரங்களைக் கொடுத்தோம். பின்னர் அங்குள்ள டீ கடையில் டீ குடித்துவிட்டு கர்த்தர் பாராட்டின அவருடைய அன்புக்கு நன்றி கூறிவிட்டு புறப்பட்டோம். எங்கள் வாகனங்கள் சுற்றி சுற்றி வளைந்து உச்சி மலை ஏறினது. கீழே நாங்கள் ஊழியம் செய்த சிப்தி ஊரும் அதின் பள்ளியும் சிறிதாகத் தெரிந்தன. அங்கே நடைபெற்ற தேவ ஊழியங்களை ஆண்டவர் ஆசீர்வதிக்க ஜெபித்துவிட்டு இறுதியாக சம்பாவத் பட்டணம் வந்து சேர்ந்தோம்.

சம்பாவத்தைச் சுற்றி 30 கி.மீ. தொலைவிலுள்ள அமேதி, 40 கி.மீ. தொலைவிலுள்ள ஜல்தி, 55 கி.மீ. தொலைவிலுள்ள நரசிங் தாக்கா, கேத்திக் கான், லல்லுவாபானி, நாரியல் காம், மானார், சன்யா பகட், போன்ற அநேக கிராமங்களுக்குச் சென்று அங்கு அமைந்துள்ள மேல் நிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் ஆரம்ப பள்ளிகள் போன்றவற்றில் பயிலுகின்ற பல நூற்றுக்கணக்கான மாணவ மாணவியருக்கு தேவனுடைய பிரசுரங்களைக் கொடுத்து ஊழியம் செய்ததுடன் அங்குள்ள கிராமவாசிகளுக்கும் கர்த்தருடைய வார்த்தைகளைக் கொடுத்தோம். எல்லா காரியங்களையும் விபரமாக எழுதி நாங்கள் எடுத்த படங்களைப் போட இங்கு இடம் போதாது, மனுஷீக பெலத்தாலும் அது இயலாது. ஆனால், செய்யப்பட்ட ஊழியங்களையும், அதற்காக நாங்கள் எடுத்துக் கொண்ட அன்பின் பிரயாசங்களையும், எங்களுடைய ஆத்தும பாரத்தையும் "நீர் என்னைக் காண்கின்ற தேவன்" என்று ஆகார் அம்மையார் அன்று சொன்னார்களே (ஆதி 16 : 13) அந்த சர்வ வல்ல கர்த்தர் காண்பவராக, அறிகின்றவராக இருக்கின்றார்.

இறுதியாக கர்த்தரை நேசிக்கின்ற தேவ பிள்ளைகளாகிய நீங்கள் இல்லையேல் இந்த ஊழியங்கள் ஒன்றும் இல்லை. நீங்களே எங்களை அனுப்பினீர்கள். எங்கள் அனைத்து தேவைகளையும் நீங்களே உங்கள் கஷ்ட சம்பாத்தியத்திலிருந்து சந்தித்தீர்கள். பல்லாயிரக்கணக்கான இமயமலை மக்கள் கரங்களில் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகள் பத்திரமாகப் போய்ச் சேர்ந்திருக்கின்றன என்றால் அதின் ஒரே காரணம் நீங்கள்தான். ஆம், நீங்கள் மாத்திரமேதான். தமது நாமத்தினிமித்தம் கொடுக்கப்பட்ட ஒரு கலசம் தண்ணீரையும் நினைவில் வைத்து அதற்கான பிரதி பலனை தப்பாமல் அளிக்கும் கர்த்தர் உங்களுடைய பிரயாசங்களை மறந்துவிடுவதற்கு அவர் அநீதியுள்ளவர் அல்லவே! அதின் பிரதி பலனை நீங்கள் ஓர் நாள் பரலோகில் காண்பீர்கள்.

பாவிகளாகிய எங்கள் மூலமாக 2008 ஆம் ஆண்டு ஏறெடுக்கப்பட்ட ஊழியங்கள் முப்பது, அறுபது, நூறுமான பலனை ஏற்ற காலங்களில் பிறப்பிக்க தேவ பிள்ளைகளாகிய நீங்கள் தொடர்ந்து ஜெபித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக நம்முடைய பிரயாசங்களின் பலனை ஒரு நாள் நாம் பரலோகில் காண்போம். அல்லேலூயா!

எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய பிரசுரங்களைப் பெற்றுப் படிக்கும் மக்களின் படங்களையும் நீங்கள் காணலாம்.



 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM