லோஹாகாட் என்ற இடத்திலிருந்து கும்தேஷ் ஷக் என்ற இடம் 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அன்று காலையில் நாங்கள் ஒன்றாகக் கூடி எங்கள் ஜெப தூபங்களைக் கர்த்தருக்கு ஏறெடுத்து அன்றைய நாளின் தேவ ஊழியங்களை ஆண்டவருடைய கரங்களில் ஒப்புவித்துவிட்டு கும்தேஷ்க்குப் பிரயாணப்பட்டோம். எங்கள் வழித்தடத்தில் இருந்த சம்மன் தேவால், பில்டி, நீயூதுக்கானா, தூர்பா, தோனிசில்லாங் போன்ற கிராமங்களில் எங்கள் வாகனங்களை நிறுத்தி, நிறுத்தி மக்களுக்கு தேவனுடைய பிரசுரங்களை ஜெபத்தோடு விநியோகித்துக் கொண்டே சென்றோம். எந்த ஒரு எதிர்ப்புகளும் இல்லாமல் மக்கள் ஆர்வத்தோடு அவைகளைப் பெற்று வாசித்தனர்.
எங்கள் வாகனங்கள் பெரிய பெரிய மலைகளைச் சுற்றி நீண்ட தொலைவு வந்ததும் இன்னும் தூரத்தில் ஒரு அழகிய மலைக் கிராமம் தெரிந்தது. ஆம் அதுதான் கும்தேஷ் கிராமம். எப்படியாவது அந்தக் கிராமத்திற்குச் சென்று ஆண்டவருடைய வார்த்தைகளைக் கொடுத்துவிட வேண்டும் என்ற ஆவலில் சென்றோம். அந்தக் கிராமத்தின் ஒரு பகுதி ஆரம்பத்திலேயே இருந்தது. நமது தேவ ஊழியர்கள் அங்கும் இங்குமாக மேடுகளில் ஏறி அந்த இடத்திலிருந்த எல்லா வீடுகளுக்கும் சென்று சுவிசேஷ பிரதிகளைக் கொடுத்தனர். பின்னர் நாங்கள் அங்கிருந்த ஒரு டீ கடையில் டீ குடித்துவிட்டு கிராமத்திற்குச் சென்றோம். அங்கு செல்லும் பாதை சீராக இல்லாததால் ஒரே ஒரு வாகனத்தை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சிலர் மட்டுமே சென்றோம். அங்குள்ள மக்களுக்கு நாங்கள் சுவிசே பிரதிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு வயதான மனிதர் ஊரின் மத்தியிலுள்ள பெரிய அரச மரத்திற்குக் கீழாக சில மக்களிடம் கிறிஸ்தவ மார்க்கத்தை நாங்கள் பிரச்சாரம் செய்ய வந்திருக்கின்றோம் என்றும் வெளிநாட்டுப் பணத்தைப் பெற்று இந்தக் காரியத்தை நாங்கள் செய்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் என் காதில் விழவே நான் சற்று தொலைவில் இருந்த பாஸ்டர் சகோதரன் சாமுவேல் அவர்களை அருகில் அழைத்து விபரம் சொன்னேன்.
உடனே, அவர்கள் அங்கு சென்று நாங்கள் எதற்காக வந்திருக்கின்றோம் என்பதையும், மதத்தைப் பிரச்சாரம் பண்ண வராமல் மனுமக்களின் பாவங்களிலிருந்து அவர்களை விடுவித்து அவர்களுக்கு பரலோக வாழ்வு அளிக்க தம்மையே கல்வாரி சிலுவையில் தியாக பலியாக ஒப்புவித்து மரித்து உயிர்த்து இன்றும் ஜீவிக்கின்ற ஆண்டவர் இயேசுவை அறிவிக்க மட்டுமே வந்திருக்கின்றோம் என்று விபரமாக எடுத்துச் சொன்னார்கள். ஊர் மக்களுக்கு அப்படி துர்ச் செய்தி சொன்னவர் ஜெகநாத்சிங் என்ற ஓய்வுபெற்ற ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். அவருடைய கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை நமது சகோதரன் கூறி அவரை நன்கு புரிய வைத்ததன் பின்னர் அவருக்கு எங்கள்மேல் அன்பு வந்தது. அவர் எங்களை தனது வீட்டிற்கு வந்து தேநீர் பானம் அருந்திச் செல்ல மிகவும் வருந்தி அழைத்தபடியால் அவருடைய வீட்டிற்குச் சென்று இன்னும் கூடுதலாக அவருக்கு ஆண்டவரின் அன்பை பகிர்ந்து கொண்டோம். வீட்டிற்குச் சென்றதும் அவருடைய மகனைச் சந்தித்தோம். வாலிபனான அவன் தமிழ்நாட்டிலுள்ள நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி என்ற இடத்திற்கு அருகில் இருக்கும் நமது இந்திய ராணுவ விண்வெளி தொலைத் தொடர்பு மையத்தில் பணி செய்வதாகவும், லீவில் வீட்டிற்கு வந்ததாகவும் சொன்னான். நாங்கள் பேசும் தமிழைக் கேட்டபோது மிகுந்த சந்தோசம் அடைந்தான். எங்களை அன்போடு ஏற்று உபசரித்தான். அவனுக்கும் சுவிசேஷம் அறிவித்தோம். ஜெகநாத்சிங்கின் மனைவி இறந்துவிட்டார்கள். மிகவும் மனக்கவலை கொண்டிருப்பவராக அவர் காணப்பட்டார்.
ஆண்டவர் இயேசுவிலுள்ள ஆறுதலை அவருக்குக் கூறி அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை திட்டமாகக் கூறினோம். கர்த்தர் அவருடைய உள்ளத்தில் பேச நீங்களும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
அழகிய கும்தேஷ் கிராமத்தையும், ஜெகநாத்சிங்கிடம் நமது சகோதரன் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளுவதையும், கிராமவாசிகள் கூடியிருப்பதையும் நீங்கள் இந்தச் செய்தியில் காணலாம்.


லோஹாகாட் என்ற அந்த இடத்தில் நாங்கள் 4 நாட்கள் தங்கியிருந்து அதைச் சுற்றியிருந்த அநேக கிராமங்களிலும், அநேக பள்ளிக்கூடங்களிலுமுள்ள நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேவனுடைய பிரசுரங்கள், புதிய ஏற்பாடுகள், வேதாகமங்கள் போன்றவற்றை ஜெபத்தோடு கொடுத்தோம். அந்த ஊழியங்களின் விபரங்களை தெளிவாக எழுதிக் கொண்டு சென்றால் இன்னும் பல பக்கங்கள் தேவைப்படும். ஏற்கெனவே இந்த இதழின் முகப்பு சாட்சியில் தர்ம் பிரகாஷ் ஷர்மா அவர்களுக்காக நிறைய பக்கங்கள் ஒதுக்க வேண்டியதாகிவிட்டது. அந்த பேரதிசயமான சாட்சியை நீங்கள் முழுமையாகப் படித்தே தீரவேண்டும், அவரைப்போல நீங்களும் வானத்தையும், பூமியையும் படைத்தவரின் குரலை தவறாது கேட்டே ஆக வேண்டும் என்ற எனது இருதய வாஞ்சையால் அதைச் செய்தேன்.
எங்களுடைய கரங்களிலிருந்து தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தைகளைப் பெற்று ஆசை ஆவலோடு படிக்கும் தவனமுள்ள ஆத்துமாக்களின் சில புகைப்படங்களையும் நீங்கள் பார்க்கின்றீர்கள். ஒருவரும் கெட்டுப்போகாமல் யாவரும் நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமென்பதே தேவனின் கதறுதல். அந்த அன்பின் காரணமாக தேவ மைந்தன் தமது மூன்றரை லிட்டர் இரத்தத்தையுமே வடித்துக் கொடுத்துவிட்டார் என்று ஒரு தேவ பக்தன் எழுதுகின்றார். எங்களுடைய ஊழியங்களின் மூலமாக சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காகவும், கொடுக்கப்பட்ட தேவனுடைய வார்த்தைகள் அந்த மக்களின் உள்ளங்களில் தொடர்ந்து நித்திய ஜீவனுக்கேதுவாக கிரியை செய்து கொண்டிருக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள். அதற்கான பிரதி பலன் பரலோகில் உங்களுக்கு உண்டு. |