"எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய் தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்குப் பிரியமுண்டாகப் பேசுகிறோம். உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை, தேவனே சாட்சி" (1 தெச 2 : 3-5)
எனது உலகப் பிரகாரமான வேலையை விட்டு விட்டு தமது ஊழியத்தை முழுமையாகச் செய்ய கர்த்தர் என்னை கடந்த நாட்களில் பல தடவைகளும் அழைத்ததுண்டு. ஆனால், நான் அவருக்கு கீழ்ப்படியாமல் காலம் தாழ்த்தி வந்து கொண்டிருந்தேன். ஆனால், 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதி அதிகாலை 3 : 15 மணி. அன்பின் ஆண்டவருக்கும் எனக்கும் அன்று போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. உலகப்பிரகாரமான எனது வேலையை உடனே விட்டுவிட்டு தமக்கு முழு நேர ஊழியனாகப் பணி செய்ய வரும்படியாக ஆண்டவர் திட்டமும் தெளிவுமாக மீண்டும் அழைப்பதை அந்த அதிகாலை வேளை என்னால் நன்கு உணர முடிகின்றது. எனினும், நான் ஆண்டவருக்கு சம்மதம் தெரிவிக்க விடாப்பிடியாக மறுத்து நின்றேன். 13, 12 வயதுடைய எனது அருமைப் பிள்ளைகள் சுந்தர்சிங், சார்லஸ் ஃபின்னி, அருமை மனைவி மற்றும் ஊரிலுள்ள எனது வயதான அருமைப் பெற்றோரைப் போஷித்துக் காப்பாற்றும் பொறுப்பின் காரியத்தையும், பிள்ளைகளுடைய கல்வி போன்றவற்றையும் தேவனுக்கு தெரியப்படுத்தி உலகப் பிரகாரமான எனது வேலையை எந்த ஒரு நிலையிலும் விடமுடியாத எனது இக்கட்டான சூழ்நிலையை அவருக்கு தெரியப்படுத்தி நின்றேன்.
ஆனால் அன்பின் கர்த்தர் என்னை விட்டபாடில்லை. எந்த ஒரு நிலையிலும் தாம் என்னைக் கைவிடாமல் பாதுகாப்பாக வழிநடத்தப்போவதாக அந்த விடிபகல் நேரம் என் உள்ளத்தில் பலமாக பேசியபடியால் அவருடைய உன்னத அழைப்புக்கு உத்திரவாதமாக வேதாகமத்திலிருந்து ஒரு வாக்குத்தத்தத்தை அவர் எனக்குத் தரும்படியாக நான் அவரிடம் கேட்டபொழுது வேதாகமத்தை திறந்து தம்முடைய வாக்குத்தத்தைப் பெற்றுக் கொள்ளும்படியாக எனது உள்ளத்தில் திட்டமாகப் பேசவே நான் எனது தலையணைக்கு கீழாக வைத்திருந்த எனது பரிசுத்த வேதாகமத்தையும், டார்ச் விளக்கையும் எடுத்து இருட்டுக்குள் வேதாகமத்தை திறந்து திறந்த வேதாகம பகுதியில் எனது டார்சு விளக்கின் ஒளியை போட்டபோது அந்த ஒளி "இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை, உன் சந்திரன் மறைவதுமில்லை, கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சயமாயிருப்பார், உன் துக்க நாட்கள் முடிந்து போம்" (ஏசா 60 : 19-20) என்ற கர்த்தருடைய வசனங்களில் விழுந்தது. தேவனுடைய அற்புதமான வாக்குத்தத்தைப் பார்த்ததும் எந்த ஒரு மறுப்புமின்றி அந்த நாளிலேயே நான் எனது உலகப்பிரகாரமான வேலையை ராஜிநாமா செய்து விட்டு ஆண்டவருடைய ஊழியத்தைப் பூரணமாகப் பொறுப்பேற்றேன்.
"கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை, எல்லாம் நிறைவேறிற்று" (யோசு 21 : 45) "..............அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போகவிடவில்லை" (1 சாமு 3 : 19) என்ற தேவனுடைய வார்த்தைகளின்படி 33 ஆண்டுகளுக்கு முன்பாக தேவன் என்னுடன் பேசிய அவருடைய வார்த்தைகள் பின் நாட்களில் அப்படியே முழுமையாக வந்து நிறைவேறிற்று. அதில் ஒரு உறுப்பு கூட தவறிப்போக அன்பின் தேவன் அனுமதிக்கவில்லை. அல்லேலூயா.
எனது 10 ஆம் வகுப்பு படிப்பு முடிந்ததும் கல்லூரிக்கு என்னை அனுப்பும்படியாக நான் எனது தந்தையிடம் கண்ணீர்விட்டு கதறி அழுதேன். ஆனால், பொருளாதார நிலையில் எனது தகப்பனார் மிகவும் கஷ்டத்துக்குள் இருந்ததால் அவர்களால் என்னை கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைக்கக் கூடாமற் போயிற்று. எனது வாழ்வில் கல்லூரி படிப்பை இழந்து போன நான் எப்படியும் எனது மூத்த மகனையாவது கல்லூரிக்கு அனுப்பி அவர்கள் பெயருக்குப் பின்னால் வெறும் பி.ஏ. பட்டம் மட்டும் போட்டுக் கொள்ள கர்த்தர் எனக்கு உதவி செய்யும்படியாக அவரிடத்தில் நான் தயவாக மன்றாடினேன்.
நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்ளுவதற்கும் மிகவும் அதிகமாக நமக்கு நன்மையைப் பொழிந்தருளும் நம் அன்பின் ஆண்டவர் எனது மூத்த மகனுடைய பெயருக்குப் பின்னால் ஐந்து பட்டங்களை போட்டுக் கொள்ள அவர்களுக்கு கிருபை செய்தார். எனது இளைய மகன் 12 ஆம் வயதிலும், மூத்த மகன் 22 ஆம் வயதிலும் இருக்கும்போது தேவன் பிள்ளைகளை தம்முடைய இரட்சிப்பின் பாத்திரங்களாக்கி தமக்குரியவர்களாக்கிக் கொண்டார். பிள்ளைகள் இருவரும் வாலிபர்களாக இருக்கும் போது அவர்களைப் பார்த்தோர் "உங்கள் பிள்ளைகளை இப்படியான ஒரு பக்தி வாழ்வில் உங்களால் எப்படி வளர்க்க முடிந்தது?" என்று என்னிடம் ஆச்சரியத்துடன் கேட்டவர்கள் உண்டு. எல்லாப் புகழ்ச்சியும் தேவனுக்கே. நாங்கள் குடியிருந்த 3 ஆம் வாடகை வீட்டின் சொந்தக்காரர் ஒரு அன்பான கத்தோலிக்க கிறிஸ்தவ ஆசிரியர் ஆவார்கள். என்னுடைய மூத்த மகன் சுந்தர்சிங்கிற்கு அவர்கள் வேலை பார்த்த கத்தோலிக்க மேல் நிலைப்பள்ளியிலேயே முற்றும் இலவசமாக வேலை வாங்கிக் கொடுத்தார்கள்.
எனது இளைய மகன் சார்லஸ் ஃபின்னிக்கு ஒரு மேல் நிலை பள்ளி வேலைக்காக இண்டர்வியூ வந்தது. நான் மகனுடன் சென்றேன். மலையிலுள்ள பள்ளத்தில் உள்ள ஒரு அலுவலகத்தில் இண்டர்வியூ நடந்து கொண்டிருந்தது. நான் மேட்டிலே நின்று கர்த்தர் மகனுக்கு இரக்கம் செய்யும்படியாக அவரைப் பாடித் துதித்துக் கொண்டிருந்தேன். நான் பாடிக் கொண்டிருப்பதை பார்த்த அங்குள்ள காவற்காரர் நான் பாடுவதன் காரணம் என்னவென்று கேட்ட போது மகனுக்கு ஆண்டவர் வேலை கொடுக்கும்படியாக பாடுகின்றேன் என்றேன். மொத்தம் 17 பேர் அந்த ஒரு வேலைக்கு இண்டர்வியூவுக்கு வந்திருந்தனர். அவர்களில் சிலர் கோட், சூட், டை எல்லாம் கட்டி கவர்ச்சியாக வந்திருந்தார்கள். ஆனால், மகன் எளிமையாகச் சென்றிருந்தான். அந்த நாளிலேயே மகன் வேலைக்கு தெரிவு செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் நிரந்தரமான வேலை உத்தரவும் மகனுக்கு கிடைத்தது. அதற்கும் நான் ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. இதற்கான ஒரே காரணம், முதலாவது அன்பின் கருணாகர கர்த்தரின் சுத்தக் கிருபையும், அவரது அளவில்லா அன்பும் அடுத்தபடியாக எந்த ஒரு நிலையிலும் நம் அன்பின் ஆண்டவருக்கு நான் எந்த ஒரு துரோகம் செய்யாமல் அவருக்கு உண்மையும் உத்தமமுமாக அவருடைய பெலத்தால் தேவ ஊழியம் செய்து வந்த ஒரே காரியமும்தான்.
என் கரத்தைத் தாண்டிச் சென்ற தேவ மக்களின் காணிக்கை பணங்களைக் கொண்டு நான் எதை எதை எல்லாமோ செய்ய எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், தேவ மனிதர் நெகேமியா சொன்னது போல "நானோ தேவனுக்குப் பயந்ததினால் அப்படிச் செய்யவில்லை, ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை" (நெகே 5 : 15 - 16)
எனது சிறு பிராயத்திலேயே பண ஆசையின் நச்சு வேரை என்னிலிருந்து அறுத்துப்போட்ட தேவன் நான் உலகப் பிரகாரமான வேலையில் சுமார் 20 ஆண்டு காலம் இருந்த நாட்களில் பல்லாயிரக்கணக்கான பணத்தை தொழிலாளிகளுக்கு என் கரத்தால் வாராந்திர சோத்துப் படி, சம்பளம், போனஸ் என்று எண்ணி எண்ணிக் கொடுத்து அந்த பண ஆசையை இன்னும் கூட "சீ" என்று அருவெறுத்து ஒதுக்க எனக்கு வகை செய்து கொடுத்தார். அல்லேலூயா.
பணத்திற்காக தேவ ஊழியம் என்ற காரியத்தை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. தேவனை அறியாதவர்களும், தேவனுடைய மகத்தான அன்பை தங்கள் வாழ்வில் ருசியாதவர்களும், மெய்யாகவே மனந்திரும்பாத மக்களும், தேவனுடைய திட்டமான அழைப்பில்லாமல் ஊழியம் செய்வோரும் பணத்திற்காக தேவனுடைய ஆரோக்கியமான உபதேசத்தைப் புரட்டி தந்திரமாக ஊழியம் செய்வார்கள். ஆண்டவருடைய திட்டமான கட்டளைப்படி மனந்திரும்புதலையும், பாவ மன்னிப்பையும் தேவ ஜனத்திற்கு பிரசங்கிக்க வேண்டிய அவர்கள் (லூக்கா 24 : 47, அப் 5 : 31) நிலையில்லா சரீர சுகத்தையும், கானல் நீராம் இம்மை வாழ்வின் செழிப்பையும், செல்வத்தையும் கவர்ச்சியான வண்ணங்கள் கொடுத்து பிரசங்கிப்பார்கள். அப்படிப்பட்ட கள்ள அப்போஸ்தலரின் முடிவுகளை நாளடைவில் உங்கள் சொந்தக் கண்களாலேயே காணலாம். "அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்" (2 கொரி 11 : 15) ஒரு தேவ ஊழியன் பணத்திற்காக தந்திரமாக ஊழியம் செய்கின்றான் என்றால் அவன் தேவ ஊழியன் அல்லன், அவன் சாத்தானாம் பிசாசின் மகன். அக்கினியும், கந்தகமும் எரிகிற நித்திய அக்கினிக் கடலுக்கு நியமிக்கப்பட்ட பிசாசானவனுடன் சேர்ந்து இரவும் பகலும் அவனுடன் வாதிக்கப்பட நியமிக்கப்பட்டவர்கள் அவர்கள் (வெளி 20 : 10) ஜீவனுள்ள தேவனுடைய கரங்களில் விழுவது எத்தனை பயங்கரமானது (எபிரேயர் 10 : 31) என்பதை அந்த பேதை மாந்தர் இன்னும் அறியவில்லை. பட்சிக்கிற அக்கினியோடு விளையாடுகின்றார்கள்.
நமது ஊழியச் செய்திகளுக்கு முன்னால் இந்தக் காரியங்களை எல்லாம் நான் எழுதுவதன் காரணம் நமது வடமாநில ஊழியங்கள் முற்றுமாக ஆத்தும பாரத்தோடு, தேவனுடைய நாம மகிமைக்காக மட்டும் செய்யப்பட்டு வருகின்றது என்பதையும், இந்தச் செய்தியில் நாம் வெளியிடும் படங்கள் வடக்கே செய்யப்படும் தேவ ஊழியங்களின் ஒரு தெளிவான விளக்கத்தை உங்களுக்குத் தருவதற்கேயல்லாமல் தேவ பகைஞர் கடந்த நாட்களிலும் தற்பொழுதும் நினைப்பது போல "படங்கள் போட்டு பணம் சம்பாதிப்பதற்கல்ல" இந்த எளிய தேவ ஊழியத்தில் ஆண்டவருடைய கிருபையின் கரம் நம்மை வருடா வருடம் எத்தனை அற்புதமும், ஆச்சரியமுமாகத் தாங்கி வழி நடத்திக் கொண்டு வருகின்றது என்பதை கர்த்தருக்குள் நீங்கள் நன்கு அறிவீர்கள். கர்த்தர் ஒருவருக்கே மகிமை உண்டாவதாக. |