ஒரு பட்டணத்தில் ஒரு நாள் இராக்காலம் ஒரு அருமையான கிறிஸ்தவ வாலிப தம்பியை காண நான் அவனுடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன். அவனது இரு பிள்ளைகளும் துயரம் தோய்ந்த நிலையில் அவனருகில் நின்று கொண்டிருந்தனர். அவனுக்கு முன்பாக நான் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நாட்களுக்கு முன்னர்தான் அவனது அழகான இளம் மனைவி அவனை விட்டு விட்டு ஒரு வாலிபனோடு ஓடிவிட்டாள். தனது துயரக் கதையை அவன் என்னோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்ததும் அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது. அவன் தனது கண்ணீர் கதையை இவ்வாறு கூறினான்:-
"ஐயா, அந்த கிறிஸ்தவ வாலிபன் எனக்கு இப்படியானதொரு துரோகம் செய்வான் என்று நான் கனவிலும் நினைக்கவே இல்லை. எனது வீட்டிற்கு வந்தால் எனது உடன் பிறந்த சகோதரனைப் போல அவன் நடந்து கொண்டான். நானும் அவனை அப்படியே எண்ணி நான் உண்ணும் உணவை எனது தட்டிலிருந்து எடுத்து அவனுக்கு அன்பொழுகக் கொடுத்து சாப்பிடச் சொல்லுவேன்.
ஆ, அவன் இப்படியானதொரு கொடுந் தீங்கை எனக்குச் செய்வான் என்று துளிதானும் நான் நினைத்துப் பார்க்கவே இல்லை. காரணம், அவன் அத்தனை கிருபையாக அழுது ஜெபிப்பான். நான் செல்லும் ஜெப வீட்டிற்கு வரும் அவன் அங்கு அந்நிய பாஷைகளை எல்லாம் சரளமாகப் பேசுவான். பாஷைகளைப் பேசி அதை வியாக்கியானமும் செய்வான். அதுமட்டுமா, அவன் தீர்க்கத்தரிசனமும் சொல்லுவான். இப்படிப்பட்ட தேவ கிருபைகளைப் பெற்ற ஒருவன் எனது மனைவியை என் கண்களுக்கு முன்பாகவே தனதாக்கிக் கொள்ளுவான் என்பதை யாரால் நினைக்க முடியும்? அப்படியானால், அவன் இதுவரை பேசிய அந்நிய பாஷைகள், தீர்க்கத்தரிசனங்கள், கண்ணீர் சிந்தி ஜெபித்த ஜெபங்கள் எல்லாம் எப்படிப்பட்டது? அவை அவனுக்கு எங்கிருந்து வந்தன? தேவனுடைய வசனங்களை அப்படியே நம்பும் எனக்கு இப்பொழுது நிகழ்ந்துள்ள காரியத்தை வைத்துப் பார்க்கும் போது அதை நம்ப கஷ்டமாக இருக்கின்றது.
எனது மனைவியை தன்னுடன் அழைத்துக் கொண்டு மறைவாக ஓடுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூட அவன் எனது தந்தையோடு ஜெப வீட்டின் வாராந்திர இரவு ஜெபத்தில் ஒன்றாக அமர்ந்து ஜெபித்திருக்கின்றான். அப்பொழுது அவன் கண்களிலிருந்து கண்ணீர் தாராளமாக வடிந்திருக்கின்றது. அதை எனது தகப்பனார் பார்த்திருக்கின்றார்கள். ஐயா, இந்தக் கண்ணீரின் அர்த்தம் என்ன? இந்தக் கண்ணீரைக் கொண்டு வந்தது யார்? தேவ மக்கள் இப்படியும் மாய்மாலமாக நடப்பார்களா?
போலீஸ் காவல் நிலையத்தில் கூட அவன் எனக்கு இரக்கம் காண்பிக்கவில்லை. எனது மனைவியோடு அங்கு நின்று கொண்டிருந்த அவன், அவளை எவ்விதத்திலும் தன்னோடு அழைத்துக் கொண்டு போவதில்தான் உறுதியாக இருந்தானே தவிர எனக்கு இரக்கம் பாராட்டி எனது மனைவியை என்னண்டை விட்டுச் செல்ல அந்தக் கொடியவனுக்கு சற்றும் மனதில்லாமல் போயிற்று. எனது மனைவியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். புருஷனாகிய என்னை அவள் நினைக்காத போதினும் தான் பெற்று வளர்த்து பத்து ஆண்டுகளுக்கு மேலாக பாலூட்டி, சீராட்டி, பாசத்தைக் கொட்டி வளர்த்த தனது கர்ப்பத்தின் கனிகளையே கடுகளவும் நினைத்துப் பார்க்காமல் பிள்ளையே பெறாத மலடிப் பெண்ணைப் போல மகா கடூரமாக நடந்து கொண்டு விட்டாள். "நீ பெற்ற உனது இரு பிள்ளைகளின் முகம் நினைத்து வீடு திரும்பு" என்ற அவளது உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இனஜனபெந்துக்கள் அனைவரின் கெஞ்சல்களும், கதறல்களும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகக் கடைசியில் முடிந்தது. அவள் தன் இருதயத்தை கருங்கல்லாக்கிக் கொண்டு அந்த தீயவனோடேயே இறுதியில் சென்று விட்டாள். காவல் நிலையத்தில் தான் கட்டின புடவையோடு மட்டும் நின்று கொண்டிருந்த அவள் மேல் எனது இரக்கம் நிறைந்த தகப்பனார் மனதிரங்கி வீட்டிலிருந்த அவளுடைய புடவைகளையும், துணிமணிகளையும் அவள் தன்னுடன் கொண்டு செல்ல அனுமதித்தார்கள்.
கல்லை, மண்ணை வணங்கும் இந்து மக்கள் என்று கூறி எங்களை வெறுக்கும் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட ஈனமான நாற்றச் செயலையும் செய்வதுண்டுமோ என்று சொல்லி காவல் நிலையத்தில் எங்களை விசாரித்த இந்து மதத்தைச் சேர்ந்த உயர் காவல் துறை அதிகாரி காரி உமிழ்ந்து எனது மனைவியையும், அவளுடைய காதலனையும் தம்மைவிட்டுத் துரத்திவிட்டார்" என்று கூறினான்.
இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அந்த கிறிஸ்தவ தம்பி அழுத அழுகையும், வடித்த கண்ணீரும் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு வேதனையின் காரியமாகும். பிறருடைய மனைவியை இச்சையோடு மாத்திரமல்ல, சாதாரணமாக பார்ப்பது கூட எத்தனை கொடிய பாவம் என்பதை அந்த வாலிபனின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீர் எடுத்துக்கூறுவதாக இருந்தது. ஆண்டவர் இயேசுவின் அன்பில் வளர்ந்து அவருக்குள் ஜீவிக்கும் அந்த அன்புத் தம்பிக்கு ஆறுதல் கூறி உருக்கமாக அழுது ஜெபித்துவிட்டு வீடு வந்து அந்த சம்பவத்தை அதிகமாக சிந்தித்துப் பார்க்கத்தொடங்கினேன்.
மேற்கண்ட கிறிஸ்தவ வாலிபன் தன்னைவிட்டு ஓடிச்சென்று அந்நியனின் மார்பை தழுவிக்கொண்ட தனது மனைவியின் துரோகச் செயலை இராக்காலங்களில் நினைப்பானானால் அவன் தனது கண்ணீரால் தனது தலையணையை நிச்சயமாக நனைத்திருப்பான். அவளுடைய துரோகத்தை நினைத்து ஏங்கி கதறியிருப்பான். அதற்கு சற்றும் சந்தேகமே இல்லை. இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணி தற்கொலை செய்து கொள்ளக்கூட தனக்கு எண்ணம் வந்ததாக அவன் என்னிடம் சொன்னதுண்டே! ஆ, கை பிடித்து தாலிகட்டிய புருஷனுக்கு மனைவி துரோகம் செய்யும் காரியம் எத்தனை கொடியது!
சோரம்போன மேலே குறிப்பிட்ட பெண்ணைக் குறித்து நான் யோசித்துக் கொண்டிருக்கும்போது தேவன் என்னோடு பேசத் தொடங்கினார். "பாவத்தின் பகட்டில் மயங்கி சாத்தானுக்கு நீ உன்னை முற்றுமாகக் கையளித்துவிடும் ஒவ்வொரு நேரத்திலும் உன் ஆத்தும மணவாளனாகிய எனக்கு நீ சோரம்போன பெண்ணாகத்தான் இருக்கின்றாய். மனைவியை அந்நியனுக்குப் பறிகொடுத்து இராக்காலங்களில் அங்கலாய்த்த அந்த வாலிபனைப் போலவேதான் நீயும் பிசாசின் அடிமைத்தனத்தில் இருக்கும் நாள் வரை என் இருதயம் உனக்காக அங்கலாய்க்கின்றது. இராக்காலங்களில் என் உள்ளம் உனக்காக புலம்பி பிரலாபிக்கின்றது" என்று தேவன் பேசினார்.
பரிசுத்த வேதாகமத்திலே விசுவாசிக்கும், தேவனுக்குமுள்ள பரிசுத்த உறவை மணவாட்டிக்கும் ஆத்தும மணவாளனுக்குமான பரலோக உறவாக எடுத்துப் பேசப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அப்போஸ்தலன் கொரிந்து சபைக்கு இது குறித்து எழுதும்போது "நான் உங்களை கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக் கொடுக்க நியமித்தபடியால் உங்களுக்காக தேவ வைராக்கியமான வைராக்கியம் கொண்டிருக்கிறேன்" (2 கொரி 11 : 2) என்று குறிப்பிட்டார். இந்தப் பரிசுத்த மணவாளன், மணவாட்டியின் ஐக்கிய உறவு உன்னதப் பாட்டுகளின் புஸ்தகத்தில் சிறப்பான இடம் பிடித்திருப்பதை நாம் பரவசத்துடன் வாசிக்கலாம். ஆனால் பாருங்கள், யூதர்கள் தங்கள் பிள்ளைகள் தக்க பருவம் வரும் வரை உன்னதப்பாட்டுகளின் புத்தகத்தை எடுத்துப் படிக்க அனுமதிக்கமாட்டார்களாம். ஆண், பெண் பாலுறவு காரியங்கள் அதில் இடம் பெற்றுள்ளது என்ற எண்ணத்தில் அவர்கள் அப்படி தடை செய்கின்றனராம். மனந்திரும்பாத அந்த ஜென்ம சுபாவமுள்ள யூதர்களை நாம் குறை சொல்லி யாது பயன்? எனினும், மெய்யான இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற கர்த்தாவோடு உறவாடி மகிழும் தேவப் பிள்ளைக்கு உன்னதப் பாட்டுகளின் புஸ்தகம் ஒரு பொற் சுரங்கமாகும். மணவாளி தன் ஆண்டவர் பேரில் நேசத்தால் சோகம் அடைந்திருக்கும் ஒரு நிலையை உன்னதப்பாடு 5 : 8 ஆம் வசனத்தில் நாம் பார்க்கின்றோம். அந்த நேசம் எப்படிப்பட்டதோர் நேசம் என்பதை மணவாட்டி குறிப்பிடும்போது "நேசம் மரணத்தைப் போல் வலிது, நேச வைராக்கியம் பாதாளத்தைப் போல் கொடிதாயிருக்கிறது, அதின் தழல் அக்கினி தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது" (உன்னதப்பாட்டு 8 : 6) என்று கூறுகின்றாள்.
அந்தப் பரலோக நேசத்தை "திரளான தண்ணீர்கள் அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது" (உன் 8 : 7) என்று மணவாளி தன் மார் தட்டி பேசுகின்றாள். நமது வாழ்வில் நம்மை வந்து தாக்கும் எந்த ஒரு பாவச் சோதனைக்கும், மலைபோன்ற பாடுகளுக்கும் முன்பாக மருள விழுந்து அடிபணியாமல் இயேசு தகப்பனோடுள்ள நமது நேசத்தை வலுவானதாக தேவ பெலத்தால் காத்துக் கொள்ளுவோமாக. "நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுரு மரம், நம்முடைய மச்சு தேவதாரு மரம்" (உன்ன 1 : 17) என்று மணவாளி தனது நேசரைப் பார்த்து தனது நேசத்தின் வலிமையை எடுத்துக் கூறுகின்றாள். அப்படியே நமக்கும் நமது ஆண்டவருக்கும் உள்ள இடைவிடாத பரிசுத்த சகவாசம் தேவதாரு மரங்களால் மச்சுப் பாவப்பட்டு, அந்த அன்பின் உறவு மாளிகையை கேதுரு மரங்கள் தாங்கும் விதத்தில் நாம் எடுத்து நிறுத்துவோமாக.
தேவபிள்ளையே நன்கு நினைவில் வைத்துக் கொள், தேவனுடைய இருதயத்திற்கு துன்பம் தரும் விதத்தில் நாம் பாவம் செய்யும் ஒவ்வொரு சமயமும் நம்மை நமது இரட்சிப்பின் நாளிலே தமக்கென்று கரம் பிடித்த நம் ஆத்தும மணவாளனாம் இயேசு இரட்சகரை நாம் புறம்பே தள்ளிவிட்டு சாத்தானாம் பிசாசு என்ற அந்நிய புருஷனோடு சோரம் போய் அவனது மார்பை தழுவும் பொல்லாத, நன்றி கெட்ட சோர ஸ்திரீகளாக நாம் மாறுகின்றோம். |