கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு துதி, கனம், மகிமை உண்டாவதாக. கர்த்தருக்குச் சித்தமானால் இந்த 2009 ஆம் ஆண்டிலும் அக்டோபர் மாதத்தில் கடந்த ஆண்டுகளைப்போல இரண்டு வாகனங்களை ஒரு முழுமையான மாதத்திற்கு வாடகைக்கு அமர்த்தி நாங்கள் ஒரு குழுவாக உத்தராஞ்சல் மாநிலத்திலுள்ள கட்வால் இமயமலைப் பகுதிகளில் உள்ள கிராமாந்திரப் பகுதிகளில் தேவ ஊழியத்தைச் செய்யவிருக்கின்றோம்.
நமது தேவ ஊழியங்களுக்குத் தேவையான நல்ல தரமான ஹிந்தி மொழி சுவிசேஷ கைப்பிரதிகள் சிவகாசியிலுள்ள ஓரேப் அச்சுக்கூடத்திலும், "சாந்தி மார்க்கம்" என்று அழைக்கப்படும் ஹிந்தி மொழி லூக்காசுவிசேஷங்கள் இந்திய வேதாகம சங்கத்தினரால் பெங்களூரிலும் அச்சாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தடவை இந்து மக்களுக்கு மிகவும் பயனுள்ள சில ஹிந்தி சுவிசேஷ கைப்பிரதிகளை மும்பையிலுள்ள Gospel Literature Service என்ற ஸ்தாபனத்தாரிடமிருந்து விலை கொடுத்து வாங்கியிருக்கின்றோம். இவை நீங்கலாக ஹிந்தி மொழி புதிய ஏற்பாடுகள், மற்றும் தரமான கிறிஸ்தவ சுவிசேஷ பிரசுரங்கள் மொராதாபாத் மற்றும் டில்லியிலிருந்து பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவைகள் எல்லாம் ஏற்ற நேரத்தில் எங்கள் கரங்களுக்குப் பத்திரமாக வந்து கிடைக்க பெற்று நாங்கள் கர்த்தருக்குள் திட்டமிட்ட தேதியில் எங்கள் ஊழியங்களை ஆரம்பிக்க அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
இந்த அருமையான தேவ ஊழியங்களை நாங்கள் எந்த ஒரு நிலையிலும் எங்கள் மாம்சத்தின்படி செய்யாமல், மிகுந்த ஆத்தும பாரத்தோடும், அதிகமான ஜெபத்தோடும், நஷ்டப்பட்ட ஒரு ஆத்துமா முடிவில்லாத நித்திய அக்கினியில் அனுபவிக்கக்கூடிய சொல்லொண்ணா வேதனையை எங்கள் மனதில் கொண்டு மிகுந்த மன உருக்கத்தோடும், தேவ அன்பின் பாரத்தோடும் நாங்கள் செய்ய தேவ மக்களாகிய நீங்கள் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
நாங்கள் பயணிக்கக்கூடிய இமயமலைகளின் கெடு பாதாளமான செங்குத்துப் பாதைகளைக் குறித்த பயங்கரங்களை வர்ணிக்க இங்கு அவசியமில்லை என்று நினைக்கின்றேன். கடந்த நாட்களில் அது குறித்து நான் உங்களுக்கு விபரமாக எழுதியிருக்கின்றேன். அந்த சாநிழல் பள்ளத்தாக்கின் பாதைகளில் வாகனங்களை ஓட்டும் நமது வாகனங்களின் டிரைவர்களுடைய கரங்களை கர்த்தர் பிடித்துக் கொள்ளவும், வாகனங்கள் இரண்டும் அவருடைய கல்வாரி இரத்தத்துக்குள்ளாக மூடி மறைத்துக் காக்கப்படவும் அன்பாக ஜெபித்து வாருங்கள்.
ஊழியத்தின் பாதையில் அன்பின் ஆண்டவர் ஒவ்வொரு நாளும் எங்களுக்கு நல்ல ஊழிய வாய்ப்புகளைத் தரவும், ஆரம்ப பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், மேல் நிலை பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் அநேகம் மாணவ மாணவியருக்கு நாங்கள் தேவனுடைய வார்த்தைகளைக் கொடுக்கும் சிலாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவும், நாங்கள் எங்களுடன் கொண்டு செல்லும் அனைத்து தேவனுடைய பிரசுரங்களையும் ஒன்றுவிடாமல் மக்களுடைய கரங்களில் ஜெபத்தோடு கொடுத்து முடித்து மிகுந்த சந்தோசத்தோடு திரும்பவும் உங்கள் ஜெபங்களை ஆவலோடு எதிர் நோக்குகின்றோம்.
எங்களுடைய ஊழிய நாட்கள் முழுமையிலும் கர்த்தர் எங்கள் எல்லாருக்கும் நல்ல உடல் நலத்தை தரவும், தேவ ஊழியர்கள் மற்றும் இரண்டு வாகனங்களின் டிரைவர்களின் குடும்பங்களையும் கர்த்தர் இந்த நாட்களில் எந்த ஒரு அசம்பாவிதங்கள் அணுகாதபடி அவர்கள் விட்டு வந்த இடங்களில் கண்ணின்மணி போல காத்துக் கொள்ளவும் ஜெபிப்பதுடன், அன்பின் ஆண்டவர் எங்களுக்கு நல்ல பாதுகாப்பான தங்கும் இடங்களையும், இராக்காலங்களில் நல்ல சமாதானமான இளைப்பாறுதலையும், எங்கள் உடல் நலத்துக்கு ஒத்துப்போகக் கூடிய நல்ல ஆகாரங்களையும் கொடுத்து போஷிக்கவும் அன்பாக ஜெபியுங்கள்.
ஊழியத்தின் நாட்களில் நாங்கள் தங்கும் இடங்களில் தேவையில்லாத எந்த வார்த்தைகளும் பேசாமல் எப்பொழுதும் ஜெப நிலையில் காணப்படவும், அன்றன்று நாங்கள் செய்த ஊழியங்கள், செய்யப் போகின்ற ஊழியங்களுக்காக அதிகமாக ஜெபிக்க கர்த்தர் எங்களுக்கு கிருபை தந்தருள அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
உண்மையாய், ஆத்தும பாரத்தோடு, கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமையாக மட்டும் செய்யப்படும் எல்லா தேவ ஊழியங்களுக்கும் எதிராகப் போர்க் கொடி உயர்த்தும் சாத்தான் நமது ஊழியங்களுக்கும் விரோதமாக மேற்கொள்ளும் அவனது அனைத்து உபாய தந்திரங்களும் அவமாய்ப் போகவும், நம்முடைய ஊழியங்களுக்கு பின்னடைவை உண்டுபண்ணக்கூடிய அவனுடைய சதி ஆலோசனைகள் அனைத்தும் நிர்மூலமாகவும், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படியாக வந்த தேவ மைந்தன் அவனுடைய வல்லடிக்கு எங்களைப் பாதுகாத்துத் தப்புவிக்கவும் அன்பாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.
மேற்கண்ட ஜெபக்குறிப்புகள் நீங்கலாக வேறு எந்த காரியங்களுக்காகவாவது எங்களுடைய ஊழியத்தின் காரியமாக தேவப்பிள்ளைகளாகிய உங்களுடைய உள்ளத்தில் அன்பின் ஆண்டவர் ஜெபிக்க ஏவுவாரானால் அந்தக் காரியங்களுக்காகவும் தயவாக ஜெபித்துக் கொள்ளுங்கள். ஊழியங்கள் கர்த்தருடையது, ஆத்துமாக்கள் கர்த்தருடையவர்கள். அதற்கான பிரதி பலனை அன்பின் ஆண்டவர் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்குத் தந்தருள்வார். |