"தீங்கு நாட்கள் வராததற்கு முன்னும், எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்கு முன்னும் நீ உன் வாலிபப் பிராயத்திலே (தேவன் உனக்குக் கிருபையாகக் கொடுத்த இந்த அனுக்கிரக காலத்திலே) உன் சிருஷ்டிகரை நினை" (பிரசங்கி 12 : 1)



ஒரு தடவை ஒரு கிறிஸ்தவ வாலிபன் தேவ எக்காளம் பத்திரிக்கையைக் குறித்து இவ்விதமாகக் கடிதம் எழுதியிருந்தான்:-

"உங்கள் பத்திரிக்கையை நான் எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் தொடர்ச்சியாக படித்துள்ளேன். எங்கள் வீட்டிற்கு ஏராளமான கிறிஸ்தவ பத்திரிக்கைகள் வந்தாலும் தேவ எக்காளம் பத்திரிக்கை மாத்திரமே பணத் தேவைகள் பற்றியோ, சுகமாக்கும் காரியங்கள் பற்றியோ ஒருக்காலும் விளம்பரம் செய்ததில்லை. அடிக்கடி மானிட வாழ்வின் ஜீவியம் குறித்த செய்திகளையே அது சுமந்து கொண்டு வரும். இதுவே ஒரு உண்மை கிறிஸ்தவ ஊழியத்தின் அடித்தளம் என்று நான் கருதுகின்றேன்" என்று குறிப்பிட்டிருந்தான். கர்த்தருக்கே துதி உண்டாவதாக. அந்த வாலிபனின் கடிதத்தின் வரிகளின்படி மானிட வாழ்வின் காரியங்கள் குறித்து எழுதுவதையே நான் பெரிதும் விரும்புகின்றேன்.

"ஒரு மனிதன் தன் வாழ்வில் முதன் முறையாக மக்கள் தன்னை "விருத்தாப்பியன்" அதாவது "கிழவன்" என்று அழைப்பதை கேட்கும்போது பெரிதும் அதிர்ச்சியடைந்து போகின்றான்" என்று ஆலிவர் வெண்டல் என்பவர் குறிப்பிட்டிருந்ததை ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிக்கை தனது இதழ் ஒன்றில் எழுதியிருந்தது.

விருத்தாப்பியம் தேவனற்ற மக்களுக்கு பயங்கரமான காரியமாகும். கிழப்பருவம் யாவருக்கும் மொத்தமாக பல விஷயங்களில் ஒன்றாக இருப்பதையும் நாம் காண இயலும்:-

 

சரீரத்தின் பெலன் ஒடுங்கிப் போகும் காலம் அது

விருத்தாப்பியத்தில் மனிதனின் பெலன் குன்றிப் போகும். "முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும் என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்" (சங் 71 : 9) என்று சங்கீதக்காரன் தன் கர்த்தரை நோக்கிக் கெஞ்சுவதை நாம் பார்க்கின்றோம். "சிங்கம் கெர்ச்சிக்கிறது. யார் பயப்படாதிருப்பான்?" (ஆமோஸ் 3 : 8) என்று தேவ வார்த்தை நம்மைப் பார்த்துக் கேட்கின்றது. அப்படிப்பட்ட மிருகங்களுக்கெல்லாம் அரசனான மகா பெலமுள்ளதும் தனது கூர்மையான கால்களின் நகங்களாலும், தனது பெரிய பற்களினாலும் மனுஷரையும் மிருகங்களையும் பீறிப் போடக்கூடியதுமான பெரும் சிங்கத்தையும், கரடியையும் தனது உடலின் மகா பெலத்தால் தனது வாலிபத்தின் நாட்களில் கொன்று வீழ்த்திய தாவீது இராஜாவின் பெலன் அவர் சரீரத்திலிருந்து விடைபெற்றுச் சென்று விடுவதை அவரது விருத்தாப்பியத்தில் நாம் காண்கின்றோம். தனது பிராண பகைஞனாகிய சவுலுக்குத் தப்பி யூதேயாவின் மலைகளிலும், குன்றுகளிலும், கன்மலை வெடிப்புகளிலும், வனாந்திரங்களிலும் தங்கித் தாபரித்து அந்த வனாந்திர பிரதேசங்களின் இரத்தத்தை உறைய வைக்கும் கடுங்குளிரை வாழ்வின் யௌவனத்தில் இருந்தபோது நிர்விசாரமாக அத்தனை சுலபமாக சகித்துக் கொண்ட அவருக்கு விருத்தாப்பியத்தின் அந்திம காலத்தில் அரண்மனையின் உள் அறையில் இருக்கக்கூடிய வெகு அற்பமான சிறிய குளிரைக் கூட தாங்க இயலாமல் சூனேம் ஊராளான அபிஷாக் என்ற பெண்ணின் சரீர அனலைத் தேட வேண்டிய துயரமான நிலை அவருக்கு உண்டாயிற்று.

உயர்நிலை பள்ளியில் நான் மாணவனாகப் படித்துக் கொண்டிருந்த நாட்களில் சுமார் 3 மைல்கள் வீட்டிலிருந்து கால் நடையாக நடந்து பள்ளியை எட்டிப் பிடிக்க வேண்டும். வழியில் உள்ள தென்னை மரத் தோப்பிலே உள்ள முற்றலான தேங்காய்களை எனது தோழர்களோடு சேர்ந்து கல்லெறிந்து நான் அவைகளை வீழ்த்தி விடுவேன். மரம் ஏறி திருட்டுத் தேங்காய் பறிக்க சந்தர்ப்பம் வாய்க்காத சமயங்களில் எல்லாம் எனது கையும், கற்களும் திருடுவதற்கு போதுமானதாக இருந்தன. கல் எறிந்து எத்தனை அழகான அணில்கள், பாடும் பறவைகளை நான் வீழ்த்தினதுண்டு. ஆனால் இன்று சிறிய தூரம் கூட கரத்தை ஓங்கி கல் வீச இயலாது போயிற்று. மெய்தான் விருத்தாப்பியத்தில் மாந்தர்களின் பெலன் குன்றிப்போய்விடும்.

 

மக்கள் நம்மை ஒரு மூலையில்
ஒதுக்கித் தள்ளி வைக்கும் காலம் அது

"கிழவன் சொல் கின்னரத்துக்கு ஏறுமா?" என்ற உலக பழமொழிப்படி வயது சென்று போன மக்களின் வார்த்தைகளையும், ஆலோசனைகளையும், பெற்ற மக்களும், குடும்பத்தினரும், பிறரும் கேட்கவே மாட்டார்கள். ரெகொபெயாம் தனக்கு அருமையான தேவ ஆலோசனை சொன்ன முதியோர் சொல்லைக் கேட்கவில்லை என்று வேதாகமத்தில் நாம் காண்கின்றோம். அதின் காரணமாக அவன் ஆளுகை செய்த பெரிய தேசம் இரண்டாக உடைந்தது நமக்குத் தெரியும்.

வயது சென்று போனவர்களின் வார்த்தைகளை கேட்காமல் போவது மாத்திரமல்ல அவர்களை அப்பால் ஒதுக்கியும் தள்ளிவிடுவார்கள். அவர்கள் அண்டை அமர்ந்து அவர்களுடன் பேசி அவர்களை அன்பாக நேசித்து அவர்களுக்கும் குடும்பத்தில் முக்கியமான பங்கையும், பொறுப்பையும் கொடுக்க இளைய தலைமுறையினர் அதிகமாக விரும்புவதே இல்லை. அதின் நிமித்தமாக இஸ்ரவேல் அன்று உடைந்து தனித்துச் சென்றது போல இன்றும் குடும்பங்களிலே எத்தனையோ உடைவுகள் ஏற்படுகின்றன.

வயது சென்றுபோன அன்பான பெற்றோரை தனி அறை கொடுத்து அப்படியே சிறை வைத்திருக்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை ஏராளம். அல்லது வீட்டு வராந்தாவில் ஒரு கட்டிலைப் போட்டு கொடுத்து வயதான பெற்றோரை வீட்டிலிருந்து தனிமைப்படுத்தி விடுவதும் இன்று சாதாரணமாக நடக்கும் காரியமாகும். அவ்வப்போது வீட்டு நாய்க்கு சோறு போடுவது போல அந்த விருத்தாப்பிய பெற்றோருக்கு சோறு போட்டு வரும் பிள்ளைகளும் உண்டு. ஒரு வார்த்தை கூட அவர்களிடம் பேசமாட்டார்கள். விருத்தாப்பிய பெற்றோர் பேசினாலும் அவர்கள் வார்த்தைகளுக்கு நின்று பதில் சொல்லாமல் ஏதோ நடந்து கொண்டே முணங்கிக் கொண்டு பிள்ளைகள் செல்லுவார்கள். எத்தனை கொடுமை பாருங்கள்.

மேற்கண்ட காரியங்கள் வீட்டில் நடப்பவை. ஆனால். விருத்தாப்பியர்கள் வீதிக்குச் சென்றால் அவர்களை மதித்து நடப்போர் எவரும் கிடையாது. பிள்ளைகள், பாலர், இளைஞர் யாவரும் விருத்தாப்பியர்களை கண்டு அப்பால் விலகிச் செல்லுவார்கள். பேருந்துகளில் கிழவர்கள் மணிக்கணக்காக நின்று பிரயாணம் செய்து வர அவர்களுக்கு அருகில் இள வயதினர் சௌகரியமாக உட்கார்ந்து பேசி சிரித்து வருவார்கள்.

 

மனிதன் தன் சாவை விரும்பும் காலம் அது

மனிதர் எவரும் சாவை அத்தனை எளிதாக விரும்புவதில்லை. ஆனால், விருத்தாப்பியத்தின் துயரம் அநேகருக்கு சாவை மனதார விரும்பச் செய்து விடுகின்றது. எங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் வயது முதிர்ந்த இந்து பெரியவர் ஒருவர் ஒரு நாள் என்னண்டை வந்து "நான் சீக்கிரமாக செத்துப் போக நீ ஜெபம் செய். கடவுள் உனது ஜெபத்தைக் கட்டாயம் கேட்பார்" என்றார். விருத்தாப்பியனான அவருக்கு வீட்டில் என்ன பாடுகளோ யார் அறிவார்?

ஒரு வயது முதிர்ந்த கத்தோலிக்க மனிதரை நான் ஒரு நாள் சந்தித்தேன். "இன்று எனக்கு 73 ஆம் வயது பிறந்துள்ளது" என்று அவர் என்னிடம் சொன்னார். "கர்த்தர் உங்களுக்கு இன்னும் நீண்ட ஆயுட்காலம் தரவேண்டும்" என்று நான் சொன்னேன். அதற்கு மாறுத்தரமாக அந்த ஐயா "ஐயோ, உங்கள் வாயிலிருந்து அந்த வார்த்தை ஒரு போதும் வரக்கூடாதே. அது பலித்துவிட்டால் என்னை விட நிர்ப்பந்தன் உலகில் யாராக இருக்க முடியும்? சீக்கிரமாக எனக்கு மரணம் சம்பவிக்க வேண்டும்" என்று சொன்னார்.

வீடுகளிலே பெற்ற பிள்ளைகளால் மற்றும் கொடுமையான மருமகள்மாரால் பாடுகள் பட்டு வரும் அநேக கிறிஸ்தவ விருத்தாப்பியர்கள் கர்த்தர் தங்களை சீக்கிரமாக எடுத்துக் கொள்ள தங்களுக்காக ஜெபிக்கும்படியாக என்னைக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

சொந்த சரீர அவயவங்களே கீழ்ப்படியாத
துயர காலம் அது

தாங்கள் பெற்ற தங்கள் அன்பு பிள்ளைகள் தான் விருத்தாப்பியமான தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாமல், அவர்களுக்கு அன்பு செய்யாமல், அவர்களை முழு பகையாகக் பகைத்து வீட்டின் தனி அறைகளிலே அவர்களை சிறை வைக்கின்றனர் என்றால் அவர்களின் சொந்த சரீரமோ அதைவிட படு மோசமாக விருத்தாப்பியர்களான அவர்களை நடத்துகின்றது. வயது செல்லச் செல்ல சரீர அவயங்கள் நமது விருப்பத்துக்கு மாறாக நடக்கத் தொடங்கி விடுகின்றன.

ஒரு நாள் இரவு நேரம் பேருந்து ஒன்று விரைந்து சென்று கொண்டிருந்தது. பேருந்திலிருந்த பெரியவர் ஒருவர் பேருந்தின் நடத்துனரிடம் வந்து உடனே பேருந்தை நிறுத்தும்படியாக சொன்னார். அது யானைகளும், கானக விலங்கினங்களும் உள்ள காட்டுப் பாதை. இருப்பினும் முதியவரின் விருப்பப்படி உடனே பேருந்து நிறுத்தப்பட்டு அவர் தனது காரியத்தை முடித்துத் திரும்பும் வரை பொறுமையோடு டிரைவர் காத்திருந்தார். பேருந்தினுள் ஏறிய பெரியவர் "அப்பப்பா போதும், அதற்கு மேல் அடக்க என்னால் இயலாது" என்று சிரித்த முகத்தோடு தனது இருக்கையில் வந்து அமர்ந்தார். கொஞ்சம் கூட கீழ்ப்படிய மனமற்ற சரீர அவயவங்களின் காலம் அது.

ஒரு முறை ஒரு மூதாட்டி நான் பயணம் செய்து கொண்டிருந்த பேருந்தில் பயணித்து வந்து கொண்டிருந்தவர்கள் பேருந்து நின்று அதிலிருந்து இறங்கு முன்னரே வாகனத்தின் படிகளிலேயே தனது காலைக்கடன்களை முடித்து விட்டார்கள். உண்மைதான், சரீர அவயவங்களை அடக்கிக் கட்டுக்குள் வைக்க முடியாத கொடிய காலம் அது. அதின் காரணமாக அநேக முதியோர் பசி, பட்டினியோடு தங்கள் வாயையும், வயிற்றையும் நன்கு கட்டி பேருந்துகளிலே பிரயாணம் செய்வதை நாம் காணலாம். அவர்களுடைய சரீர அவயவங்களின் அடங்காமையின் காரணமாக அவர்கள் அப்படிப் பட்டினியாக இருக்க வேண்டியது தீராத அவசியமாகிவிடுகின்றது.

தனது சரீரம் தன்னோடு தனது விருப்பப்படி கீழ்ப்படிந்து ஒத்து உழைப்பதில்லை என்ற ஒரே காரணத்தினிமித்தம் அந்த நாட்களிலிருந்த பூதான இயக்கத் தலைவர் வினோபாபாவே அவர்கள் தனது 88 ஆம் வயதில் 155 மணி நேரம் அன்னம், தண்ணீர் எதுவும் தனது சரீரத்திற்குக் கொடாமல் 1973 ஆம் ஆண்டு தன்னையே சாகடித்துக் கொண்ட செய்தியை நீங்கள் செய்தி தாட்களில் வாசித்திருப்பீர்கள். அப்பொழுது இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார் வினோபாபாவே அவர்களை அப்படிச் செய்வதிலிருந்து விலகியிருக்கும்படி கூறிய ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அவர் கேட்கவில்லை. இறுதியாக அவர் மரித்தே போனார். உண்மைதான், முதுமையில் நமது அவயவங்களே பெலவீனம் காரணமாக நமக்குப் பணிந்து நடக்காத காலம் அது.

 

பூவுலகில் நரகம் ஆரம்பிக்கும் காலம் அது

உலக இரட்சகர் இயேசு கிறிஸ்துவை தங்கள் ஆத்துமாவின் நேசராக ஏற்று மனந்திரும்பி பாவ மன்னிப்பின் நிச்சயம் பெற்று பரிசுத்தமாக தங்கள் ஜீவியத்தை காத்துக் கொள்ளாத யாவருக்கும் விருத்தாப்பியத்திலேயே நரகம் தொடங்கிவிடும். உடலிலே பெலன் இருந்த வாலிப நாட்களிலே அவர்கள் தங்கள் வலுவினாலும், திறமையினாலும் உலகத்தின் மாயையின் இன்பங்களினால் தங்களைத் திருப்தி பண்ணிக் கொள்ளுகின்றனர். ஆனால், சரீரத்தின் பெலன் குன்ற, குன்ற நரகத்தின் காட்சி அவர்களுக்கு தெரியத் தொடங்கி விடுகின்றது.

தங்கள் வாலிபத்தின் பெலத்தின் முறுக்கினால் துள்ளாட்டம் போட்ட பலர் விருத்தாப்பியத்தில் குழந்தைகள் போல கதறுவதை நான் கண்டிருக்கின்றேன். காரணம், அவர்கள் செய்த பாவச் செயல்களின் குத்துண்ட மனச்சாட்சி அவர்களை நரகம் போல எரிக்கத் தொடங்கி விடுகின்றது.

பக்கவாதத்தினால் பீடிக்கப்பட்டிருந்த ஒரு ஓய்வுபெற்ற கிறிஸ்தவ காவல் துறை அதிகாரியை நான் மருத்துவமனையில் சந்தித்து அவர்களுக்காக ஜெபித்து வந்தேன். அவர்கள் பணியில் இருந்த நாட்களில் தனது அதிகாரத்தினால் மக்களுக்கு இளைத்த நியாயமற்ற செயல்களை தேவ சமூகத்தில் கண்ணீரோடு அறிக்கையிட நான் அவர்களுக்கு ஆலோசனை சொன்னபோது அவர்கள் ஏங்கி, ஏங்கி அழுதார்கள். குத்துண்ட மனச்சாட்சி நரக அக்கினியிலும் கொடியது ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கள் ஊருக்கு மேற்கு திசையில் பிடாநேரி என்ற ஒரு கிராமம் ஒரு குளக்கரையில் ஆலமரங்களுக்கு உள்ளாக இருக்கின்றது. அந்த நாளில் அங்கு ஒரு மனிதர் தனது திடீர் கோபம் காரணமாக இரண்டு வாலிபர்களை வெட்டி அவர்களின் தலைகளைத் துண்டித்து அந்த தலைகளிலிருந்து வடிந்த இரத்தத்தைக் குடித்து அந்த இரு தலைகளோடு காவல் நிலையம் சென்று சரணடைந்த ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது. அந்த நாட்களில் அது மிகவும் பரபரப்பாக எங்கும் பேசப்பட்டது. அந்தக் கொலைகளைச் செய்த மனிதன் எப்படியோ பின் நாட்களில் நீதிமன்றத்தில் விடுதலையடைந்தான். அந்த மனிதனை பின் நாட்களில் எனக்கு அடையாளம் காண்பித்தார்கள். நான் அந்த மனிதனைப் பார்த்தபோது அவனுடைய முகம் கடந்த காலத்தில் அவன் செய்த கொடிய கொலை பாதகத்தின் காரணமாக முற்றும் இருளடைந்து உண்மையில் ஒரு பிசாசின் பயங்கர முகத்தோற்றத்தை அவன் கொண்டிருப்பதைக் கண்டேன்.

தங்களது வாழ்வில் பல தீய செயல்களை புரிந்து மற்றவர்களின் வாழ்வுகளுக்கு சாவு மணி அடித்து வாழ்ந்த பலர் தங்கள் விருத்தாப்பிய காலத்தில் தங்களுக்குள் பைத்தியக்காரர்களைப் போல பேசிக் கொண்டிருப்பதை நாம் காணலாம். தங்களுக்கு எதிரே இருக்கும் ஒரு நபருடன் பலத்த வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் போல கைகளை பலமாக ஆட்டி அசைத்து அவர்கள் வாதிடுவதை நாம் கவனிக்கலாம். அல்லது அவர்கள் தனிமையில் செல்லும்போது தங்களுடன் வரும் ஒரு நபருடன் தீவிரமாக பேசி சம்பாஷித்துக் கொண்டு செல்லுவது போல பேசிக் கொண்டு செல்லுவார்கள். கொஞ்ச நேரம் கூட அவர்களால் தனிமையாக இருக்க முடியாது. ஒரே அமர்க்களமான பேச்சாகிவிடும். மற்றவர்களின் வாழ்வில் மண்ணைப் போட்ட அவர்களின் இராக்கால நித்திரை இன்பமாக இருக்காது. தங்கள் கட்டில்களிலே இராக்கால தரிசனங்களைக் கண்டு அவர்கள் சத்தமிடுவார்கள். கெட்ட சொப்பனங்களை அவர்கள் கண்டு திகில் அடைந்து அலறி கட்டில்களிலிருந்து கீழே விழுவார்கள்.

தன்னைப் பெற்று வளர்த்த தனது விருத்தாப்பிய தந்தை ஷாஜஹான் மன்னனையே ஆக்ரா கோட்டையில் ஒளரங்கசீப் சிறை வைத்தார். அந்த தனிமையிலேயே ஷாஜஹானுக்கு நரக வேதனை தொடங்கிவிட்டது. தான் அதிகமாக நேசித்து மகிழ்ந்த தனது மனைவி மும்தாஜ்ஜின் கல்லறையை (தாஜ்மஹால்) காணக் கூட ஒளரங்கசீப் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை.

தான் பெற்ற தனது ஒரே மகனுக்காக திரளான ஐசுவரியத்தை சேர்த்துக் குவித்து வைத்த ஒரு உலகப்பிரகாரமான, தேவனற்ற கிறிஸ்தவ தகப்பனை அவரது அதே மகன் அவருடைய விருத்தாப்பிய காலத்தில் வீட்டு அறை ஒன்றில் சிறைப்படுத்தி வைத்து நடத்தினதை நான் அறிவேன். வீட்டின் வளர்ப்பு நாய்க்கு ஆகாரம் கொடுப்பது போல அவருக்கு ஆகாரம் கொடுக்கப்பட்டது. மனைவியை இழந்திருந்த அவர் மற்ற பெண்களோடு தகாதவிதமாக பேசிப் பழகுவதை தடுக்க வெளி உலக எந்த ஒரு தொடர்புக்கும் இடமளிக்காத விதத்தில் அவருடைய அறையிலிருந்த தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதைவிட வேறு நரகம் என்ன இருக்கின்றது? அந்த மனிதர் தனது தேவனைத் தேடி அவரைக் கனப்படுத்த வேண்டிய காலங்களில் எல்லாம் அவர் கர்த்தரின் முகத்தில் சேற்றை வாரிப் பூசிக்கொண்டிருந்தார். கிறிஸ்தவனானபடியால் கிறிஸ்மஸ் கொண்டாடும் அவர் தனது தேயிலைத் தொழிற் கூடத்தில் வேலை செய்யும் இந்து தொழிலாளிகளை பிரியப்படுத்த ஆயுத பூஜையில் கலந்து கொண்டு தனது வீட்டு சுவர்களில் சந்தன நாமம் போட்டு குங்குமப் பொட்டுப் போட அனுமதித்தார். கிறிஸ்தவனான அவருடைய தேவனுக்கு விருப்பமில்லாத செயலை நான் நேரில் அவருக்குச் சுட்டிக்காட்டினபோது அவர் என்னைப் பார்த்துச் சொன்ன ஒரே ஒரு வார்த்தை இன்றும் என் மனதை விட்டு நீங்கவில்லை. லுடிர கயயேவiஉ கநடடடிற - "நீ ஒரு மதவெறி பிடித்தவன்" என்பதாகும்.

 

தேவ மக்களின் விருத்தாப்பியம்

மெய் தேவ மக்களின் விருத்தாப்பியம் முற்றும் வேறுபட்ட காரியமாகும். தேவ மக்களின் விருத்தாப்பியத்தை "மோட்ச பிரயாணத்தின்" ஆக்கியோன் ஜாண் பன்னியன் என்பவர் "வாழ்க்கை நாடு" என்று அழகாக வர்ணித்து எழுதுவார். அந்த பக்தனின் வர்ணனையைக் கவனியுங்கள்:- "வாழ்க்கை நாட்டின் ஆகாயம் மகா இன்பமாயும், சுகத்துக்கு ஏற்றதாகவும் இருந்தது. இவ்விடத்தில் புஷ்பங்கள் மலர்ந்து கமகமவென்று வாசனை வீசின. இவ்விடத்தில் குருவிகளின் கூவுதலையும், காட்டுப் புறாக்களின் கனிந்த குரலையும் கேட்கலாம். இந்த நாட்டில் சூரியன் இரவும் பகலும் பிரகாசிக்கின்றது. இவ்விடத்தில் நவதானியங்களையிட்டாவது, திராட்ச ரசத்தைக் குறித்தாவது யாதொரு கவலையுமில்லை. இங்கிருந்து பார்த்தால் உச்சித பட்டணத்தின் அலங்கங்கள் எல்லாம் அதிகத் தெளிவாகத் தெரிந்தது. அது முத்துக்களாலும், விலையேறப்பெற்ற கற்களாலும் கட்டப்பட்டிருந்தது. அதின் தெருக்கள் தங்கத்தால் தளவரிசைப்படுத்தப்பட்டிருந்தது. அதின் இயல்பான ஜோதியோடு, அதனுள் பிரவேசித்த சூரியனுடைய ஜோதியும் கூடி ஜொலித்தது. கிறிஸ்தியான் அதின் மேல் உண்டான வாஞ்சையால் வியாதிப்பட்டு மயங்கி விழுந்தான். திடநம்பிக்கையும் அதே வியாதியால் இரண்டு மூன்று தரம் சோர்ந்து விழுந்தான். இவ்விடத்தில் அவர்கள் இருவரும் சற்று நேரம் மயங்கிக் கிடந்து தங்கள் நோயின் வேதனை பொறுக்கமாட்டாமல் "என் நேசரைக் கண்டீர்களானால், நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லுங்கள்" என்று அழுது புலம்பினார்கள்" என்று தொடர்ந்து எழுதிக் கொண்டு செல்லுவார்.

ஆ, தேவ மக்களின் முதுமை மகா மேன்மையானது. அது சமாதானம் நிறைந்தது. விசுவாசக் கண்கள் பூரண தெளிவடைந்து பரலோகத்தை துலாம்பரமாக காணும் காலம் அது. எனது விருத்தாப்பிய பரிசுத்த தகப்பனார் தனது அந்திம காலத்தில் தேவனுக்குள் எத்தனை களிகூருதலோடு இருந்தார்கள் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? தனது முழுமையான நேரத்தையும் பரிசுத்த கர்த்தரின் பாதங்களிலேயே அவர்கள் செலவிட்டு தன் ஆண்டவரை சந்திக்க ஆயத்தமாக இருந்தார்கள். குடும்ப ஜெபத்திலே அவர்கள் கர்த்தருக்குள் மகிழ்ந்து ஆரவாரித்தார்கள். ஒரு இளைஞனைப் போல அத்தனை பலமாகத் தன் கரங்களைத் தட்டி கர்த்தரைக் துதித்தார்கள்.

எனது தகப்பனாரின் மரணப்படுக்கையில் மக்கள் அவர்கள் அருகில் அமர்ந்து "என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீருமாக இருந்தவரே" என்று யோவாஸ் அரசன் எலிசா தீர்க்கனின் மேல் விழுந்து அழுது புலம்பியது போல எனது தகப்பனாரின் பரிசுத்தமான பக்தி வாழ்வை எண்ணி அழுத மக்கள் உண்டு. எனது தந்தை மரித்து அடக்கம் பண்ணப்பட்ட பின்னர் ஒரு வியாதிப்பட்ட விருத்தாப்பிய அம்மாள் வந்து தனது வியாதிக்காக இனி ஜெபிக்க ஒருவருமே இல்லையே நான் என்ன செய்வேன் என்று கூறிக் கொண்டே தனது அறியாமையின் நிமித்தமாக எனது தந்தையின் கல்லறைக்குச் சென்று அதின் அருகில் கிடந்த மண்ணில் கொஞ்சம் எடுத்துத் தனது சரீரத்தில் பூசிச் சென்றார்களாம். சுகமும் கிடைத்ததாக என்னிடம் கூறினார்கள். இனிமேல் கட்டாயம் அப்படிச் செய்யக்கூடாது என்று அந்த தாயாரை நான் கேட்டுக் கொண்டேன்.

பரிசுத்தவானாகிய அம்புரோஸ் விருத்தாப்பியனாக இருந்த போதும், அவர் மரணக்கட்டிலில் படுத்திருந்தபோதும் அவரைப் பார்க்கச் சென்றோர் ஏராளம். துன்மார்க்கர்களாக ஜீவித்த இரண்டு வாலிபர்கள் அம்புரோஸ் தேவ மனிதனின் மரணக்கட்டிலில் அவரைக் கண்டு அதிசயித்து அவர்களில் ஒருவன் "நான் மரிப்பேனானால் இந்த அம்புரோஸ் தேவ பக்தனைப் போல மரிக்க முழு மனதார ஆசைப்படுகின்றேன்" என்று கூறிச் சென்றானாம். ஆ, தேவ பக்தர்களின் விருத்தாப்பியமும், மரணமும் மகா ஆசீர்வாதமானவைகளாகும்.

தங்களது வாழ்வை கறைதிறையின்றி கர்த்தருக்குள் பரிசுத்தமாக பாதுகாத்துக் கொண்ட பரிசுத்த முதியோர்களான பெற்றோர்கள் நம் வீடுகளில் இருப்பது மகா ஆசீர்வாதமாகும். அவர்களுக்கு பணிவிடை செய்யும் காரியம் நமக்குச் சற்று கடினமானதாக இருந்தாலும் அதினால் கிடைக்கக்கூடிய பிரதி பலன் பாக்கியமானதொன்றாகும். யோசேப்பு இருந்தவரை கர்த்தர் போத்திப்பாரின் வீட்டை ஆசீர்வதித்தது போலவும், கர்த்தரின் உடன்படிக்கைப் பெட்டி ஓப்பேத் ஏதோம் வீட்டில் இருந்த வரை கர்த்தர் அவனுடைய வீட்டை ஆசீர்வதித்தது போல தேவபக்தியுள்ள முதியவர்கள் நம்முடன் இருப்பது தேவன் நம்மை ஆசீர்வதிக்க வகை செய்யும். அந்த பரிசுத்த முதியோரின் போக்கும், வரத்தும் ஆசீர்வாதமாக இருக்கும். அவர்களை ஏற்றுக் கொள்ளவும், அவர்களுக்கு பணிவிடை செய்யவும் தேவ மக்கள் பெரிதும் ஆசை கொள்ளுவார்கள்.

தனது பாதையில் ரஸ்தாவில் ஒரு மாலை வேளை சென்று கொண்டிருந்த ஒரு வயது முதிர்ந்த தேவ பக்தனை எனது பெற்றோர் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு அழைத்து வந்து அன்று இரவு அவரது நடந்து களைத்துப் போயிருந்த சரீரத்தை வெந்நீரால் ஸ்நானம் பண்ணுவித்து அவருக்கு போஜனம் அளித்த ஒரு நிகழ்ச்சியை இந்த வேளை நான் நினைவுகூறுகின்றேன்.

நமது முதுமையின் நாட்கள் ஆசீர்வாதமாக இருக்க நமது இளமையின் நாட்களான இப்பொழுதே ஆண்டவராகிய இயேசுவுக்கு முன்பாக நாம் பரிசுத்த மக்களாக ஜீவிப்போம். தேவனற்ற வாழ்வின் காரணமாக லோக மாந்தர் நம்மை நமது இறுதி நாட்களில் தனிமைப்படுத்தும் முன்னர், நமது மனம்போன வாழ்வின் நிமித்தமாக நமது முதுமைக் காலத்தில் நாம் நமது சாவை ஆவலோடு தேடு முன்னர், பூவுலகிலேயே நமது கிழப்பருவத்திலேயே நரக வாழ்வு தொடங்கும் முன்பதாக இந்தக் கிருபையின் காலத்திலேயே அன்பின் பரம தகப்பனின் பொற் பாதங்களில் சரணாகதி அடைவோமாக. இதுவரை நாம் மறுபிறப்பின் நிச்சயமுடையவர்களாக இராதிருந்தால் இன்றே நம்முடைய பாவங்களுக்காக தேவ சமூகத்தில் கண்ணீர்விட்டுக் கதறி பாவ மன்னிப்பின் நிச்சயத்தையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும், தேவ சமாதானத்தையும் பெற்றுக் கொள்ளுவோம். அதற்கான தேவ கிருபைகளை தேவன் தாமே உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வாராக. ஆமென்.


 
 

நோய் நொடியற்ற ஆரோக்கியமான சரீர சுகம், வங்கிகளிலே திரண்ட செல்வம், நாளின் 24 மணி நேரமும் மகிழ்ச்சி பொங்கி வழியும் வளமான வாழ்க்கை, தொட்டதெல்லாம் பொன்னாகும் காரிய சமர்த்து, இப்படியானதொரு கிறிஸ்தவ செழிப்பு வாழ்க்கை என் பங்காகத் தீருமானால், நான் பின்பற்றிச் செல்லும் என் நேசர் இயேசு இரட்சகர் ஏழை கோலமாக மாட்டுத் தொழுவத்தில் பிறக்காமல் ராஜ குமாரனாக அரண்மனையில் பிறந்து தங்க தொட்டிலில் அல்லவா தாலாட்டப்பட்டிருக்க வேண்டும். செழுமையும், கொழுமையும் அல்ல, பாடுகளும், போராட்டங்களும், நெருக்கங்களும், சஞ்சலமும், கண்ணீரும் நிறைந்த சிலுவைப் பாதைதான் எனது பத்திரமான, பாதுகாவலான பரம கானானின் பாதை. அதை ஒன்றையே நான் வாஞ்சித்துக் கதறுவேன்.

சிலுவை சுமந்தோனாக
இயேசு உம்மைப் பற்றினேன்
ஏழைப் பரதேசியாக
மோட்ச வீடு நாடுவேன்


 
Copyright © www.devaekkalam.com. All Rights Reserved. Powered by WINOVM